Loading

5 – விடா ரதி… 

 

 

அவளது வாழ்வில் மறக்க முடியாத நாள். முதன்முதலில் அவனைக் கண்டு மெய்மறந்து நின்றது அன்று தான். 

 

ஆலீவ் பச்சை மேல்சட்டையும், கருப்புநிறத்தில் கால் சராயும் அணிந்திருந்தான். அவளோ வெள்ளையில் மஞ்சள் எம்ப்ராய்டரி செய்த பூக்கள் கொண்ட சல்வார் அணிந்திருந்தாள். 

 

அது அவளுக்கு கல்லூரி முதல் வருடத்தின் கடைசி மாதங்கள்…. அந்த வயதிற்குரிய குறும்பும், சேட்டையும் என அவளது குணம் கலகலப்பானதாக இருந்தது. அவளைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவளது வேடிக்கைப் பேச்சில் அவ்வப்போது சிரிப்பு சத்தமும் வெடித்துக் கொண்டே இருக்கும். 

 

அதிக அலங்காரமின்றி எப்போதும் கல்லூரிக்கு செல்வது போல ஒப்பனை செய்து, அதிகபட்சமாக ஊசியில் கோர்த்த குண்டுமல்ல்லிச் சரத்தை பாதி பின்னல் வரை தொங்கவிட்டு இருந்தாள்.

 

முக்கிய ஆபரணமாக முகத்தில் எப்போதும் சிரிப்பு குடிக்கொண்டிருக்கும். அதைத் தவிர பெரிதாக எதுவும் அணியப்பிடிக்காது.

 

அப்போது தான் பெண் மாப்பிள்ளையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மேடையில் இருந்து கீழிறங்கி தோதான இடம் பார்த்து அரட்டை அடிக்க அமர்ந்தாள். 

 

“ஹேய் ரதி….. நான் அந்த ஜன்னல் பக்கம்…”, என ஒரு பெண் ஓடிவந்து அவளுக்கு முன் அமர்ந்து ஃபோன் எடுத்துப் பேசத் தொடங்கிவிட்டாள். 

 

“இதுக்கு நீ வீட்லயே இருந்திருக்கலாம் அண்ணி….. இங்க வந்தும் ஃபோன் தானா?”, என அவளைக் கிண்டல் செய்தபடி வேறொரு இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தாள். 

 

“உன் அண்ணன் பேசறதே அதிசயம். அதுலயும் இந்த ஃபோன் என் கைல இருக்கறது இன்னும் பெரிய அதிசயம்… அஞ்சு நிமிசம் என் அப்பா அம்மா வந்தா கொஞ்சம் மேனேஜ் பண்ணி அனுப்பி விட்டுடு ரதி செல்லம்….”, என அவளைக் கொஞ்சினார். 

 

“சரி சரி.. எங்கண்ணன் காத அறுக்காம சீக்கிரம் வந்து ஜோதில ஐக்கியம் ஆகிடு..”, எனக் கூறிவிட்டு அரட்டை கச்சேரி ஆரம்பம் ஆனது. 

 

ஒரு மணி நேரம் கழித்து, அவளது அன்னை வந்து, “பந்தி காலியா தான் இருக்காம் … போய் சீக்கிரம் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு கெளம்பு…..”, எனக் கூறிவிட்டு சென்றதும், அருகில் இருந்த அண்ணியுடன் சாப்பிடச் சென்றாள். 

 

“ரதி.. ஏன் இப்படி வேர்த்து கொட்டுது உனக்கு? இன்னிக்கி கூட ஒரு லிப்ஸ்டிக், ஐ லைனர் போட மாட்டியா?”, என அவளது பெரியம்மா அவளை நிறுத்திக் கேட்டார். 

 

“அதுல்லாம் போட்டிருந்தாலும் இப்ப இன்னும் மோசமா தான் ஆகி இருக்கும் பெரியம்மா…. வாங்க சாப்பிட போலாம் …”, என அவருடன் பேசிக்கொண்டிருந்த போது தான், அவன் மேடையில் மணமக்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். 

