Loading

பிறை -42

 

அங்கே வீட்டில் தனியாக இருந்த பார்கவி ஒரு முடிவாக அவளது துணிகளை எல்லாம் அடுக்கத் தொடங்கினாள்.

 

இத்தனை நாளும் யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருந்தாள். ஆனால் வீட்டில் உள்ளவர்களை நினைத்தால் தான் அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.

 

வீட்டில் கூறி இருந்தாலும் அவர்களும் மறுப்பு கூற வாய்ப்பில்லை. ஆனால் அர்ஜுனின் பின் புலத்தை யோசித்து மறுத்து விட்டால் என்ன செய்வது.. அவனின்றி இவளால் வாழ முடியுமா..

 

அர்ஜுனை பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள் பார்கவி. உறவென்று சொல்லிக்கொள்ள அவனுக்கு யாரும் இல்லை.. தாய் தகப்பன் இன்றி தனியாக வளர்ந்தவன். ஆசிரமத்தில் வளர்ந்து வந்தவனுக்கு, தாய் தந்தையாக அங்குள்ளவர்கள் தான் அவனை சீராட்டி வளர்ந்தனர்.

 

படிப்பில் கெட்டி என்பதால் ஆசிரமத்திற்கு நன்கொடை வழங்குபவர்களின் உதவியால் படித்து, நல்ல வேலையில் இருக்கிறான். இன்றும் அந்த ஆசிரமத்திற்கு உதவியாக பல உதவிகளை செய்து கொண்டிருந்தான்.

 

அவனது தாய் தந்தை பற்றி கேட்டவளுக்கு பதிலாக, இருவருமே ஒரு விபத்தில் இறந்து விட்டதாக கூறி இருந்தான்.

 

இதோ இத்தனை கதைகளையும் தனது பெற்றோர்களிடம் கூறினாலும் சம்மதிப்பார்கள் தான்.. ஆனால் ஏதோ அவளது மனதை நெருடிக் கொண்டிருந்தது.

 

எந்த ஒரு காரணத்திற்காகவும் அவள் அர்ஜுனை இழக்க தயாராக இல்லை. தாய் தந்தை ஒப்புக் கொண்டாலும், அவளது அண்ணன் ஆதிதேவ் சம்மதம் கூற வேண்டுமே. அனைத்தும் சரியாக இருக்கும் ஒரு ஆடவனை தான் அவளுக்கு தேர்ந்தெடுப்பான் என்பது நன்றாக தெரியும். அப்படி இருக்கையில் அர்ஜுன் தாய் தந்தை இல்லாமல் வளர்ந்து வந்தது தெரிந்தால் கண்டிப்பாக சம்மதம் கூற மாட்டான் என  அவளே ஒரு முடிவிற்கு வந்து விட்டாள் பார்கவி.

 

இதற்கிடையில் பிறை கிளம்பும் பொழுது, அண்ணியிடம் அவளது காதலை பற்றி கூறி இருந்தாள் பார்கவி. பார்கவி காதலிக்கிறேன் என்றவுடன் தனது கணவனை நினைத்து பயந்தவள்.. ” இது உங்க அண்ணனுக்கு தெரியுமா பாரு” என்று தான் முதலில் கேட்டிருந்தாள்.

 

” இல்ல அண்ணி வீட்ல யாருக்கும் தெரியாது.. நான் சொல்லல.. இனிமே தான் சொல்லனும். ஆனால் சொன்னாலும் ஓகே சொல்லுவாங்களான்னு தெரியாது.. அதுனால தான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் ”

 

பார்கவியின் பேச்சை கேட்க கேட்க பிறைக்கு சற்று பயமாக தான் இருந்தது.

 

” என்ன சொல்லுற என்ன முடிவு ”

 

” அது.. வந்து.. வீட்ல.. ” என பார்கவி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மீனாட்சி உள்ளே வந்து விட்டார்.

