1,320 views

தலை தெறிக்க ஓடி வந்த அக்னிசந்திரன் மூச்சு வாங்கி நிற்க, “என்ன சந்திரா எதுக்கு இப்படி ஓடி வர.” கேட்டார் நந்தினி.

அவரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, அதற்குள் குளித்து தயாராகி வந்தார் செல்வகுமார். உணவு மேஜையில் அமர்ந்தவர் அக்னியையும் அழைக்க, அவன் மறுத்து விட்டான் அங்கு சாப்பிட.

தம்பதிகள் இருவரும் வெகு நேரமாக கட்டாயப்படுத்திக் கொண்டிருக்க, “சாப்பாடு வேணாம்னா விட வேண்டியது தான இப்ப எதுக்கு அவன் கிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்க.” என்றபடி படி இறங்கினாள் அன்பினி சித்திரை.

” வீட்டுக்கு வந்தவங்க சாப்பிடாம போகக்கூடாது.” என்ற நந்தினியிடம்,

“எதுக்கு வீட்டுக்குள்ள விட்டீங்க.” வெடுக்கென்று கேட்டாள்.

“அன்பினி உன்னோட பேச்சு நடவடிக்கை எதுவும் எனக்கு சரியா படல. ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து உன்னை நானே கெடுத்துட்டேன்னு இப்ப ஃபீல் பண்றேன். அக்னி மேல அப்படி என்ன தான் உனக்கு கோபம்? இன்னைக்கு நீ வாழுற வாழ்க்கை அவனால வந்தது.” தொடர்ந்து அக்னியை அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் மகளை செல்வகுமார் கண்டிக்க,

“இவனால ஒன்னும் எனக்கு இந்த வாழ்க்கை கிடைக்கல. இது என்னோட தாத்தா சொத்து. கம்பெனி போனா என்ன மீதி இருக்கிறதை வச்சு இப்ப வாழுற மாதிரியே வாழ்ந்து இருக்கலாம். தேவை இல்லாம அந்த கம்பெனியை கட்டிக்கிட்டு கூடவே இவனையும் கால்ல கட்டிக்கிட்டீங்க.” என்றாள் அன்பினி.

மனசாட்சி என்ற ஒன்று தனக்கு இல்லை என்பது போல் அன்பினி சித்திரை கூற, அவள் மீது அளவு கடந்த வன்மம் உருவானது அக்னி மனதில்.  சாதகமான சமயம் கிடைத்தால் அன்பினி சித்திரையை மரண எல்லை வரை கொண்டு செல்லவும் தயங்கக்கூடாது என்று அவன் மனம் அவனுக்கு அறிவுறுத்த, ‘நிச்சயமா’ என்று பதிலளித்தான் தன் மனதிற்கு.

அவள் பேச்சில் பெற்றோர்களுக்கு சினம் வெகுண்டு எழுந்தது. பேச்சுவார்த்தைகள் மெல்ல வார்த்தை போராக மூண்டது. சத்தம் கேட்டு வெளியில் வந்த விக்ரம் தங்கைக்கு ஆதரவாக பேச, அவனுக்கும் சேர்த்து வசைகள் விழுந்தது. திட்டு வாங்கும் இருவரும் எதுவும் நடக்காதது போல் நின்று கொண்டிருக்கும் அக்னியை கொடூரமாக முறைத்துக் கொண்டிருந்தார்கள்.

“போதும் நிறுத்துங்க அப்பா. இவன் நம்ம கம்பெனில வேலை பார்க்குற ஆயிரம் பேர்ல ஒருத்தன். இவனுக்கு இவ்ளோ இம்பார்ட்டன்ஸ் ஏன் கொடுக்கிறீங்கன்னு தான் தெரியல. நாங்க இல்லாத அப்போ உங்களுக்கு உதவியா இருந்தான் சரி இப்போ தான் நாங்க வந்துட்டோமே அப்புறமும் இவன் எதுக்காக இன்னும் இருக்கான்.” மனதில் இருந்த மொத்தத்தையும் விக்ரம் கேட்டு விட்டான்.

