611 views

 

நினைவுகள் கொடுத்த வலியில் பட்டென்று எழுந்து விட்டான். ஆக்ரோஷமாக வீட்டின் முற்றத்தில் நடந்து கொண்டிருந்தவன் உதடுகள் மனைவியின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது. பிள்ளைகளுக்கு இரவு உணவை கொடுத்த முதியவர்கள் அவரவர் பெற்றோர்களிடம் அனுப்பி வைக்க, தனியாக தன் இரு பிள்ளைகளையும் வாங்கிக் கொண்டான் ரகுவரன்.

வழக்கம்போல் தம்பியை தட்டி கொடுத்து தூங்க வைத்தாள் மான்விழி. மகள் அருகில் கணவன் என்ற உறவை மறக்க, சோர்வில் கண்மூடி மயக்கத்திற்கு செல்லும் மகளை ரசித்துக் கொண்டிருந்தான். இருவருக்கும் போர்வையை போற்றி விட்டவன் தூங்க முயற்சிக்க, கனவிலும் அவள் முகம்.

நள்ளிரவையும் தாண்டி விடியல் பிறக்கும் நொடி வரை அவளையே நினைத்து கண்கள் சிவந்தது. கூடவே அவளை நினைத்து பெரும் ஆத்திரமும் உண்டானது. உடலும் மனமும் அவள் ஒருத்திக்கு கட்டுப்பட்டு திண்டாடி போக, எழுந்து விட்டான் ஒரு முடிவோடு.

தனக்கு தேவையான அத்தனையும் எடுத்து வைத்தவன் பிள்ளைகளுக்கு முத்தமிட்டு, “அப்பா திரும்ப வந்தா அம்மாவோட தான் வருவேன். நாங்க வர வரைக்கும் பத்திரமா இருக்கணும்.”  என்று புறப்பட்டான் மனைவியை தேடி.

எங்கு சென்று இருப்பாள் என்று தோராயமாக கணக்கு போட்டு பார்த்தவன் நான்கு சக்கர வாகனத்தை கிளப்பினான் அவள் இருக்கும் கொடைக்கானலை நோக்கி. இரவு முழுவதும் தூங்காத ரகுவரன் விடியலை தாண்டிய பின் சோர்வடைய ஆரம்பித்தான். கொஞ்சமாவது தூங்க விடு என்று கண்கள் கெஞ்ச, சாலையின் ஓரத்தில் கார் நின்றது.

இமை மூடி எரியும் கண்களை குளிரூட்டியவன் நினைவில் அவளே அக்னியாக. கோபமும் ஏக்கமும் போட்டி போட்டு சிறு தூக்கத்தை அவனுக்கு கொடுக்க, தூக்கம் கலைந்து கொட்டாவி விட்டவன் உணர்வுகள் டீ கேட்டு அடம் பிடித்தது. நான்கு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்தவன் தேனீர் கடையை ஆராய்ந்தவாறு நகர்ந்தான்.

அவனுக்காகவே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தேனீர் கடை. தனக்கானதை ஆர்டர் செய்து கொண்டவன் கையில் சுட சுட ஆவி பறக்க தேநீர் கோப்பை. காரில் சாய்ந்தவன் ஒரு வாய் எடுத்து வைக்க,

“எனக்கு டீ குடிக்கிற பழக்கமே இல்ல. உனக்காக கஷ்டப்பட்டு போட்டு கொடுத்தா நக்கலடா பண்ற ரகுவரா… ஒரு நாள் இல்ல ஒரு நாள் ஐயோ நம்ம பொண்டாட்டி இல்லையே டீ கொடுக்கன்னு நீ கதற போற பாரு.” என்ற மனைவியின் பேச்சு நினைவுக்கு வந்தது.

‘அப்படி என்னடி உன்கிட்ட கேட்க கூடாததை கேட்டுட்டேன். அதான் அவ்ளோ சண்ட போட்டியே அப்புறம் எதுக்காக விட்டுப் போன. அவ்ளோ தானா நீ என் மேல வச்சிருந்த காதல். எனக்கு குறையலடி இன்னமும் நம்ம காதல். உன்ன பார்த்தா நாலு அடி கன்னம் பழுக்க கொடுத்துட்டு, அழுதுடுவேன்.’ உள்ளுக்குள் மனைவியோடு பேசிக்  கொண்டான்.

