Loading

இம்முறை ஏனோ கோபம் வரவில்லை சத்யாவிற்கு.

“நீங்க இருக்கீங்களே… உங்களை எப்படி தான் அத்தையும் மாமாவும் வளர்த்தாங்களோ! உங்க சேட்டையை சமாளிக்கவே அவங்களுக்கு போதும் போதும்ன்னு ஆகியிருக்கும்” என்று கன்னத்தில் இருந்து சந்தனத்தை வழித்து, முறுவலுடனே சலித்தாள்.

“அதுக்குலாம் ஸ்பெஷல் கோர்ஸ் போகணும் ரூப்ஸ்.” என்றதில், அவனுக்கு அழகு காட்டி விட்டு, தன்னறைக்கு சென்று சுத்தப்படுத்திக் கொண்டவள், மீண்டும் கல்யாண வேலையில் புதைந்தாள்.

எப்போதும் இறுக்கத்துடன் இருக்கும் மனம் இன்று இலேசாக இருந்தது. காரணம் தெரியவில்லை அவளுக்கு. கூடவே எழிலழகனின் நினைவும் தாக்கியது.

தமக்கையின் திருமணத்தின் போது, தானே அனைத்து வேலையையும் முன்னின்று செய்வேன் என்று கூறியவன், இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை. நாளைக்காவது வருவானா என்றும் தெரியாமல், அவனுக்கு போன் செய்ய போனாள்.

எப்படியும் அவன் எடுக்க மாட்டான் என்று தோன்ற, வாட்சப் – இல், “என்மேல இருக்குற கோபத்துல அக்கா கல்யாணத்துக்கு வராம இருந்துடாத எலி. ப்ளீஸ் நாளைக்காவது வா மாமா.” என அவள் அனுப்பிய நொடியில் அவன் பார்த்தும் விட்டான்.

எப்போதும் இப்படி தான், அவள் அனுப்பும் செய்திகளை பார்ப்பவன் பதில் அளிக்க மாட்டான். ஆனால், இம்முறை பதில் வந்தது.

“நான் இல்லாம நாளைக்கு உன் அக்கா கல்யாணமே நடக்காது…” வஞ்சத்துடன் வந்த பதிலின் தன்மையை அப்போது அவள் புரிந்து கொள்ளவில்லை.

“தேங்க்ஸ் எலி…” என அனுப்பி விட்டு, மேடை அலங்காரத்தை பார்வையிட்டாள். கண்களோ சிவந்து எரிந்து கொண்டிருந்தது. அதை எல்லாம் சட்டை செய்யாமல், அனைவரும் உறங்கிய பின்னரும் இருக்கும் வேலைகளை செய்து கொண்டிருந்த, அந்நேரம் இந்திரஜித் வந்தான்.

அவனைக் கண்டதும் மிரண்டவள், “இப்ப என்ன குண்டோட வந்துருக்கீங்க? இனிமே எந்த சடங்கா இருந்தாலும் காலைல தான் இந்தர்…” விழிகளை உருட்டி அவள் கூறியதில், அரிசிப்பற்கள் தெரிய அழகாய் சிரித்தவன்,

“மாப்பிள்ளை மேல அந்த பயம் இருக்கட்டும்” என்று கெத்தாய் கூறி விட்டு, பின் “நீ போய் தூங்கு ரூப்ஸ். நான் பாத்துக்குறேன்.” என்றான் மென்மையுடன்.

“அய்யயோ வேணாம்ப்பா. அப்பறம் நாளைக்கே வந்துட்டு, மாப்பிள்ளை கெத்தை காட்டுறேன்னு, இதையே சொல்லிக்காட்டுவீங்க. நானே பாத்துக்குறேன் சாமி.” மென்புன்னகையுடன் சத்யா பின் வாங்க, அதற்கும் முறுவல் பூத்தவன்,

“நான்லாம் அக்மார்க் நல்ல மாப்பிள்ளை ரூப்ஸ். பொண்டாட்டி அடிச்சா கூட ஏன் அடிக்கிறன்னு கேட்கவே மாட்டேன்…” கீழுதட்டைப் பிதுக்கி பாவம் போல கூறியதில், சத்தமாக சிரித்து விட்டவள், இருக்கும் இடம் கருதி வாயை பொத்திக் கொண்டாள்.

