Loading

தயங்கி நின்றிருந்த ஆரவும் வான்மதியும் இஷாந்தின் அழுகுரலிலேயே தன்னிலை பெற, வான்மதி அவனைத் தோளில் போட்டு இடுப்பைத் தேய்த்து விட, ஆரவ் அவளிடம் இருந்து மகனை வாங்கி, சமாதானம் செய்தான்.

வெளியில் வந்ததும், நண்பர்கள் மூவரும் ஆரவை சூழ்ந்து கொள்ள, மெல்ல மெல்ல இஷாந்தின் அழுகையும் குறைந்தது.

வான்மதி மென்குரலில் “நான் கிளம்புறேன் சார்.” என்றிட, கவின் பட்டென “தயவு செஞ்சு கிளம்பு” என்றான் எரிச்சலாக.

அதில் ஆரவின் தீப்பார்வைக்கு ஆளானதில், அவன் வாயை மூடிக்கொண்டான்.

பின், வான்மதி புறம் திரும்பிய ஆரவ், “ஹாஸ்டல் தான. வா டிராப் பண்றேன்” என்றவன், அவள் அலுவலகம் வரவில்லை என்று தான் எண்ணினான்.

அவளோ, “இல்ல சார். நான் ஆபிஸ்ல இருந்து தான் வந்தேன். பஸ்ல போய்க்குவேன் சார்.” என விழி தாழ்த்தியபடி கூற, அதற்கு அர்த்தப்பார்வை ஒன்றை வீசியவன், “ஓ! அப்போ வேலையை விடலையா?” என்றான் சற்றே கேலியாக.

வெடுக்கென நிமிர்ந்தவள், “நான் ஏன் சார் உங்களுக்கு பயந்துகிட்டு வேலையை விடணும். என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்.” என சுள்ளெனக் கூற, ஆரவ் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி மெச்சுதலாக நோக்கி விட்டு நகர, வான்மதி சில நொடிகள் அங்கேயே நின்றிருந்தாள்.

ஆரவின் பின் வந்த மூவருக்கும் தான் நடப்பது எதுவும் புரியவில்லை.

தன்விக், “உனக்கு பயந்து அவள் ஏன் வேலைக்கு வராம இருக்கணும்?” என குழப்பமாகக் கேட்க,

கவின், “அதான, அவளை திட்டுறது நானு. நீ என்னமோ உன் கேர்ள் ப்ரெண்ட் மாதிரி தான அவளை ட்ரீட் பண்ற. அப்பறம் ஏனாம் அவள் உனக்கு பயப்படணும்?” எனக் கேட்டான் ஆதங்கத்துடன்.

அதில் நின்ற ஆரவ், புருவம் சுருங்க கிண்டலுடன், “கேர்ள் ப்ரெண்ட்? இது கூட நல்லா தான் இருக்கு! குட் சாய்ஸ் மச்சி!” என்று தீவிரத்துடன் கவினின் தோளைத் தட்டி பாராட்டி விட்டு, காரில் ஏற, அவனுக்கோ முகம் தொங்கி விட்டது.

ஹேமா தான், “டேய்! விளங்காதவனே! சும்மா இருக்குறவனுக்கு நீ ஏன்டா ஐடியா குடுக்குற” என முறைக்க, தன்விக்கோ “எனக்கு என்னமோ இவன் போக்கே சரி இல்ல” என்று சந்தேகமாக கூறினான்.

மூவருக்குமே அப்படித்தான் இருந்தது. ஏன் வான்மதியிடம் மட்டும் இவன் இத்தனை அக்கறை காட்டுகிறான்? ஏன் அவளை மட்டுமே இந்த அளவு நம்புகிறான்? என்ற கேள்விக்கு விடை சுத்தமாக புரியவில்லை.

என்னதான், அவள் இஷாந்தை அக்கறையுடன் பார்த்துக்கொண்டாலும், வெறும் இது மட்டுமே காரணமாக இருக்கும் என கவினுக்கும் தோன்றவில்லை.