அவனை சோதிப்பது போல் தேனீர் கடையில் பாடல் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, இவன் உதடுகள் பின்னணி இசை பாட ஆரம்பித்தது சேர்ந்து.

“சங்கில் குதித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது காண்
தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
உயிரே வாராய்… என் உயிரே… வாராய்…
காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல்……….

காதல் மழையே காதல் மழையே
எங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா?
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதம?
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா?
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்”

உணர்வுகள் கொடுத்த ஊந்துதலில் அசுர வேகம் கொண்டு வந்தடைந்தான் கொடைக்கானலுக்கு. மனைவியின் கைபேசி எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதால் சரியான இடம் தெரியவில்லை. தன் வழக்கறிஞர் திறமையை வைத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மனைவி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டான்.

ஆயிரம் யானை படைகளை ஒற்றவிரலால் தோற்கடித்த வீரன் போல் மனைவி இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு நின்றான் தோரணையாக. தன்னுயிர் தன்னைத் தேடி தனக்கு முன்னால் இருக்கிறது என்பதை அறியாத மகிழினி பிள்ளைகளின் புகைப்படத்தை கைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பெண்ணின் மனம் கணவனின் திருமுகத்தை பார்க்க வற்புறுத்த, அடுத்தடுத்து இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மனதை மயக்கியது. பட்டுப் புடவையில் மகிழினியும் பட்டு வேட்டி சட்டையில் ரகுவரனும் ஜோடியாக நிற்க, கண்ணில் காதல் வலிந்தது.

போன பொங்கலுக்கு எடுத்த இந்த அழகிய புகைப்படத்தை நினைவுகளை நினைவூட்டியது.

பொங்கலன்று ரகுவரன் வீட்டிற்கு வர தாமதமானது வேலை விஷயத்தால். அவளுக்கும் அதே வேலை என்பதால்  ஒன்றும் சொல்லாமல் முறைத்துக் கொண்டு நின்றாள் வாசலில். வந்தவன் அவளைக் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழைவது போல் நுழைந்து பின் நின்று கட்டிக்கொண்டான்.

உதறித் தள்ளும் மனைவியின் கைகளுக்கு தடை போட்டான் கழுத்தில் முத்தமிட்டு. அடங்கி நின்றவள் கோபத்தோடு எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, “என்னடி வக்கீலு காலையிலயே இப்படி கும்முனு இருக்க. நமக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்குன்னு சொன்னா ஊர் நம்பாது.” பெயருக்கு ஒரு புகழ்ச்சியை கொடுத்தவன் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.

முத்தம் கழுத்திலிருந்து இடம் மாறுவதை உணர்ந்தவள் திரும்பாமல் அவன் உதட்டில் ஒரு அடி வைக்க, “ஆஆஆ…ராட்சசி” என்றவன் ராட்சசன் போல் கடித்தான் கழுத்தை.

“உனக்கு எத்தனை போன் பண்றது? ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே சொல்லிட்டு இருந்தேன் பொங்கல் அன்னைக்கு நீ வீட்ல இருக்கணும்னு. கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்காடா உனக்கு. எல்லார் வீட்டையும் பாரு எவ்ளோ சந்தோஷமா இருக்காங்கன்னு.” முறைத்துக் கொண்டே பேசும் மனைவியின் அழகில் பூவாய் சிரித்தவன்,

“இந்தக் கோபம் தான்டி என்னை உன்கிட்ட விழ வச்சுது.” என்று இன்னும் வெறுப்பேற்றினான்.

கணவனின் பேச்சில் கோபம் கொண்டவள் அதை காட்டினாள் அடித்து. மனைவியின் மகிழ்விற்காக வேலைகளை அரக்கப் பறக்க முடித்து வந்தவன் சோர்வில் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொள்ள, அடித்து சோர்ந்து போனாள் மகிழினி. மனைவியின் சோர்வுக்காக காத்துக் கொண்டிருந்தவன் அவள் கதறுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தூக்கிச் சென்றான்.