“என் அக்கா அடிக்க மாட்டான்ற தைரியத்துல பேசுறீங்களா?” என அமர்த்தலாகக் கேட்க, அவனிடம் இருந்து மௌனப்புன்னகையே வந்தது.

சில நொடிகள் அம்மௌனம் தொடர, அவளே, “நீங்க போய் தூங்குங்க இந்தர். காலைல வெள்ளன எந்திரிக்கணும்.” என்றாள் அக்கறையாக.

“நீ எப்படி தூங்காம இப்படியே சுத்தலாம்ன்னு இருக்கியா?” முறைப்புடன் இந்திரஜித் கேட்டதில்,

“மணி இப்பவே பதினொண்ணு. நடு ராத்திரில, ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வேற வர்றாங்க. உங்க ரிலேட்டிவ்ஸ்ஸும் வர்றதா அத்தை சொன்னாங்க. எல்லாரையும் பாக்கணும்ல. அதுக்கே டைம் ஆகிடும். 4 மணிக்கே வைஷுக்காவுக்கு மேக் அப் பண்ணி விட, பார்லர்ல இருந்து ஆள் வர்றாங்க. அவங்களை பிக் அப் பண்ண போகணும்.” என்று அடுக்கிட, அவளை அமைதியாகப் பார்த்தான்.

“எந்த சொந்தக்காரங்களா இருந்தாலும், வந்தா, அவங்களே போய் படுத்துப்பாங்க சத்யா. பார்லர்ல இருந்து வர்றவங்களுக்கு கேப் புக் பண்ணிக்கலாம்… இப்போ நீ போ.” என்று கண்டிப்பாக கூறியதில் அவள் நெளிந்தாள்.

ஏற்கனவே, மண்டபம் ஊரைத்தாண்டி இருந்தது. பார்லர் ஆட்கள் வருவதற்கு 4 மணி அளவில் கேப் புக் செய்தால், ஆயிரக்கணக்கில் வாடகையே வந்து விடும். அதற்கு, தானே சென்று அழைத்து வரலாம் என்று நினைத்திருந்தாள். அவள் எண்ணத்தை புரிந்ததாலோ என்னவோ, “உன்னை போன்னு சொன்னேன். கேப் வாடகையை நான் குடுத்துக்குறேன்.” என்றதில்,

“இல்ல… அதை நானே கொடுக்குறேன்” என்றாள் வேகமாக.

அவளை முறைத்து வைத்தவன், “இருந்தாலும் உனக்கு இவ்ளோ ஈகோ வேணாம் ரூப்ஸ். நானும் கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து பாக்குறேன்… எதுக்குமே ஹெல்ப்ப அக்செப்ட் பண்ணிக்க மாட்டியா? பொண்ணு வீட்ல தான் எல்லா செலவும் பார்க்கணும்ன்னு யாரு சொன்னா? நீயா எல்லாத்தையும் இழுத்துப் போட்டுட்டு பார்க்குறியேன்னு, ஹெல்ப் பண்ணவான்னு கேட்டா, அதுவும் வேணாம்ன்னு சொல்லிட்ட. இப்பவும் பாரு, நான் இவ்ளோ சொல்லியும் இங்கயே நிக்கிற.” என்றவனின் குரலில் சிறு கடுமை எட்டிப்பார்த்தது.

அதில் அவளது முகம் லேசாய் வாடி விட, “சே சே… ஈகோ எல்லாம் இல்ல இந்தர். மாமா கூட என்னை எந்த ஹெல்ப்ன்னாலும் கேட்க தான் சொன்னாரு. உங்களுக்கு இது பெரிய விஷயமா தெரியாம இருக்கலாம். ஆனா, மத்தவங்க அப்படி நினைக்க மாட்டாங்க தான.” என்றதில்,

“யாரு என்ன நினைச்சா என்ன?” அவன் புரியாமல் கேட்டான்.

“விடுங்க. அது உங்களுக்கு புரியாது.” சத்யரூபா பேச்சை தடை செய்ய,

“புரியாது பூரி வராதுன்னு சமாளிக்காத ரூப்ஸ். உனக்கு புரியிற மாதிரி சொல்ல தெரியல…” என சிலுப்பிக்கொண்டவனின் பேச்சில் மீண்டும் புன்னகை அரும்பியது.

