Loading

ஜீவன் 5

 

விடியற்காலை நெருங்கியதில் ஆதிலட்சுமிக்கு முழிப்பு தட்டியது. மணியைப் பார்த்தவர் இதற்கு மேல் தூக்கத்தை தொடர விரும்பாது அறையை விட்டு வெளியில் வந்தார். வந்தவருக்கு தரையில் படுத்து கொண்டிருக்கும் மருமகள் காட்சியாக,

 

“அகல்! அகல்…!” என்று எழுப்ப ஆரம்பித்தார்.

 

 

தூங்கிக் கொண்டிருந்தாலும் நினைவு முழுவதும் அவள் திருமணத்தை சுற்றி இருக்க, மாமியாரின் அழைப்பிற்கு உடனே விழித்திறந்தாள். தன்னைத் தொடும் முதியவரின் கையை வெடுக்கென்று தட்டி விட்டவள் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்துக் கொள்ள,

 

“எதுக்குமா இங்க தூங்கிட்டு இருக்க. உன்னோட ரூம்ல போய் தூங்க வேண்டியது தான.” பதட்டத்தோடுவே அவரின் வார்த்தைகள் வெளிவந்தது.

 

 

அவள் எதுவும் பேசாமல் மௌனத்தை கடைப்பிடிக்க, “வாய தொறந்து சொன்னா தான தெரியும். என் மகன் ஏதாச்சும் பிரச்சனை பண்ணானா?” என்று கேட்டார்.

 

அதற்கும் அவள் பதில் சொல்வதாக இல்லை. மருமகள் மீது லேசாக கோபம் கூட எட்டிப் பார்த்தது அவருக்கு. அதை காட்டாமல் பொறுமையாக விசாரித்தார். இவ்வளவு வீம்பு ஆகாது என்று மருமகளை மனதிற்குள் திட்டியவர் எதர்ச்சியாக பாதி திறந்திருக்கும் அவர்கள் அறையை பார்த்தார்.

 

 

மகனின் ஒரு கால் மட்டுமே அவருக்கு தரிசனம் கொடுத்தது. திரும்பி மருமகளை பார்த்தவர் யோசனையோடு கதவை திறக்க, மெத்தையில் படுத்திருந்தான் தரணீஸ்வரன். மகன் தான் ஏதோ செய்திருக்கிறான் என்பதாக முடிவு செய்தவர் கோபமாக அறைக்குள் நுழைந்தார்.

 

நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் தரணியை எழுப்ப, போதை தெளியாத ஆழ்ந்த தூக்கத்தில் படுத்திருந்தான். எழுப்பி பார்த்து சோர்ந்து போனவர் அருகில் இருக்கும் நீர் குவளையை திறந்து வேகமாக மகன் முகத்தில் அடித்தார். மது வாசனை அவனை விட்டு எப்படி நகர்ந்ததோ பதறி அடித்து எழுந்தமர்ந்தான்.

 

தன்னை முறைத்து பார்க்கும் அன்னையிடம் எதுவும் கேட்காமல் அவனும் பதிலுக்கு முறைக்க, “யார கேட்டுட்டா இந்த ரூமுக்கு வந்த? நான் தான் பக்கத்து ரூம்ல தங்கிகோன்னு சொன்னேன்ல. எதுக்காக அந்த பொண்ணு கிட்ட பிரச்சனை பண்ண. தாலி கட்டிட்ட  அதிகாரத்துல என்ன வேணா பண்ணலாம்னு நினைக்காத தரணி. ஒரு நாளும் நீ பண்றதை பார்த்துட்டு  சும்மா இருக்க மாட்டேன்.” என்றவர் எதற்காக இதை கூறுகிறார் என்பதை புரிந்து கொள்ள அவனுக்கு நொடிகள் பல தேவைப்பட்டது.

 

தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்து தானாகவே அன்னையின் திட்டுக்கும் காரணத்தை அறிந்து கொண்டவன் தேடினான் தாலி கட்டியவளை. 

 

“என்னடா நான் பேசிட்டே இருக்கேன் கண்டுக்காம இருக்க. எதுக்காக அந்த பொண்ணு கிட்ட பிரச்சனை பண்ண?” மீண்டும் மகனை கண்டிப்பதற்காக உண்மை எதுவென்று தெரியாமல் கேள்வி கேட்டார்.