ஆனால், இதனை அவனிடம் கேட்டு, சும்மா இருக்கும் சங்கை நாமே ஏன் ஊதிட வேண்டும் என்று மௌனம் காத்தான்.

மருத்துவமனையில் இருந்து, அலுவலகம் வந்த வான்மதி, முயன்று அனைத்தையும் புறம் தள்ளி, கவனத்தை வேலையில் செலுத்தி சிறு வெற்றியும் கண்டாள்.

அதன் பிறகு, இஷாந்திற்கும் காய்ச்சல் மட்டுப்பட, அவனைத் தூக்க ஆர்வம் மிகுந்தாலும், சற்றே ஒதுக்கம் காட்டினாள்.

அன்று, அன்றைக்கான பணியின் விவரத்தை ஒப்படைக்க, ஆரவின் அறைக்கு வந்தவளின் உறுதியை நிலைகுலைய செய்வது போலவே, ஆரவின் மடியில் தவழ்ந்திருந்த இஷாந்த் அவளைக் கண்டதும் கையை தூக்கி “ஆ…ஆ…” வென அவளிடம் ஏதோ பேச, அவளுக்கு சங்கடமாகி விட்டது.

‘இவன் மட்டும், அப்படி கேட்காம இருந்திருந்தா இந்நேரம் தூக்கிருக்கலாம். ஆனா, இப்ப நம்ம தூக்குனா, இவன் ஓவரா அட்வான்டேஜ் எடுத்துப்பான்…’ என மனதினுள் முடிவெடுக்கும் போதே, ‘நான் உன் எண்ணத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டவன்’ என்பதை நிரூபிப்பவன் போல,

“ஏன் உனக்கு கை வலியா? அதான் உங்கிட்ட வரேன்னு சொல்றான்ல. தூக்குனா குறைஞ்சா போய்டுவ. இல்ல, நீ இவனை தூக்கிட்டா, தரதரன்னு இழுத்துட்டு போய் தாலி கட்டுவேன்னு நான் மிரட்டுனேனா?” என்று பல்லைக்கடித்து உறுமினான்.

அடுத்த நொடியே, இஷாந்தை கையில் அள்ளி இருந்தாள் வான்மதி. அவன் திடீரென கத்தியதில் பேந்த பேந்த விழித்தவளுக்கு, இதயம் இன்னும் சீராகவில்லை என்று உணர, “நான்… நான்… பேபிய கொஞ்ச நேரம் வெளிய வைச்சு வேடிக்கை காட்டிட்டு வரவா?” எனக் கேட்டாள் அவசரமாக.

சற்றே பொறுத்து, “ம்ம்” என்றவனின் வார்த்தையும் உறுமலாக வெளிவர, அவளோ நடுங்கிய கால்களுடன் வெளியில் ஓடினாள்.

சில நொடிகளுக்கு பிறகே ஆசுவாசமானவள், வெகுநாள் கழித்து, மீண்டும் இஷாந்தை தூக்கியதில் குதூகலமானாள். இருவரும் பல நிமிடங்கள் அவர்களின் மழலை உலகில் சஞ்சரித்தனர்.

பின், தன்னருகில் நிழலாடுவதை உணர்ந்த வான்மதி, யாரென திரும்ப அங்கு ஆரவ் தான் நின்றிருந்தான்.

“உனக்கு டைம் ஆச்சு. கிளம்பு!” என்றவன், இஷாந்தை வாங்கிக் கொள்ள, அவளிடம் இருந்து வரமாட்டேன் என்று இஷாந்த் தான் தர்ணா போராட்டம் செய்தான்.

“இஷு பேபி. அப்பாட்ட வாங்க, நம்ம கார்ல ரௌண்டு போலாம்…” என ஏதேதோ பேசிப் பார்த்தும், அவன் அவளிடமே தாவ, வான்மதி தான், “பரவாயில்ல சார். நான் இன்னும் கொஞ்ச நேரம் வைச்சுருந்துட்டு போறேன்.” என்றாள் தலையை ஆட்டி.

