Loading

உறங்கிக்கொண்டிருப்பானென எண்ணி அமர மகரந்தனின் அறைக்குள் நுழைந்த தேவஸ்மிதாவிற்கு அவனது அழுத்தப் பார்வை திகைப்பைக் கொடுத்தது.

அவனை மார் மீது சாய்ந்து கதறி அழத் தோன்றிய கண்களை முயன்று அடக்கியவளுக்கு, அவனைக் காணவே ஏதோ ஒன்று தடுத்தது.

எப்போதும் எதையும் நேரடியாகப் பேசித் தீர்ப்பவள்! அவன் விஷயத்தில் மனம் நிர்மூலமாய் இருப்பது போலொரு உணர்வு!

வார்த்தைகளில் விவரிக்க இயலா தவிப்பு ஒரு புறமும், இத்தனை நாட்களும் அவனுக்கு என்ன ஆகுமோ எனப் பயந்து துடித்தது ஒரு புறமும் அவளை விட்டுப் போகாமல் அலைக்கழித்தது.

பேச வார்த்தை தேடுவது இதுவே முதன்முறை! அவளை விசித்திரமாகப் பார்த்த அமர மகரந்தன், “இப்போ பெயின் எப்படி இருக்கு?” எனக் கேட்டான்.

தான் கேட்க வேண்டியதை அவன் கேட்கிறானே என மானசீகமாக தன்னை அறைந்து கொண்டவள், “பரவாயில்ல, உங்களுக்கு எப்படி இருக்கு… தலை வலிக்குதா?” இதைக் கேட்பதற்குள் வெகுவாய் ஆட்டம் கண்டு விட்டது இதயம்.

அவளையே கண்ணெடுக்காமல் ஆராய்ந்தவன், “ம்ம் வலிக்குது.” என்று விட, அவள் தான் கையைப் பிசைந்தாள்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. “நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் வெளில இருக்கேன்.” என்று நகரப்போனவளை அவனது குரல் தடுத்தது.

“நீயும் ரெஸ்ட் எடுக்கணும்.”

“என் ரூம்க்கு போறேன் அமர்”

“ஏன் மறுபடியும் கண்ணாமூச்சி விளையாடவா? வா இங்க” என்று அழைத்தவனது தொனி கோபமா, அடிபட்டதனால் உண்டான இரக்கமா என்று புரியவில்லை.

அவன் அருகில் சென்றால் தன்னை மீறி அவனிடம் பாய்ந்து விடுவோமென்று புரிய, “இல்ல அமர் நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் இங்க உட்காந்து இருக்கேன்.” என்று அந்த அறையில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து கொள்ள, அமர மகரந்தன் அவள் மீது தீப்பார்வை வீசினான்.

அந்நேரம் தாதியர் வந்து அவளைக் காப்பாற்றிட, அவளுக்கு கட்டைப் பிரித்து வேறு கட்டுப் போடப்பட்டது.

கண்ணை இறுக்கி மூடி வலியை அடக்கிக்கொண்டவளுக்கு மருந்தின் வீரியம் குறைய குறைய அதிகம் வலி எடுத்தது.

சட்டென தனது கையை யாரோ பிடிப்பது போல இருக்க, தன்னவனின் ஸ்பரிசம் உணர்ந்ததும் விழிகளைத் திறந்தாள்.

அமர் தான், ஏறிக்கொண்டிருந்த க்ளுகோஸை நிறுத்தி விட்டு, அவளருகில் வந்திருக்கிறான்.

தாதியர் “சார் இப்படி எல்லாம் பாதில நிறுத்தாதீங்க” என்று கடிந்து கொள்ள அதனைக் காதில் வாங்காதவன், “இவளுக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணி முடிங்க.” என்றிட,

தேவஸ்மிதா தான், “அமர் நீங்க ஏன் வந்தீங்க” என்றாள் பதற்றமாக.

“உஷ்…” வென்பிளான்ட் அணிந்த கையால் அவள் வாயை மூடியவன், “ஒழுங்கா உட்காரு அப்போ தான் ட்ரெஸ்ஸிங் பண்ண முடியும்” என்று அவளுக்கு மறுகட்டுப் போட்டு முடிக்கும் வரை அவள் முகத்தை நெஞ்சில் புதைத்துக் கொண்டான்.

அவனது அண்மை கொடுத்த தைரியமோ என்னவோ அதன்பிறகு வலி கூட தெரியவில்லை அவளுக்கு.

அமர் சிரத்தையாக தாதியரிடம், “எப்போ கட்டு பிரிக்கலாம்?” எனக் கேட்க,

“உங்களுக்கு ஒரு மாசம் வரை கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் சார். அதுக்கு அப்பறம் தான், கட்டுப் பிரிக்கிறதை பத்தி டாக்டர் சொல்லுவாங்க” என்றதும், “நான் எனக்கு கேக்கல இவளுக்கு கேட்டேன்.” என்றான்.

“அவங்களுக்கு இன்னும் ரெண்டு நாள்ல பிரிச்சுடலாம். தண்ணி படாம பாத்துக்கோங்க.” என்ற தாதியர் இருவரையும் நமுட்டு நகையுடன் பார்த்து விட்டுச் செல்ல, தேவஸ்மிதா இன்னும் அவன் மார்பின் மீதிருந்து நகன்ற பாடில்லை.

உதட்டுக்குள் பூத்த புன்னகையுடன் அவள் கூந்தலை வருடி விட்ட அமர மகரந்தன், “தலை வாரி எவ்ளோ நாள் ஆகுதுடி? அடிபட்டப்ப போட்டுருந்த பின்னலை இன்னும் மாத்தாத மாதிரி இருக்கு.” என்றிட, ‘இதைக் கூடவா கவனித்தான்’ என்ற ரீதியில் நிமிர்ந்தவள், பதில் சொல்லாமல், “பெட்ல படுங்க அமர். இனி இப்படி ட்ரிப்ஸை பாதில நிறுத்தாதீங்க.” என்று கண்டித்தாள்.

“நீ வந்துருந்தா, இவ்ளோ பிரச்சனை இல்லை…”

“நான் வந்ததுனால தான இவ்ளோ பிரச்சனை” மெல்லிய குரலில் அவள் முணுமுணுக்க அவன் புருவம் சுருக்கினான்.

“தேவா!” அமர் ஏதோ கூறும் முன், சிந்தியாவும் நெறிவாணனும் அறைக்குள் நுழைந்தனர்.

தயானந்தன் தான் இத்தனை நேரமும் அவர்களை உள்ளே செல்ல விடாமல் பிடித்து வைத்திருந்தான்.

“ரெண்டு பேரும் அடிபட்டு இருக்கும் போது துணைக்கு யாரும் இல்லாம எப்படி இருக்குறது மாப்பிள்ளை. எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து பேசிக்கட்டும்” என்று அடம்பிடித்த சிந்தியாவை சமாளிப்பதற்குள் போதும் போதுமென ஆகி விட்டது.

பின் அவன் பேச்சைக் கேளாமல் இருவரும் அறைக்குள் நுழைந்து விட்டு, இருவரின் கோலம் கண்டு திகைத்தனர்.

‘உடல்நிலை சரி இல்லாத நேரத்தில் இப்படி மெனக்கெட்டு பேச வேண்டுமா’ என்று கடுப்பில் சிந்தியா, “அறிவிருக்கா ரெண்டு பேருக்கும்? ஒழுங்கா ரெஸ்ட் எடுக்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க. அமர் பெட்ல போய் படு. தேவா உன் ரூம்க்கு போ. உனக்கு இங்க அட்மிஷன் போட்டு, உன் ரூம்க்குள்ள நாங்க மட்டும் தான் இருக்கோம். நீ எப்போ பார்த்தாலும் இந்த ரூம் வாசல்ல தான் வாட்ச்மேன் வேலைப் பாக்குற. உன் புருஷனை யாரும் களவாடிட்டுப் போய்ட மாட்டாங்க. நாங்க அவனுக்கு காவல் காத்துக்குறோம். நீ போ முதல்ல” என்று மருமகளை அதட்டினார்.

