Loading

அத்தியாயம் 5

நொடிக்குள் நிகழ்ந்த இதழ் பரிமாற்றத்தில் திடுக்கிட்ட பாவை கண்களை அகல விரித்து அதிர்ந்ததுடன், தீரனிடம் இருந்து விலக முற்பட்டாள். அவன் தான், தேனிதழில் மொத்தமாக தன்னை கரைத்து விட்டானே! முதலில் இறுக்கிப் பிடித்தவன், பின் அவளின் முயற்சியை உணர்ந்து அழுத்தத்தைக் குறைக்க, அதில் பட்டென நகர்ந்தாள்.

முகமெல்லாம் சிவந்து, மூச்சு வாங்கியபடி நின்றவளை ஆடவனின் கண்கள் ஏகத்துக்கும் ரசிக்க, அவளுக்கோ அவனை நிமிர்ந்து பார்க்க கூட இயலவில்லை.

அனைத்தும் நினைவு வந்தால், தன்னை என்னவென நினைப்பான்… என்ற பயமே அவள் முன் தாண்டவமாட, சஹஸ்ராவின் பாவனைகளை அளவெடுத்தபடி அவளருகில் வந்தான் தீரன்.

“ஆர் யூ ஓகே சஹி?” கேட்டபடி மனையாளின் கன்னத்தைத் தொட போக, அவள் விருட்டென திரும்பி நின்றாள்.

“ப்ளீஸ் தீரன். உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வர்ற வரைக்கும், நம்ம… நம்ம!” எனக் கூற வந்தவளுக்கு வார்த்தை தொண்டையில் நின்று கொள்ள, பின் “இதெல்லாம் வேண்டாம்!” என்றாள் தவிப்புடன்.

அவள் கூற வருவது புரிந்து அத்தனை நேரம் மலர்ந்திருந்த அவனது அழுத்த முகம் சுண்டி இருக்க, “எதெல்லாம் வேண்டாம்?” எனக் கேட்டான் கூர்மையாக.

சுடிதாரின் முனையை விரல்களால் பதம் பார்த்தபடி, சஹஸ்ரா பதில் கூறாமல் நிற்க, அவனோ அவள் கையை பிடித்து திருப்பி, “எனக்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லு. நம்ம உண்மையாவே ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் – ஆ வாழலையா?” என்றான் கண்ணை சுருக்கி.

“இ… இல்ல!” அவள் மறுப்பாக தலையசைக்க, “ஏன்?” மீண்டும் அவனே வினா தொடுத்தான்.

“ஏன் சஹி? நம்ம லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்ன்னா, கல்யாணம் ஆகியும் ஏன் நம்ம தள்ளி இருந்தோம்? என்னை உண்மையா லவ் பண்ணிருந்தா நான் தொட்டதும் ஏன் உனக்கு பிடிக்கல…” எனக் கேட்டவனின் குரலில் அத்தனை ஆதங்கம்.

ஏற்கனவே பல வித உணர்ச்சிகளின் கலவையில் இருந்தவனின் தலையில் வலி எடுத்தது.

‘இப்பவாவது உண்மையை சொல்லிடு…’ என்ற மனசாட்சிக்கு பதில் கூற தெரியாமல்,

“அது… வந்து… நம்ம பார்த்துக்கிட்டே கொஞ்ச நாள் தான் ஆச்சு. திடீர்ன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதான்… முதல்ல ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு… அப்பறம்… லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு” பதற்றத்தில் ஏதேதோ உளறினாள்.

நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகள் கழுத்து வழியே பயணிக்க, அவ்வழியே அவன் விழிகளும் பயணித்து, அவளையே ஆழமாக பார்த்தது.

“ஓகே” என்றவன், அறைக்கு சென்று விட, தான் கூறியதை நம்பினானா இல்லையா? என்று புரியாமல் சஹஸ்ரா தான் நொந்தாள்.

அவனறைக்கு செல்வதற்கு பயமாகவும் இருந்ததில், வெகு நேரம் வரவேற்பறையில் உலாவி விட்டே அறைக்குள் புகுந்தாள். நல்லவேளையாக, அவன் உறங்கி இருக்க, நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவள், எப்போதும் போல அங்கிருந்த சோஃபாவில் படுத்துக் கொண்டாள்.

