இரு கைகளையும் கன்னத்தில் ஊன்றி பரிதாபமாக அமர்ந்திருந்தான் தஷ்வந்த். “அப்போ நாளைக்கு டேட்டிங் போக போறியா பாஸ்…” என நமுட்டு சிரிப்புடன் கேட்ட மாதவை முறைத்து வைத்தான்.
மந்த்ராவோ, “அவள் என் கையை உடைச்சது உன்னால தானா” என ஒரு மார்க்கமாக பார்க்க, “ப்ளீஸ் மந்த்ரா, அப்படி பாக்காத. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு” என்றான் வருந்தி.
சட்டென முகபாவத்தை மாற்றிக் கொண்டவள், “அவள் செஞ்ச தப்புக்கு நீ ஏன் கில்டியா ஃபீல் பண்ற தஷு… லீவ் இட். இப்ப என்ன பண்ண போற?” என்று கேட்க, “என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியல. ப்ச்…” எனத் தலையை பிடித்துக் கொண்டவனுக்கு, வேறு வழி எதுவும் புலப்படவில்லை.
“ஒழுங்கா ஒரு அறை அறைஞ்சுட்டு வந்துருந்தா இவ்ளோ பிரச்சனையே இல்ல தஷு.” மாதவ் கூறியதில், அதனை ஆமோதித்தவன், “ஆனா கூடவே, அவளோட அப்பாவோட முகம் தான கண்ணு முன்னாடி வந்துட்டு போகுது, மனுசன் போட்டு தள்ளிட்டா என்ன பாஸ் பண்றது?” என்றான் தஷ்வந்த்.
“அதான், அவளே உனக்கு ப்ராப்லம் வராதுன்னு சொன்னாள்ல. நானும் தூரத்துல நின்னு நீங்க பேசுனத கேட்டுட்டு தான் இருந்தேன். அவளே ஆப்ஷன் கொடுத்தும், இப்படி மிஸ் பண்ணிட்டியே பாஸ்.” என்ற மாதவ், “நான் ஒரு உண்மையை சொல்லட்டா?” என அவனை குறுகுறுவென பார்த்தான்.
வாடிப்போன முகத்தை நிமிர்த்தி என்னவென பார்த்த தஷ்வந்திடம், “இல்ல வேணாம். நான் கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன்.” என்றவனின் நக்கலை பெரியதாக எடுக்காமல், மஹாபத்ராவிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.
“ஹாய் மந்து!” பேருந்திற்காக காத்திருந்த மந்த்ராவின் முன் தனது யமஹா பைக்கை நிறுத்தினான் அமிஷ்.
அவனை நிமிர்ந்து முறைத்தவள், சாலையில் கவனத்தை செலுத்த, “வா நான் டிராப் பண்றேன்.” என்றதில், “ஐயோ, வேணாம் சீனியர். அப்பறம் உங்க ஃப்ரெண்டு அதுக்கு என் இன்னொரு கையை உடைக்கவா? ஹையோ… தெரியாம உங்க ஃப்ரெண்ட பத்தி பேசிட்டேன். நீங்க இன்னொரு கன்னத்தையும் பதம் பார்த்துறாதீங்க.” எனக் கடுப்படித்தாள்.
ஒரு கணம் தடுமாறியவன், சில நிமிட அமைதிக்குப் பிறகு, “சாரி மந்த்ரா. ரொம்ப சாரி. நான் உன்னை அடிச்சது தப்பு தான். வேணும்ன்னா நீயும் என்னை அடிச்சுக்கோ.” என்று அவளருகில் வந்து கன்னத்தை காட்ட, பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் தான், அவர்களை ஒரு மாதிரியாக பார்த்தனர்.
அவளோ விழித்து, “முதல்ல தள்ளி நில்லுங்க சீனியர். யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க.” என பின்னால் நகர்ந்திட, “இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு மந்து. நீ அடிக்கிறதுக்காக தான் கன்னத்தை காட்டுறேன். கிஸ் அடிக்கிறதுன்னா, வேற இடத்தை காட்டி இருப்பேனே…” எனக் குறும்புடன் கூறியவனைக் கண்டு அதிர்ந்தாள்.