“புது புடவைடா…”

“ரகுவராராரா”

“அடி வாங்குவ சொல்லிட்டேன்.”

“உன் பொண்ணு வந்துடுவா.”

“ரகு ப்ளீஸ்!” என அவளின் பேச்சுக்கள் மட்டும் தான் அறையில் கேட்டுக் கொண்டிருந்தது. நாயகனின் எண்ணம் அவன் போக்கில் நிறைவேற்றிக் கொள்ள, பொங்களுக்காக அவன் வாங்கிக் கொடுத்த புடவைக்கு உயிர் இல்லாமல் போனது.

வேலை முடிந்ததும் ரகுவரன் சமத்துப் பிள்ளையாக படுத்துக் கொண்டிருக்க, “பிராடு… பொறுக்கி…”அலுப்பு தீர அடித்து துவைத்தவள் வேறு புடவையை கட்டிக்கொண்டு அன்றைய விழாவை கொண்டாடினாள்.

புகைப்படம் சொன்ன ஞாபகத்தில் பெண்ணின் உதடுகள் சிரிக்க, அவள் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தான் முறைப்போடு ரகுவரன்.

***

“யார் சார் நீங்க?”

“இங்க ஒருத்தரை பார்க்க வந்திருக்கேன். ஆனா, எந்த அப்பார்ட்மெண்ட்ன்னு தெரியல.”

“போன் பண்ணி கேளுங்க சார்.”

“அவங்க போன் சுவிட்ச் ஆப் ல இருக்கு.” என்றவன் ஒரு கேள்வியை அவரிடம் வீசினான்,

“இங்க மகிழினின்னு யாராவது இருக்காங்களா?” என்று.

“இங்க மொத்தம் ஐநூறு குடும்பங்கள் இருக்கு சார். இதுல நீங்க யாரை கேட்கிறீங்கன்னு எப்படி தெரியும்.” என்ற காவலாளியின் வார்த்தை சரி என்பதால் அடுத்த கேள்வியை கேட்காமல் மௌனம் காத்தான் ரகுவரன்.

“நான் வேலைக்கு வந்து ரெண்டு மாசம் தான் ஆகுது சார். ரொம்ப வருஷமா வேலை பார்க்கிற வாட்ச்மேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு. வேணா அவர்கிட்ட விசாரிச்சு பாருங்க.” சம்மதமாக தலையசைத்தவன் அவருக்காக காத்துக் கொண்டிருக்க,

“இவர் தான் சார்” காவலாளி வந்ததும் அறிமுகம் செய்து வைத்தார் ரகுவரனுக்கு.

“மகிழினின்னு இங்க  யாராது இருக்காங்களா.”

“இங்க நிறைய அப்பார்ட்மெண்ட் இருக்கிறதால பேர் வச்சு சொல்ல முடியாது சார். வேற எதுனா டீடைல்ஸ் தெரிஞ்சா சொல்லுங்க.”

“இப்பதான் புதுசா வந்திருப்பாங்க.”

“புதுசா மூணு குடும்பம் வந்திருக்காங்க சார்.”

“குடும்பமா இல்ல சார். ஒரே ஒரு பொண்ணு மட்டும் வந்திருப்பாங்க.” என்றதில் யோசித்தார் காவலாளி.

என்னவோ அவர் ஞாபகத்தில் தோன்ற, “ஆமா சார்! ரேகா மேடம் வீட்டுக்கு புதுசா ஒருத்தவங்க வந்திருக்காங்க. சென்னையில இருந்து வரதா வேற பேசிட்டு இருந்தாங்க.” என்றதும் கண்கள் மின்னியது ரகுவரனுக்கு.

“எஸ்! ரேகா மேடம் வீட்டுக்கு தான் வந்திருக்காங்க. எந்த அபார்ட்மெண்ட்னு சொல்றீங்களா நான் பார்த்துக்கிறேன்.”

