அத்தியாயம் – 6
காரில் ஏறியவளுக்கு மனம் ஒருவிதமாக அழுத்தியது, வரையறுக்க முடியாத ஒரு அழுத்தம் அவளுள் பரவுவதை அவளால் நன்றாக உணர முடிந்தது. அவன் காதலித்தது போல் நடித்ததோ அவளை காயபடுத்தியதோ கூட இப்பொழுது அவளுக்கு பெரிதாக தெரியவில்லை.
யாரை காதலிக்கிறோம் என்ற உணர்வை கூட தனக்கு தெரியபடுத்தாமல் அவன் ஆடிய இந்த நாடகம் தான் அவளை வெகுவாக பாதித்தது. அவன் தான் அகர்ணன் என்று சொல்லி கூட காதலிப்பதாக கூறி அவளை ஏமாற்றி இருக்கலாம் என்று அவள் மனம் அடித்துக்கொண்டது.
மீண்டும் மீண்டும் அவள் தந்தை கூறியதை நினைவுப்படுத்தி பார்த்தவளுக்கு அவர் சொன்ன, ‘அவன் கண்ணுல உனக்கான காதலில் எந்த பொய்யும் தெரியல!’.
தனக்கும் அவன் காட்டிய காதலில் பொய்மை தெரியவில்லையே. நிஜத்தில் தன்மேல் காதல் என்று வந்து நின்றது யார் என்று தெரியாமல் குழம்பிப்போனாள்.
அப்படி அவனோடு கழித்த ஒரு நாளின் நினைவு அவள் அழைக்காமல் அவள் நினைவிற்கு வந்தது.
முக்கியமான மீட்டிங் ஒன்றில் இருந்தவளுக்கு அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. முடித்துவிட்டு பார்க்கலாம் என்று அவள் நினைக்க அடுத்தடுத்த செய்திகள் பின்னோடு வர மனதில் அவனை அர்ச்சித்து எடுத்து பார்த்தாள்.
வழக்கம்போல் அவளுக்கு பிடித்தமான அந்த கஃபேவில் டேபிள் புக் செய்து விட்டு அதற்கான உறுதி செய்தியை அவளுக்கு அனுப்பியிருந்தான்.
“ஓகே வில் பீ @ 2” என்று பதில் அனுப்பிவிட்டு அவனிடம் இருந்த கவனத்தை மீட்டிங்கிற்கு திருப்பினாள்.
சரியாக அவள் சொன்னது போல அந்த மீட்டிங் முடிந்ததும் அவளது காரை அந்த கஃபேக்கு விட்டாள். அவளுக்கு முன் அவன் வந்திருந்தப்பதன் அறிகுறியாக அங்கே அவனது வண்டி நின்றுக்கொண்டிருந்தது.
அவள் உள்ளே நுழைந்த நேரம் , “ஹே தீரா இங்க” என்று அவளுக்கு கைக்காட்டி அவனிடம் அழைத்தான்.
“கர்ணன் என்னதிது. இன்னைக்கு நான் பிசினு தெரியும் தானே, அப்பறம் ஏன்?
“என்ன பண்ணுறது. நீ பிசினஸ் பின்னாடி ஓடுற நான் உன் பின்னாடி ஓடுறேன். என்னால உன்னை பார்க்காம இருக்க முடியல. ஒன் வீக் ஆச்சு என்கிட்ட நீ பேசி” என்றவன் கண்களில் அப்படி ஒரு மயக்கம் அவள் மீது,
யார் பார்க்கிறார்கள் என்று கருத்தில் கொள்ளாமல் அவள் விரல்களை பிடித்தவன் , அவனது தவிப்பை அவளுக்கு கடத்தும் விதமாக அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்தான்.
அதில் அவள் மேனி சிலிர்க்க, அவனிடம் இருந்து அவள் கையை பிரித்து வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.
“எனக்கு நீ வேணும் தீரா மொத்தமா?” என்று காதலுடன் கேட்டான்,
அதை நினைத்தவளுக்கு அப்போது தவறாக தெரியாத வார்த்தை பெரும் பிழையாக தெரிந்தது இன்று. அதன்பின் அவனோடு காதலின் திளைத்த அந்த நாளை நினைத்து பார்க்க அவளுக்கு கசந்தது .
