அன்று தொலைத்த காதல் தான். வேண்டியே தொலைத்த காதல் விரும்பத்தகாத வண்ணம் அவளையே சரணடைந்தது.
அது காதலல்ல வெறும் காழ்ப்புணர்ச்சி என்று உணர்ந்த நொடி அவளுக்குள் மீண்டுமொரு இறுக்கம் சூழ்ந்தது.
விஸ்வயுகா காரை விட்டு இறங்கியதும், விமான நிலையத்தில் இருந்து யுக்தா அஸ்வினிக்கு அழைத்தான்.
எதிர்முனையில் என்ன கேட்டானோ, அதற்கு அஸ்வினி “இல்ல யுகி. நான் மட்டும் தான் இருக்கேன். உனக்கு லொகேஷன் அனுப்புறேன் வந்துடு” என்று விட, கீழுதட்டை அழுந்தக் கடித்த விஸ்வயுகா அங்கிருந்து விறுவிறுவென நடந்தாள்.
அஸ்வினியின் கட்டளைக்கிணங்க அலைபாய்ந்த மனதை சுருட்டி மடித்து எப்படி உள்ளுக்குள்ளேயே சம்மட்டி வைத்துப் புதைத்துக் கொண்டாளோ, இப்போது மீண்டும் அவன் மீது எழுந்த நேசத்தை மனதினுள் தீயிட்டு எரித்துக் கொண்டிருந்தாள்.
அவனை முதன் முதலாகப் பார்க்கும் போது எவனோ ஒரு ‘தர்ட் ரேட் பொறுக்கி’ தன்னை ஏஞ்சல் என அழைக்கிறது என்றே எண்ணிக்கொண்டாள்.
ஆனால், செய்தித் தாளில் அவனது பெயரைக் கண்டதும் துடித்துக் கொண்டிருந்த இதயம் ஒரு கணம் நின்றே விட்டது.
அவளது எண்ணங்களைக் குலைக்கும் வண்ணம் அழுத்தக் காலடி ஓசையுடன் உள்ளே வந்தான் யுக்தா சாகித்யன்.
சிவகாமி கொழுந்து விட்டு எரிந்த குரோதத்துடன் யுக்தாவை பார்த்தார். அவனோ பல வருடம் தேக்கி வைத்திருந்த வஞ்சத்தை விழிகளில் கக்கினான். அவர்கள் எதிரில் தெனாவெட்டாக அமர்ந்தவன், காலைத் தூக்கி டேபிள் மீது சிவகாமியின் முன்பு நீட்ட, அவரது பற்கள் அரைபடும் சத்தம் அந்த சிறிய அறையில் எதிரொலித்தது.
“என்ன சிவகாமி மேடம்… நீங்க வாயைத் திறக்க தனி ட்ரீட்மெண்ட் எதுவும் பண்ணனுமா?” எனக் கையை மேலே உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டவனின் புஜங்களின் கடினத்தன்மை பயமுறுத்தியது.
“எவன்டா நீ? இவ்ளோ தைரியம் உனக்கு யாருடா குடுத்தது?”
“எல்லாம் நீங்க விட்டு வச்ச மிச்சம் தான் சிவகாமி மேடம்!” எனக் கூறும்போதே அருண் பரபரப்பாக வந்து யுக்தாவின் காதில் ஏதோ முணுமுணுத்தான்.
“சார்… மினிஸ்டர் சைட்ல ரொம்ப ப்ரெஷர். இவங்களை இங்க வச்சுருக்குறது நமக்கு சேஃப் இல்ல சார்!” என்றதில், சிவகாமி கர்வப்புன்னகை சிந்தினார்.
மேஜையின் மீது தனது நீண்ட விரல்களால் தாளமிட்டவனிடம் சிவகாமி, “டேய் உங்கிட்ட இருக்குற ஆதாரம் எல்லாம் நீ பிரேம் பண்ணுனதுன்னு ப்ரூவ் பண்ண என் லாயர்ஸ் தீயா வேலை பார்த்துருப்பாங்க. சில சென்ட்ரல் பொலிடிஷியனோட பினாமி நான். இன்னும் அஞ்சே நிமிஷத்துல உன்னைத் தூக்கிருவாங்க” என்றார் ஏளனத்துடன்.