 

” ஊருக்கு போயிட்டு வந்ததும் ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் வேணாலும் பேசுங்க.. இப்போ நேரம் ஆச்சு.. சீக்கிரம் வா பிறை கிளம்பு” என மருமகளை கையோடு அழைத்து கொண்டு சென்றார் மீனாட்சி.

 

முழுதாக எதையும் கேட்காமல் பாதியில் வந்து விட்டாள் பிறை. ஆனால் பார்கவி விஷயத்தை நினைக்கும் போதெல்லாம் மனதில் ஏதோ ஒன்று சரி இல்லாததை போல தோன்றும். ஆனால் வெளியில் சொன்னால் பிரச்சனை ஆகி விடுமோ என்ற பயத்தில் ஊரில் இருந்து வந்ததில் இருந்து அமைதியாக இருக்கிறார். ஒன்று சகஜமாக அவளிடம் பழகும் மீனாட்சியிடம் கூறி இருக்க வேண்டும்.. இல்லையென்றால் கணவனிடம் பேசி இருக்கலாம்.. ஆனால் விதி ?

 

பிறைக்கு காதல் விஷயம் தெரியும் என்பதால் தான் .. நேற்று அவளது அண்ணன் வந்து கதவை தட்டி கேட்கும் போது பார்கவி பயந்து போனது. பிறை எதையும் கூறி விட்டாளோ என பதறிப் போனாள்.

 

தற்போது இதையெல்லாம் நினைத்து மருகிக் கொண்டிருந்தாள் பார்கவி. வீட்டை நினைக்கயில் நெஞ்சம் கலங்கியது. இருந்தாலும் அர்ஜுன் வேண்டுமே.. ஒரு முடிவோடு பையை தூக்கிக் கொண்டு கிளம்பி இருந்தாள்.

 

அவளுக்காகவே அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் காத்திருந்தது ஒரு வண்டி. ” பாரு.. சர்ச் பக்கத்தில ஒரு கார் இருக்கு.. வண்டி நம்பர் 4545 .. இதுல ஏறி வா.. நானும் வந்திருப்பேன் ஆனால் உங்க அண்ணன் எப்படியாவது கண்டு பிடிச்சு வந்துட்டா என்ன பண்ணுறது.. அதான் உன்ன மட்டும் வர சொன்னேன்.. ” என்றவனின் பேச்சில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு கிளம்பி இருந்தாள் பார்கவி.

 

அவன் கூறுவதும் உண்மை தானே.. சின்ன துப்பு கிடைத்தாலும் அவளது அண்ணன்  கண்டு கொள்வான்.. அதனால் வண்டி நம்பரை பார்த்தவுடன் அதில் ஏறி சென்றிருந்தாள் பார்கவி.

 

இதோ கோவிலில் அழகாக பொங்கல் வைக்க தயாராகிக் கொண்டிருந்தார்கள். பிறை எடுத்து வந்த தண்ணீரை வைத்து  விட்டு , நெருப்பு மூட்டி பானையை வைக்க.. அவள் பின்னே வந்து நின்றான் ஆதிதேவ்.

 

” இதே யூனிபார்ம்ல வந்துட்டியா.. சம்மந்தி உனக்கு டிரஸ் வாங்கி வச்சிருக்காரு.. போய் கோவிலுக்கு பின்னாடி மாத்திட்டு வா ஆதி ” திவாகர் கூறவும் மறுப்பேதும் கூறாமல் அமைதியாக உடையை மாற்றிக் கொண்டு வந்தான் ஆதிதேவ்.

 

சந்தன நிறத்தில் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் முறுக்கிய மீசையோடு வந்து நிற்கும் கணவனை கண் இமைக்காது பார்த்தவள்.. தலை முதல் கால் வரை ரசித்து வைத்தாள்.

 

மனைவியின் பார்வை தீண்டலில் உருகிப் போனவனுக்கு காது மடல்கள் எல்லாம் சிவக்கத் தொடங்கியது.

 

கலைந்து வைத்த அரிசியை எடுத்து கடவுளை வேண்டிக் கொண்டு பானையில் போட்டாள் பிறை. எல்லாரும் மனமுருக கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்கள்.

