Loading

அத்தியாயம் – 5

 

 

சீதாவை அங்கு எதிர்பார்க்காதவன், அவ்வளவு நேரம் இருந்த இறுக்கத்தை கைவிட்டு மென்மையாக சிரித்தான்.

“விகா இங்க என்ன பண்ற ஆபீஸ் போகலையா?” என்றவரை பார்த்து, 

“நைட் அஞ்சலியை பார்க்க வந்தேன் அத்தை, லேட் ஆகிருச்சு இனி கிளம்பி தான் ஆபீஸ் போகணும்.”

 

“சரிப்பா!” என்றவருக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆதிராவின் வாழ்வில் இவன் ஒரு புயலாக அல்லவா அடித்து சென்றிருக்கிறான். என்ன தான் எதுவும் நடக்காதது போல் முயன்று பேசினாலும் பெற்றவளால் எவ்வளவு நேரம் அதை மறைத்து அன்பு பாராட்ட முடியும். அவளும் சாதாரண மனிதபிறவி தானே. 

 

அவரது தடுமாற்றத்தை புரிந்து, “லேட்டாகிறுச்சு அத்தை நான் ஈவினிங் பேசுறேன்” என்று கூறியவன் நிற்காமல் காரை உயிர்ப்பித்தவன் , கடைசியாக பேசியவனுக்கு மீண்டும் அழைத்தான்.

“ஹலோ சொல்லு டா”

“எங்க இருக்க?”

“இங்க ஹாஸ்பிடலுக்கு பக்கத்தில இருக்கேன்”

“டேய் லூசுபயலே. நான் இங்க கெஸ்ட் ஹவுஸ்ல இருந்து இப்போ தான் கிளம்புறேன். என்கிட்ட சொல்லாம எதுவும் செய்யாத விணு” என்று அழைப்பை துண்டித்தவன் நேராக அவன் வாடிக்கையாக செல்லும் ஹோட்டலுக்கு சென்றான்.

 

இங்கு அவன் வார்த்தையால் வதைக்கப்பட்டவளோ ஷவரின் அடியில் நின்று சுயப்பரிசோதனை செய்துகொண்டிருந்தாள் அவனால் கீறப்பட்ட நெஞ்சத்தின் நேசத்தை வஞ்சித்து. 

 

‘ச்சி! என்ன மானங்கெட்ட உடம்போ எத்தனை அடிபட்டாலும் அவனோட விரல் பட்டாலே உருகி அவன்பக்கம் சரிற. இவ்வளவு தான் நானா, அவன் சொன்னது போல இந்த காதல் எனக்கு சந்தோசம் தரலயே வலியை மட்டும் தான் தந்திருக்கு. ஒருவேளை அவனை நான் லவ் பண்ணிருக்கவே கூடாதோ. அவன் எதுக்கு என்னை சுத்தி சுத்தி வந்தான்? இதுக்கெல்லாம் சீக்கிரம் பதில் கண்டுப்பிடிக்கணும்’

 

‘அவன் எதுக்கு லவ் பண்ணிருந்தாலும் நான் அவனை உண்மையா லவ் பண்ணிட்டேன் போல அதனால தான் இப்படி அழுறேன்’ என்று கண்ணீர் வழிவதை பார்க்கமுடியாமல் ஷவரை திறந்து நினைய ஆரம்பித்தாள். 

 

மனதில் ஏற்பட்ட வலியை குளித்து சரியாக்கி விட முடியுமா என்ன. பேதையவள் மறந்துபோனாளா இல்லை மரத்துப்போனாளோ ஒரு கட்டத்தில் குளிர் உயிரை வாட்டவும் தான் நிதானத்திற்கு வந்தாள். ஈரம் தோய்ந்த ஆடையை களைத்து உடைமாற்றி கீழே வர நடுக்கூடத்தில் பானுமதி மற்றும் சித்ராவிடம் பேசிக்கொண்டிருந்த சீதாவின் பார்வை ஆதிராவின் மேல் அழுத்தமாக படிந்தது. 

 

அதை உணர்ந்தாலும் சாதாரணமாக கீழே வந்து சீதாவின் அருகே அமர்ந்து சித்ராவை பார்த்தாள். அவரோ கண்ணால் அவளை அங்கிருந்து செல்ல சொல்ல அதற்குள் அவளை பிடிப்பிடி என பிடிக்க ஆரம்பித்தார் சீதா. 