அவளிடம் அவன் ஒட்டிக்கொண்டதில், அவளுக்குள் அத்தனை பரவசம். அது அவளின் முகத்திலும் ஜொலிக்க, அதனைக் கூர்மையாகப் பார்த்தவன்,

“அப்போ அப்போ நீ வச்சுக்குறது ஓகே வான்மதி. ஆனா, ரொம்ப அவனை உங்கிட்ட ஒட்ட வைக்காத. அது அவனுக்கும் நல்லது இல்ல. உனக்கும் நல்லது இல்ல. எனக்கும் நல்லது இல்ல. நான் சொல்றது புரியும்ன்னு நினைக்கிறேன்.” என எச்சரித்தவன், சிணுங்கிய இஷாந்தையும் வம்படியாக தூக்கிக்கொண்டு செல்ல, அவளோ திகைத்து நின்றாள்.

ஒரு விதத்தில் அவன் கூறுவது சரியென்றே தோன்றியது. குழந்தை தானே. யாரிடமாவது ஒட்டிக்கொண்டால், அவர்கள் இல்லை என்றால் ஏங்கி விடுவான். அது அவனுக்கு தானே மனவருத்தம். அதே போல், குழந்தையை வைத்திருப்பவனுக்கும் கடினம். ஆனால், எனக்கு ஏன் நல்லது இல்லை? என்ற கேள்வி தோன்ற வெகுவாய் குழம்பிப் போனாள் பெண்ணவள்.

ஒருவேளை, இஷாந்த் என்னை கேட்டு அழுதால், என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்வாரோ என்ற பயம் வேறு நெஞ்சில் நெருஞ்சியாகக் குத்த, அவளுக்கோ மயக்கமே வரும்போல் இருந்தது.

அதைத் தான் நல்லது இல்லை என்று மிரட்டி விட்டு செல்கிறாரோ? என சரியாக, தவறாக கணித்தவள், அவன் கூறியதற்கான அர்த்தத்தை வெகு சீக்கிரமே புரிந்து கொள்ளும் நாளும் வந்தது.

தினமும் வேலை முடித்த பிறகான ஒரு மணி நேரம், வான்மதி தான் இஷாந்தை வைத்துக்கொள்வாள்.

பகல் முழுதும் மகனை உறங்க வைத்துவிடுபவனுக்கு மாலை நேரம் தான் அவனை சமாளிப்பது கடினமாக இருக்கும். இப்போது, வான்மதியால் சிறிது நேரம் கிடைக்க, முடிந்த அளவு வேலைகளை அந்த ஒரு மணி நேரத்தில் சுருக்கிக் கொள்வான்.

ஆனால், அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அதிகமாக அவளிடம் விட்டது இல்லை. முதலில் அவளிடம் இருந்து பிரிக்கையில் உதட்டைப் பிதுக்கி அழுக தயாராகும் குழந்தை, இப்போதெல்லாம் பழகி விட்டது.

தந்தை வந்தவுடன், வான்மதியின் கன்னத்தை பற்களற்ற வாயை வைத்து எச்சில் செய்து, அன்பைக் காட்டி விட்டு, அவனாகவே ஆரவிடம் சென்று விடுவான்.

வான்மதிக்கோ வியப்பாகவே இருக்கும். குழந்தைகள் தான், சிறு சிறு விஷயங்களிலும் எப்படி தன்னை சமன்படுத்திக்கொண்டு, நேரத்திற்கு தகுந்தாற் போல, தங்களை சரி படுத்திக்கொள்கின்றனர்!

சில நேரம், அவனைப் பிரிய மனமில்லாமல், “சார், உங்களுக்கு வேலை இருந்தா பாருங்களேன். நான் கொஞ்ச நேரம் வைச்சு இருக்கேன்” என வாய் விட்டே கேட்டு விடுவாள்.

அவனோ, போலியான முறைப்புடன், “சின்ன பையன் எப்படி புரிஞ்சுக்கிட்டு, அழகா என்கிட்ட வந்துடுறான். நீ என்னமோ ஆறு மாச குழந்தை மாதிரி பிஹேவ் பண்ற? உனக்கு அஞ்சு நிமிசத்துல பஸ் வந்துடும். கோ!” என்பான் வாசலைக் கண் காட்டி.