அந்நேரம் பேருந்தும் வந்திருக்க, அதில் ஏற போனவளை வழி மறித்தவன், “நான் டிராப் பண்றேன்டி. உங்கிட்ட பேசணும்.” என்றிட, “நமக்குள்ள பேச எதுவும் இல்ல அமிஷ்.” என வெடுக்கென கூறியவள், பேருந்தில் ஏறி சென்று விட்டாள்.
‘ஓவர் திமிருடி உனக்கு. எப்படியும் திரும்ப இங்க தான வரணும் வா பாத்துக்குறேன்…’ என முணுமுணுத்தவன், அவளை எண்ணி ரசனைப் புன்னகை பூத்தான்.
“என்னடி செஞ்சு வச்சுருக்க?” ஆஷா வாயில் கை வைத்து கேட்க, “என்ன செஞ்சேன்?” எனத் தோளை குலுக்கினாள் மஹாபத்ரா.
“ஒரு சின்ன பையனை டேட்டிங் கூப்பிட்டு இருக்க மஹூ…” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டவளை முறைத்தவள்,
“ஆமா, இப்ப தான் அவன் எல். கே. ஜி ல சேர்ந்துருக்கான் பாரு… ஜஸ்ட் ஒன் இயர் தான… ம்ஹும் ஒன் இயர் கூட இல்ல, 9 மந்த்ஸ் தான் டிஃபரண்ட். அதுக்கு ஏன் எல்லாரும் ஓவரா ஷாக் ஆகுறீங்க.” என்றவளுக்கு இம்முறை எரிச்சல் மிகுந்தது.
“சரி சரி கூல். என்ன இருந்தாலும் இது லைஃப் மேட்டர் மஹூ. கொஞ்சம் நிதானமா…” என்றவளை பேச விடாமல், “உன் நிதானத்தை பத்தி தான் தெரியுமே ஆஷா.” என கேலியாக பார்த்ததில் ஆஷா முகம் சுருங்கினாள்.
“அமிட்ட ஒழுங்கா ப்ரோபோஸ் பண்ணிருக்கலாம். அதை விட்டுட்டு, டைம் வரும்போது சொல்றேன்னு சொல்லி, இப்போ அவன் இன்னொருத்தியை லவ் பண்ணிட்டு சுத்துறான். நீயும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க. இப்ப கூட ஒன்னும் குறைஞ்சு போகல. ஒன்னு நீ சொல்லு. இல்லன்னா நானே சொல்றேன்.” என அதட்டலாகக் கேட்டவளை தடுத்தாள்.
“வேணாம் மஹூ. அவனுக்கு என் மேல இன்டரெஸ்ட் இருந்திருந்தா அது தானாவே வந்துருக்கும். உனக்கு அமி பத்தி தெரியும் தான… இப்ப கூட நான் லவ் பண்றேன்னு சொன்னா, எனக்காக உடனே அதை அக்செப்ட் பண்ணிப்பான். ஆனா, கண்டிப்பா அதுல லவ் இருக்காது. சோ, இதை இப்படியே விட்டுடலாம்.” என வருத்தத்துடன் கூறியவளை அறையலாம் போல இருந்தது.
“இதை இப்படியே விட்டுட்டு என்ன பண்ண போற ஆஷா? வேற ஒருத்தனை லவ் பண்ணுவியா உன்னால முடியுமா?” எனக் கேட்ட மஹாவைக் கண்டு கண்கள் கலங்கியது.
“லூசாடி நீ. நீயும் உன் லவ்வும்.” என திட்டும் போதே, அமிஷ் வந்து விட, அத்துடன் இரு பெண்களும் அமைதி காத்தனர்.
அவன் வரும்போதே மஹாவை முறைத்தபடி வர, அதனை அவள் கண்டுகொள்ளாமல், “நான் சொன்னது என்ன ஆச்சு அமி?” எனக் காரியத்தில் குறியாக நின்றாள்.
“மஹூ… ஒரு தடவை நல்லா யோசிச்சுக்கோ. கண்டிப்பா இந்த ரிலேஷன்ஷிப் உனக்கு வேணுமா?” அமிஷ் காட்டமாக கேட்க,
“யோசிச்சு முடிச்சாச்சு அமி. நான் கேட்டதுக்கு பதில்.” என்றாள் அழுத்தத்துடன்.
