Loading

மைதிலி சொன்னது போன்றே, ஹியரிங்கை முடித்து விட்டு நேராக வீட்டிற்குச் சென்றாள். காலையில் அலங்கோலமாக இருந்த வீடு, இப்போது ‘நீட்’டாக இருந்தது. அதனைப் பற்றி கேளாமல், பிரஷாந்துடனே காரில் ஒன்றாக மகிழினியை அழைக்க பள்ளிக்கூடத்திற்குச் சென்றாள்.

இருவரையும் ஒருசேரப் பார்த்த மகிழினிக்கு உற்சாகம் வழிந்தோடியது. “ஹை அம்மா நீங்களும் வந்துட்டீங்களா?” என்று தாவி கட்டிக்கொண்டவளை மைதிலியும் புன்னகையுடன் கட்டிக்கொண்டாள்.

“அங்கிள் நீங்க சொன்ன மாதிரி அம்மா என்மேல கோபமா இல்ல…” என்று மைதிலியை அணைத்தபடி பிரஷாந்திடம் கூற, மைதிலிக்கு மனம் வலித்தது.

“நான் தான் சொன்னேனே பேபி. யுவர் மாம் இஸ் வெரி சுவீட்” என்றான் அவளை ரசித்து.

அதில் பிரஷாந்தை அவள் முறைக்க, அவனோ “ஓகே ஓகே கம்… நம்ம இப்போ பீச்க்கு போகப் போறோம்” என்றதும் மகிழினியின் மகிழ்ச்சி இரு மடங்கு ஆனது.

மைதிலியால் அந்த சூழ்நிலைக்குள் ஒன்ற இயலவில்லை என்றாலும் மகளுக்காக முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.

பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றதும் மைதிலி கரையில் அமர்ந்து கொள்ள, பிரஷாந்தும் மகிழினியும் அலைகளில் ஆட்டம் போட்டனர்.

சிறுமிக்கு ஏதுவாக அவளுடன் விளையாடிய பிரஷாந்தின் மீது பார்வையை செலுத்தினாள் மைதிலி.

கள்ளங்கபடமில்லாத அன்பு ததும்பும் முகம். அவனுக்கென பெற்றோரும் தமையனும் ஒழுங்காக இருந்திருந்தால், இந்நேரம் குடும்பத்தாருடன் நேரத்தைக் கழித்து இருப்பான். நல்ல பெண்ணை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொடுத்திருப்பார்கள். அவனும் மனநிறைவுடன் வாழ்ந்திருப்பான். இங்கு வந்து அவனுக்கும் நிம்மதி இல்லாமல், என் நிம்மதியையும் கெடுத்து அவன் என்ன தான் சாதிக்கப் போகிறான் என்றெண்ணி எரிச்சலாக இருந்தது.

கேட்டால் காதல் என்பான்! ஏனோ காதல் என்ற வார்த்தையே புளித்துப் போனது அவளுக்கு.

காதல் என்ற வார்த்தையைக் கேட்டதும் கன்னக்கதுப்புகளெல்லாம் சிவந்தது ஒரு காலம். மீண்டும் இனி மேனியில் படரவே போவதில்லை அந்த நாணச்சிவப்புகள்.

“டிபனுக்கும் லஞ்சுக்கும் இடையிலேயே எனக்குப் பசிச்சுடுது மைத்தி…” ரகுவீரின் மயக்கம் நிறைந்த குரலில், குழம்பிய நயனங்கள் அவன் எதைக் குறிக்கிறான் எனப் புரிந்து வெட்கம் கொண்டது.

“போங்க ரகு. ரொம்ப பேட் நீங்க…” என்று சிணுங்கினாலும், அவனுடன் நேரம் காலம் மறந்து, தன்னிலை இழந்து இழைந்தது எல்லாம் நினைவடுக்குகளில் வந்து போக கண்ணீர் மட்டும் சுரக்கவில்லை.

அவனது நினைவுகளால் வரக்கூடிய விழிநீர் கூட சுரக்க வழியின்றி வற்றி இருந்தது. மரத்த உணர்வுகளுக்கு மறுஜென்மம் கொடுக்க அவளுக்கு விருப்பம் இல்லை.

எப்படியும் இன்னும் சிறிது நாட்களில் இந்த வாழ்க்கை பிரஷாந்திற்கு சலிப்பைத் தந்து விடும். அவனே சென்று விடுவான் என்று ஆணித்தரமாக நம்பினாள்.