நினைவுகளோ பறவையாகி எங்கெங்கோ பறந்தது. வினோதினியின் நிச்சய முறிவிற்குப் பின்னான அடுத்த ஒரு மாதத்திற்க்குள்ளாகவே ஏகப்பட்ட வரன்களை தட்டி விட்டாள். அப்படியே வினோதினிக்கு பிடித்திருந்தாலும், சஹஸ்ராவிற்கு பிடிக்காமல் போனது.

அவர்கள் தான், வினோதினியை மட்டுமல்லாது, அவளையும் அல்லவோ அருவருக்கும் பார்வை பார்த்தனர். இதில் சிலரின் பார்வை சவிதாவின் மீதும் பாய, சஹஸ்ரா பொறுமை இழந்து விட்டாள்.

என்ன இருந்தாலும், நான்கு பெண்கள் இருக்கும் வீட்டிற்கு, அடிக்கடி ஆட்கள் வந்து செல்வது சரி அல்ல என்று சுலோச்சனாவிடம் வாதாடி, வினோதினிக்கு பிடித்து நிச்சயம் என்ற அளவில் சென்றால் மட்டுமே, பெண் பார்க்க வர வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி விட்டாள்.

ஆனால், அதனை காதில் வாங்கிக் கொண்டால் அது வினோதினி அல்லவே! அடுத்து அடுத்தும் இதே சுயம் வரம் தொடரவே செய்ய, சஹஸ்ராவிற்கு எரிச்சலாக இருந்தது. அதிலும், மாப்பிள்ளையாக வரும் அனைவரும் பொறுக்கியாக இருந்தால் அவளும் என்ன செய்வாள்?

இத்தனை வருடங்களும் தந்தையின் அரவணைப்பில் நாட்களை கடத்தியவளுக்கு, இப்போது அவளையும் பாதுகாத்து, தங்கையையும் கண்காணிக்க முடியாமல் திணறினாள்.

அதிலும் இப்படி ஒரு அன்னையையும் தமக்கையையும் வைத்துக் கொண்டு தனியாக காலம் தள்வதற்கு பேசாமல் நம்மளே திருமணம் செய்து கொண்டு சென்று விடலாம் என்ற எண்ணம் கடுப்பாக எழுந்ததும் உண்மை தான்.

அதனை தேவிகாவிடமும் புலம்பிட, “ஹே. செம்ம ஐடியா. பேசாம நீ கல்யாணம் பண்ணிக்கோயேன். உன் பிசினெஸையும் சப்போர்ட் பண்ணனும், அதே நேரம் சவியையும் கூட வச்சுக்கலாம்ன்ற மாதிரி ஒரு பையனை பாக்கலாம். எனக்கு என்னமோ, உன் அம்மாவும் வினோவும் உங்களை நட்டாத்துல விட்டுருவாங்களோ தோணிக்கிட்டே இருக்கு சஹா.” என்றாள் உண்மையான பரிவுடன்.

கல்லூரி தொடங்கிய காலம் முதல் தேவிகாவுடன் பழக்கம் அவளுக்கு. முதலில் வகுப்புத் தோழி என்ற அளவிலான பேச்சு வார்த்தை, எங்கு எப்போது நெருக்கமானது என்று இருவருக்குமே தெரியவில்லை. எதிர்பார்ப்பில்லாத அன்பே நட்பாக வலுப்பெறும் என்பது உண்மை போல, அவர்களின் உறவும் அதே நட்பை இன்று வரை வழங்கி வருகிறது.

அவளைக் கனிவுடன் பார்த்த சஹஸ்ரா, “ம்ம்க்கும்… ஆமா! அப்படியே ஆஃபிஸ் வாசல்ல, என்னை கல்யாணம் பண்ணிக்க தான் எல்லாரும் தவம் இருக்காங்க பாரு. நீ வேற தேவ். இந்த காலத்துல யாரு இதுக்குலாம் ஒத்துக்குவா. அதுலயும் விஸ்வநாதன் பொண்ணுன்னா, ஏகப்பட்ட சொத்து இருக்கு பணம் இருக்குன்னு எவனோ புரளியை கிளப்பி விட்டு இருக்கான்.

அக்காவுக்கு பாக்குற மாப்பிள்ளைங்களே, வரதட்சணை கேட்டு ஒரு லிஸ்ட் போடுறானுங்க. அதுக்கே நான் இருக்கறதை விற்கணும் போல. இதுல எனக்கு வேறயா…” என்று சலித்தாலும், தனியாக போராடுவதில் ஒரு வித பயம் முளைத்தது.