“அந்த அஞ்சு நிமிஷத்துக்குள்ள நான் வேண்டியதை வாங்கிடுவேனே சிவகாமி மேடம்…” என இழிவாய் இதழ் விரித்தவன், “சரி சொல்லுங்க ஏன் அஸ்வினியைக் கொன்னீங்க?” எனக் கேட்டான்.
“அவள் என் கையால சாகலன்றது தான் என் வருத்தமே!” என சிவகாமி உரைத்ததும் அத்தனை நேரம் அமைதியாய் எதிரில் இருந்தவனை வெறித்துக் கொண்டிருந்த விஸ்வயுகா தாயை முறைத்தாள்.
“ம்ம்ஹும்… சரி கொலையை ஏன் ஆக்சிடெண்ட்டா மாத்துனீங்க?” என்ற கேள்விக்கு இரு பெண்களிடமும் அமைதி நிலவியது.
“ஊஃப்!” எனப் பெருமூச்சை வெளியிட்டபடி எழுந்தவன், “சிவகாமி மேடம் உங்களோட சின்ன சின்ன குற்றத்தைக் கூட தோண்டி எடுத்திருக்கேன். அதெல்லாம் விட ஒரு பெரிய ஃபோர்ச்செரி பண்ணிருக்கீங்க. அதை தனியா சொல்லட்டுமா இல்ல உங்க பொண்ணு முன்னாடியே சொல்லட்டுமா? இல்ல உங்க பையன் முன்னாடி சொல்லட்டுமா?” என யோசிக்கும் பாவனையில் கேட்டான்.
சிவகாமி அவனையே விழி தெறிக்கப் பார்க்க, அவனோ “பையனையும் வர சொல்லிடலாமா?” எனக் குதர்க்கமாகக் கேட்க, சிவகாமியின் நெற்றியில் வியர்வைப் பூக்கள் பூத்தது. விஸ்வயுகா குழப்பத்துடன் தாயைப் பார்த்தாள்.
“அஸ்…அஸ்வினியோட டெத் ஆக்சிடெண்ட் இல்ல கொலை தான். யார் கொலை செஞ்சாங்கன்னு தெரியாது. ஆனா அஸ்வினியை நான் கொலை பண்ணல” என்றார் வேகமாக.
“ச்சு ச்சு ச்சு… ஏஞ்சல் உன் அம்மாவுக்கு இதுல இருக்குற சீரியஸ்னெசும் தெரியல. என்னைப் பத்தியும் தெரியல. ஆனா உனக்குத் தெரியுமே என்னைப் பத்தி. அவங்க கொலை சம்பந்தமா என்கிட்ட எதையோ மறைக்கிற. ஐ நீட் டு நோ” என்றதில், அவனை நிமிர்ந்து பார்த்தவள், மௌனத்தையே கடைபிடிக்க பொறுமை இழந்தவன் அவள் கன்னத்தில் பளாரென அறைந்தான்.
“டோன்ட் வேஸ்ட் மை டைம் யுகா! நீ இதுக்கு மேலயும் அமைதியா இருந்தா, இங்க இருந்து நீயும் உன் அம்மாவும் மட்டும் தான் உயிரோட போவீங்க. உன் உடன்பிறப்புகளும் உன் ப்ரெண்டும் தப்பிக்க முயற்சி செஞ்சதா நானே போட்டுத் தள்ளி அவங்க மேல ட்ரக் கேஸ் போட்டு புதைச்சுடுவேன்…” என்றான் விழி சிவக்க.
“இந்த மிரட்டுற வேலையெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்க” சிவகாமி விரல் நீட்டி எச்சரிக்கை, கையில் இருந்த துப்பாக்கியை வைத்து அந்த விரலில் நச்சென்று அடித்தான். வலியில் துடித்த சிவகாமியைப் பார்க்க இயலாமல் “ஜஸ்ட் ஸ்டாப் திஸ். உனக்கு எல்லாமே நான் சொல்றேன். அவங்களை வெளில இருக்க வை” என அழுத்தமாக உரைத்தாள் விஸ்வயுகா.
“நோ விஸ்வா! யூ ஆர் நாட் சப்போஸ் டு டூ இட்!” சிவகாமி வேகமாக மறுக்க, அவள் அவரை சலனமின்றி பார்த்தாள்.
“நீங்க செஞ்சது வரை போதும்! இனி என் விஷயத்துல நீங்க தலையிடாதீங்க!” என்றிட, யுக்தா பெண் அதிகாரிகளை விட்டு சிவகாமியை வெளியில் செல்ல வைத்தான்.
