Loading

அத்தியாயம் – 5

 

 

சீதாவை அங்கு எதிர்பார்க்காதவன், அவ்வளவு நேரம் இருந்த இறுக்கத்தைக் கைவிட்டு மென்மையாகச் சிரித்தான்.

“விகா, இங்க என்ன பண்ற. ஆபீஸ் போகலையா?” என்றவரைப் பார்த்து,

“நைட் அஞ்சலியைப் பார்க்க வந்தேன் அத்தை, லேட் ஆகிருச்சு. இனிக் கிளம்பி தான் ஆபீஸ் போகணும்.”

“சரிப்பா!” என்றவருக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.

ஆதிராவின் வாழ்வில் இவன் ஒரு புயலாக அல்லவா அடித்துச் சென்றிருக்கிறான். என்ன தான் எதுவும் நடக்காதது போல் முயன்று பேசினாலும், பெற்றவளால் எவ்வளவு நேரம் அதை மறைத்து அன்பு பாராட்ட முடியும். அவளும் சாதாரண மனிதப்பிறவி தானே.

அவரது தடுமாற்றத்தைப் புரிந்து, “லேட்டாகிருச்சு அத்தை, நான் ஈவினிங் பேசுறேன்.” என்று கூறியவன் நிற்காமல் காரை உயிர்ப்பித்து, கடைசியாகப் பேசியவனுக்கு மீண்டும் அழைத்தான்.

“ஹலோ, சொல்லு டா”

“எங்க இருக்க?”

“இங்க ஹாஸ்பிடலுக்குப் பக்கத்தில இருக்கேன்.”

“டேய் லூசுப்பயலே, நான் இங்க கெஸ்ட் ஹவுஸ்ல இருந்து இப்போ தான் கிளம்புறேன். என்கிட்டச் சொல்லாம எதுவும் செய்யாத விணு” என்று அழைப்பைத் துண்டித்தவன் நேராக அவன் வாடிக்கையாகச் செல்லும் ஹோட்டலுக்குச் சென்றான்.

இங்கு அவன் வார்த்தையால் வதைக்கப்பட்டவளோ, ஷவரின் அடியில் நின்று சுயப்பரிசோதனை செய்து கொண்டிருந்தாள். அவனால் கீறப்பட்ட நெஞ்சத்தின் நேசத்தை வஞ்சித்து.

‘ச்சீ! என்ன மானங்கெட்ட உடம்போ, எத்தனை அடிபட்டாலும் அவனோட விரல் பட்டாலே உருகி, அவன்பக்கம் சரியிற… இவ்வளவு தான் நானா? அவன் சொன்னது போல இந்தக் காதல் எனக்குச் சந்தோசம் தரலயே, வலியை மட்டும் தான் தந்திருக்கு. ஒருவேளை, அவனை நான் லவ் பண்ணிருக்கவே கூடாதோ? அவன் எதுக்கு என்னைச் சுத்திச் சுத்தி வந்தான்? இதுக்கெல்லாம் சீக்கிரம் பதில் கண்டு பிடிக்கணும்.’

‘அவன் எதுக்கு லவ் பண்ணிருந்தாலும், நான் அவனை உண்மையா லவ் பண்ணிட்டேன் போல. அதனால தான் இப்படி அழுறேன்.’ என்று கண்ணீர் வழிவதைப் பார்க்க முடியாமல் ஷவரைத் திறந்து நனைய ஆரம்பித்தாள்.

மனத்தில் ஏற்பட்ட வலியைக் குளித்துச் சரியாக்கி விட முடியுமா என்ன? பேதையவள் மறந்து போனாளா, இல்லை மரத்துப் போனாளோ? ஒரு கட்டத்தில் குளிர் உயிரை வாட்டவும் தான் நிதானத்திற்கு வந்தாள். ஈரம் தோய்ந்த ஆடையைக் களைந்து உடைமாற்றிக் கீழே வர, நடுக்கூடத்தில் பானுமதி மற்றும் சித்ராவிடம் பேசிக் கொண்டிருந்த சீதாவின் பார்வை ஆதிராவின் மேல் அழுத்தமாகப் படிந்தது.

அதை உணர்ந்தாலும், சாதாரணமாகக் கீழே வந்து சீதாவின் அருகே அமர்ந்து சித்ராவைப் பார்த்தாள். அவரோ கண்ணால் அவளை அங்கிருந்து செல்லச் சொல்ல, அதற்குள் அவளைப் பிடிபிடி எனப் பிடிக்க ஆரம்பித்தார் சீதா.

“ஆதி, என்ன நினைச்சுட்டு இருக்க? அஞ்சலி எவ்வளவு பயந்து போயிருந்தா லேபர் பெயின் வந்திருக்கும். உன்னோட தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைக் காட்ட எப்படி இன்னொரு உயிரைப் பணயம் வைக்கலாம்.

இதுக்கு மேல நீ சொல்லப் போற எதையும், நான் கேட்கத் தயாராக இல்லை. இன்னைக்கே உனக்கும், விகாவுக்கும் இருக்கற எல்லாப் பிரச்சினையும் முடி. ஒன்னு ரெண்டு பேரும் சமாதானம் ஆகிக் கல்யாணம் பண்ணிக்கோங்க. இல்லனா இது சரி வராதுன்னு பேசிப் பிரிஞ்சு உங்க வாழ்க்கையைப் பாருங்க.

அதை விட்டுட்டு, இப்படி ஒரே இடத்தில் இருந்து எங்களைச் சங்கடப்படுத்தாதீங்க. நீங்கெல்லாம் வரதுக்கு முன்னாடி இருந்தே நாங்க நட்போட ஒரே குடும்பம் போல வாழ்ந்துட்டு இருந்தோம். உங்களால் இப்படி அது கலைந்த குருவிக்கூடா மாற நான் விடமாட்டேன்.

உனக்கு நான் எதையும் சொல்லித்தான் புரியணும்னு இல்லை. பிசினஸ்ல இருந்து எல்லாத்துக்கும் நம்ப ஒருத்தரோட மூஞ்சில முழிச்சுத்தான் ஆகணும்.” என்று தான் சொல்ல வேண்டியது அவ்வளவு தான் என்பது போலப் பேசி அஞ்சலியின் குழந்தையைப் பார்க்கச் செல்ல ஆயத்தமாகினார்.

பெருமூச்சு ஒன்றை விட்ட ஆதிராவுக்கும், சீதா சொல்லியது சரி என்று பட விகர்ணனிடம் பேச முடிவெடுத்தாள். சித்ராவும், பானுமதியும் கூடச் சீதாவை ஆதரித்து, விகர்ணனிடம் பேசச் சொல்லி மருத்துவமனைக்குக் கிளம்பினார்கள். சீதா பேசியது அவள் மனதைச் சற்று அசைத்திருக்க, யாரிடமாவது இதைபற்றிப் பேசினால் இன்னும் தெளிவாக முடிவெடுக்க முடியும் என்று நினைத்தவள் சென்றது என்னவோ விக்கியிடம் தான்.

தன் பங்குக்கு அவனும் சில அறிவுரை கூறினான். ஏனோ விகர்ணனிடம் ஏதோ வித்தியாசம் தெரிகிறது, அவனிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கக் கூறியவன், அவனோடு பேசி அனைத்தையும் முடித்து நிம்மதியாக இருக்க வலியுறுத்தினான். அனைவரும் ஒரே விஷயத்தைக் கூறியதாலோ என்னவோ, அவளுக்கு உடனே அதைச் செய்துவிடத் தோன்றியது.

முடிவெடுத்தவளாக, அஞ்சலியின் அறைக்குச் சென்று குழந்தையிடம் சிறிது நேரம் விளையாடிவிட்டு மணியைப் பார்க்க அது ஒன்றைக் காட்டியது. விகர்ணனின் காரியதரிசிக்கு அழைத்து மதியம் ஏதாவது மீட்டிங் இருக்கிறதா என்று கேட்க, எதிர்ப்புறம் இல்லை என்று பதில் வர ஒருவித நிம்மதியுடன் அழைப்பைத் துண்டித்தாள்.

பின், அவர்கள் எப்பொழுதும் செல்லும் ரெஸ்டாரென்டில் டேபிளை புக் செய்தாள் வேங்கையவனின் வஞ்சிக்கொடி. சாதாரணமாக அழைத்தால் நிச்சயமாக மறுப்பான் என்று அறிந்தவள், அர்ஜென்ட் மீட்டிங் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவனை வர வைத்தாள்.

அப்பட்டமாகப் பிடித்தமின்னையைக் காட்டிக் கொண்டு உள்ளே வந்தான். அவனின் வருகைக்காக அதுவரை காத்திருந்தவள், அவனைக் கண்டதும் அவளிடம் அவன் நடந்து கொண்ட அனைத்தும் கண்முன் ஓடியது. கண்ணை இறுக்கி மூடித் தற்காலிகமாக அதனை ஒத்திவைத்து அவனிடம் பேச ஆயத்தமானாள்.

கையில் அணிந்திருந்த காப்பைச் சரி செய்தவாறு அவளுக்கு எதிரே அமர்ந்தவன், “ஏய்! நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா? நினைச்ச நேரத்துக்கு மீட்டிங் இருக்கு, அங்க வா… இங்க வானு கூப்பிடுற!” என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்.

“இங்கப் பாரு, இது தான் லாஸ்ட் மீட்டிங்! இனி உனக்கும், எனக்கும் எந்த மீட்டிங்கும் இல்லை.”

“அப்பாடா நிம்மதியா இருப்பேன், உன் மூஞ்சில முழிக்காமல். என்ன மீட்டிங்? நான் எதுக்கும் பிரிப்பர் பண்ணல. இப்போ நடந்துக்கிட்டு இருக்க ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் வேணும்னா நாளைக்கு உன் ஆபீஸ்க்கு அனுப்பி வைக்கிறேன்.”

“பைன்!” என்றவள் அவனை உறுத்துப் பார்த்து, “கர்ணா… சாரி சாரி அகர்ணா…” என்ற அவளது விளிப்பில் சிறிதுகூடச் சலனமின்றி, “விகர்ணன்!” என்று அவளைச் சரி செய்தான்.

தோளைக் குலுக்கி, “வாட் எவர்! நீ யாரா இருந்தாலும்… அகர்ணனா இருந்தாலும் சரி, விகர்ணனா இருந்தாலும் சரி. ஜஸ்ட் ஸ்டே அவே!” என்று அவள் நிறுத்தக் கைகளால் மேலே சொல் என்பது போலச் சைகை செய்தான்.

“உனக்கு என்னைப் பழி வாங்கணும். அதுக்குத் தானே என்னை லவ் பண்ற மாதிரி நடிச்ச, அதே மாதிரி அதுவும் நடந்துருச்சு. நீயும் என்னை வேணான்னு சொல்லிட்டுப் போயிட்ட.”

“ஆமாம், இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்லிட்டு இருக்க?”

“ரிவென்ஞ், மண்ணாங்கட்டின்னு இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாதே! உனக்கும் எனக்கும் செட் ஆகாது. அதை நானும் புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இப்போ உன் மேல எந்த லவ்வும் இல்லை. இதை இப்படியே விட்டிரு, உனக்குப் பிடிச்ச மாதிரி உன் லைப் பாரு, நானும் என்னோட வாழ்க்கையைப் பார்க்கிறேன்.

ஸ்டேட்ஸ்ல இருந்து வந்து என்னைப் பழி வாங்குறேன், பல்லைப் புடுங்குறேன்னு நீ வெளியில கஷ்டப்பட்டது போதும். வீட்டுக்குப் போய் அத்தை கூட இரு. என்னைப் பழி வாங்க நீ சொல்லப் போற எந்த மயிரு ரீசனும் எனக்குத் தெரிய வேண்டாம்.

தெரிஞ்சு நான் ஒன்னும் பண்ணப் போறது இல்லை. உன் ஆசைப்படி உன்னை விகர்ணன்னு நினைச்சு லவ் பண்ணி எங்கேஜ்மெண்ட் வரை வந்துட்டேன். நீயும் உன் அண்ணன் போல அங்க வந்து என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்ட, அவ்வளவுதான். எல்லாம் முடிச்சுக்கலாம்.

என்னடா, இப்போ எப்படி இவளுக்கு இது எல்லாம் தெரிஞ்சுதுனு நீ யோசிக்க வேண்டாம். ஜஸ்ட், இப்போ தான் ஸ்ட்ரைக் ஆச்சு. உன் அண்ணனை என்னை ஆபிஸ்ல வந்து மீட் பண்ணச் சொல்லு, பிசினஸ் பத்தி அவன்கிட்டப் பேசணும்.”

அவ்வளவு தான் உன்னிடம் நான் பேச வேண்டியது, பேசிவிட்டேன். இனி உனக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போலக் கிளம்பி விட்டாள்.

அதுவரை இறுகி இருந்தவன் அலைப்பேசியை எடுத்து, “மாம், நான் இந்தியா வந்துட்டேன். ஈவினிங் வீட்டுக்கு வர்றேன்!” என்று பேசி அடுத்து அவனோட ஒட்டிப் பிறந்தவனுக்கு அழைத்தான்.

“டேய்! அந்த ராட்சசிக்கு எல்லாம் தெரிஞ்சுருச்சு. இனி நான் எதுக்கு ஹோட்டலில் தங்கணும். அம்மாக்கு போன் பண்ணிச் சொல்லிட்டேன். ஈவினிங் வீட்டுக்கு வர்றேன்.”

“அகி, அவளுக்கு எப்படி டா தெரிஞ்சுருக்கும்?”