“நீ தான்டி அவங்களை தலைல தூக்கி வச்சுக்குற. அவங்க ரெண்டு பேரும் உன்னை கொஞ்சமாவது கண்டுக்குறாங்களா. அதுலயும் உன் அம்மா இருக்காங்களே… டிஸ்கஸ்டிங். வயசுக்கு ஏத்த பக்குவமும் இல்ல அறிவும் இல்ல.” என்றாள் முகத்தை சுளித்து.

“அதுக்காக, அப்படியே விட சொல்றியா தேவ். என்ன பண்றது… அப்பாவை கல்யாணம் செஞ்சு வரும் போது அம்மாவுக்கும் சின்ன வயசு தான். சோ, அப்போ இருந்தே அப்பாவும் அம்மா என்ன கேட்டாலும் வாங்கி குடுத்து, சுத்தி நடக்குற எதையும் புரிஞ்சுக்க விடாம வச்சுட்டாங்க. அதே மாதிரி வினோவும் வந்துட்டா.

நானே சில நேரம் கோபப்பட்டு அப்பாவ திட்டி இருக்கேன். அவங்களை கெடுக்குறதே அவரு தான்னு. அப்போ தான் இதை சொன்னாரு. அதுக்காகவே, என்னையும் சவியையும் கவனமா வளர்க்கணும்ன்னு முடிவு பண்ணி நானே பொறுப்பு எடுத்துக்கிட்டேன்னு சொல்லுவாரு. ப்ச்… என்ன செய்றதுன்னு தெரியல தேவ். நாளுக்கு நாள் நிலைமை ரொம்ப மோசமா தான் போகும் போல.” என்று நெற்றியை தாங்கி தளர்ந்து போனவளை தேவிகா தான் தேற்றினாள்.

அந்நேரம், “எக்ஸ்கியூஸ் மீ…” எனக் கதவை தட்டி விட்டு நிக்கோலாஸ் உள்ளே வர, தேவிகா தான்,

“ஹெலோ, எக்ஸ்கியூஸ் கேட்டு நாங்க உள்ள வர சொன்னா தான் வரணும். நீங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு வர கூடாது…” என்றாள் முறைப்பாக.

அதில் அவனும் முறைக்க, “சும்மா இரு தேவ்” என தோழியை அதட்டிய சஹஸ்ரா, “சொல்லுங்க” என்றாள்.

“உங்க ஃபிரெண்டு ரொம்ப ஓவரா போறாங்க சஹஸ்ரா. சொல்லி வைங்க. சும்மாவே ஆஃபிஸ்க்குள்ள சுத்திட்டு இருக்கு…” இறுதி வரியை மட்டும் முணுமுணுப்புடன் முடித்தான்.

அது அவள் காதிலும் விழுந்து விட, பொங்கி எழுந்தாள். “என்னது? நான்… நான் சும்மா சுத்துறேனா?” அவள் சண்டைக்கு வர, சஹஸ்ரா தான் தடுத்தாள்.

“தேவ்… என்ன பண்ற?” என அடக்கிட, நிக்கோலஸ்க்கு தான் குதூகலமாக இருந்தது. பின்னே, வந்த நாளிலிருந்து அவனை முறைத்துக்கொண்டு இருந்ததில், இன்று அவனும் வம்பளக்க ஆரம்பித்து விட்டான்.

“உனக்கு தெரியாது சஹா. இதோ இவரு தான், இந்த கம்பெனியை எல்லாம் எதுக்கு வாங்குறீங்கன்னு தீரன் சார்கிட்ட நம்ம ஆபிஸ் பத்தி இளக்காரமா பேசுனாரு.” என்று மூச்சிரைக்க, இப்போது சஹஸ்ராவும் முறைத்தாள்.

அவனோ, “இல்ல சஹஸ்ரா. நான் அப்படி சொல்லல. எப்பவும் காரணம் இல்லாம, எந்த பிஸினஸையும் கையில எடுக்க மாட்டாரு எங்க பாஸ். அதான், ஏன்னு கேட்டேன். அது உங்க ஃபிரெண்டு காதுல தப்பா விழுந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க.” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு வினவ,

அவன் சமாளிக்கிறான் என்று புரிந்தாலும் மேலும் கோபப்பட இயலவில்லை சஹஸ்ராவிற்கு.