 

“ஆதி என்ன நினைச்சுட்டு இருக்க? அஞ்சலி எவ்வளவு பயந்து போயிருந்தா லேபர் பெயின் வந்திருக்கும். உன்னோட தனிப்பட்ட விருப்பு வெறுப்பை காட்ட எப்படி இன்னொரு உயிரை பணயம் வைக்கலாம். 

 

இதுக்கு மேல நீ சொல்ல போற எதையும் நான் கேட்க தயாராக இல்லை. இன்னைக்கே உனக்கும் விகாவுக்கும் இருக்க எல்லா பிரச்சனையும் முடி. ஒன்னு ரெண்டு பேரும் சமாதானம் ஆகி கல்யாணம் பண்ணிக்கோங்க. இல்லனா இது சரி வராதுன்னு பேசி பிரிஞ்சு உங்க வாழ்க்கையை பாருங்க. 

 

அதை விட்டுட்டு இப்படி ஒரே இடத்தில் இருந்து எங்களை சங்கடப்படுத்தாதீங்க. நீங்கெல்லாம் வரதுக்கு முன்னாடி இருந்தே நாங்க நட்போட ஒரே குடும்பம் போல வாழ்ந்துட்டு இருந்தோம். உங்களால் இப்படி அது கலைந்த குருவிக்கூடா மாற நான் விடமாட்டேன். 

 

உனக்கு நான் எதையும் சொல்லி தான் புரியணும்னு இல்லை. பிசினஸ்ல இருந்து எல்லாத்துக்கும் நம்ப ஒருத்தரோட மூஞ்சில முழிச்சு தான் ஆகணும்.” என்று தான் சொல்ல வேண்டியது அவ்வளவு தான் என்பது போல பேசி அஞ்சலியின் குழந்தையை பார்க்க செல்ல ஆயத்தமாகினார். 

 

பெருமூச்சு ஒன்றை விட்ட ஆதிராவுக்கும் சீதா சொல்லியது சரி என்று பட விகர்ணனிடம் பேச முடிவெடுத்தாள். சித்ராவும் பானுமதியும் கூட சீதாவை ஆதரித்து விகர்ணனிடம் பேச சொல்லி மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். சீதா பேசியது அவள் மனதை சற்று அசைத்திருக்க யாரிடமாவது இதைபத்தி பேசினால் இன்னும் தெளிவாக முடிவெடுக்க முடியும் என்று நினைத்தவள் சென்றது என்னவோ விக்கியிடம் தான். 

 

தன் பங்குக்கு அவனும் சில அறிவுரை கூறினான். ஏனோ விகர்ணனிடம் ஏதோ வித்தியாசம் தெரிகிறது அவனிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க கூறியவன் அவனோடு பேசி அனைத்தையும் முடித்து நிம்மதியாக இருக்க வலியுறுத்தினான். அனைவரும் ஒரே விஷயத்தை கூறியதால் என்னவோ அவளுக்கு உடனே அதை செய்துவிட தோன்றியது.

 

முடிவெடுத்தவளாக அஞ்சலி அறைக்கு சென்று அஞ்சலியின் குழந்தையிடம் சிறிது நேரம் விளையாண்டு மணியை பார்க்க அது ஒன்றைக் காட்டியது. விகர்ணனின் காரியதரிசிக்கு அழைத்து மதியம் ஏதாவது மீட்டிங் இருக்கிறதா என்று கேட்ட எதிர்புறம் இல்லை என்று பதில் வர ஒருவித நிம்மதியுடன் அழைப்பை துண்டித்தாள். 

 

பின் அவர்கள் எப்பொழுதும் செல்லும் ரெஸ்டாரெண்ட்டில் டேபிளை புக் செய்தாள் வேங்கையவனின் வஞ்சிக்கொடி. சாதாரணமாக அழைத்தால் நிச்சயமாக மறுப்பான் என்று அறிந்தவள், அர்ஜென்ட் மீட்டிங் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி அவனை வர வைத்தாள். 

 

அப்பட்டமாக பிடித்தமின்னையை காட்டிக் கொண்டு உள்ளே வந்தான். அவனின் வருகைக்காக அதுவரை காத்திருந்தவள் அவனை கண்டதும் அவளிடம் அவன் நடந்துக் கொண்ட அனைத்தும் கண்முன் ஓடியது. கண்ணை இறுக்கி முடி தற்காலிகமாக அதனை ஒத்திவைத்து அவனிடம் பேச ஆயத்தமானாள். 

 

கையில் அணிந்திருந்த காப்பை சரி செய்தவாறு அவளுக்கு எதிரே அமர்ந்தவன், “ஏய்! நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா. நினைச்ச நேரத்துக்கு மீட்டிங் இருக்கு அங்க வா இங்க வானு கூப்பிடுற!” என்றான் அடக்கப்பட்ட கோபத்தில். 

