Loading

 

விழிகளில் பளபளத்த நீரை விழிகளுக்குள்ளேயே வலுக்கட்டாயமாக அடக்கிய வசுந்தரா, புன்சிரிப்புடன் பரத்தை ஏறிட்டு,

“என்ன கேட்ட? சண்டை போடுவோமா? ஹ்ம்ம்… சண்டை, போட்டி, பொறாமை, கஷ்டம் இதெல்லாம் என்னன்னே தெரியாது எங்களுக்கு” என ஆழ்ந்து கூறியவள் மூச்சை இழுத்து நாற்காலியின் பின் பக்கம் கழுத்தை சாய்க்க,  அவளனுமதி இன்றியே நினைவுகள் சீறிப் பாய்ந்தது.

புழுதி கிளப்பும்,  டவுன் பஸ் அதிக சத்தத்தை எழுப்பியடி வெள்ளைப்பாளையத்தில் நிற்க, இரு கையிலும் டிராவல் பேகை சுமந்து கொண்டு அதிலிருந்து இறங்கினாள் வசுந்தரா.

சுற்றி முற்றி பார்த்தவள், அடுத்து அடுத்து கிளம்பத் தயாராக இருந்த பேருந்துகளை பார்வையிட்டபடி, பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்தாள்.

அவளை அழைக்க யாரும் வராது  போக, அலைபேசியை எடுத்து அவள் தந்தைக்கு அழைத்தாள்.

அந்த அழைப்பும் எடுக்கப்படாமல் போக, “ப்ச்… நானே வீட்டுக்கு வந்துக்குறேன்னு சொன்னாலும் இந்த அப்பா கேட்காம வரேன்னு சொல்லிட்டு, இப்ப போன் எடுக்க மாட்டுறாரு…” என முணுமுணுத்தபடி, நிழலைத்தேடி மரத்தின் அடியில் நின்றவள், அசுவாரஸ்யமாக பார்வைதனை அலையவிட, சட்டென ஓரிடத்தில் நிலைத்து நின்றது கருவிழிகள்.

எதிர் சாலையில் ஆடவர்கள் சிலர் கத்தி சண்டையிடுவது போல பேச, சில நொடியில் அடிதடி நிலைக்கு வந்திருந்தது. அப்போது தான் அவள் முதன் முறை ஜிஷ்ணுவைப் பார்த்தாள்.

எதிரில் நின்று வாதம் செய்து கொண்டிருந்தவனை, பொறுமை இழந்து ஓங்கி அடித்திருந்தது அவன் கைகள். விழிகளில் சிவப்பு பறக்க, கை நீட்டி அவனை ஏதோ எச்சரித்தான்.

அடி வாங்கியவனுக்கு தான் தலையில் இருந்து பொல பொலவென இரத்தம் சொட்ட, அவனருகில் நின்ற குமரனோ “மாப்ள வா போய்டலாம்” என்றான் பதறி.

அதற்குள், காவலர்கள் அங்கு சூழ, நடந்ததை விசாரியாமல், ஜிஷ்ணு தர்மனின் சட்டையைப் பிடித்து, ஜீப்பில் ஏற்ற முயன்றார் இன்ஸ்பெக்டர் சங்கர்.

அவனோ, அவர் கையை தட்டி விட்டு, அணிந்திருந்த வேட்டியை மடித்துக் கட்டி, தீயாக முறைத்து வைக்க,

“என்னடா போலீஸ்காரன்கிட்டயே உன் வீரத்தை காட்டுறியா?” என்று கோபமாகி அவனையும் குமரனையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல, ஆரம்பித்திலிருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வசுந்தரா புருவம் சுருக்கியவள், அங்கிருந்து கிளம்பினாள் பரபரப்பாக.

குமரனுக்குத் தான் லேசாக கிலி பிடிக்கத் தொடங்கியது. சங்கரோ, “பெரிய சண்டியராடா நீ. கன்னிமனூர்க்காரனுக்கு இந்த ஊருல என்னடா வேல” என்றபடி லத்தியை கையில் எடுத்து அவன் கால்களின் மீது அடிக்க போக, அவனோ அதனைப் பிடித்திருந்தான்.

“வேணாம் இன்சு… தேவையில்லாம என்ட்ட வச்சுக்காத. ரொம்ப வருத்தப்படுவ” என அவன் விழி இடுங்க எச்சரிக்க,

“ஓ… உன் அப்பன் கட்சில இருக்கான்னு நீ எல்லா ரௌடித்தனமும் பண்ணுவ. நான் வேடிக்கை பாக்கணுமா. உன் அப்பனே அங்க அல்லக்கை தாண்டா” என எகத்தாளம் புரிந்த சங்கரின் சட்டையைப் பிடித்து தள்ளி இருந்தான் ஜிஷ்ணு.

அதில் மேலும் கோபமான சங்கர், “போலீஸ்காரன் மேலயே கை வைக்கிறியா?” என வெறியுடன் அவனை நெருங்க அப்போது ஒரு பெண்குரல் ஒலித்ததில், இருவருமே வாசல் புறம் பார்த்தனர்.

