711 views

ரகுவரன் 5

 

 

மணியை பார்த்தவன் தந்தையாக மாறினான். தன்னை தயார்படுத்திக் கொண்டு இலகு உடைக்கு மாறியவன் புறப்பட்டான் பள்ளிக்கு. சென்னை போக்குவரத்து அவனை நேரத்திற்கு செல்ல விடாமல் சதி செய்ய, தாமதமாக பள்ளி முன்பு நின்றான். 

 

தந்தையானவன் செயலில் மாற்றம் இல்லாத போது மகள் செயலில் எப்படி மாற்றம் இருக்கும். ரெட்டைவால் சடை கொஞ்சம் நீண்டு இருக்க, முகம் வயதுக்கு ஏற்ற அளவை எட்டி இருந்தது. காலையில் பாட்டிகள் வைத்த ரோஜா பூ வாடி வதங்கியதை விட மான்விழியின் முகம் வாடி இருந்தது தந்தையை காணாமல். 

 

தூணில் சாய்ந்துக் கொண்டு கண்ணில் ஏக்கத்தோடு பார்க்கும் மகளின் விழியில் தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொண்டான் இவை அனைத்தும் தனக்காக என்று. கால்கள் பரபரப்பாக அவளிடம் செல்ல, முகம் புன்னகையோடு அவள் முகத்தை ஏறிட்டது. தந்தையை கண்டதும் வாடிய ரோஜா உயிர் பெற்று விட, “அப்பா” என்றாள் உற்சாகமாக.

 

 

பத்து வயது எல்லாம் அவனுக்கு கணக்கில்லை. மகளை தூக்கி நான்கு முறை சுற்றியவன் கன்னத்தில் முத்தமிட்டு, “என் தங்கத்தை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேன், சாரி.” என்று மீண்டும் முத்தமிட்டான்.

 

 

“மான்குட்டி உங்கள ரொம்ப நேரம் தேடுச்சு அப்பா” என்றவளும் முத்தம் வைக்க, எச்சில் பட்ட இடம் இனிக்கு ஆரம்பித்தது தந்தைக்கு.

 

“என் தங்கம் வெயிட் பண்ணுது விடுங்கடான்னு சொல்லியும் இந்த ட்ராபிக் அப்பாவை வரவிடாம பண்ணிடுச்சு.” 

 

“அப்பா மான்குட்டி போலீஸ் ஆகி டிராபிக்க எல்லாம் கிளியர் பண்ணி விட்டுடும். என் அப்பா வரும்போது எந்த வண்டியும் இருக்கக் கூடாது. யாராவது குறுக்க வந்தா அவங்களை ஜெயில்ல பிடிச்சு போட்டுடுவேன்.” என்ற மகளின் வார்த்தையில் உள்ளத்தில் இருந்து சிரித்தவன்,

 

“என் தங்கத்துக்கு போலீஸ் ஆகணுமா!” என்றான் வியப்பாக.

 

“ஆமாப்பா, போலீஸ் ஆனா தான் தைரியமா இருக்க முடியுமாம்.” 

 

“அப்படியா!”

 

“ம்ம்ம்”

 

“யாருடா தங்கம் உனக்கு இதை சொன்னது?”

 

“அம்மாவ பார்க்க அன்னைக்கு ஒரு போலீஸ் மேடம் வந்தாங்கல அவங்க சொன்னாங்க.”

 

“வேற என்ன சொன்னாங்க?”

 

“தப்பை தட்டிக் கேட்கணும்னா யூனிபார்ம் வேணுமாம். அதை போட்டாலே பொண்ணுங்க ரொம்ப தைரியமா மாறிடுவாங்களாம். ஏதாச்சும் பிரச்சனை வந்தா தனியா சமாளிக்கலாமாம். உங்க மான்குட்டி பைட் பண்ண போது பெரிய பொண்ணாகி.” மகளின் பேச்சுகளை கேட்டுக்கொண்டே கார் இருக்கும் இடத்திற்கு வந்தவன் உள்ளே அமர வைக்காமல் காரின் முன்னால் அமர வைத்தான்.