‘இப்படி போட்டு உடைத்து விட்டாரே’ என்றே ரீதியில் அவள் மாமியாரை முறைக்க, அமர் இரு புருவத்தையும் உயர்த்தி அர்த்தப்பார்வை வீசினான்.

—-

இப்போதெல்லாம் மகிழினி மகேஷிடமே அதிகம் இருக்கிறாள். மைதிலி பூபாலனிடம் மன்னிப்பு வேண்டி இருக்க, அவர் அந்த மன்னிப்பைக் கூட அவளைக் கேட்க விடவில்லை.

“என் பொண்ணுங்க என்னை புருஞ்சுக்காம பேசுனா, நான் கோபப்படுவேனா என்னமா நீ” என்று வருந்திட, அவளுக்குத்தான் இப்படிப்பட்ட மனிதனை இத்தனை நாட்கள் எப்படி தூற்றி இருக்கிறோமென்று வருத்தமாக இருந்தது.

திவ்யஸ்ரீ இன்னும் மகேஷிடம் சரியாகப் பேசவில்லை. கொஞ்சம் வருத்தம் இருந்தது. மகேஷ்தான் ஒவ்வொரு நாளும் அவளை சமாதானம் செய்வதையே முழு நேர வேலையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அது அவளுக்கும் பிடித்திருக்க, கோபம் குறைந்தாலும் மகேஷை பாடாய் படுத்திக்கொண்டிருந்தாள். அது புரிந்தவனும், கெஞ்சலை கொஞ்சலாக்கி மனையாளை தன்வசமாக்கி இருந்தான்.

தயானந்தன் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக அல்லோலப்பட, வீட்டிலிருக்கும் சிறிது நேரமும் மகளைக் கொஞ்சவும், அக்கா மகனை தூக்கவும், மகிழினியின் கேள்விக்கெல்லாம் பதில் கூறியுமே கழிந்தது. மனையாளிடம் தனியே பேச வழியும் இல்லை. அப்படியே தனிமை கிடைத்தாலும், தமையனைப் பற்றியும் அவளது உடல்நிலை பற்றியும் குழந்தையைப் பற்றியும் பேசியே நாள் செல்ல, ‘இது என்னடா நமக்கு வந்த சோதனை’ என்றிருந்தது அவனுக்கு. இருப்பினும் அவளிடம் மனம் விட்டுப் பேசும் நாளுக்காகக் காத்திருந்தான்.

மிருணாளினியை தன் வீட்டிற்கு தான் அழைத்துச் சென்றிருந்தான். சிந்தியாவால் மகனையும் மருமகளையும் பார்த்தது போக, இவளையும் வீட்டில் இருந்து பார்ப்பது இயலாத காரியம். தயாவின் வீட்டில் இருந்து மருத்துவமனை சிறிது பக்கமாதலால், மாமியார் மாமனாரையும் அவர்கள் தேறி வரும் வரை தனது வீட்டிலேயே இருக்க வைத்து விட்டான். அதனால், மாறி மாறி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும், மருத்துவமனைக்குச் சென்று வருவதிலும் கழிந்தது.

மகிழினி விடிந்ததுமே “தாத்தா வீட்டுக்குப் போகணும்” என்று அடம்பிடிக்க வேறு வழியற்று மைதிலியும் காலையில் கொண்டு வந்து தமையனிடம் விட்டு விடுவாள். பின் அவள் அலுவலைப் பார்த்து விட்டு, மருத்துவமனைக்குச் சென்று விடுவாள்.

அமர் தேறி வரும் வரை, தனக்கெனவென்று தன் வேலையைப் பார்க்கப் போக அவளுக்கு மனமில்லை. சும்மாவேனும் மருத்துவமனையில் வந்து அமர்ந்து விடுவாள். தன்னுடனே வந்து இருக்கும் படி மகேஷ் கூறியதற்கும் மறுத்து விட்டாள்.

பிரஷாந்த்திற்கும் தினசரி வேலையே மருத்துவமனைக்கு வந்து அமரிடம் எதையாவது பேசி அவனது முறைப்பை வாங்கிக்கொள்வது தான். அதிலும் தயானந்தனும் பிரஷாந்த்தும் இணைந்து விட்டால், கலகலப்பிற்கு பஞ்சமே இருக்காது.

அதெல்லாம் போக, மைதிலியை கண்ணில் நிரப்பிக்கொள்ளவேனும் அவள் வரும்நேரத்தில் அவனும் ஆஜராகி விடுவான்.

அன்று திவ்யஸ்ரீ, பிரஷாந்த், மிருணாளினி, தயானந்தன், மைதிலி, தேவஸ்மிதா அனைவரும் அமரின் அறையில் குழுமி இருக்க, அமரின் பார்வை தேவாவிடமே சுற்றி வந்தது.

பின் மிருணாவிடம் “பாப்பா எங்க மிரு?” எனக் கேட்க, “தூங்கிட்டு இருக்காண்ணா. அதான் அந்த கேப்ல உன்னை பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்துட்டேன்.” என்றதில்,

“அவள் தூங்குறப்ப தான் உனக்கே ரெஸ்ட் கிடைக்கும். ஏன்டா அலையுற. நான் நல்லா தான இருக்கேன்” என்றான்.

“நீ வீட்டுக்கு வர்ற வரை எனக்கு நிம்மதியே இருக்காதுண்ணா.” அவன் சோகத்துடன் கூறியதில்,

தயானந்தன் தான், “எதே! நைட்டெல்லாம் குழந்தை அழுதுன்னு என் மம்மி என்னையும் அடிச்சு எழுப்பி விடுறாங்க. ரூம்க்குப் போனா இவள் முறைக்கிறா. அதை விட உங்க அம்மா, என்னமோ என்னைப் பார்த்தா புள்ள பாலே குடிக்காதுன்ற ரேஞ்சுக்கு என்னையவே என் பொண்டாட்டியை பார்க்க விட மாட்டுறாங்க.” என்று புலம்பித் தள்ள, மிருணாளினி பல்லைக்கடித்து எழுந்த சிவப்பை அடக்கிக்கொண்டு “தயா” என்று அடிக்குரலில் கடிந்தாள்.

அவள் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தது தெரியாமல் முந்தைய இரவு தயா அறைக்குள் நுழைந்து விட்டான்.

மாமியாருக்கும் மனையாளுக்கும் தன்னறையை தானம் செய்து விட்டு, அவனும் நெறிவாணனும் தேவாவின் அறையில் படுத்திருக்க, குழந்தை சத்தம் கேட்டதும் பதறி அடித்து ஓடி வரும் துர்கா, மகனை தான் முதலில் அடித்து எழுப்புவார். சரியென்று அவன் உள்ளே சென்று பார்க்க, அங்கு கணவனை எதிர்பாராமல் மிருணாளினி திருதிருவென விழித்ததில், சிந்தியாவோ பதறி அவனை வெளியில் அனுப்பி விடுவார்.

நடந்ததைப் புரிந்து கொண்ட அனைவரும் கமுக்கமாக சிரித்துக் கொள்ள, மிருணாளினிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அமர் மட்டும்
“விவஸ்தை கெட்டவன்” என்று கடுப்பாகி தயாவை முறைக்க, அதன் பிறகே வேதனையை வாய் விட்டு சொல்லி விட்டது புரிந்து அசடு வழிந்தான்.

பிரஷாந்த் அமைதியாக இராமல், “மேரேஜ் ஆகியும் இவ்ளோ சோகமா மச்சி… அப்போ என் நிலைமை எப்படி இருக்குமோ?” என்று வெகுவாய் வருந்திக்கொள்ள, “அது என்ன உன் நிலைமை?” என சந்தேகமாகக் கேட்டாள் தேவஸ்மிதா.

அதற்குள் மைதிலிக்கு போன் வந்ததில் அவள் வெளியில் சென்று விட, அவள் சென்ற திசையையே பார்த்திருந்தவன், “அவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னு ஐடியா குடுங்க மச்சி” என்று நண்பர்களைப் பார்த்து இளித்து வைக்க, அனைவரும் ஒரு நொடி திகைத்தனர்.

