ஊஞ்சல் 5
“சொல்லுடா?”
“நீ தான்டா சொல்லணும்!”
“ஒரே குழப்பமா இருக்கு தினேஷ். ஆனந்தியோட கேஸை முடிக்கச் சொல்லி பிரஷர் பண்றாங்க. அவளோட அம்மா, அப்பாவும் ஒத்துழைக்காம எங்களுக்கு எதுவுமே தெரியலன்னு அழறாங்க.”
“தற்கொலைன்னு ரிப்போர்ட் வந்ததுக்கு அப்புறம் உன்னோட சந்தேகம் தேவையில்லாதது.”
“தற்கொலையாவே இருக்கட்டுமே, அதுக்கான காரணம் என்ன?”
“அதைத்தான் நேத்தே நான் கண்டு பிடிச்சுச் சொல்லிட்டேனே. அந்தப் பொண்ணுக்கு ஒருத்தன் லவ் டார்ச்சர் குடுத்து இருக்கான்னு. அவனுக்குப் பயந்து இப்படிப் பண்ணி இருக்கலாம்.”
“இதை என்னால ஏத்துக்க முடியல தினேஷ். அவனை விசாரிச்ச வரைக்கும் எந்தச் சந்தேகமும் வரல எனக்கு. ரிசப்ஷன் நடக்கப் போறதுக்கு முன்னாடி அவளைப் பார்க்க ட்ரை பண்ணி இருக்கான் அவ்ளோதான்.”
“ஆனந்திக்கு விடாமல் போன் பண்ணி இருக்கான்.”
“என் சந்தேகமே இங்கதான். ஆனந்தியோட போன் எங்க போச்சு? அந்த மரத்துல இருந்த அடையாளம் யாரோடது. என்னைக் கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதம் சொன்ன ஆனந்தி மறுநாள் கல்யாணத்தை வச்சுகிட்டு எதுக்காக இப்படிப் பண்ணனும்?”
“இப்ப என்ன தான்டா சொல்ல வர?”
“ஆனந்தியோட போன் கிடைச்சா தான் இது தற்கொலையா? கொலையான்னு முடிவு பண்ண முடியும்.”
“மூணு நாளா தேடிட்டு இருக்கோம், கிடைச்ச பாடு இல்ல.”
“இப்ப நான் அங்கதான் போயிட்டு இருக்கேன், நீயும் வா. இன்னைக்குள்ள அந்த போனைக் கண்டு பிடிச்சே ஆகணும்.”
ஆனந்தியின் உடற் கூராய்வு தற்கொலை என்று வந்துவிட அவள் பின்னால், ஒரு தலை காதலோடு சுற்றிக் கொண்டிருந்த ஒருவனைக் கண்டு பிடித்தவர்கள் விசாரிக்க, ஆனந்தியோடு ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவன். மூன்று ஆண்டு காலமாகக் காதலித்து வந்திருக்கிறான். அவன் மீது நாட்டம் இல்லாதவள் நிராகரிக்க, திருமண விஷயம் கேட்டதிலிருந்து அதிகளவு தொந்தரவு செய்திருக்கிறான்.
உடற்கூராய்வுத் தகவலையும் இவனையும் வைத்து அவள் மரணத்திற்கான காரணத்தை முடிவு செய்தவர்கள் வழக்கை முடிக்க உத்தரவிட்டார்கள். திருமேனி ஆவுடையப்பனுக்கு இதில் துளியும் விருப்பமில்லை. அவனைப் பொறுத்தவரை மணக்கவிருந்த பெண்ணின் மரணத்திற்குப் பின்னால் வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்று ஆணித்தரமாக நம்புகிறான்.
மண்டபத்தையும் அதனைச் சுற்றி இருந்த இடத்தையும் இருவரும் சேர்ந்து அலசி விட்டார்கள். அலுவலகம், வீடு, தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரையும் தீர விசாரித்து விட்டார்கள். சந்தேகப்படும்படி ஒரு தகவலும் கிடைத்த பாடில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திருமேனி ஆவுடையப்பன் அமர்ந்திருக்க, கைபேசி ஒலித்தது.
“ஹலோ!”
“ஹூ இஸ் திஸ்?”
“பார்த்திகா பேசுறேன்…”
“யாரு?”
“பார்த்திகா…”
சட்டென்று நினைவு வரவில்லை அவனுக்கு. கட்டிய மனைவி எதிர்ப்புறத்தில் படபடக்கும் விழியோடு காத்திருக்க, “யார் நீங்க? என்ன விஷயமாய் கூப்பிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டதும் அந்தப் படபடப்பு அடங்கி விட்டது.
“நான் பார்த்திகா திருமேனி ஆவுடையப்பன்.”
