Loading

தேசம் 5

மாமனார் வீட்டு சொத்தை அபகரிக்க நினைத்தவன் அருமையாக அதற்கான அடித்தளம் போட்டு விட்டான். தான் செய்யப் போகும் செயல் பின்னொரு நாளில் தனக்கே விபரீதமாக போகிறது என்பதை அறியாத சாமிநாதன் குடியிருக்கும் வீட்டைத் தவிர மீதம் இருக்கும் அனைத்தையும் மருமகன் பெயருக்கு மாற்ற முழு ஏற்பாடு செய்துவிட்டார்.

அவை நடந்தேற இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அதுவரை இவ்விடத்தில் இருக்க வேண்டும் என்ற கடுப்போடு முற்றத்தில் நின்றிருந்தான். அவனைப் பார்த்தபடி மெத்தையில் அமர்ந்திருந்தாள் பிரார்த்தனா.

கணவனின் ஆசைக்காக மதியம் பிரியாணி சமைத்தவள் சாப்பிட வைத்து அழகு பார்க்க, “த்தூ…!த்தூ…!” ஒரு வாய் வைத்ததும் துப்பினான்.

அந்த நேரம் கீழ் இறங்கி வந்த சாமிநாதன் என்னவென்று விசாரிக்க, “ஒன்னும் இல்ல மாமா” என உதட்டால் சொல்லிவிட்டு முகத்தால் பல பதில்களை கொடுத்தான்.

அதை கவனித்தவர் மனைவியை கடுமையாக முறைத்து, “என்ன நடக்குது இங்க? வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு நல்ல சாப்பாடு கூட செஞ்சு போட முடியாதா. ஏற்கனவே நம்ம பண்ண காரியத்தால அப்பா அம்மாவை இழந்துட்டு கஷ்டத்துல இருக்காரு. அவர் மனச கஷ்டப்படுத்தாம பார்த்துக்கணும்னு தெரியாதா.” திட்டினார்.

“ஐயோ மாமா! அத்தை எதுவும் பண்ணல.”என்றதோடு கூட நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவனோ,

“உங்க பொண்ணு” என்று விட்டு, “அது…அதுவந்து…இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல மாமா விடுங்க.” என சமாளித்தான்.

மகளை மூன்றாம் கண் திறந்து சுட்டெரித்தவர், “என்ன பண்ண?” கேட்டார்.

“அதான் ஒன்னும் இல்லன்னு சொல்றனே மாமா எதுக்காக அவளை மிரட்டுறீங்க. சாப்பாட்டுல உப்பு இல்லங்குறதுலாம் ஒரு விஷயமா.”

“எவனோ ஒரு பைத்தியக்காரனை காதலிக்க தெரியும் சாப்பாட்டுல உப்பு போட தெரியாதா உனக்கு. உன்னைய கட்டி என் மாப்பிள்ளை என்ன கஷ்டப்பட போறாருன்னு தெரியல.” என மகள் என்றும் பாராமல் வார்த்தை விட்டவர்,

“இவளை எதுக்கு சமைக்க விடுற. சாப்பாட்டுல எதையாவது கலந்து கொடுத்து கொலை பண்ண கூட துணிய மாட்டா. மாப்பிள்ளை இங்க இருந்து போற வரைக்குமாது வாய்க்கு ருசியா சாப்பிடட்டும். இன்னொரு தடவை இவ கிச்சன்ல இருக்கிறதை பார்த்தேன் அவ்ளோதான்.”

“மாமா ப்ளீஸ் உங்க கோபத்தை குறைங்க. இது ஒரு சின்ன விஷயம் இதுக்காக இவ்ளோ பேசணுமா. என் முன்னாடியே என் மனைவியை இப்படி பேசுறது நல்லா இல்ல. அவ எதை சமைச்சாலும் கோபப்படாம சாப்பிடுவேன்.” என்றவன் அவர் முன்பு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

“அந்த சாப்பாட்டை சாப்பிடாதீங்க மாப்பிள்ளை.” எனத் தடுத்தவரோடு சரவணன் வாதம் செய்து கொண்டிருக்க, “என்ன வள்ளி பார்த்துட்டு இருக்க இதை எடுத்துட்டு போய் குப்பையில கொட்டு.” மனைவியிடம் உறுமினார்.

