1,974 views

இந்த குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, கார்த்தி எனக்கு போன் செய்தான் என்ற கயலின் வாசகத்தில் அதிர்ந்த ஜீவா,

“வாட்… அவன் உனக்கு போன் பண்ணுனானா? என்ன பேசுனான்” என்று கேட்க,

கயல், “சாரி கேட்டான்… இனிமே இப்படி பேசமாட்டேன்னு சொன்னான்.” என்று சொல்ல,

ஜீவா “நீ என்ன சொன்ன” என்று கேட்டதும், அவள் கண்ணீருடன் “நான் பேசவே இல்லை… அவனா ரெண்டு நிமிஷம் பேசிகிட்டு இருந்தான். ஆனால் திடீர்னு லைன் கட் ஆகிடுச்சு… அதுக்கு அப்பறம் அவன் கால் பண்ணுவான்னு நினைச்சேன் ஆனால் அவன் பண்ணவே இல்லை. கடைசியா ஒரு வார்த்தையாவது நான் பேசியிருக்கலாம்” என்று அழுக, ஜீவா விறுவிறுவென போலீசிற்கு போன் செய்து, தகவல் சொன்னான்.

அவர்கள் “இந்த கேஸ் சூசைட்ன்னு க்ளோஸ் ஆகிடுச்சு மிஸ்டர் வாசு. இதை அகைன் ஓபன் பண்ணனும்னா நிறைய ப்ராசெஸ்” என்று சொல்ல,

ஜீவா, “நான் யார்கிட்ட பேசணுமோ, என்ன பண்ணணுமோ பண்ணி இந்த கேஸை ரீ ஓபன் பண்ண வைக்கிறேன்” என்று வைத்து விட்டு, அவனுக்கு தெரிந்த பெரிய ஆட்களை பிடித்து, பேசி உடனே இந்த கேஸை விசாரிக்கும் படி செய்தான்.

அவன் செய்வதை எல்லாம் மிரண்டு போய் பார்த்திருந்த கயலை கண்டவன், அவள் அருகில் வந்து, அவள் நெற்றியில் கை வைத்து பார்க்க, அனலாக கொதித்தது.

அப்பொழுது தான் அவளுக்கு சாப்பாடும் மாத்திரையும் கொடுக்கவில்லை என்று உணர்ந்தவன், “மறுபடியும் காய்ச்சல் அடிக்குது கயல். நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்று அடுக்களைக்குள் போக, அவன் பின்னேயே வந்தவள், “கார்த்தி… கண்டிப்பா தற்கொலை பண்ணிருக்க மாட்டான்” என்றாள் மென்குரலில்.

ஜீவாவும், “ஹ்ம்ம்… எனக்கும் அந்த டவுட் தான் இப்போ. ஆனால், அவன் எனக்கு சரியா, 7.30க்கு மெஸேஜ் பண்ணிருந்தான். நான் சாகப்போறேன் எனக்கு வாழ பிடிக்கல நான் லவ் பண்ண பொண்ணு என்னை ஏமாத்திட்டா அப்டின்னு. அதை பார்த்துட்டு நான் அடுத்த அஞ்சு நிமிஷத்துல அந்த மலைக்கிட்ட போய்ட்டேன்.

ஆனால், அவன் தான் இல்ல… அவன் போனும் ரீச் ஆகலை. போலீஸ் கிட்ட சொன்னதுக்கு, மலைல இருந்து குதிச்சுருப்பான்னு அவன் பா பா” என்று சொல்ல கூட முடியாமல், அவன் வேதனையில் மருக, கயலுக்கு கார்த்தியை நினைத்து கண்ணீர் வந்தது.

ஜீவா தன்னை சமன்படுத்தி விட்டு, “அவன் பாடியை தேட போனாங்க… ஆனால், அவனோட ரத்தம் படிஞ்ச சட்டை மட்டும் தான், நாராய் கிழிஞ்சு கிடைச்சுச்சு. அவனோட எலும்பு கூட கிடைக்கல…” என்று கண்கள் சிவந்து உள்ளுக்குள் உடைந்தான்.

அவன் தற்கொலை செய்யவில்லை என்றால், யாரோ நிச்சயமாக தள்ளி விட்டிருக்க வேண்டும் என்று உறுதியாய் நம்பினான்.