அப்பொழுதுதான் தாலி கட்டியவளின் பெயர் நியாபகத்திற்கு வந்தது. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், “என் நம்பர் எப்படிக் கிடைச்சுது?” என விசாரித்தான்.
“அத்தை கிட்ட வாங்குனேன்…”
“சரி, என்ன விஷயம்?”
“காலைல சொல்லி இருந்தேனே, மதிய சாப்பாடு பத்தி.”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம், நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன்.”
“இல்ல திரும்மா, இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.”
“வேணாம்னு சொன்னா விடனும். எனக்கு இங்க ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. சோறு திங்கலாம் தனியா நேரம் ஒதுக்க முடியாது.”
நண்பன் அலைபேசி அழைப்பைத் துண்டிக்கும் வரை பொறுத்து இருந்தவன், “ஏண்டா, அந்தப் பொண்ணுகிட்ட இப்படிப் பேசுற?” எனக் கேட்டான்.
“எப்படிப் பேசுறேன்?”
“ப்ச்! அந்தப் பொண்ணு மேல உனக்குக் கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லையா? காலேஜ்ல தான் அவாய்ட் பண்ண, இப்போ உன்னோட ஒயிஃப்டா அவ. இப்பவும் மனசாட்சி இல்லாம அதையே பண்ற.”
“இங்கப் பாரு தினேஷ், நான் அவளை எப்பவும் அவாய்ட் பண்ணதில்லை. காலேஜ் படிக்கும் போது இந்தக் காக்கிச் சட்டை மட்டும்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சது. விதியோ, சதியோ அவ தங்கச்சி வரைக்கும் போயி, திரும்ப என் வாழ்க்கைக்குள்ள என் அனுமதி இல்லாமல் வந்திருக்கா. என்னால போலியா சிரிக்க முடியாது. அதுவுமில்லாம ஆனந்தியோட கேஸ் முடிஞ்சாதான் என் லைஃபை பத்தியே நான் யோசிக்கணும்.”
“நீ சொல்றது புரியுதுடா. இருந்தாலும் கொஞ்சம் தன்மையாப் பேசலாம்ல.”
“என் பேச்சே இப்படித்தான்னு உனக்குத் தெரியாதா?”
“எப்பதான் புரிஞ்சி நடந்துக்கப் போறியோ?” என்று தினேஷ் அங்கிருந்து சென்றுவிட, தன் காவல் நிலையம் நோக்கிப் புறப்பட்டான் திருமேனி ஆவுடையப்பன்.
********
அவன் அறைக்கு வரும் முன் ஆனந்தி வழக்குச் சம்பந்தமாக ஒருவர் பேச வந்திருந்தார். அவரிடம் பேசி முடித்து அறைக்குள் நுழைந்தவன் பற்களைக் கடித்தான். பார்த்திகா உணவுக் கூடையோடு அவன் வந்ததும் தலையைத் தாழ்த்திக் கொள்ள,
“நந்த கோபால்…” கத்தினான்.
“சார்…”
“இன்னொரு தடவை என் பர்மிஷன் இல்லாம நான் எங்க இருக்கன்ற விஷயத்தை யார் கிட்டயாவது சொன்னீங்க, மனுசனா இருக்க மாட்டேன்.”
“சாரி சார்.”
“போங்க…”
கணவன் மிரட்டலில், “அவர் மேல எந்தத் தப்பும் இல்லை. நான்தான் அத்தைகிட்ட அவரோட நம்பரைக் கேட்டுப் பேசினேன்.” என்றாள்.
“இதான் உனக்குக் கடைசித் தடவை. என் வேலையைத் தொந்தரவு பண்ற மாதிரி யார் நடந்து கிட்டாலும் எனக்குப் பிடிக்காது. அதனாலதான் குடும்ப வாழ்க்கையைப் பத்தி யோசிக்காமல் இருந்தேன்.”
“சாரி திரும்மா.”
“வீட்டுக்குக் கிளம்பு.”
அவன் சொல்லிப் பத்து நிமிடங்கள் கடந்துவிட்டது. பார்த்திகா இருக்கும் இடத்தை விட்டு நகரவில்லை. பெருமூச்சு விட்டபடி தன் இருக்கையில் அமர்ந்தவன், “போடு” என்றதும்,
“நிஜமா!” எனச் சிறிய விழிகளை விரித்தாள்.
அகண்ட விழிகளும் அதனுள் துடித்துக் கொண்டிருந்த கருவிழியும், புன்னகை ததும்பிய அவளது இதழ்களும், மலர்ந்திருந்த முழு மதி முகமும் அவனுக்குள் இருந்த அனைத்துக் கோபத்தையும் விரட்டி அடித்தது.