கணவன் கோபத்திற்கு அஞ்சிய வீட்டின் தலைவி அவசரமாக மகள் சமைத்த சாப்பாடு அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டார். மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்ட சாமிநாதன் உணவகத்தில் இருந்து அறுசுவை உணவை ஏற்பாடு செய்திருந்தார்.

பெரிய இலை போட்டு வந்த அனைத்து மாமிச உணவுகளையும் ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான் சரவணப் பொய்கை. பக்கத்தில் அமர்ந்து பார்த்து பக்குவமாக பரிமாறினார் சாமிநாதன். வள்ளியோ கணவன் சொல்லும் ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து உதவி செய்து கொண்டிருந்தார்.

நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பிரார்த்தனா கிட்சன் உள்ளே சென்றாள். அங்கு அவள் சமைத்த பிரியாணி ஆதரவற்றுக்கிடக்க, அள்ளி எடுத்து வாயில் போட்டாள்.

எல்லாம் சரியாகத்தான் இருந்தது. சமைக்கும்பொழுது கூட ஒரு முறை ருசி பார்த்து விட்டு தான் அடுப்பை அணைத்திருந்தாள். எப்படி தன் கணவனுக்கு மட்டும் உப்பு இல்லாமல் போனது என்ற ஆழ்ந்த சிந்தனை தான் இப்பொழுது இவளுக்கு. அதைவிட தந்தையிடம் அவன் பேசும் தோரணையும் தன்னிடம் பேசும் தோரணையும் சந்தேகத்திற்கு ஆளாக்கியது.

தன் முதுகை துளைத்து பார்க்கிறாள் என்பதை சில நொடியில் கண்டு கொண்டான் அந்த கள்வன். சத்தமிட்டு சிரித்து தன்னை காட்டி கொடுக்காமல் மௌனமாக சிரித்தவன்,

“சாரி தனா குட்டி. ஆசையா பிரியாணி செய்ய சொல்லி உன்னை திரும்பவும் கஷ்டப்படுத்திட்டேன். எப்பவும் அமிர்தமா செய்வியே இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு? உப்பு மட்டும் இல்ல காரம் கூட ரொம்ப கம்மியா இருந்துச்சு செல்லம். மாமா வரார்னு தெரியாம என்னமோ செய்ய போயி கடைசியில நீ மாட்டிக்கிட்ட. இதெல்லாம் என்னால வந்துச்சுன்னு நினைக்கும் போது ரொம்ப வலிக்குது. உன்ன பார்க்க தைரியம் இல்லாம தான் இங்க நின்னுட்டு இருக்கேன்.” குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான்.

கைபேசி கையில் இருந்ததால் உடனடியாக படித்தாள். குழம்பியும் குழம்பாத மனநிலையிலும் மீண்டும் அவனைப் பார்க்க, “என் தனா என்ன சமைச்சாலும் அது எனக்கு அமிர்தம் தான். அதனாலதான் மாமா போனதும் நீ சமைச்சதை தனியா எடுத்து வச்சுட்டேன். ராத்திரிக்கு நம்ம ரெண்டு பேரும் அந்த நிலாவ பார்த்த மாதிரி உட்கார்ந்து சாப்பிட போறோம். உனக்கு நான் ஊட்டி விடுவேனாம் எனக்கு நீ ஊட்டி விடுவியாம். ரொம்ப நாள் ஆசை.” மீண்டும் அனுப்பினான்.

“ஏதாச்சும் பேசு தனா. என்னை அவாய்ட் பண்ணாத அழுகையா வருது. லவ் யூ தனா.”

“இப்ப மட்டும் நீ ரிப்ளை பண்ணல அப்படியே மாடியில இருந்து குதிச்சிடுவேன்.”