 

பின் அரை மணி நேரத்தில் பொங்கல் வைத்து, சாமிக்கு படைத்து விட்டு, அங்கேயே பொங்கலை உண்டு விட்டு வீட்டிற்கும் கிளம்பி இருந்தார்கள்.

 

காரில் வந்த ஆதியின் நண்பன் சரண் … ஆதிதேவ் கூறிய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வரவும் சரியாக இருந்தது. அனைவரும் வீட்டை நோக்கி பயணித்தனர்.

 

அகிலாண்டேஸ்வரி , கோவிலில் போலீஸ் உடையில் வந்திருந்த ஆதியை பார்த்ததும் வாயை மூடிக் கொண்டவர் தான், அதன் பின் அவன் இருந்த திசை பக்கம் கூட திரும்பவில்லை.

 

வீடு வந்து சேர்ந்ததும்.. மகளுக்காக வாங்கி வைத்த சீர்களை எல்லாம் அடுக்க தொடங்கினார் சிவானந்தம்.

 

” திடீர்னு அங்க கல்யாணம் நடந்ததுல ஒன்னும் பண்ண முடியல சம்மந்தி.. ஆனால் என் மகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்யனும் இல்லையா.. இதெல்லாம் என் மகளுக்கு தான்.. ” என நடுக்கூடம் முழுவதும் சாமான்களை பரப்பி வைத்திருந்தார்.

 

” இது என் மகளுக்கு சேர்த்து வைத்த நகை.. 150 பவுன்.. ” என அதையும் அங்கு வைத்தவர்..  ரொக்கமாக பத்து லட்சம் ரூபாய் அவளது வங்கிக் கணக்கில் இருப்பதாக கூறி இருந்தார்.

 

அதோடு மாப்பிள்ளைக்கு பிடித்த வண்டியை வாங்கிக் கொள்ளும் படி காசை கொடுக்க.. ஆதி அதை மறுத்திருந்தான்.

 

” இதுவரைக்கும் நீங்க செஞ்சது எல்லாம் உங்க பொண்ணுக்கு மாமா.. நீங்க விருப்பப்பட்டு செய்றீங்க.. நாங்க தடுக்கல.. ஆனால் எனக்கானதை எல்லாம் நானே வாங்கிப்பேன்.. அவளுக்கு சேர்த்து தான்.. ஆனால் இதெல்லாம் உங்க ஆசை.. அதுனால நான் தடுக்கல.. மத்தபடி எனக்கு எதுவும் வேண்டாம் ” என்ற ஆதியை பெருமையாக பார்த்தனர்.

 

அகிலாண்டேஸ்வரிக்கு தான் எரிந்து கொண்டிருந்தது. சிவகாமி கண்ணில் விரலை வைத்து ஆட்ட வேண்டும் என்ற கனவு கோட்டையை மண்ணாக்கி இருந்தான் ஆதி.

 

பின்னே தனது சொந்த பேரனை வீட்டிற்குள் வர வைத்து, இவர்களை எல்லாம் ஒரு ஆட்டு ஆட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவரின் கனவில் மண்ணை போட்டிருந்தான் ஆதிதேவ்.

 

” இதெல்லாம் நீங்க ஊருக்கு போகும் போதே எடுத்துட்டு போயிடுங்க சம்மந்தி.. பிறையை அவரு எப்படி அழைச்சிட்டு போகனும்னு நினைக்கிறாரோ அவ அப்போ வரட்டும்.. ” என்றதும்.. பெரியவர்கள் இருவரும் தலை அசைத்தார்கள்.

 

பின் வீட்டில் வந்து மதிய உணவை சமைக்க சென்ற சிவகாமியை தடுத்திருந்தான் ஆதிதேவ்.

 

 

” என்ன மாப்பிள்ளை முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்கீங்க.. நான் சமைச்சா தானே நல்லா இருக்கும்.. ” சிவகாமி தயங்கினார்.