மேலும் தேவிகாவிற்கும் நிக்கோலஸிற்கும் வாக்கு வாதம் முற்ற,

“ஓகே ஓகே நிறுத்துங்க நிக்கோலஸ். நீங்க எங்க ஆஃபிஸை ரொம்ப நல்ல விதமா தான் சொன்னீங்கன்னு நான் ஒத்துக்குறேன். இப்ப வந்த விஷயத்தை சொல்லுங்க” என்றவள், ‘நல்ல’ என்ற வார்த்தையை நன்றாகவே அழுத்தினாள்.

அதில் அவனுக்கும் ஏதோ போல ஆகி விட, அசடு வழிந்தவன், “இது அடுத்த ப்ராஜெக்ட்டான ஃபைல். பாஸ் உங்ககிட்ட குடுக்க சொன்னாரு.” என்று ஒரு கோப்பை கொடுக்க, சரியென வாங்கி கொண்டாள்.

நிக்கோலஸ் தான், நகர மனம் வராமல், “நான் எதார்த்தமா தான் பாஸ்கிட்ட கேட்டேன் சஹஸ்ரா. உங்களை கஷ்டப்படுத்தி இருந்தா சாரி…!” என உண்மையான வருத்தத்தோடு மன்னிப்பு கேட்க,

“எதுக்கு நிக்கோலஸ் சாரி எல்லாம். உங்க இடத்துல நான் இருந்துருந்தாலும் அப்படி தான் கேட்டு இருப்பேன். விடுங்க!” என்றாள் சஹஸ்ரா.

தேவிகாவிற்கும் அவன் மன்னிப்பு கேட்டதில் சற்று கோபம் இறங்கி இருக்க, நிக்கோலஸ் சிறிதாய் புன்னகைத்து விட்டு, “ஆனா, நான் சொன்னதுல ஒன்னு மட்டும் உண்மை சிஸ்டர். இங்க உங்க ஃபிரெண்டு ஒரு வேலையும் பார்க்காம சும்மா தான் இருக்காங்க.” என்று தேவிகாவை வாரி விட்டு அங்கிருந்து ஓடி விட, எரிமலையான தேவிகாவிற்கு தோழியின் சிரிப்பு சத்தம் மேலும் கடுப்பை கிளப்பியதில், சஹஸ்ராவை அடிக்கத் துரத்தினாள்.

அதன் பிறகு, நிக்கோலஸ் சஹஸ்ராவின் உறவில் ஒரு வித பிணைப்பு உண்டாக, நிக்கோலஸ் அவளுக்கு நிக்கி அண்ணாவாகவும், தேவிகாவிற்கு வெறும் நிக்கியாகவும் ஆனான்.

அடுத்து வந்த நாட்கள் வேலையிலேயே கழிந்தது. அவளே வியக்கும் வண்ணம், வினோதினியும் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்தி இருந்தாள். அதுவே சஹஸ்ராவிற்கு நிம்மதியையும் கொடுக்க, அதனை கெடுக்கவென்றே மீண்டும் பிரச்சனை வந்தது மாப்பிள்ளை உருவில்.

வினோதினி வீட்டில் ருத்ரதாண்டவம் ஆடினாள். திருமணம் என்று ஒன்று நடந்தால் அது ரேயனுடன் தான் என்ற அவளின் உறுதியில் நிலைகுலைந்தது என்னவோ சஹஸ்ரா தான்.

“வேணாம்க்கா. அவன் கேரக்டர் சுத்தமா சரி இல்ல. நம்ம குடும்பத்துக்குள்ள வந்தா கண்டிப்பா பிரச்சனை வரும்…” எவ்வளவோ சொல்லியும் வினோதினி பிடிவாதம் காட்டினாள்.

“நீ ஆபிஸ்ல கூடவே சுத்துற தீரன் மட்டும் ரொம்ப நல்லவனா? அவனை பத்தியும் தான் ஊர்ல என்னென்னமோ பேசுறாங்க. நீ அவன்கிட்ட இளிச்சுக்கிட்டே தான சுத்துற…!” வினோதினியின் பேச்சில் சினம் எழ,

“வார்த்தையை பார்த்து பேசுக்கா. தீரன் என் பிசினஸ் பார்ட்னர் அவ்ளோ தான். அது மட்டும் இல்ல, ஹீ இஸ் அ ஜென்டில் மேன். ஆனா, அவன் தம்பி அப்படி இல்ல. என்கிட்டயே ஒரு தடவை அசிங்கமா நடந்துக்கிட்டான். இதுல நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா, எனக்கும் பாதுகாப்பு இல்ல சவிக்கும் பாதுகாப்பு இல்ல” எனப் புரிய வைக்க முயல, சுலோச்சனா எகிறினார்.