போகும் முன்னே, “உன்னை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காத” என மொத்த குரூரத்தையும் அவன் மீது கொட்டி விட்டே சென்றார்.
அதை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாதவன், மீண்டும் விஸ்வயுகாவின் எதிரில் அமர்ந்து அறை கேமராவை ஆன் செய்யப் பணித்தவன், ரெக்கார்டரையும் ஆன் செய்தான்.
சில நொடிகள் கையை இறுக்கி மூடிக்கொண்டவள், “அன்னைக்கு நைட்டு ஒரு ஒன்பது மணி இருக்கும். ஏர்போர்ட்ல இருந்து ஃபியூ கிலோ மீட்டர்ஸ்ல தான் நானும் சித்தியும் கார்ல இருந்தோம்…” என்றதும் அவன் கூர்மையாக பார்த்தான்.
“நீ இல்ல!” அவன் மறுக்க,
“இருந்தேன்” என்றாள் அவள்.
“நீ இல்லைன்னு தான் அம்மா என்கிட்ட சொன்னாங்க…”
“எல்லாரும் எல்லா நேரமும் உண்மையாவா இருக்காங்க. நீயே உண்மையா இல்லாதப்போ, மத்தவங்க மட்டும் உண்மையா இருப்பாங்கன்னு எப்படி நம்புற?” இளக்கார பார்வையுடன் அவனை சாடினாள்.
எதிர்வினையின்றி “ம்ம் சரி நீ அங்க இருந்த… தென்?” என்றான்.
“யாரோ ஒரு நாலு பேர் முகமெல்லாம் மூடிட்டு சித்தியை கடத்திட்டாங்க…” என்றதும்,
“அப்பவே ஏன் போலீசுக்கு போகல?” எனக் கேட்டான் ஆதங்கத்துடன்.
“ஏன்னா அவங்க கடத்துனது என்னையும் தான்!” அவன் விழிகளில் சிறிய அதிர்ச்சி.
“உன்னையும் கடத்தி இருக்கானுங்க. ஏன்டி கேஸ் ஃபைல் பண்ணல?” இம்முறை அதிக பட்ச வேதனை அவன் குரலில்.
“உன்னையும் கடத்துனாங்கன்னா, அம்மாவை நான் குத்துயிரும் குலையுயிருமா ஒரு கட்டடத்துல பார்த்தப்ப, அங்க அவங்க மட்டும் தான இருந்தாங்க. நீ இல்லையே.”
“நான் இல்லையா… நீ என்னைத் தேடலையா?” நிதானமாகக் கேட்டாள் அவள்.
அவனோ இடுங்கிய விழிகளுடன் சில்லிட்ட உள்ளங்கையை பிசைந்தான்.
“ஏ… ஏஞ்சல்? நீ நீ அங்க இருந்தியா?” தொண்டையை சரி செய்து கொண்டு யுக்தா கேட்க,
“இருந்தேன். எங்களை கடத்துனவனுங்க யாருன்னு எனக்குத் தெரியல. சித்தியை எவ்ளோ அடிக்க முடியுமோ அவ்ளோ அடிச்சாங்க…” சொல்லும்போதே காற்று தான் வந்தது அவளுக்கு.
அதில் தானாக அவன் கண்களும் கலங்கியது.
“ஒருத்தன், அங்க இருந்த சம்மட்டியை வச்சு அவங்க அவங்க தலைலயே…” சொல்லக்கூட முடியாமல் நடுங்கினாள்.
இவை எல்லாம் மருத்துவர் கொடுத்த குறிப்பிலேயே இருந்தது. அப்போதே அவன் செத்து விட்டான். மீண்டுமொரு முறை அந்த கொடூரத்தைக் கேட்டு சாக மனம் வராமல், “நீ… நீ எப்படி தப்பிச்ச?” என சட்டென கேள்வியை மாற்றினான்.
“தப்பிக்கல. அவங்ககிட்ட ரொம்ப போராடுனேன். சித்தியைக் காப்பாத்த முடியல. என்னையும் காப்பாத்திக்க முடியல…” சொல்லும்போதே அனைத்து உணர்வுகளும் வடிந்திருந்தது.
ஏதோ புரிந்தாலும் அவனால் சட்டென எதையும் உள்வாங்க இயலவில்லை.
“பு… புரியல?”