“ஆர் யூ சீரியஸ்?” தயா வியப்பாக வினவ, திவ்யஸ்ரீ தான், “கரெக்ட் பண்ற அளவு அறிவு இருந்தா, என் தம்பி தங்கச்சிங்க இந்நேரம் நாலு புள்ள பெத்துருக்குங்க.” என்று வாரி தேவா தயாவின் கோபத்திற்கு ஆளானாள்.

அமரோ, “தயா உன் ஃப்ரெண்டை மூடிட்டு இருக்கச் சொல்லு.” என்று முறைக்க, திவ்யஸ்ரீயும் “தேவா இவன் ஃபர்ஸ்ட் ஹாஃப்ல உன் புருஷன்கிட்ட அடி வாங்குனான். செகண்ட் ஹாஃப்ல என் புருஷன்கிட்ட தர்ம அடி வாங்கப்போறான்.” என்றதில், “என்ன திவா நீயும் கலாய்க்கிற” என்றான் பாவமாக.

அமர் தான், “என் தங்கச்சி புருஷன் செத்ததும் உன் வீட்ல அடிமையா இருக்கணும்ன்னு தான நினைச்ச. இப்போ என்ன திடீர்ன்னு புரட்சி பொத்துக்கிட்டு வருதோ?” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

அது பிரஷாந்த்தை அதிகமாய் காயப்படுத்தியது.

“போதும் அமர். அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கக்கூடாதுன்னு நான் யோசிச்சது இல்ல. என் அண்ணன் குழந்தையை என் வீட்ல இருந்து பெத்துக் குடுத்துட்டு எப்படியும் போகட்டும்னு தான் நினைச்சேன். அதுவும், அவளால என் அண்ணன் இறந்துட்டான், அவள் இன்னொரு லைஃபை எப்படி ஈஸியா அடாப்ட் பண்ணிட்டு போக முடியுதுன்ற கோபம் தான். நான் ஒன்னும் என் வீட்டாளுங்க மாதிரி சுயநலவாதி இல்லை. அது எனக்குத் தெரியும். நான் செஞ்சது பேசுனது தப்பு தான். அதை நான் நியாயப்படுத்தல. ஆனா, அந்த கோபத்தோட அடிப்படையே என் வீட்ல இருக்கறவங்க மேல நான் வச்சிருந்த கண்மூடித்தனமான நம்பிக்கை தான்.” என்றான் இறுகிய குரலில்.

மிருணாளினிக்கு தான் சங்கடமாக இருந்தது. “அண்ணி… பாப்பா எந்திரிச்சுடுவா. நம்ம வீட்டுக்குப் போகலாம்.” என்று திவ்யஸ்ரீயை அழைத்துக் கொண்டு அவள் வெளியில் செல்ல, தேவஸ்மிதா அமரிடம் கண்களால் கெஞ்சினாள்.

அதில் சற்று நிதானம் கொண்டவன், “மைதிலி பத்தி எல்லாமே தெரியுமா?” எனக் கேட்டான் அமைதியாக.

“ஓரளவு…” என்ற பிரஷாந்த் நிமிர்ந்து பாராமல் அவளைப் பார்த்த கணத்திலிருந்து ஏற்பட்ட தாக்கத்தை கூறிட, தயா தான், “ஆனா ரெண்டு பேரும் எதுல ஒற்றுமையா இருக்கீங்களோ இல்லையோ, அவசரக்குடுக்கைத் தனத்துல பி.எச்.டி வாங்கிடுவீங்க” என்று நக்கலாய் சிரிக்க, பிரஷாந்த் முறைத்தான்.

தேவாவோ, “அதெல்லாம் சரி… ஆனா அவளுக்கு ஒரு கொள்கை இருக்கே” என்று ஆரம்பிக்க,

“என்னது அவளுக்கும் கொள்கையா? என்னது?” என ஒரு மாதிரியாகக் கேட்டான்.

“அதாவது காண்டாமிருகம்… அவளுக்கு சம்சாரி வாழ்க்கைல விருப்பம் கிடையாதாம். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா தான் வாழ்வாளாம். ஆனா அவள் கல்யாணம் பண்ணிக்கப் போறவனுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கணுமாம். மகிக்குட்டிக்கு சிப்லிங் வேணுமாம், ஃபேமிலி என்விரான்மெண்ட் வேணுமாம். ஆனா அவளுக்குப் புருஷன் வேணாமாம்” என்று தெளிவாகக் கொள்கையை விளக்கிட, அவன் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல கசந்து போனது.

“இதுக்காக நான் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துட்டு பொண்டாட்டியைப் போட்டு தள்ளிட்டா வரமுடியும். ஹே இந்த மாதிரி ஐடியாலாம் உங்களுக்கு யார் குடுக்குறா. எங்களுக்குலாம் கல்யாணம் பண்றதே பெரிய கொள்கையா இருக்கு. இதுல அதுக்குள்ள ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டா, எங்களை மாதிரி அப்பாவி சிங்கிள் எல்லாம் யாரை கல்யாணம் பண்றது” என்று அமரிடம் பொங்கி விட்டான், அவளது தோழிக்கும் சேர்த்து.

அமரோ தலையணையை அவன் மீது விட்டெறிந்து “அப்பாவி மூஞ்சியைப் பாருங்க. உங்க மூணு பேரை பார்த்தா அப்பாவி ஃபீல் வருதா கொஞ்சமாவது. வாய் கூசாமல் உன் பிரெண்டு என் தலைல மொளகா அரைச்சுருக்கா. அதை எவ்ளோ நேக்கா ஃபாலோ பண்ணி என்னை முட்டாள் ஆக்கி இருக்கா. இதுல அப்பாவியாம்…” என்றவனின் குரலில் இப்போது கோபம் இல்லை. கிண்டலே இருந்தது.

ஆனால், பாவம் அவள் தான் அதனை உணரவில்லை.

தயாவோ ‘மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தைத் தேடி ஓடுகிறது’ என்று புரிந்து பேச்சை மாற்ற, “நல்லவேளை என் நல்லிக்கு இந்த மாதிரி கொள்கை எதுவும் இல்லை” என்று காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள, அமர் தான் சிரிப்பை அடக்கிக்கொண்டு “அவளுக்கு பெரிய கொள்கையே உனக்கு ஓகே சொல்ல கூடாதுன்றது தான்.” என்றதில் தயா கண்ணைச் சுருக்கி முறைத்து வைத்தான்.

அதில் பிரஷாந்த் தொப்பி தொப்பி என அமருக்கு ஹைஃபை  கொடுத்துக் கொள்ள, அங்கு சிரிப்பலை பரவியது.

மீண்டும் உள்ளே வந்த மைதிலியின் முகத்தில் யோசனையின் சாயல்.

அது புரிந்தும் என்னவென அமர் கேட்கவில்லை. அவனால், மிருவிற்கு எதிராக அவள் செய்த காரியத்தை மறக்க இயலவில்லை. அருகிலேயே இருந்தாலும் கூட, அவளிடம் நேரடியாக அவன் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளவில்லை.

“என்ன மைதிலி?” தேவா தான் கேட்டாள்.