“ஆம்பளைங்க செய்ற மாதிரி பிசினெஸ், வேலைன்னு வெளிய திரிஞ்சா நாலு பேரு நாலு விதமா தான் நடந்துக்குவாங்க. அடக்க ஒடுக்கமா வீட்டுல இருக்கணும். அதை விட்டுட்டு, அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையை தப்பு சொல்ற…” என்று சண்டைக்கு வர, சஹஸ்ராவின் பொறுமை பறந்து விட்டது.

“அதென்ன ஆம்பளைங்க செய்ற வேலை? அந்த வேலையால தான் இப்ப சாப்பிட்டுட்டு இருக்கோம்மா. இவள் மட்டும் என்ன ஒழுங்கா? தினமும் பார்ட்டி, அது இதுன்னு சுத்திட்டு தான வர்றா அது மட்டும் பொண்ணுங்க செய்ற வேலையோ? இந்த கல்யாணம் நடக்க கூடாது. அப்படி இதான் நடக்கணும்ன்னு நீங்க விரும்புனா, நான் சவியை கூட்டிட்டு இங்க இருந்து போய்டுவேன்” என்றாள் திட்டவட்டமாக.

சுலோச்சனா அதில் அதிர்ந்தாலும், “போறதுன்னா நீ போ. ஏன் என் பொண்ணை கூட்டிட்டு போற?” என முறைக்க, வினோதினியோ எதையும் கண்டுகொண்டாள் இல்லை. இதில், ரேயனை திருமணம் செய்ய, தீரனிடம் இவளே பேச வேண்டும் என்று வேறு கூற, பல்லைக்கடித்தாள்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக, வீட்டிற்குள் நுழைந்தாலே இதே பிரச்சனையில் தலை உருண்டது. மன அழுத்தத்தின் எல்லைக்கே சென்றவள், இறுதியில் நின்றது தீரனிடம் தான்.

அத்தியாயம் 6

தீரனின் முன் நின்ற சஹஸ்ரா, “தயவு செஞ்சு உங்க தம்பியை என் அக்காவை விட்டு தள்ளி இருக்க சொல்லுங்க தீரன். அவள் அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறா. ப்ளீஸ்!” என்னும் போதே, கோபமும் ஆற்றாமையும் பொங்கியது.

தீரன் புரியாமல் ஒரு கணம் விழிக்க, அதன் பிறகே நடப்பது புரிந்து அமைதியானான்.

“அவன் என்கிட்ட இதை பத்தி இன்னும் பேசல. அப்படி பேசுனாலும், என்னால மறுக்க முடியாதே. பிகாஸ் இது அவன் வாழ்க்கை.” என்று நிறுத்திட, சஹஸ்ராவிற்கு இருக்கும் ஒரு வழியும் அடைபட்டது போன்ற உணர்வு.

“நீங்க என்னை என்ன நினைச்சாலும் பரவாயில்ல தீரன். ஆனா உங்க தம்பியை எனக்கு சுத்தமா பிடிக்கல. இந்த பேச்சுவார்த்தையும் தான். ஏதாவது செஞ்சு இதை நிறுத்துங்க.” எனக் கிட்டத்தட்ட கெஞ்சியவள், அவளின் பாதுகாப்பின்மையையும் தெரியாமல் உளறி விட, அவளை ஒரு கணம் அமைதியாக பார்த்தவன்,

“இதுக்கு பதில் நாளைக்கு சொல்லவா?” என்றான்.

“நல்லதா சொல்வீங்கன்னு நம்புறேன்.” என்றவள், மறுநாள் வரைக்கும் காத்திருக்க, அடுத்த கட்ட அதிர்ச்சியாக தீரனின் விடை இருந்தது.

உண்மையில் அவன் தான் பேசினானா என நம்ப இயலாமல் ஒரு முழு நிமிடம் உறைந்தாள் சஹஸ்ரா.

