Loading

தமக்கையின் திருமணத்திற்காக வாங்கி வைத்த கூரைப் புடவையையே கட்டிக்கொண்டு, கண்ணாடி முன்பு அமர்ந்திருந்த சத்யரூபாவிற்கு, கண்ணீர் வேறு அதோ இதோவென வெளிவரத் துடித்தது.

அந்நேரம், கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்த இந்திரஜித், “ஹே… நீ இன்னும் ரெடி ஆகலையா?” எனக் கேட்டதில்,

“பார்த்தா தெரியல. ரெடி ஆகிட்டேன்” என்றாள் அவனைப் பாராமல்.

“எது, இதுக்கு பேர் தான் ரெடி ஆகுறதா? இப்படி எண்ணெய் வழிஞ்ச முகத்தோடயா மணமேடைக்கு வர போற…” என்று முறைத்தான்.

அவளும் நிமிர்ந்து சிவந்த விழிகளால் அவனை சாடிட, அதனை உணர்ந்தும் உணராதவன் போல, “என்னை திடீர் மாப்பிள்ளையாக்குனப்ப, நான் இப்படி தான் மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டேனா ரூப்ஸ்? சிரிச்ச முகத்தோட தான சுத்துனேன்.” என்று வம்பிழுத்தான்.

பட்டு வேஷ்டி சட்டையில், முகத்தில் புது மணமகனின் மினுமினுப்பில் அவனது சிவந்த நிறம், இன்னும் பளபளத்தது.

‘நேத்து அக்காவை கல்யாணம் பண்ணிக்க போனப்பவும் இப்படி தான் இருந்தான், இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க போறப்பவும் இப்படி தான் இருக்கான். இவனுக்குலாம் கொஞ்சம் கூட ஃபீலிங்ஸ்ஸே இருக்காதா?’ என மனதினுள் பொரிந்து கொண்டவளுக்கு, அதுவே சிறு கீறலை உண்டு பண்ணியது.

அதனை நிவர்த்தி செய்ய வேண்டியவனோ, பார்லர் ஆட்களை அழைத்து, அவளுக்கு பிரைடல் மேக் அப் செய்ய சொல்ல, “அதெல்லாம் வேணாம். எனக்கு பிடிக்காது.” என்றாள் பட்டென.

“லைட்டா பண்ணிக்கோ ரூப்ஸ். போட்டோக்கு நல்லா இருக்கும்.” என்றதில்,

“உனக்கு போட்டோக்கு நல்லா இருக்குற மாதிரி ஆள் வேணும்ன்னா, கூட்டத்துல நல்லா சிவப்பா அழகா இருக்குற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ இந்தர். உனக்கு எப்டியோ கல்யாணம் ஆகணும் அவ்ளோ தான!” எரிச்சலுடன் மொழிந்தாள்.

“உஷ்! நான் பக்கத்துல தான இருக்கேன். எதுக்கு இப்படி கத்துற? எனக்கு கத்தி பேசுனா பிடிக்காது சத்யா. மைண்ட் இட்.” சற்று காட்டமாகவே கூறியவனின் விழிகள் இப்போது உண்மையாகவே சிறு கோபத்தை தாங்கி இருந்தது.

“உனக்கு பிடிக்கலைன்னா நான் ஏன் பண்ணாம இருக்கணும். நான் அப்படி தான் கத்துவேன்.” என்று மீண்டும் கத்தியதில், வெடுக்கென அறைக்கதவை அறைந்து சாத்தி விட்டு சென்றான் இந்திரஜித். அப்போதும் அவள் கேட்ட கேள்விக்கு சரியான சமாதானங்களை கூறவில்லை!

ஏனோ கண்ணைக் கரித்தது அவளுக்கு. என்ன நினைத்தாளோ, சிறிது நேரத்தில், அவளே முகம் கழுவிக்கொண்டு, தமக்கை வைத்திருக்கும் சில மேக்கப் பொருட்களை உபயோகப்படுத்தி, லேசாய் முக அலங்காரம் செய்து கொண்டாள்.

அதுவே அவளது மாநிறத்தை பளிச்சென்று ஆக்கியது. மணமேடையில் இன்னும் கோபம் தணியாமல் அமர்ந்திருந்த இந்திரஜித், சத்யரூபாவின் வரவை அறிந்து முறைப்புடனே நிமிர்ந்தான்.

