அத்தியாயம் 43
“யுக்தா சார்” அருண் அழைப்பது காதில் விழுகாதவனாக அலுவலகத்தை விட்டு வெளியேறி இருந்தான்.
அருண் உடனடியாக குறிஞ்சிக்கு அழைத்து விவரத்தைக் கூறிட அவள் திகைத்தாள்.
உடனே வெளியில் சென்று யுக்தாவைப் பார்க்க, அவன் சிவந்த விழிகளுடன் சாலையை வெறித்திருந்தான்.
“சார்… இன்வெஸ்டிகேஷன்?” எனக் கேள்வியாகப் பார்க்க, “எல்லாரையும் அனுப்பிடு” என்றான் ஆழ்ந்த குரலில்.
சுற்றி முற்றி பார்த்தவள், “யுக்தா வாட் இஸ் ஹேப்பனிங்டா? ஆர் யூ ஓகே?” என அவன் தோள் மீது கை வைத்துக் கேட்க,
“இந்த லைஃப் ‘ஐ ஆம் ஓகே’ன்னு என்னை எப்பவுமே சொல்ல வைக்காது குறிஞ்சி. இட்ஸ் மை ஃபேட்!” என நெற்றியில் கட்டை விரலால் நீவி கண்ணில் பளபளத்த நீருடன் விரக்திப் புன்னகை பூத்தான்.
அவனைக் கண்டு திகைத்த குறிஞ்சிக்கு செய்வதறியாத நிலை. ஆகினும், அவன் சொன்னதை நிறைவேற்றும் பொருட்டு உள்ளே சென்றாள்.
அந்நேரம் காரில் வந்து இறங்கினார் சௌந்தர்.
கலவரம் நிகழ்ந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லை. விவரம் அறிந்து பதற்றத்துடன் வந்தவர வாசலில் நின்றிருந்த யுக்தாவை நிச்சலனமாக ஏறிட்டு, ஒட்டு மொத்தக் கோபத்தையும் தேக்கி அவனைப் பளாரென அறைந்தார்.
அதனை வாங்கிக் கொண்டு கல் போல நின்றவன் அசையவே இல்லை.
“உங்கிட்ட பல தடவை சொன்னேன் யுக்தா, இதை விட்டுடுன்னு… ஏன்டா செத்தவளைத் தோண்டி எடுத்து விசாரிச்சு இருக்குறவங்களோட நிம்மதிக்கும் குழி தோண்டுற?” ஆற்றாமை பொங்க வினவினார் சௌந்தர்.
“விடுன்னா… எப்படிப்பா விட முடியும்? என்… என் கண்ணு முன்னாடி தான அவங்க துடிச்சாங்க. எங்க எங்க அடிபட்டுச்சுன்னாவது தெரியுமாப்பா உங்களுக்கு. தெரிஞ்சுக்கக் கூட விரும்பாதீங்க.
ஏன்ப்பா, என்கிட்ட நடந்ததை சொல்லிருக்கலாம்ல. பைத்தியக்காரன் மாதிரி ரோடு ரோடா சுத்துனேன் உண்மையைத் தெரிஞ்சுக்க… என் ஏஞ்சல்ப்பா… எப்படிப்பா என்கிட்டயே நீங்க மறைச்சீங்க? ப்பா… ப்பா… அவ அவ கூட நான் இருந்துருப்பேன்ல ப்பா…
யோவ்! உன் பொண்டாட்டியை நீ விட்ட மாதிரி ஏன்யா புருஷனும் பொண்டாட்டியும் என் ஏஞ்சலை என்கிட்ட இருந்து பிரிச்சீங்க? ப்பா அவள் என்னை எப்படி பாக்குறா தெரியுமா? வலிக்குது ப்பா வலிக்குது… இங்க வலிக்குது” என்று நெஞ்சைக் குத்திக் குத்திக் கிழிக்க முயன்றவன் தளர்ந்து முட்டியிட்டுக் கண்ணீரில் கரைந்தான்.
“வலிக்குதுடா. இப்படி தான்டா வலிக்குது. தினம் தினம் இதே வலியை தான் எல்லாரும் அனுபவிக்கிறோம். அவளுக்கு நடந்தது வெளில தெரிஞ்சா ஸ்டேட்டஸ் போய்டும்னு அண்ணி பிரெஸ்ல அவளை வச்சே அஸ்வினிக்கு நடந்தது ஆக்சிடெண்ட்னு பொய் சொல்ல வச்சாங்க. எனக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துச்சு தான். என்ன செய்ய? அதுக்காக என் பொண்ணு பேரை ஊரு முழுக்க நாறடிக்கவா. வேணாம்… இவ்ளோ நாளா அவங்க செஞ்சதை எல்லாம் எப்படி கண்டுக்காம இருந்தேனோ அதே மாதிரி மிச்சம் இருக்குற காலத்தையும் என் பொண்ணு பசங்களை பார்த்துக்கிட்டே, என் அஸ்வினி கூட வாழ்ந்த அந்த ரூம்லயே செத்துடலாம்னு ஒவ்வொரு நாளும் விடியறப்ப, என் என் அஸ்வினி இல்லாத நாள் அப்படியே முடிஞ்சு என்னை அவள்கிட்டே அனுப்பிடாதான்னு ஏங்கி இருக்கேன்…” என உள்ளம் நோக அவனிடம் மனதைக் கொட்டியவர்,
“ஆனா ஏஞ்சல் அதை ஆக்சிடெண்ட்னு அனவுன்ஸ் பண்ண மாட்டான்னு நினைச்சேன். அவளே சொன்னதுக்கு அப்பறம், அதை நான் மறுக்க விரும்பல. அதனால தான், உன்னையும் இந்த கேஸை விட்டுடுன்னு சொன்னேன். இப்ப எல்லாம் கை மீறிப் போகுது!” எனப் பெருமூச்சு விட்டார்.
அந்நேரம் அருண் வெளியில் வந்திட, யுக்தா எழுந்து நின்றான். “சார் அவங்களை பேக் சைட் வழியா அனுப்பியாச்சு” என்றிட, அவன் அவசரமாக அலுவலகத்தின் பின் பக்கம் சென்றான்.
அங்கு சிவகாமி சிறியவர்கள் நால்வரையும் தீயாக ஏறிட்டு, “உங்களை நம்பி பிசினஸ் வச்சுக் குடுத்தேன்ல. நல்லா என் மூஞ்சில கரியைப் பூச்சிட்டீங்க! யூ!” என மகளை நோக்கி விரல் நீட்டியவர்,
“அந்த யுக்தாவைத் தலை முழுகிட்டு வர்றதுன்னா வா! இல்ல… உன் சித்தி போன இடத்துக்கே நீயும் போய்டு!” என மகளெனும் பாராது வார்த்தைகளால் சுட்டார்.