நான்காவது குறுஞ்செய்திக்குப் பிறகு அவனை நெருங்கியவள் தோள் தொட, “பேசாம இருக்காதமா ப்ளீஸ். நான் ட்ரீட்மென்ட்க்கு வரும்போது எப்படி எல்லாம் பயம் வருமோ அந்த மாதிரி பயம் வருது. மாமாக்கு உண்மை தெரிஞ்சா உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சிடுவாருன்னு தான் அவர் முன்னாடி நடிக்க வேண்டியதா இருக்கு. சாரி தனா…ப்ளீஸ்.” இடைவெளி இல்லாது நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.

தன்னை சுற்றி நடக்கும் எதையும் புரிந்து கொள்ளாத பக்குவத்தில் பதிலுக்கு அணைத்து கொள்ளாமல் நிற்க, “நான் உயிர் வாழ்றதே உனக்காக தான். நீ இப்படி இருக்குறதை பார்க்க கஷ்டமா இருக்கு. நான் வேணா இப்படியே குதிச்சு செத்துவிடவா.” என அவளை அணைத்துக் கொண்டு விழுவது போல் சற்று அசைய,

“சரவணா!” பதறி அணைத்துக் கொண்டாள்.

“சாரி தனா”

“விடுங்க… ரிலாக்ஸ். சாகுறதை பத்தி பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.” எனும் பொழுது அவன் உடலில் அப்படி ஒரு இறுக்கம்.

அதைக் கூட அறியும் நிலையில் இல்லாதவள் தொடர்ந்து அறிவுரை கூறிக் கொண்டிருக்க, ‘தற்கொலை தீர்வாகாது…தொடரும்.’ சொல்லிக்கொண்டது குரோதமான அவன் மனது.

***

இருட்டு நிறைந்திருக்க வெளிப்பக்கம் நின்றிருந்த அந்த உருவம் மின்சாரத்தை முழுவதும் துண்டித்தது. சத்தம் வராமல் நடையிட்டு பிரார்த்தனா அறையை எட்டியது. அங்கு அவள் ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருக்க, அவளையே பார்த்துக்கொண்டிருந்தது.

அவளின் நிம்மதியான தூக்கம் வெறுப்பை கொடுத்தது. வாழ்நாள் சபதமாக அவளின் தூக்கத்தை கெடுக்க நினைத்த அந்த உருவம்
கொண்டு வந்த கயிற்றால் கழுத்தை சுருக்கு போட முயன்றது. அசோகர்யத்தை உணர்ந்து விழித்திறந்தவள் அதிர்ந்தாள். இருட்டில் முகம் தெரியவில்லை என்றாலும் முழுவதுமாக போர்த்திக் கொண்டு ஒரு உருவம் நின்றிருந்தது.

முழித்துக் கொண்டதை உணர்ந்ததும் அவள் மீது ஏறி அமர்ந்து வேகமாக சுருக்கு போட முயன்றது. தன் உயிரை தற்காத்துக் கொள்ள போராடியவள் கத்தி கூச்சலிட துவங்க, குரல்வளை சிதையும் அளவிற்கு கழுத்தை இறுக்க ஆரம்பித்தது. மூச்சு திணறி கை கால்களை அசைத்து தன் உயிருக்காக போராடியவள் மீது சிறிதும் பாவம் பார்க்காத அந்த உருவம் தலகாணியைக் கொண்டு முகத்தை அழுத்த ஆரம்பித்தது.

“நீ தூங்க கூடாது. அடுத்தவனை தூங்க விடாம செஞ்சிட்டு எப்படிடி தூங்க முடியுது. உன்னால தூக்கம் இல்லாம அலைஞ்ச நாட்கள் எத்தனை தெரியுமா. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் ஒரு ராத்திரி கூட உன்னை நிம்மதியா தூங்க விட மாட்டேன். சாவு ஒன்னு தான் உனக்கான நிரந்தர தூக்கமா இருக்கணும். சாவு…சாவு… சீக்கிரம் சாவு… உன் சாவ பார்க்க காத்திருக்கிறேன்.”