 

அவள் அவனைக் கண்டு சுற்றம் மறந்து அப்படியே ஸ்தம்பித்து, ‘நீயா?’ எனக் கேட்டு அவனைப் பார்த்து சிரித்தாள். அந்த நொடி அவளுக்கு சினிமாவில் காட்டுவதைப் போல அவனைத் தவிர மற்ற அனைத்தும் மங்கலாக தான் தெரிந்தது. அவனும் அப்படி தான் அவளைப் பார்த்து நின்றான். அருகில் இருந்த அவனது நண்பன் சதீஷ் தான் அவனை இழுத்துக் கொண்டு கீழே இறங்கினான். 

 

சில நொடி தான் என்றாலும் அந்த தருணம் மனதில் அப்படியே பதிந்து, இதயத்தில் செதுக்கி வைத்தது போல நின்றுவிட்டது. 

 

“ரதி.. ரதி…. நான் இங்க பேசினா நீ எங்க பாத்துட்டு இருக்க?”, பெரியம்மா அழைக்கவும், “சாரி பெரியம்மா அங்க அத்தை கூப்பிட்டாங்க.. நான் சாப்பிட்டுட்டு வரேன்.. நீங்க இருங்க ஒன்னா வீட்டுக்கு போலாம்….”, எனச் சமாளித்துவிட்டு தனக்குள் தோன்றிய இந்த உணர்வினை நினைத்தபடி சாப்பிட அமர்ந்தாள். 

 

“ரதி இங்க வா..”, என அவளது அண்ணி அருகில் அழைத்து அமரவைத்து கொண்டார். 

 

“இந்த கல்யாணத்துல நெறய பசங்க இருக்காங்க… இப்போவது சைட் அடிச்சி கத்துக்க டி…. அங்க பாரு எதிர்ல அந்த பையன் சூப்பரா இருக்கான்..”, எனக் கூறினார். 

 

“அண்ணியாரே…. உங்களுக்கு கல்யாணம் முடிவாகிரிச்சி அதனால என் அண்ணன தவிர யாரையும் நீங்க பாக்ககூடாது… “

 

“அதுல்லாம் முடியாது….கல்யாணம் முடிஞ்சா சைட் அடிக்ககூடாதுன்னு யார் சொன்னா?”

 

“நான் சொல்றேன்…..”

 

“அப்போ நீயாவது பாரு… எங்களுக்கு மாப்ள தேடற வேலை மிச்சம் ஆகும்….நிஜமா டி… உன் எதிர்ல பாரு…..நிறைய பசங்க இருக்காங்க…. நான் பாக்கறேன் போ…. அந்த பச்ச சொக்கா எனக்கு….”, என அவர் கூறியதும், “உனக்கு தான் கல்யாணம் முடிவாகிரிச்சி இல்ல…. அது எனக்கு….”, எனக் கூறிவிட்டு எதிரில் பார்க்கும் போது தான் அவன் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. 

 

“ஸ்வீட் ஒண்ணா ரெண்டா?”, பரிமாறுபவர்கள் அடுத்தடுத்து வந்தனர். 

 

அவர்களிடம் அவள் வம்பு பேசியபடி அவளுக்கு பிடித்த வகைகளை அதிகமாகவும், மற்றவற்றை தவிர்த்தும் கொண்டிருந்தாள். 

 

“சாப்பாடு வேணுமா வேணாமா?”, என அடுத்து வந்தவர் கேட்க, “கொஞ்சமா அண்ணா…”, எனக் கூறியதும் நான்கு பருக்கை மட்டும் போட்டார். 

 

“இது என்ன எண்ணறதுக்கா?”, முறைத்தபடிக் கேட்டாள். 

 

“நீ தானே கொஞ்சமான்னு சொன்ன….”

 

“அதுக்குன்னு இப்படியா…. அப்போ எனக்கு இன்னும் ரெண்டு சப்பாத்தி, நாலு முந்திரி கேக், கொஞ்சம் பூந்தி போட சொல்லுங்க எனக்கு அதுவே போதும்….”, என அவளும் வம்பு பேச, கலகலப்பாக நேரம் சென்றது. 

 

அவளின் வாய் துடுக்கும், “சே… இது வேற இலைல உருண்டு இம்சை பண்ணுது…. கலட்டினா தான் நிம்மதியா சாப்பிட முடியும் போல…”, என வலது கையில் இருந்த காப்பை கழற்றினாள். 