“ம்மா!” நந்தேஷ் தாயை அதட்ட, “நீ முதல்ல இவங்க மூணு பேரையும் தலை முழுகிட்டு வீட்டுக்கு வா” எனக் கண்டித்து விட்டு மற்றவர்களுடன் கிளம்ப, மைத்ரேயன் தான், “எல்லாம் அந்தப் பரதேசியால வந்தது. அது சரி அவன் என்ன ஆண்ட்டியோட வளர்ப்புப் பையன்னு உளறிட்டு இருக்கான்” என்றான் குழப்பமாக.
அதற்குள் யுக்தா அங்கு வந்து விட்டான். விஸ்வயுகாவின் முன் நின்றவன், “யுகா… நான்…” எனப் பேச இயலாமல் கேசத்தை அழுந்தக் கோத, அவனைத் தடுத்தாள்.
“நான் சொன்னேன்ல நீ என் மேல ஆசைப்படுறதே பேராசைன்னு… என்னை ஒருத்தன் பார்த்தா கூட சுடுவல்ல… என் மேல அவ்ளோ பொஸசிவா… இல்ல நீ மட்டும் தான் என்னை முழுசா அனுபவிக்கனும்னு வெறியா? ம்ம்?” இரு புருவத்தையும் உயர்த்தி தணலை அவன் மீது பாரபட்சமின்றி கொட்டினாள்.
பேச்சிழந்து அவன் நிற்பது இதுவே முதன்முறை.
அவளோ நிறுத்தாமல், “அது சரி… நீ என்ன உடனே பழி வாங்க வராம, அஞ்சு வருஷம் ஆற அமர நிறுத்தி நிதானமா வந்துருக்க? சரி நீ எப்ப வேணாலும் வந்துக்க… அதான் உனக்கு விவரம் தெரிஞ்சுருச்சுல, போய் கொலை செஞ்சவங்க யாருன்னு கண்டுபிடி…” என வெகு நக்கலாய் கூறியவள், நகர முற்பட்டு விட்டு பின் மீண்டும் அவன் முன் நின்றாள்.
“ஹா… உனக்கு இன்னும் டவுட்டா இருந்துச்சுன்னா, என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் என்கிட்ட தான் இருக்கு. உனக்கு வேணும்னா குடுத்து விடுறேன். நீ தான் பெரிய புடு**யாச்சே. முடிஞ்சா புடு**க்கோ! கேட்ச் யூ சூன் சைக்கோ புருஷா…” என அவனைப் போலவே அவன் கன்னத்தைத் தட்டியவள், பேண்ட் பாக்கெட்டில் இருந்த குளிர் கண்ணாடியை போட்டுக்கொண்டு கேலி நகையுடன் அங்கிருந்து நகன்றாள்.
அவள் பேசியது மற்ற மூவருக்கும் ஒப்பவில்லை என்றாலும் யுக்தாவை முறைத்து விட்டு அவர்களும் அவள் பின்னால் செல்ல, ஓட்டுனர் காருடன் காத்திருந்தார்.
அவரை விடுத்து, நந்தேஷே காரை எடுத்தான்.
சிறிது தூரம் செல்லும் வரை நால்வரிடமும் கனத்த அமைதி. அதனை முதலில் கலைத்தது மைத்ரேயன் தான்.
“அவனை ஹர்ட் பண்றேன்னு உன்னை நீயே வதைச்சுக்காத விஸ்வூ!” அவள் புறம் திரும்பி கண்ணில் கெஞ்சலுடன் பார்த்தான். அவள் ஜன்னல் புறம் பார்வையைத் திருப்பிக்கொள்ள,
நந்தேஷ் காரை ஒட்டியபடி கண்ணாடி வழியே தெரிந்த தங்கையின் கலங்கிய முகத்தைக் கண்டு தானும் கலங்கினான்.
“அவனை லவ் பண்றியா விஸ்வூ?” கேள்வி கேட்ட தமையனை வெறித்து நோக்கியவள், “இதே கேள்வியை ஒருத்தவங்க என்கிட்ட கேட்டு, அதுக்கு நான் பதில் சொல்லி தான் மொத்தமா காயப்படுத்துனாங்க. இப்ப நீயும் இதே கேள்வியைக் கேட்குற இதுக்கு உண்மையான பதில் சொல்லி இந்த முறை என்னை நானே காயப்படுத்திக்க விரும்பலடா! ரோட்டைப் பார்த்து ஓட்டு…” என்றாள் உணர்வற்று.
ஆண்கள் இருவரும் மனம் வெந்து அமைதியாக, ஷைலேந்தரி தமக்கையின் முகத்தை அவள் புறம் திருப்பி, “உனக்கு யுக்தாவை முன்னாடியே தெரியுமா?” எனப் புருவம் சுருக்கிக் கேட்டாள்.
“தெரியாது!” அவளைப் பாராமல் விஸ்வயுகா பதில் கூற,
“பொய்! உனக்குத் தெரியும். என்னோட 12த் பப்ளிக் எக்ஸாம் அப்போ இதே யுக்தா சாகித்யன்ற நேம்ல தான் நீ நோட்ஸ் குடுத்த. இவன் பேரை கேட்டதுல இருந்தே ஃபெமிலியரான நேம் மாதிரி எனக்கு உறுத்திக்கிட்டே இருந்துச்சு. சோ நீ இவன்கிட்ட இருந்து தான நோட்ஸ் வாங்கி குடுத்த?”
“உளறாத. இது உன் இல்லியூஷனா இருக்கலாம்”
“ஏன்டி, அவ்ளோ பெரிய நோட்ஸ்ல இருக்குற எல்லாத்தையும் கரைச்சு குடிச்ச நானு, அதுல பக்கத்துக்கு பக்கம் இருக்குற யுக்தா சாகித்யன்ற நேமை மட்டும் படிச்சு இருக்க மாட்டேனா?” அவளை நோக்கி குற்றப்பார்வை வீச, “விடு ஷைலு” என்றாள் சமாளிப்பாக.
“ஆர் யூ சீரியஸ் ஷைலா?” மைத்ரேயன் குழப்பமாக வினவ,
“எஸ் மைதா. இவளுக்கு அவனைத் தெரியும். தெரிஞ்சதுனால தான இந்த ஷார்ட் டைம்ல அவனைக் கல்யாணம் பண்ற அளவு போயிருக்கா!” என உறுதியாகக் கூறினாள்.