அப்பார்வைக்கு சளைக்காமல் அவனும் பார்த்து வைக்க, “இதென்ன பைத்தியக்காரத்தனம். அக்ரிமெண்ட் மேரேஜ்லாம் நிஜ வாழ்க்கைக்கு சரியா வராது தீரன்.” என்றதில்,

தோளைக் குலுக்கியவன், “நான் ஒன்னும் நீ இதை செஞ்சே ஆகணும்ன்னு கம்பெல் பண்ணலையே. என்னால, என் தம்பியை தடுக்க முடியாது. உன்னால அவங்க கல்யாணத்தையும் தடுக்க முடியாது. அண்ட், உனக்கே அவனை பத்தி தெரியும். கொஞ்சம் அப்படி இப்படி இருப்பான்னு… அது உன் அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டா, இன்னும் அதிகமா தான் இருக்கும்.” என சரியாக அவளின் அச்சத்தைக் குறி வைத்துப் பேச, அவளுக்கு நடுக்கம் பிறந்தது.

அதில் திருப்தியானவன், “உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு ஒரு சுயநலமும் இருக்கு. அதே நேரம், இப்போவும் உனக்காக தான் இந்த சொலியூஷன் சொல்றேன். என் வைஃப்ன்னு ஆனதுக்கு அப்பறம், அவனால உன்ன நெருங்க முடியாது.” என்றான் உறுதியாக.

அது உண்மை தான் என்றாலும், “ஆனா, இந்த அக்ரீமெண்ட் மேரேஜ்க்கு என்ன காரணம்?” என்றாள் புரியாமல்.

ஒருவேளை அவன் நிஜமாகவே அவளைப் பிடித்து திருமணம் செய்யக் கேட்டால், உடனே ஒப்புக்கொண்டிருப்பாள் தான். ஆனால், அவன் பேசுவது நெருடிட குழம்பினாள்.

“சாரி சஹா. என்னால காரணம் சொல்ல முடியாது. பட் டோன்ட் வொரி. என்னால, உனக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது. அதே நேரம், என்கிட்ட இருந்தும் எந்த ஒரு உரிமையையும் கடமையையும் நீ எதிர்பார்க்க கூடாது. உன் பிசினஸ், உன் தொழில், உன் லைஃப்ன்னு தான் இருக்கணும் எப்பவுமே!” என்றான் அழுத்தமாக.

“இடைல டைவர்ஸ் வாங்கணும்ன்னு நினைச்சாலும் அது உன் இஷ்டம். ஆனா, நான் தரமாட்டேன். இது ஒன் டைம் அக்ரீமெண்ட். வாழ்க்கை முழுக்க நீ என் ரூம் மேட்டா மட்டும் தான் இருக்கணும். நோ ரஷ். நல்லா யோசிச்சு சொல்லு.” என்று அவளை குழப்பி விட்டு செல்ல, அவளுக்கு கண்ணைக் கரித்தது.

அவளுக்கும், காதல், கணவன், குழந்தை, குடும்பம் என வாழ ஆசை தானே. இப்படி வாழ்க்கை முழுக்க, ஒப்பந்தம் அடிப்படையில் எப்படி வாழ இயலும்? தன்னையே நொந்தவளுக்கு அழுகை தான் வந்தது.

விதி தன்னை ஏன் இப்படி சோதிக்கிறது என்ற காரணம் புரியாமல், வினோதினியிடம் பேசி புரிய வைக்க முயல அதிலும் தோல்வியே கிடைத்தது.

தொழில் ரீதியாக வெளிநாட்டிற்கு பறந்திருந்த ரேயன், அடுத்த பதினைந்து நாட்களில் வரவிருப்பதாக இருக்க, அன்றே நிச்சயத்தையும் நடத்த ஆயத்தமானாள் வினோதினி.

நெஞ்சில் அப்பிய பயமும் ஆற்றாமையும் அதிகரிக்க, சவிதாவின் பாதுகாப்பிற்காகவாவது இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தவள், இறுதியில் தீரனின் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைத்தாள்… சவிதாவும் அவர்களுடன் தான் இருப்பாள் என்ற நிபந்தனையுடன்.

அதற்கு அவனும் எதிர்ப்பு தெரிவிக்காததோடு அடுத்த இரு நாட்களில் பதிவு திருமணத்தையும் ஏற்பாடு செய்ய, நிக்கோலஸ் தவிர, அவர்களின் திருமண ஒப்பந்தம் வேறு யாருக்கும் தெரியவில்லை.