 

“நான் தான் முன்னயே சொன்னேன்ல அத கலட்டி இந்த கைல போட்டுக்க…. “

 

“இந்த கைல தான் வளையல் இருக்கே அண்ணி அதான் அதுல போட்டேன்… சாப்பிடறப்ப இம்சை பண்ணும்னு நினைக்கலையே ….”, எனக் கூறியபடி கழற்றினாள். 

 

“டேய்…. ரதி காப்ப கழட்டிட்டா டா…. அந்த சாப்பாட்டு குண்டாவ எடுத்துட்டு வாங்க…. அவ காப்ப இப்போ யாரு கேட்டாலும் குடுப்பா…”, என இன்னொரு மாமன் முறை இருப்பவர் கூறியதும், நான்கு ஐந்து பேர் சாப்பாடு ரசம் சாம்பார் என வாளியுடன் வந்தனர். 

 

“சாப்பாடு நீங்களே வச்சிக்கோங்க எனக்கு தோசை வைங்க போதும்….”, அவர்களிடம் கேலி பேசி சிரித்தபடி இருக்க, “அந்த காப்பு எனக்கு தான்….”, என மற்றொரு வயதானவர் வந்தார். 

 

“தாராளமா வச்சிக்கோங்க மாமா… நான் சாப்பிட்ட அப்பறம் வந்து வாங்கிக்கறேன் …”, என அவரிடம் கொடுத்தாள். 

 

“எத்தன லட்சம் போகும் இது? இப்படி மின்னுது?”

 

“லட்சமா? அப்படி அது ஒரு லட்சம் போனா எனக்கு அம்பதாயிரம் மட்டும் குடுங்க மாமா…. அது கவரிங் மாமா…..”

 

“உங்கப்பா உனக்கு கவரிங் போட்டு விடுவாறா?”

 

“நான் போடுவேன்.. போன தடவை கல்யாணத்துல ஒரு தோடு காணாம போய் நான் வாங்கி கட்டிகிட்டது போதும்…. அதனால இப்போ கல்யாணத்துக்கு தங்கம் போடறது இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்….”, என வாய் பேசியபடி அவள் உண்டு முடித்து, அந்த காப்பை வாங்கிக் கொண்டு ஐஸ் கிரீம் உடன் கீழே சென்றுவிட்டாள். 

 

இத்தனை சம்பாசனைகளுக்கும் இடையில் அவனை அவள் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவள் ஏதோ கூறியதற்கு அவன் தலைக்குனிந்து வாய் மூடி சிரித்தது நன்றாக நினைவிருக்கிறது. 

 

அதன் பின் அடுத்த நாள் முகூர்த்தத்தில் தேடினாள், ஆனால் அவன் வரவில்லை. அதன் பின் அவளும் அவனைப் பற்றி மறந்திருந்தாள். 

 

சில நாட்களுக்கு பின், அன்று மளிகை கடைக்கு ஏதோ வாங்க சென்றபோது அவனைப் பார்த்து ஒரு நொடி யோசனையில் நின்றாள். 

 

ஸ்கூட்டியில் பொருட்களை அடுக்கியவண்ணம் அவனைப் பார்த்தாள். அவனும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். லேசாக சிரித்தது போல தோன்றியது. அவளுக்கு மனதில் ஒரு திடுக்கிடல் எழுந்து அங்கிருந்து அவனைத் திரும்பி ஒருமுறைப் பார்த்துவிட்டுச் சென்றாள். 

 

அதன் பின் அவள் கல்லூரி முடிந்து வரும் போதும், சிறிது நாட்களில் அவளது பேருந்து நிறுத்தம் அருகிலும் அவனைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 

அதுவே தொடர்கதையாகவும் மாறியது. அவனைக் காணாமல் ஒரு நாள் சென்றாலும் அந்நாள் கொடூரமாக கடப்பதாகத் தோன்றியது. எல்லாம் அவளது வயதும், ரசாயன கோளாறுகளோடு, உள்ளுக்குள் தோன்றிய காதலும் படுத்தும்பாடு என்று அவள் உணரவில்லை. 

 

இப்படியாக காலையும், மாலையும் அவனது தரிசனம், அவ்வபோது கண் கலந்து நிற்கும் பார்வைகள் என நாட்களும் பறந்தது. 