“நான் ஒன்னும் அவனைக் கல்யாணம் பண்ணல. என் சுயத்தோட இந்த ஜென்மத்துல அவன் எனக்கு தாலி கட்டிருக்க முடியாது” என்றவள் நடந்ததை உரைக்க, “அப்பவே ஏன்டி இதை சொல்லல? ஏன் அமைதியா இருந்த? உன் விருப்பம் இல்லாம தாலி கட்டிருக்கான்… உன்னை ஹராஸ் பண்ணிருக்கான்…” என்று நந்தேஷ் காரை ஓரமாக நிறுத்தி விட்டு பொங்கினான்.
அதில் சட்டென நிமிர்ந்தவள், “முதல்ல இருக்குற விஷயம் தான் நான் மயக்கமா இருக்கும் போது நடந்துச்சு. அவன் என்னை ஹராஸ் பண்ணல” படபடவென சொல்லிக்கொண்டே வந்தவள், நந்தேஷின் காரப்பார்வையில் குரலைத் தாழ்த்தினாள்.
பின் அவர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள, மூவருக்கும் கண் கலங்கிப் போனது.
ஷைலேந்தரி தான் மைத்ரேயனை அடித்தாள்.
“பரதேசி… நான் தான் சொன்னேன்ல யுக்தாகிட்ட விஷயம் எல்லாத்தையும் சொல்லிடலாம். அவன் புருஞ்சுப்பான்னு!” எனக் கடிந்தவள், தமக்கையின் புறம் திரும்பி,
“நீ தான் அவன்கிட்ட எல்லாம் சொல்ல வேண்டியது தானடி. இவ்ளோ லவ் பண்ணிருக்கீல… அவனும் நடந்தது தெரிஞ்சுருந்தா இப்படி பிஹேவ் பண்ணிருக்க மாட்டான்ல. உனக்காக போட்டோ எடுத்தவனையே யோசிக்காம அடிச்சவன், அதுவும் விவரம் புரியாத வயசுலயே… இப்பவும் அவனுக்கு உன் மேல ஏதோ ஒன்னு இருக்கு. அப்டி இல்லனா பழி வாங்கிட்டுப் போயிருக்கலாம். உன்ன சும்மா பார்த்தவனையே சுட்டுட்டு அவன் வேலைக்கே உலை வச்சுப்பானா?” எனப் பொரிந்தாள்.
“அதுக்குன்னு அவன் செஞ்சதை நியாயம்னு சொல்றியா?” மைத்ரேயன் மனையாளை முறைக்க,
“இப்ப நான் பேசுறது அவன் செஞ்சது நியாயமா இல்லையான்றது இல்ல. இதை இவ்ளோ காம்ப்ளிகேட் பண்ண வேணாம்னு சொல்றேன்! ஆஸ் அ சிபிஐ ஆபிஸரா, அவன் வேலை உண்மையைக் கண்டுபிடிக்கிறது. அதுக்கு அவன் சூஸ் பண்ணுன வழி தப்பு. அதுக்கான தண்டனையை இவளே குடுத்துக்கட்டும். ஆனா நடந்ததை அவன்கிட்ட சொல்லிருக்கலாம் இவ்ளோ பெரிய மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் ஆகிருக்காதுன்னு சொல்ல வரேன்…” என்றாள் வருத்தமாக.
விஸ்வயுகாவோ, “எப்படி சொல்ல சொல்ற? அவன் என்கிட்ட யுகியா இன்ட்ரோ ஆகல. யுக்தாவா தான் இன்ட்ரோ ஆனான். என்னைத் தெரியாத மாதிரி அவன் இருந்துக்கிட்டான். சோ, அவனை அடையாளம் தெரிஞ்சதும் அவனைத் தெரியாத மாதிரி நான் இருந்துக்கிட்டேன். தட்ஸ் இட்!” எனத் தோளைக் குலுக்கினாள்.
“டேய் டேய் பாருங்கடா… ரெண்டும் பக்கா ஈகோயிஸ்ட். ஈகோ அதிகமா இருக்குற இடத்துல தான் யக்கோவ் லவ்வும் அதிகமா இருக்கும்” என ஷைலேந்தரி குறும்புடன் கூற, “இந்த எழவுக்கு பேர் லவ்வுன்னு தெரிஞ்சுருந்தா உன்னை எப்பவோ கரெக்ட் பண்ணிருப்பேன்” என மைத்ரேயன் கடுப்புடன் முனகிக் கொண்டான்.
அத்தியாயம் 44
நந்தேஷ், “சரி இப்ப அவளை என்ன தான் செய்ய சொல்ற?” எனக் கேட்க,
“எனக்கு என்னவோ அவனும் இவளை லவ் பண்றான்னு தான் தோணுது” என்றதும் மைத்ரேயன், “ப்ச் எனக்கு ஒன்னும் தோணல” என்றான் வெடுக்கென.
“என் ஹேண்ட்ஸம் கை மனசை நான் தான் புருஞ்சுப்பேன். உங்களுக்குப் புரியாதுடா டொமேட்டோ” எனக் கணவனை வாரியவள் அவனது தீப்பார்வைக்கு ஆளானாள்.
“பின்ன என்னடா, இவ்ளோ மெனக்கெட்டு நேக்கா பெரிம்மாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிருக்கான். அவன் நினைச்சு இருந்தா, இதை பெரிய விஷயமாக்கி, அவங்களை உள்ளேயே போட்டுருக்கலாம். இன்வெஸ்டிகேஷனை பில்ட் பண்ணிருக்கலாம். நம்ம நாச்சி மாமாவுக்குலாம் பயப்படுற ஆளு இல்ல அவன். இதை கன்டின்யூ பண்ண முடியாம போச்சுன்னா, இவளை லவ் பண்றான்னு தான அர்த்தம்” என்றதில் இரு ஆடவர்களும் ‘இந்த பைத்தியத்தைக் காப்பாத்து ஆண்டவா’ என்ற ரீதியில் பார்த்தனர்.
“ப்ச் இவனுங்க கிடக்குறானுங்க சிங்கிள் வேஸ்ட் பாய்ஸ். நீ சொல்லுடி. ஒரு டைம் கூட நீ அவன் லவ்வ பீல் பண்ணலையா? ஒரு டைம் கூட அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு நினைக்கலையா?” என விஸ்வயுகாவின் முகத்தை நிமிர்த்திக் கேட்க,
அவளை சலனமின்றி வெறித்தவள், “எனக்காக யாரும் சேக்ரிஃபைஸ் பண்ண வேணாம்னு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே முடிவு எடுத்துட்டேன். இப்பவும் அதே முடிவு தான்!” எனத் தீர்க்கமாகக் கூற, இம்முறை எத்தனை முயன்றும் ஷைலேந்தரியின் கண்ணிலிருந்து ஒற்றைத் துளி கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோடியது.