‘எனக்கு அஞ்சு நிமிசத்துல பஸ் வந்துடும்ன்னு இவருக்கு எப்படி தெரியும்?’ என அவள் தான் விழிக்க வேண்டியது வரும்.

சரியாக அவள் கிளம்பியதும், கவின் அவன் முன் வந்து நின்றான் முறைப்புடன். இஷாந்துடன் வான்மதி இருக்கும் நேரங்கள் எல்லாம் மூவருக்கும் நிமிரக் கூட நேரமில்லாமல், வேலை கொடுத்து அனுப்பி விடுவான் ஆரவ்.

“அடுத்து வேற என்ன வேலை இருக்கு பாஸ்?” என குத்தலாகக் கேட்க,

ஆரவோ அசராமல், இன்னும் நான்கு வேலையை அவன் தலையில் கட்டி விடுவான்.

அதற்கு பயந்தே, மாலை நேரம் யாரும் அவனிடம் நெருங்குவதே இல்லை. அதிலும் தன்விக், “ஏன்டா. திடீர்ன்னு என்னை இவ்ளோ வேலை பாக்க வைக்கிறீங்க?” என பாவமாக கதறினான்.

ஹேமா தான், “கவி… நீ வான்மதியை வேலை வாங்கி பழி வாங்குனதுனால, இவன் திரும்ப உன்னை பழி வாங்குறதா நினைச்சு எங்களையும் சாவடிக்கிறானோ” என்றாள் சந்தேகமாக.

பின்னால் வந்து, அவளின் தலையில் நறுக்கென கொட்டிய ஆரவ், “ஆபிஸ்ல வேலை பார்க்க உங்களுக்குலாம் வலிக்குதா?” என முறைக்க, கவின் தவிர இருவரும் அசடு வழிந்தனர்.

ஹேமா, “சரிடா. வீக் டேஸ் முழுக்க நாக்கு தள்ள வேலை வாங்கிட்ட. அட்லீஸ்ட், நாளைக்கு எங்கயாவது வெளியாவாவது கூட்டிட்டு போடா. அடுத்த வாரம் தீபாவளி வருது. அதுக்கு இன்னும் டிரஸ் கூட வாங்கல” என்றாள் அழுகாத குறையாக.

அதில் புன்னகைத்த ஆரவ், “நாளைக்கு ஷாப்பிங் போறோம் டாட்!” என்க,

கவின், “நான் எங்கயும் வரல. எனக்கு வேலை இருக்கு” என்றான் சிலுப்பிக்கொண்டு.

தன்விக் தான், வாய் விட்டே சிரித்து விட்டான். “நீ ஆபீஸ்லயே ஒரு வேலையும் பார்க்காம, உன் டீம் மெம்பர்ஸ் தலைல கட்டிடுவ. இதுல லீவ் அன்னைக்கு வேலை பாக்குறாராம். போடாங்.” என்று நக்கலடிக்க, கவின் அவனை அடிக்க, அங்கு மெல்லிய சிரிப்பலை பரவியது.

ஹேமா வீட்டின் கடைக்குட்டி. அவளின் தமக்கைக்கு இன்னும் அவளின் பெற்றோர் வரன் பார்த்துக்கொண்டிருக்க, அதனால் அவளுக்கும் திருமணம் தள்ளிப்போய் கொண்டிருந்தது. ‘சிங்கிள் லைஃப் தான் கெத்து’ என மனதை தேற்றிக்கொண்டு அவளும் அலுவலகம், நண்பர்கள் என சுற்றிக்கொண்டிருக்கிறாள்.

தன்விக்கின் பெற்றோர் கிராம வாசிகள். இவன் மட்டுமே பள்ளிக்கூடத்தில் இருந்து விடுதியில் தங்கி, சென்னையில் படித்ததால், அவ்வப்பொழுது ஊருக்கு சென்று வருவான்.