“உங்கள மாதிரி நேரத்துக்கு மாற என்னால முடியாது. இது உங்க தாத்தா செத்து தான் இல்லன்னு சொல்லல. ஆனா அந்த கம்பெனி அவரோட மூச்சு. தாத்தா சொத்துன்னு உரிமையா பேசுற நீங்க அவரோட மூச்ச காப்பாத்த தவறிட்டீங்க. உங்க கிட்ட பல தடவை கம்பெனிய எடுத்து நடத்துங்கன்னு கேட்டுட்டேன். அதெல்லாம் முடியாதுன்னு ஆளுக்கு ஒரு பக்கம் ஊர் சுத்த கிளம்பிட்டீங்க. மொத்தமா இழுத்து மூட வேண்டிய கம்பெனிய கொஞ்சம் கொஞ்சமா தோள் கொடுத்து காப்பாத்துனது இவன் தான். சந்திரா எப்பவும் இந்த ஆபீஸ்ல தான் இருப்பான். அவனுக்கு அப்புறம் தான் அங்க உங்களுக்கு எல்லா உரிமையும் கிடைக்கும்.” செல்வகுமாரும் நீண்ட விளக்கங்களை தன் வாரிசுகளுக்கு முன் வைத்தார்.

“அவனுக்கு அப்புறம் தான் எங்களுக்கு உரிமையா? அப்படிப்பட்ட உரிமை எங்களுக்கு வேணாம்.” ரோஷத்தில் விக்ரம் உடனே முடிவெடுத்து விட,

“வேணாம்னா இனிமே ஆபிஸ் பக்கம் வராதீங்க. என் இடத்துல இருந்து சந்திரா எல்லாத்தையும் பார்த்துப்பான்.”என்று செல்வகுமாரும் உடனே முடிவெடுத்து விட்டார்.

தந்தையின் வார்த்தையில் உச்சி சூடான விக்ரம் வரம்பு மீறிய வார்த்தைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க, “இதான் என்னோட முடிவு விக்ரம் இனிமே நீங்க ஆபீஸ் விஷயத்துல தலையிடாதீங்க.” முடிவாக சொல்லிவிட்டார் செல்வகுமார்.

இவ்வார்த்தையைக் கேட்ட பிள்ளைகள் இருவரும் அதிர்ந்து நிற்க, அக்னி சந்திரனின் முகத்தில் மட்டும் பௌர்ணமி பிரகாசம். செல்வகுமாரின் முடிவில் விக்ரமை விட அன்பினி சித்திரைக்கு தான் அதிகம் வெறுப்பு உண்டானது. தந்தை அதுவும் வேறொருவன் முன்பு உரிமை இல்லை என்றதை ஏற்றுக் கொள்ள முடியாதவள் இன்றோடு அவருடனான உறவை முறித்துக் கொள்ள முடிவெடுத்து பேச வரும் அந்த அரை நொடியில் அக்னியின் பற்கள் தெரியா சிறு சிரிப்பு அவள் கண்ணில் பட்டுவிட்டது.

கோபத்தில் இருந்த மூலைகள் சட்டென அச்சிறுப்பை உள்வாங்கி ஆயிரம் கேள்விகளை முன் வைத்தது அவளிடம். நரம்புகளை அழுத்தி பிடித்து ஓங்கி அடித்தது போல் அவள் உள் மனம் எச்சரித்தது. மனம் சொல்லிய வார்த்தையில் மீண்டும் பார்வை அவனிடம் செல்ல, இந்த முறை எதுவும் செய்யாத அப்பாவி முகமாக காட்சியளித்தது அக்னியின் முகம்.

இருமுகத்தையும் மனக்கண்ணில் எடைபோட்டு பார்த்தவள் யோசனையோடு நிற்க, “சரிப்பா இனிமே…..” என விக்ரம் சொல்ல வந்த வார்த்தையை சொல்லி முடிக்கும் முன் அவன் கைகளை இறுக்க பற்றினாள் அன்பினி சித்திரை.