 

அன்று இரவு அவளுக்கொரு கனவு வந்தது. இவள் அவளது வீட்டின் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து அசைன்மெண்ட் எழுதிக் கொண்டிருக்க, அவன் அவள் வீட்டிற்கு வருகிறான். மெரூன் கலர் ஷர்ட், அதே சிரிப்பு முகத்தில் கொஞ்சம் தவிப்பும் இருந்தது. அவனைக் கண்டு அவள் பதற்றம் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க, “யாரும் இப்போ வரமாட்டாங்க ரதி…..”, எனக் கூறியபடி அவள் அருகில் அமர்ந்தான். 

 

“நீ எதுக்கு வந்திருக்க?”

 

“உன்ன என் வீட்டுக்கு கூட்டிட்டு போக தான். அதோ பாரு என் அப்பா அம்மா உன் அப்பா அம்மாகிட்ட பேசிட்டு இருக்காங்க…”, என ஜன்னலுக்கு வெளியே காட்ட அவர்கள் நால்வரும் அங்கு பேசிக்கொண்டிருந்தனர். 

 

“ நான் எதுக்கு உன் வீட்டுக்கு வரணும்?”

 

“என்னை லவ் பண்றல்ல… அப்போ என் வீட்டுக்கு வரணும் தானே?”, என அவன் அவளது கைப்பிடித்ததும், அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்தாள்.

 

“ச்சே…. கனவா? நிஜமா நடந்தமாறியே இருக்கு…”, என தனக்குள் பேசிக்கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு படுக்க உறக்கமே வரவில்லை. மணி பார்த்தால் அதிகாலை 5 என காட்டியது. சிறிது நேரம் கண் திறந்தே படுத்திருந்தவள் எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாராக ஆரம்பித்தாள். 

 

“அப்படி கனவு வந்ததும் திக்குண்ணு எந்திரிச்சி உக்காந்தேன் டி…. இன்னும் அத நெனைச்சா திக்குண்ணு இருக்கு….”, எனத் தோழிகளிடம் விவரித்துக் கொண்டு இருந்தாள். 

 

“அவன் கனவுல வந்தா உனக்கு ஏன் திக்குண்ணு ஆகுது?”, என ஒருத்தி கேட்கவும் தான் அவள் தன்னை அலச ஆரம்பித்தாள். 

 

“ஆமா… எனக்கு ஏன் இந்த அளவுக்கு பாதிக்கணும்?”, என்று ஆரம்பித்த கேள்வி வரிசையாக பல கேள்விகளும், சந்திப்புகளும் என மனதில் எடுத்துக்காட்ட, இறுதியாக அவன் உள்ளுக்குள் அமர்ந்துவிட்டதை உணர்ந்தாள். 

 

‘நிஜமா நான் லவ் பண்றேனா? அவனயா? இல்ல இது வெறும் ஈர்ப்பு தான்…. அவன அடிக்கடி பாக்கறதால வந்த ஈர்ப்பு…. ‘ 

 

‘அதெப்படி தினம் அதே நேரத்துல அவன் பஸ் ஸ்டாப் வரான்? சாயிந்தரமும் வரான்… அந்த நேரம் மட்டும் தான் கிரவுண்ட் போகணுமா என்ன? ஒரு நாள் கூட தவறினது இல்லயே…. நிஜமா நம்மள தான் பாக்கறானா? இல்ல வேற யாரையும் பாக்கறானா? இத எப்படி தெரிஞ்சிக்கறது?’ 

 

இப்படியாக பல இளமை கால நினைவுகள் அவளுக்குள் மேலெழுந்து வர ஆரம்பித்ததும் அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். 

 

“அப்போ எல்லாம் உங்களை பாக்கறதுக்காகவே உங்க கடை பக்கம் வருவேன்…. நீங்க வெளிய இருந்தா ஹார்ன் அடிப்பேன்…. ஒரு தடவ நீங்க செக்டு ஒயிட் சர்ட் ப்ளூ ஜீன் போட்டுட்டு, சில்வர் கலர் மொபைல்ல பேசிட்டு போயிட்டு இருந்தீங்க…அப்போ நான் விடாம ஹார்ன் அடிச்சிட்டு வந்தேன். அப்போ யார்ன்னு கோவமா திரும்பி பாத்தீங்க….”, என மெல்ல சிரிப்புடன் கூறினாள் . 