 

 

“மாம் ப்ளீஸ்! காலைலயே என்னை கோபப்படுத்தாதீங்க. பழக்க தோஷத்துல இந்த ரூம்குள்ள வந்துட்டேன் அவ்ளோ தான். மத்தபடி அந்த பொண்ணு கிட்ட நான் எந்த பிரச்சனையும் பண்ணல.” 

 

 

“நீ ஒன்னும் பண்ணாமையா அந்த பொண்ணு வெளிய தூங்கிட்டு இருக்கா.”

 

“ஐயோ அம்மா! உங்க மகனை நம்புங்க. நான் எவ்ளோ குடிச்சு இருந்தாலும் நிதானத்தோட தான் இருப்பேன். கீழ்த்தரமா நடந்துக்குற அளவுக்கு உங்க மகன் மோசமானவன் இல்லை. நான் வரும்போது அந்த பொண்ணு அங்க உட்கார்ந்துட்டு இருந்துச்சு. என் ரூம்குள்ள அவ இருக்கான்னு நினைச்சு எதுவும் திட்ட வேணாம்னு பேசாம படுத்துட்டேன்.” என்ற வாசகத்தை கேட்ட அகல்யா கொதித்து விட்டாள்.

 

 

இரவு அங்கு தன்னை பார்த்த பின்னும் கொஞ்சம் கூட உடல் கூசாமல் மெத்தையில் படுத்தவன் இரவு புலம்பியதை நினைத்தாள். வேண்டுமென்றே முன்னாள் மனைவியின் பெயரை சொல்லி தன் மனதை நோகடித்ததும் இல்லாமல் தொடவும் முயற்சி செய்திக்கிறான் என்பதை போலவும் உணர்ந்தாள்.

 

அடங்காத ஆத்திரத்தோடு அறைக்குள் நுழைந்தவள், “ராத்திரி உன் பொண்டாட்டி பேர சொல்லி பேசிட்டு இருந்ததை கூட தெரிஞ்சு தான் பண்ணியா?” என்று கத்தினாள்.

 

 

அவள் பேச்சில் விருப்பமில்லாதவன் மெத்தையை விட்டு எழுந்து கொள்ள, “அவன் என்ன பண்ணான்னு என்கிட்ட சொல்லுமா. நான் கண்டிக்கிறேன்.” மருமகளுக்கு ஆதரவாக பேசினார் ஆதிலட்சுமி.

 

 

“அம்மா கிட்ட சொல்ற அளவுக்கு நல்ல காரியத்தை பண்ணல உங்க மகன். நான் இருக்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எதுக்காக இதே ரூம்ல இருக்கணும்? பொண்டாட்டிய மனசுல வச்சுட்டு எதுக்காக எனக்கு தாலி கட்டணும்? அவளை நினைச்சி என் கைய புடிச்சு…ச்சீ!” பேச முடியாமல் தன் பேச்சை நிறுத்தினாள்.

 

மருமகள் பேசியதை கேட்டவர் மகனை மிகுந்த உக்கிரதோடு பார்த்தார். அதைவிட அதிகமான அனல் அவனிடம். அதுதான் ஆதிலட்சுமிக்கு இன்னும் கோபத்தை கொடுத்தது. மகன் என்றும் பாராமல் கன்னத்தில் ஒன்று வைத்தார்.

 

 

ரத்தத்தில் கலந்திருந்த போதை மொத்தமும் வடிந்தது அந்த வலியில். கன்னத்தில் கை வைத்துக் கொண்டு முறைத்தான் மனைவியை. அவளோ இதை எதிர்பார்க்காமல் அதிர்வோடு ஆதிலட்சுமி பார்க்க,

 

“இப்படி பிஹேவ் பண்ண எப்படி மனசு வந்துச்சு தரணி உனக்கு. உன்ன அவ்ளோ கேவலமாவா நான் வளர்த்துட்டேன். இன்னொருத்தி பேர சொல்லி இவ கூட இருக்க பார்த்தியா. அவ்ளோ காதல் இருந்தா எதுக்காக உன் பொண்டாட்டிய போக விட்ட? ஒரு பொண்ண விருப்பமில்லாம தொடுற அளவுக்கு அருவருப்பான ஜென்மமா நீ. இனி என் மூஞ்சிலயே முழிக்காத. இன்னொரு தடவை இந்த ரூம்ல உன்ன பார்த்தேன் அவ்ளோ தான்.” என்றவர் வெளியேறிவிட்டார் உடனே.