 

மகளானவள் கார் மேல் உட்கார வைத்ததும் துள்ளி குதிக்க, “தைரியமா இருக்க போலீஸ் ஆகணும்னு அவசியம் இல்ல தங்கம். தைரியம் டிரஸ்ல இல்ல நம்ம மனசுல இருக்கு. உடையில கூட ஆணுக்கு வீரம்னு சொல்லித் தர இந்த சமூகம் பொண்ணுங்களுக்கு தைரியம்னு சொல்லித் தருது.” தந்தையின் வார்த்தையை புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லாத மான்விழி லேசாக நெற்றியில் இருக்கும் முடிகளை சொரிந்து கொண்டு, “என்னது ப்பா” என்று சந்தேகம் கேட்டது.

 

 

மூக்கை சுருக்கி கொண்டு விளக்கம் கேட்கும் மகளின் செய்கையில் சிரித்தவன், “போலீஸ் உடைக்கு பின்னாடி உன் தைரியத்தை வைக்காத தங்கம்.  மத்தவங்க சொல்றதை வச்சும் உன்னோட எதிர்காலத்தை முடிவு பண்ணிக்காத. உனக்கான வழி எதுவோ அதை நீ தான் தேர்வு செய்யணும். அப்பா எப்பவும் உன் பின்னாடி இருப்பேன் எந்த ஆபத்தும் நெருங்க விடாம.” என்றதும் புரிந்தது போல் தலையாட்டும் மகளைக் கண்டு வாய் விட்டு சிரித்தான்.

 

தந்தையின் சிரிப்பில் கோபம் கொள்ளாதவள் அவன் கன்னக் குழியில் கை வைத்து, “ஐயா…! அப்பாக்கு கன்னக்குழி வந்துடுச்சு.” என கூச்சலிட்டாள்.

 

 

மகளின் குதூகலத்தில் ரகுவரன் இன்னும் சிரிக்க, செல்ல மகள் குழியில் வைத்த விரல் இன்னும் உள்ளே சென்றது. ஆர்ப்பரிக்க ஆரம்பித்த மான்குட்டி, “தம்பி பாப்பா உங்கள மாதிரி பெரிய பையனா வளர்ந்ததற்கு அப்புறம்  இந்த மாதிரி தான் அழகா சிரிப்பான் இல்ல ப்பா.” என்றாள்.

 

புன்னகையோடு தலையசைத்தவனுக்கு, “தம்பிக்கு உங்கள மாதிரி இருக்கு எனக்கு ஏன்’ப்பா இல்ல.” கேட்டதும், சிரிப்பு நின்றது.

 

ஒரு நொடி மின்னல் வெட்டியது. அதை சமாளித்துக் கொண்டவன், “நீ அப்படியே அம்மா மாதிரிடா தங்கம்” என்று புன்னகைத்தான்.

 

“எனக்கு உங்கள மாதிரியும் தம்பி பாப்பா மாதிரியும் இதோ” தன் வலது கன்னத்தில் கை வைத்து, “இங்க வரணும் அப்பா.” என்றாள் எதிர்பார்ப்போடு.

 

மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாத தந்தை வருத்தத்தோடு, “அதெல்லாம் நம்ம கொடுக்கறது இல்ல தங்கம் சாமி தரது‌. நீ அப்படியே அம்மா மாதிரி இருக்கிறதால உனக்கு குழி இல்லை. தம்பி என்னை மாதிரி இருக்கிறதால குழி இருக்கு அவ்ளோ தான்.” அத்தோடு பேச்சை முடிக்க எண்ணியவன் மகளை காரில் அமர வைத்து வீட்டை நோக்கி படையெடுத்தான்.

 

 

வழக்கம்போல் காரில் இருந்து இறங்கியதும் தன் தம்பியை மான்குட்டி அழைக்க, சிங்கக்குட்டி ஆர்ப்பரித்து அக்காவின் கைக்கு மாறியது. தன் சாயலை முறைத்த ரகுவரன் படாதப்பாடுபட்டான் அவளுக்கு உடைமாற்றி விட. பள்ளி மட்டும்தான் இருவரையும் பிரிக்கும் ஒரே ஆயுதம். மற்ற நேரமெல்லாம் பசை போல் உடன்பிறப்புகள் ஒட்டிக்கொள்ள, மனதில் திட்டிக்கொண்டே இருந்தான் மகனை. 

 

***

 

“மானு தம்பிய கீழ இறக்க விட்டுட்டு இதை சாப்பிடு.” என்ற சாந்தி பாட்டிக்கு மதிப்பளித்து அவள் மகிழ்வரனை இறக்கி விட, பாட்டியை அடிக்க பாய்ந்தது குட்டி வாண்டு.

