Loading

6 – காற்றிலாடும் காதல்கள் 

 

“இங்க பாரு கீதன் நீ தேவையில்லாத நெனப்ப எல்லாம் வச்சிட்டு என்கிட்ட பேசாத..  எனக்கு உன் பேச்சு பார்வை ரெண்டுமே பிடிக்கல” என அவனின் முகத்திற்கு நேராகக் கூறினாள். 

“ஏன் பிடிக்கல? நான் பாக்க நல்லா இல்லையா?”

“ஹாஹாஹா தோற்றத்த வச்சி தான் இங்கயும் எல்லாருக்கும் காதல் வருமா என்ன?” எனச் சிரித்தபடி அவன் நடக்க ஆரம்பித்த வழியில் அவள் முன்னே நடந்தாள். 

“ஹாஹாஹா இங்க மட்டுமில்ல எங்கயும் தோற்றம் தான் முதல்ல கண்ணு முன்ன வரும் மிரு.  ஆனா நான் வெறும் உன்னோட தோற்றத்த வச்சி மட்டும் இப்படி பேசல.” எனக் கூறி அமையாகிவிட்டான். 

“என்கிட்ட முழுசா ரெண்டு மணி நேரம் கூட பேசி பழகாம எப்படி உனக்கு காதல் வரும்? இது வெறும் ஈர்ப்பு தான்..”

அவள் கூறிய சொற்களின் பொருள் விளங்கிக்கொள்ளாதவன் இல்லயே கீதன், ஆனால் அவள் கூறிய சொல் அவனைப் பலமாகவே தாக்கியது. 

இதுவே வேறு ஒருவனாக இருந்திருந்தால் அழகி என்னும் திமிரில் பேசுகிறாய் என்று அவளைச் சாடி, மேலும் அவளை வேறு விதமாக வார்த்தைகளினாலோ, செயலினாலோ தாக்கியிருக்கக்கூடும். ஆனால் கீதன் தாயின் உபதேசங்களையும், கீதையின் சாராம்சத்தையும் கருவிலிருந்தே கேட்டு வளர்ந்தபடியால் அவளின் வார்த்தை வெகுவாக அவனைச் சுட்டது.

“என்ன கீதன் அமைதியாகிட்ட?” அவன் அமைதியாக வருவதைக் கவனித்துக் கேட்டாள். 

“உன் தோற்றத்துல நான் ஈர்க்கப்பட்டது உண்மை தான். ஆனா இது வெறும் ஈர்ப்பு மட்டும் இல்லைன்னு உனக்கு நான் எப்படி புரிய வைக்கறதுன்னு யோசிக்கறேன். இத்தன வருஷத்துல எனக்கு பல பேரு மேல ஈர்ப்பு வந்திருக்கு. ஆனா உன்மேல அதயும் தாண்டி வேற ஒண்ணு பலமா எனக்குள்ள உருண்டுட்டு இருக்கு.” எனக் கூறி அவள் முகம் பார்த்தான். 

வாய்க்கால் நீரில் முகம் கழுவிய நீர் இன்னும் அவளது முகத்தில் ஆங்காங்கே முத்துக்கள் போல நின்றிருந்தது. அவள் அழகினைத் தாண்டிய ஏதோவொன்று அவளிடம் அவனை அதிகம் ஈர்க்கிறது. அது என்னவென்பதை அவன் முழுதாக உணரவேண்டும். ஆனாலும் அவன் வாழ்வில் அவள் மட்டும் தான் இனி என்ற எண்ணம் மட்டும் திண்ணமாக உருவாகியிருந்ததுக் கண்ட நொடி முதல்.. 

அதை வெளிக்காட்ட இன்னும் சிறிது கால அவகாசம் இருவருக்குமே தேவை. 

“நீ ஊர்ல என்ன பண்ற மிரு?” அவளைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் கேட்டான். 

“நான் தமிழ்ல டாக்டரேட் பண்ணிருக்கேன். நீ?” என அவள் கூறியதும் அவன் கண்கள் மின்னியது. 

“உனக்கு சுவடி தமிழ் படிக்க தெரியுமா?” என ஆர்வமாகக் கேட்டான். 