ஆனால், மீண்டும் விழிகளை திருப்ப தான் இயலவில்லை. கண்ணிற்கு தீட்டிய மையும், ஏற்கனவே சிவந்திருந்த சிறு இதழ்களில் தொட்டுக்கொண்டிருக்கும் செர்ரி நிற லிப்ஸ்டிக்கும் அவனை ஈர்த்தது.

அவள் அலங்காரம் செய்து கொண்டதால் வந்த ஈர்ப்பல்ல. அவன் கூறிய பின், அவனுக்காக செய்த அலங்காரத்தால் வந்த ஈர்ப்பு அது!

தலையைக் குனிந்தபடி அவனுக்கு அருகில் அமர்ந்தவளின் காதோரம், “சூப்பர் ரூப்ஸ். பிரைடல் மேக் அப் – அ விட இது செம்மயா இருக்கு. யூ லுக் பியூட்டிஃபுல்.” என்று கண் சிமிட்டி விட்டு, அய்யர் கூறிய மந்திரங்களை பின்பற்றிட, சத்யரூபாவிற்கு திகைப்பே பரவியது.

சிறிது நேரத்திற்கு முன்பு தானே, கதவை உடைக்காத குறையாக கோபத்துடன் சென்றான். இப்போதோ, அப்படி ஒரு விஷயமே நடைபெறாதவாறு நடந்து கொள்கிறானே என்றிருந்தது. கூடவே, அவனது பாராட்டலில், கன்னங்களும் ரோஸ் பவுடரைத் தாண்டியும் சிவந்தது.

அதனை வீணாக்காதவன் போல, அப்பொழுதே அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவிக்க, சட்டென இறுகிப் போனாள்.

தன்னை இப்படி ஒரு நிர்பந்தத்தில் நிற்க வைத்து விட்டானே…! என எண்ணிக் குமுறியவளுக்கு, மீண்டும் கோபம் தலைக்கு ஏறியது. கூடவே, எழுந்த எழிலழகனின் நினைவும் அவளைக் கூறு போட்டு, ஒரு சொட்டு கண்ணீரை மடியில் கொட்ட வைத்தது.

அதனைக் கண்டு புருவம் சுருக்கிய இந்திரஜித்தை, மேலும் யோசிக்க விடாமல் அடுத்து அடுத்து சம்பிரதாயங்களும் சொந்தங்களின் கேள்விகளும் இடைபுகுந்தது.

அவளே நின்று நடத்த வேண்டிய திருமணத்தில், அவளையே மணப்பெண்ணாய் மாற்றி விட்ட விதியை நொந்து கொண்டாள் சத்யரூபா.

சில நிமிடங்களில் மண்டபத்தில் சிறு சலசலப்பு. என்னவென்று நிமிர்ந்து பார்த்தவளுக்கு மீண்டுமொரு அதிர்ச்சி இதயத்தை சுக்கு நூறாக உடைத்தது.

அவளது தமக்கை வைஷாலியும், அத்தை மகன் எழிலழகனும் கைப்பிடித்து வந்தனர். அதிலும் அவள் கழுத்தில் புதிதாய் மஞ்சள் கயிறு மினுமினுத்தது.

தாமரையும் அதிர்வில் வைஷாலியை அறைய போக, எழிலழகன் தடுத்தான். “அவள் என் பொண்டாட்டி அத்தை…” அழுத்தமாக அவன் கூறிய வார்த்தையில், சத்யாவிற்கு வலித்தது.

அதில், அவளை நக்கலாய் ஏறிட்டவனும், அவளைத் திருமண கோலத்தில் எதிர்பாராமல் திகைக்கவே செய்தான். பின் நடந்ததை யூகித்துக்கொண்டவனுக்கு, இன்னுமாக ஏளனப்புன்னகையே தோன்றியது.

‘உன் அக்காவையும், அம்மாவையும் விட்டுட்டு வர முடியாதுன்னு தான, என் அம்மா, அப்பாவை அசிங்கப்படுத்துன. என் காதலை அசிங்கப்படுத்துன. இப்போ நீயே ஊரை விட்டு ஊரு வந்து, எவனுக்கோ பொண்டாட்டி ஆகிட்ட. இனிமே, ஜென்மத்துக்கும் நீ ஊருக்கே வராத மாதிரி பண்றேண்டி.’ எனக் கறுவிக்கொண்டவனுக்கும், அவள் இன்னொருவனின் மனைவியாய் கண் முன் வீற்றிருந்தது வலிக்கவே செய்தது.