 

” அதுனால என்ன அத்தை.. நீங்க சமைச்சு தானே இனிமே நான் சாப்பிட போறேன்.. இன்னைக்கு ஒரு நாள் நான் ஆர்டர் பண்ணுறேன்.. கடையில இருந்து பிரியாணி வாங்கிட்டு வர சொல்லியிருக்கேன்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்திடும்.. எவ்வளவு வேலை தான் செய்வீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. நம்ம எல்லாரும் இன்னைக்கு பிரியாணி சாப்பிட்டுக்கலாம் ” என்ற மருமகனை கண் இமைக்காமல் பார்த்திருந்தார் சிவானந்தம்.

 

” அது.. மாப்பிள்ளை ” என சிவகாமி ஏதோ கூற வர.. அதற்குள் பிரியாணியோடு வந்திருந்தான் சரண்.

 

” இவன் என் பிரெண்ட் சரண்.. இவனும் என் டிபார்ட்மெண்ட் தான்.. சிபிஐ ” என அறிமுகம் செய்து வைத்தான்..

 

மீனாட்சி திவாகருக்கு முன்பே அவனை தெரியும் என்பதால் நல விசாரிப்புகளிடம் உள்ளே அழைத்தனர். மீனாட்சி வந்ததும் அவனுக்கு பொங்கல் வைத்து கொடுத்தார். பின் இளநீர், வீட்டில் சுட்ட அதிரசம், முறுக்கு என வகை வகையாக அடுக்கினார்.

 

” கொடுத்து வச்சவன் டா நீ.. மாப்பிள்ளை தோழனுக்கே இந்த கவனிப்பு.. அப்போ மாப்பிள்ளைக்கு ” என நண்பனின் காதில் கிசுகிசுத்தான் சரண்..

 

” மூடிட்டு திண்ணு டா.. நானே என் பொண்டாட்டி கூட தனியா இருக்க முடியாத கடுப்புல இருக்கேன்.. அவ என் மேல கோபத்துல இருக்கா டா.. ”

 

” நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா மச்சான் ”

 

” மூடிட்டு இருந்தாலே போதும் .. நான் சொன்ன வேலை என்னாச்சு ”

 

” அதெல்லாம் கச்சிதமா முடிச்சுட்டேன் ” சரண் விரலை உயர்த்தி காட்ட.. அதன் பின்பு தான் சற்று நிம்மதியாக இருந்தான் ஆதிதேவ்.

 

பிரியாணி வீடெங்கும் மணமணக்க .. ” எடுத்து வச்சு சாப்பிடலாம் வாங்க ” என அனைவருக்கும் வாழை இலையை நறுக்கிக் கொண்டு வந்தார் சிவகாமி.

 

அதற்குள் சேலையை மாற்றி .. சாதாரண தாவணியில் வந்திருந்தாள் பிறைநிலா.

 

” என்னமோ சேலையை விட இந்த தாவணியில சின்ன பொண்ணா அழகா இருக்க பிறை மா ” மீனாட்சி புகழ..

 

” என்ன டா ஸ்கூல் படிக்கிற பொண்ணை எதுவும் கல்யாணம் பண்ணிட்டியா.. தங்கச்சி இவ்வளவு சின்ன பொண்ணா இருக்கு ” சரண் காதை கடிக்க.. அவனை முறைத்திருந்தான் ஆதிதேவ்.

 

பின் அனைவருமாக உணவுண்ண அமர்ந்து விட.. அகிலாண்டேஸ்வரி மட்டும் உண்ணாமல்  பசியில் அமர்ந்திருந்தாள்.

 

” மா நீங்களும் வாங்க ” சிவானந்தம் அழைக்க..

 

” எனக்கு தான் பிரியாணி சாப்பாடு பிடிக்காதுன்னு தெரியும்ல.. ஏய் சிவகாமி.. போய் எனக்கு தக்காளி ரசம் வச்சு, உருளைகிழங்கு மசாலா , அப்பறம் பருப்பு பாயாசம் பண்ணு டி ” மகனிடம் ஆரம்பித்து, மருமகளிடம் அதிகாரத்தை காட்டி இருந்தார் அகிலாண்டேஸ்வரி.