 

 

ஆதிலட்சுமி திட்டியதெல்லாம் வருத்தமில்லை அகல்யாவிற்கு. அடித்தது தான் என்னவோ போலானது. இதை எதிர்பார்த்து அவள் சொல்லவில்லை என்றாலும் தனக்காக மகனை அடிப்பார் என்றும் எதிர்பார்க்கவில்லை அவள். என்ன செய்வது என்று தெரியாமல் மாமியாரின் எண்ணத்தில் சுழன்று கொண்டிருந்தவள் கழுத்தை வேகமாக ஒரு கரம் இறுக்கியது.

 

 

நினைவுகளை கலைத்தவள் தன்னை தாக்கும் கரங்களைப் பிடித்துக் கொண்டு தரணீஸ்வரனை பார்த்தாள். ஏற்கனவே கண்கள் சிகப்பு மிளகாய் போல் இருக்க கோபத்தில் இன்னும் சிவந்து குங்கும கட்டி போல் காட்சியளித்தது. அவன் எவ்வளவு இறுக்கமாக பிடிக்கிறான் என்பதற்கு சாட்சியாக கைகள் முறுக்கேறி காட்டிக் கொடுத்தது.

 

 

மூச்சு விட சிரமப்படுபவள் அவனை அடித்துக் கொண்டு தன்னை தற்காத்துக் கொள்ள போராட, விட்டுக்கொடுக்காமல் இறுக்கிக் கொண்டே சென்றவன் மெத்தையில் சாய்த்து இன்னும் இரக்கம் பார்க்காமல் தன் செயலை அதிகப்படுத்தினான். கண்கள் மேல் இழுத்து கொண்டது அவளுக்கு. தன்னால் முடிந்தவரை போராடி பார்த்தவள் பலம் இழந்து தடுப்பதை நிறுத்தினாள்.

 

 

“உன்கிட்ட என்னடி தப்பா நடந்தேன்? வீட்டுக்கு வந்த ரெண்டாவது நாளே என்னையும் எங்க அம்மாவையும் பிரிச்சுட்ட. எங்க குடும்பத்தை பிரிச்சு சொத்தை அபகரிக்க தான நல்லவ மாதிரி நடிச்சு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட. ஊர் உலகத்துல உனக்கு வேற ஆம்பளையே கிடைக்கலையா? எதுக்காக டி என்னை கல்யாணம் பண்ண?” என்று மயக்க நிலைக்கு செல்லும் அவளை இன்னும் மெத்தையில் இறுக்கி,

 

 

“பண்ற எல்லாத்தையும் பண்ணிட்டு என்னை குப்பை மாதிரி பேசுற. தரணீஸ்வரன் யாருன்னு தெரியுமா உனக்கு? அவன் பின்னாடி எத்தனை பேர் அலஞ்சாங்கன்னு தெரியுமா. ஒழுக்கமா வாழனும்னு நினைச்சு உன்கிட்ட அசிங்கமா நிக்கிறேன்.

 

 

இது என்னோட ரூம், நான் இங்க தான் இருப்பேன். பிடிக்கலன்னா என் வீட்டை விட்டு நீ போடி. தாலி சென்டிமென்ட்ட வைச்சு உன் காரியத்தை சாதிக்கலாம்னு நினைக்காத. இதான் உனக்கு கடைசி. இன்னொரு தடவை என் விஷயத்துல தலையிட்ட கொன்னு பொதச்சிடுவேன்.” என்றவன் குளியலறை புகுந்து கொண்டான் அவளை வேகமாக உதறித் தள்ளி.