“இருந்தாலும் உனக்கு இவ்ளோ அழுத்தம் இருக்க வேணாம். அப்படி என்ன தான் உனக்கு பிடிவாதம்…”
“எனக்கு பிடிச்சவனை நான் எந்த விதத்துலயும் மிஸ் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன். இதுல என்ன தப்பு இருக்கு?” என்று அசட்டையாக கேட்டவளிடம், வேறேதும் பேச தான் இயலவில்லை.
“நீ கேட்ட மாதிரி அபார்ட்மெண்ட் பார்த்துட்டேன். எப்ப வேணாலும் போய் கீ வாங்கிக்கலாம்.” என முணுமுணுத்ததில், “தட்ஸ் குட்” என்று புன்னகைத்தாள்.
சரியாக மணி ஐந்தை தொட்டதும், தஷ்வந்திற்கு எங்காவது ஓடிவிடலாமா என்றிருந்தது.
இருந்தும், அவள் கூறிய இடத்தில் வந்து நின்று விட்டவன், யோசனையில் மிதக்க, அவளும் அதே நேரம் அவன் முன் காரை நிறுத்தினாள்.
அதில் ஏறாமல், “சீனியர்… நான்…” என ஏதோ பேச, “எதுவா இருந்தாலும் உள்ள வந்து பேசு.” என்றாள் கட்டளையாக.
பெருமூச்சு விட்டவன், வேறு வழியற்று காரினுள் ஏறி, “எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கல சீனியர்” எனக் கோபமாக கூற வந்து, அவள் பார்வையில் கெஞ்சலாக முடித்து விட்டான்.
“எனக்கும் தான் பிடிக்கல அமுல் பேபி, நீ இப்படி வார்த்தைக்கு வார்த்தை சீனியர்ன்னு கூப்புடுறது.” எனப் புன்னகைக்க துடித்த இதழ்களை அடக்கியபடி கூற, அவன் மௌனமாகி விட்டான்.
அவளோ “சீட் பெல்ட் போடு…” என்று விட்டு, வெகு நேரம் கடந்தும் காரை நிறுத்தாமல் சென்று கொண்டே இருக்க, “சீனியர் ஹாஸ்டலுக்கு எட்டு மணிக்கு போகணும். எங்க போயிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டதில், “தெரியல” என்றாள் அசட்டையாக.
அதில் திகைத்தவன், “தெரியலையா? முதல்ல என்னை ஹாஸ்டல்ல விடுங்க சீனியர். ரொம்ப லேட் ஆகிடும்.” என பதறியதில்,
இன்னும் கொஞ்சம் வேகத்தை அதிகப்படுத்தியவள், “ஐ டோன்ட் கேர்” என்றாள்.
“எதே, சீனியர் ப்ளீஸ்…” என அவன் ஒவ்வொரு முறை ‘சீனியர்’ என்று அழைக்கும் போதும் வேகத்தை அதிகப்படுத்த, அவனுக்கோ விழி பிதுங்கி விட்டது.
“இவ்ளோ வேகமா போகாதீங்க சீனியர்… சொன்னா கேளுங்க.” என்றதில், திரும்பி முறைத்தவள், கோபத்துடன் இன்னும் வேகமாக ஓட்ட, அவனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
சில நொடிகளில், அவளின் பிடிவாதத்தை உணர்ந்தவன், இதற்கு மேல் வேகமாக சென்றால் நிச்சயம் உயிருடன் திரும்ப போவதில்லை என்றுணர்ந்து, “பத்ரா மெதுவா போ ப்ளீஸ்.” என்றான் அமைதியாக.
சட்டென வேகத்தை குறைத்தவள், “தட்ஸ் சௌண்ட்ஸ் குட் அமுல் பேபி.” என்று கண் சிமிட்டினாள்.
அவனோ, ‘இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ’ என்று குழம்பிட, நேராக காரை ஒரு ரெஸ்டாரன்டினுள் விட்டவள், அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
சோஃபாவில் அவனருகில் அவளும் அமர்ந்து, “உனக்கு என்ன பிடிக்கும் தஷ்வா?” எனக் கேட்டிட,
“எனக்கு பிடிச்சு தான் இங்க எல்லாம் நடக்குதா..”. என முணுமுணுத்தவன், “எனக்கு பசிக்கல” என்றான் உர்ரென.