மணிக்கட்டில் அழுத்தம் கொடுத்தவளை கோபத்தில் முறைத்தவன், “விடு அன்பினி இனி நமக்கு இது வேணாம்.” என்றதும் மீண்டும் மணிக்கட்டை அழுத்தி ஆட்காட்டி விரலால் தட்டினாள்.

தங்கையின் செய்கை விசித்திரமாக இருக்க, கோபத்தை தள்ளி வைத்தவன் ஆழ்ந்து யோசித்தான். யோசனையில் இருக்கும் அண்ணனின் காதில், “விக்ரம் அவசரப்படாத இது கோபத்தால சாதிக்க வேண்டிய விஷயம் இல்லை. நமக்கு ஒரு மாசம் டைம் இருக்கு.” கோபத்தில் சபதத்தை மறந்தவனுக்கு நினைவூட்டினாள்.

உள்ளுக்குள் ஆழ்ந்து மூச்சை இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட விக்ரம் கோபத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட, “சாரிப்பா கொஞ்சம் ஓவரா பேசிட்டோம். இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறோம்.” என சரணடைந்து விட்டாள் தந்தையிடம்.

கோபம் இருப்பினும் தானும் அதிகமாக பேசிவிட்டதால் அமைதி காத்தார் செல்வகுமார். நிலைமையை சமாளிக்க எண்ணிய நந்தினி, “ஏங்க விடுங்க இதுக்கு மேல இதை பத்தி பேச வேணாம். நீங்க சாப்பிட்டுட்டு அக்னி கூட கிளம்புங்க.” என்றார்.

“வேணா ம்மா அப்பா இப்போ ரொம்ப டென்ஷனா இருக்காங்க வெளிய போறது நல்லது இல்ல. நானும் அக்னியும் சைட்ட பார்த்துட்டு வரோம்.” என்றவளை சந்தேக கண் கொண்டு பார்த்தார் செல்வகுமார்.

சந்தேகத்தின் காரணத்தை உணர்ந்தவள், “உங்க பொண்ணு நானு கம்பெனி அழிய ஒருநாளும் காரணமா இருக்க மாட்டேன். நம்பிக்கை இருந்தா அனுப்பி வைங்க.” தந்தையிடம் கொக்கி போட்டாள்.

மனதில் இருந்த நெருடலில் அவர் மறுக்க, அக்னி தான், “சார் அவங்க கோபமும் நியாயம் தான. நீங்களும் கொஞ்சம் விட்டு பிடிங்க சார்.” என்றான்.

“அது இல்ல சந்திரா.” தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை சொல்ல வந்தவரிடம்,

“எனக்கு உங்க மனநிலை நல்லா புரியுது சார். அதே மாதிரி அவங்க மனநிலையையும் நீங்க புரிஞ்சுக்கோங்க. உரிமையானவங்க இருக்கும் போது நான் உரிமை எடுத்துக்கிறது நல்லது இல்லை.” என்றான் நல் மனிதனாக.

அக்னி இவ்வார்த்தை உதித்ததும் இருந்த இடத்தை விட்டு ஒரு படி மேலே ஏற்றி வைத்தார் செல்வகுமார். இவ்வளவு நல்லவனை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்களே என மனம் வெந்தவர், “என் பசங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் சந்திரா. அவங்க பேசின எதையும் மனசுல வச்சுக்காத.” என்றார் வருத்தத்தோடு.

தந்தையின் பேச்சுக்கள் காதில் விழுந்தாலும் பெண்ணவளின் பார்வை அக்னி சந்திரனை எடை போடும் வேலையில் இறங்கி இருந்தது. இவனின் பூர்வீகத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தாள். ஒருவழியாக சண்டையில் ஆரம்பித்த பேச்சுக்கள் சுமுகமாக முடிய, அன்பினியோடு அக்னி கிளம்புவதாக முடிவானது.