அவன் கண்களை நேருக்கு நேராய் பார்த்தவள் “கேங்க் ரேப்! அங்க ஒரு டார்க் ரூம் இருந்துச்சு. அங்க… அங்க என்னை தள்ளுனதும் ஆல்ரெடி எனக்கு இருந்த இருட்டு பயத்துல அவங்களை என்னால அட்டாக் பண்ண முடியல. என் காலை உடைச்சான் என் கையை உடைச்சான்… மொத்தமா என்னை சிதைச்சானுங்க…” என ஒவ்வொரு வார்த்தைகளையும் அவனுள் கடத்தினாள் அவள்.
முற்றிலும் இதனை எதிர்பார்க்காதவன், அவள் மீதிருந்த பார்வையை அகற்றாமல் சிலையாகி இருந்தான்.
எத்தனை நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தானென்று அவனுக்கே தெரியவில்லை. காதில் மாட்டி இருந்த ப்ளூடூத்தின் வழியே “சார் இன்வெஸ்டிகேஷன கன்டினியூ பண்ணுங்க” என்று அருண் துரிதப்படுத்தினான்.
அதில் நிகழ்விற்கு வந்தவன், “கேமரா ஆஃப்” எனக் கட்டளையிட, “கேமரா ஆன்லேயே இருக்கட்டும்…” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தாள் விஸ்வயுகா.
அவன் கரங்கள் முதன்முறையாக நடுங்கியது. விழிகள் அவளை நேராய் பார்க்க இயலாமல் தடுமாறியது.
அருணோ “சார் மினிஸ்டர் வெளில தான் இருக்காரு. உள்ள வர்றதுக்குள்ள தேவைப்படுற தகவல் வாங்குங்க” என்றதெல்லாம் அவன் மூளையில் ஏறவே இல்லை.
அவன் விழிகள் காட்டிய வலியை ஒரு வித ரசிப்புடன் பார்த்தவள், “அட இன்னும் என்ன தகவல் வேணும்னு கேளுங்க ஆபிசர். என்னை எங்க எங்க தொட்டாங்க. எந்த எந்த பொசிஷன்ல…” என அவள் அவனை குத்திக் கிளறி காயமாக்கும் பொருட்டு நெருப்பென வார்த்தைகளைக் கொட்ட,
“ஸ்டாப்! ஸ்டாப் திஸ்! போ…” இனி இங்கு அமர்ந்தால் அவள் என்னவெல்லாம் பேசுவாளென்று அவனால் யோசிக்கக் கூட இயலவில்லை.
“இன்வெஸ்டிகேஷன் அதுக்குள்ள முடிஞ்சுதா ஆபிசர்? சும்மா டீடெய்லா கேளுங்க. எனக்கு ஒன்னும் கூச்சமெல்லாம் இல்ல…” அவன் கூறிக் குத்திய வார்த்தைகளால் அவனையே சவமாக்கினாள்.
விருட்டென எழுந்த யுக்தா, டேப் ரிக்கார்டரை காலால் எத்தி பறக்க விட்டு அறையை விட்டு வெளியேறியவனின் விழிகள் நீரால் நிறைந்திருந்தது.
அவன் சென்ற பிறகே அவளது கண்களும் குளம் கட்டி விட்டது.
அன்று, காரை விட்டு நான்கடி எடுத்து வைத்திருந்த விஸ்வயுகாவின் கண்ணில் ஒரு கன்டெய்னர் வேனின் வெளிச்சம் அடிக்க கண்ணைச் சுருக்கி யாரென பார்க்க முயன்றாள். அவர்கள் நேராக அவளது காரைப் பின்னே இருந்து இடிக்க, அஸ்வினி பதறி இறங்கினார்.
அவர் இறங்கிய நேரம் அவரை வேனிற்குள் இழுத்துப் போட்டார்கள். “சித்தி…” எனக் கத்திய விஸ்வயுகாவையும் வாயைப் பொத்தி கடத்தியவர்கள், இருவரின் கையையும் பின்னால் கட்டி விட்டனர்.
மொத்தமாக மூடப்பட்ட வேன் என்பதாலும் கண்ணிமைக்கும் நேரம் நிகழ்ந்த நிகழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சியாலும் இருவருமே செய்வதறியாமல் திகைத்தனர்.