“உனக்கு பசிக்குதா இல்லையான்னு கேட்கல. என்ன பிடிக்கும்ன்னு தான் கேட்டேன்.” அழுத்தம் திருத்தமாக அவள் கேட்டதில், “பழைய கஞ்சியும், நேத்து வச்சு, மிஞ்சி போன மீன் குழம்பும் சுண்ட வச்சு வேணும். இங்க கிடைக்குமா?” என பாவம் போல கேட்டு வைத்தான்.
அதனை ஒரு நொடி ரசித்தவள், பேரரை அழைத்து, தெலுங்கில் அவளே ஆர்டர் செய்தாள்.
மொழி புரியாத காரணத்தால், கண்ணாடி தடுப்பின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தஷ்வந்த், சில நிமிடங்களில் செர்வண்ட் கொண்டு வந்து வைத்த உணவைக் கண்டு திகைத்தான்.
அவன் கேட்ட, பழைய கஞ்சியும், சுண்ட வைத்த மீன் குழம்பும் வாசம் ஆளை தூக்கியது. அவனுக்கு மட்டுமல்லாது, அவளுக்கும் அதையே தான் வரவழைத்திருந்தாள்.
உணவையும் அவளையும் மாறி மாறி பார்த்தவனைக் கண்டு, “எனக்கும் இந்த காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும் அமுல் பேபி. பட் ரொம்ப வருஷமா இதை மறந்தே போய்ட்டேன். வா சாப்பிடலாம்.” என உண்ண ஆயத்தமாக அவனுக்கு தான் தலை சுற்றியது.
‘இவளென்ன கோபப்பட்டாலும் பாசம் காட்டினாலும் எக்ஸ்ட்ரீம் லெவெல்க்கு போறா’ என்றே தோன்றியது. அதிலும் அவன் கேட்டதற்காக தான் இதனை வரவழைத்திருக்கிறாள் என அறிந்ததும் அவனுக்கு தான் சங்கட நிலை.
இன்னும் கூட அவனவளின் ‘எக்ஸ்ட்ரீம் லெவல்’ எதுவென்று கை மீறி சென்ற பிறகே புரிந்து கொள்ளப் போவது தெரியாமல், அவளை தடுத்தான்.
“நான் ஏதோ டென்ஷன்ல தான் இதை கேட்டேன் பத்ரா. இதை சாப்பிட வேணாம்.” என்றான் தயக்கமாக.
அவளோ புரியாமல், “ஏன் தஷ்வா? உனக்கு இது பிடிச்சு போய் தான் டென்ஷன்ல கூட இதை சொல்லிருக்க.” என்று சரியாக கேட்டவளைக் கண்டு வியக்காமல் இருக்க இயலவில்லை.
“ஆனாலும், நீ இதை சாப்பிடாத. இந்த காம்பினேஷன் வீட்ல செஞ்சா பரவாயில்ல. ஆனா, ஹோட்டல்ல எந்த அளவு சுத்தமா இருக்கும்ன்னு தெரியல. ஹெல்த் இஸ்ஸியூ ஆகிட போகுது பத்ரா.” என்றவன், அவளது நலனில் அக்கறை கொண்டு கூறினான்.
அவளுக்கு ஒன்றும் ஒரு கூடை ஐஸை தலையில் தூக்கி வைத்தது போல எல்லாம் இல்லை. அவனது இயல்பே அதுவென்று அவளுக்கு நன்றாக தெரியும். அதனாலேயே, “இது நம்ம ரெஸ்டாரண்ட் தான் அமுல் பேபி. சாப்பாடு எல்லாம் பெஸ்ட் குவாலிட்டி தான். அதுல நோ காம்ப்ரமைஸ். உனக்கு வேணும்ன்னா வேற ஆர்டர் பண்ணிக்கோ. நான் இதை தான் சாப்பிட போறேன்.” என்று கண்ணடித்தவளைக் கண்டு மலைத்தவன்,
தானும் அதனையே உண்ண ஆரம்பித்தான்.
உண்மையாகவே அதன் சுவை தனி தான். வீட்டில் இருந்த வர, மீன் குழம்பு வைத்து விட்டால், அடுத்த நாள் காலையில் பழைய கஞ்சி அவனுக்கு கண்டிப்பாக வேண்டும். முந்தைய நாள் கூட, மஞ்சு ‘அவனை விட்டு விட்டு, மீன் குழம்பு சாப்பிட்டேன்’ என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.
வீட்டை ‘மிஸ்’ செய்யும் தாக்கமோ என்னவோ, இப்போது அவனை மீறி கூறி விட்டவன், தயக்கமும் குழப்பமும் போட்டி போட உண்டு முடித்தான்.
“லேட் ஆகிடுச்சு சீனியர்…” என்றவன், அவளது முறைப்பில், “அது… லேட் ஆகிடுச்சு பத்ரா. கிளம்பலாம். வார்டன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்” என்றதில், மறுக்காமல் எழுந்தவள், “என் பாய் ஃப்ரெண்ட்ன்னு சொல்லு. உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாரு.” என்றதில், அவன் அமைதி காத்தான்.
“சரி விடு. அந்த வார்டன் இருந்தா தான, ஸ்ட்ரிக்ட் – ஆ இருப்பாரு…” என்றவளின் உட்பொருளை அறிந்து திகைத்தவன், “அப்டிலாம் எதுவும் பண்ணிடாத பத்ரா.” என்றான் அவசரமாக.
“அப்போ என் பாய் ஃபிரெண்டுன்னு சொல்லுவ தான…” என அர்த்தப்பார்வை வீச, “ம்ம்” என தலையாட்டினான்.
மென்முறுவலுடன் அவனை விடுதி வாசலில் விட்டவள், “தஷ்வா… இனிமே நீ இங்க இருக்க வேணாம்.” என்றிட, அதில் “ஏன் பத்ரா?” என்று அரண்டான்.
“சில் அமுலு. நான் வேற அபார்ட்மெண்ட் பார்த்துருக்கேன். அங்க தான் நீ தங்க போற.” என்றவளின் கூற்றை உள்வாங்க சில நொடிகள் பிடித்தது.
“எனக்கு எதுக்கு அபார்ட்மெண்ட்?” அவன் புரியாமல் விழிக்க, பின்ன, “ஹாஸ்டல்ல லிவ் இன்ல இருக்க முடியுமா அமுல் பேபி…” என்று குறும்பாக சிரித்தவள், “உன்னை எப்ப தோணுதோ அப்போ பார்க்கணும்ன்னா, நீ அங்க இருக்குறது தான் பெட்டர். சோ நாளைக்கே மூட்ட முடிச்சை கட்டிடு.” என்று உத்தரவாக கூறினாள்.
“நான் எங்கயும் வரல பத்ரா. ஹாஸ்டல் தான் இருப்பேன். என்னை ஃபோர்ஸ் பண்ணாத ப்ளீஸ்” என அவன் முடிவாக கூற, ஒரு கணம் அவனை பார்த்தவள், “ஓகே.” என்று தோளை குலுக்கி விட்டு கிளம்பி விட்டாள்.
அவளது ‘ஓகே’ வில் அவனுக்கு அத்தனை நம்பிக்கை இல்லை தான். சிறிது நேரம் முன்பு தான், சாலையில் மரண பயத்தை காட்டினாளே. இருப்பினும், ‘இந்த விஷயத்துல நான் அவள் சொல்றதை கேட்க போறதே இல்லை’ என்ற பிடிவாதத்துடன் அன்றிரவை கடந்தவனை, மறுநாளே அவளது செயல் மாற வைத்தது.
“கேவலம்… ஃபர்ஸ்ட் டைம் டேட்டிங் போய் பழைய கஞ்சியாடா சாப்பிட்டு வந்த…” அவனை கேவலமாக பார்த்த மாதவை முறைத்தவன், “அது ஒன்னும் டேட்டிங்லாம் இல்ல பாஸ். நான் அப்படி நினைச்சலாம் போகல.” என்றான் வீராப்பாக.
“அட போடா… நானா இருந்தா, இதான் சாக்குன்னு மெனு கார்ட்ல பாதியை சாப்பிட்டு வந்துருப்பேன். ஒன்றரை வருசமா, இந்த ஹாஸ்டல் சாப்பாட சாப்பிட்டு நாக்கு செத்து போயிருக்கு. நீ என்னனா, இப்படி சொதப்பிட்டு வந்துருக்க.” என்று தலையில் அடித்துக் கொண்டவனை, கொலைவெறியுடன் பார்த்தான் தஷ்வந்த்.
