Loading

ஜீவன் 13

தன் வாழ்க்கையை எண்ணி இரவெல்லாம் தூங்காமல் கலங்கிக் கொண்டிருந்தாள் அகல்யா. வேண்டாத எண்ணங்களும் அவனின் முன்னாள் திருமண வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்ற குழப்பமும் அவளுக்குள் விஸ்வரூபம் எடுக்க, தன்னை தணித்துக் கொள்ள அறையை விட்டு ஓடினாள்.

நிம்மதியை தேடிய மனது நேற்று மாமியார் காட்டிய இடத்தில் நின்றது. இயற்கை சூழல் தன் மனதை மாற்றும் என்ற நம்பிக்கையோடு அங்கு அமர சென்றவள் இன்னும் பரிதவித்துப் போனாள் தயாளன் அமர்ந்திருப்பதை பார்த்து. அப்படியே திரும்பிச் செல்லலாம் என்று நினைத்தவள் மாமனாரின் கசந்த முகத்தால் அருகில் நகர்ந்தாள்.

மருமகளை பார்த்ததும் கண்களை துடைத்துக்கொண்டவர் எதுவும் நடக்காதது போல் பேச்சு கொடுக்க, “கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. இப்படி மூனு பேரும் தனித்தனியா உட்கார்ந்து அழுற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.” என்றாள்.

‘இதைக் கேட்டு நீ என்ன செய்யப் போகிறாய்’ என்று மனம் அவளை பதில் கேள்வி கேட்க, அவளிடம் அதற்கான பதில் இல்லை. தாலி ஏறியதில் இருக்கும் கோபத்தின் அளவைவிட இம்மூவருக்கும் பின்னால் இருக்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ளத்தான் அதிகம் துடித்தது மனம்.

என்றாக இருந்தாலும் இவை அவளுக்கு தெரிந்தாக வேண்டிய ஒன்று என்பதால் பக்கத்தில் அமரும்படி சைகை செய்தார் மாமனார். கடந்த காலத்தை விவரிக்கப் போகிறார் என்பதை அறிந்து கொண்டவள் மனம் பதை பதைத்தது. கணவனின் குழந்தை பருவத்தையும் வளர்பருவத்தையும் கேட்டு ஒரு மனைவி ஆனந்தம் கொள்வாள். இங்கு அதற்கு மாறாக அவனின் கல்யாண வாழ்க்கையை கேட்க வேண்டிய சூழ்நிலை அகல்யாவிற்கு.

எதற்கு இந்த பிறவி என்று நொந்து கொண்டவள் கேட்க ஆரம்பிக்க, “தரணி அப்பதான் முதல் தடவையா அவனோட காதல் விஷயத்தை எங்க கிட்ட சொன்னான். உண்மையாவே நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனா அதெல்லாம் அஞ்சு நிமிஷம் கூட நிலைக்கல அவன் யாரை லவ் பண்றான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம். முடிவா அந்த பொண்ண வேணாம்னு சொல்லிட்டோம். அப்போதைக்கு என் மகன் எதுவும் பேசல. எங்களுக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுப்பான்னு நம்பி நாங்களும் அத்தோட அந்த பேச்சை பேசல.” என்றவர் பேச்சை நிறுத்தி நினைவுகளை தொடர்ந்தார்.

பெற்றோர்களிடம் விஷயத்தை சொன்னவன் அவர்கள் மறுத்த விஷயத்தை காதலியிடம் சொன்னான். ஊருக்கு திரும்பியவள் உடனே சென்னை வந்து நின்றாள். நின்ற கையோடு உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்தாள் அவனை. பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும் வரை பொறுமை காக்க அறிவுரை கூறியும் சிவானி அமைதியாக இல்லை.

அவளைத் தங்க வைக்க ஹாஸ்டல் பார்த்தான். அவளோ எங்கும் செல்ல மாட்டேன் என்று தரணீஸ்வரனின் கையைப் பிடித்துக் கொண்டாள். வேறு வழியில்லாமல் நண்பனை தொடர்பு கொண்டவன் அவன் வீட்டில் காதலியை தங்க வைத்தான்.

 

ஒரு வாரம் அமைதியாக இருந்தவள் மீண்டும் திருமண பேச்சை எடுத்து விட்டாள். போதாக்குறைக்கு அவளின் பெற்றோர்களும் விடாமல் துரத்தி வர,
“எனக்கு பயமா இருக்கு தரணி எங்க நீ உன்னோட அம்மா அப்பா பேச்சை கேட்டு என்னை கழட்டி விட்டுடுவியோன்னு. அப்படி ஒரு முடிவ நீ எடுத்தா சாகுற முடிவ நான் எடுத்துடுவேன்.” என அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

“கொஞ்சம் டைம் கொடு சிவா. வேணும்னா உன் அம்மா அப்பா கிட்ட நான் வந்து பேசுறேன்.”

“பேசி என்ன பண்ணுவ. அவங்க எனக்கு அப்பவே கல்யாணம் பண்ற ஐடியால இருந்தாங்க. உன்னை காதலிச்சதால ரெண்டு வருஷம் அதை எப்படியோ தள்ளி போட்டுட்டேன். இனிமேலும் அவங்க கிட்ட டைம் கேட்க முடியாது தரணி.

