Loading

அத்தியாயம் 5

 

மாலிலிருந்து வீட்டிற்கு வரும் வழியெல்லாம் மயூரனிடம், பல வகையில் கேட்டு பார்த்து விட்டான் பாஸ்கர், அவன் இறுகி இருப்பதற்கான காரணத்தை. ஆனால், அவை எதற்கும் பதில் சொல்லாமல், அவன் அறைக்குள் நுழைந்து பட்டென்று கதவையும் அடித்து சாற்றிக் கொண்டான் மயூரன்.

 

“ப்ச், இவனும் இப்படி இருக்கான். அந்த பொண்ணோட முகமும் சரியா இல்ல. அப்படி என்ன தான் நடந்துச்சு?” என்று கிஷோர் வினவ, “ஆமா கிஷோர், துவாவோட முகத்தை பார்த்தப்போவே ஏதோ பெருசா நடந்துருக்குன்னு புரிஞ்சுது. என்னன்னு கேட்டா இவனும் சொல்ல மாட்டிங்குறான். ம்ச், எப்பவும் சிரிச்ச முகமா இருக்கும் அந்த பொண்ணு. இன்னைக்கு முகமே களையிழந்து, பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு கிஷோர்.” என்று அவளுக்காக வருந்தினான் பாஸ்கர்.

 

பாஸ்கரின் பேச்சு எல்லாம் மூடிய அறைக்குள் இருந்த மயூரனுக்கும் கேட்டுக் கொண்டு தான் இருந்தது.

 

அதில் அவனுமே, ‘கொஞ்சம் ஓவரா பேசிட்டேனோ?’ என்று எண்ண, அவனின் மனமோ, ‘இது நடக்கலைன்னா இன்னும் டார்ச்சர் பண்ணிட்டு தான் இருப்பா. இனிமே, அதுலயிருந்து விடுதலைன்னு நினைச்சுக்கோ.’ என்றது.

 

‘இருந்தாலும்… நான் பேசுனது ஓவர் தான். இது கோபி சாருக்கு தெரிஞ்சா…’ என்று அவன் அதிலேயே இருக்க, ‘தெரிஞ்சா, வேலை போயிடும். இப்படி அந்த பொண்ணுக்கு பயந்துட்டு நிம்மதி இல்லாம வேலை செய்யுறதுக்கு பதிலா, திரும்ப வேலை தேட ஆரம்பிக்கலாம்.’ என்று காட்டமாக எடுத்துரைத்தது அவனின் மனம்.

 

அது அத்தனை எளிதில்லை என்பது அவனுக்கும் அவன் மனதிற்கும் தெரிந்து தான் இருந்தது. எனினும், சுயம் தொலைத்து, தன்மானத்தை அடகு வைத்து, அவனால் அங்கு அதிக காலம் தாக்கு பிடிக்க முடியாது என்றே தோன்றியது.

 

‘எதுவா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம்!’ என்று முயன்று தன்னைத்தானே தேற்றியபடி படுத்துறங்கினான் மயூரன்.

 

*****

 

மறுநாள் விழித்ததிலிருந்து பாஸ்கர் முகம் கொடுத்து பேசாமல் இருக்க, இருமுறை முயன்று பார்த்த மயூரன், அதற்கு மேல் அவனும் கோபம் கொண்டு வேலைக்கு கிளம்பி விட்டான்.

 

என்னதான் தைரியமாக வந்து விட்டாலும், எப்போது தன்னை அழைப்பார்கள் என்று திக்திக்கென்று தான் அடித்துக் கொண்டது அவன் மனம்.

 

அவன் செய்ததும் தவறு தானே! அதுவே அவனைக் குற்றவுணர்ச்சியில் தள்ளியும் இருந்தது.

 

மதியம் வரை வேலையில் கவனமில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தவன், அதற்கு மேல் முடியாததென்று அசோகனை தேடிச் சென்று, “சார், கோபிநாத் சார் கிட்ட டிசைன் பத்தி பேசணும். சார் எப்போ ஃப்ரீயா இருப்பாரு?” என்று கேட்டே விட்டான் மயூரன்.