கவினின் தந்தை காவல் துறையில் பணியாற்றியவர்,. அவன் பள்ளி படிக்கும் காலத்தில், பணியில் இருக்கும் போதே உயிர் துறந்தவர். அன்னை மட்டுமே அதன் பிறகு அவனுக்கு உறவாகி போக, அவனின் குடும்பம் முழுமைக்கும் உற்ற உறவுகளாக நண்பர்களே மாறி விட்டனர்.

எந்தவொரு பண்டிகைக்கும் என்னதான் வீட்டினருடன் வெளியில் சென்று உடை எடுத்தாலும், ஆரவிடமும் வம்படியாக உடை வேண்டுமென அடம்பிடித்து அழைத்துச் செல்வர். ஒன்று, அவர்களாக செல்வதில் ஒரு பேரானந்தம். மற்றொன்று, தனக்கு யாருமில்லை என்ற எண்ணம் ஆரவிற்கு வந்து விடக் கூடாது என்ற பரிதவிப்பில்.

மறுநாள், நால்வரும் நகர்வலம் செல்ல இஷாந்துடன் புறப்பட்டனர்.

எப்போதும், குறிப்பிட்ட மாலில் தான், அவர்களின் பண்டிகை கால ஷாப்பிங் நடக்கும். அங்கேயே அன்று முழுவதும் கழிப்பர். ஆனால் இன்றோ ஆரவ் காரை வேறு திசையில் செலுத்த, கவின் “இந்த பக்கம் எங்கடா போற?” எனக் கேட்டான் குழப்பமாக.

“ஷாப்பிங் தான்!” என அவன் தோளைக் குலுக்க, தன்விக், “நம்ம எப்போவும் போற மால்க்கு போகலையா மச்சான்?” என்றான்.

“ஒரே மால்க்கு போய் போர் அடிக்குது. அதான் ஒரே சேஞ்சுக்கு…” என்று சாலையில் விழியை பதித்தபடி பதிலளித்தவன், நேராக நான்கு மாடி கட்டிடம் அளவு உயர்ந்து நின்ற அந்த துணிக்கடைக்கு சென்றான்.

‘ரெயின்போ’ எனப் பெயர் பொறிக்கட்ட கடையை மேலும் கீழும் அளந்த ஹேமா, “இதுவும் பெரிய கடை தான். ஆனா, மால்ன்னா பீசா பர்கர்ன்னு சாப்பிட்டுக்கிட்டே ஷாப்பிங் பண்ணலாம்” என்றாள் முகத்தை சுருக்கி.

“ஷாப்பிங் பண்ணி முடிச்சுட்டு பீசா பர்கர் சாப்பிடலாம் ஹேமா!” கவினின் கையில் இருந்த இஷாந்தை வாங்கியபடி, அழுத்தமாகக் கூறியவன், இப்போது உள்ளே சென்றே ஆக வேண்டும் என்ற தோரணையில் அழைக்க,

தன்விக், “ஏன் மச்சி. இங்க உனக்கு ஃப்ரீ ஆபர் எதுவும் இருக்கா என்ன?” என்றான் யோசனையாக.

அதில் நமுட்டு சிரிப்பு சிரித்தவன், “யாருக்கு தெரியும். இருக்கலாம்” என்று கண்சிமிட்டி விட்டு உள்ளே செல்ல, முழுதும் ஏசியால் நிரப்பட்டிருந்த குளுமை, அவன் மேனியிலும் சில்லென்று தீண்டியது.

முதலில் ஆர்வமின்றி உள்ளே நுழைந்தவர்கள், பின் கேலி கிண்டலுடன் துணிக்கடையை இரண்டாக்கினர்.

“லேடீஸ் செக்ஷனுக்கு தான் முதல்ல போகணும்” என ஹேமா சண்டையிட, “இங்க ஜென்ட்ஸ் தான் மெஜாரிட்டி அதனால முதல்ல ஜென்ட்ஸ் செக்ஷன் தான் போகணும்” என தன்விக்கும், கவினும் அடம்பிடிக்க, இது எப்போதும் நடப்பது தானென பொறுமையாக சண்டையை வேடிக்கைப் பார்த்தான் ஆரவ் முகிலன்.

