Loading

வேதம் 5

 

“ஐயா! இந்த வருஷம் யாரு முதல்ல…” என பூசாரி தயங்க,

 

“அவங்களையே பண்ண சொல்லிடுங்க” என்றார் எத்திராஜ்.

 

“இருக்கட்டும். அவர பண்ண சொல்லுங்க” வீரபாண்டி. 

 

முதலில் யார் படையல் இடுவது என்ற பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. இருவர் பேசுவதையும் கேட்டு அமைதியாக நின்றிருந்தவன், “பரவால்ல மாமா நீங்களே பண்ணுங்க.” என்றான் வீரபாண்டியை பார்த்து. 

 

அதுவரை பேசிக் கொண்டிருந்தவர் வாயை மூடிக் கொண்டார். கணவன் மௌனமானதும் கண்ணகி பொங்கல் வைத்து படையலிடும் வேலையை செய்ய ஆரம்பித்தார். அவர்களுக்குப் பின் திலகவதி பொங்கல் வைக்க துவங்கினார். தூரமாக இருந்ததால் நரேந்திரனுக்கு எதுவும் தெரியாமல் போனது என்பதை விட ஆத்ரிகா தெரியப்படுத்தவில்லை என்பதே நிஜம்.

 

 

பொங்கல் வைக்கும் பொழுது முதல் அரிசியை போட மகளை அழைத்தார் கண்ணகி. உறுதியாக தான் இருக்கும் இடத்தை விட்டு நகரவில்லை. நரேந்திரனும் அவனது பெற்றோர்களும் அழைத்துப் பார்த்து தோற்று விட்டார்கள். அங்கு சென்றால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்தவள் அதை செய்ய துணியவில்லை. 

 

 

முதல் பொங்கல் குலதெய்வத்திற்கு படைக்கப்பட்டது. அங்கு வந்த அனைவரும் தம்பதிகள் மட்டும் படையல் இடுவதை பார்த்து கேள்வி எழுப்ப, அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் இன்ப இளங்கீரன். அவன் மட்டும் அல்ல இன்பாவின் குடும்பம் மொத்தமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே பேச்சு தடுமாறியது ஆத்ரியின் பெற்றோருக்கு. 

 

எதையும் வாய்விட்டு கேட்க முடியாத சூழ்நிலையில் தங்கள் வீட்டுப் பையனை பார்க்க, யாருக்கும் எந்த பதிலும் கிடைக்கப் போவதில்லை என்பது போல் இருந்தது அவன் நடவடிக்கை. 

 

தூரமாக அமர்ந்திருக்கும் ஆத்ரிகாவையும் அவனோடு இருக்கும் நரேந்திரனையும் பார்க்க சகிக்கவில்லை. மனம் நோக கேட்டு விட துடித்தார்கள். ஆத்ரி மீது கட்டுக்கடங்காத கோபம் எழுந்தது. அதிலும் இன்பனின் தாயாருக்கு சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு கோபம். ஆனால், மகனின் குணம் தெரியும் என்பதால் அவனை மீறிப் பேச நா எழவில்லை.

 

தூரமாக அமர்ந்திருந்தாலும் அங்கிருக்கும் ஒவ்வொருவரின் மனநிலையையும் சரியாக படித்தாள். அவர்கள் இவள் மீது கோபம் கொள்வது போல் இவளும் அவர்கள் மீது கோபம் கொண்டாள். ஏதோ ஒரு அச்சம் இங்கு வரும்வரை அவளுக்கு இருந்தது உண்மை. இன்பனின் உறவினர்களைக் கண்ட பின் அந்த அச்சம் திமிராக மாறியது. 

 

 

வேண்டுமென்றே அவர்கள் பார்க்க சிரித்து பேசினாள். தன்னிடம் பேச வந்த இன்பனின் தங்கையை தெரிந்தே நிராகரித்தாள். ஆதவன் பிள்ளைகள் இரண்டும் இவளைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டனர். ஆசையாக பேச ஓடி வர,

 

“அவ கிட்ட பேசக்கூடாது” என தன் பேரப்பிள்ளைகளை இழுத்து சென்றார் இன்ப இளங்கீரனின் பெரியம்மா அம்பிகா. 