 

“அட, சார் இன்னைக்கு ஆஃபிஸுக்கு வரலையே மயூரன். உங்களுக்கு தெரியாதா?” என்று அசோகன் கூற, மயூரனின் குற்றவுணர்ச்சி அதிகரித்தது.

 

“ஓஹ்… எப்போ வருவாரு சார்?” என்று மயூரன் யோசனையுடன் கேட்க, “தெரியலபா. துவா பாப்பாக்கு உடம்பு முடியல போல. பாப்பாக்கு முடியலன்னா சார் துவண்டு போயிடுவாரு. தாய் இல்லாத பொண்ணு வேற. தனியா எப்படி சமாளிக்கிறாரோ?” என்று அசோகன் புலம்ப, அவரின் ஒவ்வொரு வார்த்தையும் மயூரனை பலமாக தாக்கியது.

 

‘என்ன இருந்தாலும், நீ அப்படி பேசியிருக்கக் கூடாது மயூரா.’ என்று அவனின் மனம் ஜகா வாங்க, பரிதவித்து தான் போனான் மயூரன்.

 

அவன் தான், இதுவரை யாரையும் இத்தனையாக காயப்படுத்தியது இல்லையே. அதன் தாக்கம் தான் இப்போது அவனை பந்தாடிக் கொண்டிருந்தது.

 

‘வீட்டுக்கே போய் பார்த்து சாரி சொல்லிட்டு வரலாமா?’ என்று தோன்ற, உடனடியாக அதை செய்ய முடியாமல் தயங்கி, தவிர்த்து, அந்த ஒரு நாளை கடத்தியவன், அடுத்த நாள் குற்றவுணர்வின் கனம் தாங்க முடியாமல் நேராக அசோகனிடம் சென்று கோபிநாத்தை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று பணியை காரணம் காட்டி கூறினான்.

 

அவரும் கோபிநாத்திடம் கேட்டு விட்டு, அவரின் விலாசத்தை மயூரனிடம் கொடுத்தார், ஆராய்ச்சி பார்வையுடன் தான்!

 

கோபிநாத்தின் மாளிகைக்கு வந்தவனிடம், அத்தனை நேரமில்லாத தயக்கம் வந்து ஒட்டிக்கொள்ள, வாசலிலேயே தேங்கி நின்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்.

 

சிறிது நேரத்தில் அவனருகே வந்த பணியாளர் ஒருவர், “தம்பி, உங்களை சார் உள்ள கூட்டிட்டு வர சொன்னாரு.” என்று கூறியதும் தான், சஞ்சலத்தை கைவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

 

நடுகூடத்தில், ஆடம்பரமான நீள்சாய்விருக்கையில் அமர்ந்து, அவனுக்காக காத்துக் கொண்டிருந்தார் கோபிநாத். ஆனால், அவரிடம் எப்போதும் இருக்கும் கம்பீரம் தொலைந்திருந்தது.

 

மயூரனைக் கண்டதும், “வாங்க மயூரன். என்ன விஷயம்? ஏதோ டிசைன் சம்பந்தப்பட்டதுன்னு அசோகன் சொன்னாரு.” என்றார் கோபிநாத்.

 

அவரின் முகம் நிர்மலமாக இருந்தாலும், மயூரனிடம் எப்போதும் காட்டும் நட்புறவு அவரின் குரலில் மறைந்து போயிருந்தது.

 

ஒரு பெருமூச்சுடன், வேலை பற்றிய உரையாடலை துவங்கி கால் மணி நேரத்தில் முடித்திருந்தான் மயூரன்.

 

கிளம்பும் நேரத்தில் மனதின் அழுத்தம் தாங்காமல், “மேம் எப்படி இருக்காங்க சார்?” என்று கேட்டும் விட, நொடிக்கும் அதிகமான பார்வையை அவன் மீது செலுத்திய கோபிநாத்தோ, “இருக்கா… மொத்த சந்தோஷத்தையும் இழந்துட்டு… என்ன காரணம்னு கேட்டா… அம்மாவை கூட்டிட்டு வான்னு சொல்றா…” என்ற போது அவரின் குரல் உடைந்திருந்தது.

 

‘ப்ச், எல்லாம் உன்னால தான். வேற எதை பண்ணியாவது அவளை அவாயிட் பண்ணி இருக்க முடியாதா என்ன?’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவனின் மனம் சொல்லாமலேயே அந்த நிகழ்விற்கு சென்றது.