 

அவனும் மென்னகையுடன், “ம்ம்… அடிக்கடி நீ எதுவுமே வாங்காம கூட கடைக்கு வந்து போறன்னு கடை பையன் சொல்வான்…. நீ வந்தாலே என்னை பார்த்து சிக்னல் குடுப்பான்… நான் இருந்தபோ எல்லாம் நீ ஏதாவது வாங்கிட்டு தான் போன….”, எனக் கூறி அவளைப் பார்த்தான். 

 

“நீங்களே இல்லாதப்போ எனக்கு என்ன வேலைன்னு தான் எதுவும் வாங்காம போவேன்.. எங்கம்மாவுக்கு சேலை எடுக்க வந்தும் நீங்க அங்க இல்லன்னு எடுக்காமலே நிறைய தடவை போய் இருக்கேன்… “, சிரிப்புடன் அவளும் கூறினாள். 

 

“ யூ ஆர் சச் அ மேட் (u r such a mad)”

 

“ஆமா.. உங்கமேல அப்படி தான் இருந்தேன்…. அதுக்கப்பறம் உங்களுக்கு கல்யாணம் முடிவானது தெரிஞ்சி பைத்தியக்காரி மாதிரி தான் பல மாசம் இருந்தேன். வேலைக்கு வெளிய போனதால கொஞ்சம் தப்பிச்சேன்.. ஆனாலும் நைட்டு தூக்கம் வராது. உங்கள இழந்துட்டேன்னு நெனைச்சி ரொம்ப தவிச்சி இருக்கேன்… நான் தப்பு பண்ணிட்டேன்-ன்னு என்னை நானே திட்டிகிட்டே ஒவ்வொரு ராத்திரியும் போகும். சீக்கிரமே எந்திரிச்சி ஆபீஸ் போயிடுவேன்… உங்க நினைவுகள்ல இருந்து தப்பிக்க வேலைய தான் ப்ரோடெக்டரா யூஸ் செஞ்சேன்… “

 

“ரதி…. நான் உன்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசினது இல்ல.,… ஆனாலும் எப்படி நீ இப்படி என்மேல நேசம் வச்சிருந்த?”

 

“பேசினா தான் நேசம் வருமா ராக்கி? என்னமோ தெர்ல உன்மேல கண்மூடித்தனமா அப்டி ஒரு நேசம்… உன்கிட்ட பேசவே நான் ஆசைப்படலை.. உன்ன இப்படியே கொஞ்ச நாள் தூரம் இருந்தே பார்த்துட்டே இருக்க தான் நெனைச்சேன். PG படிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை… அது முடிச்சிட்டு உன்கிட்ட பேசலாம்ன்னு நெனைச்சு இருந்தேன்….”, எனக் கூறி அவனைப் பார்த்தபடி அங்கிருந்த டேபிளில் சாய்ந்து நின்றாள். 

 

அவன் அவள் அருகில் அதே போல வந்து நின்று அவள் முகத்தைப் பார்த்தான். 

 

“இப்படி பேசாம இருந்தப்போ கூட, நான் நினைச்ச நேரம் நீ என் கண் முன்னாடி வந்திருக்க… அது எதேர்ச்சையா கூட இருந்து இருக்கலாம். ஆனா நான் தேடின ஒவ்வொரு தடவையும் நீ என் கண் முன்னாடி வந்த… அது ஒரு மேஜிக்கல் கனெக்சன் போல தோணிச்சி… அந்த உணர்வு எனக்கு ரொம்ப பிடிச்சது….. வார்த்தையே இல்லாம ஒரு புரிதல் நமக்குள்ள உருவான மாதிரி…… அத நம்பி தான் நானும் அமைதியா பாத்துட்டு மட்டுமே இருந்துட்டேன் போல….”, எனக் கூறி அவன் கண்களைப் பார்த்தாள். 

 

“இந்த கண்ல நான் மட்டுமே தான் இருக்கேன்னு நெனைச்சிட்டேன் …”, என அவன் அருகில் வந்து அவன் கண்களைப் பார்த்துக் கூறினாள். 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்