நிக்கோலஸிற்கு தான், இது சுத்தமாக பிடிக்காமல் போக, சஹஸ்ராவிடம் பேசியும் பயனில்லை என்று புரிந்ததில் செய்வதறியாமல் நின்றான். அவனுக்கும் நடக்கும் சம்பவங்கள் எதுவும் முழுதாக தெரியவில்லை. இதில், உச்சகட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது தேவிகா தான்.

அவள் மகிழ்ச்சியை குலைக்க விரும்பாத சஹஸ்ரா, இருவரும் பிடித்து திருமணம் செய்து கொள்ள போவதாகவே கூறி விட, வீட்டிலும் அதையே கடைபிடித்தாள்.

வினோதினிக்கு கோபம் வந்ததோடு, “அக்கா நான் இருக்கும் போது, நீ ரெண்டு நாள்ல கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்ற. அறிவில்ல.” எனக் கத்தினாள்.

“ஏன்… அண்ணன் இருக்கும் போது தம்பியை மட்டும் நீ கல்யாணம் பண்ணிக்க தயாரா இருந்த தான. எப்படியும் கொஞ்ச நாள்ல நீ அவனை கல்யாணம் பண்ணிக்க போற. அப்பறம் என்ன?” என்றாள் விட்டேத்தியாக.

சுலோச்சனா அவளைத் தடுக்கவில்லை. பின்னே, இரு மணமகன்களும் பணக்காரர்கள் என்ற போது அவருக்கு நிம்மதியாகவே இருந்தது.

மேலும் சவிதாவை அவளுடன் அழைத்து செல்வதற்கும் அவர் ஒன்றும் கூறவில்லை. எப்படியும் வினோதினியும் திருமணம் செய்து அங்கு வந்து விடுவாள், அப்படியே தானும் அவர்களுடனே இருந்து விட திட்டமிட்டவர், சஹஸ்ராவிற்கு ஆதரவே அளித்தார்.

ஒரு விதமாக தீரன் சஹஸ்ராவின் திருமணம் நடைபெற, அதன் பிறகு அவளிடம் பேசுவதை முற்றிலும் குறைத்துக் கொண்டான்.

திருமணம் ஆன அன்று, சஹஸ்ராவே, “நான் சவி கூட தூங்கிக்கிறேன் தீரன்.” என்றிட, அவன் மறுத்தான்.

“நீ இங்க தான் இருக்கணும். இப்படி தனி தனியா இருந்தா, வீட்ல வேலை பார்க்குற ஆளுங்களுக்கு நம்மளே கன்டென்ட் எடுத்து குடுத்த மாதிரி இருக்கும். சோஃபால படுத்துக்கோ.” என்று விட்டு, அவன் எதையும் கவனியாமல் மெத்தையில் படுத்து உறங்கி விட, ‘சோஃபாலயா?’ என்றிருந்தது அவளுக்கு.

என்ன இருந்தாலும், அவளும் மாளிகை, பஞ்சு மெத்தை என்று வளர்ந்தவளாகிற்றே. ஆனாலும் எதுவும் பேசாமல் சோஃபாவிலேயே படுத்துக்கொள்ள, முதல் இரு நாட்கள் கடினமாகவே இருந்தது. ‘இன்னொரு கட்டிலாவது இந்த அறையில் போடுங்களேன்…’ என்றதற்கும் அவன் மறுத்து விட்டான்.

அதன் பிறகு பேசி பயனில்லை என்றுணர்ந்து அவளும், அவனைப் போல அமைதியாகி விட்டாள்.

இந்நினைவுகளுடன் உறங்கிப் போன சஹஸ்ரா, சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியே கண்களை சுட்டதும் தான் எழுந்தாள்.

எழும் போதே, தீரன் விழித்திருந்தான். அவன் கண்களோ அவளை தான் சுட்டது. முந்தைய நாள் கூட தன்னிடம் அவன் இத்தனை கோபம் காட்டவில்லையே… எனக் குழம்பியவள், அவனுக்கு வேண்டியதை செய்ய, அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

“என்னாச்சு தீரன். என்மேல கோபமா?” அவள் தட்டு தடுமாறி கேட்க,

“இனிமே உன்ன தொடல போதுமா?” என்றான் கோபமாக.

“டென்ஷானாகாதீங்க. டாக்டர் உங்களை ரிலாக்ஸ்ஸா இருக்க சொல்லிருக்காரு.” என மெலிதாக கூறியவளுக்கு இன்னும் அவனது கோபத்தின் காரணம் புரியவில்லை.