வசுந்தரா தான், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தாள்.

“சார்… உண்மையா அங்க என்ன பிரச்சனை நடந்துச்சுன்னு எனக்கு தெரியும். இவங்க மேல தப்பு இல்ல. வெளிய விடுங்க” என்றாள் உத்தரவாக.

திடீரென ஒரு இளம்பெண் வந்து தங்களுக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியதில் குமரன் பின்னந்தலையை சொறிய, முகத்தில் இருந்த சினத்தை மாற்றாத ஜிஷ்ணுவின் விழிகள் அவளை ஆராய்ந்தது.

பயணம் செய்ததன் அறிகுறியாக, அவளின் கட்டுக் கூந்தல் லேசாக கலைந்திருக்க, எப்போதோ வைத்த குங்குமத்தின் மிச்சம் மட்டும் கோடாக அவளின் பொன்னெற்றியில் படிந்திருந்தது.

சிறிதான பிளாஸ்டிக் தோடு, அவள் அணிந்திருந்த கருப்பு நிற காட்டன் சுடிதாருக்கு ஏற்ற வண்ணத்தில்  செவியை அலங்கரிக்க, கோபம் கொண்டதன் காரணமாக பெண்ணவளின் இதழ்கள் சற்றே காய்ந்தது போலிருந்தது.

முகம் அத்தனை களைப்பில் இருந்தாலும், கண்கள் தீர்க்கமான பார்வை வீசியதில் அவள் அவனுக்கு புதுமையாகவே தெரிந்தாள்.

ஒரு குட்டி மூக்குத்தி அணிந்தால், இன்னும் எடுப்பாக இருக்குமோ என்ற சிறு யோசனை அவனுள் உதிக்க, ‘வேணும்னா நீ வாங்கிக்குடேன்’ என்றே அவனின் மனசாட்சி அவனை கேலி செய்தது.

அதில் இறுகி இருந்த அவனின் முரட்டு இதழ்கள் விடுதலை பெற்று, மென் புன்னகையில் விரிய, விழிகளோ ரசனையுடன் அவள் பேச்சைக் கவனித்தது.

சங்கர், “மேடம்… நீங்க தான இந்த ஊர் கலெக்டரு. அய்யயோ வாங்க வாங்க உட்காருங்க” என பயந்தது போல கேலி பாவனை செய்தவன்,

“நீ யாருடி. போலீஸ் ஸ்டேஷன்க்குள்ள புகுந்து எனக்கே ஆர்டர் போடுற. புடுச்சு உள்ள போட்டுடுவேன்” எனக் கத்த, ஜிஷ்ணுவிற்கு மறைந்த கோபம் மீண்டும் உருப்பெற்று சங்கரை நெருங்கும் வேளையில் மீண்டும் அவள் குரல் கேட்டு அப்படியே நின்றான்.

“ஓ… புடுச்சு உள்ள போடுவீங்களா? போடுங்க. போடுங்க! அப்பறம் உள்ளதை நான் பாத்துக்குறேன்” என திமிர்த்தனமாகவே பேசியதில், சங்கருக்கு கடுப்பானது.

அவளே மீண்டும், “இங்க பாருங்க சார். அந்த பஸ் ஸ்டாண்ட்ல, அங்க இருந்த கேடி பசங்க, ஒரு பொண்ணுக்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணாங்க. அதனால தான் அவரு அடிச்சாரு. நியாயமா, நீங்க அவனையும் தான் இங்க கூட்டிட்டு வந்துருக்கணும்” என்று நியாயம் கேட்க,

அவரோ “இந்த அம்மா பெரிய நியாயவாதி. வந்துட்டா நியாயம் பேச… அடிச்சு துரத்துறதுக்குள்ள நீயே போய்டு” என்று விரல் நீட்டி எச்சரிக்க,

“அடிப்பீங்களா… தைரியம் இருந்தா என் மேல கை வைச்சு பாருங்க இன்ஸ்பெக்டர். அடுத்த செகண்ட் உடம்புல உங்க கை இருக்காது…” அடிக்குரலில் மிரட்டி அவரை சற்றே திகைக்க வைத்தாள் வசுந்தரா.

“என்னடி என்னையவே மிரட்டுறியா? முழுசா வீடு போய் சேர மாட்ட. சொல்லிட்டேன்…” சங்கர் முறைக்க,

“நீங்க ஒவ்வொரு தடவ ‘டி’ போட்டு பேசுறதுக்கும் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் இன்ஸ்பெக்டர்…” என முறைத்தவள்,

நான் லா ஸ்டூடண்ட். நான் நினைச்சேன்… என்னை டி போட்டு மரியாதை இல்லாம பேசுனதுக்கு ஐபிசி செக்ஷன் 504 படி, உங்கள ரெண்டு வருஷமும், இவரு பண்ணாத தப்புக்கு ஸ்டேஷன் கூட்டிட்டு வந்ததுக்கு, ஐபிசி செக்ஷன் 182 படி, ஆறு மாசமும், மொத்தம் ரெண்டரை வருஷம் களி திங்க வச்சுடுவேன். பண்ணட்டா?” என வெகு ஏளனத்துடன் கேட்டவளின் பாவனைகளை, அழுத்த விழிகளால் படம் எடுத்துக்கொண்டிருந்தான் ஆடவன்.