சில நிமிட நேரத்திற்குள் ஒரு பாதி கட்டி முடித்த கட்டடத்தினுள் இருவரையும் இழுத்துச் சென்றவர்கள், காரணமின்றியே அடித்து துன்புறுத்தினர்.
விஸ்வயுகாவும் அவர்களை அடித்து துவைத்தாள்.
முயன்ற மட்டும் அஸ்வினியின் மீது அடிபடாதவாறு காக்க முயன்றவள் தனது கராத்தே வித்தையைக் காட்ட, அவர்களோ இவளுக்குமேல் இருந்தனர்.
முதல் ஒருவன் அவள் ஒரு கையை உடைக்க, அந்நேரத்தைப் பயன்படுத்தி அஸ்வினியை தாக்கினர்.
அப்போதும் வலியை பொறுத்துக்கொண்டு விஸ்வயுகா அவனைத் தடுக்க, மற்றொருவன் அவளைத் தூக்கிக்கொண்டு பக்கவாட்டில் இருந்த ஒரு இருட்டு அறையில் தள்ளினான்.
கும்மிருட்டு. ஒரு பொட்டு வெளிச்சம் கூட தெரியவில்லை. வெளியில் அஸ்வினியைக் கொன்று விட்டு, நால்வரும் அந்த இருட்டு அறைக்குள் வந்து அவளைத் துளி துளியாகக் கொன்றனர்.
அவர்களிடம் இருந்து விடுபட இயலாமல், கத்தியே மொத்த சக்தியையும் இழந்து தலையிலும் அடிபட்டதில் அரை மயக்கத்திற்குப் போனவளுக்கு இனி எதிர்க்க தெம்பும் இல்லை.
யாரோ வரும் அரவம் கேட்டு, அவர்களை அடிக்க உபயோகித்த ஆயுதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு நால்வரும் அங்கிருந்து ஓடிவிட, அலைபேசியின் ஜிபிஎஸ் உதவியுடன் அஸ்வினியைத் தேடி யுக்தா வந்து விட்டான்.
வந்தவன் உடல் முழுதும் குருதி வழிய உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரைக் கண்டு கதறியவன், “அம்மா… ம்மா” என அவரை மடியில் போட்டுக் கத்தி அழுதான்.
“அம்மா உங்க யுகிம்மா என்னைப் பாருங்கம்மா” என்றவனின் சத்தம் அரை மயக்கத்தை மீறி பெண்ணவளின் செவியறையிலும் மோத கடினப்பட்டு கண்ணைப் பிரித்தவளை அந்த இருட்டு அச்சுறுத்தியது.
சுவரை ஒட்டி சரிந்து கிடந்தவளின் பக்கவாட்டு சுவரில் சிறிய சதுர வடிவ ஓட்டை ஒன்று இருக்க, அது கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. அதில் இருந்தும் அத்தனை வெளிச்சம் வரவில்லை தான்.
ஆனால், அதன் வழியே யுக்தாவின் முதுகுப்புறம் தெரிந்தது.
கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தவன், ஆம்புலன்ஸிற்கு போன் செய்ய, இங்கு அவனை அழைக்க முயன்றும் முடியாமல் தோற்றாள் விஸ்வாயுகா.
“யு… யுகி… யுகி” என நடுக்கத்துடன் கையைத் தூக்கி கத்த முயன்றவளுக்கு காற்றே வந்தது.
அதற்குள் ஆம்புலன்ஸ் வந்திருக்க, அஸ்வினியைக் கையில் அள்ளிக் கொண்டு வெளியில் சென்றவனை இம்முறை “யுகி…” என அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் அழைக்க, அது அவனுக்கு கேட்டே இருக்காது என்று புரிந்தாலும் விழியோரம் நீர் கசிந்து வழிந்தது அவளுக்கு.
அஸ்வினியை ஆம்புலன்சில் ஏற்றிய யுக்தா சரட்டென திரும்பிப் பார்த்தான். அங்கிருந்து நகர ஏதோ ஒன்று தடுக்க, அந்நேரம் “சார் பல்ஸ் இல்ல சீக்கிரம் வாங்க…” என்ற குரல் ஆம்புலன்சில் இருந்து கேட்டதில் அஸ்வினியின் சடலத்துடன் அவனும் உயிருள்ள சடலமாகவே ஆம்புலன்சில் ஏறினான்.
மோகம் வலுக்கும்
மேகா
நான் ஓடிட்டேன் 🏃🏻♀️🧘🏻♀️