“அப்படியெல்லாம் அவங்க பர்மிஷன் இல்லாம உள்ள விட முடியாது சார். நீங்க போன் போட்டு கேளுங்க. ரூம் நம்பர் தெரிஞ்சா தான் நோட்ல என்ட்ரி போட்டு உள்ள போக முடியும்.”

தன் எண்ணை பிளாக் செய்து வைத்திருக்கும் மனைவிக்கு எங்கிருந்து அழைப்பான். கடும் சீற்றத்தோடு அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றான். அவனைப் பார்க்க பாவமாக இருந்தாலும் உதவ முடியாமல் மௌனம் காத்தார்கள் காவலாளிகள்.

இரண்டு மணி நேரங்கள் கடந்து விட்டது ரகுவரன் அங்கு நின்று. மனசாட்சி உறுத்த உட்கார இருக்கை கொடுத்தார்கள். மறுத்தவன் எப்படி அவளை சந்திப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க, “சார் நீங்க கேட்டவங்க இவங்களான்னு பாருங்க.” என தூரத்தில் வரும் மகிழினியை கைகாட்டினார்கள்.

ஊர் கோடியில் நின்றாலும் எளிதாக கண்டுபிடிப்பவனுக்கு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கும் மனைவியை அடையாளம் தெரியாமல் போகுமா. ஆர்ப்பரிக்கும் கண்கள் உள்ளத்திற்கு கட்டளை போட்டது துள்ளி குதிக்காதே என்று. கட்டளையை ஏற்ற மனம் உடனே சினத்தை வெளிக்கொண்டு வர, மனைவியை நேருக்கு நேர் சந்திக்கும் தருணத்திற்காக பந்தாவாக நின்றான்.

கேஸ் விஷயமாக பேசிக்கொண்டு வந்தவள் கணவனைப் பார்த்ததும் சடர்ன் பிரேக் அடித்தாள். அவள் செய்கையில் ஏளன சிரிப்பு ரகுவரன் முகத்தில். அந்த சிரிப்பை பார்த்ததும் திடுக்கிட்ட வீட்டுக்காரி உடனே கோப முகமூடியை முகத்தில் போட்டுக் கொண்டாள்.

இருவரும் நேருக்கு நேர் நின்று கொண்டிருந்தார்களே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. அப்பார்ட்மெண்ட் உள்ளே வர கார் ஒன்று ஹாரன் அடிக்க, அந்த சத்தத்தில் தான் விலகி நின்றார்கள். எதுவும் நடக்காது போல் மகிழினி அவனை கடந்தாள்.

‘திமிரு புடிச்சவ’ உள்ளுக்குள் மனைவிக்கு ஒரு பட்டம் கொடுத்தவன் முறைப்போடு பின் தொடர்ந்தான். தனக்குப் பின்னால் அவன் நிச்சயம் வருவான் என்பதை அறிந்த மகிழினி திரும்பிப் பார்க்காமல் நடக்க, “ஏய்!” என்று அழைத்தான்.

காது கேட்காதது போல் நடையை அதிகரிக்க, “பொண்டாட்டி” அன்போடு அழைக்கும் வார்த்தை இந்த முறை கோபமாக ஒலித்தது.

“நீயா மரியாதையா என்கிட்ட வந்துடு. நானா பிடிச்சனா தண்டனை ரொம்ப மோசமா இருக்கும்.” என்றதும் நடையை நிறுத்தியவள் திரும்பி முறைத்தாள்.

“என்னடி முறைக்கிற? செவுலு அறுந்திடும் அடிக்கிற அடியில. இரண்டு பிள்ளைங்களுக்கு அம்மா பண்ற காரியமாடி இது. வீட்டை விட்டு ஓடி வந்த இந்த கால ஒடச்சா தான் நான் ஆம்பள.” என்றதும் தோளில் தொங்கிக் கொண்டிருந்த லெதர் பேக்கை தூக்கி அடித்தாள் அவன் நெஞ்சில்.

“யாரு கால யாரு உடைக்கிறது. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம எதுக்காகடா என்னை தேடி வந்த. உன் கூட வாழ பிடிக்காம தான நான் இங்க வந்திருக்கேன். கால்ல சிக்குன பிசாசா என் பின்னாடியே சுத்துறியே ரோஷம் இல்ல.”