 

அதை கவனித்த லட்சுமி பேரனை சிறிதாக அதட்ட, “ங்ங்ஙேஙே…” சிணுங்கினான் வேண்டுமென்றே அக்கா பார்க்க.

 

நண்பனின் சத்தத்தை கேட்ட ஆதவ் தூக்கத்தை விட்டு விட்டு வேகமாக அவனைத் தேட, “இந்த முஸ்தபா தொல்லை தாங்க முடியல.” என புலம்பிக்கொண்டே இனன்யா தூக்கி வந்து நண்பனோடு சேர்த்தாள்.

 

 

இவர்கள் செய்யும் அலப்பறைகளை அறிந்து தான் இனியா தன் மகளை இவர்கள் கண்ணுக்கு காட்டாமல் தன் அறையில் வைத்துக்கொண்டாள். செவ்வாய் கிரகத்தில் தன் மகளை பதுக்கி வைத்தால் கூட அண்ணனும் மாமன் மகனும் சத்தமிட்டே எழுப்பி விடுவார்கள் என்பதற்கு சாட்சியாக இந்த முறையும் மணாலி எழுந்து விட்டாள். பற்களை கடித்துக் கொண்டு மகளை தூக்கி வந்த இனியா,

 

“இப்பதான் கஷ்டப்பட்டு என் பொண்ண தூங்க வச்சேன். அதுக்குள்ள ரெண்டு பேரும் சத்தம் போட்டு எழுப்பி விட்டுட்டீங்க. அடுத்த வாரம் வேற எனக்கு எக்ஸாம் இருக்கு. நீங்க பண்ற தொல்லையால தான் நான் படிக்காம போறேன். இது தெரியாத என் புருஷன் ஒவ்வொரு தடவையும் என்னமோ நானே ஆசைப்பட்டு பெயிலான மாதிரி பேசுவான்.” அவள் பேச்சை  கேட்டு அனைவரும் சிரிக்கிறார்கள் என்பதை கூட உணராமல் படப்படவென்று பட்டாசாய் வெடித்தாள்.

 

“அத்தை எனக்கு தெரிஞ்சு இது உங்களுக்கு ஆறாவது எக்ஸாம்.” என்று மான்விழி சொன்னதும் பட்டென்று சத்தமிட்டு சிரித்தாள் இனன்யா.

 

அக்கா முறையான தோழியின் சிரிப்பில் கடுப்பானவள், “இந்த தடவை பாருங்க எப்படி பாஸ் பண்ணி காட்டுறன்னு.” என சவால் விட,

 

“அதுக்கு வாய்ப்பு இருக்கா இனியா” என்றார் லட்சுமி.

 

“இவங்கள மாதிரி நீயும் என்னை நக்கல் பண்றியா அம்மா. எவ்ளோ சிரிக்க முடியுமோ சிரிங்க இந்த தடவை இந்த இனியா யாருன்னு உங்க எல்லாருக்கும் தெரிய போகுது.” 

 

“நீங்க பாஸ் பண்ற லட்சணம் தான் ஊருக்கே தெரியுமே.” என்றவாறு சதீஷ் உள்ளே வர,

 

“தப்பா சொல்லாதடா உலகத்துக்கே தெரியும்.” ஜதி சேர்த்தான் ஆகாஷ்.

 

மற்றவர்கள் கேலியில் கடுப்பாகாத இனியா கணவனின் கேலியில் கடுப்பாகி, “ஸ்கை” எனக் கத்தினாள்.

 

“தயவு செஞ்சு இந்த ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிடாத. உன்ன பத்தி தெரியாம இந்த ஒரு வார்த்தைல தான்டி மயங்கி இவ்ளோ கஷ்டப்படுறேன்.” 

 

“ஓஹோ! என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது உங்களுக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கா.”

 

“இன்னுமாடி உனக்கு புரியல.” என்று அவள் கோபத்தை கிளறி, பல அடிகளை வாங்கிக் கொண்டான் ஆகாஷ்.

 

இவர்கள் பேசும் அனைத்தையும் வெளியில் அமர்ந்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான் ரகுவரன். எப்பொழுதும் இந்த நேரத்தில் மகிழினியை வம்பு இழுத்துக் கொண்டிருப்பான் ரகுவரன். அடங்காத மனைவி கணவனை அடக்கும் முயற்சியில் ஈடுபடுவாள். சில மணி நேரம் ஒதுக்கி வைத்த மகிழினியின் நினைவு மீண்டும் அவன் நெஞ்சில்.

 

“என் தங்கத்துக்கு கொடுத்ததை நீ எதுக்கு சாப்பிடுற.”

 

“உன் பொண்ணு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா. அதான் நான் சாப்பிடுறேன்.”

 

“ராட்சசி! என் பொண்ண பாருடி உன்னை எப்படி ஏக்கமா பார்த்துட்டு இருக்கான்னு” என்றவன் பார்வை பக்கத்தில் இருக்கும் மகள் மீது சென்றது. கணவனின் பார்வையை பின் தொடர்ந்தவள் மகளை பார்க்க, தந்தை தனக்காக வாங்கி வந்த குலோப் ஜாமுன் அன்னையிடம் சிக்கிக் கொண்டதை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

“மானு நீ சின்ன பொண்ணு குலோப் ஜாமுன் சாப்பிடக்கூடாது.” ஒப்புக்கு கண்டிப்பை காட்டியவள் இருவரையும் வெறுப்பேற்ற குலோப்ஜாமுனை ரசித்து சாப்பிட்டாள்.

 

மான்குட்டி ஏக்கமாக தந்தையை பார்க்க, “ஏய்! கொடுடி என் பொண்ணு கிட்ட.” கொதித்து எழுந்து விட்டான் மகளின் ஏமாற்ற முகத்தில்.

 

 

“முடியாது போடா”

 

“புருஷன்னு கூட மதிப்பு கொடுக்காம ‘டா’ போடுறா பாரு.”

 

“அப்படிதாண்டா ‘டா’ போடுவேன் போடா ரகுவாரா டா…” ஹாலில் அனைவரும் இருக்க அவனை மதிக்காமல் பேசிக் கொண்டிருந்தாள்.

 

பிள்ளைகளின் முகத்திற்காக அமைதியாக இருந்தவன் பொறுக்க முடியாமல் மனைவியிடம் மல்லுக்கு நிற்க, குலோப் ஜாமுன் கிண்ணம் சிக்கியது இருவருக்கும் நடுவில். கடைசியில் வென்றவன் அதை தன் மகளிடம் கொடுத்து சிரிக்க, தன்னை தோற்கடித்த கணவனை அடிக்க ஆரம்பித்தாள்.

 

அவளிடம் இருந்து தப்பிக்க ஓட ஆரம்பித்த ரகுவரனை ஒரு வழியாக பிடித்து விட்டாள். “எப்ப பாரு பொண்ணு பொண்ணுன்னு குதிச்சிட்டு இருக்க. என்னை பார்த்தா உனக்கு மனுஷி மாதிரி தெரியலையா. வாங்கிட்டு வரும்போது எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்தா என்ன? தனியா இருக்கும் போது மட்டும் தான் உனக்கு நான் கண்ணுக்கு தெரியுறேன். இதுல மரியாதை கொடுக்கலன்னு பேச்சு வேற.” என்று அடித்துக் கொண்டே இருக்க,

 

“இருடி கொஞ்ச நேரம்” தடுத்துக் கொண்டிருந்தான்.

 

கேட்காதவள் தன் செயலில் மும்முரமாக இருக்க, வலுக்கட்டாயமாக பிடித்தவன் சிறை பிடித்தான் குலோப் ஜாமுன் உதட்டை. சற்று முன் சாப்பிட்ட இனிப்பு உதட்டில் அப்படியே இருக்க, இடம் பெயர்ந்தது அவன் உதட்டிற்கு. சுவை மறைய ஏமாந்து போன மனைவிக்கு சுவை ஊட்டினான் பால்கோவாவை அவள் உதட்டில் திணித்து.

 

விழி பிதுங்கி பார்க்கும் மனைவியை கண்டு கண் சிமிட்டியவன் தன் வாய் வழியே அவளுக்காக வாங்கி வந்ததை கொடுத்தான்.

 

 

மகள் இருக்க… மனைவிக்காக வாங்கி வந்ததை மறைத்து வைத்தவன் சரியான நேரத்தில் உபயோகித்து மனைவியின் கோபத்தை தனித்தான்.