ஆனாலும், அவனின் விழிகள் ரகசியமாக ஒரு வித அலைப்புறுதலில் திளைக்க, பின், அவனே மூவரையும் ஆண்கள் பிரிவிற்கு அழைத்துச் சென்றான்.

ஹேமா தான், “இவனுங்க எடுக்கும் போது மட்டும் நல்லா சுத்திட்டு, நான் எடுக்கும் போது கால் வலிக்குது, கை வலிக்குது சீக்கிரம் எடுன்னு சீன் போடுவானுங்க” என்று பொரிந்து தள்ளினாள். அதனை மூவரும் காதில் வாங்கவே இல்லையே.

ஆண்கள் பிரிவிலேயே குழந்தைகள் விளையாட்டுப் பொருளும் இருக்க, அதில் சிலவற்றை வாங்கி, இஷாந்திற்கு விளையாட்டிக் காட்டிக்கொண்டிருந்தவன், சிறிது நேரத்தில் போனை எடுத்து வான்மதிக்கு அழைத்தான்.

சில நொடிகள் கழித்து போன் எடுக்கப்பட, “சொல்லுங்க சார்! இஷாந்த் நல்லா இருக்கான்ல?” என பதற்றத்திலேயே ஆரம்பித்தவளிடம், “எங்க இருக்க?” எனக் கேட்டான்.

அதில் தடுமாறியவள், “இன்னைக்கு லீவ் தான சார். ஹாஸ்டல்ல தான்…” என்று இழுக்க, “ஓ! ஓகே ஓகே!” என்று வெகு நக்கல் பாணியில் ஒப்புக்கொண்டவன்,

பிறகு, “நான் இஷாந்த் கூட, இங்க சேத்துப்பேட் பக்கத்துல ரெயின்போன்னு ஒரு கடை இருக்குல்ல அங்க தான் வந்து இருக்கேன். உன் ஹாஸ்டல் கூட இங்க இருந்து பக்கம் தான?” என கேள்வியாக கேட்டு விட்டு, அவளிடம் பதில் எதிர்பாராமல் வைத்து விட, அவளுக்குள் அபாய மணி அடித்தது.

ஆனாலும், தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.

அதனை புன்சிரிப்புடன் ஏற்றவனிடம், “எந்த ஃப்ளோர்ல இருக்கீங்க” என அவள் அமைதியாகக் கேட்க,

“தர்ட் ஃப்ளோர்!” என்றான் அடக்கப்பட்ட நகையுடன்.

“நீங்களும் பேபியும் மட்டும் தான் வந்து இருக்கீங்களா? இல்ல… உங்க ப்ரெண்ட்ஸ்…” என்று இழுத்தவளிடம், “எல்லாரும் தான்… ஏன் அதுல ஏதாவது ப்ராப்ளமா?” என்றான் அவள் கவினை எண்ணி தயங்குவது தெரிந்து கொண்டே.

“இல்ல சார்… அது…! உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் வேறு வழியற்று.

“எனக்கு என்ன தெரியும்?” என அவனும் அவளை போட்டு வாங்க, அவளுக்கோ ஐயோ என்றிருந்தது.

“டூ மினிட்ஸ்ல வரேன் சார்.” என்றவள் போனை வைத்து விட்டு, பெருமூச்சுக்கள் வாங்கினாள்.

அதற்குள், ஹேமா “ஆரவ் இங்க வாயேன். இந்த கவி ராமராஜர் சட்டை கலர்ல ஒரு ஷர்ட் பார்த்துருக்கான்” என கத்தி அவனை அழைக்க, அவனும் அவர்களுடன் இணைந்தான்.