 

நரேந்திரன் பார்வை அவனை சுற்றியே இருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் கவலை இல்லை என்பது போல் அவன் தோரணை இருந்தது. இன்பா நடவடிக்கை ஒவ்வொன்றும் எரிச்சலை கொடுத்தது. எப்படியாவது ஆத்ரிக்கு தெரியாமல் கோவிலை விட்டுப் போவதற்குள் அவனை பழிவாங்க முடிவெடுத்தான். 

 

 

இரு வீட்டுப் பொங்கலும் முன்னுக்கு பின் இருக்க தீபாதாரணை காட்டி மஞ்சள் கயிறு எடுத்து வரப்பட்டது. திருவிழா முடியும் வரை கயிற்றை கழட்ட மாட்டார்கள். தலைக்கட்டு முறை உள்ளவர்களுக்கு கோவில் பூசாரியே கட்டி விடுவார். மற்றவர்கள் அரச மரத்தில் இருக்கும் பிள்ளையாரிடம் வைத்து கட்டிக் கொள்ளலாம். 

 

 

வீரபாண்டிக்கும் அவரது மனைவி கண்ணகிக்கும் கட்டி விட்ட பூசாரி, “மக எங்கய்யா?” கேட்க, வர மறுத்தவளை அதட்டி வலுக்கட்டாயமாக வர வைத்தார்.

 

யாரையும் பார்க்காமல் நரேந்திரனோடு வந்து நின்றவள் எதிரில் இன்பன். அவன் இருப்பதை அறிந்த பின் இன்னும் தலையை தாழ்த்திக் கொண்டாள். எதிரில் இருப்பவளின் செயலில் லேசான ஏளன புன்னகை அவனுக்கு. மணக்கப் போகும் மனைவியை கண்டு சிரிக்கும் இன்ப இளங்கீரனை கண்டபடி முறைத்தான் நரேந்திரன்.

 

 

தன் வீட்டு மகனை முறைக்கும் புதியவனைக் கண்டு அந்தக் குடும்பமே முறைத்தது. யார் என்று தெரியாதவர்கள் தன் மகனை முறைக்கிறார்கள் என்பதை உணர்ந்து நரேந்திரனின் பெற்றோர்களும் முறைத்தார்கள். சுற்றி இருப்பவர்களின் முறைப்புக்கு நடுவில் பூசாரி ஆத்ரிகா கையில் அந்த மஞ்சள் கயிற்றை கட்டினார். 

 

“இவருக்கும் கட்டி விடுங்க பூசாரி” 

 

“தலைக்கட்டு முறை உள்ளவங்களுக்கு மட்டும்தான் கட்ட முடியும்னு தெரியுமில்ல அய்யா.”

 

“எல்லாம் முறையாக போறவர் தான்.”

 

“அப்படியாய்யா” என்றவர் கேட்க சங்கடப்பட்டு கொண்டு கேட்டார், “தம்பி உங்களுக்கு எந்த முறை” என்று. 

 

உறவு முறையை சொல்வதற்கு முன் மூச்சை இழுத்து விட்டு, “மருமகனாக போறாரு.” என்றிட, பூசாரியின் பார்வை எதிரில் இருந்தவன் மீது ஊர்ந்தது. 

 

அழுத்தமான பார்வையோடு இன்ப இளங்கீரன். நரேந்திரனை முறைத்துக் கொண்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீரபாண்டியை முறைத்தார்கள். மனதில் உண்டான அதிர்வை தனக்குள் வைத்த பூசாரி நரேந்திரனுக்கு அந்த மஞ்சள் கயிறை கட்டிவிட, கண்ணால் தன் குடும்பத்தை அடக்கியவன்,

 

“நம்ம படையல போடுங்க பூசாரி.” என்றான். 

 

அங்கிருந்து நைசாக நழுவி விட்டாள் ஆத்ரி. அவளுக்குப் பின் அவள் குடும்பமும் நழுவ பார்க்க, “தலைக்கட்டு முறை உள்ளவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதா மாமா.” என்றிட, பக்கத்தில் இருந்த நரேந்திரனுக்கு தூக்கி வாரி போட்டது.