 

 

எழக்கூட தெம்பு இல்லாமல் சொருகிய கண்களோடு படுத்திருந்தாள் அகல்யா. அவன் பேசிய பாதி வார்த்தைகள் அவள் செவியில் விழவே இல்லை ஏற்பட்ட அழுத்தத்தில். தண்ணீர் வேண்டுமென்று உணர்வுகள் அவசரப்படுத்தியது. மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு படுத்துக் கொண்டிருந்தவள் எழுந்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டாள்.

 

குளியலறை உள்ளே இருந்தவன் மனம் அதீத சூட்டில் கொதித்துக் கொண்டிருந்தது. கோபம் குறையாமல் குளியலறைக்குள் நடந்து கொண்டிருந்தவன் குறையாது என்று உணர்ந்து அங்கிருக்கும் சுவற்றை காயப்படுத்தினான் ஓங்கி அடித்து. இரண்டு மணி நேரங்கள் ஆகியும் வெளியில் வரவில்லை அவன்.

 

அதே இரண்டு மணி நேரத்தில் ஓரளவுக்கு நினைவு திரும்பினாள் அகல்யா. கடினப்பட்டு எழுந்தவள் மாமியார் ஊற்றி விட்டு சென்ற குவளையில் மீதம் இருக்கும் நீரை பருகினாள். தொண்டைக் குழியில் இறங்கும் பொழுது லேசான வலி ஏற்பட்டது.

 

 

கழுத்தில் கை வைத்து நீவி விட்டு வலியை குறைக்க முயன்றவள் பார்வையில் குளியலறையில் இருந்து வரும் தரணீஸ்வரன் விழுந்தான். அதுவரை உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டு அமைதியாக இருந்தவள் தன் கையில் இருக்கும் நீர்க்குவளையை வேகமாக அவனை நோக்கி எறிந்தாள்.

 

 

வலது பக்க நெற்றியில் பட்டு அவை தரையில் விழ, வலி தாங்க முடியாமல் அந்த இடத்தில் கை வைத்தவன்  ரத்தம் வருவதை உணர்ந்தான். கை கொண்டு அழுத்தி அவளிடம் சண்டைக்கு பாய,

 

 

“என்னடா உன் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்க. யாரைக் கேட்டு என்னை தொட்ட? நீ குப்பை தான… இன்னொருத்தி வேணான்னு தூக்கி போட்ட குப்பைய தான நான் கட்டி இருக்கேன். 

 

குடிகாரன் உனக்கு எதுக்குடா இவ்ளோ ரோஷம். இன்னொரு தடவை என்கிட்ட இப்படி நடந்துக்கிட்ட அவ்ளோ தான்.” என்று விரல் நீட்டி எச்சரித்தவள் அங்கிருந்து வெளியேறினாள்.

 

 

ரத்தத்தை கண்டு கொள்ளாதவன் வேகமாக அவளை இழுத்து போட்டான் அறைக்குள். அவன் கொடுத்த வேகத்தில் தரையில் விழுந்தவள் கடுமையாக முறைக்க, “குப்பை கிட்ட வாழ தான் நீ வந்திருக்க. இந்த குப்பை தொரத்தி விட்டா நீ வாழா வெட்டி. என்னை எவ்ளோ அசிங்கப்படுத்துறியோ அதே அளவு நீயும் அசிங்கமானவ தான். ஏன்னா இன்னொருத்தி தூக்கி போட்டதை தான நீ தூக்கி வச்சிருக்க.” என்றான் அழுத்தமாக.

 

 

பதில் வாதம் புரியாமல் அவள் முறைத்துக் கொண்டு எழுந்து நிற்க, “இந்த ரூம்ல தான் நான் இருப்பேன்‌. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க.” என்ற தரணீஸ்வரன் கோபமாக திரும்ப, அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார் ஆதிலட்சுமி.

 

 

அன்னையைப் பார்த்ததும் அவன் தலை குனிந்து கொள்ள, “உன்ன பெத்ததுக்காக ரொம்ப அசிங்கப்படுறேன் தரணி.” என்ற வார்த்தையோடு அங்கிருந்து வெளியேறினார்.

 

 

விரக்தி புன்னகை அவன் உதட்டில். எத்தனையோ முறை தன்னை புகழ்ந்து பேசி பெருமை பட்ட அன்னையின் பேச்சு இன்று மாறி இருப்பதை நினைத்து தன்னைத்தானே களங்கப்படுத்திக் கொண்டான்.