“ஏய்!”

“இங்க பாரு உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லன்னு ஆயிடுச்சு. இந்த மரியாதை இல்லாம பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத.” என்றவள் விரல் நீட்டி மிரட்ட, அந்த விரல் தான் ஆபத்தானது அவன் பலம் கொண்டு சுழற்றி பிடித்ததில்.

“இந்த கைய என் முன்னாடி நீட்டாதன்னு எத்தனை தடவைடி சொல்றது மரமண்டை பொண்டாட்டி.” என்றவாறு வளைத்துக் கொண்டிருக்கும் விரலுக்கு விடுதலை கொடுத்தவன் மனைவியை சிறை பிடித்துக் கொண்டான் இடுப்பை வளைத்து.

“விடுடா பொறுக்கி!”

“பொறுக்கி பொறுக்கியா நடந்திருந்தா என்னை விட்டு வர அளவுக்கு உனக்கு திமிர் வந்திருக்காது. நல்லவனா மாறி புருஷனா நடந்த கொழுப்பு டி எல்லாம்.”

“நீ என்னைக்கு புருஷனா நடந்திருக்க? அப்படி இருக்குறதா நினைச்சு என்னை நானே ஏமாத்திட்டு இருந்திருக்கேன்.”

“நடக்காத அப்போவே இவ்ளோ கொழுப்புல அலையுறேனா உனக்கு ஏத்த புருஷனா சிங்குசாங் அடிச்சா எவ்ளோ ஆட்டம் ஆடுவ.” என்றவன் ரோடு என்றும் எண்ணாமல் இன்னும் இறுக்கமாக வளைத்தான் தன் உடலோடு இணைத்து.

அதை உணர்ந்து கொண்ட மகிழினி இருவருக்கும் நடுவில் கையை அவன் நெஞ்சில் பாதுகாப்பு கவசமாக வைக்க, உஷ்ண மூச்சுக்கள் அவள் கையில் பட்டது தலை குனிந்து நெஞ்சை பார்த்துக் கொண்டிருக்கும் ரகுவரனால்.

“என்னை தொடுற அளவுக்கு நீ உரிமையானவை இல்லடி.” வெடுக்கென்று அவளை தன்னை விட்டு விலக்கி தள்ளியவன் நெஞ்சில் வைத்த கையை பற்றி கொண்டு, “என் மேல கை வைக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா.” எனக்கேட்டு அந்த கையை முறுக்கினான் இஷ்டத்துக்கும்.

“டேய் பொறுக்கி வலிக்குதுடா.” என்ற கதறல் அவனுக்குள் இனிமையான சங்கீதமாக கேட்க, “இன்னும் நல்லா கத்துடி ராட்சசி.” என்றான்.

“இந்த மகிழினி பத்தி தெரியாம ஆடிக்கிட்டு இருக்க ரகு வேணாம்.” என்ற மிரட்டலில் கைகளை விட்டவன் பந்தாவாக இரு கைகளையும் பேன் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.

“நீ எல்லாம் ஒரு ஆளாடி என்னை மிரட்டுற அளவுக்கு. போனா போகுதுன்னு என் பொண்ணுக்காக உன் கூட வாழ ஆரம்பிச்சேன். நாளைக்கு ஊர் உன்ன தப்பா பேசிட கூடாதுன்னு உன்ன மாதிரியே குரங்கு சேட்டை புடிச்ச ஒரு பிள்ளையையும் கொடுத்தேன். அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாம இவ்ளோ கீழ்த்தரமா நடந்துக்கிட்டயே.” வார்த்தைகள் என்னவோ தரைக்குறைவாக தான் இருந்தது. ஆனால், அவனின் முகமோ மனைவியை அங்குலம் அங்குலமாக ரசித்தது.