“ம்ம்க்கும்… என்னை மட்டும் நல்லா முறை. அவளை பார்த்ததும் ஆஃப் ஆகிடு.” என கேலி செய்தவனை, “போதும்டா. நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும் நீ போய் குளி.” என்று வெளியில் அனுப்பி விட்டான்.
அப்போது தான் கல்லூரி செல்லும் பொருட்டு, குளித்து விட்டு துண்டுடன் வந்திருந்தவன், மார்பில் மற்றொரு துவாலையை போர்த்திக் கொண்டு, அவன் வெளியில் செல்வதற்காக காத்திருந்தான்.
“என் முன்னாடி ட்ரெஸ் மாத்துனா, அவன் அழகுல மயங்கி பாஞ்சுடுவேனாக்கும். இவனோட பெரிய ரோதனை…” எனப் புலம்பிக் கொண்டே குளியலறை நோக்கி சென்றான் மாதவ்.
சிறிது நேரம் கழித்து, அறைக் கதவு தட்டப்பட்டதில், உடையை எடுத்து வைத்துக் கொண்டிருந்த தஷ்வந்த், ‘இவன் என்ன அதுக்குள்ள குளிச்சுட்டானா?’ எனப் புரியாமல், “டேய்… இருடா இன்னும் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணல…” என திட்டியபடி கதவை திறந்து சிலையாகி விட்டான்.
சிவப்பு நிற குர்தாவில், காற்றிலாடும் கூந்தலை ஒரு கையால் பிடித்தபடி அறை வாசலில் நின்றிருந்த மஹாபத்ராவை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனை அந்த கோலத்தில் அவளும் எதிர்பார்க்கவில்லை.
மார்பில் இருந்த துவாலையை வேறு, சட்டையை மாற்றும் பொருட்டு எடுத்திருந்தான். பேந்த பேந்த விழித்தவன், “ஐயோ…” என தன்னை மூடிக் கொண்டு அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நிற்க, முதலில் சற்றே நெளிந்தவள், அங்கிருந்து கிளம்ப தான் எண்ணினாள்.
ஆனால், அவனது செய்கையில், சிரிப்பு முட்டிட, சத்தமாக சிரித்து விட்டவள், “ஹே… அமுல் பேபி… இன்னைக்கு உன்னோட தரிசனம் இப்படி கிடைக்கும்ன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. சரி தள்ளு.” என்று விறுவிறுவென உள்ளே வந்து விட்டாள்.
அவனுக்கோ கூச்சம் ஒரு பக்கம் பிடுங்கி தின்ன, துவாலையை எடுத்து தன்னை மூடிக் கொண்டவன், ‘நல்லவேளை இடுப்புல இருக்குற துண்டை கழட்டல. ஆண்டவா… என்னை காப்பாத்து.’ என மானசீகமாக வேண்டிக்கொண்டவனின் வேண்டுதல் அப்போதைக்கு ரிஜெக்ட் செய்யப் பட்டது.
அவனை மேலும் கீழும் கண்ணெடுக்காமல் பார்த்து வைத்தவள், “அழகன்டா நீ.” என்று கொஞ்சிட, “நீ எதுக்கு இங்க வந்த பத்ரா. முதல்ல வெளிய போ.” என்றவன், பதறினான்.
“நீ தான அபார்ட்மெண்ட்க்கு வரமுடியாதுன்னு சொல்லிட்ட. அதான், நான் இங்க வந்துட்டேன். இது கூட நல்லா தான் இருக்கு.” என்று விஷமமாக கூறியதில், மேலும் நெளிந்தான்.
மூன்… அது ஸ்கைக்கு மேல…
பலானது போட்டுக்கு மேல
ஒய்யாஹோ ஹே ஒய்யாஹோ
என ‘நிலா அது வானத்து மேல’ பாடலை தன் மொழி திறமையால் கொலை செய்தபடி இடுப்பில் துண்டோடு அங்கு வந்த மாதவ், மஹாவை கண்டு கத்தியே விட்டான்.