—
ஒரேடியாக மரணிப்பது என்பது வேறு. சில நிமிட வலிக்குப் பின் மண்ணோடு மண்ணாகி விடலாம். ஆனால், மனதோடு மரணித்து பின் மீண்டும் உயிர் வலியைப் பொறுத்துக் கொண்டு உயிர்த்தெழுவதெல்லாம் ஒரு வித சாப நிலை. அப்படிப்பட்ட சாபத்தை தான் விதி யுக்தா சாகித்யனுக்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
விஸ்வயுகா கிளம்பி வெகுநேரமாகியும் அவன் பித்துப் பிடித்தவன் போல அவள் எறிந்த கொதி அமிலத்தில் தோய்ந்து எரிந்து கொண்டிருந்தான்.
நெஞ்சம் தீப்பற்றி எரிந்து சாம்பலாகிக் கொண்டிருப்பதை எப்படி உரைப்பான் அவளிடம்? அவள் மீதுள்ள முதல் காதல் பட்டுப் போன பின் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை வஞ்சமெனும் வலைக்குள் சிக்கி இழந்து விட்டானெனப் புரிந்தது.
மெல்ல மெல்ல கண்கள் இருட்ட உச்சந்தலை சூடானதில் தலையே வெடிக்கும் அளவு வலித்தது. அந்தச் சூட்டைக் குறைக்கும் வண்ணம் ஆகாயம் பன்னீர் துளிகளாக குளிர்ந்த மழையைத் தூவ, அவனது எண்ண அலைகளோ, அலைகளோடு அலைகளாக அடித்துச் செல்லப்பட்டு அஸ்வினியிடம் வந்து நின்றது.
—-
தனதறையில் புத்தகங்களோடு புத்தகங்களாக மூழ்கிப் போயிருந்தான் யுக்தா சாகித்யன். எப்போதும் அஸ்வினி வீட்டிற்கு வரும் நாள் அன்று எந்தப் புத்தகத்தையும் தொட மாட்டான். அன்று முழுக்க முழுக்க அவருடனே தான் இருக்கப் பிரியப்படுவான்.
“யுகி சாப்பிட வா!” முந்தானைத் தலைப்பில் கையைத் துடைத்துக்கொண்டே அறைக்குள் வந்தவர் திகைத்தார்.
“என்ன யுகி செய்ற? நீ காலேஜ் போய்ட்டன்னு மறந்துட்டு ஸ்கூல் புக்ஸ படிச்சுட்டு இருக்கியா?” என சிறு கிண்டலுடன் கேட்க,
“அதெல்லாம் இல்லமா. உங்க ஏஞ்சல் ஒழுங்கா படிக்க மாட்டுறான்னு ஃபீல் பண்ணுனீங்கள்ல… அதான், அவளுக்காக ஸ்பெஷலா நோட்ஸ் ரெடி பண்ணிட்டு இருக்கேன். இதை படிச்சாலே அவள் அட்லீஸ்ட் 60 டு 70 வாங்கிடலாம். ஒரு ஃபைவ் மினிட்ஸ்மா!” என்றவனின் தலையைக் கலைத்து விட்டுச் சென்றவருக்கு மனதினுள் அத்தனை மகிழ்வு.
அனைத்தையும் முடித்தவன், அஸ்வினியிடம் ஒரு கவரில் போட்டு அவன் தயாரித்த நோட்ஸைக் கொடுத்தான்.
“ம்மா… இதை நான் குடுத்தேன்னு சொல்லாதீங்க. நீங்களே எடுத்துட்டு வந்ததா சொல்லிக்கோங்க” என்றதும், “ஏன் யுகி அவளுக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு ரெடி பண்ணிருக்க…” என முகத்தைச் சுருக்க, அவன் பிடிவாதமாக நின்றான்.
பின், அவன் சொன்னது போன்றே சொல்லவேண்டியதாகப் போயிற்று.
பின் ஒரு நாள் அஸ்வினியும் யுக்தாவும் ஆற அமர அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், “ம்மா நான் ஒன்னு கேட்கட்டா?” எனப் பீடிகையுடன் ஆரம்பித்தான் யுக்தா.
அஸ்வினி என்னவெனப் பார்க்க, “நீங்க ஹேப்பியா இருக்கீங்களா?” வினவளாகக் கேட்டான் அவர் கண்ணைப் பார்த்து.
ஒரு நொடி தடுமாறினாலும், “எனக்கு என்ன யுகி. ரொம்ப ஹேப்பியா இருக்கேன். என்னை உள்ளங்கைல வச்சு தாங்குற புருஷன். என்னை இன்னும் உயிர்ப்போட வச்சுருக்குற என் பசங்க… உங்க கூட இருக்கும் போது என் ஹேப்பிக்கு என்ன குறைச்சல் இருக்கப் போகுது…” என்றார் மெல்லப் புன்னகைத்து.
“அப்பறம் ஏன்மா என்னைப் பத்தி வெளில சொல்லக் கூட அவ்ளோ பயப்படுறீங்க. அப்பாவை ஒரு தடவைக் கூட என்னைப் பார்க்க விட மாட்டுறீங்க. அந்த சிவகாமி மேல அவ்ளோ பயமா? இன்னும் ஏன் இந்த பயம்மா…” என்றவனின் கேள்வியில் ஆதங்கம் மிளிர்ந்தது.
சில நொடிகள் அமைதியில் கழிய, பெருமூச்சொன்றை வெளியிட்டவர், “யுகி… இந்த லைஃப் இருக்குல்ல அது ரொம்ப விசித்திரமானது. நம்ம ஒரு விஷயத்துக்காக ஆசைப்படும் போது நம்மளை ஏங்க வைக்கும். கடைசில, சரி இது நமக்கு வேணாம்னு முடிவெடுக்கும் போது நம்மக்கிட்டயே கொண்டு வந்து குடுக்கும். சரின்னு நம்மளும் நமக்குப் பிடிச்சது கிடைச்சுதேன்னு பொத்தி பொத்தி பாதுகாப்போம். ஆனா, நமக்கு பிடிச்சதை நம்மளே வேணாம்னு தூக்கி போடுற அளவு இந்த லைஃப் நம்மளை டெட் எண்டுல கொண்டு வந்து நிறுத்தும். அப்படியும் நம்ம விடமாட்டோம். விடாம பிடிச்சுப்போம். ஏன்னா நமக்குப் பிடிச்சதாச்சே. நமக்கு பிடிச்ச ஒரு விஷயத்தைப் பாதுகாக்க, சில நேரம் ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் இழக்க வேண்டியது இருக்கும்… அப்படி தான் என் காதலும்!” என விரக்தி நகை பூத்தவரை ஆழப்பார்வை பார்த்தான்.