கணவனின் வார்த்தையில் கோபத்தை வெளியிட நினைத்தவள் அவன் பார்வையில் கடுப்பானாள். அதை உணர்ந்து கொண்டவன் ஏற இறங்க பார்த்து, “என்னை விட்டு வந்து ரெண்டு நாள் தானடி ஆகுது அதுக்குள்ள கொஞ்சம் பாலிஸ் ஆயிட்ட. என்ன? ரகுவரன் வருவான் மயக்கலாம்னு திட்டமா.” பேசி முடித்ததும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டான் மகிழினி கொடுத்த அன்பு பரிசில்.

காயம் பட்ட இடத்தில் நகம் கொண்டு எரிச்சல் கொடுப்பது போல் வின்னென்று வலித்தது அவன் கன்னம். எப்பொழுதும் மனைவி கொடுப்பதை விட அதிகமாக கொடுத்து பழக்கப்பட்டவன் உடனே திருப்பி அடித்தான். ரகுவரனைப் போல் அவன் துணைவியும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு முறைக்க,

“ரோட்ல நிற்கிறதால உயிர் தப்பிச்ச. ஒழுங்கு மரியாதையா அங்க இருந்து தூக்கிட்டு வந்த எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு என் பின்னாடி வந்துடு. என் பசங்களுக்கு அம்மா வேணும்னு நீ பண்ற எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கேன். கடைசில என்னை கொலைகாரனா கோர்ட்ல நிறுத்திடாத.” என்றவன் முகம் இந்த முறை உண்மையாகவே கோபத்தில் சிவந்தது.

அதை இன்னும் சிவக்க வைத்தாள் அடித்த கன்னத்தில் அடித்து மகிழினி. வீம்பு கொண்ட ரகுவரன் அவளை அடிக்க நெருங்க, “இங்க பாரு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் தான் வீட்டை விட்டு வந்திருக்கேன். திரும்பவும் என் வாழ்க்கைல வரணும்னு நினைக்காத. ஒவ்வொரு தடவையும் ஏமாந்துட்டு இருக்க மாட்டேன்.” என்றவள் நடக்க ஆரம்பித்தாள்.

புயலாக அவள் முடியை பற்றியவன் தன்னை பார்க்குமாறு திருப்பி, “என்னடி நீ ஏமாந்துட்ட. உன்ன என் வாழ்க்கைக்குள்ள இணைச்சு நான்தான் ஏமாந்துட்டேன். அதான் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே அப்புறம் எந்த உரிமையில என்னை அடிச்ச.” வலி பொறுக்க முடியாத மகிழினி அவனிடம்,

“ரகு முடியை விடு வலிக்குது.” என்றாள்.

இரக்கம் பார்க்காமல் இன்னும் இறுக்கியவன், “என் பேர சொல்லாதடி அதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை. நான் வேணான்னு சொல்ற வரைக்கும் நீ என் கூட தான் வாழ்ந்தாகணும். நீயா வந்துட்டா என் பிள்ளைங்க முன்னாடி கை காலோட ஒழுங்கா நிப்ப. நானா தூக்கிட்டு போனா கைய கால உடைச்சு தான் தூக்கிட்டு போவேன். யோசிச்சு நல்ல முடிவா சொல்லு.” என்றவன் மித வேகத்தில் அவளை விட, தடுமாறி நின்றாள்.

முறைத்துக் கொண்டு நிற்கும் மனைவியின் கோபத்தை உணராதது போல், “புருஷனுக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு ஏதாவது வச்சிருக்கியா டி.” சாதாரணமாக சாலையில் விழுந்த அவளின் பையை எடுத்து தேடினான்.

முறைப்போடு அவன் கையில் இருக்கும் பையை பிடுங்கிக் கொண்டவள் பேச்சு வளர்க்காமல் நடக்க,

“ஆஹா மெல்ல நட
மெல்ல நட மெனி என்னாகும்…” என்ற பாடலில் நடையை நிறுத்தினான்.