“ராம் மாமா கண்டு பிடிச்சிருக்கலாம்!”

“வாட்? அது எப்படி பாஸிபிள்! அவர் உன்னைப் பார்த்துப் பத்து வருசமாச்சும் இருக்கும்.”

“எனக்கு அப்படித்தான் தோணுது. உன்னை ஆபீஸ்க்கு வரச் சொன்னா, நீ போய் என்னனு பாரு.”

“டேய்! அவர் அப்பாகிட்ட ஏதாவது சொல்லிடப் போறார்!”

“சொல்ல மாட்டாருன்னு நினைக்கிறேன். அவளும் சொல்ல மாட்டா… அது தான் சொல்லிட்டுப் போறாளே, இனி உன் பக்கம் வரமாட்டேன். நீயும் என்  பக்கம் வராதேன்னு மெரட்டிட்டுப் போறா.”

“நான்தான் சொன்னேன்ல, இதெல்லாம் வேண்டாம். ஒழுங்கா எல்லாத்தையும் மறந்துட்டு வீட்டுக்கு வான்னு… நீ தான் பெரிய இவன் மாதிரி ஆறு மாசம் இப்படி இறங்கி வேலை பார்த்திருக்க. உன்னால மொத்தக் குடும்பமும், என்னைக் கொலைகாரனைப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க.”

“தம்பிக்காக இதைக்கூடச் செய்யலைன்னா நீயெல்லாம் என்னடா அண்ணா?”

“என்னவாவது சொல்லி வாயை அடைச்சுரு!”

“ஹாஹா வேற வழி?”

“சரி, நான் ஈவினிங் சீக்கிரம் வந்திடறேன். நீ சொதப்பாம கரெக்டா வந்திரு.”

“ஓகே விணு!” என்று அழைப்பைத் துண்டித்தவன் நினைவு, அழையா விருந்தாளியாக அவளைத் தொடர அவள் மீது இருந்த வன்மத்தை முன் நிறுத்தி, அவன் மனதைத் திசை திருப்பி அதில் வெற்றியும் கண்டான் அகர்ணன்.

விகர்ணனும், அகர்ணனும் லிங்கம், கல்யாணியின் இரட்டையர்கள். பெற்றவர்களுக்கே பெருன்பான்மையான நேரத்தில் அவர்களை அடையாளம் தெரியாது. அந்த அளவிற்கு இருவரும் ஒன்று போல இருப்பார்கள். உருவத்தில் மட்டுமல்ல, நடை, உடை, பாவனை, பேச்சு, ரசனை என்று எல்லாமே ஒன்று போல இருக்கும்.

 

கசப்பான அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, விகர்ணனிடம் கூட ஒதுக்கலோடு பழகினான். அந்தச் சம்பவத்தில் இங்கிருந்து சென்றவன் தான். முழுதாக ஒன்பது வருடத்திற்குப் பிறகு அவன் வீட்டிற்குச் செல்ல இருக்கின்றான். நடந்ததையும், நடப்பதையும் நினைத்தவனுக்கு ஒரு வித எரிச்சலான மனநிலை! பழிவாங்கிய சந்தோசம் துளியும் அவன் முகத்தில் இல்லை. மாறாக ஒரு வித அழுத்தமே தெரிந்தது.

இனியாவது, நிம்மதியாகக் குடும்பத்தினரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவாறே, அவனது பொருள்களை எடுக்க அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றான்.

அவனை விட்டு வந்தவளுக்கு இன்னும் மனம் ஆறவில்லை. அவளால், இப்படி ஒரு ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நல்லவேளை! தந்தை சற்றுமுன் அழைக்கவில்லை என்றால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்திருக்க மாட்டாள்.

அவள் மனம், அரைமணி நேரத்திற்கு முன் நடந்ததை அசைபோட்டது. அவசர மீட்டிங் என்று அவனை வரச் சொல்லியவளுக்குத் தாயுமானவரின் நினைவு வர, அவருக்கு அழைத்து அவளன்னை பேசியதைக் கூறி அவளெடுத்த முடிவைக் கூறினாள்.

“ஆதிம்மா, நல்ல முடிவு! ஆரம்பத்தில் இருந்தே எனக்கு உன்னோட காதலில் உடன்பாடு இல்லை. ஆனால் உன்னோட சந்தோஷத்துக்காக ஒத்துக்கிட்டேன். எனக்குத் தெரியும், இந்த நிச்சயம் நடக்காதுனு.”

“என்ன சொல்லுறீங்கப்பா?” என்று வெளிப்படையாக அதிர்வைக் காட்டினாள்.