அவனைப் பார்த்ததும் தலையில் அடித்து விழிகளை திருப்பிக் கொண்டவள், “ச்சை. எவனுமே பாத்ரூம்ல ட்ரெஸ் மாத்திட்டு வரமாட்டீங்களாடா.” என எரிச்சலுடன் தஷ்வந்தை பார்த்து பேச, “நீ இங்க வருவான்னு நாங்க கனவா கண்டோம். இப்படி ஜென்ட்ஸ் ஹாஸ்டலுக்குள்ள சொல்லாம கொள்ளாம வந்துருக்க. முதல்ல கிளம்பு பத்ரா ப்ளீஸ்.” என்றான் கடுப்பாக.
அவளோ அறையை சுற்றி பார்த்து விட்டு, “என்னடா ஒரு ஹீரோயின் ஸ்டிக்கர் கூட இல்ல. ரூமை என்னமோ மியூசியம் மாதிரி வச்சு இருக்க.” என்றிட, கதவுக்கு பின்னே மறைந்திருந்த மாதவ், “நல்லா கேளுக்கா. அவனும் சைட் அடிக்க மாட்டேங்குறான் என்னையும் அடிக்க விட மாட்டேங்குறான்.” என்று புகார் கொடுத்தான்.
“அவ்ளோ நல்லவனா நீ.” என விழியுயர்த்தி கேட்டவளை, “அதெல்லாம் அப்பறம் டிஸ்கஸ் பண்ணலாம். வெளிய போ பத்ரா.” என்றதில் அதனை கண்டுகொள்ளாமல், சாவகாசமாக சாய்ந்து அமர்ந்தவள்,
“இதென்னடா பெட் கல்லு மாதிரி இருக்கு. இதுல எப்படி தூங்குற?” என படுக்கையை சரி பார்த்தவள், “இதுல படுக்குறதுக்கு தரையிலேயே படுக்கலாம். ஹாஸ்டல்ல ஒரு பெட் கூட ஒழுங்கா தரமாட்டாங்களா.” எனக் கடிந்தவள், இதனை தந்தையிடம் பேசியே ஆக வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.
“ஹாஸ்டல்ல மெத்தையே தரமாட்டாங்ககா. இது நாங்களா வாங்குனது தான்.” என்று மாதவ் விளக்கம் கூற, அதனைக் கேட்டவள், “அட கஞ்சம். நீ தான வாங்குன… நல்ல பெட்டா வாங்க வேண்டியது தான?” என்று முறைத்தாள்.
அவனோ, “நான் ஒன்னும் உன்ன மாதிரி மில்லினியர்லாம் இல்ல பத்ரா. இப்ப எனக்கு படிப்பு மட்டும் தான் சொத்து. அதையும் நீ கெடுத்துடுவ போல. உன்னால எனக்கு தூக்கமே போச்சு. இதுல எந்த பெட்ல படுத்தா தான் என்ன…” ஏனோ பொறுமை இழந்து கத்த ஆசை தான். ஆனால், அமைதியுடன் கூறி விட்டு, முகத்தில் டஜன் கணக்கில் எரிச்சலை தாங்கி நின்றவனை ஆராய்ந்தவள்,
“உன்னை தூங்க விடாம நான் எப்படா டிஸ்டர்ப் பண்ணுனேன். என்னை பத்தியே நினைச்சுட்டு இருக்கியா என்ன…” என குறும்பு மின்ன கேட்டவளை ‘பே’ வென பார்த்தான்.
நமுட்டு நகையுடன், “சரி நீ கிளம்பு. நான் நாளைக்கு வரேன். பை” என்று விடைபெற முயல, “என்னது நாளைக்குமா?” என்று இரு ஆடவர்களும் அதிர்ந்தனர்.
“ம்ம்… நீ அபார்ட்மெண்ட்க்கு வர ஒத்துக்குற வரை, நான் இங்க வந்துட்டே தான் இருப்பேன்.” என அழுத்தம் பொங்க கூறியவள், காற்றிலேயே முத்தத்தை பறக்க விட, அவனுக்கோ ஐயோ என்றிருந்தது.
எப்படியும் அவள் பிடிவாதத்தை விட மாட்டாள் என்பது அவனறிந்த ஒன்றே. அதனால், கண்ணை மூடி நிதானித்தவன், “சரி நான் வரேன்” என்றதில், அவள் விழிகள் மின்னியது.