“சரி. சரி. நான் போறேன். கரெக்ட்டா பாத்துக்கோங்க இந்தர்.” என்று கூறி விட்டு, அறைக்கு சென்றவளுக்கு ஒரே ஆச்சர்யம் தான். தன்னால் இந்நிலையிலும் சிரிக்க முடிகிறதா?

அழுத்தமாய், கர்வத்துடன் நடமாடும் பல ஆண்களை பார்த்திருக்கிறாள். சிலர் அவளை அழ வைத்திருக்கிறார்கள். சிலர் கோபப்படுத்தி இருக்கிறார்கள். தந்தைக்கு பிறகு, அவளை மனம் விட்டு சிரிக்க வைத்தது அவன் மட்டுமே!

வேலைகளை இந்திரஜித்திடம் ஒப்படைத்த நிம்மதியில் நன்றாக உறங்கியும் விட்டாள். விழிப்பு தட்டிய போது மணி சரியாக நான்கு.

இத்தனை நேரம் உறங்கி இருக்கோமா? என வியந்தவளின் இதழ்களில் மீண்டும் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

அவசரமாக ஒரு குளியலைப் போட்டவள், காட்டன் புடவை ஒன்றை அப்போதைக்கு உடுத்திக் கொண்டு, தமக்கையை எழுப்புவதற்காக அவள் அறைக்கு சென்றாள்.

அவர்கள் இருந்த மண்டபமே நல்ல விஸ்தாரமாக இருந்திட, அங்கேயே 7 அறைகளும் இருந்தது. சிலர் மண்டபத்தில் தங்கி கொள்ள, சில சொந்தங்கள், ஹோட்டல் அறையில் தான் தங்குவதாக கூறியதில், அதற்கும் அவளே ஏற்பாடு செய்தாள்.

இத்தனைக்கும் இந்திரஜித்தின் வீடே ஐந்து அறைகள் கொண்ட டியூப்லக்ஸ் வீடு தான். நெருங்கிய உறவுகளில் பாதி பேர் அங்கு சென்றாலும், பிரச்சனை வளர்க்க வருபவர்கள், சகல வசதிகளை எதிர்பார்த்தனர்.

அப்போதும், பாலகிருஷ்ணன், “நான் ரூம் ஏற்பாடு பண்ணிக்கிறேன் சத்யா” என்றதற்கு அவள் மறுத்துவிட்டாள்.

“இல்ல மாமா, அது சரியா வராது. நாங்க தான இதெல்லாம் பண்ணனும். எத்தனை பேருன்னு சொல்லுங்க. நான் ஏற்பாடு பண்றேன்” என்றதில், பானுரேகாவும், உயர்ரக ஹோட்டல் பெயரைக் கூறி அங்கேயே அறை புக் செய்ய சொன்னார்.

அதற்கும் பாலகிருஷ்ணன் மனைவியிடம் வருந்தினார். “என்ன பானு… அங்க ஒரு ரூம் வாடகையே 25 ஆயிரம் வரும்…” என்றதில்,

அவரை முறைத்தவர், “நானா அவளை இதை எல்லாம் பண்ணனும்ன்னு சொன்னேன். அவளா தலையை குடுத்துக்கிட்டா, அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாதுங்க. அதுக்காக வர்ற சொந்தக்காரங்களை சின்ன ஹோட்டல்லயும் தங்க வைக்க முடியாது.” என்று விட, அவருக்கும் எதுவும் பேச இயலாத நிலை.

மண்டபத்தில், வைஷாலி ஒரு அறையில் தங்கி இருக்க, சாவித்ரியும் தாமரையும் ஒரு அறையிலும், சத்யரூபா தனி அறையிலும் தங்கி இருந்தாள்.

இரவில், எப்படியும் வேலை இருக்கும்… அந்நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றே, வைஷாலியுடன் உறங்கவில்லை.

ஆனால், வைஷாலியின் அறையில் இருந்த கடிதத்தைப் படித்ததும், அத்தனை நேரம் இருந்த இனிமை முற்றிலும் வடிந்து, கண்ணீர் தேங்கியது.

தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லையென வைஷாலி வெளிநடப்பு செய்திருந்தாள். தான் வேறொருவரை விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தவள், “சாரி ம்மா, சாரி சத்யா” என்று மன்னிப்பும் விடுத்திருக்க, சத்யரூபாவிற்கு கண்ணை இருட்டியது.

அப்போதும், தமக்கை மீதிருந்த நம்பிக்கையில், அறை முழுக்கத் தேடியவள், ‘அக்கா இப்படி எல்லாம் பண்ற ஆளு இல்ல. கண்டிப்பா ஏதாவது பிரச்சனை நடந்துருக்கும்’ என்று தீவிரமாக சிந்தித்தாள்.

அதற்குள் இவ்விஷயம் மண்டபம் முழுக்க தீயாக பரவிட, தாமரை அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

பானுரேகாவோ சொல்லவே வேண்டாம். விஷயம் அறிந்து சீறினார்.

“உன் அக்காவுக்கு எங்களை பார்த்தா பைத்தியக்காரங்க மாதிரி தெரியுதா சத்யா?” எனப் பல்லைக்கடித்ததில், அவளுக்கு ஒன்றும் பேச இயலவில்லை.

“அத்தை… அக்கா அப்டி எல்லாம் போயிருக்க மாட்டா. ஏதோ தப்பா நடந்துருக்கு…” என தமைக்கைக்காக வாதாடி, பானுரேகாவின் கோபத்தை தூண்டி விட்டாள்.

அவரோ ‘காச்மூச்’ என்று கத்த, ஆனந்திக்கு சொல்லவும் வேண்டுமா…! அவரும் வைஷாலியின் நடத்தையை தவறாக சித்தரிக்க, குடும்பத்தினர் தான் உடைந்து விட்டனர்.

விஷயம் அறிந்து, அப்போது தான் உறங்க சென்ற இந்திரஜித், முகம் கடுகடுக்க அங்கு வந்தான்.

அவனை ஏறிட இயலாமல் சத்யா தலையை தரையில் புதைக்க, அவனோ, “எங்க உன் அக்கா?” என்றான் கோபத்துடன்.

அவனிடமும் அதே பதிலை கமறலுடன் கூறியதில், “இந்த லெட்டர்ல இருக்குறது உன் அக்கா கையெழுத்து தான? இல்ல, உன் அக்கா கழுத்துல கத்தியை வச்சு யாரும் எழுத சொன்னாங்களா” படு நக்கலாகக் கேட்டதில்,

“அவள் கையெழுத்து தான்” என்றாள் தவிப்புடன்.

“ஒருவேளை அவளை யாரவது கடத்தி இருந்தா?” பதற்றத்துடன் அவள் நிமிர,

“உன் அக்கா என்ன அம்பானியோட கசின் சிஸ்டரா? இல்ல உலக அழகியா? கடத்தி காசு கேட்டா கூட, ஒரு பிரயோஜனமும் இல்ல” என்று
தோளைக் குலுக்கியவனை முறைக்க கூட இயலவில்லை.

“கொஞ்சம் வெய்ட் பண்ணி பார்க்கலாம் இந்தர். கண்டிப்பா வந்துடுவா” அப்போதும் தமக்கை மீது தீராத நம்பிக்கை அவளுக்கு.

“வந்துடுவாளா? திரும்பி வர்றதுக்கு எதுக்கு லெட்டர் எழுதி வச்சுட்டு போகணும் சத்யா? அவள் ஓடிப்போய்ட்டா அவ்ளோ தான். இப்போ என் கல்யாணம் நின்னதுக்கு பதில் சொல்லு.” என்று கையைக் கட்டிக்கொண்டு நிற்க, அவளோ விழித்தாள்.

“என்ன உங்க கல்யாணம்? இதுவே திடீர்ன்னு ஏற்பாடு பண்ணுனது தான?” அவள் தயக்கத்துடன் கூற,

“அதுக்கு? எப்படினாலும் இன்னைக்கு மாப்பிள்ளை நான் தான… ஒரு பையனோட கல்யாணம் மணமேடை வரை வந்து நின்னா, எவ்ளோ அசிங்கம்ன்னு தெரியுமா உனக்கு?” மூச்சு வாங்க அவள் கேட்ட கேள்வியையே அவன் கேட்க,

“அதான் இன்னும் மணமேடை வரை வரலையே…” அவளும் முணுமுணுத்தாள்.

அவனோ பார்வையால் எரித்து, “இப்போ என் நின்னு போன கல்யாணத்துக்கு என்ன பதில் சொல்ல போற?” என்றான் கடுமையாக.

“இது பிளான் பண்ணுன கல்யாணம் இல்லை தான இந்தர்… முதல்ல என் அக்காவை தேடணும்.” என்றவளுக்கு தமக்கை என்ன ஆனாளோ என்ற கவலை.

“வாட்? மூணு மாசத்துக்கு முன்னாடி பார்த்து, பேசி, முன்னாடியே முடிவெடுத்தா தான் கல்யாணமா? ஒரு நாளா இருந்தாலும் நான் மெண்டலி, பிசிக்கலி கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டேன் ரூப்ஸ். இப்போ வந்து குடுத்த சாக்லேட்டை புடிங்கிட்டா, நியாயமா?” எனப் புருவத்தை நெறித்தவனை, ‘யாருடா நீ…’ என்ற ரீதியில் மலைத்துப் பார்த்து வைத்தாள் சத்யரூபா.

பானுரேகாவும் பாலகிருஷ்ணனுமோ, ‘எதுக்கு இந்த லாரி பிரேக் போடாம ஓடிட்டு இருக்கு’ என்பது போல முறைத்திட, அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவன் தொடர்ந்தான்.

“என் அண்ணனாவது டீசண்ட்டா, கல்யாணத்துக்கு முதல் நாள் தான் ஓடுனான். உன் அக்கா அமுக்குணி மாதிரி, நீ நேத்து என் அண்ணனை வாய்க்கு வந்த படி பேசுனப்ப எல்லாம் சும்மா இருந்துட்டு, முகூர்த்த நேரத்துல பெரிய நாமமா போட்டுட்டு போய்ட்டா. இதுல பலியாடா என்னை ஆக்குனது தான் நீ பண்ணுன பெரிய தப்பு ரூப்ஸ். இப்ப எனக்கு என் கல்யாணம் நடந்தே ஆகணும். டாட்.” என்று வீம்பாய் நின்றவனை பாவமாக ஏறிட்டவள்,

“இப்போ என்னை என்ன தான் செய்ய சொல்றீங்க இந்தர்?” என்றாள் சலிப்பாக.

“நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ!” அலுங்காமல் குலுங்காமல் அசட்டையாக அவள் மீது இடியை இறக்கினான்.

சத்யரூபா திகைத்து விட்டாள். “என்ன பேசுறீங்க இந்தர். அக்கா போனா தங்கச்சியை கல்யாணம் பண்ணி வைக்கிறதுலாம் சீரியல்ல தான் நடக்கும்.” எனப் படபடப்புடன் உளற,

“எனக்கு அதுலாம் தேவை இல்ல. இப்போ எனக்கு என் கல்யாணம் நடக்கணும் அவ்ளோ தான். உன்னால தான எனக்கு இவ்ளோ பெரிய இன்சல்ட். அதை நீ சரி பண்ணனும்.” என்றவன்,

“என்ன அத்தை… நேத்து வைஷாலியை கல்யாணம் பண்ணிக்க சொன்னப்ப, நான் யோசிக்காம சரின்னு தான சொன்னேன். இப்போ நான் கேட்குறது தப்பா?” பாவம் போல முகத்தை வைத்து தாமரையிடம் வினவினான்.

பெரியவள் செய்து விட்டு சென்ற காரியத்தில் இருந்தே அவரால் வெளியில் வர இயலவில்லை. இந்திரஜித்தின் கேள்வியில் தான் நிகழ்விற்கு வந்தவர், தவறை சரி செய்தாக வேண்டும் என்ற நோக்கில், “சரி தான் தம்பி. தப்பு எங்க மேல தான்.” என்றவருக்கு மனம் வேதனையில் உழன்றது.

“அப்போ, உங்க பொண்ணை என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க…” தோளைக் குலுக்கிக் கொண்டவனை, பானுரேகா தான் முறைப்பாய் பார்த்தார்.