சூழ்நிலை சகஜமாக நந்தினி மறுபடியும் சாப்பிட அழைத்தார் அக்னியை. உறுதியோடு மறுத்தவனை பார்த்து மனம் கசங்கியவர் செய்வதறியாது மகளுக்கு காலை உணவை பரிமாறினார். அக்னி சாப்பிடாததால் செல்வகுமார் சாப்பிடாமல் அமர்ந்திருக்க, அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாத அன்பினி காலை உணவை ஒரு பிடி பிடித்தாள்.

அக்னியோடு சேர்ந்து கம்பெனி விஷயங்களை செல்வக்குமார் பேசிக் கொண்டிருக்க, நந்தினி சமையலறைக்கு சென்று விட்டார். அன்பினி சித்தரை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, யாரோ ஒருவன் அவள் கண்களை மூடினான். யார் என்று கண்டு கொண்டவள்,

“வந்துட்டியா!” எனக் கேட்டதும் துள்ளி குதித்த அந்த கைக்கு சொந்தமானவன், “வாவ் சித்! நான் தான்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்ட.” என குதுக்களித்தான்.

அந்த சத்தத்தில் பேசிக் கொண்டிருந்தவர்களும் கிட்சனில் இருந்தவரும் ஒரு சேர அவர்களை பார்த்தார்கள். நந்தினிக்கு கொஞ்சமும் பிடிக்காத அன்பினி சித்திரையின் தோழன் மகேஷ் ஆங்கில வார்த்தையில் பீட்டர் விட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் நந்தினி கணவனை மறைக்க, அவரும் பார்க்கக் கூடாததை பார்த்தது போல் முகத்தை மாற்றிக் கொண்டார்.

“ஹேய்! ஆல்ரெடி நீ கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி இருக்க இதுல ஆயில் புட் சாப்பிட்டுட்டு இருக்க.” என்றவன் அவளை கேட்காமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பூரியை வேகமாக ஒதுக்கி வைத்தான்.

“எது! நான் வெயிட் போட்டுட்டன்னா?” என அதிர்ந்த அன்பினி சித்திரை எழுந்து நின்று, “நிஜமாவா மகேஷ் சொல்ற நான் குண்டாகிட்டனா.” என சந்தேகமாக கேட்டாள்.

பதில் சொல்ல வேண்டியவனின் பார்வை அவள் அழகை ரசித்துக் கொண்டிருக்க, “அன்பினி சாப்பிடும் போது எந்திரிக்க கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது, சாப்பிடு.” கோபத்தோடு கட்டளையிட்டார் நந்தினி.

“எதுக்கு ஆன்ட்டி கோபப்படுறீங்க அவளுக்கு வந்த டவுட்ட தான கேட்டா இதுல என்ன தப்பு இருக்கு.” என்றவன் உரிமையோடு அங்கு அமர்ந்து, “காபி கொண்டு வாங்க ஆன்ட்டி.” என்றான்.

“என் பொண்ணு கிட்ட நான் பேசிட்டு இருக்கேன் இதுல உனக்கு என்ன பிரச்சனை.” என நந்தினி சொல்லியதும் அன்பினி அவரை கண்டிக்க, 

“சில் சித் ஆன்ட்டி உரிமையா தான பேசுறாங்க விடு.” என்றான் அவர் எந்த தோரணையில் தன்னிடம் வார்த்தை உதித்தார் என்று தெரிந்தும்.

“இன்னைக்கு நீ ஃப்ரீயா சித்.”  மகேஷ் கேட்க, “எதுக்குடா” என காரணம் கேட்டாள்.

“சின்னதா பார்ட்டி ஒன்னு இருக்கு சித்.” என்றான்.