சங்கருக்கு லேசாக பயம் முளைக்க, இருந்தும் “என்ன பயம் காட்டுறியா? லா ஸ்டூடண்ட்ன்னா கொம்பு முளைச்சு இருக்கா. மூணு பேரையும் என்ன செய்றேன்னு பாருங்க.” என்னும் போதே,

“ப்ச்… ஸ்டாப்” என அவரை நிறுத்தியவள், வெளியில் நின்றிருந்த இரு பெண்களை உள்ளே அழைக்க, ஒரு பெண்மணியும், பதின் வயது பெண்ணும் உள்ளே நுழைந்தனர்.

அவர்களைக் கண்டதும், “இந்த சின்ன பொண்ணுட்ட தான் அந்த பொறுக்கி தப்பா நடந்துக்கிட்டான். அதுனால தான் இவரு அவனை அடிச்சாரு. அவங்களே கம்பளைண்ட் குடுக்க வந்துருக்காங்க.” என திமிருடன் கூற,

அப்பெண்மணியோ, “ஐயா… இந்த புள்ள எந்த தப்பும் பண்ணல. அதுக்காக நான் யார் மேலையும் புகார் குடுக்கவும் வரல. அந்த தம்பியை விட்ருங்கய்யா” என்ற பெண்மணி, ‘நமக்கு எதுக்கு வம்பு’ என பயந்தபடி தன் மகளை அழைத்துக்கொண்டு சென்று விட, வசுந்தராவிற்கு எரிச்சலாக இருந்தது.

அவள் தான், அவரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தார். வேறு வழியற்று அப்பெண்மணியும் உண்மையை கூறி விட்டு, ஓட்டமும் நடையுமாக செல்ல, இன்னும் ஜிஷ்ணுவின் பார்வை அவளை தாண்டவில்லை.

அவளோ, “இப்ப இவங்கள விட போறீங்களா இல்லையா இன்ஸ்பெக்டர்?” என கேட்க,

‘உன்ன பாத்துக்குறேன் இரு’ என மனதினுள் கறுவியபடி, இருவரையும் விடுவித்தார்.

அவள் வரவில்லை என்றாலும், எப்படியும் சற்று நேரத்தில் கட்சி ஆட்கள் போன் செய்து அவனை விடுவிக்கக் கூறி இருப்பார்கள். அவன் தந்தைக்காக இல்லை என்றாலும், அவனும் மீசை முளைத்த நாட்களில் இருந்து, நீலகண்டனுக்காக அடிதடியில் இறங்கி வேலை செய்வான். அப்போது எதிர்கட்சி ஆட்சி புரிந்தாலும் அமைச்சர் நீலகண்டன் பதவியில் தான் இருந்தார்.

அதனாலேயே அவனும் அசட்டையாக இருக்க, இடையில் பெண்ணவளின் புயல் வேகத்தைக் கண்டு புன்னகைத்துக் கொண்டான்.      

அவளுக்கோ ஒரு நல்லவனை காப்பாற்றி விட்ட மகிழ்வு உள்ளுக்குள் தோன்றிட, வெளியில் வந்தவளை ஜிஷ்ணு நிறுத்தினான்.

“உங்களை நான் இந்த ஊருல பாத்ததே இல்ல ஊருக்கு புதுசோ?” என அவளை ஊடுருவியபடி சட்டையின் கைப்பகுதியை மடித்தான்.

அவன் கேள்வியில் திரும்பியவள், வெளியில் வைத்திருந்த தன் பைகளை எடுத்தபடி, “அட. நானும் இந்த ஊரு தாங்க.” என்றவள், “ஊருல அத்தன பேரையும் தெரியுமோ உங்களுக்கு? என்ன பாத்ததே இல்லைன்னு சொல்றீங்க?” என மூக்கை சுருக்கி கேள்வியாய் கேட்க,

அவளது முகத்தை பார்வை கொண்டு வருடியவன், “இந்த மொத்த ஊரோட மூலை முடுக்கு எல்லாம் அத்துப்படி” என்றான் காலரை தூக்கி விட்டபடி.

“ஓ…” என புருவம் உயர்த்தியவள், மேலும் பேசும் போதே,

“தாராம்மா. நீ என்ன இங்க நின்னுட்டு இருக்க?” என பதற்றத்துடன் அங்கு வந்தார் ராஜசேகர்.

மகளை பேருந்து நிலையத்தில் காணாமல் தேடியவர் போனையும் அவள் எடுக்காமல் போனதில், சாலை வழியே தேடிக்கொண்டே வர, இறுதியில் காவல் நிலைய வாசலில் நின்றவளைக் கண்டு அவளருகில் ஓடி வந்தார்.