பின், தட்டில் சாப்பாடை போட்டு, கயலிடம் கொடுத்து சாப்பிட சொல்ல, அவள் சாப்பிடாமல் தட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜீவா, “சாப்பிடு கயல்” என்று சொல்ல, ஒரு வாய் எடுத்து வைத்தவள், “எனக்கு வேணாம் நான் கஞ்சி குடிச்சிக்கிறேன்” என்று சொன்னதும்,

“உனக்கென்ன பைத்தியமா உடம்பு நெருப்பா சுடுது. கஞ்சி குடிக்கிறேன்னு சொல்ற… ஒழுங்கா இதை சாப்பிடு” என்று சொன்னவன், தயங்கி கொண்டே,

“ஒரு வாரமா நீ சாப்பிடவே இல்லையா…?” என்று கேட்க, “கஞ்சி குடிச்சேன்” என்றாள் தலையை குனிந்து கொண்டு.

“வாட்… ஒரு வாரமா கஞ்சி குடிச்சியா? அதுவும் இந்த ஊட்டி குளிர்ல…” என்றவனுக்கு அவளை அப்படி வதைத்ததே நாம் தானே என்று உள்ளூர குத்தினாலும், நான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவே இல்லையே என்று குழம்பியவன்,

பிறகு, “சரி இப்போ இதை சாப்பிடு…” என்று அழுத்திச் சொல்ல, கயல் அப்பொழுதும் “வேண்டாம்” என்று தலையாட்டினாள்.

அதில் கோபமானவன், “ஓங்கி விட்டேன்னு வை… பல்லெல்லாம் கழன்றும்.” என்று கையை ஓங்க அதில் அரண்டவள், அவனையே பயந்த விழிகளுடன் பார்க்க, தன்னை சமன்படுத்தியவன், மென்மையாக “ஏன் வேணாம்?” என்று கேட்டான்.

கயல் “அது அது… உதடு எரியுது இதை சாப்பிட முடியல…” என்று திக்கித் திணறி சொல்ல, ஜீவாவுக்கு தான் வெகுவாய் வலித்தது.

தான் தானே இதற்கெல்லாம் காரணம். என்ன ஏதென்று விசாரிக்காமல் இப்படி முட்டாள் தனம் செய்து விட்டோமே. என்று நொந்தவன், வேகமாக பால் சாதம் பிசைந்து வந்து, அவளுக்கு ஊட்டி விட, அதனைத் தடுத்தவள் அவளே சாப்பிட ஆரம்பித்தாள்.

ஜீவாவிற்கு தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாரிடமும் அவன் இசைந்து போனதும் இல்லை.

எதிரில் இருப்பவரை பேசக்கூட விடாமல், தான் சொன்னதை செய்ய வைப்பதில் கில்லாடி. அவன் சொன்னதை கேட்கவில்லை என்றால் அது யாராய் இருந்தாலும் பார்க்க மாட்டான். அவன் செல்லும் இடமெங்கும் வெற்றியும், அதனால் வந்த திமிரும், மிடுக்கும் கோபமும் அவனுடனே ஒட்டிக்கொண்டது.

ஆனால் இப்போது ஒரு சிறு பெண் முன், தான் தோற்றுப் போனதாய் உணர்ந்தான்.

அவளை பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்க வாழ்வில் முதல் முறை தயக்கம் என்றால் என்ன என்றே இப்போது தான் அறிகிறான்.

அவனின் தம்பியாய்  இருந்தாலும், கார்த்தியிடம் கூட ஒரு வரைமுறையுடன் தான் பேசுவான். சொல்லப் போனால் அளந்து தான் பேசுவான்.

மனதில் அவன் மேல் பாசம் இருந்தாலும், அதனை வெளியில்  காட்டிக்கொள்ளாமல், சிறு பையன் என்று அவனை எப்பொழுதும் மிரட்டி கொண்டே இருப்பான்.

அவனுக்கு எந்த குறையும்  இல்லாதவாறு, அவனின் எல்லா தேவைக்கும் ஆட்கள் வைத்து, அவன் கேட்பதை உடனே செய்யும் படி செய்திருந்தான்.