 

வீரபாண்டியும் கண்ணகியும் அதே இடத்தில் நின்று கொள்ள, அவசரமாக அவர்கள் மகளைத் தேடி வந்தான். எங்கோ பார்வையை வைத்தபடி குளம் அருகே அமர்ந்திருக்க, “அவன் மாமாவ எதுக்கு மாமானு சொல்றான்? அவன் உனக்கு சொந்தமா? எதுக்கு என்கிட்ட தெரியாத மாதிரி நடிச்ச?” கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான். 

 

 

“உறவுன்னு சொல்ற அளவுக்கு அவன் எங்களுக்கு நெருக்கம் இல்லை.”

 

“தூரத்து சொந்தமா”

 

“அதுவும் இல்ல. சின்ன வயசுல இருந்தே ஒருத்தரை ஒருத்தர் நல்லா தெரியும்.” 

 

“மாமான்னு சொன்னதும் பயந்துட்டேன்.” என்றவனை எப்பொருளும் அறிந்து கொள்ளா வண்ணம் ஒரு மாதிரியாக பார்த்தாள்.

 

***

 

அனைத்தும் நன்முறையில் முடிந்ததும் பந்தல்கள் போடப்பட்டது வயிறார சாப்பிட. அம்மன் அருளால் இந்த வருடம் மழை அமோகமாக பெய்ததால் எப்போதும் இருக்கும் விருந்தை விட இந்த வருடம் அதிகமாக இருந்தது. அதை அனுபவித்து சுவைத்து மகிழ ஊர் மக்களில் ஒருவனாக தன் வருங்கால மனைவியோடு அமர்ந்தான் நரேந்திரன். 

 

நண்பர்களோடு உணவு பரிமாறிக் கொண்டிருந்தான் இன்ப இளங்கீரன். இவர்கள் வந்து அமர்ந்ததும் பரிமாறிவதை நிறுத்திவிட்டு நகர பார்க்க, “இந்தாப்பா தம்பி… இலைய போடு.” என்றான். 

 

அங்கிருந்த அவனது நண்பர்கள் சண்டைக்கு பாய போக, “நான் பார்த்துக்கிறேன் விடுங்க” என இலையோடு வந்து, “எங்க டாக்டரே போடணும்.” கேட்டான். 

 

“ஆஹான்… என் தலையில போடு.” விளையாட்டாக அவன் சொல்ல உண்மையாகவே அவன் தலைமீது இலை வைத்தான். அங்கிருந்த நண்பர்களும் ஊர் மக்களும் நரேந்திரனை பார்த்து சிரித்தார்கள். 

 

பல்லை கடித்து, “இடியட்!” என இலையை தட்டி விட, “நீதான டாக்டரே தலையில வைக்க சொன்ன. வேணும்னா முதுகுல வைக்கட்டுமா.” அடுத்த இலையை வைக்க, அதையும் தட்டி விட்டான். 

 

 

அமைதியாக ஆத்ரிகா அங்கிருந்து எழப் பார்க்க, கைப்பிடித்து அமர வைத்தான் நரேன். 

 

“மூஞ்சியவே பார்த்துட்டு இருக்காம இலைய போடுடா.” 

 

புன்னகையோடு அவர்களுக்கு இலை விரித்து உணவுகளை பரிமாறினான். நிறைவாக இருந்த இலையை நோட்டம் விட்டவன் அடுத்து என்ன கேட்கலாம் என்ற யோசனையில் சாப்பிட ஆரம்பித்தான். 

 

 

வேறு ஆட்களை கவனிக்க  நகர போன இன்பனை விடாது, “தம்பி சாம்பார் வேணும், தம்பி அப்பளம் இல்ல பாரு. இந்தா வெள்ளை சட்டை போட்ட தம்பி யாரு ரசம் ஊத்துறது. பாயாசம் வைக்க தெரியாதா?” வேலை வாங்க ஆரம்பித்தான். 

 

 

என்றும் அதிகாரத்தோடு வலம் வந்தவனை இப்படி பார்க்க ஊர் மக்களுக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அவனது நண்பர்களோ கட்டுக்கடங்காத கோபத்தில் நின்றிருந்தார்கள். அதில் ஒரு நண்பன் இன்பன் குடும்பத்து ஆட்கள் காதில் விஷயத்தை போட்டு விட்டான். 