 

*****

 

அந்த மாலில் இருந்த மல்டில்ப்லெக்ஸ்  தியேட்டருக்குள் சென்றனர் நால்வரும். முதலில், மயூரன் சென்று அமர்ந்து விட, அவனை தொடர்ந்து செல்லப் போன பாஸ்கரை தடுத்து விட்டு, முன்னே சென்றாள் துவாரகா.

 

அவள் செய்கைகளை எல்லாம் சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கிஷோரிடம், “இன்னைக்கு என்னை வச்சு செய்யப் போறான்டா.” என்று புலம்பியவாறே சென்று அமர்ந்தான் பாஸ்கர்.

 

துவாரகாவை பார்த்த மயூரன், அவளை தாண்டி அமர்ந்திருந்த பாஸ்கரை முறைக்க, அவனோ அந்த பக்கம் திரும்புவேனா என்று கிஷோருடன் கதை பேசியபடி இருந்தான்.

 

“என்ன மய்யூ…ரன், என்னை பார்த்ததுல உங்களுக்கு ஹாப்பி இல்ல போல.” என்று துவாரகா உதட்டைப் பிதுக்கி கேட்க, “நாம தான் டெயிலியும் பார்க்குறோமே மேம். இதுல என்ன ஹாப்பிநெஸ் கிடைக்கப் போகுது?” என்று என்றும் இல்லாத வழக்கமாக பேசிவிட்டான் மயூரன்.

 

அவனும் எத்தனை நாட்கள் மனசாட்சியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பான்?

 

“தியேட்டருக்கு வந்தா தான் உங்களுக்கு பேசவே வருது போல? இனிமே, வீக்கெண்ட் வீக்கெண்ட் தியேட்டருக்கு வந்துடுவோம், நம்ம டேட்டிங்கு. என்ன ஓகேவா?” என்று துவாரகா கண்ணை சிமிட்டி சிரிக்க, எரிச்சலில் பேச வந்தவனை தடுத்து விட்டது படத்தின் துவக்கம்.

 

ஆனால், அன்றைய தினம் அவன் பேசியே தீர வேண்டும் என்பது தான் விதி போலும்!

 

முதல் பாதி படம், அவளின் பேச்சோடும் சீண்டலோடும் கடந்திருக்க, இடைவேளையிலும் ஒட்டிக்கொண்டு வந்தவளை, “மேம்… ரெஸ்ட்ரூம் போறேன்.” என்று பல்லைக்கடித்து கூறி, தனியே வந்திருந்தான் மயூரன்.

 

உடன்வந்த பாஸ்கர் அவனை பாவமாக பார்க்க, அவனை முறைத்து விட்டு கடந்து விட்டான் மயூரன்.

 

பாஸ்கருக்கே தெரிந்திருந்தது துவாரகா சற்று அதிகமாக மயூரனை படுத்துகிறாள் என்பது.

 

அவனும் வேறு என்ன செய்வான்? கிஷோரிடம் தான் புலம்பினான்.

 

மீண்டும் படத்தை பார்க்க சென்றால், அங்கு பாப்கார்ன், ஐஸ்க்ரீம், ஃபிரன்ச் ஃப்ரைஸ், பப்ஸ், கோக் என்று அனைத்தையும் வாங்கி வைத்து அமர்ந்திருந்தாள் துவாரகா.

 

“மய்யூ…ரன், ஆல் செட்! உங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரியாததால எல்லாமே வாங்கிட்டேன்.” என்று சிரிப்புடன் துவாரகா கூற, மயூரனோ பாஸ்கரை மீண்டும் முறைத்து விட்டு, அவனிடத்தில் சென்று அமர்ந்தான்.

 

படம் ஆரம்பமாக, துவாரகாவின் பேச்சும் ஆரம்பமானது. அது மயூரனுக்கு தலைவலியையும் கொடுத்தது.

 

ஒரு கட்டத்தில் சுத்தமாக முடியாமல் போக, “வில் யூ பிளீஸ் ஸ்டாப்?” என்று அடிக்குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கத்தியிருந்தான் மயூரன்.

 

பணியிடம் என்றிருந்தால், அதைக் கொண்டு கட்டுப்படுத்தி இருப்பானோ என்னவோ, இது பொது இடம் என்பதாலும், அவன் மனநிலை சீராக இல்லாததாலும், எந்த கட்டுப்பாடும் இன்றி வந்து விழுந்திருந்தன வார்த்தைகள்.

 

அதில், துவாரகா முதலில் அதிர்ந்தாலும், அவன் எப்போதும் பேசாமல் இருப்பதற்கு இது தேவலாம் என்று அவளுக்கு தோன்றியது போலும், “அட, மய்யூ…ரன், என்மேல கோபம் கூட வருதே உங்களுக்கு! இன்னைக்கு உங்களுக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு வந்தா, நீங்க தான் எனக்கு ஷாக்கும் சர்ப்ரைஸுமா குடுக்குறீங்க போங்க.” என்றதும், அவன் முறைக்க, “ஓகே ஓகே, நான் பேசல.” என்று வாயை மூடுவது போல சைகை செய்து, அவனை படத்தை பார்க்குமாறு கூறினாள்.

 

ஆனால், அவள் பேசுவதே மேல் என்று எண்ணும் வகையில் இருந்தன அவளின் அடுத்தடுத்த செயல்கள்!

 

பத்து நிமிடங்கள் அமைதியாக கழியவும், நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், மயூரனின் கரம் கோர்த்து தோளில் சாய்ந்திருந்தாள் துவாரகா.

 

கண்களை இறுக்க மூடி கோபத்தை கட்டுப்படுத்தியவன், அவள் தலையையும் கரத்தையும் விலக்க முயற்சிக்க, அதற்கு விடுவாளா அவள்?

 

“ப்ச், நான் தான் பேசலையே மய்யூ…ரன்! இதுக்கு கூட விட மாட்டீங்களா?” என்று ஏக்கமாக ஒலித்தது அவளின் குரல்.

 

அது மேலும் அவனை எரிச்சல் படுத்த, “நான் உங்க அப்பா கம்பெனில வேலை தான் செய்யுறேனே தவிர, உங்க அடிமை இல்ல.” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கூற, வெடுக்கென்று அவனை விட்டு விலகியவள், கண்களில் வலியுடன் அவனை திரும்பி பார்த்தாள்.

 

“நான் எப்போ உங்களை அடிமையா ட்ரீட் பண்ணேன் மயூரன்? இன்ஃபேக்ட், இந்த உலகத்திலேயே, என் அப்பாக்கு அடுத்த இடத்துல உங்களை தான் வச்சுருக்கேன். என்னை போய்… இட்ஸ் டூ பேட் மயூரன்.” என்று உடைந்த குரலில் கூறினாள் துவாரகா.

 

அவளின் தடுமாற்றத்தை கவனிக்கும் நிலையை எல்லாம் தாண்டி விட்டான் மயூரன்.

 

“அவ்ளோ இம்பார்டன்ஸ் குடுக்குற அளவுக்கு நான் யாரு உங்களுக்கு? அப்படி என்ன செஞ்சுட்டேன்? என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? என்னை எவ்ளோ நாளா தெரியும்? நீங்க பண்ணிட்டு இருக்குறதுக்கு பேரு லவ்வா? லவ் ஒன்னும் கட்டாயப்படுத்தி வர வைக்குறது இல்ல. அது ஒரு ம்யூச்சுவல் ஃபீலிங். அந்த ஃபீலிங், உங்க மேல எனக்கு இல்ல. வரவும் வராது.” என்று ஆணித்தரமாக கூறினான் மயூரன்.

 

இதுவரை அவன் பேசியவை அனைத்தும் சரியே. அவன் இத்தனை நாட்களாக மனதிற்குள் பூட்டி வைத்தவைகளை வார்த்தைகளாக கொட்டி விட்டான். 

 

இத்துடன் விட்டிருந்தால் இரு பக்கமும் அதிக சேதாரம் இல்லாமல் முடிந்திருக்கும்.

 

ஆனால், அப்படியே விட இருவருக்கும் விருப்பம் இல்லை போலும்!

 

அவன் பேசியதைக் கேட்ட துவாரகாவுக்கோ அப்போதும் காதலுக்கான விளக்கம் புரியவில்லை, புரிந்து கொள்ள அவளும் முயற்சிக்கவில்லை.

 

“இப்போ வேணா லவ் இல்லன்னு சொல்லுங்க. ஆனா, வரவே வராதுன்னு நீங்க எப்படி சொல்லலாம்? அதுக்காக தான் இவ்ளோ எஃபோர்ட்ஸ் நான் போடுறேன். ஒருநாள் இல்ல ஒருநாள், என்மேல லவ் வந்து தான ஆகனும்!” என்று நிதானம் இழந்து பேசினாள் துவாரகா.

 

மனதிற்கு பிடித்தவனை தவற விட்டு விடுவோமோ என்ற பதற்றம் அவளை அத்தனை அவசரமாக பேச வைத்திருந்தது.

 

மயூரனுக்கோ அவளின் பேச்சைக் கேட்டு ஆயாசமாக இருந்தது.

 

புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே என்ற கோபத்தில், “இப்படி பைத்தியக்காரத்தனமா பண்ணிட்டு இருந்தா, எனக்கு மட்டுமில்ல, யாருக்கும் உங்க மேல லவ் வராது. ப்ச், சொன்னா புரியவே செய்யாதா உங்களுக்கு. உங்களால உங்க அப்பா எவ்ளோ கஷ்டப்படுறாரு தெரியுமா? அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப் போகுது? இதைப் பத்தி உங்க கிட்ட பேசவும் முடியாம… ப்ச், அம்மா இருந்திருந்தா சொல்லி வளர்த்திருப்பாங்களோ என்னவோ?” என்று அவன் பேசிக் கொண்டே இருக்க, துவாரகாவோ அவன் வார்த்தைகளில் உறைந்து தான் போயிருந்தாள்.

 

தந்தையின் வேதனை, தாயின் மறைவு என்று அவளின் நுண்ணிய உணர்வுகளை மயூரனின் வார்த்தைகள் பதம் பார்த்துக் கொண்டிருக்க, அதை உணராதவனோ மேலும் பேசி அவளை வருத்தினான்.

 

“உங்க அப்பா நிலைமையை பார்த்தா, நல்லவேளை உங்க அம்மா இல்லன்னு தான் நினைக்க தோணுது…” என்று ஒரு வேகத்தில் கூறி விட்டவன், அவளின் முகத்தை காண, அந்த அரை இருட்டிலும் அவளின் விழிகள் கண்ணீரில் பளபளக்க, உதட்டை கடித்து அதை கட்டுப்படுத்தியபடி, வேறெங்கோ பார்வையை பதித்திருந்தாள் பாவை.

 

‘ப்ச், லூஸா டா நீ? என்ன பேசி வச்சுருக்க?’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன், அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல், எழுந்து சென்று விட்டான்.

 

அத்தனை நேரம் படத்தில் ஒரு கண், அவர்கள் மீது ஒரு கண் என்றிருந்த பாஸ்கரோ, மயூரன் திடீரென்று எழுந்து சென்றதும், அவன் பின்னே செல்வதா, இல்லை அழும் துவாரகாவை பார்ப்பதா என்று குழம்ப, அவனுக்கு கங்களை காட்டியபடி கிஷோர் மயூரனை பின்தொடர்ந்தான்.

 

பாஸ்கர் துவாரகாவிடம் ஏதோ பேச வர, அவளோ அதற்கு முன்பே அவனைக் கடந்து வெளியேறி விட்டாள்.

 

வெளியே மயூரனிடம் கிஷோர் ஏதோ கேட்டுக் கொண்டிருக்க, அவர்களை தாண்டித்தான் துவாரகா சென்றாள். ஆனால், அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை. இனி, பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்து விட்டாளோ!

 

வேகமாக வந்த பாஸ்கர், “மயூரா, என்ன நடந்துச்சு? துவா ஏன் அழுதுட்டே போறா? நீ எதாவது திட்டிட்டியா?” என்று கேட்க, “பின்ன, அவ செஞ்சதுக்கு கொஞ்ச சொல்றியா? இதை முன்னாடியே செஞ்சுருக்கணும்.” என்று கோபமாக கூறியவன் வெளியேற, மற்ற இருவரும் என்ன நடந்தது என்று தெரியாமல் அவனை தொடர்ந்து சென்றனர்.

 

வாகன தறிப்பிடத்தில் மீண்டும் துவாரகாவை கண்டான் மயூரன். அவளோ சுயநினைவிலேயே இல்லாததை போல, இயந்திர தன்மையுடன் வாகனத்தை உயிர்ப்பித்து மயூரனை கடந்து செல்ல, தவறாக பேசி விட்டோமோ என்று மனம் பிசைந்தது மயூரனுக்கு.

 

மறுநொடியே, ‘இந்த ஷாக் அவளுக்கு தேவை தான். அப்போ தான் இனிமே இப்படி லவ்னு என் பின்னாடி சுத்த மாட்டா.’ என்று அவனையே சமாதானப்படுத்திக் கொண்டான்.

 

*****

 

நடந்ததை நினைத்து பார்த்த மயூரனோ, அதை கோபிநாத்திடம் மறைக்கக்கூடாது என்று எண்ணி, குற்றவுணர்வுடனே சுருக்கமாக அவரிடம் கூறினான்.

 

“சாரி சார், அவங்களை அவாயிட் செய்யணும்னு நினைச்சு பேசப் போய்… தப்பா பேசிட்டேன். என்ன இருந்தாலும் அவங்க அம்மாவை இழுத்திருக்க கூடாது தான். சாரி…” என்று மயூரன் தயக்கத்துடன் கூறினான்.

 

மயூரன் கூறியதைக் கேட்டு அதிர்ந்த கோபிநாத்தோ, “அவ அம்மா இறந்தப்போ, அவளுக்கு அஞ்சு வயசு. அம்மா காணோம்னு அழுத என் பொண்ணை சமாளிக்குறதுக்கு நான் பட்ட வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும்.” என்ற போதே அவரின் குரல் உடைந்து விட்டது.

 

“அவளை திட்டி இருந்தா கூட, இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க மாட்டா. ஆனா…” என்ற கோபிநாத் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகி விட, எண்ணற்ற முறையாக அவனையே திட்டிக் கொண்டான் மயூரன்.

 

இதில், கோபிநாத்தின் வார்த்தைகள், ஏனென்றே தெரியாமல் அவன் கண்களை கசியச் செய்தது. 

 

மிகுந்த சிரமத்துடன் அதை கட்டிப்படுத்திக் கொண்ட மயூரன், “சாரியை தவிர என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல சார். சொல்ல எனக்கு தகுதியும் இல்ல.” என்றவன், ஒரு பெருமூச்சுடன், “நாளைக்கு என்னோட ரெசிக்னேஷன் லெட்டரை மெயில் பண்ணிடுறேன் சார்.” என்றவாறே எழுந்தான்.

 

அத்தனை நேரம் தளர்வாக அமர்ந்திருந்த கோபிநாத்தோ, “நான் முன்னாடியே சொன்ன மாதிரி, என்னை பொறுத்தவரை, பெர்சனல் வேற ப்ரொஃபெஷன் வேற. உங்க ரெசிக்னேஷனுக்கு என் பொண்ணு காரணம்னா, நீங்க கவலைப்பட வேண்டாம்… இனி, அவ அங்க வர மாட்டா.” என்றார் தீவிரமான குரலில்.

 

அதைக் கேட்ட மயூரனுக்கு தான் இன்னும் குற்றவுணர்வாகிப் போனது.

 

“இல்ல சார்… அது எப்படி…” என்று மயூரன் சொல்ல வரும்போதே இடைவெட்டிய கோபிநாத், “அது தான் சரி மயூரன். முதல்லயே இதை செஞ்சுருக்கணும். அப்பாவா தான் தோத்துட்டேன், பிஸினஸ்மேனா தோக்க விரும்பல.” என்று கூற, அதற்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல், தலையை மட்டும் அசைத்து அங்கிருந்து வெளியேறினான் மயூரன்.

 

வாசலில் ஒரு நிமிடம் நின்றவன், கண்களை மூடி நடந்தவற்றை நினைத்துப் பார்க்க, குறையவே செய்யாத பாரமான மனதுடன் அந்த மாளிகையை விட்டு வெளியேறினான்.

 

அவளின் மனதை விட்டுமா? – அவளுக்கே வெளிச்சம்!

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்