 

ஜீவன் 6

 

மகனை திட்டி விட்டதால் வருத்தத்தோடு அன்றைய நாளை கடத்தினார் ஆதிலட்சுமி. தயாளன் ஆடை தொழிற்சாலை கம்பெனி நடத்தி வருகிறார். தரணீஸ்வரன் பொறுப்பு ஏற்றதிலிருந்து பெரும் லாபத்தை சம்பாதித்த நிர்வாகம் அவன் விலகியவுடன் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. மகனை பலமுறை அழைத்துப் பார்த்தவர் உள்ளம் சோர்ந்து போனதால் ஓரளவுக்கு மட்டுமே அதை மீட்டார். 

 

 

ஒரே பிள்ளையாய் போய்விட்டதால் எதையும் கடிந்து கூற முடியாத நிலையில் ஆதிலட்சுமியும் கணவனுக்கு துணையாக நிர்வாகம் பார்க்க ஆரம்பித்தார். புதிய ஒப்பந்தத்தை கையில் எடுத்திருப்பதால் அவர் அதில் சுழன்று கொண்டிருக்க, வீட்டில் நடப்பதை கவனிக்கும் பொறுமை இல்லை.

 

 

வேலை முடித்து வந்தவர் சோகமாக இருக்கும் மனைவியிடத்தில் அப்பொழுது தான் விசாரித்தார். அவரும் நடந்ததை சொல்லி வருத்தப்பட, மருமகள் கேட்டும் கேட்காது போல் அவர்களை கடந்தாள். மகனின் வாழ்வை விட மனைவியின் வருத்தம் தான் அவருக்கு பெரிதாக தெரிந்தது.

 

 

தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லியவர் வெளியில் சென்றார். அங்கு அகல்யா ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க, மருமகள் அருகில் நெருங்கினார். வருபவரைக் கண்டு அவள் நகர பார்க்க,

 

“கொஞ்சம் பேசணும்” என்றதும் நடையை நிறுத்தினாள்.

 

“அப்படி என்னம்மா உனக்கு கோபம்? உன்னை கட்டி போட்டு யாரும் தாலி கட்ட வைக்கலையே. ஏதோ ஒரு நிர்பந்தத்துல நீ இதுக்கு சம்மதிச்சு இருந்தாலும் உன்னோட சம்மதம் கிடைச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம் நடந்திருக்கு. முன்னாடி நீ ஆயிரம் மறுப்பு சொல்லி உன் வாதத்தை நியாயப்படுத்தலாம். இனி அதை சொன்னா முதல்ல உன்ன தான் குற்றம் சொல்வாங்க.” என்ற மாமனாரை முறைத்தாள்.

 

 

“உன்ன கஷ்டப்படுத்த இப்படி சொல்லலமா. கல்யாணம் பண்ணிட்டு அதுக்கப்புறம் உன் வாதம் மட்டுமே சரின்னு பேசுறது சரி இல்ல. எங்க மகனுக்கு ரெண்டாவது திருமணம் தான் அதை நாங்க யாரும் மறுக்கல. ஆனா, என் மகன் ரொம்ப நல்லவன். 

 

ஒவ்வொரு நாளும் அவனை நினைச்சு பெருமைப்பட்டு இருக்கோம். யாரு கண்ணு பட்டுச்சோ அவனோட வாழ்க்கை அப்படியே திசை மாறிடுச்சு. ஒரு பெத்தவங்களா அவனை கரை சேர்க்க நினைச்சது தப்பா? யாரோ ஒருத்திய கட்டி வச்சு திரும்பவும் அவன் வாழ்க்கைய நாசமாக்க என் மனைவிக்கு விருப்பமில்லை. அதனால தான் உன்னை தேர்ந்தெடுத்தா.” என்றவர் பேச்சைக் கேட்டவாறு அவர்களிடம் வந்தார் ஆதிலட்சுமி.