ஜீவாவின் வேலைப் பளுவும், கார்த்தியிடம் நெருங்க முடியாததற்கு ஒரு காரணம் தான்.

பாசமாய் அருகில் அமர்ந்து அவனிடம் அவன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. ஆனால் வாசு என்றால், கார்த்தி உயிரையும் விடுவான் என்று அவன் அறிந்ததே.

அவனிடம் கூட, சாப்பிட சொல்லி, அருகில் அமர்ந்து ஊட்டி விட்டது கிடையாது. ஆனால், தன் இயல்பை மீறி கயலிடம் அக்கறை எடுத்துக் கொண்டவனுக்கு, அவள் அவனை உதாசீனப்படுத்தியது, ஏதோ ஒரு வலியைக் கொடுத்தது. கூடவே சினத்தையும்.

அந்த நேரத்தில் அவனுக்கு அலுவலகத்தில் இருந்து போன் வர, கயலிடம் மாத்திரையை உட்கொள்ள சொல்லிவிட்டு, வெளியில் சென்றான்.

ஜீவா சென்றதும், மீண்டும் அடுக்களைக்குள் சென்று ஒரு ஓரமாய் அமர்ந்தவளுக்கு, வாழ்க்கையே மாறியது போல ஒரு உணர்வு. ஒரு வாரத்தில் வாழ்க்கையில் எவ்வளவு சோகம் எவ்வளவு விரக்தி… என்று நினைத்தவளுக்கு கார்த்தியின் நினைவு வாட்டியது.

கார்த்தி, பெரிய பணக்காரன் என்ற பந்தா சிறிதும் இல்லாமல், கயலிடம் பழகினான். இருவரும் எப்படி நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

ஆனால் கார்த்தி, விடுமுறையின் போது எல்லாம் கயலின் வீட்டிற்கு சென்று சாப்பிடுவது, அவள் பெற்றோருடன் பேசுவது என்று அவர்கள் குடும்பத்தில் நன்றாக ஒட்டிக்கொண்டான்.

நினைவு தெரிந்தது முதலே இந்த குடும்ப சூழ்நிலையை அவன் அனுபவித்தது இல்லை. கயலிடம் எந்நேரமும் பேசிக்கொண்டே தான் இருப்பான். அதில் அவன் அதிகமாக பேசுவது, வாசு அண்ணாவை பற்றி மட்டும் தான்.

என்னதான் வாசு அவனிடம் பேசவில்லை என்றாலும், அவனுக்கு தான் தான் எல்லாமே என்று கார்த்தி உணர்ந்தே இருந்தான்.

அவன் பேசவில்லை என்றாலும், அவன் பார்வையிலேயே என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து கொள்வான். அவனின் நியாயமான ஆசைக்கு வாசு என்றுமே மறுப்பு சொன்னதில்லை.

அன்று, கார்த்தி எப்பொழுதும் போல் கயல் வீட்டிற்கு வந்திருக்க அவனை சாப்பிட வைத்தவள், அவன் அருகே அமர, அவன் கேரட் – ஐ மட்டும் ஒதுக்கி விட்டு, சாப்பிடுவதைக் கண்டு,

“டேய் உன்னை எத்தனை தடவை சொல்லிருக்கேன்… காய்கறியை ஒதுக்காதன்னு எல்லாத்தையும் சாப்பிடு” என்று மிரட்ட,

அதில் சிரித்தவன் “வாசு அண்ணா கூட இப்படித்தான் கயலு. என்னை கவனிக்காத மாதிரியே இருக்கும். ஆனால் எப்போவாவது சேர்ந்து சாப்பிட்டாலும், நான் என்ன சாப்புடுறேன் எப்படி சாப்புடுறேன்னு பார்த்துகிட்டே இருப்பாரு… வாசு அண்ணா…” என்று ஆரம்பிக்க,

கயல் “டேய் போதும்டா உன் வாசு அண்ணா புராணம்… காதே புளிச்சு போச்சு கேட்டு கேட்டு…” என்று சலித்து கொள்வாள்.