இன்னும் ஏதேதோ பேசிய அந்த உருவம் அவளை கொல்லும் முயற்சியில் முழுதாக இறங்கியது. முன்பு வந்த முனங்கல் சத்தம் கூட இப்போது சற்று அடங்கிப் போனது அவளிடம். அந்த அளவிற்கு இருந்தது அந்த உருவத்தின் ஆக்ரோஷம். தன் உயிருக்காக போராடியவள் பக்கத்தில் இருந்த லைட் லேம்ப்பை எப்படியோ பற்றி உருவத்தின் தலையில் அடிக்க, அடுத்த நொடி அந்த உருவம் தலையைப் பிடித்துக் கொண்டு விலகி நின்றது.

“சரவணா…! சரவணா!” அடிக் குரலில் இருந்து அழைத்தவள் மெத்தையை துலாவினாள்.

“என்ன தனா” பதறி அடித்து எழுந்தவன் அவளை சேர்த்தணைத்துக் கொண்டான்.

“அவன்…அவன்… என்னை கொல்ல பார்க்கிறான். அவன் அங்க நிக்கிறான் பாருங்க…”

சத்தத்தில் பதறி எழுந்து வந்த பெற்றோர்களும் விசாரிக்க, “அங்க… அங்க” என கை காட்டினாளே தவிர வேறு ஒன்றும் பேசவில்லை.

“என்னம்மா என்ன சொல்ற கனவு ஏதாச்சும் கண்டியா?”

“இல்ல சரவணா அவன்.. என்னை… அவன்”

“யாருடா” என்றதும் ஓரிடத்தில் கை காட்டினாள்.

இருட்டில் அவ்விடம் நோக்கிய மூவருக்கும் ஒன்றும் தெரியாமல் போனது. மனைவியை மாமியாரிடம் பத்திரமாக ஒப்படைத்தவன் தேட ஆரம்பித்தான். கணவன் கைப்பிடித்து செல்ல வேண்டாம் என்றவளை வள்ளி சேர்த்தணைக்க, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

அறையை மட்டுமல்ல முழு வீட்டையும் அலசி ஆராய்ந்து விட்டான். வீட்டை விட்டு வெளியே வர மற்ற வீடுகளில் விளக்கு எறிவது தென்பட்டது. யோசனையோடு மின்சார பெட்டியை ஆராய்ந்தவன் அவை இறங்கி இருப்பதை கண்டு சந்தேகத்தோடு உயர்த்தி விட, அவ்வீட்டில் மின்சாரம் உயிர்பெற்றது.

மின்சாரத்தை கண்டு இன்னும் அஞ்சு நடுங்கிய பிரார்த்தனா தன் கணவன் பெயரை சத்தமாக அழைக்க, ஓடி வந்தவன் நெஞ்சுக்குள் ஒளித்துக் கொண்டான் அவளை. பதட்டத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. ஆதரவாகத் தட்டிக் கொடுத்து ஓரளவிற்கு சரி செய்தவன்,

“கனவு ஏதாச்சும் கண்டிருப்பான்னு நினைக்கிறன் மாமா. நீங்க ரெண்டு பேரும் தூங்க போங்க நான் பார்த்துக்கிறேன்.” என அனுப்பி வைத்தான்.

“கனவு இல்ல சரவணா நிஜமா என்னை ஒருத்தன் கொலை பண்ண பார்த்தான். ரொம்ப ஆக்ரோஷமா இருந்தான். அன்னைக்கு மண்டபத்தை விட்டு போகும்போது இவன்தான் என்னை கடத்தினான்.”

“என்ன கடத்தினானா! என்னம்மா சொல்ற என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.”

“ஆமா…கடத்தினான்.”

“ஒன்னும் இல்லடா எல்லாம் கனவு தான்.” என்றவனிடம் வாதம் செய்து தோற்றுப் போனவள் அந்த உருவம் நின்ற இடத்தையே பார்த்துக் கொண்டிருக்க, பாதி தெரிந்த வெள்ளை நிறக் கையிற்றை மனைவி பார்க்காது கட்டிலுக்கு அடியில் தள்ளி விட்டான் சரவணப் பொய்கை.