அவனிடம் உருகி நின்ற நிமிடத்தை நினைக்க நினைக்க அவளுக்கு அத்தனை எரிச்சல் ஏற்பட்டது. வெளியே இது தெரிந்தால் அது அவளுக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்று உள்ளுக்குள் துடித்தாள். தைரியமானவள் தான் சற்று அழுத்தம் உடைவள் தான் ஆனால் அவளும் ரத்தமும் சதையும் கொண்ட பெண் தானே.
சராசரி பெண்ணின் ஏக்கம் அசை என்று அவளுக்கும் எல்லாம் இருக்கும் தானே. இவ்வளவு தூரம் இறங்கி திட்டம் தீட்டி அவளை வலிக்க வைக்க என்ன காரணம் என்று அவள் மனம் யோசிக்க ஆரம்பித்தது.
புதையல் வெட்ட பூதம் கிளம்பியதாக இதை விட ஏதாவது பெரியதாக அவளை வலிக்க செய்துவிட்டால் என்ன செய்வது என்று அரை மனதோடு இப்படியே விட முடிவெடுத்துவிட்டாள். இருப்பினும் மனம் தெளிவடையாமல் ஒரு மாதிரி அவளை அலைகழிக்க தாய்மடி தேடி சென்றாள் ஆதிரா.
அதேவேளை இதற்கெல்லாம் காரணமவனோ தாயகம் திரும்பிய ஆறுமாதத்தில் முதல் முதலாக வீட்டிற்கு செல்ல உடைமைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.
நிச்சயதார்த்ததை கூட பெரும்பாடுப்பட்டு வீட்டில் இல்லாமல் அவர்களது பாரம்பரிய வீட்டில் வைக்க சொல்லிப் போராடி அதில் வெற்றியும் கண்டான்.
அவன் நினைத்தது போல எல்லாம் நடைபெற அவன் எதிர்பாராத விசயம் பாதியிலேயே ஆதிராவிற்கு உண்மை தெரிந்ததே.
ஆனால் அதை நினைத்து சற்றும் வருந்தாது, எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பி விட்டான் அவனது இல்லத்திற்கு. முழுதாக ஒன்பது வருடத்திற்கு பிறகு அவன் இருப்பிடத்திற்கு செல்கிறான்.
ஆதிராவை ஏமாற்றிய மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் அடுத்து தன் வாழ்க்கையை எப்படி மீண்டும் புதிதாக கட்டமைப்பது என்று ஒரு சின்ன கலக்கம் அவன் மனதில் இருக்க தான் செய்தது.
அனைவரும் அவனை மறந்து அவரவர் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். அதைப்பற்றி கேட்கும் போது ஒருவித ஏக்கம் அவனை சுழ்ந்திருகிறது. அதை எல்லாம் நினைக்க நினைக்க இத்தனை ஆண்டுகள் எதையும் அனுபவிக்காமல் வெறுமையாக வாழ்ந்ததை நினைத்து அவள் மீது தான் கோபம் வந்தது.
அவளை ஏதோ ஒரு விதத்தில் காயப்படுத்தி அவனை போல தனிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி ஒரு விசயத்தை இறங்கி செய்திருக்கிறான். முதலில் அவனது திட்டத்திற்கு விகர்ணன் ஆதரிக்கவில்லை. பேசி பேசி தான் அவனை தன் வழிக்கு கொண்டு வந்தான் அகர்ணன்.
ஆதிராவின் மீது விகர்ணனுக்கு கோபம் இருந்தாலும் அவளை இப்படி ஏமாற்றுவதில் அவனுக்கு துளியும் இஷ்டமில்லை. ஆனால் இப்படியாவது அவள் மீது இருக்கும் வன்மத்தை தீர்த்து பழைய அகர்ணனாக மாறினால் போதும் என்ற எண்ணத்தில் தான் அகர்ணனுக்கு உதவினான்.
கண்டதை யோசித்து நேரத்தை வீணடிக்காமல் அனைத்தையும் எடுத்து வைத்தவன், விகர்ணனுக்கு அழைத்தான்.
“சொல்லு டா கிளம்பிட்டியா?”