 

 

“எதுக்குங்க இதெல்லாம்?” என்ற மனைவிக்கு கண்களால் பதில் கொடுத்தவர், “உண்மைய சொல்லனும்னா உன்னை கட்டி வைக்க எனக்கு விருப்பமில்லை.” என்றதும் மாமனாரை குழப்பத்தோடு பார்த்தாள் அகல்யா.

 

“உண்மையா அகல். உனக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சதும் ஏற்பாட்ட நிறுத்த சொல்லிட்டேன். ஆனா, உங்க அம்மா தான் என்னை தனியா வந்து சந்திச்சாங்க.” 

 

மாமனாரின் வார்த்தை புதிது என்பதால் நம்ப முடியாமல் அகல்யா பார்த்துக் கொண்டிருக்க, “நாலு வருஷமா என் பொண்ணு உங்களை பத்தி பெருமையா மட்டும் தான் பேசி இருக்கா. தகுதி பார்க்காம என் பொண்ண கேட்கும் போதே உங்க மேல எனக்கு பெரிய நம்பிக்கை வந்துடுச்சு. நிச்சயம் அவ வாழ்க்கை நல்லா இருக்கும். எப்படியாது நான் என் பொண்ண சம்மதிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு போனாங்க. அதுக்கப்புறம் தான் நானும் இதுக்கு சம்மதிச்சேன்.” என்றதும் அன்னை மீது கடும் கோபம் எழுந்தது அகல்யாவிற்கு.

 

 

எப்படியாவது மகளின் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தவருக்கு தானாக அதுவும் வேலை செய்யும் முதலாளி மகனை கேட்கவும் உடனே சம்மதித்து இருக்கிறார். இதில் தரணீஸ்வரனின் பெற்றோர்கள் பக்கம் எவ்வளவு தவறு இருக்கிறதோ அதே தவறு பெற்ற அன்னை மீதும் இருக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்த தருணமாக மாமனாரின் பேச்சு அமைந்து விட்டது. 

 

 

மருமகளின் அதிர்வை புரிந்த ஆதிலட்சுமி அவள் தலையை மெதுவாக வருடி விட்டு, “இப்பவும் சொல்றேன் அகல்… இந்த வீட்டுக்கு நிச்சயம் நீ சரியான மருமகளா இருப்ப. உன்னால எப்போ இந்த வாழ்க்கையை ஏத்துக்க முடியுமோ அப்போ என் மகனோட சேர்ந்து வாழலாம். அதுவரைக்கும் என்னோட எல்லா ஆதரவும் உனக்கு இருக்கும்.” என்றார்.

 

 

பலத்த யோசனை அவளுக்குள். இவ்வளவு முரண்டு பிடித்த தன்னை எதற்காக திருமணம் செய்தார்கள் என்று இப்பொழுது வரை புரியவில்லை. தன் அன்னை எப்படி இரண்டாவது திருமணத்திற்கு தன்னை தள்ளினார் என்றதும் விளங்கவில்லை. ‘இதுதான் கடவுளின் விளையாட்டோ!’ என்ற சிந்தனை மனம் ஓரம் உதயமானது.

 

***

 

மருமகளுக்கு என்ன பிடிக்கும் என்பதை சம்மந்தியிடம் கேட்டு தெரிந்து கொண்டார் ஆதிலட்சுமி. அதில் ஒன்றாக அவளுக்கு பிடித்த இரவு உணவு தயாராக இருந்தது. நேற்றிலிருந்து சாப்பிடாமல் இருக்கும் மருமகளை வலுக்கட்டாயமாக சாப்பிட அமர வைத்தார். குழப்பத்தில் இருப்பதால் வீம்பு பிடிக்காமல் அவளும் அமர, சாப்பிட சொல்வார்கள் என்ற எண்ணத்தை முறியடித்து மருமகளுக்கு ஊட்டி விட்டார் ஆதிலட்சுமி.