“ஆனா சில கண்டிஷன்ஸ் இருக்கு. அதுக்கு ஓகேன்னா நானும் நீ சொல்றதை கேக்குறேன்” என்று நிறுத்த, “சொல்லு அமுல் பேபி. எல்லாத்தையும் பண்ணிடலாம்” என்று குஷியானவளின் மனதை அவளே உணராமல் போக, ஆடவனுக்கு மட்டும் புரிந்திடுமா என்ன. இவளென்ன மனநிலையில் இருக்கிறாள் என குழம்பியவன் பின் அதை ஒதுக்கி விட்டு,
“நான் வரணும்ன்னா, என் கூட மாதவும் இருப்பான்” என்று அவனை கோர்த்து விட, அவனோ “டேய்… உங்க பிரச்சனைல என்னை ஏண்டா இழுக்குறீங்க.” என விழி பிதுங்கிட, தஷ்வந்தோ சிரிப்பை அடக்கிக் கொண்டு, “அதெல்லாம் எனக்கு தெரியாது… அவனும் என்கூட தான் இருப்பான்” என்றான் நிலையாக.
முகத்தை சுளித்த மஹா தான், “உன் டேஸ்ட் ஏண்டா இவ்ளோ மோசமா இருக்கு. சரி ஓகே. இவனையும் கூட்டிட்டு வந்து தொலை.” என்றதில் நிம்மதியானவன், “அடுத்ததா…” என்று இழுக்க, அவள் என்னவென்று பார்த்தாள்.
குரலை சரி செய்து கொண்டு, “இந்த பாய் ஃப்ரெண்ட், ஃகேர்ள் ப்ரெண்ட், லிவ் இன் இதெல்லாம் வேணாம் பத்ரா. நம்ம பிரெண்ட்ஸா இருக்கலாம்.” என்னும் போதே, அவள் முகம் அதிருப்தியை வெளிப்படுத்த, “வெய்ட் வெய்ட் நான் முழுசா சொல்லி முடிச்சுடுறேன்.” என்றான் தஷ்வந்த்.
“பிக் அப் டிராப், டின்னர், இதுக்குலாம் வெறும் ஃப்ரெண்ட்ஸா இருந்தா கூட போதும் பத்ரா. ஃப்ரெண்ட்ஸா இருந்தா கூட எப்ப தோணுதோ அப்போ பாத்துக்கலாம்.” என்றவன், அவள் வழியிலேயே சென்று அவளை மடக்க எத்தனித்தான்.
“ஓஹோ… அப்போ ஃப்ரெண்ட்ஸ்க்கு கிஸ் எல்லாம் குடுத்துக்குவியா?” என்று கண்ணை சுருக்கி கேட்டிட, அவனோ அதிர்ந்து பின், “இப்போ அதை பத்தி எல்லாம் பேச வேணாம். இன்னும் எவ்ளோவோ டைம் இருக்குல்ல. அப்போ பாத்துக்கலாம்.” என தற்போதைக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றான்.
அவனது தவிப்பில், இளநகை புரிந்தவள், “எப்படியோ என் கூட இருப்ப அப்டி தான?” எனக் கேட்டவளை, ஏலியன் போல பார்த்து வைத்தவன், தலையை உருட்டினான்.
“தட்ஸ் குட். இன்னைக்கு ஈவினிங் பேக் பண்ணிட்டு ரெடியா இரு. ஐ ஆம் வெயிட்டிங் ஃபார் யூ.” என்று அவன் கன்னம் கிள்ளி முத்தமிட்டு கொண்டவள், அதே நேரம் விழிகளில் அனல் பறக்க, “எனக்கு அல்வா குடுக்கணும்ன்னு மட்டும் நினைச்சுறாத தஷ்வந்த். சாவடிச்சுடுவேன்.” என்று மிரட்டலையும் விட்டு சென்றாள்.
அவள் இலகுவாக பழகியதாலோ என்னவோ, இப்போது அவளின் மிரட்டலைக் கண்டு அவனுக்கு பயமும் தோன்றவில்லை.
‘இவ ஏன் இவ்ளோ அடமெண்டா இருக்கா’ என்ற சலிப்பே தோன்ற, அருகில் மாதவ் தான், அவனை வெறியாக முறைத்துக் கொண்டிருந்தான்.
காயம் ஆறும்!
மேகா!