“தெரியும். கொஞ்ச மாசம் முன்ன தான் அத கத்துகிட்டேன்.” எனக் கூறி அவள் மௌனமாகிவிட்டாள். அந்நொடி அவளின் முகத்தில் எழுந்த வேதனையை கீதன் கவனிக்கத் தவறியிருந்தான். ஒருவேளை கவனித்திருந்தால் பின்னாளில் அவனும், அவளும் சிக்கலில் இருந்து தப்பித்திருக்கலாம். ஆனால் விதி அங்கே அவர்களோடு பயணித்தபடி மர்மமாகச் சிரித்தது. 

“எனக்கு ஒரு உதவி பண்ணமுடியுமா மிரு?” யோசனையிலிருந்து வெளிவந்துக் கேட்டான். 

“என்ன?”

“என்கிட்ட சில சுவடிகள் காப்பி இருக்கு. அத எனக்கு படிச்சி காட்ட முடியுமா?” எனக் கேட்டான். 

“ம்ம்.. பண்றேன். ஒரு ரெண்டு மூணு நாள் போகட்டும். அப்பறம் படிச்சி காட்டறேன்.”எனக் கூறினாள். 

“என் தங்கச்சி கல்யாணம் இன்னும் 10 நாள்ல இருக்கு. அது முடிஞ்சி இத பாக்கலாம். நீ ஊர்ல தானே இருப்ப அதுவரைக்கும்?” எனத் தயக்கத்தோடுக் கேட்டான். 

“இங்க தான் இருப்பேன் இன்னும் 2,3 மாசம். பாத்துக்கலாம்..”இருவரும் சற்று நேரம் முன்பு விவாதித்ததைக் கூட பொருட்படுத்தாமல் சகஜமாகப் பேசியபடி இல்லம் வந்துச் சேர்ந்தனர். 

“சரி நீ குளிச்சி ரெடியா இரு. பக்கத்து டவுனுக்கு கூட்டிட்டு போறேன். தாத்தா காலைல உன்னய கூட்டிட்டு போக சொன்னாரு.” என அவளிடம் தோப்பின் வாசலில்  கூறிவிட்டு தன் இல்லம் நோக்கி நடந்தான். 

“எதுக்கு?”

“கல்யாணத்துக்கு துணி எடுக்கணும்ல? வெள்ளைச்சாமி தாத்தா என் தாத்தாவுக்கு ரொம்ப நெருக்கம். அவர் குடும்பம் மொத்தத்துக்கும் நாங்க தான் எடுத்து தருவோம். நீ ரெடி ஆகிட்டு எனக்கு ஃபோன் பண்ணு.” எனக் கூறிவிட்டுச் சென்றான். 

அவளும் உதட்டில் மென்னகை ஏந்தியபடி  வீட்டினை நோக்கிச் சென்றாள். மனதில் ஓர் இதம் பரவுவதையும் உணர்ந்தாள்.

“என்ன கண்ணு மீனு புடிச்சியா?” எனத் தோப்பில் வேலை செய்யும் ஒருவர் கேட்டார். 

“அது எங்க புடிச்சது? புடிக்க இருந்தவனையும் வேலைய கெடுத்து தான் விட்டுச்சு. இந்த புள்ளைய வச்சிட்டு எல்லாம் தூண்டில்ல மீன புடிக்க முடியாது. இது அதுக்கு சரிபட்டும் வராது பெருசு.” என இந்திரன் கூறியபடி அவளிடம் வந்தான். 

“என்னைய விட்டுட்டு நீ மட்டும் முன்ன வந்துட்டல்?” என மிருணா அவனை முறைத்தபடிக் கேட்டாள். 

“நீ முன்னவே கெளம்பின இப்ப தான் வர்ற.. எங்க போன?”, எதிர்கேள்வி கேட்டான். 

“வழி தெரியாம வேற பக்கம் போயிட்டேன். கீதன் தான் வாசல் வரை வந்து விட்டுட்டு போறான். அண்ணன் நீ! தங்கச்சிய பத்திரமா கூட்டிட்டு வரணும்னு நெனைப்பில்ல உனக்கு.”   

”உன்னய யாரு முந்திரிக்கொட்ட தனமா முன்ன போக சொன்னது? கொஞ்சம் பொறுமை வேணும் ஆத்தா.”

“உனக்கும் பொறுப்பு வேணும் ப்பா“

“சரி சரி.. சண்ட போடாம உள்ள போங்க. ஐயா வெளிய கெளம்பனும்ன்னு சொல்லிட்டு இருந்தாரு.” எனக் கூறிவிட்டு அந்த பெரியவர் தன் வேலையைக் கவனிக்கச் சென்றார். 

இருவரும் கழுத்தைத் தோளில் இடித்துக் கொண்டு வேகமாக வீட்டினை நோக்கி நடந்தனர். 

“என்ன கண்ணு ஊரச்சுத்தி பாத்துட்டு வந்த போல?” என வெள்ளைச்சாமி கேட்டார். 

“வழி தெரியாம வேற பக்கம் போயிட்டேன் தாத்தா.. இந்த இந்திரண்ணாவுக்கு பொறுப்பே இல்ல.“

“ஹாஹாஹா.. சரி வேற யாரு உங்கூட பொறுப்பா வந்து வழி காமிச்சது?”

“கீதன் தான் தாத்தா. ரெண்டு பேரும் சோடி போட்டுட்டு பொடி நடையா ஊரச்சுத்தி பாத்துட்டு வந்தாங்க. இனிமே அவன் கூடவே அனுப்புங்க. நான் வேற சோலி பாக்க போறேன்.” எனக் கோபமாகக் கூறிவிட்டு நகர்ந்தான். 

“டேய் டேய்.. நில்ரா.. ரொம்ப தான் பிகு பண்ணிப்ப.. புள்ள கூட நீயும் கீதனோட டவுனுக்கு போய் துணி எடுத்துட்டு வாங்க. விஸ்வநாதன் சொல்லிட்டு போயிருக்கான். நேரா அவன் வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுங்க நான் அங்கயே வந்து புள்ளைய கூட்டிட்டு வந்துடறேன். போ கண்ணு குளிச்சி தயாராவு.” எனப் பேத்தியை அறைக்கு அனுப்பிவிட்டு இந்திரனிடம் திரும்பி, “இங்க பாருடா  அவங்க ரெண்டு பேத்தையும் நல்லா பேசி பழகவுடு. குறுக்க மறுக்க திரிஞ்சி குதிக்காத புரியுதா?” 

“ஓஹோ.. அப்படியா சேதி? சரி சரி.. மொத்தத்துல இந்த தென்னந்தோப்ப எனக்கு குடுக்கமாட்ட.. அதானே?” என இந்திரன் முறைத்தபடிக் கூறினான். 

“நான் நெனைக்கறது மட்டும் நடக்கட்டும் உனக்கு 2 ஏக்கர் வெள்ளாம பண்ற நெலத்த எழுதி தரேன்டா..” என வெள்ளைச்சாமி தாத்தா சிரிப்புடன் கூறினார். 

“நிஜமாவா?”

“என் பொண்டாட்டி மேல சத்தியமாடா..”

“அப்ப சரி.. சீக்கிரம் என் பேர்ல மாத்தற வேலைய பாரு. நான் இந்த வேலைய பாக்கறேன்.” எனக் குஷியாகக் கூறிவிட்டு கீதன் இல்லம் நோக்கிச் சென்றான். 

கீதனும் தயாராகி அன்னையிடம் விவரம் கூறிப் பணம் வாங்கிக்கொண்டு, காரை வெளியே எடுத்தான். 

“என்ன மச்சான் சௌக்கியமா?” என இந்திரன் அழுத்திக் கேட்டான். 

“கொஞ்ச நேரம் முன்ன தானே டா பாத்த என்னைய.. அதுக்குள்ள என்ன சௌக்கியமாங்கற?”

“இல்ல நீயும் அந்த மிருதங்கமும் தனியா ஊரச்சுத்தி பாத்துட்டு வந்தீங்களே அதான் சௌக்கியமான்னு கேட்டேன்.”

“அது சும்மா அந்த புள்ள வழிதவறி வேற பக்கம் போச்சி அதான்” என லேசாக அசடு வழிந்தான். 

“அது சரியா தான் போச்சி.  உன் வழி தான் சரி இல்ல. என்ன விஷயம்? அந்த புள்ளைய நீ பாக்கற விதமும் சரியில்ல,. பேச்சும் சரியில்லயே..” என இழுவையாகக் கேட்டான். 

“அதெல்லாம் கரெக்டா தான் இருக்கு.”

“நீ கரெக்ட் பண்ற மாதிரில்ல இருக்கு.”

“ஆமா இப்ப அதுக்கு என்ன?”

“என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்ற? நம்ம ரெண்டு தாத்தாக்களுக்கும் தெரிஞ்சா என்ன ஆகும்?”

“கல்யாணம்  ஆகும். அவளோ தான்.. சரி நீ என் வாய கெளறினது போதும். வந்து உக்காரு தோப்புக்கு போலாம்.”

“அந்த புள்ளை குளிச்சி சாப்புட வேணாமாடா? அதுவே ஃபோன் பண்ணும் அப்போ போலாம் பொறு.” என இந்திரன் அவனைக் காக்கக் கூறிவிட்டு வேறு வேலைகளை ஆட்களுக்கு கூறியபடி இவனையும் கவனித்துக் கொண்டிருந்தான்.  

நொடிக்கு இரண்டு முறை அழைப்பு வருகிறதா என்று அவன் போனைப் பார்த்துக் கொண்டிருந்தான். இடையே வந்த வேறு அழைப்புகளையும் கடுப்புடன் பேசிப் பாதியில் வைத்துவிட்டு அவளின் அழைப்புக்காகக் காத்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. 

“பையன் கவுந்துட்டான்.. புள்ளைய தான் கவனிக்கணும்.” எனத் தனக்குள் பேசிக்கொண்டு காரில் ஏறினான். 

“போலாம் டா..“

“எனக்கு இன்னும் ஃபோன் வரல?”

“எனக்கு வந்துரிச்சி.. நீ கார எடு போலாம்.” என இந்திரன் கூறியதும் கீதனுக்கு வந்ததே கோபம், 2 நிமிடத்தில் தென்னந்தோப்பின் வாயிலில் வந்து நின்றனர். 

“உள்ள விடு.. ரெண்டு ஏக்கர் நடந்து வரணுமா அந்த புள்ள?” என இந்திரன் கூறவும் வண்டியை உள்ளே விட்டான். 

மொத்தமாக 8 ஏக்கர் நிலபரப்புக் கொண்டது அந்த தோப்பு. அதற்கு நடுவில் ஒன்றரை ஏக்கர் அளவில் காலியிடம் விட்டு, அதிலே அழகாக மச்சு வீடு எழுப்பியிருந்தார் வெள்ளைச்சாமி. சுற்றிலும் தென்னை மரங்கள், வீட்டினை சுற்றி மருதாணி, செம்பருத்தி, சீதாப்பழமரம், மல்லிகை பந்தல், பவளமல்லி, மனோரஞ்சிதம், வாகை மரம், மகிழமரம், சரக்கொன்றை போன்றவைகளை வைத்திருந்தார். 

எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென இருந்த இடத்தில் நடுநாயகமாக வீற்றிருந்த வீட்டின் மாடி ஜன்னல் வழியாகப் பாவை அவள் முகத்தை வெளியே நீட்டி எதிர்படும் காற்றைக் கண்மூடி இரசித்துக் கொண்டிருந்தாள். 

அவளின் சிறுகுழந்தைத்தனமான செயல்களெல்லாம் அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பினையும், அவளின் ஆழ்மன ஏக்கத்தையும் தெளிவாகக் காட்டியது. 

“அங்க பாரு சின்னப்புள்ள கணக்கா மூஞ்ச வெளிய நீட்டிட்டு நிக்கறத.. சரியான பைத்தியம்..” என இந்திரன் அவளைப் பார்த்துக் கூறினான். 

“ஆம்.. பைத்தியக்காரி தான்.. என்னையும் பைத்தியமாக்குகிறாள்.” என அவன் அவளைக் கண்ணிமைக்காதுப் பார்த்து இரசித்தான்.      

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்