“அப்பா… இதான் நீங்க வர்ற நேரமா?” என போலியாய் கடிந்தவள், “ஒன்னும் இல்லப்பா வாங்க போலாம்” என்றாள்.

ராஜசேகரோ லேசாக ஜிஷ்ணுவை முறைத்து விட்டு, “இங்க ஏன்மா வந்த?” என மீண்டும் கேட்க, அம்முறைப்பை கண்டுகொண்டவள், ஜிஷ்ணுவின் திமிர்ப் பார்வையையும் உள்வாங்கிக்கொண்டு,

“வீட்ல போய் சொல்றேன்பா” என்றவள், ஜிஷ்ணு புறம் திரும்பி “பாக்கலாம்” என்று விட்டு அவருடன் ஜீப்பில் சென்று அமர்ந்தாள்.

“பாக்கலாமே…” என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவனோ, பக்கவாட்டில் நின்ற குமரனின் மீது கை போட்டு, “ஏன் மாப்ள… இந்த ஆளுக்கு ஒரு பையன் தான இருக்கான். இந்த புள்ள ஏண்டா அப்பான்னு கூப்பிடுது” எனத் தீவிர சந்தேகத்துடன் கேட்க,

குமரனோ, ஏற்கனவே அவள் பேச்சில் அதிர்ந்திருந்தவன், “இப்ப இது ரொம்ப முக்கியமாடா. சும்மாவே அந்த இன்சு நம்ம மேல காண்டா இருக்கான். இதுல இந்த அம்மா வேற, வீராவேசமா பேசிட்டு போயிருச்சு. அடுத்து என்னத்த செஞ்சு தொலைப்பானோ” என்று தலையில் அடித்துக் கொண்டான். இது எதுவும் ஜிஷ்ணுவின் காதில் தான் விழவில்லை… எங்கே அவனின் எண்ணமெங்கிலும் அவள் மட்டும் தானே நிறைந்திருந்தாள்.

வீட்டை அடைந்த வசுந்தரா, வெளியில் வந்து தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த தாய் மரகதத்தை கட்டி அணைத்திட,

“ஏண்டி இவ்ளோ நேரம். நான் என்னமோ ஏதோன்னு பயந்தே போய்ட்டேன்.” என கேட்டபடி அவளை உள்ளே அழைத்துச் செல்ல, அவளின் தமயன் சுந்தரும், அண்ணி சகுந்தலாவும் அவளை இன்முகத்துடன் வரவேற்க, அண்ணனின் 7 வயது மகன் அன்புவின் கன்னம் தட்டி, “ஹே! செல்லக்குட்டி… எப்படி இருக்கீங்க” என கொஞ்சியவளுக்கு, தன் ஊருக்கு வந்துவிட்ட மகிழ்ச்சி தாண்டவமாடியது. கூடவே ஒரு வித சோகமும்.

நல விசாரிப்புகளும், விருந்தும் மகளுக்கு முடிந்திருக்க, ராஜசேகர் மெதுவாக, “தாராம்மா… நம்ம துணை தலைவரு செங்கமலம் இருக்கான்ல. அவனோட மவ ராதிகா, இங்க இருக்குற காலேஜுல தான் ரெண்டாவது வருஷம் படிக்கிறா” என விளக்கம் கூற,

அவளோ, “ப்பா. எனக்கு ராதியை தெரியாதா?” என இடுப்பில் கை வைக்கும் நேரம், ராதிகாவே அங்கு தரிசனம் தந்தாள்.

“எப்படி இருக்க தாரா…” என்று முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் பாவாடை தாவணியில் துள்ளிக் குதித்தபடி அவளை நெருங்கிய ராதிகாவை அவளும் சிரிப்புடன் வரவேற்று, “என்னடி விருந்துலாம் முடிஞ்சதுக்கு அப்பறம் வந்துருக்க. முன்னாடியே வந்துருக்கலாம்ல” என்று அதட்டினாள் பொய்யாக.

“ம்ம்க்கும்… நான் வரலாம்ன்னு தான் இருந்தேன். என் அப்பா தான் நீயே ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்க, குடும்ப கதை பேசி முடிக்கட்டும்ன்னு சொன்னாக” என சிலுப்பிட, அதில் வசுந்தரா சிரித்தாள்.

ராஜசேகரும், சொல்ல வந்ததில் கவனமாக, “அதான் தாராம்மா… ராதிகாவும் காலேஜ்ல தான் படிக்கிறா. நீ வேணா, இவ காலேஜ்லயே சேர்ந்து படியேன்” என்று சொல்லி முடிக்கும் போது சத்தம் குறைந்தது.

அவளோ புரியாமல் புருவம் சுருக்கி, “ஆனா, அப்பா… இவ பி. ஏ தான படிக்கிறா. நான் படிக்கிறது பி. ஏ. பி. எல். மொத்தம் அஞ்சு வருஷம் படிக்கணும். ஏற்கனவே சென்னைல மூணு வருஷம் முடிச்சுட்டேன். இன்னும் ரெண்டு வருஷம் தான் இருக்கு. அதை நான் லா காலேஜ்ல தானப்பா படிக்க முடியும்” எனக் குழம்பினாள்.