“இன்னைக்கு முடியாது மகேஷ் கம்பெனி ஒர்க் கொஞ்சம் இருக்கு இன்னொரு நாள் பார்க்கலாம்.” என்றதும் ஏதோ கேட்க கூடாத விஷயத்தை கேட்டது போல் இருக்கையை தள்ளிக் கொண்டு எழுந்து நின்றவன்,

“வாட்! கம்பெனி ஒர்க் இருக்கா? அதெல்லாம் எதுக்காக நீ பார்க்கிற.” என்றவன் அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல்,

“அங்கிள் இது அவ என்ஜாய் பண்ண வேண்டிய வயசு. செலவு பண்ண காசு கொடுக்காம கம்பெனி வேலைய பார்க்க சொல்றீங்க. இன்னைக்கு அவ எந்த ஓர்க்கும் பார்க்க மாட்டா. எங்களுக்கு பார்ட்டி இருக்கு.” அவனே ஒரு முடிவெடுத்து செல்வக்குமாரிடம் பேச, அவர்  கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தார் மகளை.

“அவளை எதுக்கு முறைக்கிறீங்க அங்கிள். ஒரு வாரம் நான் இல்லாம போனதால அவளை மிரட்டி வேலை பார்க்க வச்சிருக்கீங்க.” என்றவனுக்கு,

“அவ சென்னைக்கு வந்தே ஒரு வாரம் தான் ஆகுது.” உள்ளிருந்து குரல் கொடுத்தார் நந்தினி.

“அதான் ஆன்ட்டி நானும் சொல்றேன் ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க வந்தவ கிட்ட  வேலை கொடுத்தது என்ன நியாயம். “

“நாங்க எதுவும் பண்ண சொல்லல அவளே விருப்பப்பட்டு தான் கம்பெனி பொறுப்பை ஏத்துக்கிட்டா.” என்ற நந்தினியின் வார்த்தையில் மீண்டும்  கேட்க கூடாததை கேட்டது போல் அதிர்ந்தவன்,

“சித் உனக்கு என்ன ஆச்சு? இதெல்லாம் உனக்கு செட் ஆகுமா. நம்ம அடுத்த வாரம் கோவா போக பிளான் பண்ணி இருக்கோம். இருக்கப் போற இந்த ஒரு வாரத்துக்கு இது தேவையா.” என குதிக்க தொடங்கினான் மகேஷ்.

கல்லூரியில் இருந்து அவளுடன் ஒன்றாக படித்தவன் தான் மகேஷ். அன்பினியை பல வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கிறான். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை அவளிடம் மறைமுகமாக காட்டுவான். அசைந்து கொடுக்காத அன்பினி இன்றுவரை வெறும் நண்பனாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறாள். எப்படியாவது  காதலிக்க வைக்க வேண்டும் என்று அவள் செல்லும் அனைத்து இடத்திற்கும் பின்னால் வால் போன்று செல்வதே இவன் முழு நேர வேலை.

மகேஷின் பேச்சும் அன்பினியோடு அவன் பழகும் விதமும் விக்ரம் உட்பட யாருக்கும் பிடிக்காது. தங்கைக்காக விக்ரம் அனுசரித்து செல்ல, பெற்றோர்கள் அவன் வரும் நேரம் எல்லாம் எதிர்ப்பை காட்டுவார்கள்.

இதெல்லாம் வார்த்தையாக மட்டுமே அக்னி அறிந்திருக்கிறான். பலமுறை மகளைப் பற்றியும் அவளுடைய நட்பை பற்றியும் புலம்பி இருக்கிறார் செல்வகுமார். இன்று தான் மகேஷை நேரில் பார்க்கிறான் அக்னி சந்திரன்.

மகேஷை பார்த்தால் தன் பெற்றோர்கள் இயல்புக்கு மீறி நடந்து கொள்வதை அன்பினி உணர்ந்தாலும் கண்டுகொள்ள மாட்டாள். அவள் உலகில் ஆனந்தம் என்ற ஒன்று மட்டுமே இருக்க வேண்டும் என்பது விருப்பம். படிக்கப் போகிறேன் என்று சென்றவள் அவை முடிந்ததும் மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே சென்னையில் இருப்பாள்.

இன்றும் மகேஷின் வரவை பெற்றோர்கள் விரும்பவில்லை என்பதை உணர்ந்த அன்பினி சித்திரை, “மகேஷ் அவங்க யாரும் என்னை கம்பெல் பண்ணல. இவ்ளோ நாள் என்ஜாய் பண்ணிட்டேன் இனிமே கொஞ்சம் ஃப்யூச்சர பார்க்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன். நீ மட்டும் பார்ட்டிக்கு போ நான் இன்னொரு நாள் ஜாயின் பண்ணிக்கிறேன்.” என்று அங்கு நடக்கும் சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

அவளுக்காக தானே அவன் இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தது. அன்பினி இல்லாமல் செல்வது வீண் என்று நன்கு அறிந்தவன், “நோ சித் நீ இல்லாம பார்ட்டி போர் அடிக்கும். இன்னொரு நாள் அரேஞ்ச் பண்ணிக்கலாம்.” என்றவன் அத்தோடு நில்லாமல் அவள் இல்லாமல் எங்கும் செல்ல போவதில்லை என்றும் இன்று ஒரு நாள் அவன் வாழ்க்கையில் வீணான நாள் என்றும் வார்த்தைக்கு வார்த்தை புலம்பிக்கொண்டிருக்க,

“எதுக்கு மகேஷ் புலம்பிட்டு இருக்க இன்னைக்கு நீயும் என்னோட சைட்டுக்கு வா. கொஞ்சம் டிஃபரண்டான ஃபீல் கிடைக்கும்.”  என்றாள் அன்பினி சித்திரை.

எதற்காக இவ்வளவு நேரம் மூச்சுமுட்ட பேசினானோ அவை எளிதாக நடந்து விட, உடனே வர சம்மதித்து விட்டான். செல்வகுமாருக்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை. இருந்தும் காலையில் ஒரு சண்டை நடந்து விட்டதால் மீண்டும் போட விரும்பாதவர் அமைதியாக இருந்து கொள்ள, நந்தினி தான் தன் கோபத்தை கிட்சனில் காட்டிக் கொண்டிருந்தார்.

இருவர் செல்ல வேண்டிய பயணம் மூவராக மாற, “இவன்தான் நீ சொன்ன அக்னியா சித்” என அவள் காதை கடித்தான் மகேஷ்.

“ஆமாம்” என்று சைகை செய்தவள் ஒரு வழியாக வீட்டில் இருந்து கிளம்ப,  மகேஷிற்கு அக்னியை சுத்தமாக பிடிக்கவில்லை. தினமும் செல்வகுமார் மகளிடம் அக்னி புகழ் பாட, அவள் நேராக மகேஷிடம் கொட்டி தன் கோபத்தை தீர்த்துக் கொள்வாள். அப்போதெல்லாம் அவளுடன் இன்னும் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட மகேஷிற்கு இன்று தங்கள் இருவருக்கும் நடுவில் அவன் இருப்பது பிடிக்கவில்லை. அதையெல்லாம் கண்டு கொள்ளாத அக்னி அவளுடன் புறப்பட்டான்.

“சந்திரா அந்த டாக்குமெண்ட்ட எடுத்துட்டல.” என்று செல்வகுமார் கேட்டதும் அவனின் பார்வை அன்பினி சித்திரை தீண்டியது. அவளும் அவனை தான் முறைத்துக் கொண்டிருந்தாள் அறையில் நடந்த சம்பவங்களை நினைத்து. இருவரின் பார்வையையும் பார்த்த மகேஷ் உள்ளுக்குள் கொதித்தான்.

கிளம்ப தயாரான அக்னிசந்திரனை அழைத்த நந்தினி, “சந்திரா அவனோட அதிக நேரம் இருக்க விடாத. என் பொண்ணு இவ்ளோ கெட்டுப் போனதுக்கு முதல் காரணமே அவன் தான். இனிமேலாது அவ நல்லா இருக்கட்டும்.” என்றார்  மகளின்  நலன் கருதி. சம்மதமாக தலை அசைத்தவன்  அவர்களுடன் புறப்பட்டான்.