சொன்னது போன்றே இரு நிமிடத்தில், அவர்கள் அருகில் வந்த வான்மதிக்கு தயக்கமாகவே இருந்தது. மற்றவர்கள் பார்ப்பதற்கு முன், இஷாந்த் அவளைக் கண்டு கொண்டு, “பா… பா…” என்று ஆர்வமாக அவளிடம் தாவ, அவளும் விழிகள் மின்ன அவனை வாங்கிக்கொண்டு, “இஷு பேபி… இங்க என்ன பண்றீங்க? ட்ரெஸ் வாங்க வந்தீங்களா?” என முத்தமிட்டுக் கொஞ்சினாள்.

கவினுக்கோ சுறுசுறுவென இருந்தது, எதற்கு இந்த பெண் இங்கேயும் வருகிறாளென.

ஹேமா அவளைக் கண்டு வியப்பாக, “ஹாய் வான்மதி. என்ன இந்த பக்கம்?” எனக் கேட்க, அவளோ விழித்தபடி ஆரவைப் பார்த்தாள்.

அவன் பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து, “நியாயமா இந்த கேள்வியை இந்த மேடம் தான் நம்மகிட்ட கேட்கணும் ஹேமா!” என கேலியாகக் கூற, அவளோ புரியாமல் பார்த்தாள்.

“புரியலையா? இது இந்த மேடமோட சொந்த கடை தான்!” என்றதில், மூவருமே திகைத்தனர்.

வான்மதி நெளிந்தபடி, “நீங்க பர்ச்சேஸ் பண்ணுங்க சார். நான் பேபிய என் ரூம்ல வைச்சுருக்கேன்.” என்றவள், பதிலை எதிர்பாராமல் நகரப்போக, அவளின் உத்தரவின் பேரில் அந்நேரம் அவர்களுக்கு தேநீரும் கொண்டு வரப்பட, “கூட இருந்து பார்த்துக்கோங்க.” என மெதுவாய் உத்தரவும் இட்டு விட்டு, அவளறைக்கு சென்று விட்டாள், ஆரவின் துளைக்கும் பார்வை அவளின் முதுகை துளைப்பதை உணர்ந்தும்…

அறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்தவள், “எப்படி ஆரவ் சாருக்கு என்ன பத்தி தெரியும்? என் ரெசியூம்ல கூட நான் என் அப்பா பத்தி போடல. அப்பறம் எப்படி?” என தீவிர சிந்தனையில் மிதக்க, அதற்கு பதில் அத்தனை சீக்கிரம் அவளுக்கு கிடைக்கப்போவதில்லை என அவளும் அறியவில்லை.

தன்விக்கோ, “இவ்ளோ பெரிய கடை அவளோடதா? அப்பறம் ஏண்டா அவள் வேலைக்கு வர்றா?” என குழப்பமாகக் கேட்க, கவினுக்கும் அதே கேள்வி தான்.

இந்த துணிக்கடை பல ஊர்களில் பல வருடங்களாக பிரசித்தி பெற்றது என்பதை அவனும் அறிவான். அவளின் தந்தை கோடியில் புரள்பவர் தான். இருப்பினும் ‘காசு இருந்தா டைவர்ஸ் பண்ணுவாங்களா?’ என கடுப்பாக எண்ணினாலும், ஆரவிடமும் இஷாந்திடமும் அவனின் பணத்தை பார்த்து தான் நெருங்குகிறாள் என்ற அவனின் எண்ணம் இப்போது அடியோடு அழிந்தது.

அதனை உணர்த்தத் தான் ஆரவும் இங்கு அழைத்து வந்திருக்கிறானோ என்ற சந்தேகம் தோன்ற, நிமிர்ந்து அவனைப் பார்க்க, ஆரவ் அவனைத் தான் எகத்தாளமாகப் பார்த்திருந்தான்.

பிறகு, “நான் போய் இஷுவ வாங்கிட்டு வரேன். நீங்க பாருங்க.” என்று விட்டு, சேர்மன் அறையான வான்மதியின் அறைக்கு சென்றான்.

அங்கு சிந்தனையின் மறுவுருவமாக அமர்ந்திருந்த வான்மதியைக் கண்டு, “எக்ஸ்கியூஸ் மீ மேடம். மே ஐ கம் இன்?” என கையைக்கட்டிக்கொண்டு அமர்த்தலாகக் கேட்டதில், அவள் பதறினாள்.