தேசம் 6

சாமிநாதன் மருமகனுக்காக செய்த பேரன்பு செயல் கையில். அனைத்து சொத்துக்களையும் மருமகன் பெயரில் மாற்றியவர்,

“உங்க மனசுக்கு இது ரொம்ப சின்ன பரிசு மாப்பிள்ளை. இருந்தாலும் இது ஒன்ன மட்டும் தான் இப்போதைக்கு என்னால செய்ய முடியும். தப்பு பண்ணான்னு தெரிஞ்சும் அவளுக்கு வாழ்க்கை கொடுத்த நீங்க ரொம்ப பெரிய மனுஷன். உங்க அப்பா அம்மா சீக்கிரம் பேசிடுவாங்க. அதுவரைக்கும் இந்த சொத்துக்களை வைச்சு ஏதாச்சும் பிசினஸ் பண்ணுங்க.” என அவன் கையில் கொடுத்தார்.

“ஐயோ! ஏதோ பேச்சுக்கு சொல்றீங்கன்னு நினைச்சேன் மாமா. இந்த சொத்துக்காக நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணல. எனக்கு இதெல்லாம் வேணாம் மாமா.”

“அப்படி மட்டும் சொல்லாதீங்க மாப்பிள்ளை எங்க பொண்ணுக்கு நாங்க கொடுக்கிற வரதட்சணையா நினைச்சுக்கோங்க.”

“வரதட்சணை வாங்கி என் மனைவிக்கு சாப்பாடு போடுற அளவுக்கு கையாலாகாதவன் இல்ல அத்தை நான்.”

“அவ சொன்னதை தப்பா நினைச்சுக்காதீங்க மாப்பிள்ளை. எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு இந்த சொத்து என்னைக்கா இருந்தாலும் அவளுக்கும் உங்களுக்கும் தான். அதை இப்போ உங்ககிட்ட கொடுக்குறதுல என்ன ஆகிட போகுது. எனக்கு நம்பிக்கை இருக்கு என் பொண்ண நீங்க ரொம்ப நல்லா பார்த்துப்பீங்க.” என்றதும் அவன் மனதில் உடுக்கை ஆட்டம் ஆடியது இவ்வார்த்தைகள்.

“கண்டிப்பா ரொம்ப நல்லா பார்த்துப்பேன் மாமா.” என்றவன் உள்ளுக்குள், ‘உன் பொண்ண பார்க்கவே முடியாத அளவுக்கு பார்த்துப்பேன்’ சொல்லிக்கொண்டான்.

“இந்த விஷயம் தனாக்கு தெரிய வேணாம் மாமா”

“ஏன் மாப்பிள்ளை? உங்களை எதாச்சும் சொல்லிடுவான்னு பயப்படுறீங்களா.”

“அவ என்னை கேவலமா திட்டுனா கூட பரவால்ல மாமா. என் காதலை தப்பா நினைச்சிட்டா உடைஞ்சு போய்டுவேன். லவ் பண்ண பையனை மறந்துட்டு என் மனைவியா என் கூட சந்தோஷமா வாழனும். அதுக்கு அவ என்னை புரிஞ்சிக்கணும். அந்த புரிதலுக்கு தடையா இந்த சொத்து இருந்திட கூடாதுன்னு நினைக்கிறேன்.”

“புரியுது மாப்பிள்ளை எந்த சூழ்நிலைக்காகவும் இந்த விஷயத்தை நாங்க அவ கிட்ட சொல்ல மாட்டோம். உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க ரொம்ப புண்ணியம் செஞ்சு இருக்கோம் நாங்க.”

அவர்கள் இவனைப் புகழ்ந்து கொண்டிருக்க கள்ளத்தனமாக என்னென்ன சொத்துக்கள் தன் பெயரில் இருக்கிறது என்பதை நோட்டமிட்டான். பேச்சு வாக்கில் அவர்கள் அதை கவனிக்காமல் இருந்துவிட, ‘வீட்டு பத்திரம் மட்டும் இல்ல’ என யோசித்தான்.