அவனது பார்வைக்கான அர்த்தம் சத்யரூபாவிற்கு புரியாமல் இல்லை. ஆக, தன்னை பழி வாங்கும் விதமாக, தமக்கையை தூண்டி விட்டு திருமணம் செய்திருக்கிறான். என எண்ணும் போதே வெறுப்பாக இருந்தது.

வைஷாலி தான், “சாரிம்மா, நான் அத்தானை விரும்புனேன்.” என கண்ணீரை அடக்கிக்கொண்டு கூற, “இதை முதல்லயே சொல்ல வேண்டியது தானடி” எனக் கடிந்தார்.

“சத்யா தான் எடுத்ததுமே, சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணி வைக்க வேணாம்ன்னு சொல்லிட்டாளே. என் விருப்பத்தை கேட்டீங்களா?” எனக் கேள்வி எழுப்பியதில், சத்யா இன்னுமாக இறுகினாள்.

“நீ யாரையாவது விரும்புறியாக்கா?” சத்யா கேட்டபோது, “இல்லை சத்யா. உங்க விருப்பம் தான் என் விருப்பமும்” என்ற தமக்கையா இப்படி பேசுவது என நம்ப முடியாமல் நின்றாள்.

ஆனந்திக்கு தான் மயக்கம் வராத குறை. மகனை அதட்டவும் இயலவில்லை. அதே நேரம் உள்ளுக்குள் வளர்ந்த வெறுப்பை காட்டவும் இயலவில்லை. “இப்படி செஞ்சுட்டியேப்பா” என ஆதங்கப்பட்டவர், “பரவாயில்ல, எப்படி இருந்தாலும் வைஷு என் மருமக தான…” என்று ஆனந்தக்கண்ணீர் விட்டு, வைஷாலியை ஏற்றுக்கொண்டதில் தாமரைக்கு மனம் சற்று நிம்மதி அடைந்தது.

ஆனால், சத்யாவிற்கு தெரியுமே. அவர்களின் நடிப்பு திறனைப் பற்றி. ஆனாலும் ஒன்றும் பேசவில்லை.

பானுரேகா வைஷாலியை அழுத்தமாக பார்த்து விட்டு, “நல்ல நேரம் முடியிறதுக்குள்ள வீட்டுக்கு போகலாம்ங்க” என்று கணவரிடம் கூற, இந்திரஜித்திற்கு எழிலழகன் மனைவியைப் பார்த்த பார்வையே பிடிக்கவில்லை.

அதனை வெளிக்காட்டாமல், “ஓடுனது தான் ஓடுனீங்க. கொஞ்சம் முன்னாடியே ஓடி இருக்கலாம்ல. எனிவேஸ் கங்கிராட்ஸ்.” என்று எழிலழகனுக்கு கை கொடுக்க, அவனும் சத்யாவை முறைத்தபடி கை குலுக்கினான்.

அதில் அங்கிருக்கவே பிடிக்காமல், “வீட்டுக்கு போகலாம் இந்தர்…” என்றாள் சோர்வாக.

அவளது உரிமைப் பேச்சில் குளிர்ந்த இந்திரஜித், “போலாம் ரூப்ஸ்.” என்று விட்டு கிளம்ப எத்தனிக்கும் போது, தாமரையும் சாவித்ரியும் தான் அவளைப் பிரிய இயலாமல் தவித்தனர்.

அவர்களிடம் தலையசைப்புடன் விடை பெற்ற சத்யா, துளியும் கண்ணீர் சிந்தவில்லை.

“கல்லு மாதிரி இருக்கா பாரு தாமரை…” சாவித்ரி அங்கலாய்த்துக் கொண்டாலும்,

தாமரை, “அவள் கோபமா இருக்காம்மா. கொஞ்ச நேரத்துல அவளே சரி ஆகி, தனியா போய் அழுதுட்டு இருப்பா. அதான் வருத்தமா இருக்கு. சம்மந்தியம்மாவும் ஒரு மாதிரி வெடுக்குனு பேசுற ஆளு. இவள் எப்படி சமாளிக்க போறாளோ. அவள் இல்லாம எனக்கும் கஷ்டமா இருக்கும்மா.” என பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டவர்,

“எப்படி இருந்தாலும் இது நடக்க போறது தான… நல்லபடியா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனதே போதும் எனக்கு” என்று மனதை தேற்றினார்.