“பாண்டியனும் பூர்ணிமாவும் ஹாஸ்பிடல்ல இருக்காங்க. அங்க ட்ரீட்மெண்ட் முடிச்சு போலீஸ் அரெஸ்ட் பண்ணிடும். அட்டெம்ப்ட் மர்டர்ன்னு கேஸ் ஃபைல் பண்ணலாம்.  ஆனா அம்மாவை கொன்னதுக்கு இவங்க காரணம்ன்னு சொல்ல முடியாது… அப்படி சொல்லலைன்னா கேஸ் ஸ்ட்ராங்கா நிக்காது. அதான் என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன்” என்றாள்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு மைதிலி. அத்தையோட சாவுல இருக்குற மர்மத்தை வெளில கொண்டு வரணும்ல” என்று தயா வினவ,

“ஆமா தயா… ஆனா, அப்படி அம்மாவோட சாவுக்கு என் அப்பாவும் இவங்களும் தான் காரணம்ன்னு வச்சுக்கிட்டாலும், அப்பாவோட இறப்புல மகேஷ் மேல கண்டிப்பா சந்தேகம் வரும். அம்மாவைக் கொன்னதுக்காக பழி வாங்க அவன் அப்பாவை கொன்னான்னு ஈஸியா ப்ரூவ் பண்ண முடியும். ஏன்னா, மாமா செஞ்சாருன்ற எந்த ஆதாரமும் இல்ல. சோ ஆட்டோமேடிக்கா மகேஷ் மேல சந்தேகம் திரும்பிடும். இனிமேலும் இதுனால அவன் சஃபர் ஆக கூடாது. அதுக்காக அந்த பாண்டியனையும் பூர்ணிமாவையும் அப்படியே விடவும் முடியாது அதான் என்ன செய்றதுன்னு தெரியல.” என்றாள் குழப்பமாக.

“பேசமா அவங்களை போட்டு தள்ளிடலாம”: பிரஷாந்த் கோபத்துடன் உரைக்க,

“அதுலயும் பிரச்சனை இருக்கு பிரஷாந்த். கேஸ் இன்னும் முழுசா முடியாம நம்ம எது செஞ்சாலும் மகேஷ்க்கு எதிரா முடியலாம். எனக்கே அவங்க ரெண்டு பேரையும் கொன்னுப் போடுற அளவு கோபம் இருக்கு. ப்ச் ஆனா ஒன்னும் பண்ண தான் முடியல” என்றாள் சீறலை அடக்கியபடி.

அமரோ “இப்போ செஞ்ச தப்புக்கு எப்படியும் பத்து வருஷம் உள்ள தள்ளலாம் தான?” எனக் கேட்க,

“உள்ள போடலாம். ஆனா எதுவும் தில்லு முல்லு செஞ்சு வெளில வந்துடக்கூடாது. அம்மாவோட சாவு மர்மமாவே இருக்கட்டும். அதை வெளில கொண்டு வந்து மகேஷ்க்கு பிரச்சனையா முடிய வேணாம்” என்றவளுக்கு வேதனைப் பெருமூச்சு எழுந்தது.

தேவா தான் மைதிலியின் கையைப் பிடித்துக்கொண்டு, “விடு மைதிலி அதான் உன் அப்பாவுக்கு மாம்ஸ் பெரிய தண்டனை குடுத்துட்டானே. ஃபிரீயா விடு.” என்று ஆறுதல் கூற சரியென தலையசைத்தாள்.

நாட்கள் நகர்ந்தோட, அமருக்கும் தேவஸ்மிதாவிற்கும் உடல்நிலை தேறி வந்தது.

ஆனால் இருவருக்குள்ளும் இருக்கும் இரும்புத் திரையில் ஒரு மாற்றமும் இல்லை. அந்தத் திரையை அமர மகரந்தன் கிழிக்க முயலும் போதெல்லாம் தேவஸ்மிதா நாசூக்காக அவனை விட்டு விலகிக் கொண்டாள். பின் அவனும் முயல்வதை விட்டு விட்டான்.

இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்தார் சிந்தியா.

அமர் தான் புன்சிரிப்புடன், “நாங்க இப்போ தான் கல்யாணம் முடிஞ்சு வர்றோமாமா” எனக் கிண்டலடிக்க,

“கல்யாணத்து அன்னைக்கு தான் ஆரத்தி எடுக்கல. கண்ணேறு தான். அதான் இப்டி ஒன்னு மாத்தி ஒன்னு நடந்துக்கிட்டே இருக்கு” என்று தாயுள்ளம் வெதும்பியது.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. கண்டதை யோசிச்சு குழப்பிக்காதீங்க. ஆமா மிரு எங்க?” என்று வீட்டைச் சுற்றித் தேட, “அவள் அவளோட மாமியார் வீட்லல இருக்கா. மாப்பிள்ளைதான், கூட பொறந்தவளையும் மச்சானையும் நீங்க பார்த்துக்கோங்க, என் பொண்ணையும் என் பொண்டாட்டியையும் நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டாரு. என்னால மறுக்க முடியல அமர்.” என்றதும் “ஓ” என்றபடி அறைக்குச் சென்று விட்டான்.

தேவா அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு, அடுக்களைக்குச் சென்றாள்.

இருவருக்கும் பழச்சாறு தயாரித்துக் கொண்டிருந்த சிந்தியா, “நீ ரூம்க்கு போய் ரெஸ்ட் தேவா. நான் சமைச்சுட்டுக் கூப்புடுறேன்.” என்றிட, தேவா ஏதோ சொல்ல வந்து விட்டுப் பின் தயங்கினாள்.

அவளைப் புரியாமல் பார்த்தவர், “என்ன தேவா எதுவும் வேணுமா?” எனக் கேட்க, “அத்தை… வந்து… நான்” என்று திணறியவளைக் கண்டு அவருக்கு நெஞ்சடைப்பு தான் வரவில்லை.

தன்னைத் தானே கிள்ளிக்கொண்டவர், “என்ன ஒரு அதிசயம் என் மருமகளுக்கு தயக்கம், இங்கிதமெல்லாம் இருக்கா…” என்று கன்னத்தில் கை வைக்க, “ப்ச் அத்தை கலாய்க்காதீங்க” என்றாள் மெல்லப் புன்னகைத்து.

அதுவும் அவள் கண்களை எட்டவில்லை என்று குறித்துக் கொண்டவர், அமைதியாய் அவளைப் பார்க்க, “நான் என் வீட்டுக்குப் போய் இருக்கேன் அத்தை. இப்போ எனக்குப் பரவாயில்ல. அவருக்கும் ரெஸ்ட் வேணும். நீங்க தான் என்னையும் வேலை பார்க்க விடாம எல்லா வேலையும் பாக்குறீங்க…” என்று ஏதேதோ உளறினாள்.

“அப்போ இது உன் வீடு இல்லையா தேவா” சட்டென அவர் கேட்டு விட்டதில், அவள் பதில் கூறாமல் மௌனமானாள்.

அறைக்குச் சென்ற அமர், போனை காரிலேயே வைத்து விட்டதை உணர்ந்து கீழிறங்கி வந்தவன் இவர்களது உரையாடலைக் கேட்டு விட்டான்.

அடுக்களை வாசற்கதவில் சாய்ந்து, “என்னவாம்மா உங்க மருமகளுக்கு?” என ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க, அவர் இருவரையும் யோசனையை பார்த்து விட்டு, “அவள் வீட்டுக்குப் போறேன்னு சொல்றா அமர்.” என்றதும், ஒரு நொடி அவளை அழுத்தமாகப் பார்த்தான்.

திருமணமான சில மணி நேரங்களிலேயே, தனது வீட்டை தாய் வீடு என்றும், இதை அவள் வீடு என்றும் உரிமையாய் கூறியவளாகிற்றே!

அந்த உரிமையைப் பறித்ததும் அவன் தான் என்று புரிந்தது அவனுக்கு.

“தயாவை வந்து கூட்டிட்டுப் போக சொல்லுங்க” ஒரே வார்த்தையில் அவன் முடித்து விட, சிந்தியா தான் “என்ன அமர் இது? அவள் தான் ஏதோ சொல்றான்னா, நீயும்…” எனப் பதறிட,

“ம்மா… அவள் போகட்டும். அவள் வீடு அது. அவள் இஷ்டம். நான் மறுக்க முடியாது. மறுக்குற உரிமை எனக்கு இல்லை.” அவளைப் பாராமல் எங்கோ பார்த்தபடி அவன் கூறிட, பொங்கிய கேவலை மேலுதட்டைக் கடித்து அரும்பாடுபட்டு அடக்கினாள் தேவஸ்மிதா.

“அப்படி என்ன செஞ்ச அமர். இவள் இப்படி ஒரு முடிவு எடுக்க நீ தான் காரணமா இருக்கணும்.” என்று மகனைக் கடிந்து கொண்ட தாயை முறைத்தான்.

“ஆமா ஆமா உங்க மருமக ஒன்னும் தெரியாத அப்பிராணி. நான் வேணும்ன்னு எல்லா தில்லாலங்கடி வேலையும் பார்த்து, என்னை பொய் சொல்லி நம்ப வச்சு கல்யாணம் பண்ணவளுக்கு, அதை ஃபேஸ் பண்ணவும் தெரிஞ்சுருக்கணும். என் கோபத்தோட அளவைப் பத்தி தெரியாமையா கல்யாணம் பண்ணிருப்பா. அவளா வந்தா, அவளே என் வாழ்க்கையை சின்னாபின்னமாக்குனா, இப்போ அவளே போறா. போகட்டும்!” உடைந்த குரலை சரி செய்தபடி கம்பீரத்தை இழக்காமல் பேசி முடிப்பதற்குள் தளர்ந்து போனான் அமர மகரந்தன்.

“கோபப்பட்டு அவளை அவளோட வீட்ல விட்டவன், மறுபடியும் அவளைக் கூட்டிட்டு வந்தது மிருவுக்காக இல்லைன்னு அவளுக்குத் தெரியும். அவள் மேல கொலைவெறியே இருந்தாலும், கொஞ்ச நேரம் கூட என் ரூம்ல அவள் இல்லாத வெறுமையை ஏத்துக்க முடியல.

அவள் செஞ்ச தப்பையும் சரி, அந்த தப்பை உணர்த்துறேன் பேர்வழின்னு நான் செஞ்ச தப்பையும் சரி, ரெண்டையும் சரி செய்ய நான் செய்ற முயற்சியும் புரியாம இருக்குற அவள் அளவு முட்டாள் இல்லை. அதெல்லாம் தெரிஞ்சும் போறான்னா, போகட்டும். ஆஃப்டர் ஆல், ஐ ஜஸ்ட் ஹேட் ஹெர்.” கலங்கிய விழி நீர் வெளிவரும் முன் பக்கவாட்டில் திரும்பி பெருவிரலால் சுண்டிக்கொண்டவன், அங்கு நிற்க இயலாமல் அறைக்குச் சென்று விட்டான்.

அவன் சென்ற மறுநொடியே பிடித்து வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தது தேவஸ்மிதாவிற்கு.

அத்தியாயம் 42

சிந்தியாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. தேவாவிடம் மீண்டும் பேச வந்தவரிடம், “ப்ளீஸ் அத்தை…” என்று அவள் கெஞ்சலாகப் பார்க்க, என்ன நினைத்தாரோ “இது தற்காலிகமான முடிவா இருக்கும்ன்னு நம்புறேன் தேவா. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். நானே உன்னை விட்டுட்டு வரேன்.” என்றவர் கணவரிடம் விஷயத்தைக் கூறினார் வருத்தத்துடன்.

நெறிவாணனுக்கும் கவலை எழ, “என்ன சிந்து இது… மகள் வாழ்க்கை சரி ஆகிடுச்சேன்னு நிம்மதியானா இப்போ இவங்க ரெண்டு பேரும் இப்படி இருக்காங்க” எனப் பெருமூச்சு விட்டவர், “சரி கிளம்பு போயிட்டு வரலாம்.” என்று கிளம்பினார்.

அறையில் இருந்த அவளது உடைகள், அலுவலகப் பொருட்களை எல்லாம் ஒரு பெட்டியில் எடுத்து வைத்தவளை சோபாவில் அமர்ந்தபடி வெறித்திருந்தான் அமர மகரந்தன்.

அவனை நிமிர்ந்து பாராமல், “கரெக்ட் டைம்க்கு டேப்லட் சாப்பிட்டுருங்க. அடுத்த வாரம் ஒன்ஸ் ஹாஸ்பிடல் போய் செக் அப் பண்ணனும். நான் நேரா ஹாஸ்பிடல் வந்துடுவேன். நல்லா ரெஸ்ட் எடுத்தா தான் சீக்கிரம் கியூர் ஆகும். இன்னும் காயம் ஆறல அமர். சோ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. அதுவரை மாமா வேலையைப் பார்த்துப்பாங்க. நான் வீக்லி ஒன்ஸ் வந்து அக்கவுண்ட்ஸ் க்ளியர் பண்ணித் தரேன்னு சொல்லிருக்கேன். ஷோரூம் பத்தி யோசிக்காம, டேக் ப்ளென்டி ஆஃப் ரெஸ்ட்.” என்று தரையைப் பார்த்தே கூறியவள், அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல்,

“போறேன்” என்றாள் மொட்டையாக.

அவன் எதற்கும் பதில் கூறவில்லை. அவள் மீதிருந்த பார்வையை சற்றும் திருப்பவும் இல்லை. அவனது விழிகள் தன்னைத் துளைப்பதை உணர்ந்தவளுக்கு சில்லிட்டது.

முயன்று அவனைக் காண கண்களுக்கு தடை விதித்தவள், “குட் பை அமர்…” என்று கிளம்ப எத்தனிக்க, அப்போதும் அவன் தடுக்கவில்லை.

அப்பிரிவை அமைதியாய் ஏற்றுக்கொண்டான். அவ்வமைதி அவளை இன்னும் வலிக்கச் செய்தது.

கிளம்பியும் விட்டாள். தன்னைத் தேடி தேடி காதலித்தவள்… தனக்காக பல பொய்களை அள்ளி வீசியவள்… தன்னிடம் காதலைக் கொட்டத் துடித்தவள்… தனது காதலை வெளிக்கொணர தவித்தவள்…!

இப்போதோ அந்தக் காதலே வேண்டாமென தூக்கி எறிந்து விட்டுச் சென்று விட்டாள். அவன் தானே காரணம்! அவன் கூறிய கொடிய வார்த்தைகள் அவளை ஆழமாய் காயப்படுத்தி இருக்கும்.

அவள் மீதுள்ள தவறை பொறுமையாய் கையாண்டு இருக்கலாமோ? ஏற்கனவே தங்கையின் மணவாழ்வில் துவண்டிருந்தவன், ஒரு பொய்யால் அவள் வாழ்க்கையே கேள்விக்குறியாகியதில் வெந்து போனவனுக்கு, தன்னையும் அதே பொய்யால் காயப்படுத்தி விட்டாளே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் அவனது கோபமும் சுடு சொற்களும் வன்தீண்டலும்.

அன்றொருநாள், ‘என் காதலை காப்பாற்ற இன்னும் பத்து பொய்கள் வேண்டுமென்றாலும் கூறுவேன்’ என திவ்யஸ்ரீயிடம் துணிந்து பேசியவளுக்கு இன்று என்ன ஆனது என்றே தவிப்பு எழுந்தது. இருவரின் காதலும் அந்தரங்கத்தில் ஊசலாட, காரில் பயணித்துக் கொண்டிருந்த தேவஸ்மிதாவின் மனமோ ஊமையாக அழுதது.

வீட்டிற்குச் சென்று எப்போது தனிமை கிடைத்து குலுங்கி அழுதாவது தனது மனவேதனையை தீர்ப்போமென்ற நேரத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

அங்கு சென்றதும், துர்கா மகளைத் திகைப்பாக பார்த்து விட்டு, “இன்னைக்கு டிஸ்சார்ஜ்ன்னு சொன்னீங்க. வீட்டுக்குப் போகலையா?” என்று கேட்க,

சிந்தியா தான், “உன் பொண்ணுக்கு உன் கூட இருக்கணுமாம் துர்கா. அதான்…” என்றதில் அனைவரின் பார்வையும் தேவஸ்மிதாவின் மீது விழுந்தது.

அன்று வார விடுமுறை தினமாதலால் பிரஷாந்த் மைதிலியைத் தவிர அனைவருமே அங்கு குழுமி இருந்தனர். தயானந்தன் கையில் தனது குழந்தையை ஏந்தியபடி வர, “பாப்பா தூங்குதாடா?” எனக் கேட்டு வாங்கிக்கொண்டாள்.

மிருணாளினி தாய் தகப்பனை வரவேற்றிட, “நைட்டு பாப்பா தூங்குனாளா மிரு?” எனக் கேட்டார் சிந்தியா.

“இல்லம்மா பகல் முழுக்க தூங்குறா. நைட்டு முழுக்க முழிச்சு இருக்கா” எனப் பரிதாபமாகக் கூற, திவ்யஸ்ரீ, “அப்படியே அவள் தூங்குனாலும் நான் பெத்தது அழுது எழுப்பி விட்டுடுது அத்தை. பாவம் அவள் தூக்கம் தான் கெடுது. தயாவும் விடிஞ்சதும் தான் கொஞ்ச நேரம் தூங்குறான்.” என்றாள்.

தயா தான், “ஹே இதெல்லாம் இப்போ தான அனுபவிக்க முடியும். வளர்ந்துட்டா அப்பறம் ஆட்டோமேடிக்கா அவங்க உலகம் வேற ஆகிடும்.” என்றான் புன்னகையுடன்.

மிருணாளினிக்கு தான் அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. இரவு குழந்தைக்கு பசியாற்ற மட்டுமே தன்னை எழுப்புபவன், குழந்தை பால் குடித்து முடிக்கும் வரை பால்கனியில் அமர்ந்திருப்பான். பின் மீண்டும் குழந்தையுடன் நேரம் செலவழித்தே இரவைக் கழிப்பவன், விடிந்ததும் குழந்தையை உறங்க வைத்து விட்டே அவனும் சிறிது நேரம் உறங்குவான்.

தான் பார்த்துக்கொள்வதாக கூறி வீட்டினர் யார் வந்தாலும் விட மாட்டான். ஆனாலும் அவளுக்குப் பிடித்திருந்தது.

இரவு தூங்குவது போல பாவனை செய்து அவனைத் திருட்டுத்தனமாக சைட் அடித்துக் கொண்டிருப்பவளுக்கு, அவன் மீதான காதல் நாளுக்கு நாள் பெருகியது.

தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவனுக்கு அவள் என்ன செய்திட முடியும். தன் அப்பழுக்கற்ற காதலை தவிர அவனுக்கு வேறெதுவும் கொடுத்திட இயலாதே.

சிந்தியாவின் பேச்சு அவளது சிந்தனைகளை தடை செய்தது.

“பாவம் துர்கா. மாப்பிள்ளையும் ஆபிஸ் போகணும். நீயும் எப்படி ரெண்டு குழந்தைங்களை சமாளிச்சுட்டு, இவ்ளோ வேலையும் பார்த்துட்டு இருக்க முடியும். நான் வேணும்ன்னா மிருவை என் வீட்ல வச்சு பாத்துக்குறேன். கொஞ்சம் பாப்பா நைட்டு தூங்க பழகிட்டா கூட, உங்களுக்கு வேலை குறையும்ல.” என்று அவர்களுக்காக யோசித்துக் கூறிட,

“அது ஒன்னும் பிரச்சனை இல்லை சிந்து.” என்று துர்கா மறுக்கும் போதே, “நமக்கு பரவாயில்ல மாப்பிளை ஆபிஸ் போகணும்ல. எவ்ளோ சிரமம்” என்று தயாவிற்க்காக பார்த்தார்.

அவன் பதில் எதுவும் பேசவில்லை. மிருணாளினி தயாவையே பார்த்தாள்.

அவள் பார்வையை உணர்ந்தவன், “மிருவுக்கும் ரெஸ்ட் இல்லை தான். நான் முழிச்சு பார்த்துக்கிட்டாலும் அவளும் தூங்குற மாதிரி ஆக்ஷன் தான் குடுக்குறா. அதுக்கு அங்க வந்தா நிஜமாவே தூங்கவாவது செய்வா அத்தை. அவள்கிட்ட கேட்டுக்கோங்க.” என்று முடித்து விட, அய்யயோ தன்னை கண்டுகொண்டானே என்ற சிவப்பு பரவியது அவளுக்கு. கூடவே ஒரு கோபமும்.

துர்காவும் அவர்கள் முடிவில் தலையிடவில்லை. அதில் சிந்தியா “அப்போ நீ வர்றியா மிரு.” எனக் கேட்க, கணவனையே பார்த்தாள். அவன் அவளைப் பாராமல், “பாப்பாவை தொட்டில்ல போடுறேன் தேவா.” என்று சகோதரியிடம் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று விட, அவளுக்கும் அவர்களின் நிலை புரிந்தது.

ஆனாலும் மிருணா என்ன தான் முடிவெடுக்கப் போகிறாளென்ற சுவாரஸ்யம் எழ, அவளை நமுட்டு நகையுடன் பார்த்திருந்தாள்.

மிருணாளினி “இதோ வரேன்ம்மா.” என்று அவசரமாக அறைக்குள் புகுந்தவள், “அம்மா கூப்புடுறாங்க தயா. நான் போகட்டுமா?” எனக் கேட்க, அக்கேள்விக்குள் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருந்தது.

“உன் இஷ்டம் மிரு. உனக்கும் சிரமமா இருக்குல்ல. என்ன தான் நான் பாத்துக்கிட்டாலும் உன் அம்மா, அண்ணா பாத்துக்குற ஃபீல் உனக்கு கிடைக்காது.” என்று மிருதுவாகவே கூறினாலும் அவளை மீண்டும் மீண்டும் பிரிவது வலிக்கவே செய்தது.

“ஆமா, உனக்கும் சிரமம். நான் போறேன்” என்று இதழ்களை அழுந்தக்கடிக்க, “நான் எப்போ சிரமம்ன்னு சொன்னேன்.” என்று அவன் விழி இடுங்கப் பார்த்தான்.

“அதனால தான், அம்மா ஆட்டுக்குட்டின்னு காரணம் காட்டி என்னைக் கிளப்பி விடலாம்ன்னு பாக்குற. நான் உன் பொண்டாட்டி தான. என்னை இங்கயே இருன்னு சொல்ல உனக்கு உரிமை இல்லையா. இல்ல உரிமையை எடுத்துக்கப் பிடிக்கலையா?” கலங்கிய குரலில் அவள் கேட்டதில் திகைத்துப் போனான்.

அவளோ பேசி விட்டு வாசல் நோக்கி நடக்க, பின்னருந்து அணைத்திருந்தான் தயானந்தன்.

“என்ன வார்த்தைடி சொல்ற. உன்னை அனுப்ப எனக்கு சுத்தமா பிடிக்கல. இப்போ இல்ல… வளைகாப்பு போட்டு அனுப்பும் போதும் என் பொண்டாட்டியை நான் பாத்துக்குறேன்னு கத்தனும் போல இருந்துச்சு. ஆனா, உனக்கு என்ன பிடிச்சுருக்கோ அதைத் தான நான் செய்ய முடியும்.” என்றான் கழுத்தில் முகத்தைப் பதித்து.

அதில் திகைத்துப் பின் உருகியவள், “அப்போ எனக்குப் பிடிச்சதை நான் இப்போ செய்யலாம்ல?” எனக் கேட்டு கன்னங்கள் சிவக்க விலகினாள்.

அதனை ரசித்தவன், “தாராளமா” என்றிட, விறுவிறுவென வெளியில் சென்றவள், துர்காவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த சிந்தியாவிடம், “ம்மா… நான் வரல” என்றாள் அழுத்தமாக.

மகளைக் கண்ணெடுக்காமல் வியப்பாக சிந்தியா பார்க்க, “அது… என் புருஷனை விட்டுட்டு என்னால வர முடியாதும்மா. நாங்க ரெண்டு பேரும் பாத்துக்குறோம். அதான் இங்க இவ்ளோ பேர் இருக்கோம்ல. நீங்க அண்ணாவைப் பாருங்க.” என்று முடிவாய் உரைத்து விட துர்காவிற்கு பெருமை பொங்கியது.

தேவா தான், “யாஹூ இப்போவாவது பல்ப் எரிஞ்சுதே. சந்தோசம்” என்று வெளிப்படையாய் மகிழ, அறை வாசலில் நின்று மனையாளை வாயைப் பிளந்து பார்த்த தயானந்தனிடம், “டேய் ட்வின்னு ஃபைனலி உன் தவத்துக்கு ஒரு எண்டு கார்டு கிடைச்சுடும் போலடா.” என்று குறும்பாய் வாரி விட்டு அறைக்குச் சென்றாள்.

அவனோ அவசரமாக வெளியில் வந்து “எக்ஸ்கியூஸ் மீ” என்று விட்டு, தன்னவளைத் தரதரவென அறைக்கு இழுத்துச் செல்ல,

“தயா என்ன பண்ற. அங்க எல்லாரும் இருக்கும் போது இப்டி..”. என்று கூறி முடிக்கும் முன், அவள் இதழ்கள் அவன் இதழ்களுக்குள் அடைக்கலாமானது.

உச்சி முதல் பாதம் வரை, அவனது காதலான முத்தம் பல வித உணர்வுகளைக் கிளறி விட, அவனது திடீர் ஆக்கிரமிப்பில் தடுமாறிப் போனாள் மிருணாளினி.

“செம்ம ஹேப்பிடி. ஐ லவ் யூ சோ மச்.” என்று மீண்டும் அவள் கன்னத்தில் முத்தம் பதிக்க, அவள் நாணத்தில் தலை குனிந்தாள்.

“திருப்பி சொல்ல மாட்டீங்களா மேடம்?” என அவன் குறும்புடன் கேட்டதும், மிருணாளினியின் கண்களில் கண்ணீர் சுவடு.

“ஹே… நல்லி! என்ன இது?” என்று அவன் பதற, “எப்பவும் நினைக்கிறது தான்… இப்போ கூட உன்னால எப்படி தயா என்னை இப்படி லவ் பண்ணமுடியுது?” எனக் கேட்டாள் கமறலுடன்.

“இப்போ மட்டும் இல்லை நல்லி. எப்பவும் லவ் பண்ணுவேன். நீ?” இன்னும் அவள் காதலை அவளது இதழ்கள் உரைக்காததில் தவித்துக் கொண்டிருந்தான்.

“நான் சொல்லணுமா தயா. என்ன சொல்லணும்? உன் காதலை தவிர்த்தப்ப என்னவோ ஒரு புரியாத வலி. அந்த வலி என்னை விட்டுப் போகவே இல்ல எப்பவுமே. கல்யாணத்துக்கு அப்பறம் எல்லாத்தையும்… உன்னையும் சேர்த்து மறந்துட்டேன் தான். ஆனா, உன்னைத் திரும்பிப் பார்த்தப்ப உன் கண்ணுல அதே காதலைப் பார்த்து மனசுல மறுபடியும் அதே வலி. அதே தடுமாற்றம். ஆனா இப்போ நான் உன் பழைய நல்லி இல்லையே. உன்னை அப்படியே விட்டுட்டுப் போனவ வேறொருத்தனோட பொண்டாட்டியா தான்…” என்று கேவும் போதே, அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் தயானந்தன்.

“என்னமோ என்னை லவ் பண்ணி விட்டுட்டுப் போன மாதிரி என்ன பேச்சு இது. வாழ்க்கைல எத்தனையோ விபத்து நடக்கும் நல்லி. அந்தக் கல்யாணமும் உனக்கு ஒரு விபத்து அவ்ளோதான். இனி உன் லைஃப்ல நானும் என் குட்டிச் செல்லமும் மட்டும் தான்.” என்று உறங்கும் குழந்தையை ஒரு முறைப் பார்த்துக் கொண்டான்.

அவன் அணைப்பிலும் வார்த்தைகளிலும் உருகியவள், “அவ்ளோ தானா?” என நிமிர்ந்து கேட்க, தயா புரியாமல் பார்த்தான்.

“நீ கொஞ்ச ஒரு குட்டிச் செல்லம் வந்துட்ட மாதிரி, நான் கொஞ்ச நமக்கே நமக்கா ஒரு குட்டிச் செல்லம் வேணாமா?” வெட்கத்தில் தோய்ந்தபடி கேட்டாள் மிருணாளினி.

அதில் இன்பமாக அதிர்ந்தவன், “ஹே இப்ப நீ என்ன சொன்ன?” என ஆர்வமாய் வினவ,

“ஒன்னும் சொல்லல சாமி. நான் அம்மாவைப் பார்த்துட்டு வரேன். கிளம்பிட போறாங்க” என்று நழுவப் பார்த்தாள்.

“நல்லி இப்போ கள்ளியாகி எனக்கு பில்லி சூனியம் வைக்குதே.” என்றவன் மீண்டும் ஒரு முறை அவளை இறுக்கி அணைத்து விடுவித்தான்.

“ஆனா மேடம் இன்னும் லவ் யூ சொல்லல” என்று குறும்பு மின்ன கேட்க,

“தத்தி…” என்று தலையில் அடித்துக்கொண்டவள், அவனை இழுத்து அவன் இதழ்களில் இத்தனை வருடமாய் மனதில் சேமித்த காதலை பகிர்ந்து கொண்டாள்.

அதில் ஆடவன் தான் மயங்கிப் போனான். பெண்ணவள் காட்டிய காதலின் வேகம் அவனைக் கிறங்க வைத்தது. இத்தனை வருடங்கள் இழந்த இனிமைகளை வெறும் ஒரு நிமிட முத்தத்தில் கொடுத்து அவனைக் கலங்கடித்தாள் பாவை.

முத்தத்தைக் கொடுத்து விட்டு நிற்காமல் வெளியில் ஓடி விட்டாள். நின்று அவன் முகத்தைப் பார்க்கும் அளவு அவளுக்கு தைரியம் இல்லை. நாணம் வேறு அவளைத் துளைத்து எடுத்தது.

அவள் ஓடவே தேவை இல்லையென்ற ரீதியில், கண் மூடி அசையாமல் அம்முத்தத்தில் மூழ்கி இருந்தான் தயானந்தன்.

தேவஸ்மிதா படுக்கையில் விழுந்து விட்டத்தை வெறித்தாள்.

ஒன்றும் யோசிக்கத் தோன்றவில்லை. வாழ்வில் அனைத்தும் இருந்தும் வெறுமையாகிப் போனது. அடுத்து என்ன? என்ற கேள்வி மண்டைக்குள் ரீங்காரமிட, அவள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த முடிவை அது நினைவுபடுத்தியது.

அது வேறு அவளை அதிகமாய் காயப்படுத்த, அவள் அனுமதியின்றி கண்ணின் ஓரம் கோடாய் கண்ணீர் வழிந்தது.

ஒரு வாரம் கடந்திருந்தது. அலுவலகத்திற்குச் செல்ல தொடங்கி விட்டாள். இப்போதெல்லாம் அலுவலகம் சென்று வந்ததும் இரு குழந்தைகளையும் கொஞ்சுபவள், சிறிது நேரத்திலேயே அறைக்குள் முடங்கி விடுவாள்.

இரவு உணவு கூட அமைதியாய் உண்டு விட்டு, எழுந்து விடுவாள். தட்டில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாது அவளுக்கு.

அவளைக் கண்டு குடும்பத்தினர் தான் வருந்தினர்.

“நீயாவது பேசேன் தயா. ஏன் இவள் இப்படி இருக்கா.” என்று மிரு பரிதவிப்பாய் கேட்க,

தயாவும் அதே நிலையில் தான் இருந்தான்.

“என்னன்னு பேச சொல்ற. வாயே திறக்க மாட்டேங்குற. இத்தனை வருஷத்துல அவள் வாயை மூடி நான் பார்த்ததே இல்ல நல்லி. அவளை என்னால இப்படி பார்க்க முடியல.” என்று நொந்தவன், “அமர் என்ன சொல்றான்” எனக் கேட்டான்.

“ப்ச்… அம்மாகிட்ட கேட்டேன். அவங்க சொல்றதைக் கேட்டா இன்னும் தலைசுத்துது.” என்று தலையைப் பிடித்துக்கொண்டாள்.

அவள் கையை எடுத்து தனக்குள் வைத்துக்கொண்டவன், “என்ன சொன்னாங்க நல்லி?” எனப் பார்க்க,

“அண்ணா ரூமை விட்டே வர்றது இல்லையாம். செக்-அப் போக கூட வரமாட்டுறானாம். சாப்பாடு எல்லாம் அம்மா ரூம்ல கொண்டு வந்து வச்சா கூட, அதை ஏனோ தானோன்னு சாப்பிட்டுட்டு உர்ருன்னு இருக்கானாம். அவன் பக்கத்துல போகக் கூட பயமா இருக்குன்னு சொல்றாங்க தயா.
தூங்குவானா மாட்டான்னான்னு தெரியல கண்ணு எப்பவும் சிவப்பாவே இருக்குனு ரொம்ப பயந்து போய் பேசுறாங்க. ஏற்கனவே இன்னும் தலைல காயம் ஆறலை. இதுல இவன் வேற எதையாவது இழுத்துப்பானோன்னு இருக்கு.” என்று அழுகுரலில் கூறினாள்.

“அடக்கடவுளே! இவங்க ரெண்டு பேருக்கும் என்ன தான் ஆச்சு. அமர் ஹாஸ்பிடல்ல கோபம் எல்லாம் குறைஞ்ச மாதிரி தான் இருந்தான்.

நான் கூட அவனை கிண்டல் பண்ணிட்டே இருந்தேனே. ‘கோபமா என் வீட்ல தேவாவை வந்து விட்டுட்டு, அப்பறம் நீயே நைசா உன் தங்கச்சிப் பேரை சொல்லி கூட்டிட்டு போய்ட்டியே… உன் கோபத்தை பார்த்து நான் கூட சில்லறையை சிதற விட்டேன்’னு டீஸ் பண்ணேன். அப்போ கூட அவன் சிரிக்க தான் செஞ்சான். எல்லாமே சரி ஆகிடுச்சுன்னு நினைச்சேன் நல்லி” என்றான் வருத்தமாக.

சிந்தியா தேவஸ்மிதாவிற்கு போன் செய்து, அமர் மருத்துவமனைக்கு கிளம்ப மாட்டேன் என்கிறான் எனக் கூறியதில், அவள் அமருக்கு போன் செய்தாள்.

உடனே அழைப்பை ஏற்றவன் சில நிமிடங்கள் ஒன்றும் பேசவில்லை.

அவளே தொடங்கினாள்.

“ஹாஸ்பிடல் போகணும்ல…”

“ம்ம்”

“கிளம்புங்க அமர்.”

அவனிடம் பதில் இல்லாமல் போனதில், “அமர் உங்களைத்தான்” என்றாள் அழுத்தமாக.

“கிளம்புறேன். நீ?”

“அத்தை மாமா இருப்பாங்களே…” என்றாள் மெல்லமாக.

“ஓ… இருக்காங்க.” நக்கலாக வந்த அவன் குரலில் சிறு வலி.

“போயிட்டு வந்துடுங்க அமர். ப்ளீஸ்” தேவா கெஞ்சலாக ஒலிக்க,

“ம்ம்” என்றான்.

“வச்சுடவா?” தேவஸ்மிதா கேட்டதில் எதிர்புறம் கடும் அமைதி.

“பெயின் எப்படி இருக்கு அமர்?”

“கொடுமையா இருக்கு. இதுக்கு தான ஆசைப்பட்ட. இப்போ எப்படி இருக்குனு கேட்டு கூட கொஞ்சம் கீறி விடுறியா?” அவள் தலை வலியை கேட்க, அவன் மனவலியை பற்றி கூறினான்.

அவளோ அவனது பதிலில் உறைந்து விட்டாள்.

பின் அமரே “வச்சுடவா?” எனக் கேட்க, இப்போது அவளிடம் கடும் மௌனம்.

அந்த மௌனம் அவனது இதழ்களில் மெல்லிய புன்னகையைக் கொடுத்தது.

“நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட, போனை காதிலிருந்து எடுக்க இயலாமல் அமர்ந்திருந்தாள் தேவஸ்மிதா.

மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அமருக்கு மைதிலி போன் செய்தாள்.

சில நொடிகள் யோசனைக்குப் பிறகு அவளது அழைப்பை ஏற்றவன், “ம்ம்” என்க,

தோழனது பாராமுகத்தில் வெதும்பியவள், அவன் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொண்டாள்.

என்ன இருந்தாலும் தவறிழைக்காத அவனது தங்கையின் மீது சேறு பூசியது மன்னிக்க இயலா குற்றம் தானே!

“அமர்… உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான் போன் பண்ணேன். உனக்குத் தெரியுமான்னு தெரியல” என்றவள் விவரத்தைக் கூற, அமருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

வெறிப்பிடித்தத் தோரணையில் காரை அதிவேகத்துடன் எடுத்துக்கொண்டு தேவாவின் வீட்டிற்குச் சென்றான்.

வாசற்கதவை சடாரென திறந்தவன், ஹாலில் இருந்த யாரையும் சட்டை செய்யவில்லை.

“எங்க அவள்…?” எனக் கண்ணில் தீப்பிழம்புடன் கேட்க, மிருணாளினி பதறி “என்னண்ணா ஆச்சு?” என்றாள்.

அதற்கு பதில் கூறாதவனாக, தேவாவின் அறைக்கதவைத் தட்டினான்.

“ஏய் வெளில வாடி. வாடி வெளில” என்று கர்ஜிக்க, அமரின் குரல் கேட்டதில் அவள் அவசரமாக கதவைத் திறந்தாள்.

இருவரின் வதனங்களும் காதல் நோயில் வாடி இருந்தது. அதனை இருவருமே உள்வாங்கிக்கொள்ள, அமரின் கண்களில் கோபம் ஜொலித்தது.

“என்னடி செஞ்சு வச்சுருக்க? யாரைக் கேட்டு நீ டைவர்ஸ் அப்ளை பண்ணுன.” என்றான் பல்லைக்கடித்து.

அதில் அனைவரும் திகைத்திட, அவளோ அழுத்தமாக நின்றாள்.

பூபாலனோ, “என்னம்மா இது?” எனப் பதற்றமாக கேட்டதில், அவள் பதில் கூறவே இல்லை.

“உங்கிட்ட தனியா பேசணும்.” அமர் தேவாவைப் பார்த்துக் கூற,

“நமக்குள்ள தனியா பேசுற அளவு எதுவும் இல்லை அமர்” என்றாள் தெள்ளந்தெளிவாக.

“உனக்கு பைத்தியமாடி” தயா அவளைக் கடிந்து கொள்ள, “இப்ப உன் ட்வின் இன்ஸ்டிண்ட் வேலை செய்யலயா” என்றாள் பரிதாபமாக.

அவன் தான் அதிர்ந்து, “என் தேவாவோட பிஹேவியரே இது இல்ல. அப்போ எப்படிடி ட்வின் இன்டஸ்டின்ட் ஒர்க் அவுட் ஆகும்.” எனக் கலங்கிய முகத்திடன் கேட்க,

“டேய் உங்க பாசமலர் படத்தை எல்லாம் அப்பறம் வச்சுக்கோங்க” என்று இருவரையும் கடுப்பாய் முறைத்தான் அமர்.

“பிழுஞ்சு பிழுஞ்சு பெர்பார்மன்ஸ் பண்றதை மதிக்கிறானா பாரேன்” என்று தயா முறைக்க, அவனை சட்டை செய்யாமல், “சோ நமக்குள்ள எந்த பெர்சனலும் இல்லை. எதுவா இருந்தாலும் இங்கயே பேசலாம். ரைட்?” அமர மகரந்தனின் குரலில் அத்தனை ஆதிக்கம்.

அவளோ தலையாட்டி நிற்க, “ஓகே” என்று தோளை குலுக்கியவன், அவளது கைப்பற்றி தன்னருகே இழுத்து, தன்னவளின் செவ்விதழை கவ்விக்கொண்டான் மென்மையாக.

உயிர் வளரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
99
+1
4
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்