மீண்டும் ஒருமுறை அவர்களோடு பேச்சு கொடுத்தவாறு கையில் உள்ள பத்திரத்தை ஆராய்ந்தவன், “இது எனக்கு வேணாம் மாமா” என்று அவர் கையில் கொடுத்தான்.

“என்னாச்சு மாப்பிள்ளை?”

“நீங்க மனசார தான் இதை கொடுக்குறீங்கன்னு நினைச்சேன் இப்பதான் தெரியுது மாப்பிள்ளையா போயிட்டானேன்னு ஏதோ கடமைக்கு கொடுக்கிறீங்கன்னு.”

“நான் உங்களை என்னைக்கும் வேத்து ஆளா நினைச்சதில்ல. என்னைக்கு என்னை ஹாஸ்பிடல்ல பார்த்து… இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்கன்னு சொல்லியும்  நான்தான் உங்க மருமகன் மாமானு என் கைய பிடிச்சு ஆறுதல் சொன்னிங்களோ அப்பவே நீங்கதான் எனக்கு எல்லாமும்னு ஆகிட்டீங்க.”

“அப்புறம் ஏன் மாமா இப்படி பண்ணீங்க?” என்பதற்கு புரியாமல் முழித்தவரிடம், “வீட்டை மட்டும் விட்டுட்டு மீதி எல்லாத்தையும் எம்பேருக்கு மாத்தி இருக்கீங்க. இந்த வீட்டையும் அவன் பேர்ல எழுதிட்டா கடைசி காலத்துல அனாதையா நிக்கணும்னு நினைச்சு தான இப்படி பண்ணிங்க.” என்றான்.

“சத்தியமா இவர் அப்படி நினைச்சு பண்ணல மாப்பிள்ளை. இந்த வீடு பூர்வீக வீடு. இவர் இல்லாத காலத்துல அது அப்படியே எங்க பொண்ணுக்கு வந்து சேர்ந்திடும். அதனாலதான் தனியா உங்க பேருக்கு மாத்தி கொடுக்கல.”

“நீங்க ஆயிரம் காரணம் சொன்னாலும் ஒத்துக்க முடியல அத்தை. ஒரு பொண்ணு தாலி கட்டுற நேரம் மண்டபத்தை விட்டு ஓடிப் போனா… அவளை என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா?”

பிரார்த்தனா பெற்றோர்கள் இருவரும் தலைகுனிந்து மாப்பிள்ளை கூற வரும் வார்த்தையை புரிந்து கொள்ள, அவர்கள் குற்ற உணர்ச்சியை இன்னும் ஏற்ற நினைத்தவன், “அப்படி ஓடிப் போனவளை எவனாது கல்யாணம் பண்ணுவானா. உங்க பொண்ணு காதலிக்க மட்டும் தான் செஞ்சாளா இல்ல…” என்று இழுத்தான்.

“வேணாம் மாப்பிள்ளை” கெஞ்சினார் வள்ளி.

“உங்களை காயப்படுத்த இந்த வார்த்தையை சொல்லல அத்தை. உங்க பொண்ண முழுசா நம்பினதால தான் மருமகனாக இங்க நிக்கிறேன். அந்த நம்பிக்கை உங்களுக்கு இல்லையோன்னு சின்ன வருத்தம்.”

“இப்ப என்ன மாப்பிள்ளை இந்த வீடு உங்க பேருக்கு வரணும் அவ்ளோ தான. நாளைக்கு தான இங்க இருந்து கிளம்ப போறீங்க அதுக்குள்ள நீங்க எதிர்பார்த்தது உங்க கையில இருக்கும். தயவு செஞ்சு இப்படி யாரோ மாதிரி என்கிட்ட பேசாதீங்க ரொம்ப வருத்தமா இருக்கு.”

“அதெல்லாம் வேணாம் மாமா ஒரு மன கஷ்டத்துல பேசிட்டேன்.” என ஒப்புக்காக தொடர்ந்து மறுத்துக் கொண்டிருந்தான். சாமிநாதன் மருமகனின் குணம்
புரியாது முடிவாக மாற்றியே தீருவேன் என்று விட, புன்னகை ஊற்று அவனிடம்.