 

மொத்த குடும்பமும் பந்தி நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டது. அவர்களைக் கண்டதும் நகர்ந்தவனை தடுத்து,

 

“என்ன இது டேஸ்ட் நல்லாவே இல்ல. வேற இருந்தா எடுத்துட்டு வா…” என ஊறுகாயை விசிறி அடித்தான். 

 

 

இன்பனுக்காக பொறுத்திருந்த குடும்பத்து ஆட்களுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. நரேந்திரனை வசைபாட அவன் அருகில் வர, 

 

“தேவை இல்லாத பிரச்சனை பண்ற நரேன். சாப்பிடவே வேணாம் கிளம்பலாம் வா.” அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தரதரவென இழுத்துச் சென்று விட்டாள்.

 

“என்னப்பா இது” எத்திராஜ்.

 

“சின்ன விஷயம்தான் விடுங்கப்பா.”

 

“எது சின்ன விஷயம்?” திலகவதி.

 

“விடுங்கம்மா நான் பார்த்துக்கிறேன்.”

 

“இதத்தான் இவங்க இந்த ஊருக்குள்ள வந்த நாள்ல இருந்து சொல்லிட்டு இருக்க இன்பா.” ராஜேந்திரன்.

 

“இப்பவும் அதைத்தான் சொல்றேன் பெரியப்பா. என் மேல நம்பிக்கை இருந்தா அமைதியா இருங்க.”

 

“அதுக்காக வரவன் போறவனுக்கு எச்ச இலை எடுத்து போட்டுட்டு இருப்பியா.” என்ற அண்ணன் ஆதவனுக்கு, 

 

“கோவில் திருவிழா நம்ம நடத்துறோம். இங்க வந்த எல்லாரும் வயிறார சாப்பிட வேண்டியது நம்ம கடமை. கோவிலுக்குள்ள வேலை செய்யுறது புண்ணியம் அண்ணா.” என்றான். 

 

“எங்களை சமாளிக்க பேசாத அண்ணா. யாரோ ஒருத்தன் முன்னாடி நீ அசிங்கப்பட்டு நிற்கிறது எங்களுக்கு பிடிக்கல.” 

 

“நீயுமா யாமினி”

 

“அவ மட்டும் இல்ல எங்க எல்லாருக்குமே நீ இப்படி நடந்துக்குறது பிடிக்கல. இன்னொரு தடவை இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கோ.”

 

“சரிங்க பெரியம்மா நீங்க கோபப்படாதீங்க.” என்றவனிடம் மேற்கொண்டு பேச ஆரம்பித்த அம்பிகாவை தடுத்த இன்பனின் பாட்டி சண்முகவள்ளி,

 

“அவன்தான் விடுங்கன்னு சொல்றான்ல அப்புறமும் எதுக்காக கேள்வி கேக்குறீங்க. எங்க எப்படி நடந்துக்கணும்னு அவனுக்கு நல்லா தெரியும். சின்ன குழந்தை மாதிரி அவனுக்கு பாடம் எடுக்காம வந்த வேலைய கவனிங்க.” என்றிட, அவரது கணவர் சிவமுனி,

 

“பார்த்துக்க ராசா. உன் மேல நம்பிக்கை வச்சு தான் நடக்கிற எல்லாத்தையும் பார்த்தும் அமைதியா இருக்கோம்.” என தோளை தட்டி விட்டு சென்றார்.

 

அனைவரும் சென்று விட, “இன்பா” என அவனது அத்தை சித்ரா முன் நிற்க, “நான் பார்த்துக்கிறேன் அத்தை அன்பு மாமா உங்களை தேட போறாரு போங்க.” என்றான்.

 

“நடக்கிறதெல்லாம் பார்த்தா ரொம்ப கோபம் வருது. அவனை…” என்றவர் மீது கை போட்டு, 

 

“என் செல்ல அத்தை லட்டு மாதிரி ரெண்டு பொண்ணுங்களை பெத்து வச்சிருக்காங்களே தவிர இன்னும் குழந்தை தான்.” கொஞ்சியதும் முதலில் முறைத்து பின் சிரித்து விட்டார்.