 

***

 

 

வீட்டின் முற்றத்தில் அமர்ந்தவனின் பார்வை பிள்ளைகள் மீது இருந்தது. இரவு நேர மின்விளக்குகள் துணையோடு பேரப்பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்கள் மூத்தவர்கள். மகள் செய்யும் சேட்டையில் புன்னகை அரும்ப, மகன் சாப்பிடாமல் அடம் பிடிப்பதில் மனைவியின் முகம் தெரிந்தது. 

 

 

தினமும் இரவில் நடக்கும் நிகழ்வில் மகிழ்வரன் தவறாமல் கடைபிடிக்கும் செயல் இது. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை மகள் சாப்பிடாமல் இருக்க, தினமும் தம்பதிகள் சண்டை போட்டுக் கொள்வார்கள். மான்விழி விஷயத்தில் ரகுவரன் விட்டுக் கொடுக்காமல் இருக்க, மகனுக்கு தந்தையின் அலட்சியம் வருத்தத்தை கொடுக்காத வகையில் மகிழ்வரனை பார்த்துக் கொள்வாள் மகிழினி.

 

தந்தையும் மகனும் எவ்வளவு அடித்துக் கொண்டாலும் இரவு நேரத்தில் குதூகலத்தோடு மகிழினியை வம்புக்கு இழுப்பார்கள். அப்படி ஒரு நாள் போட்ட ஆட்டம் அவன் நினைவிற்கு வந்தது.

 

****

 

இரவு உணவை அனைவரும் கதை பேசி முடிக்க, மான்குட்டி தம்பிக்கு சாப்பாடு ஊட்டினாள் கதை சொல்லி. கூடவே ஆதவ், மணாலி சேர்ந்து கொள்ள, அவர்களுக்கும் பொழுது காட்டி ஊட்டி விட்டாள். மகிழ்வரன் சாப்பிடும் வரை அமைதியாக இருந்த ரகுவரன், 

 

“உன் பையன போய் வாங்குடி என் பொண்ணுக்கு நான் சாப்பாடு ஊட்டனும்.” என்றான் வெகு நேரமாக மகளுக்காக தட்டில் வைத்திருந்த தோசையை காட்டி. 

 

மகிழினி அவனை முறைத்துக் கொண்டு மகிழ்வரனை வாங்கிக் கொள்ள, தாயுமானவன் அவள் சொல்லிய கதையை அவளுக்கே சொல்லி ஊட்டி விட்டான். பத்து நிமிடம் கூட கடந்து இருக்காது மகிழ்வரன் சத்தம் கேட்டது. உடனே மான்குட்டி ஓடி விட, அவள் பின்னால் ரகுவரன் ஓடினான்.

 

“என்னடா பாப்பா வாங்க அக்கா கிட்ட.” என்று தம்பியை வாங்கி சமாதானம் படுத்திக் கொண்டிருக்க, மகனை முறைத்துக் கொண்டே வந்தவன், 

 

“என்னைய மாதிரி ஒரு பிள்ளையை கேட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்ப தான்டி புரியுது.” என்றான் மனைவியிடம். 

 

“நீதான கேட்ட அனுபவிடா ரகுவரா. நீ வில்லன்னா உன் பையன் வில்லாதி வில்லனா இருப்பான் போல.” என்றவள் சரியாக சாப்பிடாத மகளை அதட்டி ஊட்ட ஆரம்பித்தாள். தாய் ஊட்டும் போது சமத்தாக இருந்து கொண்டான் மகிழ்வரன்.

 

 

இரவு நெருங்கியதும் ஒரே  கூச்சல் சத்தம் தான் ரகுவரன் அறையில். தன் வேலைகளை முடித்துவிட்டு வந்த மகிழினி மூவரையும் அதட்ட, அவளையும் சேர்த்துக் கொண்டார்கள் தங்களின் சேட்டையில்.

 

மகிழ்வரனுக்கு கண்கள் சொக்க ஆரம்பிக்க தட்டி கொடுத்து தூங்க வைத்தாள் மான்குட்டி. இதுவும் தினமும் நடக்கும் நிகழ்வு தான் அங்கு. நால்வருக்கும் சேர்த்து பெரிய அளவில் கட்டில் ஆர்டர் செய்தவன் மகனை மனைவியிடத்தில் துரத்தி விட, அவனோ தந்தை உறங்கும் வரை அமைதியாக இருந்து விட்டு அக்காவிடம் தாவிக் கொள்வான். 