“சார்… நீங்க போய் என்ன மேடம்ன்னுல்லாம்…” என்றவள், இருக்கையில் இருந்து எழப் போக, அதனை கை நீட்டி தடுத்தவன்,

“இது உன் பிளேஸ் வான்மதி. நீ பிசினெஸ் பண்ற இடம். இங்க உனக்கு, உன்னை தெரிஞ்சவங்க மரியாதை குடுத்தா தான், உனக்கு கீழ வேலை பாக்குற எல்லாரும் மரியாதை குடுப்பாங்க. நீ என்னை சார்ன்னு கூப்பிட்டா, உன் மேல இருக்குற மதிப்பு குறைஞ்சுடும். சோ, உன் இடத்துல நீ தான் கெத்தா இருக்கணும்.” என்று அழுத்தமாக அடிக்குரலில் கூறிக்கொண்டே அவளுக்கு எதிரில் அமர்ந்தவன்,

“இஷு பேபிய குடுக்குறீங்களா மேடம். அவனுக்கும் ட்ரெஸ் செலக்ட் பண்ணனும்.” என்றான் குறும்பு கொப்பளிக்க.

அவள் தான் சில நொடிகள் சிலையாகி அமர்ந்திருந்தாள். ஆரவ் வந்ததும், எப்போதும் போல் தன்னை தூக்க வந்திருக்கிறான் என புரிந்து கொண்ட மழலையும், வான்மதியின் கன்னத்தை எச்சில் படுத்தி, ஆரவிடம் தாவ, அதில் சுயம் பெற்றவளுக்கு ஏதேதோ நினைவில் தனியே இருக்க சற்றே பயமாக இருந்தது.

அதில், “நானே கொஞ்ச நேரத்துல வந்து பேபிய தரேன் ஆரவ் ப்ளீஸ்.” என தலைத் தாழ்த்தி கேட்டிட, அவள் குரலில் இருந்த நடுக்கத்தை பிரித்தறிந்தவன், “இன்னைக்கு உனக்கு வேலை எதுவும் இல்லையா?” எனக் கேட்டான்.

“இல்ல. இங்க எல்லா செக்ஷனுக்கும் ஆள் இருக்காங்க. நான் ஜஸ்ட் மேலோட்டமா பார்த்தா போதும். அதான் வீகெண்ட் மட்டும் வந்து பார்த்துக்குவேன். மத்தபடி இந்த பிசினெஸ்ல இன்டரஸ்ட் இல்ல. அதான் வேலைக்கு வரேன்…” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க,

“மேலோட்டமா பார்த்தா எப்படி பிசினெஸ் நடக்கும்? ஒழுங்கா இங்க வர்ற ஒரு நாளாவது எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோ.” என்றவன், இஷாந்தை தூக்கிச் சென்று விட, அவளோ ஏக்கத்துடன் அவன் சென்ற திசையையே வெறித்தாள்.

ஆனால், ஒரு சில நொடியில் அவன் மீண்டும் புயலென உள்ளே வந்து, அவளின் கலங்கிய முகம் கண்டு, இறுக்கத்துடன், “அரை மணி நேரம் தான் குடுத்துட்டு போவேன். அதுக்குள்ள, உன்னை நீயே சரி பண்ணிட்டு வேலையை பார்க்கணும். காட் இட்?” என கண்டிப்பாக உத்தரவிட்டு, இஷாந்தை அவள் மடியில் அமர வைத்து விட்டு வெளியில் செல்ல,

‘பேபியை பார்த்துக்கும் போது என் கஷ்டத்தை நானே சரி பண்ணிக்கிறேன்னு இவருக்கு எப்படி தெரியும்…?’ என்றே திகைப்பின் உச்சத்தில் திளைத்திருந்தாள் வான்மதி.

தேன் தூவும்…
மேகா!

அடுத்த பதிவு செவ்வாய் அன்று❤️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
70
+1
237
+1
8
+1
9

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment