
காதல்-5
அந்த இடமே அத்தனை அமைதியாக இருந்தது. கண்கள் சிவந்த வண்ணம் தமிழின் சட்டையை கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தவளை ஒரு நொடி நின்று பார்த்தவன் .. ” நாளைல இருந்து நீ வேலைக்கு வந்தா போதும் , இப்போ நீ உன் வீட்டுக்கு போ ” என்று அவன் கட்டளையாக கூற, அவன் முகம் பார்க்காமல் தலையை குனிந்து கொண்டு வழியை பார்த்து நகர்ந்தவளை தடுத்து நிறுத்தி… ” நானே உன்ன கொண்டு வந்து விட்டிட்டு போறேன்” என்று அவன் முன்னால் நடக்க…
அவனுடன் செல்ல கூடாது , ஏற்கனவே ஊர் வாயை அடைக்க முடியாமல் அவள் திணறி கொண்டிருக்க, இதில் இவனுடன் சென்றால் மேலும் அல்லவா பிரச்சனை வழுக்கும் என்று நின்ற இடத்தில் இருந்து நகராமல் நிற்க… அவள் தன் பின்னே வராமல் இருப்பதை அறிந்து பின்னால் திரும்பி ” என்ன ” என்று சினம் பொங்க கேட்க..
மறுப்பாக அவனை பார்த்து ‘வரமாட்டேன்’ என்பதை போல் தலை அசைத்தாள் சாயாலி. “நீ வரியான்னு கேட்கலை வான்னு சொன்னேன்” என்று அவனும் பிடிவாதத்துடன் நிற்க, அங்குள்ளவர்கள் பேசிய பேச்சில் அவளால் இன்னும் ஒரு மணி துளிகள் கூட நிற்க முடியாமல் வீட்டை நோக்கி நடந்து சென்றவளை முயன்ற மட்டிலும் முறைத்து வைத்தான்.
தமிழ் மறவன் சட்டையை அணிந்து கொண்டு யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் வேகமாக பத்தே நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தாள். வாசலில் தேனு தன் மகளின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தார். கிராமம் அல்லவா மகள் வருவதற்கு முன்னவே அவளை பற்றிய செய்து தேனுவை வந்தடைந்தது.
கண்கள் சிவந்து வேற்று ஆடவனின் சட்டையை அணிந்து கொண்டு வரும் தன் மகளை பார்த்தவர் பதறி போனார். வீட்டை நெருங்கியதும் தாய் முகத்தை கூட பார்க்காமல் வீட்டிற்குள் நுழைய போன மகளை வாசலிலேயே வழி மறைத்தாள் தேனு…
” என்ன டி கோலம் இது ஊர்ல என்னவோ பேசிட்டு இருக்காங்க, நீ வேற இந்த கோலத்தில வர யாரு சட்டை இது ” என்று தேனு மிரட்ட, அவரை அடிபட்ட பார்வை பார்த்தவள் அமைதியாக வீட்டின் திண்ணையில் அமர்ந்து விட்டாள்.
” உன் சட்டை எங்க டி ” என்று தேனு அழுத்தி கேட்க, சாயாலியின் கண்களில் இத்தனை நேரம் தேங்கி இருந்த கண்ணீர் மல மலவென வெளியேற.. தன் மகளையே ஆழ்ந்த பார்வை பார்த்து வைத்தாள் தேனு.
” கெட்டு போயிட்டு வந்துட்டியா ” என்று அடுத்த வார்த்தை கேட்ட தாயை அதிர்ந்து போய் பார்த்தவள் , இதற்கு மேல் தான் உயிருடன் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் தான் அவளுக்கு மேலோங்கி வந்தது.
” சொல்லு டி எல்லாரும் சொல்லுற மாதிரி இந்த சட்டை அவனோடது தானா” என்று தேனு ஆத்திரத்தில் வார்த்தையை விட, அடுத்த நிமிடம் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள் சாயாலி..
தன் தாயிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, விவரம் தெரிந்த வயதில் இருந்து தந்தை யார் என்று அறியாமல் போனாள், இன்றளவிலும் அதை பற்றி தன் தாயிடம் ஒரு வார்த்தை கேட்டதில்லை, எங்கே தந்தையை பற்றி கேட்டு அவர் மனம் வருந்தி விடுவாரோ என்ற பயத்திலேயே அமைதியாக இருந்து விட்டாள்.
காடு கரைக்கு செல்லும் தன் தாயை பார்த்து அவளும் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி கொண்டு தோட்ட வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். தேனுவிற்கு அந்த வயதிலேயே சக்கரை வியாதி முத்தி விட, வேலைக்கு செல்ல முடியாமல் அவதி படும் தன் தாயை வீட்டில் இருக்க வைத்து விட்டு அந்த சிறு வயதில் வேலைக்கு சென்று இப்போது வரை தேனுவை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டிருக்கிறாள் சாயாலி.
இதோ அப்படி இருக்கும் மகளை ஒற்றை வார்த்தையில் உயிரோடு கொண்டு விட்டார் தேனு.
” நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லலாமா?” என்று கேட்ட மிடுக்கான குரலில் தேனு வாசல் பக்கம் பார்க்க, கைகளை கட்டி கொண்டு தேனை தான் கடுமையாக பார்த்து வைத்தான் தமிழ் மறவன்.
தமிழை இங்கு எதிர்பாராதவள் அதிர்ந்து எழ, அவளை கண்டு கொள்ளாதவன் தேனுவை பார்த்து ” உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் பேசலாமா ?” என்று அனுமதி கேட்க.. வாசலில் சிலர் நின்று வேடிக்கை பார்க்க.. உடனே அவனை உள்ளே அழைத்து அமர வைத்தார்.
உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்து வீட்டை ஒரு முறை தனது கண்களால் அளவிட்டான்.. சிறு வீடு.. அதில் சின்ன கூடம் அதை ஒட்டி ஒரு சின்ன அறை அதில் முழுவதும் புத்தகங்கள், கூடத்தின் ஓரத்தில் அடுப்பு வைத்து சமைத்து கொள்வார்கள் போல தனியாக அடுக்களை இல்லை, பின்னே கொள்ளை புறத்தில் ஒரு சின்ன கழிப்பறை இவ்வளவு தான் அவள் வீடு.
புத்தகங்கள் அடங்கிய அறையையே அவன் பார்வை மேய அதற்குள் அந்த சிறு அறையை மறைத்த வண்ணம் வந்து நின்று கொண்டாள் சாயாலி. இவனுக்கு தான் புத்தகம் பிடிக்காதே எங்கே தன் அறைக்குள் வந்து புத்தகங்களை தூக்கி சென்று விடுவானோ என்ற பயம் தான் …
ஏனோ அவள் கண்களில் தெரிந்த கலவரத்தை வைத்தே அவள் மனதில் உள்ளதை சரியாக படித்தவனின் இதழ்கள் மெலிதாக விரிய, அப்போது தான் அவன் அமர்ந்திருக்கும் இருக்கையில் அருகில் உள்ள டேபிலில் அந்த புத்தகத்தை பார்த்தான்.
அதேதான் சாயாலியின் மனதை திசை திருப்பும் தமிழ் காதலன் புத்தகம்.. அவன் கண்கள் அந்த புத்தகத்தை மேய அடுத்த நொடி அதை கையில் எடுத்து கொண்டு அந்த புத்தக அறைக்கு ஓடினாள் சாயாலி..
” தம்பி என்னமோ பேசனும்னு சொன்னிங்க?” என்று தேனு தயக்கமாக கேட்க..
அவரையே கூர்ந்து பார்த்தவன் ” உங்க பொண்ணுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா ?”
அவனையே சந்தேகமாக பார்த்தவர் ” அப்போ நீங்கதான் அந்த பையனா ?” என்று தேனு மறு வார்த்தை கேட்க… அதற்குள் அங்கிருந்த சொம்பை தள்ளி விட்டு தன் கோவத்தை காட்டினாள் சாயாலி..
ஏனோ தமிழை போய் அந்த அயோக்கியனிடம் ஒப்பிட்டு பேசுவது அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. அதை வெளிப்படுத்தும் விதமாக அவள் சொம்பை தட்டி தன் ஆத்திரத்தை வெளிப் படுத்தினாள்.
” நான் அந்த பையன் தான் , ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலை” என்று சாயாலிக்கு நடந்த அனைத்து அநியாயத்தையும் ஒன்று விடாமல் கூறி விட தேனு வாயை மூடி அழுது விட்டார்.
சாயாலி அப்போதும் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் தன் தாயை இமைக்காமல் பார்த்து வைக்க, தேனு வேகமாக. சென்று மகள் கையை பிடிக்க, அடித்த நொடி அவரது கையை விட்டுவிட்டு கொள்ளையை நாடி சென்று விட்டாள்.
“உங்க பொண்ணுக்கு வாய் பேச முடியாதது எனக்கு இப்போதான் தெரியும் , நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு என்ன ஆபிஸ்ல வந்து பார்க்க சொல்லுங்க ” என்று இருக்கையில் இருந்த எழுந்தவன் நேராக அந்த குட்டி அறையை நோக்கி செல்ல, அறை முழுவதும் பல எழுத்தாளர்களின் எழுத்துகள் இருந்தது.
அதில் தமிழ் காதலன் அதிகமாக தென்பட, உதட்டை வளைத்து ஏளனமாக சிரித்து விட்டு வெளியே வர, அவன் முன் கையை பிசைந்து கொண்டு படபடப்பாக நின்று கொண்டிருந்தாள் சாயாலி..
அவனிடம் இருந்து புத்தகத்தை காக்க ஓடோடி வந்து விட்டாள் புத்தக பிரியை..
” நாளைக்கு வேலைக்கு ???”
” மாட்டேன் ” என்பதை போல தலை அசைக்க..
” வரனும் ” என்று கண்டிப்பாக தமிழ் கூற
அதே திமிருடன் மீண்டும் இடவலமாக தலை அசைத்தாள்..
” அப்போ கண்டிப்பா வர மாட்ட ?”
ஆம் என்பதை போல அவள் தீர்க்கமாக தலை அசைக்க, ஒரு முடிவோடு அங்கிருந்து நகர்ந்தான் தமிழ். போகும் பொழுது அவனது சட்டையையும் அவளையும் பார்க்க தவறவில்லை அவனது விழிகள்.
“அழுத்தம் அத்தனையும் அழுத்தம், எவ்வளோ திமிரு என் முன்னாடியே வர மாட்டேன்னு சொல்லுற , வர வைக்கிறேன் உன்னைய ” என்று சினம் கொண்டவனின் மனம் அவளது ஊமை மொழியை ஒரு பொருட்டாக கூட எண்ணவில்லை, சக மனிதர்களை போல அவள் மீதும் சினம் கொண்டான்.
வாய் பேச முடியாத காரணத்தினால் அவள் சத்தமிட முடியாமல் அந்த கயவனின் பிடியில் மானத்தை காக்க பல்லை கடித்து கொண்டு படுத்திருந்தது இப்போது தான் அவனுக்கு விளங்கியது.
நேராக அவன் வீட்டிற்க்கு வண்டியை செலுத்தியவன் அவர் அறைக்குள் சென்று சவரை திறந்து விட்டு அதன் அடியில் நின்று பெரும் மூச்சை விட்டு கொண்டான்.
குளித்து விட்டு வர மாற்று துணியை எடுத்து கொண்டு உள்ளே வந்தவள் சட்டையை அகற்ற போக, தமிழின் வாசனை அந்த சட்டையிலும் அவள் மேனியிலும் பரவி இருக்க , அதை ஒருமுறை ஆழ்ந்து சுவாசித்தவள் பின் சட்டென்று சட்டையை அகற்றி அதை துவைத்து குளித்து விட்டு வெளியேறினாள்.
மகளிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை .. மன வேதனையுடன் தேனு படுத்து கொள்ள, அவளே அவளுக்கு வேண்டியதை எடுத்து போட்டு சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல தமிழ் காதலன் புத்தகத்தை எடுத்து கொண்டு வந்து டேபிலில் அமர்ந்தாள்.
‘ இதோ இன்னைக்கும் நீ எனக்கு தேவை’ என்று மனதோடு புத்தகத்துடன் உறவாடி விட்டு, வழக்கம் போல் புத்தகத்தின் ஒரு பக்கத்தை திறந்தாள் ,பக்கம் எண் 106 .. அதில் இருந்த வாசகம்..
உன் வாழ்க்கையில்
வசந்தம் வீச போகும்
நாள் வெகு தொலைவில்
இல்லை ..,!
காத்திருப்பாயாக
உன்னோடு பயணிக்க போகும்
பூங்காற்றுக்கு… !
‘ என் வாழ்க்கையில வசந்தமா? ‘ என்று விரக்தியாக சிரித்தவள் ‘ வர வர நீ கூட பொய் பேச கத்துகிட்டியா என்ன ‘ என்று வலியோடு அந்த புத்தகத்தை மூடினாள் சாயாலி.
நாளை எவ்வாறு யாரிடம் சென்று உதவி கேட்பது, எந்த வேலையில் சேர்வது என்று அவள் தீவிர சித்தனையில் இருக்க, அங்கு ஒருவனோ அவளை எந்த வகையில் தன்னிடம் வர வைக்கலாம் என்ற திட்டத்தோடு படுக்கையில் விழுந்தான். விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ??
தற்போதைய நிலவரப்படி சாதகமான தீர்ப்பு என்னவோ தமிழ் பக்கம் தான்.
மெத்தையில் படித்திருந்தவனின் உதடுகள் ” யாழி ” என்று உச்சரித்த வண்ணம் இருக்க, அப்போது தான் அவன் அறைக்கு வந்த தமிழின் தந்தை கேட்க நேர்ந்தது.
சனா💝