அவர் மீண்டும் தொடர்ந்தார்.
“உன் அப்பாவை ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் அவரோட பத்திரிகை ஆபிஸ்ல தான் பாத்தேன். பார்த்ததும் பிடிச்சுதான்னு தெரியாது… ஆனா, அவரைப் பிடிக்க வச்சாரு. எங்களுக்குள்ள எல்லாம் ஒத்துப் போச்சான்னு தெரியாது. ஆனா எங்களுக்கே தெரியாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துப் போக வச்சுக்கிட்டோம். அவரோட ஸ்டேட்டஸ், பேமிலி பேக் கிரவுண்ட் பத்தி எல்லாம் அப்போ எனக்கு சரியா தெரியாது.
தெரிஞ்சதுக்கு அப்பறம் விலகிப் போக நினைச்ச என்னை அவரோட காதல் விலக விடல. அவரோட மனசுலயும் சரி நடத்தைலயும் சரி என்னைக்கும் பணக்காரத் தன்மை இருந்தது இல்ல. ரொம்ப அன்பானவர். அந்த வீட்ல அவர் மட்டும் தான் அப்படி. சிவகாமி அக்காவுக்கு என்னைச் சுத்தமா பிடிக்கலைன்னு அங்க கல்யாணம் ஆகிப் போன முதல் நாளே தெரிஞ்சுது.
அன்னைக்கு ராத்திரியே எனக்கு ஒரு பெட்டி நிறைய பணம் குடுத்து அவரை விட்டுப் போக சொல்லி வற்புறுத்துனாங்க. அதுவும்… என்னை அந்த வீட்ல வேலைப்பாக்குற வேலைக்காரனோட ஓட சொன்னாங்க…” சொல்லும்போதே அவரது கண்ணில் நீர் தேங்கியது. யுக்தா அதிர்வுடன் கூடிய கோபத்துடன் கையை இறுக்கி மூடிக்கொண்டான்.
“அப்போ தான, உன் அப்பா என்னை மறந்துட்டு வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பாரு! ஆனா அவரை நம்பி நானும் என்னை நம்பி அவரும் இந்த பந்தத்துல இணைஞ்சு இருக்கோம். அப்படி எல்லாம் அவரை என்னால பாதில விட்டுட்டுப் போக முடியல. முடியாதுன்னு சொன்னதுக்கு, இவரோட பிஸினஸையே படுக்க வச்சாங்க. உன் அப்பா ரொம்ப திறமைசாலி. அவரோட வீக்னெஸ் அந்தக் குடும்பம் தான். பிசினஸ் அஃபெக்ட் ஆனதுக்கு காரணம் அவரோட அண்ணின்னு சொன்னா கூட நம்ப மாட்டாரு. அதுக்கு அப்பறம், மேற்பார்வைல எல்லாமே நல்லா போற மாதிரி தான் இருந்துச்சு. ஆனா சிவகாமி அக்காவோட ஆட்டம் அதோட நிக்கல. பொதுவா பிடிக்காத மருமகள்னா குத்தம் சொல்றது இயல்பு தான். ஆனா, இவங்க அதுக்குலாம் மேல…” என சொல்ல முடியாமல் நிறுத்த, யுக்தா புருவம் சுருக்கிப் பார்த்தான்.
“அந்த டைம்ல யாருக்குமே குழந்தை உண்டாகல. எங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துலயே நான் உண்டானேன். அப்போ அவரு வேலை விஷயமா வெளியூருக்குப் போயிருந்தாரு. அடிக்கடி அவர் வெளியூர் போறது சகஜம். அப்போ நான் மாசமா இருக்கறதை நான் சொல்லாமலேயே சிவகாமி அக்கா கண்டுபிடிச்சுட்டாங்க. கூடவே, என்னை ஹாஸ்பிடலும் கூட்டிட்டுப் போனாங்க… அபார்ட் பண்றதுக்கு” என இதழ்களை அழுந்தக் கடிக்க “வாட்?” எனக் கத்தினான் யுக்தா.
“யுகி… ப்ளீஸ்… என் மனசுல அழுத்துனதை இதுவரை யார்கிட்டயும் சொன்னதில்லை. உன் மூலமா இது வெளில வராதுன்ற நம்பிக்கைல எல்லாத்தையும் கொட்டுறேன். இதை நீயும் உன் மனசோட வச்சுக்கோ” எனக் கண் கலங்கியதில், “அந்தப் பொம்பளைக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி செய்வா. நீங்க ஏன்மா அதுக்கு சம்மதிச்சீங்க?” என்றான் ஆற்றாமையாக.
“சம்மதிக்கலைன்னா உன் அப்பாவைக் கொன்னுடுவேன்னு சொன்னாங்க யுகி. அவர்கிட்ட நான் விஷயத்தை சொன்னாலும் அவரைக் கொன்னுடுவாங்க. அந்த வலியை என்னைப் பார்க்க வைப்பாங்க யுகி. என்னால முடியாது… அவரை என்னால எப்படி…” எனத் தேம்பியவரைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
“அதுக்கு அப்பறம்…” என நிறுத்தியவர் மகனின் கோப முகம் கண்டு மீதியை விழுங்கிக் கொண்டு, “அதுக்கு அப்பறம்… குழந்தையே வேணாம்னு இருந்துட்டேன். தானா உண்டாகவும் இல்ல…” என்றார் பரிதாபமாக.