 

“என்னமோ போ இன்பா. உன்ன நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. என் பொண்ணு சரண்யாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியாம பார்த்துக்க. சாமி ஆடிடுவா உன்னை யாராவது இப்படி பேசறத பார்த்திருந்தா.” எனும் பொழுதே விஷயம் அறிந்து பத்திரகாளியாய் வந்து கொண்டிருந்தாள் சரண்யா.

 

 

சித்ராவின் இரண்டாவது மகள். அந்தக் குடும்பத்தில் மிகவும் செல்லமாக வளர்ந்தவள். மாமன் மீது அளவு கடந்த அன்பு கொண்டவள். அந்த அன்பு தான் அவனை ஆக்கிரமித்தது. 

 

“எங்க அவன்?” என்றவளை பேச விடாமல் அடக்கியவன் அங்கிருந்து நகர்த்தி வந்து சமாதானம் செய்ய, அடங்க மறுத்தாள். 

 

ஏதேதோ சொல்லி ஒரு வழியாக அடக்கியவன் மார்பில் சாய்ந்திட, புன்னகையோடு அணைத்து நின்றான் தூரத்தில் ஒருத்தி பார்ப்பதை அறியாது.

 

வேதம் ஓதும்…

 

 

வேதம் 6

 

தலையில் கை வைத்துக் கொண்டு பாவமாக அமர்ந்திருக்கிறாள் ஆத்ரிகா. கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தவள் ஒரு நிமிடம் கூட மூச்சு விடவில்லை. வந்ததிலிருந்து தையதக்கா என குதித்துக் கொண்டிருக்கிறான் நரேந்திரன். பொறுமையாக அவனை சமாதானம் செய்து கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் முடியாமல் தலையில் கை வைத்து விட்டாள்‌.

 

“அவன் என்னதான் நினைச்சிட்டு இருக்கான்னு தெரியல. எனக்கு வர ஆத்திரத்துக்கு கழுத்தை நெரிச்சி கொல்லனும் போல இருக்கு.” 

 

“நரேன்…”

 

“பேசாத குல்பி! அவன விட உன் மேல தான் எனக்கு கோபம் அதிகம். அவனை இந்த அளவுக்கு ஏத்தி விட்டதே நீதான். முதல் நாளே அவன் பல்ல உடைச்சி இருந்தா இதை பண்ண யோசிச்சி இருக்க கூட மாட்டான். அவன் ஒரு ஆளுன்னு அவனுக்கு பயந்து சாகுற”

 

“அவனுக்கு பயப்படுறேன்னு யார் சொன்னது?”

 

“தனியா வேற சொல்லனுமா உன் மூஞ்சிய பார்த்தாலே தெரியுது. அவன கண்டா போதும் பாம்ப கண்ட மாதிரி பம்புற. நீ இந்த மாதிரி இருக்கிறதால தான் அவன் ரொம்ப ஆடுறான்.”

 

“எனக்கு பிரச்சனை பண்றது பிடிக்காது”

 

“ஒன்னு புரிஞ்சுக்கோ குல்பி. நீயா போய் அவன்கிட்ட எந்த பிரச்சனையும் பண்ணல. அவன் தான் உன்கிட்ட பண்றான். அதுக்கு நீ பதில் கொடுக்காம விட்டினா… நிம்மதியா வாழ விட மாட்டான்.”

 

“அவனுக்கு இவ்ளோ பில்டப் தேவையா”

 

“அவன் ஏதோ உள்நோக்கத்தோட தான் இது எல்லாத்தையும் பண்றான்னு எனக்கு தோணுது.”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ அவனை சாப்பிடுற இடத்துல சீண்டுன அவன் உன்ன போறப்போ சீண்டினான் அவ்ளோதான்.” 

 

“அவனுக்கு சப்போட்டா?”

 

“சத்தியமா இல்ல நரேன். அவன் தான் பிரச்சனை பண்றான்னு தெரிஞ்சதும் ஒதுங்கி போறது புத்திசாலித்தனம். பிரச்சனை பண்றதே ஆதாயம் தேட தான்னு தெரிஞ்சும் அதுக்கு இடம் கொடுத்தோம்னா நம்மளை விட முட்டாள் வேற யாரும் இருக்க முடியாது.”