“ஆதிம்மா, ஐ நோ! நான் இப்போ சொல்லப் போறது உனக்கு ஷாக்கா இருக்கும். பட் இனியும் நான் மறைக்க வேண்டிய அவசியமில்லை. நீ லவ் பண்ணது விகாவை இல்லை, அகர்ணனை! அகி இந்தியா வந்திருக்கான்.”

“வாட்? இது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“உன் நிச்சயத்துக்கு முன்னாடி நாள், எனக்கு மெரிடியன்ல ஒரு பிசினஸ் மீட்டிங்க்கு போயிருந்தேன். அப்போ தான் அகியைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்க்கல. யாரோடயோ போன்ல பேசிட்டு ரூமுக்குப் போனான். அங்க விசாரிச்சதுல ஆறு மாசமா அவன் அங்க ஸ்டே பண்ணிருக்கறதா சொன்னாங்க.

அப்போ இருந்தே எனக்கு நெருடலா இருந்துச்சு. உண்மையா உன்னை லவ் பண்ணுறேன்னு என்கிட்ட வந்து பேசுனது யாருன்னு எனக்குச் சந்தேகம் வந்துச்சு. யாரா இருந்தாலும், அவங்க உன்மேல காமிச்ச லவ் பொய்யாத் தெரியல. அன்னைக்கு அவன் நிறுத்தலனா, நானே ஏதாவது பண்ணியிருப்பேன்.

உன் எங்கேஜ்மெண்ட் அன்னைக்கு வீட்டில் இருந்தது விகா இல்லை, அது அகர்ணன்! நீ அவன்கிட்ட என்ன பேசணுமோ பேசிட்டு ஆபீஸ் வா… அவனுக்கு உன் மேல ஏதோ ஒரு வெஞ்சன்ஸ் இருக்கு. அதை அன்னைக்கு அவன் கண்ணுல பார்த்தேன். நானே இன்னைக்கு உன்கிட்ட அகர்ணன் பத்திப் பேச நினைச்சேன். கை மீறிப் போன விசயம் தான் இது. ஆனால் இன்னும் லேட் ஆகல. இதை நீ சரி செய்ய, உனக்கு இப்பக்கூட வாய்ப்பிருக்கு. அதைப் புரிஞ்சுகிட்டுச் சரியா முடிவு பண்ணு ஆதிம்மா…”

“அப்பா, நீங்க இதை முன்னாடியே சொல்லியிருந்தா, இந்த அளவுக்கு நான் போக விட்டிருக்க மாட்டேன்.”

“எனக்கே இது ஒரு ட்ராப்னு கன்பர்மா தெரியாதே டா” என்றார் உடைந்த குரலில்.

“ம்ம், சரிப்பா… நான் பார்த்துக்கிறேன். நீங்க பீல் பண்ண வேண்டாம்.”

அவரிடம் பேசியவளுக்கு, மனம் ஒரு நிலையில் இல்லாது போக விகர்ணனின் அலுவலக எண்ணுக்கு அழைத்தாள். அதை எடுத்த அவனது காரியதரிசி “மீட்டிங் ஷெட்யூல் பண்ணிட்டேன் மேம்.” என்று இலவச இணைப்பாகச் செய்தியைக் கூற, சரி என்று வைத்தவள் நேரிலேயே பேச முடிவு செய்து அவனிடம் பேசிவிட்டாள். இருந்தும் மனம் ஆறாமல் தகித்தது, கர்ணனின் தீராவிற்கு…

ஒன்றை யோசிக்க மறந்து போனாள். இத்தனை நாள் அல்லாது இன்று அவள் தந்தை கூறியதின் பின்கதை. அவள் மீது அவன் கொண்ட வஞ்சத்தின் நோக்கத்தைத் தெரிந்திருந்தால், அதைச் சரி செய்ய நினைத்திருப்பாளோ என்னவோ? பதின் வயதில் நடந்த சம்பவம், அவனை இந்த அளவு பாதித்திருக்கும் என்று அவள் கனவில் கூட யோசித்திருக்க மாட்டாள்.

காலம் கனிந்தால் மாற்றம் உண்டாகும் என்ற சொல் அகர்ணனிடம் பொய்த்துப் போயிருந்தது. காலம் போகப் போகக் கோபம் இப்படிக் கோரமாக ஒரு பெண்ணின் மனத்தைச் சுக்கலாக உடைத்து, ஒட்ட வைக்க முடியாத நிலைக்குத் தள்ளி விட்டது.

அமைதியாகச் சென்றவள் தீக்குள் தகித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணராது, அவனது வாழ்வைப் புதிதாக வாழத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான் அங்காரகனின் மறுபதிப்பான அகர்ணன்!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்