அவரோ தயங்க, மரகதம் இடை நிறுத்தி, “இங்க இந்த படிப்புலாம் வேணாம் தாரா. படிக்கிறதுன்னா, ராதி கூட படி. நீ படிக்கணும்னு சொல்ற காலேஜுல பொறுக்கி பசங்க தான் படிக்கிறாங்க” என்றார் முகம் சுருக்கி.

வசுந்தரா கிளுக் என சிரித்து, “எப்படியானாலும் வக்கீல் ஆனதும் நிறைய பொறுக்கி பசங்களை பாக்க வேண்டியது இருக்குமேம்மா. அதுக்கு என்ன பண்ண முடியும்? நான் இங்க வந்தும் லா தான் படிக்க போறேன்னு உங்ககிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு தான் இங்க வந்தேன். இல்லன்னா சென்னைல ஹாஸ்டல்லயே தங்கி இருப்பேன். இப்போ டீசி வாங்கிட்டு வந்ததுக்கு அப்பறம் இப்படி சொன்னா என்ன அர்த்தம்” என்று நேரம் ஆக ஆக பொருமியவளிடம் ராஜசேகர் ஏதோ பேச வர, அவள் தான் கையை காட்டி நிறுத்தினாள்.

“நான் சட்டம் தான் படிப்பேன். ஒன்னு இங்க படிக்கிறேன். இல்லன்னா, வெளியூர் போறேன். நான் இங்க இருக்கணுமா வேணாமான்னு முடிவு பண்ண வேண்டியது நீங்க தான். இன்னும் ஒரு வாரத்துல நாலாவது வருஷம் ஆரம்பிச்சுடும். நீங்க இந்நேரம் சீட் வாங்கிருப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கலப்பா” என ஏமாற்றத்துடன் கூறியவளின் அழுத்தப் பேச்சில் ராதிகா வாயில் கை வைத்தாள்.

‘ஆத்தி, இப்படிலாம் நான் எங்க வீட்ல பேசுனா, புடிச்சு கிணத்துல தள்ளி விட்டுடுவாக…’ என தனக்குள் பேசிக்கொண்டவள், வசுந்தராவை சமன்செய்ய அவள் பின்னே செல்ல, ராஜசேகர் மகளின் கோபத்தை தாள இயலாமல் உடனடியாக சட்டக் கல்லூரி நோக்கி சென்றார்.

உடனடியாக சீட்டும் கிடைக்காமல் போக, எப்படியோ குட்டிக் காரணம் அடுத்த நான்கு வாரத்தில் கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.

ஆனால், மரகதம் ஆயிரத்தெட்டு அறிவுரைகளையும், அங்கு படிக்கும் மாணவர்களிடம் அளவாக பேசும் படியும் கூறிட, அவளோ முறைத்தாள்.

“எனக்கு தெரியும் நான் யார் கூட பேசணும் பேசக்கூடாதுன்னு… சித்தியும் சித்தப்பாவும் இதுவரை இந்த மாதிரி என்னை எதுவுமே சொன்னது இல்ல. நான் இப்பவும் சொல்றேன்மா. நான் எனக்கு என்ன தோணுதோ அதை தான் பண்ணுவேன்” என உறுதியாகக் கூறி விட்டு செல்ல,

மரகதம் தான், “இவளை பேசாம நம்மளே வளத்துருக்கலாம். அப்ப தான் இவளுக்கும் வாய் குறைஞ்சு இருக்கும். உங்க தம்பியும் கொழுந்தியாவும் வளக்குறேன்னு மூணு வயசுல தூக்கிட்டு போயிட்டு, இப்ப பாருங்க… அவளுக்கு ஊரை பத்தியும் தெரியல. இங்க இருக்குற சனங்களை பத்தியும் தெரியல” என வெகுவாக புலம்பியவர், ராஜசேகரின் முறைப்பில் கப்சிப் என ஆகி விட்டார்.

சட்டக் கல்லூரிக்கு அருகில் தான், ராதிகா படிக்கும் கலைக்கல்லூரியும் அமைந்திருக்க, இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்கு சென்றனர்.

“பை ராதி. சாயந்தரம் நான் வரை லேட் ஆகிட்டா நீ கிளம்பு” என வசுந்தரா கூற, “உனக்கும் எனக்கும் ஒரே நேரத்துல தான் காலேஜ் விடுவாக தாரா. நான் காலேஜ் வாசல்ல நிக்கிறேன் நீ வா…” என்றதில் சரியென தலையசைத்து விட்டு, அக்கல்லூரியை வேடிக்கை பார்த்தபடியே உள்ளே சென்றாள்.