அலை கடல் சீற்றம் போல் மூக்கு புடைத்துக்கொண்டு திரும்பி முறைத்தவளை பார்த்து கண்ணடித்தவன்,
“ஆஹா மெல்ல நட
மெல்ல நட மெனி என்னாகும்..
முல்லை மலர் பாதம் நோகும்…
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்…
வண்ண சிங்கரம் குழைந்துவிடும்

ஓ ஓ ஓ ஓஹூ ஹூ

ஆஹா மெல்ல நட
மெல்ல நட மெனி என்னாகும்…..” கணவனின் பாடலை ரசிக்க தோன்றாத மனைவி கடுப்போடு நடந்து கொண்டிருக்க, சிரிப்போடு பாடிக்கொண்டே பின் தொடர்ந்தான்.

***

மகிழினி வந்த இடத்திற்கு அவனும் பின் தொடர்ந்து வர, வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. செல்ல மகள் தன்னைக் காணவில்லை என்பதை கண்டு கொண்டதை நினைத்து தன்னைத்தானே பெருமைப்பட்டுக் கொண்டவன் அலைபேசிக்கு பதில் கொடுத்தான்.

“தங்கம்”

“அப்பா மான்குட்டிய விட்டுட்டு எங்க போனீங்க?”

“எங்கயும் போலடா தங்கம். உன் அம்மா இப்பவே அப்பாவ பார்க்கணும்னு அழுது அடம் பிடிச்சா. அதான் அம்மாவை பார்க்க கிளம்பிட்டேன்.”

“மான்குட்டியையும் கூட்டிட்டு போய் இருக்கலாம்ல.” என்று லேசாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் மகளின் அழகை உணர்ந்து சிரித்தான்.

“என் தங்கத்தை கூட்டிட்டு வரணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா, எக்ஸாம் இருக்குன்னு நேத்து என் தங்கம் சொல்லுச்சே என்ன பண்ண.” என்றவன் முடிப்பதற்கு முன்பாக,

“ஆமாப்பா! இன்னைக்கு மான்குட்டிக்கு எக்ஸாம் இருக்கு, அதுவும் டூ எக்ஸாம். மான்குட்டி சரியா படிக்கவே இல்லை.” அப்படி ஒரு வியப்பும், சோகமும் குழந்தையின் பேச்சில்.

“பரவால்லடா தங்கம் இந்த எக்ஸாம் இல்லன்னா அடுத்த எக்ஸாம்ல பார்த்துக்கலாம். இதுக்கெல்லாம் என் தங்கம் சோர்ந்து போகலாமா.”

“அப்பா தம்பி பாப்பா காலைல எந்திரிச்சதும் அழுதான்.”

“அந்த குரங்கு குட்டிக்கு என்ன வேணுமாம்.”

“அப்பா வேணுமாம்” என்றதும் புன்னகை அரும்பியது. பங்காளிகள் போல் சண்டை போட்டுக் கொள்ளும் தந்தையும் மகனும் உள்ளுக்குள் அதிக பாசத்தை வைத்திருக்கும் ரோசக்காரர்கள்.

“கொடு தங்கம் அவன் கிட்ட என்னன்னு கேட்போம்.” என்றதும் இடுப்பில் வைத்திருக்கும் தம்பியிடம் கைபேசியை கொடுத்தாள்.

“அப்பா” என்ற விசும்பலில் புன்னகைத்தவன், “அப்பா இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்திடுவேன்டா. அதுவரைக்கும் அக்காவை தொந்தரவு பண்ணாம பத்திரமா பார்த்துக்கணும்.” என்றான்.

“அம்மாவ கூட்டிடு வருவீங்களா” என்ற மழலையின் பேச்சில் தனக்கு எதிரில் இருக்கும் மனைவியை முறைத்தான்.

அவளோ தன் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் ஜீவனை சிறிதும் மதிக்காமல் தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகளின் ஏக்கத்தில் கோபம் பன்மடங்காக, “ராட்சசி என் பையன் பாரு உன்னை கேட்டு அழுறான்.” அவளை சுற்றி ஐந்து நபர்கள் இருப்பதையும் மறந்து சத்தமிட்டான்.

தன்னை அவமானப்படுத்தும் விதமாக ரகுவரனின் பேச்சு இருக்க, “இடியட்! வேலை செய்யும் போது எதுக்காக தொந்தரவு பண்ற. உன் பையன் அழுதா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். மரியாதையா இங்க இருந்து கிளம்பிடு.” பதிலுக்கு பதில் உடனே அவமானப்படுத்தினாள்.