புகுந்த வீட்டினுள் காலடி எடுத்து வைத்த சத்யாவிற்கு, சிலமுறை அங்கு வந்திருந்தாலும், இப்போது சிறு படபடப்பு தோன்றியது. கூடவே, நெஞ்சை அழுத்தும் பாரமும். தாயிடமும் ஆயாவிடமும் காட்டிய பாராமுகம் அவளுக்கே வேதனையாக இருந்தது. வைஷாலியின் முகத்தை கூட பார்க்கவில்லை அவள். இனியும், அவளிடம் ஒட்டி உறவாடப் போவதில்லை. இத்துடன் அவளுடனான உறவு முறிந்தே விட்டது என்று முடிவே செய்து கொண்டாள். அவளது கவலை எல்லாம் அன்னையைப் பற்றி தான்.

அவருக்காக தானே, எழிலழகனை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு அருகிலேயே இருந்து விடலாம் என்று கணக்கு போட்டாள். ஆனால், ஆண்டவன் வேறு கணக்கிட்டு, அவளை வேறு எங்கோ சேர்த்து விட்டான்.

முட்டி நின்ற அழுகையை அடக்கவும் இயலாமல், அழவும் இயலாமல் தவித்துக் கொண்டிருந்தாள் சத்யரூபா.

சில நொடிகள் அவளையே பார்த்தவன், “ரெஸ்ட் ரூம் போகணுமா ரூப்ஸ்?” எனக் கேட்க, அவன் கேட்கும் விதம் புரியாமல் தலையை ஆட்டி வைத்தாள்.

உறவுக்கார பெண்ணொருத்தியிடம் அவளை அழைத்துப் போகக் கூற, அவளும் உடனடியாக குளியலறைக்குள் புகுந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

அழுகை அடங்கவே சில நிமிடங்கள் ஆனது. அதற்கு மேலும் வெளியில் செல்லவில்லை என்றால், நன்றாக இராது என்றெண்ணி, கண்ணீரை துடைத்துக்கொண்டு, வரவேற்பறையில் அமர்ந்திருந்த இந்திரஜித்தின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அவன், வந்திருந்த சொந்தங்களிடம் அரட்டை அடித்தபடி, டீ பாய் மீதிருந்த டிஷ்ஷியூ இரண்டை எடுத்து அவளிடம் கொடுக்க, அவள் புரியாமல் பார்த்தாள்.

அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “மை கலைஞ்சுருக்கு ரூப்ஸ். இப்படி வந்து கதறுறதுக்கு, ஒழுங்கா அத்தைகிட்ட பேசி, அவங்க முன்னாடியே அழுதுட்டு வந்துருக்கலாம்ல. மறுபடியும் அழுகணும்ன்னா, கொஞ்ச நேரம் கழிச்சு போ! மையை நல்லா அழிச்சுட்டு வா.” என்றதில், கண்ணிமைக்கத் தோன்றாமல் அவனைப் பார்த்தாள்.

தன்னை இந்த அளவு கவனிக்கிறானா? என்றபோதே உள்ளுக்குள் ஒரு வித பதற்றம் தோன்றிட, பின், “இதுக்கு தான் நான் மை போடுறதே இல்லை” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

அது அவனுக்கும் கேட்டதில், திரும்பி அவளை ஒரு முறை கூர்மையாய் ஏறிட்டான். மையிடுவதே இல்லை என்றால், அடிக்கடி அவள் கண்ணீர் விடுவதும் வழக்கம் தான் என்று தானே அர்த்தம்.

அவனது பார்வை தன்னை துளைப்பது உணர்ந்து, அவனை முறைத்தபடி ஏறிட்டவள், “என்ன?” எனக் கேட்க, அப்போதைக்கு யோசனையை விடுத்தவன், “நத்திங்… நம்ம ஃபர்ஸ்ட் நைட்க்கு உன்னை ‘மை’ போட சொல்லலாமா, வேணாமான்னு யோசிக்கிறேன். அழிஞ்சுட்டா, பார்க்க சந்திரமுகி மாதிரி ஆகிடுவியே” என்று குறும்பாய் தாக்க, சத்யரூபா தான், “என்னது ஃபர்ஸ்ட் நைட்டா?” என்று பேந்த பேந்த விழித்தாள்.

அலைபாயும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
19
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்