 

“இங்க பாரு இது தான் லாஸ்ட் மீட்டிங் இனி உனக்கும் எனக்கும் எந்த மீட்டிங்கும் இல்லை”

“அப்பாடா நிம்மதியா இருப்பேன். உன் மூஞ்சில முழிக்காமல். என்ன மீட்டிங் நான் எதுக்கும் பிரிப்பர் பண்ணல. இப்போ நடந்துக்கிட்டு இருக்க ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் வேணும்னா நாளைக்கு உன் ஆபீஸ்க்கு அனுப்பி வைக்கிறேன்.”

 

“பைன்” என்றவள் அவனை உறுத்துப்பார்த்து, “கர்ணா….. சாரி சாரி அகர்ணா…..” என்ற அவளது விளிப்பில் சிறிதுக்கூட சலனமின்றி, “விகர்ணன்” என்று அவளை சரி செய்தான். 

 

தோளைக்குலுக்கி, “வாட் எவர். நீ யாரா இருந்தாலும்…. அகர்ணனா இருந்தாலும் சரி விகர்ணனா இருந்தாலும் சரி. ஜஸ்ட் ஸ்டே அவே” என்று அவள் நிறுத்த கைகளால் மேலே சொல் என்பது போல செய்கை செய்தான். 

 

“உனக்கு என்னை பழிவாங்கணும். அதுக்கு தானே என்னை லவ் பண்ற மாதிரி நடிச்ச அதே மாதிரி அதுவும் நடந்துருச்சு. நீயும் என்னை வேணான்னு சொல்லிட்டு போயிட்ட…..”

 

“ஆமாம் இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்லிட்டு இருக்க?”

 

“ரிவென்ச் மண்ணாக்கடின்னு இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாதே! உனக்கும் எனக்கும் செட் ஆகாது. அதை நானும் புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இப்போ உன் மேல எந்த லவ்வும் இல்லை. இதை இப்படியே விட்டிரு, உனக்கு பிடிச்ச மாதிரி உன் லைப் பாரு நானும் என்னோட வாழ்க்கையை பார்க்கிறேன். 

 

ஸ்டேட்ஸ்ல இருந்து வந்து என்னை பழிவாங்குறேன் பல்லை புடுங்குறேன்னு நீ வெளியில கஷ்டப்பட்டது போதும். வீட்டுக்கு போய் அத்தை கூட இரு. என்னை பழிவாங்க நீ சொல்ல போற எந்த மயிரு ரீசனும் எனக்கு தெரிய வேண்டாம். 

 

தெரிஞ்சு நான் ஒன்னும் பண்ண போறது இல்லை. உன் ஆசை படி உன்னை விகர்ணனு நினைச்சு லவ் பண்ணி எங்கேஜ்மெண்ட் வர வந்துட்டேன். நீயும் உன் அண்ணன் போல அங்க வந்து என்னை வேணான்னு சொல்லிட்டு போயிட்ட அவ்வளவு எல்லாம் முடிச்சுக்கலாம்.

 

என்னடா இப்போ எப்படி அவளுக்கு இது எல்லாம் தெரிஞ்சுதுனு நீ யோசிக்க வேண்டாம். ஜஸ்ட் இப்போ தான் ஸ்ட்ரைக் ஆச்சு. உன் அண்ணனை என்னை ஆபிஸ்ல வந்து மீட் பண்ண சொல்லு பிசினஸ் பத்தி அவன் கிட்ட பேசணும்.” அவ்வளவு தான் உன்னிடம் நான் பேச வேண்டியது பேசிவிட்டேன் இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல கிளம்பி விட்டாள். 

 

அதுவரை இறுகி இருந்தவன் அலைபேசியை எடுத்து, “மாம் நான் இந்தியா வந்துட்டேன். ஈவினிங் வீட்டுக்கு வறேன்!” என்று பேசி அடுத்து அவனோட ஓட்டிப் பிறந்தவனுக்கு அழைத்தான்.

 

 “டேய் அந்த ராட்சசிக்கு எல்லாம் தெரிஞ்சுருச்சு. இனி நான் எதுக்கு ஹோட்டலில் தங்கணும். அம்மாக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். ஈவினிங் வீட்டுக்கு வறேன்.”

 

“அகி அவளுக்கு எப்படி டா தெரிஞ்சுருக்கும்.”

“ராம் மாமா கண்டுபிடிச்சிருக்கலாம்”

“வாட் அது எப்படி பாஸிபிள். அவர் உன்னை பார்த்து பத்து வருசமாச்சு இருக்கும்”

“எனக்கு அப்படி தான் தோணுது. உன்னை ஆபீஸ்க்கு வர சொன்னா. நீ போய் என்னனு பாரு”

 

“டேய் அவர் அப்பாகிட்ட ஏதாவது சொல்லிற போறா!”

“சொல்லமாட்டாருன்னு நினைக்கிறேன். அவளும் சொல்ல மாட்டா அது தான் சொல்லிட்டு போறாளே, இனி உன் பக்கம் வரமாட்டேன் நீயும் என் பக்கம் வராதேன்னு மெரட்டிட்டு போறா”

 

“நான் தான் சொன்னேன்ல இதெல்லாம் வேண்டாம் ஒழுங்கா எல்லாத்தையும் மறந்துட்டு வீட்டுக்கு வான்னு. நீ தான் பெரிய இவன் மாதிரி ஆறு மாசம் இப்படி இறங்கி வேலை பார்த்திருக்க. உன்னால மொத்த குடும்பமும் என்னை கொலைகாரனை பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க”

 

“தம்பிக்காக இதை கூட செய்யலைன்னா நீயெல்லாம் என்னடா அண்ணா”

“என்னவாவது சொல்லி வாயை அடைச்சுரு!”

 

“ஹாஹா வேற வழி”

“சரி நான் ஈவினிங் சீக்கிரம் வந்திறேன். நீ சொதப்பாம கரெக்ட்டா வந்திரு”

“ஓகே விணு” என்று அழைப்பை துண்டித்தவன் நினைவு அழையா விருந்தாளியாக அவளை தொடர அவள் மீது இருந்த வன்மத்தை முன் நிறுத்தி அவன் மனதை திசை நிறுத்தி அதில் வெற்றியும் கண்டான் அகர்ணன். 

 

விகர்ணனும் அகர்ணனும் லிங்கம் கல்யாணியின் இரட்டையர்கள். பெற்றவர்களுக்கே பெருன்பான்மையான நேரத்தில் அவர்களை அடையாளம் தெரியாது அந்த அளவிற்கு இருவரும் ஒன்று போல இருப்பார்கள். உருவத்தில் மட்டுமல்ல நடை உடை பாவனை பேச்சு ரசனை என்று எல்லாமே ஒன்று போல இருக்கும்.  

 

கசப்பான அந்த சம்பவத்திற்கு பிறகு விகர்ணனிடம் கூட ஒதுக்கலோடு பழகினான். அந்த சம்பவத்தில் இங்கிருந்து சென்றவன் தான் முழுதாக ஒன்பது வருடத்திற்கு பிறகு அவன் வீட்டிற்கு செல்ல இருக்கின்றான். நடந்ததையும் நடப்பதையும் நினைத்தவனுக்கு ஒரு வித எரிச்சலான மனநிலை. பழிவாங்கிய சந்தோசம் துளியும் அவன் முகத்தில் இல்லை மாறாக ஒரு வித அழுத்தமே தெரிந்தது.

 

இனியாவது நிம்மதியாக குடும்பத்தினரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவாறே அவனது பொருள்களை எடுக்க அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றான். 

 

அவனை விட்டு வந்தவளுக்கு இன்னும் மனம் ஆறவில்லை, அவளால் இப்படி ஒரு ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நல்லவேளை தந்தை சற்றுமுன் அழைக்கவில்லை என்றால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்திருக்க மாட்டாள். 

 

அவள் மனம் அரைமணி நேரத்திற்கு முன் நடந்ததை அசைப்போட்டது, அவசர மீட்டிங் என்று அவனை வர சொல்லியவளுக்கு தாயுமானவரின் நினைவு வர அவருக்கு அழைத்து அவளன்னை பேசியதை கூறி அவளெடுத்த முடிவை கூறினாள். 

 

“ஆதிம்மா நல்ல முடிவு. ஆரம்பத்தில் இருந்தே எனக்கு உன்னோட காதலில் உடன்பாடு இல்லை. ஆனால் உன்னோட சந்தோஷத்துக்காக ஒத்துக்கிட்டேன். எனக்கு தெரியும் இந்த நிச்சயம் நடக்காதுனு”

“என்ன சொல்லுறீங்கப்பா?” என்று வெளிப்படையாக அதிர்வை காட்டினாள். 