நல்லவன் ரகுவரன் அந்த நொடி காணாமல் சென்று விட்டான். ஆக்ரோஷத்தோடு கைபேசியை தூக்கி அடித்தவன் அவளை தூக்கி அடிக்க அருகில் நெருங்கினான். சுதாரித்துக்கொண்ட மகிழினி அவனை விட்டு விலகி நிற்க, விடாமல் கழுத்தை நெரித்து தள்ளிக்கொண்டே சென்றான். வெட்டவெளி என்பதால் மகிழினி முட்டி நிற்க இடம் கிடைக்கவில்லை. பரிதவித்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவள் போராட,

“என்னடி சத்தம் ஓவரா இருக்கு…சங்க அறுத்துருவேன்.” என்பதற்கு சாட்சியாக குரல்வளையை நசுக்கினான்.

சுற்றி இருந்த ஆட்கள் மகிழினியை காப்பாற்ற வர, அத்தனை பேரையும் பார்வையால் தாக்கினான். அந்த இடைப்பட்ட நேரத்தில் தன்னை விடுபடுத்திக்கொண்ட மகிழினி, “பொறுக்கி நாயே உன் புத்தி என்னைக்கு மாறாதுடா.” என்றதோடு மூக்கில் ஒரு குத்து விட்டாள்.

வாங்கிய அடியில் மூக்கின் நுனி தக்காளி போல் சிவந்து விட்டது. உடனே கைகள் அந்த இடத்தை சிறை பிடித்துக் கொள்ள, விரல் பட்டதும் வலி உயிர் போனது. அவன் அவஸ்தையை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் தன் எண்ணில் இருந்து பிள்ளைகளுக்கு அழைத்தாள்.

“அம்மா” என்ற மான்குட்டிக்கு, “மானு அம்மா உன்கிட்ட சொல்லிட்டு தான வந்தேன் வீட்டுக்கு வர கொஞ்ச நாள் ஆகும்னு. அப்புறம் எதுக்காக அடம் பிடிக்கிற?” கேட்டாள்.

“நான் இல்லம்மா பாப்பா தான்” என்றதும் இரண்டாவது குழந்தையிடம் கைபேசி மாறியது.

தெளிவில்லாத மழலை மொழியில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் மகனை பல சமாதானங்கள் சொல்லி சிரிக்க வைத்தாள். குட்டி ரகுவரன் அன்னை பேசிய பின் சமத்தாகி விட, “அக்கா கூடவே இருக்கணும் அம்மா வர வரைக்கும்.” என்றாள்.

“அக்காவ தம்பி பாப்பா பார்த்துக்கும்.” என்ற மகிழ்வரனின் வார்த்தையில் புன்னகைத்தவள் கைபேசியை மகளிடம் கொடுக்கச் சொன்னாள்.

“மானு அம்மா வர கொஞ்ச நாள் ஆகும். அதுவரைக்கும் தைரியமா இருக்கணும். உன் அப்பா வேலை வெட்டி இல்லாம இங்க வந்து இருக்காரு நான் எப்படியாது துரத்தி விடுறேன். யாருக்கும் தொந்தரவு தராம உன் வேலைய நீயே செஞ்சுக்கணும். உன்னால தம்பிய பார்த்துக்க முடியும். தைரியமா இருடா அம்மா எப்பவும் உங்கள பத்தி தான் யோசிச்சிட்டு இருப்பேன்.” பிள்ளைகளின் அக்கறைக்காக உள்ளம் உணர்ந்து பேசியவள் இருவருக்கும் சேர்த்து முத்தம் கொடுத்தாள்.

குத்து வாங்கியவன் தாக்க வர, பிள்ளைகளிடம் பேசுவதால் பொறுமை காத்தான். அழைப்பு துண்டிக்கப்பட்டதை அறிந்ததும் பொண்டாட்டியின் வாயை பொத்தியவன் அவள் கதறுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் இழுத்துச் சென்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
23
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்