இப்போதுதான் அவள் முகத்தை முழுதாகக் காண்கிறான். கல்லூரிக் காலத்தில் முதிர்ச்சி பெறாத முகம் இப்பொழுது முழு முதிர்ச்சியோடு பக்குவப் பட்டிருக்கிறது. உயரம் கூடச் சற்று உயர்ந்திருப்பது போல் தெரிந்தது, அவள் அணிந்திருந்த ஆடையில். மல்லிகைப்பூ என்றால் மிகவும் பிடிக்கும் போல. எப்பொழுதும் அந்தப் பூவோடுதான் காட்சி தந்திருக்கிறாள் பார்த்திகா. அதுவும் இடது பக்கத் தோளில் தான் தொங்கிக் கொண்டிருக்கும். நீண்ட கழுத்தில் மெல்லியதாக ஒரு தங்கச் சங்கிலி. அதன் அருகில் இருவருக்கும் சொந்தமான மஞ்சள் நிறக் கயிறு.
அதையும் இன்று தான் கவனிக்கிறான். இவள் உன்னவள் என்ற நினைவு வெகுவாக மனதைத் தாக்கியது. என்ன இருப்பினும் அந்த உணர்வு சிறு புன்னகையை உருவாக்க, வெளிக்காட்டவில்லை கள்ளன். போலீஸ்காரன் முழுவதுமாக அவளை எடை போட, அன்றும் இன்றும் மாறாமல் அவள் கையில் அவளுக்காக இருந்தது நீல நிறக் கல் மோதிரம்.
“என்ன மோதிரத்துல கல் உடைந்து இருக்கு?”
திருமேனி ஆவுடையப்பனின் கேள்வியில் உடல் நடுக்கம் கொண்டது. கையில் பிடித்திருந்த உணவுக் கூடை அந்த நடுக்கத்தை எதிரில் இருந்தவனுக்குக் காட்ட, “என்னாச்சு?” எனக் கேட்டான்.
அதை உணரும் நிலையில் இல்லாதவள் அன்றைய நாளை நினைத்தாள். உணர்வின்றி நிற்பவள் அருகில் சென்றவன் தோளில் கை வைக்க, “ஆஹான்!” அலறினாள்.
“நான் தான்… ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்!”
“ஆ..ஆங்… ம்ம்!”
“திடீர்னு என்னாச்சு?”
“ஒன்னும் இல்லங்க, கொஞ்சம் தலை சுத்துற மாதிரி ஆயிடுச்சு.”
“இதுக்கு தான் சொன்னேன். இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணாதன்னு.”
எதையோ புரிந்து கொண்டவள், “தெரியாமல் செஞ்சிட்டாங்க… சத்தியமா அந்த நேரம் எனக்கு வேற வழி தெரியல” என்றிட,
“என்ன உளறிட்டு இருக்க?” கேட்டான்.
அதையும் செவி மடுக்காமல் உதட்டுக்குள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்க, “ஓய்!” தோள் தொட்டான்.
“ஹான்!”
“நான் என்ன கேட்டுட்டு இருக்கேன், நீ என்ன பேசிட்டு இருக்க? முதல்ல அப்படி வந்து உட்காரு.”
சிறிது நேரம் தேவைப்பட்டது தன் நிலையை உணர்ந்து கொள்ள. அதுவரை அவளுக்கான நேரத்தைக் கொடுத்தவன் தண்ணீரை நீட்ட, அருந்தினாள்.
“லைட்டா மயக்கம் வர மாதிரி ஆயிடுச்சு, அதுல தான் சோர்ந்து போயிட்டேன்.”
“இனிமே எனக்குச் சாப்பாடு எடுத்துட்டு வரேன்னு எங்கயும் அலையாத. கொஞ்ச நேரம் இரு, நானே உன்னை வீட்ல விடுறேன்.”
“ம்ம்” என அவள் யோசனையில் அமர்ந்திருக்க வேறு வேலையாகச் சென்றவன் அரை மணி நேரம் கழித்து, “சாப்பிடலாமா?” எனக் கேட்க, “நானுமா!” ஆச்சரியத்தில் கேட்டாள்.
“ம்ம், ஆனா இங்க இல்ல வெளிய.”
இருவரும் காவல் நிலையத்திற்குப் பின்புறம் இருந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். காவலர்கள் தேநீர் அருந்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் அது. தான் சமைத்த அனைத்தையும் மேஜை மீது வைத்து அழகு பார்த்தவள், பரிமாறி அவன் சாப்பிடும் அழகையும் பார்த்தாள்.
உணவை வாயில் வைக்கும் வரை கடமைக்காக அமர்ந்திருந்தவன் மயங்கி நின்றான் அதன் சுவையில். அடுத்த வாய் உடனே வேண்டும் என்றது சுவைபட்ட நாக்கு. எதிரில் அவள் இருப்பதை மறந்தவன் பாதி உணவை உண்டபின் தான்,
“நீ இவ்ளோ நல்லா சமைப்பியா? சத்தியமா ஷாக்கிங் சர்ப்ரைஸ்! உன்கிட்ட இதை எக்ஸ்பெக்ட் பண்ணல.” புகழ்ந்து தள்ளினான்.