 

பலமுறை போட்டி போட்டும் ரகுவரனுக்கு இந்த விஷயத்தில் தோல்வி தான் கிடைத்தது. தம்பியை உறங்க வைத்தவள் வயிற்றில் கை வைத்துக் கொண்டு தூங்கி விட்டாள். மகளின் அழகை ரசித்துக் கொண்டிருந்த ரகுவரனுக்கு வாழ்க்கை எவ்வளவு அழகானது என்று புரிந்தது. 

 

வயது சில ஓடிய பின்னும் தன் ரத்தத்தில் ஒரு மகன் வந்த பின்னும் குறையாத அதே ஊற்று மகளிடத்தில். இத்தனை பேரின் வாழ்விற்கு பிள்ளையார் சுழி இவள் தானே! 

தலை வருடி கொடுத்தவன் ….

 

“அழகூரில் பூத்தவளே

என்னை அடியோடு சாய்த்தவளே

மழையூரின் சாரலிலே

என்னை மார்போடு சேர்த்தவளே

 

உனை அள்ளித்தானே

உயிர் நூலில் கோர்ப்பேன்

உயிர் நூலில்

கோர்த்து உதிராமல் காப்பேன்…”

 

 

பெருமிதத்தோடு பாடி கொண்டிருக்க, அவன் முதுகை கடித்தாள் மகிழினி. 

 

“டேய் ரகுவரா போதும் எனக்கு தூக்கம் வருது திரும்பு.” என்றவள் கொட்டாவி விட்டபடி அவன் முதுகில் சாய, திரும்பவில்லை ரகுவரன்.

 

இரண்டு நிமிடம் பொறுத்து பார்த்தவள் மீண்டும் வேகமாக கடித்தாள். அப்போதும் பார்க்காதவன் பாடலை தொடர, திரும்பி படுத்து கொண்டாள். மெத்தை அசைவில் உணர்ந்தவன் அவள் புறம் திரும்பிக்கொண்டு,

 

“பொண்டாட்டி” என்றிட,

 

“உன் பொண்ணு புராணத்தை பாடிக்கிட்டு இரு போ” தன் மேல் இருக்கும் கையை தட்டி விட்டாள்.

 

“உன் புராணத்தையும் பாட ரெடி டி திரும்பு.” என்று அவளை திருப்ப,

 

“போடா எனக்கு தூக்கம் வருது.” என்று கொட்டாவி விட்டாள். 

 

“நீ முறிக்கும் சோம்பலிலே

நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்.

நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே

நான் இறங்கி தூங்கிடுவேன்

 

குறிலாக நான் இருக்க

நெடிலாக நீ வளர்க்க

சென்னை தமிழ்

சங்கத்தமிழ் ஆனதடி

 

அறியாமல் நான் இருக்க

அழகாக நீ திறக்க

காதல் மழை

ஆயுள் வரை தூருமடி ” என்ற ரகுவரன் பக்கத்தில் படுத்திருக்கும் தன் இரு வாரிசுகளின் மீதும் சேர்த்து கை போட்டான்.

 

மற்றொரு கையை மகிழினி இடுப்பில் போட்டுக் கொண்டு அவள் மார்பில் தலை சாய்ந்து பாடலை தொடர்ந்தான்…

 

என்னை மறந்தாலும்

உன்னை மறவாத

நெஞ்சோடு நான் இருப்பேன்…!

 

தனக்கு கிடைத்த இனிமையான வாழ்க்கையை உள்ளம் உணர்ந்து பாடிக்கொண்டிருந்தவன், “ராட்சசி” என்றான் கையை தேய்த்துக்கொண்டு.

 

“பின்ன என்னடா? நானும் இப்ப வருவ அப்ப வருவன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஒன்னு உன் பொண்ணு கூட சுத்துற இல்லையா எப்ப பாரு கழுதை மாதிரி கத்துற.”

 

“அடியே ராட்சசி! நான் பாடுறது உனக்கு கத்துற மாதிரி இருக்கா, அதுவும் கழுத கத்துற மாதிரி.”

 

“பெரிய எஸ்பிபி இவரு…” என்றவள் அவனை தள்ளிவிட்டு திரும்பி படுத்தாள்.

 

“என்னவாம் என் பொண்டாட்டிக்கு.” முதுகை உரசியவாறு நெருங்கி படுத்தவன் கை போட்டுக் கொண்டு கேட்க, அதை தட்டி விட்டாள்.