****

காரை அன்பினி சித்திரை இயக்க, அவள் பக்கத்தில் அமர முந்திக் கொண்டான் மகேஷ். போட்டிக்கு அக்னி செல்லவில்லை என்பதை அறியாமல். இருவரும் ஏதேதோ கதை அளந்து கொண்டிருக்க,

“என்னை தவிர வேற யாராலயும் உன்ன புரிஞ்சுக்க முடியாது சித்.” பேச்சுக்களுக்கு நடுவில் மகேஷ் லேசாக வார்த்தை விளையாட்டை வைத்தான்.

அன்பினி ஏதாவது வார்த்தை சொல்வாள் அக்னியை கர்வத்தோடு பார்க்கலாம் என்று அவன் நினைத்திருக்க, “ஆஆஆஹான்!” என்று கொட்டாவி விட்டான் அக்னி.

அன்பினி கண்ணாடி வழியாக அவனைப் பார்க்க, மகேஷ் திரும்பி முறைத்தான். அக்னி கண்டு கொள்ளவே இல்லை இருவரையும். அவன் முன்பு அன்பினியோடு நெருக்கமாக இருப்பதை போல் காட்டிக் கொள்ள மகேஷ் படாத பட்டுக் கொண்டிருக்கும் நேரம் சைட் வந்தது.

பாதி நிலையில் கட்டி முடித்த கட்டிடம் இன்னும் சில மாதத்தில் செல்வகுமார் கைக்கு மாற போகிறது. கட்டிடத்தின் தரத்தை பரிசோதிப்பதற்கு ஆட்களை நியமித்து இருந்தார். அக்னி அங்கு வரும் முன் அவர்கள் தங்கள் வேலையில் இறங்கி இருந்தனர்.

அன்பினிக்கு இவை எல்லாம் புதிது என்பதால், “இங்க இப்ப நமக்கு என்ன வேலை.” அக்னியிடம் விசாரித்தாள்.

“என்ன இப்படி கேட்டுட்ட சித். நம்ம தான் இங்க ஓனர் சோ எல்லாரும் எப்படி வேலை பார்க்கிறாங்கன்னு வாட்ச் பண்ணனும்.” என அக்னியை முந்திக்கொண்டு பதில் அளித்தான் மகேஷ்.

“வாட்ச் பண்றதுக்கு கேமரா இருக்கு.”என்ற அக்னி வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்க,

“ஹலோ! நாங்க பர்சனலா பேசிட்டு இருக்கோம் நீ எதுக்கு குறுக்க வர. ” என்று கேட்டான் மகேஷ்.

“கேள்வி யாரு கிட்ட கேக்குறாங்கன்னு கூட தெரியாம பேசிட்டு பர்சனல் வேற.” சத்தம் வராமல் உதட்டில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான் அக்னிசந்திரன்.

“என்ன பேசிட்டு இருக்க.” அவன் தனக்குள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மகேஷ் கேள்வி எழுப்ப, “இது என்னோட பர்சனல்.” என்றான் அக்னி.

“சித் இவன் நீ சொன்னதை விட பயங்கரமான ஆளா தான் இருப்பான் போல.” என்றதும் கடுப்பான அக்னி அன்பினியிடம் கண்டிக்குமாறு சொல்ல, இருவருக்கும் சின்ன போர் தீ உருவானது.

“மகேஷ் கம்பெனி விஷயத்துல நீ தலையிடறது எனக்கு சுத்தமா பிடிக்கல. நாங்க சைட் பத்தி பேசி முடிச்சுட்டு வரோம் நீ கொஞ்ச நேரம் கார்ல இரு.” என்று அன்பினி சொன்னதும் முகம் கருகியவன் அங்கிருந்து சென்று விட்டான்.

செல்பவனை கண்டு கொள்ளாத அன்பினி சைட் பற்றிய முழு விபரங்களை அக்னி சொல்ல கேட்டுக் கொண்டாள். கட்டிடத்தின் தரத்தை ஆராய்ந்து கொண்டிருந்த வல்லுனர்கள் தரம் நன்றாக இருப்பதாக கூற,

“ஓகே சார் நீங்க ஈவினிங் ஆபீஸ்க்கு வாங்க பேசிக்கலாம்.” என்று அனுப்பி வைத்தான்.