ஆனால் கார்த்தி, “வாசு அண்ணா செம்ம கெத்து தெரியுமா? அப்படியே நடந்து வந்தாலே அனல் பறக்கும். அவரை பார்த்தாலே எல்லாரும் நடுங்க ஆரம்பிச்சுடுவாங்க” என்று சொல்ல,

கயல்,” உங்க அண்ணா அவ்ளோ மோசமாவா இருப்பாங்க பார்த்ததும் பயமா இருக்குறதுக்கு” என்று கிண்டலடிக்க அவளை முறைத்தவன்,

“என் அண்ணா எவ்ளோ அழகு தெரியுமா. அவங்க முன்னாடி மிஸ்டர் இந்தியா கூட நிற்க முடியாது. எப்போதும் எல்லாத்தையும் ஆராய்ச்சி பார்வை பார்க்குற கண்ணு, நீ பத்து பக்கத்துக்கு கேள்வி கேட்டாலும், அது எல்லாத்துக்கும் ஒரே பதில் சொல்லி இறுக்கமா க்ளோஸ் ஆகியிருக்க உதடு, சிரிக்கவே இல்லைனாலும், எப்போவாவது சிரிச்சாலும், அப்படியே மனசுல ஒட்டிக்கிற மாதிரி வசீகர முகம்” என்று பேசிக்கொண்டே போக,

கயல் கொட்டாவி விட்டு கொண்டு, “யப்பா ராசா, அவர் என்ன உன் அண்ணனா இல்ல உன் ஆளா… உன் ஆள் ரீட்டாவை கூட நீ இப்படி வர்ணிச்சது இல்லைடா… போதும் ஐ ஆம் பாவம்” என்று கெஞ்சினாள்.

அவனோ சிரித்தபடி ஏதோ யோசித்தவன்,  பின்,”கயலு கயலு நான் ஒன்னு சொன்னா கேப்பியா” என்று ஆர்வமாகக் கேட்க,

அதில் அவளும் சிரித்து, “சொல்லு” என்று கேட்டதும்,

“என் வாசு அண்ணாவை கல்யாணம் பண்ணி என் அண்ணியா வந்துடு கயலு…” என்று சொல்ல அவள் சற்று திகைத்தாள்.

அவனை முறைத்து, “போடாங் ஆகுறதை பேசு. இதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது” என்று மறுத்தவளிடம்,

“ஏன் ஏன் ஏன் நடக்காது?” என்று கேட்க,

“ப்ச் என்னடா பேசுற, உங்க அண்ணா எவ்ளோ பெரிய ஆளு. அவருக்கு இருக்குற அழகுக்கும் தகுதிக்கும் எத்தனையோ பொண்ணுங்க வருவாங்க. நான் உங்க குடும்பத்துக்குலாம் செட்டே ஆக மாட்டேன்” என்றாள் தலையை ஆட்டி.

கார்த்தி அவளை முறைத்து, “நான் என்னைக்காவது என்கிட்ட பணம் இருக்குன்னு திமிரா நடந்துருக்கேனா கயலு” என்று கேட்க, அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

கார்த்தி, “ம்ம் அதே மாதிரி தான் வாசு அண்ணாவும். என்ன அவரு வெளிய காட்டிக்க மாட்டாரு அவ்ளோதான் வித்தியாசம். அது போக, எத்தனை பேர்  வந்தாலும், உன்னை மாதிரி வர முடியாது…” என்று சொல்ல,

கயல் “நான் என்ன பண்ணேன்”. என்று கேள்வியாய் கேட்டதும்,

“நீ என்ன பண்ணல?  எனக்கு ஃப்ரெண்டா, வெல் விஷரா எல்லாமாவும் இருக்க. நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை கவனிச்சு, சாப்பிட வைக்கிற. எதாவது தப்பு பண்ணுனா திட்டுற. இதே எனக்கு அண்ணியா வந்தா, அந்த உரிமையோடு எனக்கு அம்மாவாவும் நீ இருப்பீல” என்று சொல்ல, கயல் தான் அதிர்ந்து விட்டாள்.

அவனுக்கு அம்மா அப்பா இல்லை என்று அவன் சொன்னதில் இருந்து அவன் மேல் அக்கறை எடுத்து செய்வாள் தான்.

ஆனால் அவன் மனதில் தன்னை இப்படி ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று அவளுக்கு தெரியவே இல்லை.

அவன் அன்பில் நெகிழ்ந்தவளுக்கு கண்ணீரும் வர, அதனை கட்டுப்படுத்திக் கொண்டு, “லூசா நீ… ஏன் இப்போ உனக்கு இதெல்லாம் செய்ய எனக்கு உரிமை இல்லையா” என்று கேட்க,

அவன் தடுமாறி, “இல்லை கயலு ஆனால் அப்போ… இன்னும் உரிமையா செய்யலாம்ல” என்று சொல்ல,

கயல் அவன் முடியை கலைத்து, “நான் எப்பவும் உன் கயலு தான் சரியா… இப்படி பேசுறதை விட்டுட்டு போய் படிக்கிற வேலையை பாரு” என்று எழும்ப போக,

கார்த்தி, “ப்ச், கயல் ஏன் என்ன அண்ணாவை கல்யாண பண்ணிக்க மாட்ட ஒரு ரீசன் சொல்லு. என் அண்ணாவை பார்த்தாலே நீ ஃபிளாட் ஆகிடுவ…” என்றான் பெருமையாக.

அவனை முறைத்த கயல், “ஒன்னு இல்லை ஆயிரம் ரீசன் இருக்கு. ஒண்ணு, உன் அண்ணா முதல்ல என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கணும்.

ரெண்டு, இந்த பணக்காரங்க சவகாசமே எனக்கு வேணாம்.

மூணு, உன் அண்ணா கோபத்துக்கு எல்லாம் என்னால் ஈடு குடுக்க முடியாது. உனக்கே தெரியும் என்கிட்டே கொஞ்சம் சத்தமா பேசுனாலும் என் கண்ணு வேர்த்துரும்ன்னு. மீதி, ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஏழும் இதான் காரணம்” என்று சொன்னதும்,

அதில் சிரித்தவன்,” ஹே என் அண்ணன் என்ன சும்மா சும்மாவா கோபப்படுவார்…” என்று பேச, அவனை நிறுத்தியவள், வேறு பேச்சை பேசி அவனை திசை திருப்பி விட்டாள்.

ஆனால் அதன் பிறகு, நிறைய முறை இந்த கேள்வியை கேட்டு விட்டான் அவளிடம். அவள் தான்  ஏதோ அறியாமல் பேசுகிறான் என்று விட்டு விடுவாள்.

ஒரு முறை என் அண்ணன் போட்டோவை பாரேன் என்று காட்ட போகையிலும், அவள் பார்க்கவே இல்லை.

என்னதான் அவன் ஜீவாவை பற்றி சொன்னதை அசுவாரஸ்யமாக கேட்டிருந்தாலும், ஜீவாவை பற்றி கார்த்தி சொன்ன, அப்பியரன்ஸும், ஆட்டிடியூட்டும் அவள் மனதில் நன்கு பதிந்து விட்டது.

அதனாலே ஜீவாவை நேரில் பார்க்கையில் எங்கேயோ பார்த்தது போல் தோன்றியது அவளுக்கு.

மேலும், கார்த்தி சொன்ன மாதிரியே அவன் இருப்பதால், அவளுக்கு கார்த்தி சொன்னது அப்போது சுத்தமாக நினைவில் இல்லை என்றாலும், ஏனோ அவனைப் பற்றி நன்கு தெரிந்த ஒரு ஃபீல் வந்ததில் தான், அவன் சரியாக பேசவில்லை என்றாலும், அவனின் இயல்பே அது தான் என்று அதனை ஏற்றுக்கொண்டாள் அவளே அறியாமல்.

இப்பொழுது தான் இது எல்லாமே கார்த்தி பேசியதால் வந்த தாக்கம் என்றே அவளுக்கு புரிந்தது..

இப்படியாக அவள் ஏமாற்றப்பட்டதும், கார்த்தியின் இறப்பும் அவளை அலைக்கழிக்க அங்கேயே வெறும் தரையில் சாய்ந்து படுத்து உறங்கி விட்டாள்.

இரவு வெகு நேரம் கழித்து, வீட்டிற்கு வந்த ஜீவா அறைக்குச் செல்ல, அங்கு, கயல் இல்லாததைக் கண்டதும், அவளை பதட்டத்துடன் வீடு முழுக்க தேடினான்.