 

 

“சிலுப்பாத பொண்டாட்டி… அப்புறம் இந்த ரகுவரன் கிட்ட தான் வரணும்.”

 

“நான் எதுக்கு வரப் போறேன்”

 

“புருஷன் கிட்ட வராம வேற என்னடி பண்ணுவ.” தனக்கு உரிமையானவள் என்ற உரிமையில் அவனே வேண்டியதை எடுத்துக் கொண்டிருந்தான்.

 

 

சிக்கியிருக்கும் தன் உதட்டை காப்பாற்றிக்கொள்ள போராடியவள்  தள்ளிவிட்டாள் ஒருவழியாக. காந்தம் போல் உடனே ஒட்டிக் கொண்டான் மனைவியோடு. அடித்து தூரம் படுக்க வைக்க நினைத்தவள் எண்ணம் முடியாமல் போனதால் எழுந்து நின்றாள்.

 

முறைத்துக் கொண்டிருக்கும் மனைவிக்கு அப்படியே எதிராக கண் சிமிட்டி விசில் அடித்தான். “உனக்கு ரொம்ப கொழுப்பு அதிகமாயிடுச்சுடா ரகுவரா.” என்று இவள் அறையை விட்டு வெளியேற பார்த்தாள்.

 

கணவன் இருக்க நடக்கின்ற காரியமா அது. தாவிப்பிடித்தான் தன்னுள் வைத்துக்கொள்ள. சிறைப்பட்டுக்கொண்ட கிளி இறக்கை விரித்து போராட, ஆடவனின் மூச்சுக்காற்று முத்தம் அவளுக்குள் அடங்கிப் போனது.

 

 

“ம்ம்ம்” என்ற ஓசை அவனுக்கு தொந்தரவாக இருக்க, “என்னடி பொண்டாட்டி உன் பிரச்சனை.” என்றான் அவளை தன்னிடம் இருந்து பிரித்து.

 

“லூசு உன் பசங்க ரெண்டும் இங்க தான் இருக்கு.” என்றதும் பதறி தன் பிள்ளைகளை பார்த்தவன் நிம்மதி பெருமூச்சு விட்டான் தூங்குவதால்.

 

 

கணவனின் செய்கையில் பக்கென்று சிரித்தவள், “ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்லையாம், இதுல ஒம்போது ஃபர்ஸ்ட் நைட் கேக்குதாம்.” என்ற கேலிக்கு தண்டனையாக அவர்களுக்கான அறைக்கு இழுத்துச் சென்றான் அவள் கத்துவதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல்.

 

“இந்த வில்லனுக்கு தினமும் நாலு பஸ்ட் நைட் வச்சா கூட தப்பு இல்லடி. பொண்டாட்டிய பாவம் பார்த்து போனா போதுன்னு விட்டு வச்சிருக்கேன்.” என மீசையை நீவி விடும் கணவனின் முகத்தை காதலோடு நோக்கியவள் சிக்னல் கொடுத்தாள் கண்ணடித்து.

 

“பொண்டாட்டி” குதுகளித்தது ரகுவரன் குரல்.

 

“நாலு பஸ்ட் நைட் வச்சா உன் பொண்டாட்டி பாவம் தான் வேணும்னா ஒன்னு வச்சுக்கலாம்.” என்று மீண்டும் கண்ணடிக்க, “அழகு பொண்டாட்டி மாமா ஆல்வேஸ் ரெடிடி.” என்றதும் வெட்கம் தாங்காமல் அறையில் விளக்குகள் கண்களை மூடிக்கொண்டது.

 

இதுதான் பிரச்சனை இல்லாத கடைசி இரவாக அமைந்தது இருவருக்கும். யார் கண் பட்டதோ சிறு சிறு பிரச்சனைகள் இருவருக்குள்ளும் முளைக்க ஆரம்பித்தது. காதல் அதையெல்லாம் தட்டி துரத்தி விட, குட்டி ரகுவரனால் முதல் பிரச்சனை துளிர் விட்டது.