“ஆமா விணு. உன் காரை இங்கயே நிறுத்திட்டு கேப்ல வீட்டுக்கு போறேன். டிரைவர் விட்டு எடுத்துக்கோ”
“நானே சொல்லனும்னு இருந்தேன். ஏற்கனவே அப்பா நீ எப்போ வந்த? நீ சொல்லி தான் நான் இப்படி பண்ணிட்டு இருக்கேனானு கேள்வி மேல கேள்வி கேட்டு என்னை ஒரு வழி பண்ணிட்டாரு”
“நீ என்ன சொல்லி வைச்ச?”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கே கால் பண்ணணு சொல்லி சமாளிச்சிருக்கேன். விக்கி கால் பண்ணான்.”
“என்னவாம் அவனுக்கு?”
“அவனுக்கும் நம்ப மேல டவுட் வந்துருச்சு. ஹாஸ்பிடல் வரைக்கும் வர சொல்லிருக்கான். நீ வீட்டுக்கு போ நான் போய் அஞ்சலியை பார்த்துட்டு வீட்டுக்கு வரேன்.”
ஆழ்ந்து மூச்சை விட்டவன், “தேங்க்ஸ் டா.” என்றவன் அவன் அடுத்து பேசுவதற்கு முன் அழைப்பை துண்டிதிருந்தான்.
அவனை மனதில் வசைபாடிய விகர்ணன் ஆதிராவின் அலுவகத்திற்கு விரைந்தான்.
பெட்டிகளை அடுக்கி முடித்ததும் , அலைபேசியில் காரை புக் செய்து அதன் வருகைக்காக காத்திருந்தான். அது வந்துவிட அடுத்த அரைமணி நேரத்தில் அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்.
காரின் ஒலியை கேட்டதுமே வாசலுக்கு ஓடி வந்திருந்தார் கல்யாணி. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு பின் இங்கே வந்திருகின்றான். அவனின் தோற்றம் தற்போதைய விகர்ணனின் தோற்றத்தை ஒத்திருக்க அவனை குழப்பமாக பார்த்தார்.
அவனும் அவரை பார்த்தான், அவரது எண்ணம் போகும் திசை சரி என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாக அழுத்தமாக பார்த்தான்.
கல்யாணியின் உள்ளம் சத்தமின்றி உள்ளே நொறுங்க ஆரம்பித்தது. எத்தனை மென்மையானவன் அகர்ணன் அவனா இது என்று இருபது வயது அகர்ணனோடு ஒப்பிட்டு பார்த்து கலங்கி நின்றார்.
காருக்கு பணத்தை கொடுத்து உடைமைகளை எடுத்து வெளியே வைத்தவன் கல்யாணியை பார்த்து, “அழகன் தான் உன் பையன் அதுக்காக இப்படி வைச்ச கண்ணு வாங்காமயா பார்ப்ப கல்லு?” என்று அவரை இயல்பாக்க அவன் பேசியதும் அவர் கண்கள் குளம் கட்டியது.
இங்கிருந்து சென்ற பிறகு முற்றிலும் பெற்றவர்களை தவிர்த்துவிட்டான். ஆரம்பத்தில் பேச முயற்சி செய்த லிங்கம் கூட நாள் ஆக ஆக அதை அடியோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் கல்யாணியால் அப்படி விட முடியவில்லை அவனது கோபத்தை கரைக்க தினமும் அழைத்துவிடுவார்.
அகர்ணன் பேச வேண்டும் என்று நினைக்காமல் தான் பேசுவதையாவது அவன் கேட்கட்டும் என்று வீட்டில் நடப்பது வெளியே நடப்பது என்று கிட்டதட்ட அவனை ஒரு நாள்குறிப்பாக நினைத்து பேசிய நாள்கள் உண்டு.
முதல் நாலு வருடம் அவர் மட்டுமே பேசினார், அதன்பின் சற்று மனமிறங்கியவன், ஒற்றை வார்த்தைகளில் பதில் கூற ஆரம்பித்தான். எப்பொழுதாவது அழைத்து இரண்டு வார்த்தை சேர்த்து பேசிவிட்டு வைப்பான், ஆனால் அது அரிதிலும் அரிது.
இப்படி திடிரென்று இவன் சொல்லாமல் இந்தியாவிற்கு வந்தது இல்லாமல் சிறுவயதில் பேசுவது போல சாதாரணமாக பேசியதும் சற்று கலங்கிய குரலில், “என்கிட்ட இப்படி பேசி எவ்வளவு நாள் ஆகுது அகி” என்று அவன் கையைப் பிடித்து கேட்டார்.