 

“அப்போ என்னை முட்டாள்னு சொல்றியா?”

 

“ஐயோ!” என எழுந்தவள், “நான் சொல்ற எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிக்கிற.” நரேனின் தோள் தொட, “போ!” என கோபித்துக் கொண்டு சென்றுவிட்டான். 

 

 

பெருமூச்சோடு மெத்தையில் அமர்ந்தவள் கோவிலை விட்டு கிளம்பும்போது நடந்ததை நினைத்து பார்த்தாள். மாமனார் மாமியாரோடு தன் பெற்றோர்களை அனுப்பி வைத்தவன் அவளோடு ஊர் சுற்ற கிளம்பினான். பந்தியில் நரேந்திரன் கொடுத்த அனைத்து இம்சைகளையும் பொறுத்துக் கொண்டிருந்தவன் கிளம்பும் நேரம்,

 

“டாக்டரே! ஒரு எமர்ஜென்சி” படபடக்க ஓடி வந்தான். 

 

இளங்கீரன் அவசரத்தில் தன் நிதானத்தை இழந்தவன், “யாருக்கு என்னாச்சு?” பதற, 

 

“சொல்றதுக்கெல்லாம் நேரமில்லை. அங்க ஒரு உசுரு ஊசல் ஆடிட்டு இருக்கு. சீக்கிரம் வந்து என்ன எதுன்னு பாரு டாக்டரே. அதுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு இந்த திருவிழாவே நடக்காது. எல்லாம் உன் கையில தான் இருக்கு வேகமாக வா.” என்றான். 

 

 

மருத்துவராக பரபரப்பானான் நரேந்திரன். தன் வில்லங்கம் தன்னை இழுத்துச் செல்கிறது என்பதை அறியாமல் அவனுக்கு பின்னால் ஓடினான். ஆத்ரிகா சந்தேகப் பார்வையோடு சற்று குறைந்த வேகத்தில் சென்றாள். 

 

“யாரு?”

 

“இவதான் டாக்டரே”

 

“இங்க ஆடுங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. யாரை சொல்ற, யாருக்கு உடம்பு முடியல.” 

 

“சரியா போச்சு போ! கண்ணு தெரியாத உங்களையா கூட்டிட்டு வந்தேன்.” என்று சலித்தவன், “முதல்ல நல்ல கண் டாக்டரா பார்த்து கண்ணாடி போடு டாக்டரே.” என்றான்.

 

“விளையாடுறதுக்கு இது நேரமில்லை. யாருக்கு உடம்பு முடியலன்னு சொல்லு.”

 

“ப்ச்! சப்பா… மண்டையில மசாலா இல்லாத டாக்டரே… உண்மையாகவே இவளுக்கு தான் உடம்பு முடியல.” கொழுத்து வளர்ந்த பெண் ஆட்டை காட்டினான். 

 

 

நரேந்திரன் முறைக்க, ஆத்ரிகா அவனை இழுத்துச் செல்ல முயன்றாள். எதுவும் அறியா பச்சைப்பிள்ளை போல், “நல்லாதான் இருந்தா என்னன்னு தெரியல திடீர்னு கக்குறா. ஆத்தாக்கு தானம் கொடுத்த ஆடு வேற. ஏதாச்சும் ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடுச்சின்னா திருவிழா நடக்கிறது கஷ்டம் டாக்டரே. துருதுருன்னு இருப்பா….எதையாது பண்ணி இவளை நல்லா நடமாட விடு.” ஆட்டை தடவி வருத்தப்பட்டான். 

 

 

இன்ப இளங்கீரன் சட்டையை தாவி பிடித்தவன், “ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு தெரியுமாடா உனக்கு… இடியட். சரியான தற்குறியா இருக்க. இந்த மாதிரி விளையாட்ட இன்னொரு தடவை என்கிட்ட வச்சுக்காத.” எனும் பொழுதே அங்கிருந்தவர்கள் நரேந்திரனை சுற்றி வளைக்க ஆரம்பித்தார்கள். 