“பைத்தியமாம்மா நீங்க. அவங்க மேல கம்பளைண்ட் பண்ணிருக்கலாம்ல? அட்லீஸ்ட் அப்பாகிட்டயாவது சொல்லிருக்கலாம்ல…”
“எனக்கு அம்மா, அப்பான்னு யாரும் இல்ல யுகி. தூரத்து சொந்தம் கொஞ்ச பேர் இருந்தாங்க. ஆனா, அவங்ககிட்ட போய் காட்டி குடுத்து, அவங்களை ஏதாச்சு செஞ்சுடுவாங்களோன்னு பயமா இருந்துச்சு. அவரோட அண்ணனுங்க எதையும் செய்யக்கூடியவங்க. அவங்க மேல கம்பளைண்ட் குடுத்தா, எனக்கு வேசிப் பட்டம் கட்ட கூட தயங்க மாட்டாங்க. எங்க சுத்துனாலும் நான் அந்த வீட்ல லாக் ஆகிட்டேன்னு மட்டும் புரிஞ்சுது. அவருக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். அந்தப் பொறுமைக்கு பரிகாரமா அவங்க பசங்க எல்லாம் என் மேல ரொம்ப பாசமா இருந்தாங்க. இப்ப வரை இருக்காங்க. காலப்போக்குல இதுவே போதும்னு எல்லாத்தையும் பொறுக்கிட்டு போற நேரத்துல தான் உன்னைப் பார்த்தேன்.
சிவகாமி செய்ற சில இல்லீகல் விஷயம் எல்லாம் எனக்குத் தெரியும். அதுல அதிக பட்ச க்ரைம் உங்களை குடிசையை விட்டுக் குடுக்க வச்சுட்டு சரியான வசதி இல்லாம டென்ட்ல தங்க வச்சது. அவங்க கட்டப் போற 10 ஸ்டார் ஹோட்டலுக்கு எதிரா நான் மறைமுகமா கேஸ் போட்டேன். அவங்க ஒவ்வொரு தடவையும் அந்த ஹோட்டலை கட்ட எல்லா பிரச்சனையும் முடிச்சு ஸ்டார்ட் பண்ணும் போதும் நான் அதுக்கு எதிரா கேஸ் போட்டேன். இப்பவும் அதான் செஞ்சுட்டு இருக்கேன். ஆனா என்னைக்கு வேணாலும் நான் மாட்டலாம். அப்டி நான் மாட்டுனா எனக்கு பதிலா நீ அந்த கேஸை நடத்துவ தான யுகி?” என அவனைக் கெஞ்சுதலாகப் பார்க்க, “கண்டிப்பா” என்றான் உறுதியாக.
“உங்களை மாட்ட விட மாட்டேன்மா. எனக்கு வேலை கிடைச்சதும், நீங்களும் அப்பாகிட்ட எல்லா உண்மையையும் சொல்லி அவரைக் கூட்டிட்டு வந்துடுங்க. நம்ம எங்கயாவது போய்டலாம். உங்களை சேஃபா இருக்க வச்சுட்டு, அந்த சிவகாமி குடும்பத்தையே ஒன்னும் இல்லாம செய்றேன்” என்றவனின் பேச்சில் அப்போதே சிறு வஞ்சம் விளைந்தது.
அத்தியாயம் 45
அதன்பிறகு அவனாகத் தோண்டி துருவி மேலும் சில விஷயங்களை அறிந்து கொண்டான்.
அப்படி அவன் அறிந்து கொண்ட விஷயங்கள் எதுவும் உவப்பாக இல்லை தான்.
“நீங்க கொஞ்சம் தைரியமா இருக்கலாம்மா… சிவகாமியை யாரும் வீட்ல எதிர்த்து பேச மாட்டீங்களா?” என்றான் ஆத்திரமாக.
“ஏன் இல்ல? என் ஏஞ்சல் தான் அவங்களை நச்சு நச்சுன்னு கேள்வி கேட்பா. அவள் முன்னாடி என்னை யாருமே குறைச்சு பேசிட கூடாது. அவ்ளோ தான்… யாருனு கூட பார்க்காம திட்டிடுவா. மத்தவங்களும் அப்டி தான் ஆனா அக்காவுக்குப் பயப்படுவாங்க. யுகா அப்படி இல்ல” என்றதும் அவன் மனது மயிலிறகால் வருடுவது போல இலகுவாகும்.
சிறிது சிறிதாக அவன் மனதினுள் விஸ்வயுகாவின் மீதான நேசம் ஆழப் பதியும் நேரம் அபர்ணாவின் வரவு அமைந்தது.
கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய அபர்ணா, நடுத்தர வர்க்க பையனுடன் காதல் புரிவது சிவகாமிக்கும் நாச்சியப்பனுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.
அவளைக் கண்டித்தவர்களை விஸ்வயுகா அடக்கினாள்.
காதலிச்சா என்ன தப்புமா? ஸ்டேட்டஸ் பார்த்து தான் காதலிக்கனும்னா எல்லாருமே அரேஞ்ச் மேரேஜ் தான் பண்ணனும். உங்க ஸ்டேட்டஸ் சைக்கோத்தனத்தை சித்தி ஜெனெரேஷனோட நிறுத்திக்கோங்க. எல்லாரும் அவங்களை மாதிரி வாயில்லா பூச்சியா இருக்க மாட்டாங்க. சில நேரம் பேக்ஃபயர் ஆகிடப் போகுது” என்று இளக்காரமாக கூறினாள்.
சிவகாமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வர அதற்கும் அஸ்வினியே வாங்கி கட்டிக்கொண்டார்.
ஆனால், விஸ்வயுகா இத்தனை ஆதரவு தெரிவித்ததற்கு மதிப்பே இல்லாதது போல அபர்ணாவே அவள் காதலை முறித்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
“உன்னை யாரும் கட்டாயப்படுத்துனாங்களா அபர்ணா? அவனைக் கொன்னுடுவேன்னு மிரட்டுனாங்களா? இல்ல கவுரவக் கொலை பண்ணுவேன்னு மிரட்டுனாங்களா?” எனத் தாயை முறைப்புடன் பார்த்த படி அபர்ணாவிடம் வினவ, அவள் அப்போதும் குடித்திருந்தாள்.
“ஹே! இது என் ஓன் டிசீஷன். எனக்கும் அவனுக்கும் செட் ஆகல தட்ஸ் இட்! ஆண்ட்டி, ஷேல் வீ ட்ரிங் வைன்?” எனக் கேட்டு விட்டு சிவகாமியிடம் நகர, சிவகாமி தான் மகளை ஏளனத்துடன் பார்த்தார்.
“என்னமோ லவ் அது இதுன்னு பினாத்துன… எந்த காலத்துலயும் லவ்வோட அளவு அவ்ளோ தான். ஒன்னு லவ்வ விட்டுக்கொடுக்கும் இல்லைன்னா லவ்காக எதை வேணா விட்டுக்கொடுக்கும்” சுருக்கென வார்த்தைகளை வீசியவர் அஸ்வினியைக் கண்டு இழிவாய் இதழ் விரிக்க, அவருக்கு தேள் கொட்டியது போல வலித்தது.
கலங்கிய கண்ணை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டார்.
ஆனால் அதன்பிறகு நடந்த அபர்ணாவின் விபத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது விஸ்வயுகா தான். அவள் தேறி வந்ததன் முழு பொறுப்பும் அஸ்வினியுடையதே.
யுக்தாவை சந்திக்க வரும் நேரமெல்லாம் விஸ்வயுகாவைப் பற்றியே கவலை கொள்வார். அப்போது யுக்தாவும் டெல்லியில் இருந்தான்.
அலைபேசி அழைப்பிலும் அஸ்வினி புலம்புவார்.
“யுகாவுக்கு இன்னும் அந்த ஆக்சிடெண்ட்டை மறக்க முடியல. அவளை எப்படி சரி செய்றதுன்னே தெரியல யுகி”
“நீங்க தான் பேசி சரி பண்ணனும்மா. அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருதுல்ல பேசாம ஏஞ்சலை டெல்லிக்கு கூட்டிட்டு வாங்களேன் அவளுக்கும் ஒரு மனமாற்றமா இருக்கும்ல” என்றவனின் குரலில் அவளைக் காண வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது.
தான் பேசினால் அவள் சரியாகி விடுவாள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையும் உருவானது.
“டெல்லிக்கா? வேணாம் யுகி. அக்காவுக்குத் தெரிஞ்சுட்டா ரொம்ப கஷ்டம்”
“ப்ச் அப்படி என்ன செஞ்சுடுவாங்க?” இம்முறை எரிச்சல் தோன்றியது யுக்தாவிற்கு.
“அவங்க நினைச்சது நடக்கணும்னா அவங்க பொண்ணுன்னுலாம் பார்க்க மாட்டாங்க. என்ன வேணாலும் செய்வாங்க. என் ஒருத்தியால நான் மட்டுமே எல்லாமே அனுபவிச்சுக்குறேன். என்னால நீயோ என்னால ஏஞ்சலுமோ சின்னக் கஷ்டத்தைக் கூட அனுபவிக்கக் கூடாது யுகி” இதுவரையல்லாத தீர்மான தொனி ஒலித்தது அவர் பேச்சில்.
‘இவரை என்ன தான் செய்வதோ’ என்ற சலிப்பு தோன்றினாலும், இதற்கு என்ன முடிவு என்றதையும் ஆராயத் தொடங்கினான் யுக்தா.
அப்போது தான், அவனிடம் வந்து சேர்ந்தது விஸ்வயுகா கொடுத்து விட்ட சொக்கநாதரும் மீனாட்சியும் இணைந்திருக்கும் சிலை.
வெகுநேரமாக அதில் இருந்து அவன் கண்ணைப் பிரிக்கவே இல்லை. “இது நீங்க வாங்குனீங்களா?” அவன் குரலில் ஒரு சந்தேகம் எழுந்தது.
ஏற்கனவே விஸ்வயுகாவின் நடவடிக்கையில் இலேசான சந்தேகம் தோன்றியதில் என்ன நினைத்தாரோ “ஆமா நான் தான் வாங்குனேன். பிடிக்கலையா யுகி?” என்றார் முகத்தை சீராக்கி.
“ஏஞ்சல் வாந்தாளோ செலக்ட் பண்ண?” மீண்டும் ஒரு ஆர்வம் அவனிடம்.
“இல்ல அவள் வரல” சட்டென பொய்யுரைத்தவர் அடுக்களைக்குள் புகுந்து கொண்டார்.
அஸ்வினி வாங்கி கொடுத்ததாக சொன்ன சிலை தான். ஆனால், அதனைப் பார்க்கும் போது விஸ்வயுகாவின் பதின்மவயது முகமே கண் முன் விரிந்தது.
‘இப்ப ஏஞ்சல் எப்படி இருப்பா… நல்லா வளர்ந்துருப்பாளா இல்ல இன்னும் குட்டியா தான் இருப்பாளா? அதே ஹேர் ஸ்டைல் இருக்குமா இல்ல ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி கலரிங் எதுவும் பண்ணிருப்பாளா?’ என அவனவள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியது ஆடவனின் மனம்.
அதன்பிறகு விஸ்வயுகாவின் பிறந்தநாள் வரும் போது யுக்தா வலுக்கட்டாயமாக அஸ்வினியை நகைக்கடைக்கு அழைத்துச் சென்றான்.
“எதுக்கு இதெல்லாம் யுகி?” அஸ்வினி தவிப்பாக கேட்க,
“இத்தனை மாசமா என் சம்பளத்துல சேர்த்து வச்சதுமா. உங்களுக்கும் ஏஞ்சலுக்கும் தான் ஃபர்ஸ்ட் ட்ரீட். நான் ஒன்னும் பெருசாலாம் வாங்கல. என்னால முடிஞ்ச குட்டி கிஃப்ட்ஸ்…” என்றவன் அஸ்வினிக்கு மோதிரமும், சௌந்தருக்கு வெள்ளி பிரேஸ்லெட்டும் சில நிமிடங்களிலேயே வாங்கி விட்டு மீதி இருந்த நேரம் முழுக்க விஸ்வயுகாவிற்காகத் தான் பரிசு தேடி ஓய்ந்தான்.
அஸ்வினி தான், “யுகி இப்படியே போனா பிளைட் மிஸ் ஆகிடும். அவளுக்கு நீ வாங்குனாலும் உண்மையை சொல்ல முடியாது. வேணாமே…” என அவர் மறுக்க,
“ஏன் சொல்ல முடியாது. சொல்லுங்க” எனக் கண் சிமிட்டியவனின் கண்ணில் விழுந்தது, அந்த இதய வடிவ டாலர் கொண்ட மெல்லிய செயின்.
அதனைக் கையில் ஏந்தியவனின் பட்ஜெட்டில் அது அடங்கினாலும், “இந்த செயின் எப்படிமா இருக்கு. ஆனா ரொம்ப குட்டியா இருக்கோ. சின்ன பொண்ணுங்க போடுற மாதிரி இருக்குல்ல. அவளுக்கு சூட் ஆகுமா?” எனக் கவலை கொண்டவனுக்கு, அதைத் தவிர வேறு எடுக்க மனமில்லை. பணமும் இல்லை.
அந்த டாலரைக் கண்டதும் அஸ்வினிக்கு தூக்கி வாரிப்போட்டது. யுக்தாவின் மனதிலும் அவள் இந்த நிலையில் தான் இருக்கிறாளென்ற உண்மை உறைக்க, தலையே சுற்றியது அவருக்கு.
ஆகினும் உடனே எதுவும் யோசிக்க இயலவில்லை.