“என்னை டென்ஷன் ஆக்குறதே நீ தான்!” என மீண்டும் கோபத்தை மழையென பொழிந்தவன், போனை எடுத்து நிக்கோலஸிடம் தொழில் பற்றியான நிலவரத்தை கேட்டு தெரிந்து கொண்டான்.

முதலில் பொறுத்தவள், பின் “சாப்பிட டைம் ஆச்சு. வாங்க.” என அழைக்க, “எனக்கு சாப்பிட்டுக்க தெரியும். நீ போ!” என்றான் அவளைப் பாராமல்.

“டேப்லட் போடணும் தீரன். சொன்னா கேளுங்க! வாங்க.” என்று அவன் கையைப் பிடித்து அழைக்க, அதனை உதறியவன், “இந்த அக்கறை ஒன்னும் எனக்கு வேணாம் சஹஸ்ரா. முதல்ல போ” என்று சிடுசிடுத்தான்.

ஏனோ, இத்தனை நாட்களும் கண்களிலேயே அன்பை வழங்கியவன், இப்போது எரிந்து விழுந்ததில் தன்னிச்சையாக கண்கள் கலங்கி விட, அதனை அவனுக்கு காட்டாமல் திரும்பி நடக்க எத்தனித்தாள்.

அந்நேரம், அவள் கரங்கள் அவன் கரங்களுக்குள் சிறை பட, கண்ணீரும் விழிகள் தாண்டி வழிந்தது. தான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்ற நிஜம் புரியாமல் தன்னையே நிந்தித்தாள்.

“என்னை பார்த்தா உனக்கு பொறுக்கி மாதிரி இருக்கா? இல்ல ரேப்பிஸ்ட் மாதிரி இருக்கா?” தீரன் வெறுமையான குரலில் கேட்க, அதில் சட்டென நிமிர்ந்தவள், “ம்ம்ஹும்” என்றாள் மறுப்பாக.

“அதான், எனக்கு ஞாபகம் வந்ததும் தான் மத்ததெல்லாம்ன்னு சொல்லிட்டீல. அதை கூட புருஞ்சுக்காம நான் உன்கிட்ட எல்லை மீறிடுவேனா? இல்ல என் பக்கத்துல படுத்தா கூட, உன் மேல பாஞ்சுடுவேனா? என்னமோ என்னை லவ் பண்ணேன்னு சொன்ன… இவ்ளோ தான் நீ என் மேல வச்சுருக்குற நம்பிக்கையா?” விழிகளில் ஏமாற்றத்தையும், சினத்தையும் தேக்கி அவன் பேசிட, சஹஸ்ராவிற்கு மனம் உருகி விட்டது.

“இல்ல தீரன்!” அவள் ஏதோ பேச வர, “என் மேல நம்பிக்கை இல்லாம நீ சோஃபால படுக்குறதுக்கு வேற ரூமுக்கே போய்டலாமே…!” என்றான் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு.

அவன் முகத்தைக் கண்டு அவளுக்கு சிரிப்பே வந்தது. ஏதோ ஒரு சிறுவன் மிட்டாய்க்கு அடம்பிடிப்பது போல அத்தனை அழகு அந்த ஆடவனின் கோபமும், சிலுப்பலும்.

“இது நல்ல கதை தான். நீங்க தான என்னை சோஃபால படுக்க சொன்னீங்க? இப்போ என்னமோ நான் உங்களை நம்பாத மாதிரி பழி போட்டா எப்படியாம்?” எனக் கேட்டாள் அவனை ரசித்தபடி.

அவனோ புருவம் சுருங்க, “வாட்? நானா? நான் ஏன் அப்படி சொன்னேன்?” என வினவ,

“அதை என்கிட்ட கேட்டா…!” என்றாள் உதட்டை பிதுக்கி.

அவளை அள்ளி அணைத்து முத்தமிட, கரங்கள் பரபரத்தாலும் முயன்று அடக்கிக்கொண்டவன், “உண்மையாவே நான் தத்தியா தான் இருந்துருக்கேன் சஹி. இப்போ தெளிவா இருக்கேன். ஆனா, தத்தியாவே இருக்க வேண்டியதா இருக்கு.” என சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளை விழுங்கும் பார்வை பார்த்தபடி கூற, அவன் பார்வையிலும் வார்த்தையிலும் செங்கொழுந்தாக சிவந்தாள் சஹஸ்ரா.

யாரோ அவள்(ன்)
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
32
+1
96
+1
3
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்