***

புது அத்தியாயத்தை தொடங்குகிறாள் பிரார்த்தனா. இன்றிலிருந்து புது வீடு புது இடம் புது வாழ்க்கை என்று மொத்தத்தையும் மாற்றிக்கொள்ள போகிறாள். பிறந்ததிலிருந்தே தன் பூர்வீகத்தில் இருந்தவளுக்கு இந்த ஐந்து நாட்கள் இருப்பது பெரும் சவாலாக இருந்தது. எல்லாம் கணவன் காதல் என்ற பெயரில் செய்த வேலைகள்.

இன்னொரு வீட்டு மருமகளாக வாழப் போகும் மகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை சாமிநாதன். வள்ளிக்கு மனம் கேட்கவில்லை மகளை கட்டிப்பிடித்து அழுதுவிட்டார். நடக்கும் பாச போராட்டத்தை கண்டு வெறுப்பிற்கு ஆளானவன் கிளம்ப அவசரப்படுத்தினான்.

சாமிநாதன் மகளை இந்த அளவிற்கு வெறுப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டதே சரவணப் பொய்கை தான். யாரோ ஒருவனாக அவருக்கு அறிமுகமாகி நம்பிக்கை விதையை விதைத்தவன் காத்திருந்தான் காதலி சொல்லப் போகும் காதல் விவகாரத்திற்கு. அவன் எதிர்பார்த்தது போல் சாமிநாதன் கருப்புக்கொடி காட்ட, தன் வேலைகளை கணக்கச்சிதமாக முடித்தான்.

எப்படியும் பிரார்த்தனா ஒத்துக் கொள்ள மாட்டாள் என்பதை நன்கு அறிந்து, “அவன மறந்துட்டு நீங்க பார்த்த என்னை கல்யாணம் பண்ணிக்க ஒரே வழி தான் இருக்கு.” சாமிநாதனை தூண்டி விட்டான் தற்கொலை முயற்சிக்கு.

அதில் ஆரம்பித்து வேக வேகமாக திருமணத்தை திட்டமிட்டு, அவள் மண்டபத்தில் இல்லை என்ற செய்தியையும் காதில் போட்டான். இவனால் உருவான புது சொந்தங்கள் சாமிநாதன் மகளை தரை குறைவாக பேச, காசு கொடுத்து ஏற்பாடு செய்த பெற்றோர்கள் வார்த்தைகளால் குத்தினார்கள். ஆர அமர அதை ரசித்தவன் பெற்றோர்களை எதிர்த்து மாமனார் பக்கம் நிற்பதாக அசையாத நம்பிக்கையை பெற்றான்.

பாலூட்டி சீராட்டி வளர்த்த மகளை மறந்தவர் ஊர் முன்னால் தன் மானத்தை காப்பாற்றிய மருமகனை கோவில் கட்டி கும்பிட ஆரம்பித்து விட்டார். ஆனால் அவனோ தன் இல்லமென்று ஒரு வீட்டைக் காட்டிவிட்டு பெற்றோர்களுக்கு தெரியாமல் அவர்களது மகளை கண்ணுக்கு எட்டா தூரம் அழைத்து சென்று கொண்டிருக்கிறான்.

தந்தையைப் பற்றிய நினைப்பு அதிகமாக இருந்ததால் போகும் வழியை கவனிக்கவில்லை பிரார்த்தனா. பல மணி நேரங்கள் போக்குவரத்தில் கழிந்தது.

“ஒரமா நிறுத்துங்க அண்ணா” என்றவன் குரலில் நினைவு கலைந்தவள் சுற்று முற்றும் பார்த்தாள்.

காரை விட்டு இறங்கியவன் சொடக்கு போட்டான். பிரார்த்தனா பார்க்க, “இறங்கு” என்றவன் குரலில் அத்தனை ஏடாகூடம்.