உங்க வீட்ல ஓகே சொல்லிட்டா ரெண்டு பேரும் உரிமையா அவங்க முன்னாடி போய் நிக்கலாம். தினமும் போன் பண்ணி எங்க இருக்கன்னு அழுறாங்க. வாய்க்கு வந்த பொய்ய சொல்லி தப்பிச்சிட்டு இருக்கேன்.”

“எனக்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடு எப்படியாது எங்க அம்மா அப்பா சம்மதத்தை வாங்குறேன்.” என்றவன் பெற்றோர்களிடம் மீண்டும் பேசினான்.

தயாளன் ஒரு கட்டத்திற்கு மேல் இறங்கி வந்து விட்டார் மகனுக்காக. ஆனால் ஆதிலட்சுமி முடிவாக மறுத்துவிட்டார். அன்னையிடம் முதல் முறையாக சண்டையிட்டான் மகன். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒரு வார காலங்கள் பேசாமல் இருந்தார்கள்.

அந்த ஒரு வார காலத்தில் சிவானி நன்றாக திருமண ஆசைகளை விதைத்து விட்டாள். நிச்சயம் அவனின் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். அந்த ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் அவளோடு தங்கினான்.

“தரணி நீ என்னோட இருக்கும்போது எப்படி இருக்கு தெரியுமா. இதே மாதிரி நம்ம ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா எவ்ளோ சந்தோஷமா இருக்கும். அந்த சந்தோஷத்தை அனுபவிக்க தான் கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சுறேன்.” அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு பேசினாள்.

காதலியின் பேச்சு இனித்தது. தனக்காக ஒரு பெண் இவ்வளவு தூரம் போராடுகிறாள் என்பதை எண்ணி மனதுக்குள் பறந்தான். போதாக்குறைக்கு அவளின் செவ்விதழ் விடாமல் அவன் கன்னத்தை உரசி கொண்டிருக்க,

“எனக்கு மட்டும் ஆசை இல்லையா சிவா. அம்மா அப்பா ஓகே சொல்லிட்டா அடுத்த நாள் கூட கல்யாணத்தை வச்சுக்கலாம். உன்னை இந்த மாதிரி பக்கத்துல வச்சுக்கிட்டு நல்ல பையனா நடிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவன் பத்து விரல்களும் அவள் மேனியில் விளையாடியது.

கன்னத்தில் இதழ் பதித்தவள், “உன்னை யாரு குட் பாயா இருக்க சொல்றது தரணி. நான் உனக்கானவ…” என்று இன்னும் ஒரு இதழ் ஒத்தடம் கொடுக்க, அவளுக்கு பதில் முத்தங்கள் இடம் மாற்றினான்.

அவன் கட்டுப்பாடோடு நின்றுக்கொள்ள சிவானி காதலனின் உணர்வுகளை வெளிப்படுத்த வைத்தாள் இதழோடு இதழ் சேர்த்து. மறுநாள் காலை தான் வீட்டிற்கு சென்றான். இரவெல்லாம் மகன் வராததால் தொடர்ந்து அழைத்துக் கொண்டு இருந்தார் ஆதிலட்சுமி. காதலியோடு பொழுதை கழித்தவன் தொடர்பு எல்லைக்கு வெளியில் வைத்திருந்தான் கைபேசியை.

“ராத்திரி எல்லாம் எங்க இருந்த தரணி?” என்ற அன்னையின் முகம் பார்க்க தடுமாறினான்.

பதில் சொல்லாமல் தலை குனிந்து நிற்கும் மகனிடம் தயாளனும் கேட்க, “ஃப்ரெண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போய்ட்டேன் அப்பா.” வாய்க்கூச பொய் சொன்னான்.

“எந்த ப்ரெண்ட்?”

உடனே பெயர் வாயில் வராததால் ஏதோ ஒரு பெயரை சொல்லி மாட்டிக் கொண்டான் அன்னையிடம். “அப்படி ஒரு ப்ரெண்ட் உனக்கு இருக்குறதா ஞாபகம் இல்லையே.” என்ற அன்னைக்கு,

“அவன் புது ப்ரெண்ட் அம்மா.” என்றான்.

“சரி போனது தான் போன எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம்ல.”

“திடீர்னு கூப்பிட்டதால சொல்ல மறந்துட்டேன் அப்பா.” என்ற மகனின் பேச்சில் தம்பதிகளுக்கு பொய் என்பது புலப்பட்டது.

“பார்த்து தரணி… வருங்காலத்துல எங்கள மறந்துட போற.” என்ற ஆதிலட்சுமி திட்ட வரும் கணவனை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.

பொய் சொல்லிய வருத்தத்தில் அவன் அன்று அலுவலகம் செல்லாமல் அறையில் இருந்தான். மகன் மீது கோபம் இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாத ஆதிலட்சுமி மூன்று வேளையும் சாப்பாடு ஊட்டி விட்டார். அன்னையின் அன்பில் மனம் நிறைந்தவன் காதலியை ஓரம் வைத்தான்.