 

சட்டென எழ போன சிவகாமியை ” உட்காருங்க அத்தை.. சாப்பிட உட்கார்ந்துட்டு, எழுந்து போறது என்ன பழக்கம்.. அவங்களுக்கு தேவையானதை அவங்களே சமைச்சு சாப்பிடட்டும்.. இல்லைனா இதுல வெள்ளை சாதமும் , ரசம், பொரியல் எல்லாம் இருக்கு. வேணும்னா வந்து சாப்பிடட்டும்.. நீங்க இன்னைக்கு சமைக்க வேண்டாம்னு தான் வாங்கிட்டு வர சொன்னேன்.. திரும்ப நீங்க போனா என்ன அர்த்தம் ” அவ்வளவு தான் மருமகனின் வார்த்தைக்கு மீறி ஒரு இஞ்ச் நகர முடியாமல் அமைதியாகி போனார் சிவகாமி.

 

சிவானந்தம் கூட இந்த சூழலில் எதுவும் பேசவில்லை. பெற்ற அன்னைக்காக சமைத்து பரிமாற வேண்டியது இவர்களது கடமை தான். ஆனால் அதிகாரம் செய்து சாப்பிடும் அளவிற்கு இங்குள்ளவர்கள் தாழ்ந்து போய் விடவில்லை.

 

புது மருமகனின் பேச்சை கேட்டு ஆடும் மருமகளை தீயாக முறைத்தவர்.. எழுந்து சென்று விட்டார்.

 

” என்ன ஆதி.. பெரியவங்க.. இப்படித்தான் பேசுறதா ” திவாகர் கேட்டதும்..

 

” பெரியவங்க மாதிரி நடந்துகிட்டா.. எல்லா மரியாதையும் தானா வரும் பா.. அவங்க கெட்டவங்கன்னு நான் சொல்லல.. அவங்க கொஞ்சம் மாறனும்.. அதுக்காக ஸ்டெப் தான் இது.. அப்பறம் உங்களுக்கு எதுவும் வருத்தமா மாமா ” என மாமனாரை கேட்டதும்.. அவர் அவசரமாக மறுத்திருந்தார்.

 

” நான் அந்த காலத்திலேயே இதெல்லாம் பண்ணிருக்கணும் மாப்பிள்ளை.. என் தப்பு தான்.. இப்போ எங்களுக்கு மகன் ஸ்தானத்தில இருந்து நீங்க பண்ணுறீங்க.. ”

 

” கண்டிப்பா அவங்களுக்கு பசிக்கும்.. அவங்களே வந்து சாப்பிடுவாங்க.. நீங்க நிம்மதியா சாப்பிடுங்க ” என அனைவரும் எடுத்து வைத்து கொள்ள.. பிறை நடப்பதை எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்தாள்.

 

‘ ஊருக்கு தான் உபதேசம்.. கட்டுன பொண்டாட்டிய தாலி கட்டுன கையோட அனுப்பி விட்டுட்டு பேச்சை பாரு ‘ என மனதிற்குள் வறுத்துக் கொண்டிருந்தாள்.

 

அங்கே அர்ஜுன் சொன்ன காரில் ஏறி புறப்பட்டு, ஒரு ஹோட்டலை அடைந்தவள், பின் அரை மணி நேரத்திற்கு பிறகு விமானம் மூலம் தமிழ்நாட்டை விட்டு பறந்திருந்தாள் பார்கவி.  விமானம் ஏறிய பார்கவியின் எண்ணங்கள் எல்லாம் அவனிடம் காதல் சொன்ன தருணங்கள் எல்லாம் கண் முன் படமாக விரிந்தது.

 

எத்தனை தைரியம்.. எங்கிருந்து வந்தது ?? காதல் … காதல் மட்டுமே..  காதல் வாழவும் வைக்கும், அதே வாழ்க்கையையை இழக்கவும் வைக்கும்.. பார்கவி எதை நோக்கி போகிறாள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
21
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்