“அதுதான் இப்போ பேசிட்டேன்ல மம்மி. இனி பழையப்படி இருக்க நினைக்கிறேன். பழசை பேசி என்னை திரும்பி யூ.எஸ் அனுப்பிடாதீங்க”
“நான் எதுவும் சொல்லல டா உன்னை. திரும்பி என்னை விட்டு போனா நான் தாங்கமாட்டேன் அகி” என்று அவனை அணைத்து அழுதார்.
இதுபோல் இனி தன் அன்னையை அழுக வைக்க கூடாது என்று நினைத்து அவரோடு வீட்டிற்குள் சென்றான்.
உள்ளே சென்றதும் இருக்கையில் அமர்ந்து வீட்டை கண்களால் அளவிட்டான். இந்த ஒன்பது ஆண்டுகளில் வீட்டில் நிறைய மாற்றம். உள் அமைப்பு அனைத்தும் புதுபிக்க பட்டிருந்தது.
பெருமூச்சுவிட்டவன், “எல்லாம் மாறிடுச்சும்மா” என்று பொதுவாக கூறினான்.
“வீடு காரு பிசினஸ் …. ஏன் நீ கூட நிறைய மாறிட்ட அகி”
“ம்ப்ச் மாறிட்டேன் இல்ல என்னை முழுசா மாத்திட்டா”
“இன்னும் நீ அதை மறக்கலையா?”
“எப்படிம்மா மறக்க முடியும். டிவி நியூஸ்ன்னு அவளால என் லைப்பே போய்டுச்சே”
“டேய் என்ன டா பேசுற? அவ தெரியாம தான் பண்ணா. நாங்க யாரும் உன்மேல சந்தேகப்படலையே அகி?”
“இந்த உலகம் என்னை நம்பவே இல்லையே ஏதோ பொறுக்கி மாதிரில பார்த்துச்சு” என்று கண்கள் சிவக்க கேட்டான்.
“அகி இது நடந்து ஒன்பது வருஷம் ஆகுது. எல்லாரும் அதை மறந்து கடந்து அவங்க அவங்க வாழ்கையை பார்க்க போயிட்டாங்க நீ ஏன் டா அதே இடத்துல நின்னு உன்னை காயப்படுத்திகிறது மட்டுமில்லாம உன்னை சார்ந்தவங்களையும் நோகடிக்கிற?”
“என்னால மறக்க முடிலையே?”
“அதான் அவளை பழிவாங்கிட்டில இனி ஆச்சு உன் வாழ்க்கையை பாரு அகி”
“என்ன சொல்லுறிங்க ?” என்று அவரை ஆழ்ந்து பார்த்தான்.
“கண்ணாடில உன்னை பாரு டா. சின்ன குழந்தை கூட சொல்லும் நீ பண்ணிட்டு வந்ததை. அப்போ விகாவை ஆதிராகிட்ட நடிச்சு இவ்வளவும் பண்ணியா?”
எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்.
“எதுக்கு டா இவ்வளவு வன்மன் உனக்கு. இப்போதான் வனவாசம் முடிச்சு வந்திருக்க அதுக்குள்ள ஏதாவது பண்ணிட்டு திரும்பி என்னை தவிக்க விட்டு போயிறாதா.”
“எல்லாரும் விடு மறந்திருன்னு சொல்லுறிங்க. வேடிக்கை பார்த்த உங்களுக்கு வேணா அது சுலபமா இருக்கலாம் ,அந்த இடத்தில் இருந்த எனக்கு தான் அந்த வலி புரியும். சொன்னா புரியாதும்மா உங்களுக்கு”
“பொண்ணுங்க சாபம் குல நாசம் பண்ணும் டா. வேணாம் அகி இதோட விட்டுரு”
“என் வாழ்க்கை ஏற்கனவே அப்படி தான் இருக்கு. இனி என் வாழ்க்கையை மட்டும் பார்க்க போறேன் அவளா என் வழில வராத வரை அவளை நான் எதுவும் பண்ண மாட்டேன்” என்று அவன் அவருக்கு உறுதி அளித்தான்.
இந்த உறுதி எல்லாம் அவளை காணும் நேரம் வரை தான் என்று அப்பொழுது அவனுக்கு தெரியவில்லை.