உடனே இறங்கியவள் அந்த இடத்தை கவனித்தாள். இது அவன் வீட்டிற்கு செல்லும் வழி இல்லை என்பதை அறிந்து விசாரிக்க, பதில் சொல்லாதவன் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றை கைகாட்டி நிறுத்தினான்.

போகும் இடத்தின் பெயரைச் சொல்லி உள்ளே அமர்ந்தவன் அவளையும் இழுத்து உள்ளே அமர வைத்தான்.

“எங்க சரவணா போறோம் எதுக்காக கார விட்டு ஆட்டோல ஏறுன?” என்ற கேள்விக்கு எந்த பதிலையும் கொடுக்காதவன் ஹெட்செட்டை காதில் மாட்டிக் கொண்டான்.

“உன்கிட்ட தான பேசிட்டு வரேன்” என அந்த ஹெட்செட்டை கழட்ட முயற்சிக்க,

“ஒன்னு விட்ட… பல்லு சிதறிடும் மூடிட்டு வாடி.” என்றவன் பேச்சு இதுவரை நடந்த அனைத்தையும் விட பெரும் அதிர்வாக இருந்தது.

ஒரு நொடியில் கண் கலங்கிவிட்டது பிரார்த்தனாவிற்கு. அவன் கைய உயர்த்தும்போது தற்காத்துக் கொள்ள முகத்தை நகர்த்தியவள் அந்த நிலையிலேயே பயணிக்க,

“இவ மூஞ்சில என்ன ஆடுது? ரோட்ட பார்த்து ஓட்டு” கண்ணாடி வழியாக தங்களை கவனித்துக் கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநரை கண்டித்தான்.

ஓரிடத்தில் ஆட்டோ நிற்க, அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தவன் மனைவியின் கைப்பிடித்து அழைத்துச் செல்லாமல் இழுத்து சென்றான். காதலன் செயலை விட்டுவிட்டு அங்கிருக்கும் சூழ்நிலைகளை கவனித்தாள். பழைய காலத்து அடுக்குமாடி குடியிருப்பு அது. இங்கு நமக்கென்ன வேலை என்ற சிந்தனையோடு ஒரு வீட்டு முன்பு நின்றவளை,

“உள்ள போ” என தள்ளி விட்டான்.

தரையில் விழுந்தவள் அந்த வீட்டை சுற்றி பார்க்க, பல வருடமாக தூசி படிந்து அழுக்காக இருந்தது. தூசு ஒத்துக் கொள்ளாமல் இருமல் வர, “ஒரு மணி நேரம் டைம் தரேன் இந்த வீட்டை சுத்தம் பண்ணி வை.” என்றவன் வெளி பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றுவிட்டான்.

என்னவென்று உணர்ந்து கேள்வி கேட்பதற்குள் உத்தரவு போட்டவன் புறப்பட, பித்து பிடித்தது போல் அந்த அழுக்கு தரையில் அமர்ந்திருந்தாள். அவன் கொடுத்த ஒரு மணி நேர அவகாசம் முடிந்து விட வீட்டை திறந்தான். போகும்போது எந்த நிலையில் இருந்தாளோ அதே நிலையில் இருக்க,

“சொன்னதை செய்ய மாட்டியா?” நெருங்கினான் அவளை.

“என்ன பண்றேன்னு தெரிஞ்சு தான் பண்றியா சரவணா. ஏதோ ஒரு குப்பையில என்னை தள்ளி கிளீன் பண்ண சொல்ற. நம்ம வீட்டுக்கு போகாம இங்க எதுக்கு வந்திருக்கோம். இந்த இடத்தைப் பார்த்தாலே வாந்தி வர மாதிரி இருக்கு. முதல்ல கிளம்பலாம் வா…” என்றவள்,

“எல்லாம் புதுசா இருக்கு என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல.” முணங்கிக் கொண்டே அவன் கை பிடித்தாள்.

தொட்ட அடித்த நொடி ராட்சசன் போல் தள்ளி விட்டு மீண்டும் கதவடைத்து சென்று விட்டான்.

தேசம் தொடரும்…
அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்