அந்நேரம் மகிழினியைத் தூக்கிக்கொண்டு அவளருகில் வந்த பிரஷாந்த் “மைலி நீயும் வாயேன்” என்று அழைக்க,

“நான் வரல…” என்று மறுத்தவளை “ஓகே, அப்போ மகியை தூக்குன மாதிரி உன்னையும் தூக்கிட வேண்டியது தான்…” என மகிழினியை இறக்கி விட்டு அவளை நோக்கி வர, சரட்டென எழுந்து விட்டவள், பல்லைக் கடித்தாள்.

“அம்மா அம்மா நீங்களும் வாங்கம்மா. சூப்பரா இருக்கு தெரியுமா ப்ளீஸ்” என்று கெஞ்சியதில் வேறு வழியற்று அவர்களுடன் அலை காலில் படர நின்றாள்.

“அம்மா இன்னும் உள்ள வாங்க” என மகிழினி அழைக்க, “போதும் மகி. ஆழமா இருக்கப் போகுது” என்றதில், மீண்டும் மகிழினியைத் தூக்கிக் கொண்ட பிரஷாந்த், “அதெல்லாம் இல்ல மைலி கம்” என்று அவள் கையைப் பிடித்து சிறிது உள்ளே அழைத்துச் சென்றான்.

“இதுக்கு மேல போனா ஃபுல்லா நனைஞ்சுடுவோம் பிரஷாந்த். மகிக்கு சேராது…” என்றிட,

“வீட்டுக்குப் போய் ஒரு கசாயம் குடிச்சிட்டா சரியாப் போச்சு இல்ல பேபி” என்று மகளிடம் அபிப்ராயம் கேட்க, “கசாயமா?” என்று மகிழினி விழித்த விழியில் இருவருக்கும் சிரிப்பு முட்டியது.

ஆடிக் களைத்து கரைக்குச் சென்றவர்கள் வெயில் பட அமர்ந்து உடையைக் காய வைக்க, பிரஷாந்த் வேகமாக காருக்குச் சென்று துவாலையையும் மகிழினிக்கு மாற்று உடையையும் எடுத்து வந்தான்.

மைதிலிக்கு ஒரு துவாலையைக் கொடுத்தவன், “உன் சடைல எல்லாம் ஈரம் பட்டருக்கு பாரு மைலி. பின்னலை அவுத்து விட்டு துடைச்சு விடு. கோல்டு பிடிச்சுக்கப் போகுது” என்று அக்கறையுடன் கூறினான்.

மகிழினிக்கும் உடனே உடையை மாற்றி விட்டிட, அவளோ “அங்கிள் ஐஸுக்ரீம் சாப்பிடலாமா?” எனக் கேட்டாள்.

மைதிலி, “நோ வே. ஏற்கனவே தண்ணில நனைஞ்சாச்சு” என்று மறுத்ததில், “ஒரு க்ளாஸ் எக்ஸ்டரா கசாயம் குடிச்சுக்குறேன்மா” என்று குறும்புடன் கூறியவளை காதைப் பிடித்து திருகியவளுக்குப் புன்னகை மலர்ந்தது.

“எக்ஸ்டரா ரெண்டு க்ளாஸ் கசாயம் குடிச்சாலும் நோ ஐஸ் க்ரீம் பேபி. சண்டே வாங்கித் தரேன். இப்போ பஞ்சு மிட்டாய் சாப்புடுறியா?” என்று பிரஷாந்த் அவளை திசை திருப்ப, “ம்ம் ஓகே அங்கிள்” என்றாள் தலையாட்டி.

உடனே மூவருக்கும் பிங்க் வண்ண பஞ்சு மிட்டாயை வாங்கி வந்தவன், மகிழினிக்கும் ஒன்றைக் கொடுத்து விட்டு, மைதிலிக்கும் கொடுக்க, “எனக்கு எதுக்கு நான் என்ன சின்ன பாப்பாவா?” எனக் கேட்டாலும் வாங்கிக் கொண்டாள்.

“எனக்கு நீ சின்ன பாப்பா தான் மைலி” எனக் கண்ணடித்து விஷமத்துடன் பார்த்தவனை விழிகளால் சாடினாள்.

கூடவே அவ்வார்த்தை தந்த கடும் கோபத்தில், “அப்போ வயசான யாரையாவது கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது தான? இல்லன்னா உங்களுக்கு ஏத்த மாதிரி மெச்சூர்ட் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிருக்கணும். நீங்கல்லாம் காதலிச்சு விளையாட நான் தான் கிடைச்சேனா?” இருக்கும் இடம் மறந்து கத்தி விட்டாள்.

அவர்களை வேடிக்கைப் பொருளாகப் பார்த்த மற்றவர்களை சுற்றி முற்றி பார்த்தவன், “மைதிலி… காம் டவுன். நான் எதார்த்தமா தான் சொன்னேன்… ஐ டிண்ட் மீன் டூ ஹர்ட் யூ…” கூடவே அவள் விழிகளும் கலங்கி இருப்பதைக் கண்டு அவனுக்கும் வலித்தது.

நீங்கல்லாம் என்றால்? இவள் என்னை மட்டும் கூறவில்லை என்ற உறுதி எழுந்தது அவனுக்கு. அது குழப்பத்தையும் சேர்த்தே கொடுத்தது.

அதன் பிறகே அவளும் நிகழ்வு உணர்ந்து, “ச… சாரி. போலாம்” என்று எழுந்து விட்டாள்.

மகிழினி இருவரையும் பயத்துடன் பார்க்க, இருவருமே அவளுக்காக முயன்று சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டனர்.

பிரஷாந்திற்கு எண்ணமெல்லாம் சில நாட்களுக்கு முன்னர் மல்லிகாவிடம் பேசியதில் நிலைத்தது.

வார விடுமுறை நாளில், மகிழினியை தயாவின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் மல்லிகா.

“வாங்க அண்ணி. மைதிலி வரலையா?” எனக் கேட்டபடி துர்கா வரவேற்க,

“அவள் ஏதோ கேஸ் ஸ்டடி பண்ணனும்னு என்னை மட்டும் அனுப்பி விட்டா துர்கா. மகிக்கும் இங்க வராம பொழுதே போக மாட்டேங்குது.” என்று ஆசுவாசமாக அமர, அந்நேரம் பிரஷாந்த் தயானந்தன் மிருணாளினி தேவஸ்மிதா அமர மகரந்தன் மகேஷ் திவ்யஸ்ரீ அனைவருமே அங்கு தான் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

பிரஷாந்திற்கு மல்லிகாவைப் பார்க்கும் நேரமெல்லாம் மைதிலியின் கடந்த காலத்தைப் பற்றி கேட்க வாய் வரைக்கும் வரும். ஆனாலும், கேட்க பயம். அவள் தாங்கிய வலிகளை எதிர்கொள்ள அவளை விட அவன் பயந்தான்.

அதனாலேயே அவரைக் கண்டதும் அமைதியாகி விடுவான்.

இன்று தேவஸ்மிதா ஒரு முடிவுடன் இருக்க, “ஆண்ட்டி, மைதிலியோட ஃபர்ஸ்ட் மேரேஜ் பத்தி சொல்லுங்களேன்…” என்றதும் மல்லிகாவின் முகம் இருண்டு விட்டது.

மகேஷும், “மேரேஜ்ல எதுவும் ப்ராபளம் இல்லை தான சித்தி?” என சங்கடத்துடன் கேட்க, மல்லிகா பெருமூச்சு விட்டார்.

“இல்ல மகேஷ். ரகு தம்பி ரொம்ப நல்ல மாதிரி. அவருக்கு சொந்தம் பந்தம்னு யாரும் இல்லை தான். ஆனா தங்கமானப் பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. என்ன ஆர்மில இருந்தது தான் உறுத்துச்சு. உன் தங்கச்சி பக்கத்துலயே இருந்து வேலை பார்க்குற மாப்பிள்ளை தான் கேட்டா. ஆனால் நாங்களும் வருஷக்கணக்கா அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தோம். அவள் குடும்ப பிரச்சனையைக் கேட்டுட்டு ஓடிப் போனவங்க தான் மிச்சம்.

ரகு தம்பிக்கு எல்லாம் தெரியும். மைதிலிக்கும் ரகுவை ரொம்ப பிடிச்சுருந்துச்சு. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு, அவ்ளோ சந்தோசமா இருந்தாங்க. ரகு தம்பி அவளை தங்கத் தட்டுல தான் தாங்கல. மைதிலியும் அவர் மேல உயிரா இருந்தா…” என்றவருக்கு கண்ணீர் வழிந்தது.

தொண்டை கமற “யார் கண்ணு பட்டுச்சோ. அவளுக்கு அந்த சந்தோசம் ஆறு மாசத்துக்கு மேல நிலைக்கல. வயித்துப் பிள்ளையோட நல்ல மனுஷன் புருஷனா கிடைச்சும் அவர் கூட விதி வாழ விடல. தனிமரமா நின்னவளைப் பார்த்து எங்களுக்கு உயிரே இல்லை. வேற மாப்பிள்ளையை கல்யாணம் செஞ்சு வச்சுருக்கலாம்னு என் வீட்டுக்காரர் தினமும் பொலம்புவாரு. அவளோட வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன்னு குற்ற உணர்ச்சில அடுத்த அஞ்சு மாசத்துல அந்த மனுஷனும் நெஞ்சு வலி வந்து போய்ட்டாரு” என்று குமுறியவரை துர்காவும் கண்ணீர் மல்க ஆறுதலாகத் தாங்கினார்.

பிரஷாந்த் கூர்மையுடன், “பக்கத்துலயே இருக்குற மாதிரி பையனை தான அவள் கேட்டா, அப்பறம் ஏன் ஆர்மில இருக்குற மாப்பிளையைப் பார்த்தீங்க” என்று வெடுக்கென கேட்டு விட, மல்லிகாவுக்கு இன்னும் தேம்பல் அதிகம் ஆனது.

“வேற நல்ல பையன் கிடைக்கல தம்பி. நாங்க என்ன செய்யட்டும். மைதிலியும் அதுக்கு அப்பறம் புருஞ்சுக்கிட்டா. என் வீட்டுக்காரர் அவளுக்கு புரிய வைச்சு தான் கல்யாணம் பண்ணி வச்சாரு. அதுக்கு அப்பறம் ரெண்டு பேரும் அவ்ளோ ஒற்றுமையா இருந்தாங்களே” என்றிட, பிரஷாந்திற்கு என்ன மாதிரியான எதிர்வினை காட்ட வேண்டுமென்று கூட புரியவில்லை.

மல்லிகாவே தொடர்ந்து “அவள் பிரசவத்து அப்ப தான் இவரு இறந்தாரு. அப்ப என்னால அவள் கூட இருக்க முடியல. அதுக்கு அப்பறம் என் பையனும் வெளிநாட்டுக்குப் போறேன்னு என்னைக் கூப்பிட்டான். எனக்கு தான் அவளை விட்டுட்டுப் போக மனசில்லை. அவள் கூடவே இருந்துட்டேன். ஆனா நான் போனது தப்புன்னு அப்பறம் தான் புரிஞ்சுது” என்று மேலும் உடல் குலுங்க அழுதார்.

அமர் புரியாமல் “ஏன்?” எனக் கேட்க,

“படுபாவி… புள்ளையை என் பொறுப்புல குடுத்துட்டு கையை அறுத்துக்கிட்டா” என்றதும் பலமாக அதிர்ந்தனர்.

பிரஷாந்திற்கு இதயம் அதிகபட்சமாகத் துடித்தது. அதற்கு மேலும் எதையும் கேட்கும் திராணி அவனுக்கு இல்லை.

உயிரானவள் கடந்து வந்த பாதையில் அவளே உயிரைத் துறக்க முயன்று இருப்பதைக் கேட்டு உள்ளம் புழுவாகத் துடித்தது.

“ஐயோ அப்பறம் என்ன ஆச்சு?” தயா பதறி விட, மகேஷிற்கு கண்ணீர் வழிந்தது. அதைத் தவிர அவனால் என்ன செய்ய முடியும். தங்கையின் கடினமான நேரத்தில் கூட உடன் இல்லாது போன பாவம் செய்தவன் ஆகிவிட்டானே!

“அப்பறம் அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் பொழைக்க வைக்கிறது பெரும் பாடு ஆகிடுச்சு தம்பி. பொழைச்சு வந்தும் ‘எனக்கு வாழவே பிடிக்கலைம்மா’னு அழுதவளைக் கண்டு நான் தான் உசுரைக் கைல பிடிச்சுட்டு இருக்க வேண்டியதா போச்சு” என மூக்கை உறிஞ்சினார்.

“இந்த குழந்தைக்கு அப்பா தான் இல்ல அம்மாவாவது இருக்கட்டுமே மைதிலி. நீயும் இல்லாம குழந்தையை அனாதையாக்கிடாதன்னு சொன்னதுக்கு அப்பறம் தான் மகிக்காக அவளை கொஞ்சம் மாத்திக்கிட்டா. அப்பறம் அவள் வேலையில முழு மூச்சா கவனம் செலுத்தி ரெண்டு மூணு வருஷத்துல நிறைய கேஸ் ஜெயிச்சா. அங்க ரகு தம்பி குடும்பத்துக்கு கவர்மெண்ட்ல இருந்து வீடு ஒதுக்கி இருந்தாங்க. அங்க தான் இருந்தோம். அப்பறம் அவளுக்கு என்ன தோணுச்சோ. என் அப்பாவைக் கொன்னவங்களை சும்மா விடக் கூடாது. அந்த கேஸை எப்படியாவது நான் ஜெயிச்சே தீருவேன்னு தான் சென்னைக்கு வந்தா. வந்ததுல ஒரு நல்ல விஷயம் அவள் குடும்பம் அவளுக்கு திரும்ப கிடைச்சுருச்சு” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

தேவா தான், “அப்போ நீங்க கூட இருந்தா அவள் அடுத்த கட்டத்துக்கு போக மாட்டா. பேசாம நீங்களும் உங்க மகன் கூட வெளிநாட்டுல செட்டில் ஆகிடுங்க” என்று விட, மல்லிகா திகைத்து விட்டார்.

அமருக்கும் தேவாவின் கூற்று சரி என்றே பட்டது.

“என்னமா இப்படி சொல்ற?” மல்லிகா ஆதங்கத்துடன் கேட்க, அவள் பிரஷாந்த் மைதிலியை விரும்புவதைக் கூறி விட்டு, “அவளை எப்படியும் கார்னர் பண்ணி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சுடுறோம். நீங்க இருந்தா மகியை நீங்க பார்த்துப்பீங்கன்னு இவனையும் டீல்ல விட்ருவா. லைப் முழுக்க அவள் இப்படி தனியா இருக்குறது ஓகே வா உங்களுக்கு” என்றதில், மல்லிகாவிற்கும் புரிந்தது.

அமர், “கொஞ்ச நாளைக்கு தான்மா… நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” என்றிட,

“இதுல தப்பா எடுக்க என்ன தம்பி இருக்கு. அவள் வாழ்க்கைல ஒரு மாற்றம் வந்தா எனக்கு அதுவே போதும்…” என்று மனமாரக் கூறியவர் உடனேயே மகனை அழைத்து விவரம் கூறி, அவருக்கும் விசா டிக்கெட் எல்லாம் எடுக்கக் கூறினார்.

—-

வீட்டு வாசலில் காரை நிறுத்திய பிரஷாந்த் வெகு நேரமாக காரிலேயே அமர்ந்திருந்தான்.

மைதிலி மகிழினியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவள், “உன் டயரி எடுத்துட்டு வா மகி. ஹோம் வொர்க் பண்ணனும்ல” என்று கேட்டபடி, அடுக்களைக்குச் சென்று காபி தயாரிக்க, அதுவரையிலும் பிரஷாந்த் வரவில்லை.

வெகு நேரம் கழித்தே அவன் உள்ளே வரவில்லை என்றே உறைத்தது அவளுக்கு.

எங்க போனான்? எனக் குழம்பினாலும், எப்படியோ போகட்டும் என்றும் ஒரு மனம் வாதிட்டது.

அதையும் மீறி அவள் கால்கள் தானாக வெளியில் வர, காரில் யோசனையுடன் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள்.

ஜன்னலை தட்டியவள், “என்ன கார்ல உட்கார்ந்தே தவம் இருந்து முனிவர் ஆகப் போறீங்களா?” என நக்கலாகக் கேட்க,

“இல்ல உன்னை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தீவிரமா யோசிச்சுட்டு இருக்கேன்” என்று குறுநகையுடன் கூறியபடி கீழே இறங்கினான்.

அவனை முறைத்தபடி உள்ளே சென்று விட்டவளை ரசனையுடன் பின்தொடர்ந்தான்.

பின், இருவருமாக மகிழினியை வீட்டுப்பாடம் செய்ய வைத்து, ஒன்றாக உண்டனர். உறங்கும் போதும், :அங்கிள் நீங்களும் என் கூட தான் தூங்கணும்: என்ற மகிழினியின் கட்டளையில், மைதிலியின் அறையிலேயே இருந்தான்.

மைதிலி ஒரு புறமும் பிரஷாந்த் ஒரு புறமும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க, நடுவில் மகிழினி வெகு குஷியுடன் படுத்திருந்தாள்.

பிரஷாந்த் அவளை உறங்க வைக்க ஏதேதோ கதை சொல்ல அவளோ மீண்டும் மீண்டும் கேள்வியாகக் கேட்டு அவனை கொட்டாவி விட வைத்திருந்தாள்.

அவனால் சமாளிக்க இயலவில்லை எனப் புரிந்து மைதிலியே, “டைம் ஆச்சுல தூங்கு மகி” என்று அவள் தலையைக் கோதி கொடுக்க, “அப்போ எனக்கு பாட்டுப் பாடுங்க” என்றாள் பிடிவாதமாக.

“உன் அங்கிள் கூட சேர்ந்து சேர்ந்து நீயும் அட்மெண்ட்டா பிஹேவ் பண்ற மகி” என்று மைதிலி அதட்ட,

“அடிப்பாவி ஒரு பாட்டு பாட சொன்னதுக்கு என்னைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டியே. சோ சேட்” என வருந்துவது போல பிரஷாந்த் நடிக்க, “உங்களால தான் அவளுக்கு ஓவரா செல்லம் கொஞ்சுறா” என்று அவனை கண்டித்தாள்.

“ஒரு பாட்டு தான மைலி பாட சொன்னா… நீ சும்மா பாடு. நான் கதவை அடைச்சு தான் வச்சுருக்கேன். கழுதை எல்லாம் வீட்டுக்குள்ள வராது” என்று கிண்டல் செய்ய, “நான் பாடுறது உங்களுக்கு கழுத கனைக்கிற மாதிரி இருக்கா?” என்று கண்ணை சுருக்கி சண்டைக்கு வந்தாள்.

“நீ முதல்ல பாடு. கழுதை மாதிரி இருக்கா, கங்காரு மாதிரி இருக்கானு கேட்டுட்டு சொல்றேன்… ஆனா என்ன எனக்கு நல்லா தூக்கம் வருது. இந்த நேரத்துல வியர்டான குரலைக் கேட்டா தூக்கம் போய்டும்” என்று குறும்பு பொங்க மீண்டும் கேலி செய்ய, தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தாள்.

“நோ வே… நீங்க கேட்டே ஆகணும் என் பாட்டை. நீங்களே எழுதிக்கிட்ட தலையெழுத்து…” என்று சிலுப்பியவள் மகளை நெஞ்சில் போட்டுக் கொண்டு பாடத் தொடங்கினாள்.

கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா
நான் கண்கள் மூட
மாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என்
சந்தோசம் பூவெல்லாம்
உன் வாசம் நீ பேசும்
பேச்செல்லாம் நான்
கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற
செல்வமடி
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி

மைதிலி மென்குரலில் உயிர் உருகப் பாடி முடிக்க, அவளுக்கு முன் அக்குரலில் தன்னை மறந்து தலையணையில் முகம் புதைத்து பிரஷாந்த் உறங்கி இருந்தான்.

அவனையே சில நொடிகள் கண்ணெடுக்காமல் பார்த்தவள், பெருமூச்சுடன் மகிழினியை நடுவில் படுக்க வைத்து விட்டு, அவளுக்கு மட்டும் போர்வையை போர்த்தி விட்டாள்.

வெளியில் செல்லப் போனவள் என்ன நினைத்தாளோ, மீண்டும் உள்ளே வந்து பிரஷாந்திற்கும் போர்வையை போர்த்தி விட்டவள் கதவை மெல்லமாக அடைத்து விட்டு ஹால் சோபாவில் சரிந்தாள்.

ஒரே நாளில் அவன் மீது அக்கறை கொள்ளுமளவு அவளுள் மெல்ல மெல்ல கலந்து கொண்டிருக்கிறான் ஆடவனென உணராது, ‘இந்த தார்னி டெவில் என் பெட்ரூம் வரைக்கும் வந்துடுச்சு’ என்று கடுகடுத்துக் கொண்டாள் மைதிலி. அந்நேரம் வெளியில் உண்மையிலேயே கழுதை கனைக்கும் சத்தம் கேட்க திருதிருவென விழித்தவள், பின் தலையில் அடித்துக்கொண்டு மென்னகை புரிந்தாள்.

உயிர் வளரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
81
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்