தாமரையோ, பானுரேகாவைத் தயக்கமாக ஏறிட, பாலகிருஷ்ணன், “உங்களுக்கு சம்மதம்ன்னா எங்களுக்கும் சம்மதம் தான்மா” என்றார்.

சத்யரூபா மெதுவாக அதிர்வை விழுங்கி விட்டு, “இந்தர்… இது என்ன சின்னப்பிள்ளை தனமா இருக்கு. அக்காவோட கல்யாணம் ஏற்கனவே ஏற்பாடு ஆனது. அதுனால தான், உங்களை கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். உங்களுக்கு அப்படி இல்ல தான. அப்பறம் ஏன் நான் கல்யாணம் பண்ணிக்கணும்.” முடிந்த அளவு பொறுமையை இழுத்துப் பிடித்தாள்.

“ஒரு நாள் நைட்டு முழுக்க, நான் கல்யாண கனவுல சுத்தி இருக்கேன் ரூப்ஸ். என் கனவுல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டது யாரு? நீயும் உன் அக்காவும் தான.

என் கொலிக்ஸ், ப்ரெண்ட்ஸ்ன்னு எல்லாரையும் வர சொல்லிட்டேன். எனக்கு ப்ரொபோஸ் பண்ணுன என் கொலிக் கிட்ட,  ‘நான் கமிட் ஆகிட்டேன், நான் இன்னொரு பொண்ணுக்கு ஹஸ்பண்ட்டா போகும் போது, நீ என்னை மனசில வச்சுட்டு சுத்துறது தப்புன்னு அவசர அவசரமா நோ சொன்னேன். உன்னால, பிக் அப் ஆக இருந்த பொண்ணும் போச்சு. ஏன் கல்யாணம் நின்னுச்சுன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்?” மூச்சிரைக்க பேசியவன், அவள் காதில் மட்டும் கேட்கும் வண்ணம்,

“அது மட்டும் இல்ல, ஹனிமூன் ட்ரிப் கூட பிளான் பண்ணிட்டேன்னா பாத்துக்கோ” என்றான் உதட்டைக் குவித்து.

“அடப்பாவி…” வாயில் கை வைத்து சிலையானவளுக்கு பேச்சே வரவில்லை.

“இல்ல… என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது!” ஏதேதோ பேசி மறுக்க முயன்றவளுக்கு தோல்வியே. இதில் தாமரை அவளை தனியாக அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்ள கூற, அவளோ திணறினாள்.

“என்னமா நீங்களும் புரியாம பேசுறீங்க. நான் கல்யாணம் பண்ணி இங்க வந்துட்டா நீங்க எப்படி தனியா இருப்பீங்க. தோட்டத்துல அறுப்பு வேலை வேற ஆரம்பிக்கணும். என்னால முடியாதுமா.” என்று பிடிவாதம் பிடித்தாள்.

“என்னை பார்த்துக்க எனக்கு தெரியும் சத்யா. இப்போ நம்மளால நடந்த அசிங்கத்தை நம்ம தான் சரிபண்ணனும்.” என்று கூறியும் அவள் மறுத்ததில்,

“சரி… உன் விருப்பம்! ஊர்ல ரெண்டு பொண்ணுங்களை நான் தான் ஒழுங்கா வளர்க்கலைன்னு பேசுவாங்க. அதுலயும் உன் அத்தையை பத்தி சொல்லவா வேணும். பெரியவ தான் நோகடிச்சுட்டு போய்ட்டா, உன் கல்யாணத்தையாவது பார்த்துட்டு கண்ண மூடலாம்ன்னு நினைச்சேன். இப்போ எதுவுமே நடக்காது போல.” என்று வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவரை சலனமற்று வெறித்தாள்.

சாவித்ரியும், “உன் கோபத்தை குறைச்சுட்டு யோசி சத்யா.” என்றிட, “நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றாள் உணர்வற்று.

அதில் இரு பெண்மணிகளின் முகத்தில் சிறு கீற்றாய் புன்னகை. சத்யரூபா திருமணத்திற்கு சம்மதித்து விட்டதை அறிந்ததும், இந்திரஜித்தின் இதழ்களிலும் ஒரு கள்ளப்புன்னகை பரவியது.

அலைபாயும்…!
மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
18
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்