கட்டிடத்தை பாதுகாக்க ஒரு சிலர் மட்டுமே அங்கு இருந்தனர். கட்டிடத்தின் உள்ளே செல்ல விரும்பிய அன்பினி பக்கத்தில் இருப்பவனிடம் உத்தரவு கேட்காமல் கிளம்ப, “மேடம் உள்ள போகாதீங்க பொருள் எல்லாம் அப்படியே போட்டு இருக்கும்.” என எச்சரித்தான்.

கேட்காதவள் முதல் மாடியை கடந்து இரண்டாவது மாடியை அடைந்தாள். அங்கு இரும்பு சம்பந்தமான அனைத்து பொருட்களும் குவிந்து கிடந்தது. கீழே சிதறி இருக்கும் கூர்மையான பொருட்களில் பாதம் படாதபடி கவனமாகச் சென்றாள். இருந்தும் நீண்ட கட்டையில் இருந்த ஆணி அவள் காலனியை பதம் பார்த்து பாதத்தில் லேசாக உரசியது. அந்த நிகழ்வில் பயந்தவள் கீழே விழ பார்க்க, அவள் பின்னால் வந்து கொண்டிருந்த அக்னி சுதாரித்துக் கொண்டு பிடித்து விட்டான்.

விழப் போகும் பயத்தில் இருந்தவள் அக்னியின் உதவி கிடைத்ததும் தப்பித்த நிம்மதியில் ஒட்டிக் கொண்டாள். அவன் வலது கை அன்பினி இடுப்பை சுற்றிக் கொண்டிருக்க, இடது கை அவள் முதுகை பற்றிக் கொண்டிருந்தது. 

“அசையாம இருங்க.” என்றவன் அவள் அருகில் இருக்கும் இரும்பு பொருட்களை நகர்த்தினான். ஒரு செருப்பில் ஆணி குத்தியதால் ஒற்றைக்காலில் நின்றிருந்தவள் அக்னி அசைந்ததும் அசைய ஆரம்பித்தாள். முடிந்த அளவு சமாளித்து நின்றவன் அவளையும் தாங்கிக் கொண்டு நிற்க,

“அக்னி பேலன்ஸ் பண்ண முடியல.” என்றாள்.

அவள் நிலைமையை புரிந்து கொண்டவன் தன்னோடு சேர்த்தணைத்தபடி கீழே இருக்கும் பொருட்களை நகர்த்த ஆரம்பித்தான். ஆணி அவள் பாதத்தில் உரசியதே தவிர குத்தவில்லை. பயத்தில் அதை கவனிக்க மறந்தவள் அக்னி இழுத்த இழுப்பிற்கு செல்ல ஆரம்பித்தாள்.

நடக்கும் அளவிற்கு அனைத்தையும் ஒதுக்கி வைத்தவன், “மேடம் அந்த பக்கம் போங்க.” என்றான்.

அவனை விட்டு நகர்ந்தவள் ஒற்றை காலில் நடக்க  முடியாமல் மீண்டும் விழப் போனாள். விழப்போவதை உணர்ந்து அவன் சட்டை காலரை பிடித்தவள், “அக்னி” என்று கத்த, அவள் விழுந்து விடாமல் பிடித்தவன் அருகில் இருக்கும் இரும்பு பலகையில் நிறுத்த முயற்சித்தான். பயத்தில் தன் சுயம் இழந்தவள் ஒத்துழைக்க மறுக்க, நிலை தடுமாறி அவளோடு விழ ஆரம்பித்தான். 

நல்ல வேலையாக ஒரு கையை இரும்பு பலகை மீது வைக்க, அதில் விழுந்தார்கள். கீழே அக்னி படுத்திருக்க, அவன் சட்டை காலரை பிடித்தபடி மேலே படுத்திருந்தாள் அன்பினி சித்திரை.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
22
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *