427 views
6. உனதன்பிலே பல மின்னலே
தன் மனைவி கொடுத்த யோசனையின் படி, தன்வந்த் தனக்குக் செய்யும் எதிர்மறையான செயல்களை மட்டும் கண்டும் காணாமல் இருந்தான் பிரித்வி.
ஆனால் தொடர்ந்து வம்பிழுக்கும் வகையில், பிரித்வியின் எல்லா பதிவுகளுக்கும் விமர்சனம் கொடுத்துக் கொண்டே இருந்தான் தன்வந்த்.
தொழில் எதிரி என்று அதில் மட்டுமே அவனைப் போட்டியாக நினைத்திருந்தால், தன் சொந்த வாழ்க்கையை தோண்டிப் பார்க்கிறானா? என்ற கோபம் இவனுக்கு.
அந்த எரிச்சலை, அடங்காத கோபத்தைத் தணிக்க அவனால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் அதிலிருந்த நீரைப் பருகாமல், சில கணங்கள் பாட்டிலின் வடிவமைப்பையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
சாய்வாக நாற்காலியில் அமர்ந்தவன்,அப்பாட்டிலில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீரை பொறுமையாகப் பருகினான்.
“தன்வந்த்! தொழில் போட்டி, உனக்கு பர்சனல் ஆக எந்த தொந்தரவும் தரக் கூடாதுன்னு இருக்கேன்.அதை மீற வச்சிடாத” என்று சொல்லிக் கொண்டே கைகளில் இருந்த பாட்டிலை சற்று தள்ளி டேபிளில் வைத்தான்.
நீண்ட நேரமாக தன்னுடைய செல்பேசியில் அவனுடைய விமர்சனங்களையே பார்த்துக் கொண்டு இருந்தவன்,
“என்னோட கல்யாணம் உனக்கு இவ்ளோ சந்தோஷத்தைக் கொடுத்திருக்கா!” என்று பொய்யான ஆச்சரியம் கொண்டான் பிரித்வி.
எந்நேரமும் இவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள் வேலைக்கு ஆகாது என்று தன் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டான்.
🌸🌸🌸
தன்வந்த்தோ தன் இருக்கையில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு,
“என்னப் பிரித்வி டெம்ப்ட்டே ஆக மாட்ற? உன்னை இந்தளவுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கேன். அதுக்குக் கூட ரியாக்ட் பண்ண மாட்ற? இன்னும் அதிகமாக வேலைப் பார்க்கனுமோ?” என்று கூறிக் கொண்டான்.
முதலில் பிரித்வியை இவன் தொழில் போட்டியாக மட்டுமே தான் நினைத்திருந்தான் தன்வந்த்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவனுடைய புகழையும் தாண்டி, குணங்களும் மக்களால் கவனிக்கப்பட்டது. எனவே, பிரித்வியின் நற்குணங்கள் பலவற்றை மக்கள் பாராட்டவும் செய்தனர்.
அதைக் கண்டதும் தன்வந்த்திற்குப் பிரித்வியின் மீது பொறாமைத்தீ துளிர்க்க ஆரம்பித்து விட்டது.
அன்றிலிருந்து அப் பொறாமை அவனுள் வளர்ந்து கொண்டே போக, இப்போதோ பிரித்வியின் திருமணச் செய்தியும் கூடுதல் பெறாமையை அளித்தது.
காரணம் அதிரூபாவின் அழகான தோற்றம்!
அவனுடைய மனைவியைத் தவறான கண் கொண்டு தன்வந்த் பார்க்கவில்லை தான். ஆனாலும் அழகான மனைவியைப் பெற்றுள்ளான் என்ற பொறாமையை உள்ளுக்குள் விதைத்தது அவனது பொல்லாத மனம்.
பொறாமை என்றொரு விஷம் மனித மனத்தை ஆக்கிரமித்து விட்டால், நடக்கப் போகும் விளைவுகள் விபரீதங்களாக இருக்கும்.
தன்வந்த் மாதிரியான நல்லதொரு மனிதனையும் மிருகமாக மாற்றி விடும்.
குரூரமான மனநிலையில் இருந்த தன்வந்த் இதை ஆறப் போடாமல், உடனே அடிக்க வேண்டும் என்று தோன்றியது.
🌸🌸🌸
அடுத்த நாள், தான் முடிவெடுத்தது போலவே, அதிரூபா தான் வேலை பார்க்கும் கம்பெனிக்குச் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தாள்.
அவள் கிளம்பும் நேரத்தில் தான் பிரித்வியும் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தான்.
சாப்பாட்டு மேசையில் பதார்த்தங்கள் தயாராகி இருக்க, நாற்காலியில் அமர்ந்தாலும் உணவுண்ணாமல் இருந்தான்.
சகுந்தலா, “என்னாச்சு பிரித்வி? சாப்பிடலயா?” என்று கேட்டார்.
“அதியும் இன்னைக்கு ஆஃபீஸ் போறா ம்மா. அவ கூட சேர்ந்து சாப்பிட்றேன்” என்று சொல்லி காத்திருந்தான்.
சகுந்தலாவும் அவளுக்காக காத்திருக்க, மகேஸ்வரன், “லயா வந்துட்டா பாரு”என்று மகளின் வருகையை அறிவித்தார்.
” வா லயா. உட்காரு” என்று அவளுக்குப் பரிமாறியதை உண்ணத் தொடங்கியதும்,
மருமகள் வருவதைக் கவனித்த சகுந்தலா,
“பிரித்வி அங்கே பாரு. ரூபா வந்துட்டா” என்று மகனிடம் கூறினார்.
“குட் மார்னிங் அண்ணி” என்று வாழ்த்தைத் தெரிவித்தாள் லயா.
“வெரி குட் மார்னிங் லயா ” என்று புன்னகைத்தவள், கணவனைப் பார்த்தாள்.
இன்னும் உணவருந்தாமல் இருப்பதைப் பார்த்ததும்,
“உங்களுக்கு ஆஃபீஸூக்கு லேட் ஆகலயா? ஏன் இவ்ளோ நேரமா சாப்பிடாமல் இருக்கீங்க?” என்று வினவினாள் அதிரூபா.
“லேட் ஆகல அதி. நீ சாப்பிடு” அவனுடைய இந்த அமைதி அவளுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
“என்னாச்சு? ஒரே சைலண்ட் மோட் ல இருக்கீங்க?” என்று உணவை மென்று கொண்டே கேட்டாள்.
“சும்மா தான்”
அதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை என்பது போல், உணவருந்த ஆரம்பித்து விட்டான் பிரித்வி.
‘எதையுமே புரிஞ்சுக்க முடியலையே!’ என்றவாறே சாப்பிட்டாள்.
“கம்மியா சாப்பிடாத லயா. சாப்பாடு அப்படியே இருக்குப் பாரு” என்று மகள் கை கழுவச் செல்வதற்கு முன் சாப்பாட்டைப் பரிமாறி விட்டார் சகுந்தலா.
“அம்மா…!” என்று அலறிக் கொண்டே தட்டில் இருந்ததை உண்டாள் லயா.
உணவருந்தி முடிக்கும் வரை தம்பதியருக்குள் பேச்சு வார்த்தையே இல்லை.
மகேஸ்வரன் தான் வழக்கம் போல, யாரையாவது வம்பிழுக்கலாமா? என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.
ஆனால் அனைவரும் அந்த மனநிலையில் இல்லை போலும் எனவே அவருமே அமைதியாகி விட்டார்.
“சாப்பிட்டேன்.நான் கிளம்பறேன் ” என்று பிரித்வி எழுந்து சென்று விட அவனை விசித்திரமாகப் பார்த்தனர் அனைவரும்.
அதிரூபாவோ , ‘ஈவ்னிங் வந்து பாத்துக்கிறேன்’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே கிளம்பினாள்.
மற்றவர்களோ, “என்ன இவன்?!” என்று வியந்தனர்.
காரில் சென்று கொண்டிருந்த பிரித்விக்கோ, சற்று முன்னர் அதிரூபா தன்னிடம் நடந்து கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவளது உதாசீனமா? பாராமுகமா? தெரியவில்லை. ஆனால் வெகுவாக மனம் உடைந்து போனான்.
தன் அலுவலகத்திற்குச் சென்று இடத்தில் பையை வைப்பதற்குள் அவளைத் தேடி வந்து விட்டனர் சக ஊழியர்கள்.
“ஹேய் அதிரூபா! வாட் அ சர்ப்ரைஸ்!! நீ பெரிய பணக்காரரோட வொய்ஃப்.மறுபடியும் இங்கே வேலைக்கு வந்துட்ட? உன் ஹஸ்பண்ட்டோட கம்பெனியிலேயே வேலைப் பார்க்கலாமே?”
ஆளாளுக்கு ஏதோ அதிசயத்தைக் கண்டது போல், கூறிக் கொண்டிருந்தனர்.
“இங்கே தான் எனக்கு என்னோட டேலண்ட்னால வேலைக் கிடைச்சது. சோ, கண்டினியூ பண்ணலாம்ன்னு இருக்கேன். காரணம் தெரிஞ்சிருச்சுல்ல? போய் உங்க வேலையைப் பாருங்க”
இன்னும் கொஞ்ச நேரம் பேச விட்டால், தங்களுக்குள் இருக்கும் அந்தரங்கத்தைக் கூட துருவித் துருவிக் கேள்விக் கேட்கும் விஷமிகள் அவர்கள். எனவே இடத்தைக் காலி செய்யச் சொல்லி விட்டு இவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
அந்த சமயத்தில், அருகே இருந்த நாற்காலியில் ஒரு பெண் வந்து அமர்ந்தாள்.
“சுஷ்மா!” என்று எதிர் நோக்கிப் புன்னகை புரிந்தாள் அதிரூபா.
“ரூபா!! வாவ்… உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்டி. இன்றைக்கு ஆஃபீஸூக்கு வருவன்னு எதிர்பார்க்கவே இல்லை” என்று ஆச்சரியப்பட்டாள்.
“ஏனாம்?” என்று கேட்டாள் அதிரூபா.
“மேரேஜ் ஆகிட்டு, ஜாப் கண்டினியூ பண்ணப் போற தாட் உனக்கு இருந்துச்சான்னு தெரில. அதான்” என்றாள் சுஷ்மா.
“இருந்துச்சு சுமி. வீட்ல அதுக்கு அகைன்ஸ்ட் ஆகவும் யாரும் எதுவும் சொல்லல. அதனால் வந்துட்டேன்” என்று தெரிவித்தாள்.
” எப்படி இருக்கு மேரேஜ் லைஃப்?”
“ம்ஹ்ம் குட் சுஷ்மா.”
தேவைக்கு அதிகமாக அவளும் சொல்லவில்லை, சுஷ்மாவும் மேலும் விஷயத்தைக் கிளறாமல் வேலையைப் பார்த்தனர்.
🌸🌸🌸
“தன்வந்த்!!!” கோபத்தில் நற நறவென பற்களைக் கடித்துக் கொண்டு இருந்தான் பிரித்வி.
அவனது கிறுக்குத்தனங்களைத் தாங்க முடியவில்லை பிரித்வியால்.
“சின்னப் பையன் மாதிரி பழி வாங்குறேன்னு எது , எதையோ செய்துட்டு இருக்க !!”
பிரித்வியின் தொழிலில் பல தடைகளை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தான் தன்வந்த்.
ஊழியர்களை விலைக்கு வாங்குவது, ப்ராஜெக்ட்டைத் திருடுவது என்று நிறைய கிறுக்குத்தனங்கள் செய்திருந்தான் தன்வந்த்.
அந்தப் பிரச்சினைகளையும் சரி செய்து விட்டு அவனுக்குக் கால் செய்யலாமா? என்று கூட யோசித்தான். பிறகு , அவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், ஆகி விடும் என்று அந்த யோசனையைத் தூர வைத்து விட்டான் பிரித்வி.
🌸🌸🌸
அலுவலகத்தில் இருந்த அதிரூபாவோ,
மற்றவர்கள் அவளை மிசர்ஸ். பிரித்வி என்று அழைத்துக் கொண்டிருந்தனர்.
அதுவே அவளுக்கு இறுக்கத்தைக் கொடுத்தது.
‘நான் கஷ்டப்பட்டு, படிச்சு, வேலைக்கு வந்து என் வேலையை ஒழுங்காகப் பார்த்து இந்தப் பொசிஷனுக்கு வந்தா, மல்டி மில்லியனரோட வொய்ஃப்ன்ற அடையாளத்தை அவ்ளோ ஈசியா சொல்லிட்றாங்க. அப்போ என்னோட டேலண்ட்??’
யாருக்குமே இது மன அழுத்தம் தரக் கூடியது தானே? அந்த நிலையில் தான் இப்போது அதிரூபா இருக்கிறாள்.
திருமணம் முடிந்து, அலுவலகத்திற்கு வந்திருந்தவள் , இங்கு பேசிய பேச்சுக்களைக் கேட்டு ஏன் வந்தோம் என்றானது.
சிறு மனஸ்தாபம் அவர்களுக்குள் இழையோடிக் கொண்டிருக்க, இந்த விஷயம் இன்னும் என்னவெல்லாம் திருகுத்தாளம் செய்யப் போகிறதோ?
அதிரூபாவிற்குத் தலைவலி வந்தது தான் மிச்சம்!
சுஷ்மா, “என்னாச்சு அதிரூபா? வந்தப்போ நல்லா தான் இருந்த? இப்போ முகம் ரொம்ப வாடிப் போயிருக்கு?” என்று அக்கறையாக கேட்டாள்.
“சுமி! இங்க எனக்குக் கம்ஃபர்டபிளாக இல்லை. பர்மிஷன் கேட்டுட்டு கேன்டீன் போகலாமா?”
அதிரூபா அங்கே அமர முடியாமல், கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருந்த சுஷ்மாவோ, “சரி சரி ரூபா. போகலாம்.நீ கேன்டீன்ல ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வெய்ட் பண்ணு. நான் பர்மிஷன் கேட்டுட்டு வர்றேன்” என்று அவளை முதலில் அனுப்பி வைத்தவள், இருவருக்கும் சேர்த்து இரண்டு மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொண்டு, துரிதமாக கேன்டீனை அடைந்தாள்.
கேன்டீனில் இவள் சொன்னதைச் செய்யாமலேயே, வேறெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அதிரூபா.
“ரூபா! ஃபேஸ் வாஷ் பண்ணுன்னு சொன்னேன் தான? போ”
வலுக்கட்டாயமாக அவளை முகத்தைக் கழுவி விட்டு வரச் சொன்னாள் சுஷ்மா.
வந்ததும் டிஷ்யூ கொடுத்தவள், “லீவ் முடிஞ்சு இன்னைக்குத் தான் ஆஃபீஸ் வந்த அதுக்குள்ள என்னாச்சு?” என்று விசாரித்தாள்.
இடையில் ஒரு தடவை சுஷ்மா எம். டி – யைப் பார்க்கச் சென்றிருந்தாள். அதற்குள் தான் அதிரூபாவிற்கு ஏதோ சங்கடம் நேர்ந்து இருக்க வேண்டும் என்று தோன்றியது.
“சொல்லும்மா?” – சுஷ்மா.
“சுமி இங்கே எனக்கு வந்ததும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்குத் தெரியுமா?” என்று வேதனை பொங்க நடந்ததைக் கூறினாள்.
“இதுக்கு முன்னாடி எல்லாம் நான் தான் உங்கிட்ட ஆறுதல் தேடி வருவேன்.ஆனால் உன்னை இந்த நிலைமைக்கு வர விட்ருக்காங்கன்னா ரொம்பவே தப்பு. இப்போவே என்கூட வா! நான் என்னன்னு கேட்கிறேன்”
சுஷ்மா தன் தோழியின் இந்த கவலைத் தோய்ந்த முகத்தைப் பார்த்து, பொறுமையை இழந்து விட்டாள்.
“வேண்டாம் சுமி. ப்ளீஸ்!!”
சுஷ்மா போய் அவர்களிடம் வாக்குவாதம் செய்தால், அதற்கும் எல்லாம் வைத்துப் பேசுவார்கள். இதையெல்லாம் எதிர்பார்க்காமல் வந்தது தான் இவள் செய்த தவறு.
“வேற என்ன செய்யலாம்? இவங்க எல்லாருமே வம்பு பேசறதுக்குன்னே இருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்காத. இவ்ளோ வீக் ஆகாத ரூபா”
அவள் சொல்வதைப் போல அதிரூபா பலவீனமடைந்து விட்டாளா?
எதை எதையோ பேசி, அதிரூபாவின் மனதை மாற்றி விட்டாள் சுஷ்மா.
ஆனால், அடுத்து, மாலையில் சீக்கிரமாகவே வீடு திரும்பி இருந்த மனைவியின் போக்குப் புரியாமல் பாவமாக விழித்துக் கொண்டு இருந்தான் பிரித்வி.
– தொடரும்