பிறகு தான், அடுக்களைக்கு சென்று பார்க்க, அங்கு வெறும் தரையில் அவள் படுத்திருப்பதைக் கண்டதும், வேகமாக அவள் அருகில் சென்றான்.

 கண்ணீர் காய்ந்து அவள் கன்னத்தில் தடத்தை ஏற்படுத்தி இருக்க, குளிரில் தன்னை சுருட்டிக் கொண்டு உறங்கியவளை கண்டவன், ‘இங்க ஏன் படுத்துருக்கா’ என்று அவளை எழுப்ப, திடீரென யாரோ தொட்டதில் அடித்து பிடித்து எழுந்தவள், ஜீவாவை பார்த்து பயந்து பின்னால் நகர்ந்தாள்.

ஏனோ எப்போதும் மற்றவர்கள் அவனை பார்த்து பயந்தால், கெத்தாக சிரிப்பவன், இன்று ரணமாய் ஒரு காயத்தை உணர்ந்தான். 

கயலிடம் “ஏன் இங்க படுத்துருக்க கயல்… தரை ஜில்லுன்னு இருக்கு. ரூம்ல வந்து படு.” என்று குரலை சரி செய்த படி கூற, 

“இல்ல நான் இங்கயே படுத்துக்குறேன்…” என்று அவள் மறுக்க,

” அடம்பிடிக்காத கயல்…” என்று விழிகளில் கோபத்தை கக்கினான்.

கயல், “நான் நான் இங்கயே இருக்கேன்… இதான் என் ரூம்” என்று அவன் சொன்னதை அவனுக்கே சொல்ல, அதில் திகைத்தவன்,

“கயல், நான் அன்னைக்கு கோவத்துல உன்னை பழி வாங்கறேன்னு நினைச்சு இப்படிலாம் பண்ணிட்டேன்… தயவு செஞ்சு நீ ரூம்க்கு வா..” என்று முதன் முறை கெஞ்ச, கயல், மறுப்பாய் தலையசைத்து, அங்கேயே சுருண்டு படுத்துக் கொண்டாள்.

அவளின் அமைதியான பிடிவாதத்தால் திகைத்தவன், பின் இவளிடம் கெஞ்சினால் வேலைக்கு ஆகாது என்று அவளை அப்படியே இரு கைகளாலும் அள்ளிக் கொண்டு, படி ஏற, அதில் அரண்ட கயல்,

“விடுங்க… என்னை விடுங்க” என்று கத்தினாள்.

தன்னிச்சையாய் கண்ணீரும் வர, அவன் அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவளை கட்டிலில் கிடத்தினான்.

உடனே வாடி சுருட்டி எழுந்தவள், “என்னை விட்ருங்க… நான் நான் இங்க வேலைக்காரியவே இருந்துடறேன். ப்ளீஸ்… எனக்கு இதெல்லாம் வேணாம். நான் உங்க வப்பாட்டியா இருக்க மாட்டேன்.” என்று அழுது கொண்டே மீண்டும் சமையலறைக்கே ஓட, ஜீவாதான் பிரம்மை பிடித்தவன் போல் நின்றான்.

அவன் சொன்ன வார்த்தையின் வீரியம் அவனுக்கு வலிக்கும் போது தான் தெரிந்தது… அவளுக்கு எந்த அளவு ஆழத்தைத் தந்திருக்கும் என்று.

சில நிமிடம், அவள் சொன்ன வார்த்தையில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தவன், ஒரு முடிவோடு மீண்டும் அடுக்களைக்கு வந்தான்.

வந்தவன், மீண்டும் அவளை அள்ளிக்கொண்டு அவன் அறைக்கு வந்து கட்டிலில் கிடத்த, கண்ணில் இருந்து கண்ணீர் அதோ இதோவென வெளிவர துடிக்க கயல் பயந்திருந்தாள்.