புது இடம், புது கல்லூரி என்ற படபடப்பு மனதில் இருந்தாலும், முகம் எப்போதும் போல நிமிர்வுடன் தான் இருந்தது. தன் வகுப்பறையைக் கண்டறிந்து, உள்ளே சென்றவளுக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. உப்புக்கு சப்பாணியாக ஒரு மாணவி கூட இல்லையே.

திடீரென வாசலில் ஒரு பெண்ணைப் பார்த்ததும், டேபிளில் மீது ஏறி அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சரட்டென எழுந்து நின்று விழி விரித்துப் பார்க்க,

அவளோ அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, ‘எல்லாம் தடிமாடுங்க மாதிரி இருக்குதுங்க… இதுங்க கூடவா ரெண்டு வருஷம் குப்பை கொட்டணும்’ என நொந்து விட்டு, அசட்டையாகவே உள்ளே நுழைய, அவள் வந்ததும் அவர்களுக்குள் பரபரப்பாக ஏதோ பேசினர்.

எல்லாம் ஒரு பெண் மாணவி நம்முடன் படிக்க போகிறாள் என்ற ஆனந்த அரட்டை தான்.

அவளுடன் சென்று பேசலாமா… என சிலர் அவளருகில் செல்வதும், பின் பயந்து நகர்வதுமாக இருக்க, அவளோ அதனை கண்டுகொள்ளாமல் புத்தகத்தைத் திறந்து வைத்து அதில் மூழ்கினாள்.

சில நிமிடங்களில் வெளியில் இருந்து இன்னும் மாணவர்கள் உள்ளே வர அத்தனையும் கருத்தில் கொண்டாளில்லை. ஆனால், குமரனுடன் வகுப்பறைக்கு வந்த ஜிஷ்ணு தர்மன் அவளைக் கண்டதும் ஒரு கணம் மின்னல் வெட்ட, அவளை கண்ணில் நிரப்ப, அவளோ தீவிரமாக படித்துக்கொண்டிருந்தாள்.

“என்னடா இந்த புள்ள, இங்க வந்து உட்காந்துருக்கு” ஜிஷ்ணு குமரனின் காதைக் கடிக்க,

“அதை தான் நானும் நினைச்சேன் மாப்ள. இங்க வந்து என்ன ஒரண்டை இழுக்க போகுதோ. ஆனா இவ என்னடா நேரா நாலாவது வருஷ க்ளாஸ்ல வந்து உட்காந்துருக்கா. ஒருவேளை க்ளாஸ் மாறி வண்டாளோ?” என்று குமரன் சந்தேகத்தை வைக்க,

“இவள்…? கிளாஸ் மாறி? க்கும்… நம்மளை க்ளாஸ் மாத்தாம இருந்தா சரித்தான்.” என்றான் அவள் காவல் நிலையத்தில் பேசியதை நினைவுக் கூர்ந்து. அவன் கூற்றில் இருவருமே சிரித்து விட, “செஞ்சாலும் செய்வா போல தர்மா.” என குமரன் முணுமுணுக்க வசுந்தரா தான் புத்தகத்தை சட்டென மூடி வைத்தாள்.

அவளும், மாணவர்கள் அவளிடம் பேச வருவதை கவனித்தபடி தானே இருந்தாள்.

அதில் எழுந்து, முன்னாடி சென்று அவர்கள் முன் நின்றவள்,

“ஹலோ கைஸ்… நான் வசுந்தரா. இதே ஊர்ல தான் பிறந்தேன். எனக்கு இது சொந்த ஊரு தான். நீங்கல்லாம் எனக்கு ஒரு வகைல அண்ணா, மாமா, மச்சான் உறவா தான் இருப்பீங்க.

ம்ம்… சென்னைல படிச்சுட்டு இருந்தேன். சில தவிர்க்க முடியாத காரணத்துனால  அடுத்த ரெண்டு வருஷத்துக்கு நான் உங்க க்ளாஸ்ல தான் படிக்க போறேன். சோ, நீங்க எது கேட்குறதுனாலும் பின்னாடி நின்னு ஜாடையா பேசாம, என்கிட்ட நேரடியாவே கேட்கலாம். அண்ட் உங்க கூட படிக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோசம். ஹேவ் அ நைஸ் டே.” என சிறு நகையுடன் அவளை அறிமுகப்படுத்திக் கொண்டவளின் விழிகள் அப்போது தான் ஜிஷ்ணுவைக் கண்டு சிறு அதிர்வைக் கொடுத்தது.

அவள் பேசி முடித்ததுமே, கை தட்டி ஊக்குவித்த மாணவர்களில் சிலர், “நீயும் எங்க தங்கச்சி மாறி தான்மா. நீ மட்டும் தனியா படிக்கிறன்னு நினைக்காத எதுனாலும் எங்ககிட்ட சொல்லு. நான் பாத்துக்குறோம்” என்றிட, ஜிஷ்ணுவின் மீதிருந்த பார்வையை சற்று அகற்றி, “தேங்க்ஸ் ப்ரோ…” என்றவள், யோசியாமல் ஜிஷ்ணுவின் அருகில் வந்திருந்தாள்.