 

அவளுக்கு அது தெரிந்து விட்டதோ என்னவோ அலைபேசியில் அழைப்பு விடுத்து, “தரணி இன்னைக்கு ராத்திரியும் என்கூட இருக்கியா.” என கொஞ்சலாக கேட்க,

பெற்றோர்களை மனதில் வைத்து, “இல்ல சிவா என்னால இருக்க முடியாது. என்னோட அம்மா கிட்ட இதுவரைக்கும் பொய் சொன்னது இல்லை. காலைல வாய்க்கு வந்த பொய்ய சொல்லி ரொம்ப சங்கடமா போயிடுச்சு.” என்று மறுத்தான்.

மனதில் காதலனின் வார்த்தை கோபத்தை கொடுத்தாலும் காட்டிக் கொள்ளாமல், “உனக்காக தான என் வீட்டை விட்டுட்டு இங்க வந்து இருக்கேன். கல்யாணமும் பண்ண மாட்ற பார்க்கவும் வர மாட்ற. உண்மையா என்னை காதலிச்சு இருந்தா இப்படி எல்லாம் பேசுவியா.” என்றாள் அழுகையோடு.

முடிந்தவரை அழுகையை நிறுத்தினான் சமாதானப்படுத்தி. நேரங்கள் சில கடக்க, அவர்களுக்குள் பேச்சு இனிக்க ஆரம்பித்தது. கொஞ்சி பேச துவங்கினார்கள். காதலித்த இனிமையான தருணங்களை மீண்டும் அலசினார்கள்.

காதல் வார்த்தைகள் மாற்றத்தை கொடுக்க கைபேசியில் முத்தங்கள் பரிமாறப்பட்டது. புதுவித உணர்வுகள் இருவரையும் ஆட்கொள்ள, “இன்னைக்கு என் கூட இரு தரணி. நேத்து மாதிரி நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்.”
ஒரு நாள் இரவெல்லாம் காதலியோடு இருந்த மயக்கம் மறுநாளும் இருக்க வைத்தது.

இந்த முறை செல்லும்பொழுது பெற்றோர்களுக்கு ஒரு காரணத்தை சொல்லிவிட்டு சென்றிருந்தான். மகனின் நடவடிக்கையை கண்டு சந்தேகம் சூழ்ந்தது. அடுத்த ஐந்து நாட்கள் எப்போதும் போல் அலுவலகம் சென்று கொண்டிருந்தவன் ஆறாம் நாள் மீண்டும் இரவு வீடு தங்க வில்லை.

விடிந்ததும் வரும் மகனிடம் சண்டையிட்டார் ஆதிலட்சுமி. அனைத்திற்கும் துணை நிற்கும் அன்னை காதலுக்கு எதிராக நிற்பதாக மெல்ல உணர ஆரம்பித்தான். அதன் பலனாய் பேச்சுக்களும் அவரிடம் முரண்பாடாய் வந்தது.

அடிக்கடி இரவில் அவளோடு தங்க ஆரம்பித்தான். வாக்குவாதங்களும் வீட்டில் வளர்ந்து கொண்டே சென்றது. ஒரு பக்கம் காதலியின் பேச்சுக்கள் மதி மயக்கி கொண்டிருந்தது. மகன் எங்கு செல்கிறான் என்பதை அறிந்த ஆதிலட்சுமி,

“அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க நான் என்னைக்கும் சம்மதிக்க மாட்டேன். ஒரு நல்ல பொண்ணு இந்த மாதிரி ஒரு வேலைய பார்க்க மாட்டா. அவள மறந்துட்டு என் மகனா இங்க இருக்குறதா இருந்தா இரு.” என்று விட்டார் முடிவாக.

பல வருடங்களாக காதலிக்கும் வருங்கால மனைவியை அன்னை முறை தவறி பேச, “அவ எவ்ளோ நல்ல பொண்ணுன்னு காதலிக்கிற எனக்கு தெரிஞ்சா போதும். அவளைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” முழுவதுமாக பெற்றோர்களுக்கு எதிராக நின்றான் தரணீஸ்வரன்.

மருமகளுக்கு மகனின் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தவர் இடைவெளி விட்டார். அவள் இடைவெளி கொடுக்க விரும்பாமல், “அப்புறம் என்ன ஆச்சு?” என கேட்டாள்.

“அடிக்கடி அந்த பொண்ண வைச்சு அம்மாவும் மகனும் நிறைய சண்டை போட்டாங்க. கோபத்துல எங்கள முழுசா வேணாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டான். மனசு கேட்காம அவனை தேடி போனோம். அப்போ தான் என் மகன் கல்யாணம் பண்ணிட்ட விஷயமே எங்களுக்கு தெரியும். அன்னைக்கு மனசு நொந்து அழுக ஆரம்பிச்சது தான் இன்ன வரைக்கும் நிறுத்த முடியல.” என்றவர் கண்களில் நீர் மெல்ல உருவெடுப்பதை உணர முடிந்தது அவளால்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
33
+1
50
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்