 

 

தினமும் சுகன்யா தான் மகளுக்கு இரவு உணவை ஊட்டி விடுவார். தந்தை இருக்கும் வரை கடைப்பிடித்த பழக்கத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் மகளுக்கு துணையாக நின்றார் அவர். எவ்வளவு அலுப்பாக இருந்தாலும் சரி இரவில் அவர்தான் ஊட்டி விடுவார். தன்னிடம் வரும் உணவை வாங்காமல் அவள் மாமியாரை பார்த்துக் கொண்டிருக்க,

 

 

“உனக்கு இனிமே நானும் அம்மா தான். அங்க நீ எப்படி இருந்தியோ அதே மாதிரி இங்கயும் இருக்கலாம். தினமும் நானே உனக்கு ஊட்டி விடுறேன்.” என்று அன்பாக பேச அவள் மனதில் தான் அந்த வார்த்தைகள் பதிய மறந்தது.

 

 

அவரையே வைத்த கண் அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மருமகளின் பார்வையில் புன்னகைத்த தயாளன், “நீ இவ்ளோ யோசிக்க வேண்டிய அவசியமில்லை அகல். தரணிக்கும் தினமும் ஊட்டி விடுவா. கொஞ்ச வருஷமா அவன் அதை விரும்பாம போனதால அந்த ஏக்கம் இவளுக்கு நிறைய இருக்கு.” என்றதும் இன்னும் குழம்ப ஆரம்பித்தாள் அகல்யா.

 

 

இப்படி எல்லாம் மாமனார் மாமியார் இருப்பார்களா என்ற சிந்தனையும், ஒருவேளை தன்னை சமாதானப்படுத்த நடிக்கிறார்களா என்ற சிந்தனையும் ஒருசேர அவளை சூழ்ந்தது. அவை போட்டி போட்டு தீர்ப்பை சொல்ல துடிக்க, நீட்டிய கையோடு காத்திருந்தார் ஆதிலட்சுமி.

 

 

மறுத்து எழ முடியாத சூழ்நிலையில் அவள் அந்த உணவை வாங்கிக் கொள்ள, புன்னகையோடு மருமகளுக்கு ஊட்ட ஆரம்பித்தார். வீட்டிற்கு வந்த தரணீஸ்வரன் இவை அனைத்தையும் கேட்க, இன்னும் என்னென்ன துயரங்கள் தன்னைப் பெற்றவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற ஏக்கத்தில் வந்த வழியே திரும்பினான்.

 

***

அறையில் இருந்தவள் எண்ணமெல்லாம் புகுந்த வீட்டை பற்றியே இருந்தது. கணவனின் பெற்றோர்களை நன்கு அறிந்தவள் தான் அவள். நான்கு ஆண்டுகளாக கூடவே பழகி இருக்கிறாள். அவள் மனதில் நல்ல பெயர் உண்டு இருவருக்கும். திருமணப் பேச்சு வந்ததிலிருந்து தான் அவர்கள் மீது கோபத்தை கக்குகிறாள். 

 

அதேபோல் கடைசியாக குடித்த தோரணையில் பார்த்த தரணீஸ்வரன் குணம் அவள் மனதில் தவறாக பதிந்து விட்டது. இப்படி ஒரு அயோக்கியனுக்கு தன்னை திருமணம் செய்து வைத்த கோபம் அவளுக்கு.

 

இந்த வாழ்க்கையை தொடர்வதா அல்லது தன் வழியை பார்ப்பதா என எண்ணிக் கொண்டிருந்தவள் உடல் அசதியில் மெத்தையில் படுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக தூக்கம் அவளை ஆட்கொண்டது. விழி மூடி பாதி உறக்கத்திற்கு சென்று விட்டாள்.

 

கதவு “டமார்” என்று திறக்க, அலறி எழுந்தமர்ந்து முழிக்க ஆரம்பித்தாள். அதைக் கண்டு கொள்ளாத தரணீஸ்வரன் இன்றும் தன்நிலை இழந்தே வந்திருந்தான். கசங்கிய ஆடையோடு தள்ளாடிய நடையில் வரும் கணவனை கண்டு இருந்த அத்தனை நல்ல யோசனைகளும் ஓடிவிட்டது.

 

“நீ எதுக்குடா உள்ள வந்த? வெளியே போ.” 

 

சொருகிய கண்களோடு அவளை நெருங்கியவன், “இது என்னோட வீடு. நான் எங்க வேணா வருவேன் அதைக் கேட்க நீ யாருடி.” என்றவாறு மெத்தையில் அமர்ந்தான்.