“ஹாய்… நீங்க லா ஸ்டூடண்ட் ஆ?” என வியப்பாகக் கேட்க, அவளின் அசைவுகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டிருந்தவன், “ஏன்… நாங்கல்லாம் லா படிக்க கூடாதா?” எனக் கேட்டான் விழி உயர்த்தி.

“சே சே இல்ல இல்ல. பட் உங்களை பார்த்தா ஸ்டூடண்ட் மாதிரி தெரியல. அதுவும் அன்னைக்கு வேஷ்டி சட்டை எல்லாம் போட்டுருந்தனால என்னால கெஸ் பண்ண முடியல” என விளக்கம் கொடுத்தவளிடம்,

“அட… அதுக்காக லீவ் நாள்ல கூட கருப்பு கோர்ட்டோடயா அலைய முடியும்? அப்பறம் எல்லாரும் என்ன லா பைத்தியம்ன்னு சொல்லிடுவாங்க” என்றான் குறும்பு மின்ன.

அவள் பக்கென நகைத்து, “ம்ம்… வாய்ப்பிருக்கு!” என்று அவனை வார, அவன் போலி முறைப்புடன் மென்னகை புரிந்தான்.

குமரன் தான், பே வென ஜிஷ்ணுவை பார்த்திருக்க, அவனைக் கண்ட வசுந்தரா, “நீங்க ஏன் இப்படி முழிக்கிறீங்க? எனிவேஸ் நான் வசுந்தரா… நீங்க…?” என இருவரையும் பார்க்க, “நான் குமரன்” என்றவன், “இவன் ஜிஷ்ணு தர்மன் என் தோஸ்து’ என்றான் இளித்தபடி.

மேலும் பேச்சு கொடுக்கும் முன், ஆசிரியர் வந்திருக்க, அவளும் இடத்தில் சென்று அமர்ந்தாள்.

மதிய வேளை நெருங்கி இருக்க, வசுந்தராவோ தலையை நிமிர்த்தாமல் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

ஜிஷ்ணு தான் வெளியில் செல்ல எத்தனித்து விட்டு, ஏதோ தோன்ற “சாப்பிட போகலையா?” எனக் கேட்க, அவளோ முகத்தை சுருக்கி,

“போகணும். இதுவரை நான் ஒரு க்ளாஸ் கூட மிஸ் பண்ணது இல்ல. இப்போ, மூணு வாரம் போய்டுச்சு. நிறைய நோட்ஸ் எடுக்கணும்…” என்றவளின் பாவனையில் என்ன கண்டானோ, 

“நாளைக்கேவா செமஸ்டர் வைக்க போறானுங்க. அப்படியே வச்சாலும், நான் உனக்கு பிட்டு குடுத்து பாஸ் ஆக்க வைக்கிறேன்.” என்றவனின் குரலில் நக்கல் தெளிக்க, அவனைக் கண்டு அழகு காட்டியவள், “நான் நேர்மையான வக்கீலாக்கும்…” என நாக்கை துருக்கினாள்.

ஜிஷ்ணுவோ நன்றாக நகைத்து, “சரி நேர்மையான வக்கீலே. இப்ப சாப்பிட வர்றியா. வயிறு கபகபன்னு கத்துது.” என்றான் உதட்டைப் பிதுக்கி.

அவன் செய்கையில் அவளுக்கும் புன்னகை பூக்க, புத்தகத்தை மூடி வைத்து விட்டு அவனுடன் சென்றாள்.

குமரன் கேன்டீனில் சாப்பாடை வாங்கி வைத்து காத்திருக்க, ஜிஷ்ணுவுடன் வசுந்தராவும் வருவதைக் கண்டு, ‘இந்த வாயாடியையும் சேர்த்து கூட்டிட்டு வர்றானே’ என நொந்தாலும், “இரு உனக்கும் போய் வாங்கிட்டு வரேன்.” என எழுந்தான்.

“நான் லன்ச் கொண்டு வந்துருக்கேன் குமரன்” என்றதில் அவன் அமர்ந்து விட, மூவரும் அமைதியாக உண்ணத் தொடங்கினர்.

அவ்வமைதியை கலைக்கும் விதமாக ஜிஷ்ணு, “ஆமா கேட்கணும்ன்னு நினைச்சேன். ராஜசேகர் உன் அப்பாவா?” எனக் கேட்க,

சாதத்தை வாயில் வைத்தபடி “ம்ம்… ஆமா. உனக்கு ஏன் இவ்ளோ பெரிய டவுட்டு. விட்டா டி.என். ஏ டெஸ்ட்லாம் எடுப்ப போல” என்றாள் நக்கலாக.

“எடுத்தாலும் எடுப்பான். அப்பறம் என்ன… நீ திடுதிப்புன்னு அவரோட பொண்ணுன்னு ஊர்ல குதிச்சு, எங்க காலேஜ்க்கே வந்தா… வக்கீல் மூளை சந்தேகப்படணும்ல” என்று குமரன் பெருமையாக கூறிக்கொள்ள,

“அது வக்கீல் தாண்டா சந்தேகப்படணும். க்ளாஸ் எடுக்கும் போது தூங்குற நீ சந்தேகப்பட கூடாது” என்று முறைத்தாள்.