இறுதியில் யுக்தா அந்த செயினையே பில் போட்டு அஸ்வினியிடம் கொடுத்தான்.
“மா… அவள்கிட்ட என்னைப் பத்தி சொல்லி, நான் விஷ் பண்ணேன்னு இந்த செயினையும் குடுக்குறீங்களா?” சிறுவனாய் பார்த்த நாள் முதல் அவன் கண்களில் அத்தனை பளபளப்பை அவர் இதுவரை கண்டதில்லை.
அப்போதைக்கு செய்வதறியாமல் வாங்கிக் கொண்டவர், சென்னைக்குத் திரும்ப மறுநாளே யுக்தா அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.
“ம்மா ஏஞ்சல்கிட்ட செயினைக் குடுத்தீங்களா என்ன சொன்னா?” மின்னிய காதலுடன் அவன் கேட்க,
“உனக்கு இது ஆபிஸ் டைம் ஆச்சே யுகி. டியூட்டில இருக்கும்போது போன் பேச மாட்டேன்னு சொல்லுவா” அஸ்வினி பேச்சை மாற்றினார்.
“பரவாயில்ல நீங்க சொல்லுங்க. ஏஞ்சல் என்ன சொன்னா?”
“அது… நான் எதுவும் சொல்லல யுகி. பக்கத்துல எல்லாரும் இருந்தாங்க நேத்து முழுக்க. அவளும் செயினை நான் குடுத்ததா நினைச்சு வாங்கிக்கிட்டா” என சமாளிக்க அவனுக்கு முகமே விழுந்து போனது.
“அதுக்கு அப்பறமும் அவள் எதுவும் கேட்டுக்கலையாம்மா?” ஏமாற்றத்துடன் வினவியவனிடம் “இல்லையே” என்றார் வேகமாக.
மறுமாதம் அவனைச் சந்திக்க டெல்லிக்குச் சென்றவர், எப்போதும் போல அவனுக்காக சமைத்துக் கொண்டிருந்தார்.
அவன் அவரிடம் அரட்டையடித்தபடி வெங்காயம் நறுக்கிக் கொடுக்க, “யுகி… உன்னை லீகலா நான் அடாப்ட் பண்ணலாம்னு இருக்கேன்” என்றார் மெதுவாக.
அதில் வெங்காயத்தை விடுவித்தவன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.
“என்ன திடீர்னு?” விழி இடுங்கக் கேட்டவனிடம்,
“தைரியம் வந்துருச்சுன்னு நினைச்சுக்கோயேன். பேரளவுல பையன்னு சொல்றது ஒரு மாதிரி இருக்கு. லீகலான்னா, எனக்கு கொள்ளி வைக்கிற உரிமையும் உனக்கு இருக்குமே…” என்றார் தொண்டை அடைக்க.
“ம்மா” அதட்டலுடன் அவர் வாயைப் பொத்தியவன், “உங்களுக்கு கொள்ளி வைக்க தான் நந்து இருக்கானே” என்றான் ஒரு மாதிரியாகச் சிரித்து.
அதில் அஸ்வினிக்கு நெற்றியில் இருந்து வியர்வைத் துளிர்க்க, அவரை இயல்பாக்க எண்ணியவன், “இத்துனூண்டா இருந்தப்ப பண்ணாம, இப்ப தென்னை மரம் மாதிரி வளர்ந்து நிக்கிற இந்த வளர்ந்த பிள்ளையை போய் தத்து எடுக்குறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க… உங்களை வேணும்னா நான் அக்காவா தத்து எடுத்துக்குறேன். நீங்களும் எனக்கு அம்மாவா இருக்குற அளவு வயசான ஆள் மாதிரியா இருக்கீங்க. யூ லுக் சோ யங்மா” என்றான் அரிசிப்பல் சிரிப்புடன்.
“பேச்சை மாத்தாத யுகி. நான் சீரியஸா சொல்றேன்” அவர் பிடிவாதமாக நிற்க, அவரை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன் சில நொடி அமைதிக்குப் பிறகு “வேணாம்” என்றான்.
கொஞ்சம் வலித்தது அவருக்கு.
“ஏன் யுகி? என்னை விட உனக்குக் காதல் பெருசா போச்சா?” தவிப்புடன் கேட்டவரை நிதானமாக ஏறிட்டவன், “உங்களால லீகலா என்னைத் தத்து எடுக்க முடியாதுன்னும் எனக்குத் தெரியும். அப்படியே தத்து எடுத்தாலும் என் காதலுக்கு உறவுமுறை பிரச்சனை இல்லைன்னும் எனக்குத் தெரியும்!” திமிராய் அடுப்பு மேடையில் சாய்ந்து கை கட்டி நின்றவனின் தோரணையில் ஒரு கணம் அசந்து போனார் அஸ்வினி.
“யுகி…” அவர் மறுத்துப் பேச வர, கை நீட்டி தடுத்தவன் “போதுமே… நீங்க இதுக்கு மேல சமாளிக்க நினைக்காதீங்க. எஸ். ஐ லவ் யுகா. இவ்ளோ வருஷமா எனக்குன்னு பேக் அப் எதுவும் இல்ல. இப்ப நான் சம்பாரிக்கிறேன். எனக்குன்னு ஒரு வேலை இருக்கு. எனக்குன்னு நீங்களும் அப்பாவும் இருக்கீங்க. அதே மாதிரி வாழ்க்கை முழுக்க எனக்கு ஏஞ்சலும் வேணும்மா…” என்றான் உறுதியாக.
“இது நடக்காது யுகி!” அவர் தீர்மானமாகக் கூற,
“நடக்கும். நான் நடத்துவேன்…” அவனிடமும் அதே தீர்மானம்.
“ஏஞ்சலுக்கு விருப்பம் இல்லைன்னா கூடவா?” அஸ்வினி மனதைக் கல்லாக்கிக் கொண்டு கேட்க, யுக்தாவின் காதல் கொண்ட மனதில் சிறிய வலி.
“அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு அவகிட்டயே கேட்குறேன்… உங்க பர்த்டேக்கு நான் சென்னைக்கு வரேன். அப்போ யுகாவை மீட் பண்ணனும்” என்றவனைத் திகைப்பாகப் பார்த்தார்.
இதையே தானே அவளும் சொன்னாள். அவளை சமாளிப்பதே பெரும் கடினமாக இருக்கும்போது இவனையும் சேர்த்து சமாளிக்க வேண்டியது இருக்கிறதே என நொந்தார்.
மோகம் வலுக்கும்
மேகா
அஸ்வினிக்கு இருவரும் நல்ல இருக்கனும்