 

மான்விழியோடு விளையாடிக் கொண்டிருந்தவன் தெரியாத்தனமாக அவள் கண்ணை குத்தி விட்டான். அவளும் குழந்தை தானே வலி பொறுக்க முடியாமல் கத்தி விட்டாள். வேலைகளை முடித்துவிட்டு சோர்வாக வந்தவன் மகளின் சத்தத்தில் மகனை அடித்து விட்டான். வலியில் துடித்துக் கொண்டிருந்த மான்குட்டி அந்த நேரத்திலும் தன் தம்பியை காப்பாற்ற, மகள் மீது காட்ட முடியாத கோபத்தையும் சேர்த்துக் காட்டினான்.

 

 

மகனை காப்பாற்றிய மகிழினி கணவனை கண்டபடி வசைபாட, “என்னடி புள்ள வளர்த்து வச்சிருக்க. பாரு என் தங்கம் கண்ணு எப்படி வீங்கி இருக்குன்னு.” சுடு தண்ணீர் போல் கொதித்தான்.

 

 

“லூசு மாதிரி பேசாத ரகு குழந்தைங்க விளையாடுனா இப்படித்தான் அடிபடும். அவளே வலிய மறந்துட்டு தம்பி கூட வந்து நிற்கிறா. நீ என்னமோ குதிக்கிற.”

 

“யாரடி லூசு’னு சொல்ற வாய ஒடச்சிடுவேன். என் பொண்ண அந்த அளவுக்கு இவன் மாத்தி வச்சிருக்கான்.”

 

“அவன் குழந்தை டா.”

 

“என் தங்கம் மட்டும் என்ன?”

 

“ஐயோ….ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு இவ்ளோ ரியாக் பண்ணாத. ரெண்டு பேருமே குழந்தைங்க, விளையாடுனா அடிப்படத்தான் செய்யும். ஒருத்தருக்காக இன்னொருத்தரை திட்டாத.”

 

“இன்னொருத்தர திட்டாதன்னு சொல்றியா இல்ல என் மகனை திட்டாதன்னு சொல்கிறாயா.”

 

“ரெண்டுமே தான்.”

 

“உனக்கு உன் பையன் முக்கியம்’னா எனக்கு என் பொண்ணு முக்கியம். இவன் அழ வைப்பான் நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா.”

 

“உன்கிட்ட எல்லாம் பேச முடியாது” என்ற மகிழினி சளிப்போடு திரும்ப, இரும்பு கரம் போல் அழுத்தமாக பிடித்தவன், “எதுக்கு என்கிட்ட பேச முடியாது? அப்படி என்ன இப்ப நான் பண்ணிட்டேன்.” மகள் மீது இருக்கும் அதீத பாசத்தில் கண்மண் தெரியாமல் சண்டையிட்டான்.

 

 

இருவருக்கும் நடுவில் பெரியவர்கள் வந்து சமாதானப்படுத்தும் அளவிற்கு சென்றது. தம்பியை தந்தை அடித்ததும் மனம் வருந்திய மான்குட்டி சிறியவனை சிரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் நடக்கும் கலவரத்தை அறியவில்லை. மகிழ்வரன் சகஜ நிலமைக்கு திரும்பி விட, இரவு ஆனதும் மான்விழி கண்கள் பெரிதாக வீங்கி விட்டது. 

 

 

வீட்டில் இருந்த அனைவரும் பதறி விட்டார்கள். ரகுவரன் நிலமை சொல்லி தெரிய வேண்டியது இல்லை ஆர்ப்பாட்டம் செய்து விட்டான். மகனையும் மனைவியையும் கண்டபடி திட்டிக்கொண்டு மகளோடு புறப்பட்டான் மருத்துவமனைக்கு. சிகிச்சை அளித்து முடிக்கும் வரை இவன் செய்த கலவரத்தில் ரெண்டானது மருத்துவமனை.

 

 

“மான்குட்டிக்கு ரொம்ப வலிக்குதா.” எல்லாம் முடித்து வீடு வந்து சேர்ந்த மகளை கட்டி அணைத்து தன்னோடு வைத்துக் கொண்டாள் மகிழினி. 

 

“இல்லம்மா கொஞ்சம் விட்டு விட்டு எரியுது.”

 

“அப்பா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் மருந்து போட்டாங்கல கொஞ்ச நேரத்துல சரியாயிடும். என் செல்ல மான்குட்டி சாப்டுட்டு தூங்குங்க.” என்று மகளுக்கு உணவை கொடுத்தவள் தன்னோடு படுக்க வைத்துக் கொண்டாள் அன்றைய இரவு.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
25
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்