அவனோ “தூங்குனாலும், எங்க கவனம் சிதறாது… தெரியும்ல” என அவன் சிலுப்ப,

“அப்படியா? அப்ப சொல்லு. இன்னைக்கு க்ளாஸ்ல என்ன நடந்துச்சு?” என்றாள் கன்னத்தில் கை வைத்து.

குமரன் தான் விழித்து, “ஆ… அது… கிளாசுக்கு வந்தோம். நீ ஏதோ பட்டி மன்றத்துக்கு வந்த ரேஞ்சுக்கு இண்ட்ரொடக்ஷன் குடுத்த. அப்பறம், லன்ச் வந்துடுச்சு வந்துட்டோம்” எனக் கூறி விட்டு அசடு வழிய, வசுந்தரா வாய் விட்டே சிரித்து, “அடப்பாவி! இடைல க்ளாஸ்ன்னு ஒன்னு நடந்துச்சுடா!” என்றதில்,

ஜிஷ்ணு, “க்ளாஸ் நடக்குற நேரம்லாம் ஐயாவுக்கு தூங்குற நேரம் வசு” என அவனும் நண்பனை வார, மேலும் சிரிப்பலை பரவியது.

இதற்கிடையில் இயல்பாகவே மூவரின் அழைப்பும் ஒருமைக்குத் தாவி இருந்ததை அவர்களும் உணரவே இல்லை.

ஜிஷ்ணுவோ அவன் கேள்வியில் கண்ணாக, “நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லல…” என அவள் புறம் திரும்ப,

“சாமி சத்தியமா அவரு என் அப்பா தான் ஜிஷ்ணு” என அவன் தலையில் அடித்து சத்தியம் செய்ததில் அவன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “சரி சரி நம்புறேன்.” என்றான் அவள் கையை எடுத்து விட்டு.

பின் அவனே, “அப்பறம் ஏன் மெட்ராஸ்ல படிச்ச. ஏன் இங்கலாம் ஸ்கூல் காலேஜ் இல்லையா?” என தெனாவெட்டாகவே கேட்டிட,

“நிம்மதியா சாப்பிட விடமாட்டியாடா நீ? உங்க கூட ஒரு வேளை சாப்ட வந்ததுக்கு, இவ்ளோ கேள்வி கேக்குறீங்க…” என்று இதழ் குவித்து அவள் முறைக்க,

ஜிஷ்ணு தான், “உன்ன என்ன பாசத்துல சாப்பிட கூப்பிட்டேன்னு நினைச்சியா? சாப்பிடும் போது கதை கேட்டா நிறைய சாப்பிடலாமாம். அதான் அப்படியே உன்ன பேச விட்டுட்டு சாப்பிடலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன்…” என சொல்லி முடிக்கும் போதே, தண்ணீர் பாட்டிலை அவன் மீது எறிந்திருந்தாள்.

“எரும மாடு… கலாய்க்கிறியா?” என அவனை அடிக்க,

“ஸ்ஸ்ஸ்… பொம்பள புள்ள மாதிரியாடி அடிக்கிற. இந்த வலி வலிக்குது” என்று அவள் கரம் பட்ட ஆர்ம்ஸை முகம் சுருக்கி தடவியவனை,

“நடிக்காதடா. நிமிச நேரத்துல ஒருத்தன் மண்டையை பொளந்த உனக்கு, நான் அடிச்சு வலிக்குதா?” என ஓரக்கண்ணில் முறைக்க, 

அவனோ நடிப்பை தொடர்ந்து, “ஆமா, செக்ஷ்ன் 352 படி, ஒருத்தரை அடிச்சாலோ ஹர்ட் பண்ணாலோ மூணு மாசம் கம்பி எண்ணனும். நீ என்னை அடிச்சு எனக்கு வலிக்குது சோ உன்மேல கம்பளைண்ட் குடுக்க போறேன்” என்றான் கண்சிமிட்டி.

“அடப்பாவி… போலீஸ்காரன்கிட்ட உனக்காக ஐபிசி செக்ஷன்லாம் சொல்லி காப்பாத்துனா, நீ என்னை அதே ஐபிசி செக்ஷன் சொல்லி உள்ள தள்ளுவியா?” என பெருமூச்சுக்கள் வாங்கியவள், “ப்பே…” என எழப் போக, மறுகணம் அவன் அவளின் கையைப் பிடித்திருந்தான்.

ஆணவனின் சொரசொரப்பான முரட்டுக் கரம், மென்மையைக் கொண்ட பெண்ணின் உள்ளங்கை

தீண்டி குளிர்ந்ததில், அவன் அவளையே தன்னை மறந்து ஊடுருவ, அவளோ பெண்கோழியாய் சிலுப்பிக் கொண்டாள். 

தீயோ தென்றலோ அவள்(ன்)

மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
93
+1
4
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்