முதல்முறையாகத் தன்னவனிடமிருந்து கிடைக்கும் பாராட்டில் தன்னை மறந்து போனாள். இந்த ஒரு வார்த்தைக்காகத் தானே தெரியாத சமையலை, அவனுக்காக அன்னையின் பின்னால் சுற்றித் திரிந்து கற்றுக் கொண்டாள். அவனுக்குப் பிடித்ததைத் தெரிந்து கொண்டு சமைப்பவள் இல்லாத காதலனுக்கு கற்பனையில் ஊட்டி மகிழ்வாள்.
பலமுறை அவளது திருமேனி ஆவுடையப்பன் கற்பனையில் புகழ்ந்து இருக்கிறான். ஆசையாகச் சமைத்தவளுக்கு ஆயிரம் முத்தங்களை வழங்கி இருக்கிறான். அதன் தாக்கத்தை உணர்வாளே தவிர உண்மையை உணர்ந்ததில்லை. இந்த நொடி தாக்கத்தையும் தாண்டி உண்மையான உணர்வு இதயத்தைப் பனிப் பிரதேசத்தில் தள்ளியது.
“இன்னும் சாப்பிடுங்க”
“போதும்…”
“என்னது போதுமா? நாலு ஐட்டம் தான் சாப்பிட்டு இருக்கீங்க, இதெல்லாம் யாரு சாப்பிடுறது?” என அவள் கை காட்ட, அவனுக்காகக் காத்திருந்த உணவுகள் ஏராளம்.
“இவ்ளோத்தையும் எப்படி சமைச்ச?”
“இந்தக் கையால தான்”
“சூப்பர் காமெடி! வீட்டுக்கு வந்து சிரிக்கிறேன்.”
“சிரிக்கிறதுக்காகச் சொல்லல, சமைச்ச கைக்கு ஏதாச்சும் வாங்கித் தரனும்னு சொல்றேன்.”
“போலீஸ்காரன் கிட்டயே லஞ்சமா?”
“போலீஸ்காரனோ, ஆட்டோக்காரனோ? பொண்டாட்டி சமைச்சா வாங்கித் தந்தே ஆகணும்ங்றது விதி.”
“அதான… உடனே உங்க பொண்டாட்டி ஆயுதத்தைத் தூக்கிடுவீங்களே.”
“பவர்ஃபுல் ஆயுதம் இன்ஸ்பெக்டரே… சாய்ந்திரம் வீட்டுக்கு வரும்போது வெறும் கையோடு வந்தீங்க, ஆயுதம் வேலை பார்த்துரும்.”
“உத்தரவு மேடம்” என்றவன் அவள் எடுத்து வந்த அனைத்தையும் ருசி பார்த்து விட்டுக் கை கழுவச் சென்றான்.
சிந்திக் கிடந்த சாதமும், மீந்திருந்த குழம்பும் கலைந்திருந்த இனிப்பும் அவள் காதலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதினாள். அவை அனைத்தையும் விட அவன் உண்ட தட்டு தாஜ்மஹாலின் அழகை மிஞ்சியது கண்களுக்கு.
அதை எடுத்தவள் கண் சிமிட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தாள்.
கை கழுவச் சென்றவன் நாவில் இன்னும் அதன் சுவை அப்படியே இருந்தது.
அதில் சிலாகித்துப் போனவன் சாப்பிட்ட உணவு ஒவ்வொன்றையும் நினைத்துக் கொள்ள, அப்பொழுதுதான் புத்திக்கு உரைத்தது. இன்று அவன் சாப்பிட்ட அனைத்தும் அவனுக்குப் பிடித்த உணவு என்று.
இனிப்பு முதல் காரம் வரை அவனுக்குப் பிடித்த பாவக்காய் ஊறுகாயைக் கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் எடுத்து வந்திருந்தாள்.
ஆச்சரியம் தாங்காது அவளைக் காண ஓடி வந்தவன் அப்படியே நின்றான்,
“எத்தனை தடவை திரும்மா சொல்றது? இந்த மாதிரிச் சாப்பிடாதீங்கன்னு. போடுற சாப்பாடு எல்லாத்தையும் இப்படித் தட்டுலயே வச்சிருந்தா எப்படி உடம்புல ஒட்டும்? அடுத்த தடவை இதே மாதிரி செஞ்சீங்க, ஊட்டி விட்டுடுவேன். பார்த்துக்கோங்க.” எனப் பேசிக் கொண்டிருந்ததில்.
ஊஞ்சல் ஆடும்…
அம்மு இளையாள்.