 

 

விபரீதம் நடப்பதற்குள் அவனைப் பாதுகாக்க நினைத்தவள் அழைக்க, வர மறுத்து முட்டிக்கொண்டிருந்தான் எதிரில் இருந்தவனோடு. இன்பனின் நண்பர்கள் உட்பட பெரிய தலைகள் நரேந்திரனை தாக்க ஆரம்பித்தார்கள். அவன் மீது ஒரு அடி விழுவதற்குள் அனைவரையும் கை உயர்த்தி கட்டுப்படுத்தியவன்,

 

“சம்பவம் பண்றது பெருசில்ல…டாக்டரே. எந்த இடத்துல யாரை பண்றோம்னு யோசிச்சு பண்ணனும். இங்க எல்லாரும் ஒன்னா உறவுகாரங்களா வாழையடி வாழையா வாழ்ந்துட்டு இருக்கோம். நேத்து வந்த நீ என்னை வேலை வாங்குறத பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா. ஒழுங்கா கல்யாணம் பண்ண கையோட இந்த ஊரை விட்டு ஓடிடு. உன் உசுருக்கு அதான் பாதுகாப்பு.” என்றவனை உச்ச கோபத்தில் பார்த்தான். 

 

 

இன்ப இளங்கீரன் அந்தக் கோபத்தை தூண்டிவிட்டு குளிர் காய நினைத்து வார்த்தைகளை வீச, கயிறு கட்டி இழுக்காத குறையாக நரேந்திரனை இழுத்து வந்திருந்தாள் வீட்டிற்கு. திருமணத்திற்கு குறைவான நாட்களே இருக்க இருவரும் அதுவரை அமைதியாக இருக்க வேண்டுமே என்ற பரிதவிப்பு அவளுக்கு. 

 

 

சில நேரம் பின்னால் நடக்கப் போவதை நம் மனம் முன்னமே எச்சரித்து விடும். நம் கதாநாயகிக்கும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் நடக்கப் போகிறது என்பதை அறிந்திருந்தால் இவ்வளவு தூரம் நரேந்திரனோடு பயணித்திருக்க மாட்டாள். 

 

***

 

“தம்பி!” 

 

“சொல்லுங்க தாத்தா”

 

“எல்லார மாதிரியும் நானும் பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதய்யா. ஊருக்குள்ள நம்ம மான மரியாதையோட வாழ்ந்துட்டு இருக்க குடும்பம். நம்ம சொல்லுக்கு கட்டுப்பட்டு ஊரே நடக்குது. அப்படி இருக்கும்போது இதெல்லாம் நல்லாவா இருக்கு.” 

 

 

எதைக் குறிப்பிடுகிறார் என்பதை அறிந்தவன் பதில் கூறாமல் தோட்ட கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்க, “உன்ன நினைச்சா யாருக்கும் நல்ல தூக்கம் வரமாட்டேங்குது. நீ ஒரு வார்த்தை சொன்னேனா அந்த பொண்ணு வீட்ல போய் பேசி பார்ப்போம்.” என்றதும் மூன்றாம் கண்ணை திறந்து விட்டான். 

 

பேரன் கோபத்தை உணர்ந்து, “உன் மேல நம்பிக்கை இருக்கு. அதேநேரம் தலைமுறை தலைமுறையா காப்பாத்திட்டு வர நம்ம குடும்ப பேரு‌ தாழ்த்திட்டு போறதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லைய்யா.” வருத்தப்பட்டார். 

 

 

தாத்தாவின் பேச்சில் இருக்கும் உண்மையை உணர்ந்து கோபத்தை மறைத்துக் கொண்டவன், “இந்த கல்யாணம் நடக்கணும் தாத்தா. அப்போதான் நான் நினைச்சது நடக்கும். என்னால என்னைக்கும் இந்த குடும்பப் பேரு கெட்டுப் போயிடாது. சொல்லப்போனா கெட்டுப் போன பேர திருத்துறதுக்கான ஒரு நல்ல வாய்ப்பு இது எனக்கு. இதை விட்டா சரி செய்ய வழியே இருக்காது. உங்க பேரன் நிச்சயமா ஜெயிப்பான். நடக்குறதை நினைச்சு வருத்தப்படாம நிம்மதியா தூங்க பாருங்க.” சமாதானம் செய்தான்.

 

பெரியவரின் மனம் சமாதானம் ஆவது போல் தெரியவில்லை. மூத்த மகன் பிறந்த பின்பு தான் இவர் கையில் இவரின் தந்தை குடும்ப பொறுப்புகளை ஒப்படைத்தார். தன் தந்தையைப் பார்த்து வளர்ந்தவர் அதை சிறிதும் கலங்கப்படுத்தாமல் பேணிக் காத்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்து பொறுப்புகளையும் மூத்த மகனிடம் கொடுக்க, அவரோ தன் தம்பிக்கு கொடுக்க விருப்பம் தெரிவித்தார். 

 

 

எத்திராஜ் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுக்க, தன்னை விட நீ சிறந்தவன் எனப் புரிய வைத்து பொறுப்புகளை ஒப்படைத்தார். தன் மீது நம்பிக்கை வைத்து கொடுத்த பொறுப்புகளை இன்று வரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் இன்ப இளங்கீரனின் தந்தை. 

 

அடுத்ததாக இந்த பொறுப்புகள் அனைத்தும் ஆதவன் கைக்கு செல்வதே உத்தமம். ஏற்கனவே இன்பனிடம் இதைப் பற்றி தெரிவித்து விட்டார். ஆனால், ஆதவனோ மிகவும் சாதுவான ஆண்மகன். தந்தை போல் தம்பிக்கு கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறான். அதற்குக் காரணம் இன்பனின் ஆளுமை தான். 

 

 

இவ்ஊரில் அவன் சொல்லிற்கு தனி மதிப்பு உண்டு. பட்டம் படித்துவிட்டு முழுவதுமாக தன் குடும்ப வியாபாரங்களை பார்க்க துவங்கி விட்டான். சிறு பிழை கூட அவன் கண்ணில் இருந்து தப்பியதில்லை. யாராக இருந்தாலும் முகத்துக்கு நேராக கேள்வி கேட்கும் அவன் தைரியமும், எதையும் துல்லியமாக கணக்கிடும் அறிவும், மிரள வைக்கும் தோரணையும் அவன் மீதான பிம்பத்தை அதிகப்படுத்தி விட்டது. 

 

 

ஒரு கட்டத்தில் அவன் வீட்டில் இருக்கும் மூத்த மூன்று ஆண்கள் கூட அவன் சொல்லுக்கு அடிபணிய ஆரம்பித்து விட்டார்கள். பொறுப்பிற்கு தகுதியானவனாக வளர்ந்து நின்றான். எதை எடுத்தாலும் ஏற்றத்துடனே சென்று கொண்டிருப்பவன் வாழ்வில் இறக்க முகங்கள் கடந்த சில வருடங்களாக. 

 

 

எதையோ நினைத்து ஆரம்பித்தது எங்கோ முடிந்து விட்டது. பலருக்கும் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டான். முதல்முறையாக தலைகுனிந்து நின்றான். செய்த தவறை ஒப்புக் கொள்ள முடியாமல் இன்று வரை மறைத்து வைத்திருக்கிறான் குடும்பத்திடம்.  

 

 

சண்முகவள்ளியை தவிர வேறு யாருக்கும் அந்த ரகசியம் தெரியாது. பேரன் தெரியாமல் செய்து விட்டதால் இன்று வரை தன் கணவனிடம் கூட வாய் திறக்காமல் இருக்கிறார். ஏனெனில், இளங்கீரன் செய்த செயல் தெரிந்தால் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் கூட மன்னித்திருக்க மாட்டார்கள். 

 

 

இன்பன் வாழ்வில் இன்பம் இல்லாமல் போனதற்கு இன்பனே காரணமானதால் இப்பொழுது நடக்கும் திருமணத்தை வைத்து திருத்திக்கொள்ள முடிவெடுத்து இருக்கிறான். இவன் மட்டுமே முடிவு செய்யும் விஷயம் அல்லவே அவை! 

 

பிழையை திருத்த வேதங்கள் ஒலிக்கும் நாள் வர வேண்டும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
14
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்