 

“ஆதிம்மா ஐ நோ நான் இப்போ சொல்ல போறது உனக்கு ஷாக்கா இருக்கும். பட் இனியும் நான் மறைக்க வேண்டிய அவசியமில்லை. நீ லவ் பண்ணது விகாவை இல்லை அகர்ணனை. அகி இந்தியா வந்திருக்கான்.”

“வாட். இது எப்படி உங்களுக்கு தெரியும்?”

 

“உன் நிச்சயத்துக்கு முன்னாடி நாள் எனக்கு மெரிடியன்ல ஒரு பிசினஸ் மீட்டிங்கு போயிருந்தேன். அப்போ தான் அகியை பார்த்தேன். அவன் என்னை பார்க்கல. யாரோடயோ போன்ல பேசிட்டு ரூமுக்கு போனான். அங்க விசாரிச்சதுல ஆறு மாசமா அவன் அங்க ஸ்டே பண்ணிருகிறதா சொன்னாங்க . 

 

அப்போ இருந்தே எனக்கு நெருடலா இருந்துச்சு. உண்மையா உன்னை லவ் பண்ணுறேன்னு என்கிட்ட வந்து பேசுனது யாருன்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு. யாரா இருந்தாலும் அவங்க உன்மேல காமிச்ச லவ் பொய்யா தெரியல. அன்னைக்கு அவன் நிறுத்தலனா நானே ஏதாவது பண்ணியிருப்பேன்.

 

உன் எங்கேஜ்மெண்ட் அன்னைக்கு வீட்டில் இருந்தது விகா இல்லை அது அகர்ணன். நீ அவன் கிட்ட என்ன பேசணுமோ பேசிட்டு ஆபீஸ் வா. அவனுக்கு உன் மேல ஏதோ ஒரு வெஞ்சேன்ஸ் இருக்கு அதை அன்னைக்கு அவன் கண்ணுல பார்த்தேன். நானே இன்னைக்கு உன்கிட்ட அகர்ணன் பத்தி பேச நினைச்சேன். கை மீறி போன விசயம் தான் இது ஆனால் இன்னும் லேட் ஆகல இதை நீ சரி செய்ய உனக்கு இப்ப கூட வாய்பிருக்கு. அதை புரிஞ்சுகிட்டு சரியா முடிவு பண்ணு ஆதிம்மா”

 

“அப்பா நீங்க இதை முன்னாடியே சொல்லியிருந்தா இந்த அளவுக்கு நான் போக விட்டிருக்க மாட்டேன்”

“எனக்கே இது ஒரு ட்ராப்ன்னு கான்போர்ம்மா தெரியாதே டா” என்றார் உடைந்த குரலில்.

 

“ம்ம் சரிப்பா நான் பார்த்துகிறேன் நீங்க பீல் பண்ண வேண்டாம்”

 

அவரிடம் பேசியவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லாது போக விகர்ணனின் அலுவலக எண்ணுக்கு அழைத்தாள். அதை எடுத்த அவனது காரியதரிசி மீட்டிங் செடியுள் பண்ணிட்டேன் மேம் என்று இலவச இணைப்பாக செய்தியை கூற சரி என்று வைத்தவள் நேரிலேயே பேச முடிவு செய்து அவனிடம் பேசிவிட்டாள். இருந்தும் மனம் ஆறாமல் தகித்தது, கர்ணனின் தீராவிற்கு……. 

 

ஒன்றை யோசிக்க மறந்து போனாள் இத்தனை நாள் அல்லாது இன்று அவள் தந்தை கூறியதின் பின்கதை . அவள் மீது அவன் கொண்ட வஞ்சத்தின் நோக்கத்தை தெரிந்திருந்தால் அதை சரி செய்ய நினைத்திருப்பாளோ என்னவோ. பதின் வயதில் நடந்த சம்பவம் அவனை இந்த அளவு பாதித்திருக்கும் என்று அவள் கனவில் கூட யோசித்திருக்க மாட்டாள். காலம் கனிந்தால் மாற்றம் உண்டாகும் என்ற சொல் அகர்ணனிடம் பொய்த்து போயிருந்தது. காலம் போக போக கோபம் இப்படி கோரமாக ஒரு பெண்ணின் மனதை சுக்கலாக உடைத்து ஓட்ட வைக்க முடியாத நிலைக்கு தள்ளி விட்டது.

 

அமைதியாக சென்றவள் தீக்குள் தகித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணராது அவனது வாழ்வை புதிதாக வாழ திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான் அங்காரகனின் மறுபதிப்பான அகர்ணன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
11
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்