 

 

“காலைல உங்க அம்மா என்ன சொன்னாங்கன்னு மறந்துட்டியா?”

 

“ஆஹான்!” என்றவன் மெத்தையில் படுத்து விட்டான்.

 

“டேய்! எந்திரிடா எரும மாடு. எந்திரிச்சு வெளிய போடா. இது என்னோட ரூம்.” 

 

காட்டு கத்தலாக கத்தியும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. கோபம் கொண்டவள் தலைகாணியை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள். “ஏய்!” என்றவன் புரண்டு படுக்க,

 

“ச்சீ! என்னோட போர்வை.” தான் உபயோகிக்கும் துணி மீது அவன் படுத்ததும் எரிச்சலோடு அதை உருவினாள். 

 

அவள் உருவிய வேகத்தில் படுத்து கொண்டிருந்தவன் பலம் இல்லாமல் தரையில் விழுந்தான். பின்பக்க தலை  நன்கு இடித்துக் கொண்டது தரையில். சத்தத்தைக் கேட்டவள் பதறி அடித்து அவனிடம் சென்றாள். அவன் இருக்கும் நிலைக்கு அந்த வலி புரியாமல் போக, கண்மூடி கொண்டான்.

 

மயங்கி விட்டான் என்று பயந்தவள் “டேய்! எந்திரிடா எங்கயாது அடிபட்டுடுச்சா. ஐயோ! என்னை கொலை கேஸ்ல உள்ள அனுப்பிடாதடா. எந்திரி…” என அவனை கடினப்பட்டு தூக்க முயன்றாள்.

 

 

அது முடியாமல் போக கைகள் இரண்டையும் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள். தெளியாத மனநிலையில் இருந்தவன் ஒத்துழைக்க முடியாமல் மீண்டும் சரிந்தான் தரையில். அமர்ந்திருக்கும் நிலை வரை இழுத்து விட்டாள் அவனை. அதன்பின் விழ,  முன்பு கேட்ட சத்தத்தை விட அதிக சத்தம் கேட்டது. 

 

 

“அய்யய்யோ செத்துட்டான்!” என்று கத்தி கைகளை காதில் வைத்துக் கொண்டாள்.

 

சில நொடி கழித்து ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள் அவனை ஆராய, அசைவில்லாமல் படுத்துக் கொண்டிருந்தான். அடுத்த சில நொடிகளில் இரு கண்களும் திறந்து கொள்ள, பக்கத்தில் நகர்ந்தவள் மூச்சு இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.

 

“அய்யய்யோ! உண்மையாவே செத்துட்டான் போல.” பதட்டத்தில் சரியாக சுவாச மூச்சை கவனிக்காதவள் அலறி துடித்தாள்.

 

அருகில் இருக்கும் தண்ணீரை ஊற்றி எழுப்பி பார்க்கலாம் என்ற யோசனையில் தண்ணீரை எடுத்தவள் தவறி அவன் மீது போட்டுவிட்டாள். சரியாக அது அவன் மண்டையில் பட,

 

“அம்ம்மா!” என்று அலறினான் தரணீஸ்வரன்.

 

“ஐய்யா! உயிர் இருக்கு…!” என்று குதுகளித்தவள்,

 

“எரும மாடே! கொஞ்ச நேரத்துல என்னை பயமுறுத்திட்ட.” என அவன் அருகில் அமர்ந்து திட்டினாள். மிக நெருக்கத்தில் இரண்டாவது முறையாக கவனிக்கிறாள் கணவனை.

 

புருவம் சுருங்கி ஆராய்ச்சி ரேகையை தொடர்ந்தவள், “பேசாம உன்னை இப்படியே அடிச்சு கொன்னுட்டு போதையில விழுந்துட்டன்னு சொல்லி என் வா

ழ்க்கைய காப்பாத்திக்கிட்டா என்ன!” என்றவள் திட்டம் புரியவில்லை என்றாலும் மயக்க நிலையில் இருந்தவன் கைகளை வீசிக்கொண்டு அவள்புறம் திரும்ப, 

 

“ச்சீ போடா!” அதை பின்னுக்கு தள்ளி நகர்ந்தாள்.

 

ஜீவன் துடிக்கும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்