ஜீவா, “ஷ்…” என்று அவன் உதட்டில் கை வைத்து, “கண்ணுல இருந்து தண்ணி வந்துச்சு… அப்பறம்.. பார்க்கறதுக்கு கண்ணே இருக்காது” என்று மிரட்ட, அதில் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள் அவனையே அதிர்ந்து பார்க்க,

  “தூங்கு… இனிமே நீ இங்க தான் தூங்குற… காட் இட் பிட்டர்… ம்ம்ஹும் ஸ்வீட் ஹார்ட்…” என்று கண்ணில் குறும்புடன் சொல்ல, அவளுக்கு மேலும் உதறல் எடுத்தது.

திருமணத்திற்கு முன் இந்த குரலிலும் இந்த கண்ணிலும் தானே நாம் விழுந்தோம் என்று வேதனையாய் நினைத்தவள் மீண்டும் அப்படி ஒரு மடத்தனத்தை செய்ய கூடாது என்று சபதம் எடுத்து கொண்டாள்.

ஆனால் எங்கே, அவனை கண்டதும் வரும் பயத்தில், அவன் சொன்னதை தான் செய்ய வேண்டியதாய் இருக்கிறது.

மீண்டும் அவன் “கண்ணை மூடு” என்று மிரட்ட, அதில் பயந்து கண்ணை மூடியவளின் கருவிழிகள் அங்கும் இங்கும் உருண்டோட, அதில் அவன் “நீ இன்னும் தூங்கலையா” என்று அதட்டலாக முறுவலை அடக்கியபடி சொல்ல, அதில் அவள் உண்மையிலேயே உறங்கி விட்டாள்.

பெருமூச்சு ஒன்றை விட்டு, அவள் அருகில் வந்தவன்,  “காட்… இந்த பொண்ணு, என்னை இப்படி மாத்திட்டா. நான் எப்போ இருந்து அடுத்தவங்களை கேர் பண்ண ஆரம்பிச்சேன். அதுலயும் இந்த முழி இருக்கே” என்று அவள் கண்களில் இதழை ஒற்றி எடுத்தவன்,

“உன்னை ரொம்ப பேசிட்டேன்ல… உண்மையிலேயே நீ பேரழகி ஸ்வீட் ஹார்ட்… உன்னை அன்னைக்கு சர்ச்ல பார்த்ததும், உன் மேல இருந்த பகையை மீறி, உன் அழகுலையும் உன் அப்பாவித்தனத்துலயும் நான் மொத்தமா விழுந்தது என்னமோ உண்மைதான். ஆனால் கோபம் தான், எல்லாத்தையும் தப்பாவே நினைக்க வச்சுச்சு… சாரி ஸ்வீட் ஹார்ட்.” என்றவன், பக்கென புன்னகைத்து, “என்னையவே கெஞ்ச வச்சுட்ட ஸ்வீட் ஹார்ட் நீ… உன்னை என்ன பண்றது ஹ்ம்ம்?” என்றான் ரசனையாக.

அவன் காயப்படுத்திய இதழை பார்க்க, அது சிவந்து, புண்ணாகி இருப்பதைக் கண்டு, “உன் மேல இருக்குற கோபத்துல, இந்த லிட்டில் லிப்ஸ்க்கு தண்டனை குடுத்துட்டேன்ல…” என கிசுகிசுப்பாய் கூறியவன், மென்மையாய் அவளுக்கு வலிக்காதவாறு அவள் இதழ்களை சுவைத்து, அவன் ஏற்படுத்திய காயத்தை அவனே மறைய வைக்கும் முயற்சியில் இருந்தான்.

வெகு நேரம் அவள் இதழில் மூழ்கி, மருந்து போட்டு கொண்டிருந்தவன் அவளிடம் அசைவை உணர்ந்து விலகி அவளை பார்த்தான்.

அவன் மீசை குத்தி குறு குறுவென்று இருந்திருக்கும் போல அவளுக்கு… உள்ளங்கைய கையால் உதட்டை தேய்த்து கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள்.

அதில் புன்னகைத்தவன், “ஷப்பா… நல்லவேளை முழிக்கல. இல்லைனா, கற்பே போன மாதிரி என்னை 90ஸ் வில்லன் ரேஞ்சுக்கு பார்த்துருப்பாள்…” என்று கேலி செய்து,

“குட் நைட் ஸ்வீட் ஹார்ட்…” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு பக்கத்து அறையில் சென்று உறங்கினான்.

நேசம் தொடரும்.
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
53
+1
5
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *