502 views

தேவன் 5

ஆகிவிட்டது இன்றோடு யாழினி ஊருக்கு வந்து இரண்டு நாட்கள். இரண்டாவது நாளுக்கே அவளுக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. வீட்டை விட்டு எங்கும் வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார் சண்முகம். கேட்டாள் மானம், மரியாதை என்று நான்கு பக்கத்திற்கு விளக்க உரை எடுத்து விடுவார். அந்தப் பேச்சுக்கு பயந்து அவள் வீட்டை கூட தாண்ட மாட்டாள். 

மிஞ்சி போனால் இரு அத்தை வீட்டிற்கு சென்று வருவாள் அவ்வளவு தான் அவள் பொழுது கழிப்பு. சிறையில் அடைபட்டு இருப்பது போல் உணர்ந்தவள் வீட்டை ஆறாவது முறையாக சுற்றி வந்து விட்டாள். 

தோழிகளோடு வாட்ஸ் அப்பில் உரையாடியவள் ஒரு வழியாக அந்த நாளை மாலை வரை கடத்தி விட்டாள். வீடு வந்த சண்முகம் மகளின் நடவடிக்கைகளை கவனித்து, 

“எப்ப பாரு கைல ஃபோனோட அலையாத யாழு. ஏதாச்சும் எடுத்து படிக்கிற வேலைய பாரு.” வந்ததும் வராததுமாக அவர் பாடம் எடுக்க முயல, ஓடி விட்டாள் அறைக்கு.

கட்டிலில் குப்புற விழுந்தாள் மனம் மாமனை தேட, உடனே அழைத்து விட்டாள். அவன் எடுப்பான் என்று எதிர்பார்த்து யாழினி காத்திருக்க, எடுத்தது அன்னம்.

“மாமா போர் அடிக்குது எங்கயாது கூட்டிட்டு போ.” யார் பேசுகிறார்கள் என்று தெரியாமல் எடுத்ததும் இவள் பேச,

“நீ அடங்கவே மாட்டியா யாழு” என்ற அத்தையின் குரலில் பதறி எழுந்து அமர்ந்தாள்.

“மாமா ஃபோன எதுக்காக நீங்க எடுக்குறீங்க. கொடுங்க என் மாமா கிட்ட.” என்று மகனை பெற்றவரிடம் அதிகார கட்டளையிட்டாள்.

“என்னடி பெத்தவளுக்கே கட்டளை போடுற. பேசுற நாக்குல சூடு வச்சுடுவேன் பார்த்துக்க.” அவரும் அதே குறையாத அதிகாரத்தோடு பதில் கொடுத்தார்.

“எங்க தைரியம் இருந்தா என் மாமன் முன்னாடி எனக்கு சூடு வச்சு பாருங்க அப்ப தெரியும்.” எதிரில்  அவர் இருப்பது போல் சவால் விட்டுக் கொண்டு கை நீட்டி பேச,

“என்னடி பண்ணிடுவான் உன் மாமன்.” என்றார் அவரும் இடுப்பில் கை வைத்துக் கொண்டு.

“நீங்க மட்டும் என் மாமன் முன்னாடி இப்படி பேசி பாருங்க அப்புறம் தெரியும் என்ன பண்றாருன்னு.” மிக அதிக உறுதி அவள் பேச்சில்.

“நான் அவன் அம்மா யாழு. எனக்கு அப்புறம் தான் நீ.” மகன் தன்னை விட்டுக் கொடுக்க மாட்டான் என்ற உறுதியோடு அவரும் பேச்சில் தன்னை முன்னிறுத்தி கொண்டார்.

“இருந்துட்டு போங்க யாரு இல்லன்னு சொன்னா. ஆனா உங்களை விட என்னை தான் என் மாமாக்கு ரொம்ப பிடிக்கும்.” என்றவள் உணர்ச்சி பெருக்கில் கத்தி விட, அவசரமாக அவள் அறைக்குள் நுழைந்தார் பரிமளம்.

மகளின் தலையில் கொட்டி, “உங்க அப்பா வீட்டுல தான் இருக்காரு யாழு மெல்லமா பேசு.” என்று அதட்டினார்.

அவர் கொட்டியது வலித்தது யாழினிக்கு. தலையை தேய்த்துக் கொண்டே, “அத்தை அம்மா என்னை கொட்டிட்டாங்க.” நடந்து கொண்டிருக்கும் சண்டையை மறந்து அவரை ஆதரவுக்கு இழுக்க,

“நீ பேசுற பேச்சுக்கு நானா இருந்தா வாயில குத்தி இருப்பேன்.” என்று சத்தமிட்டு சிரித்து யாழினியை வெறுப்பேற்றினர்.

தாயை முறைத்துக் கொண்டிருந்த பார்வை எதிரில் இல்லாத அத்தையை நினைத்து கடுமையாக முறைத்து பார்த்தது. பற்களை கடித்து கட்டிலில் “தொப்” என்று அமர்ந்தவள்,

“என் மாமன் கிட்ட ஃபோன கொடுங்க.”  என்றாள் கோபத்தோடு.

அவள் கோபத்தை அறியாத அன்னம், “அது என்னடி என் மாமன். வெறும் மாமன்னு சொன்னா எங்கயாது ஓடிப் போய்டுவானா.” என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்.

“அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது. நீங்க என் மாமா கிட்ட ஃபோன கொடுங்க.” மாமனிடம் பேசியே ஆக வேண்டும் என்ற குறிக்கோளில் அவள் இருக்க,

“காரணம் சொல்லு தரேன்” என்றார் தோரணையாக அன்னம்.

பற்களை  கடித்தவள், “மாமா எனக்கு மட்டும் தான் மாமா. அதனால தான் என் மாமா.” என்று விளக்கத்திற்கு பின் அவள் பேசாமல் இருக்க,

“நாளைக்கு அவன எவளாவது கட்டிக்கிட்டா அவளுக்கு தான் என் மகன் உரிமையானவன்.” விளையாட்டுக்காக பதில் கூறினார் அன்னம்.

கோபம் ஏகத்துக்கும் எகிற ஆரம்பித்தது அவள் மேனியில். வேகமாக எழுந்து நின்றவள், “என்னை தவிர என் மாமன் கிட்ட வேற எவளுக்கும் உரிமை இல்லை. அப்படியே எவளாது வந்தாலும் அவ எனக்கு அப்புறம் தான். என்னையும் என் மாமனையும் பிரிக்க நினைச்சா என் கையால செத்துடுவா.” என்றதோடு தன் பேச்சை நிறுத்தினாள்.

எதிரில் நின்ற பரிமளமும், கேட்டுக் கொண்டிருந்த அன்னமும் அவள் வார்த்தையின் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் 

குழம்பி போனார்கள். 

அத்தை  பேசிய பேச்சில் தலை விண்ணென்று வலிக்க ஆரம்பித்தது அவளுக்கு. எதுவும் பேசாமல் கைபேசியை அணைத்தவள் கட்டிலில் கவிழ்ந்து கொண்டாள். மகளின் நடவடிக்கைகளை பார்த்த பரிமளம் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட, என்ன யோசனையோ மனம் அவளை ஒரு வழி படுத்தி விட்டது.

பேசிக் கொண்டிருக்கும் போது அலைபேசி துண்டிக்கப்பட்டதில் மருமகள் கோபத்தை உணர்ந்தவர் மகன் வருகைக்காக காத்திருந்தார். போனில் போதுமான அளவு சார்ஜர் இல்லாததை உணர்ந்தவன் அதை போட்டுவிட்டு கடைவீதிக்கு சென்று இருந்தான்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மகன் உள்ளே நுழைவதை பார்த்தவர் அவசரமாக வந்து, “யாழு ஃபோன் பண்ணாப்பா விளையாட்டுக்கு ஒண்ணு பேச போய் கோபத்துல ஃபோன வச்சுட்டா.” என்றவரை நிதானப்படுத்தியவன் என்ன நடந்தது என்று முழுமையாக விசாரித்தான்.

அன்னம் பதறியது போல் அவன் பதறவில்லை. புன்னகை தவழ்ந்தது அவன் உதட்டில் மாமன் மகளின் பேச்சில். மகன் சிரிப்பதை உணர்ந்தவர் என்னவென்று கேட்க, “நீங்க எதுக்கு ம்மா அப்படி சொன்னீங்க. உங்களை எதுவும் திட்டாம விட்டதே பெரிய விஷயம்.” என்றவன் போனை எடுத்துப் பார்த்தான்.

“நீ என்னப்பா அவளுக்கு மேல பேசுற.” என்று அன்னம் மகனின் பேச்சில் குறைப்பட்டார்.

அழகாக சிரித்து அன்னையைப் பார்த்தவன், “என் விஷயத்துல அவ இப்படித்தான் ம்மா இருப்பா. வருங்காலத்துல என்ன நடக்கப் போகுதோ அது சாமிக்கு மட்டும் தான் வெளிச்சம். அதுவரைக்கும் அவ கிட்ட இந்த மாதிரி பேசாம இருங்க.” என்றவன் அழைப்பு விடுத்தான் அவளுக்கு.

தூக்கத்தில் எடுத்தவள் குழைந்து பேச, துண்டித்து விட்டான் அழைப்பை.  அதில் கண் விழித்தவள் மாமனை மனதில் அர்ச்சித்துக் கொண்டே மீண்டும் அழைத்தாள். 

“பாப்பா என்ன விஷயம் போன் பண்ணி இருந்தியாம்‌” என சாதாரணமாக அவன் கேட்க,

“என்ன மாமா ஏதாச்சும் விஷயம் இருந்தா தான் உங்களுக்கு ஃபோன் பண்ணனுமா. அத்தை சொன்ன மாதிரி எனக்கு எந்த உரிமையும் இல்லையா உங்க கிட்ட. நீங்களும் அவங்கள மாதிரியே பேசுறீங்க. இப்பவே இப்படி பேசுறீங்க நாளைக்கு உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா மொத்தமா என்னை மறந்துடுவீங்க. 

எல்லாரும் தெளிவா இருக்கீங்க நான் தான் முட்டாள் தனமா உங்க பின்னாடி வந்துக்கிட்டு இருக்கேன். இனிமே ஏதாச்சும் விஷயம் இருந்தா மட்டும் உங்களுக்கு ஃபோன் பண்றேன் மாமா. உங்களால முடிஞ்சா பேசுங்க இல்லையா விட்டுடுங்க. இனிமே உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன் ஃபோன் பண்ணி.” என்றவள் அவன் பேசுவதற்கு கூட இடம் அளிக்காமல் துண்டித்து விட்டாள்.

காது சூடானது போல் உணர்ந்தவன் அதை தேய்த்து விட்டு அன்னையைப் பார்த்து சிரித்தான். அவர்  என்னவென்று விசாரித்தார்.

மறுப்பாக தலையசைத்து சிரித்தவன், “நீங்க சமைச்சுக்கிட்டு இருங்க ம்மா கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.” என்று சிரிப்பு மாறாமல் புறப்பட்டான்.

சூனாம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தவன் நேராக போளி கடை முன்பு நின்றான். மாமன் மகளின் கோபம் இதைக்கண்டால் நிச்சயம் கரையும் என்பதை அறிந்து சூடாக வாங்கினான். இதைக் கொடுத்து சமாதானம் செய்யலாம் என்ற நம்பிக்கையோடு வந்தவன் பார்வையில் மல்லிகை பூ விழ, 

“மாமா எனக்கு மொட்டா இருக்க மல்லிகைப்பூ ரொம்ப பிடிக்கும்.” அன்று ஒரு நாள் பேச்சு வார்த்தையில் அவள் சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. 

பூக்கடைக்காரரிடம் சென்றவன் அவள் தலை தாங்காத அளவிற்கு பூவை வாங்கிக் கொண்டான். வண்டியில் ஏறியவன் ஊரை நோக்கி புறப்படும் முன், மீண்டும் அலைபேசி ஒலித்தது. எடுத்தவனுக்கு மாமன் மகளே காட்சி தர, சிரிப்போடு காதில் வைத்தான்.

“ஒருத்தி ஃபோன வச்சாளே திரும்ப  பேசி சமாதானம் பண்ணுவோம்னு  கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா மாமா உனக்கு. போனா போடின்னு விட்டுட்டல என்னை. அப்போ நான் உனக்கு யாரோன்னு சொல்லாம சொல்லிட்ட. புரிஞ்சிகிட்டேன் மாமா உங்க மனசுல என்ன இருக்குன்னு முழுசா புரிஞ்சுகிட்டேன். இனிமே சத்தியமா ஃபோன் பண்ண மாட்டேன்னு  சொல்ல தான் ஃபோன் பண்ணனேன் வைக்கிறேன்.” என்றவள் மீண்டும் சொல்லாமல் வைத்து விட்டாள்.

எவ்வளவு நேரம் மனதோடு சிரித்துக்கொண்டு நின்றிருந்தானோ அவனுக்கு பின்னால் வந்த வண்டி ஹாரன் சத்தத்தை கொடுத்து அவன் நினைவை கலைத்தது. தன் தலையில் அடித்து நிதானித்தவன் பயணப்பட்டான்.

சண்முகம் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி நின்றவன் அழைத்தான் பரிமளத்திற்கு. கணவன் பார்த்து விடா வண்ணம் சுதாரிப்போடு அதை ஏற்றவர், “என்ன மருமகனே அத்தைய கூப்பிட்டு இருக்க. என் மக மந்திரிச்சு விட்டாளாக்கும்.” என்றதும் இந்த முறை சத்தமாக சிரித்து விட்டான் தேவநந்தன்.

மருமகனின் சிரிப்பில் உள்ளம் நிறைந்தவர் அதை ரசித்துக் கொண்டிருக்க, “கொஞ்சம் வெளிய வாங்க அத்தை.” என்று வரவழைத்தான் அவரை.

கணவர் கண்ணில் சிக்காமல் வர பெரும் பாடுபட்டு விட்டார் பரிமளம். மருமகனின் வண்டி முன்பு நின்றவர் யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டுக் கொண்டு பேசினார். அவருக்கு சங்கடம் கொடுக்க விரும்பாதவன், “இதை பாப்பா கிட்ட கொடுத்துடுங்க அத்தை.” என்றதோடு தலையசைத்து சென்று விட்டான்.

என்ன இருக்கிறது என்று  லேசாக பிரித்து பார்த்தவர் சிரிப்பு மாறாமல் மகள் முன்பு நின்றார். மாமன் மீது உள்ள கோபத்தில் பற்களை கடித்துக் கொண்டு இருந்தவள் முன்பு அவன் வாங்கி வந்த பையை வைத்து விட்டு நகர,

“என்னது இது?” கோபம் பொங்கியது அவள் வார்த்தையில். 

“என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும் உன் மாமன் தான் வந்து கொடுத்துட்டு போனான்.” என்றவர் சொல்லி முடிக்கும் முன்னே அந்த பை அவள் மடியில் குடியேறியது.

மகளின் நடவடிக்கை கண்டு இந்த முறை சத்தமிட்டு சிரிப்பது அவர் முறையானது. சிரித்தவரை முறைத்து வெளியில் அனுப்பியவள் என்ன இருக்கிறது என்று பார்த்தாள். 

முதலில் தென்பட்ட மல்லிகைப் பூவில் மனம் நிறைந்து விட்டாள். மனதில் மலையளவு உண்டான கோபங்கள் அனைத்தும் பனி போல் உருகி விட்டது. மாமன் வாங்கி கொடுத்த பூவை நுகர்ந்து பார்த்தவள் மனம் முழுவதும் அவனே.

தலையில் வைக்க ஆர்வம் எழுந்தாலும் ஒதுக்கி வைத்து விட்டு, அடுத்ததை பார்த்தாள். வாழை இலையில் இருக்கும் தேங்காய் போளி “வந்து சாப்பிடு” என்று பெண்ணவளை அவசரப்படுத்த, உடனே வாயில் மென்னு வயிற்றோடு மனதையும் இனிக்க செய்தாள். 

“அழகு மாமா” என்றவள் பாதி போளியோடு வெயில் ஓடினாள். முகத்தை கழுவி சின்ன அலங்காரம் செய்தவள் பூ மொத்தத்தையும் தலையில் சூட்டி அழகு பார்த்தாள். எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் மல்லிகைப்பூ அவள் அழகை தோற்கடித்தது போன்றே தோன்றியது. தன்னை தோற்கடித்த பூவின் மீது கோபம் கொள்ளாதவள் மேனி முழுவதும் பூ வாசம்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
23
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    3 Comments