யுக்தா சாகித்யன் டெல்லிக்குச் சென்றது முதல், அஸ்வினி தான் மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டு மகனைப் பார்க்க பறப்பார்.
அவனும் அஸ்வினியைக் கண்டதும் ஏங்கி விடுவான். “நானும் உங்களோடவே இருந்துருக்கலாம்மா. இந்த ஏஞ்சல் தான் நம்மளைப் பிரிச்சு விட்டுட்டா” எனப் பாவமாகக் கூறினாலும், அவனுக்குப் பிடித்த வேலை கிடைத்த மகிழ்வும் அவனது சொந்த சம்பாத்தியத்தில் வாழ்க்கையை நகர்த்தும் மிளிர்வும் அவன் முகத்தில் மின்னியது.
வேலைக்குச் சேர்ந்ததில் இருந்தே அவனால் சென்னைக்கு வர இயலவில்லை. உழைப்பாளியான யுக்தா, கிடைத்த வாய்ப்பை விடாமல் இன்னும் இன்னும் உழைத்தான். துப்பாக்கிச் சுடுதலும், வெகு வருடங்களாக நிலுவையில் இருந்த நுட்பமான கொலை வழக்குகளையும் திறமையுடன் கண்டறியும் திறனும் அவனுக்கு இன்னும் பலம் சேர்த்தது.
யுக்தாவின் முன்னேற்றம் குறித்து அஸ்வினியை விட விஸ்வயுகாவிற்குத் தான அத்தனை சந்தோஷம்.
அன்று அவர் டெல்லி செல்லும் நாள். யுக்தாவின் பிறந்தநாளும் கூட. எப்போதும் பிறந்தநாள் கொண்டாட மறுத்து விடுவான். இம்முறையாவது அவனுக்கு பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை விஸ்வயுகாவிடம் கூற, அவளும் “வாங்க ஷாப்பிங் போகலாம்” என அழைத்துச் சென்றாள்.
அவனுக்காக மொத்த ‘மாலை’யும் விலைக்கு வாங்கி டெல்லிக்கு அனுப்பி விட மனம் துடித்தது. அதனை அடக்கிக் கொண்டவளின் கண்ணில் விழுந்தது சொக்கநாதனும் மீனாட்சியும் இணைந்து காட்சியளிக்கும் ஆன்ட்டிக் சிலை.
அதனைக் கையில் எடுத்துப் பார்த்தவளுக்குள் சொல்லொணா சிலிர்ப்பு.
ஒரு வித பரவச நிலை அவளை ஆட்கொண்டது.
“சித்தி… இதை யுகிக்கு கிஃப்ட் பண்றீங்களா?” முகம் முழுதும் பூசிய செம்மையுடன் அஸ்வினியிடம் நீட்டினாள்.
“இதையா? இது எதுக்கு…” என்றவருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
“கொடுங்களேன்!” தோளைக் குலுக்கிக்கொண்டு அவர் கையில் திணித்தாள்.
அவளது செய்கையின் வித்தியாசத்தையும் யுக்தாவைப் பற்றி பேசும்போது மட்டும் அவள் முகத்திலும் கண்ணிலும் ஏற்படும் பரவசத்தையும் அதன் பிறகே உணர ஆரம்பித்தார்.
அவளிடம் யுக்தாவைப் பற்றி கூறியது எத்தகைய முட்டாள்தனம் என்று அதன்பிறகே அவருக்குப் புரிந்தது.
அவர் டெல்லிக்குச் சென்று யுக்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடி விட்டு வந்ததுமே, “சித்தி யுகிட்ட என் கிஃப்ட்ட குடுத்தீங்களா? என்ன சொன்னான்?” அதீத ஆர்வம் பெண்ணவளின் குரலில்.
“ம்ம் குடுத்தேனே. அழகா இருக்குன்னு வாங்கிக்கிட்டான். என் செலக்ஷன் சூப்பர்னு பாராட்டு வேற தேங்க்ஸ் ஏஞ்சல்” என சூசகமாகக் கூறிட, அவள் முகம் வாடி விட்டது.
“ஓ! நான் குடுத்தேன்னு சொல்லலையா?” ஏதோ ஒரு ஏமாற்றம் அவளைத் தாக்கியது.
“அச்சோ… நீ தான் உன்னைப் பத்தி சொல்லக் கூடாதுன்னு சொல்லிருக்கியே ஏஞ்சல். அதான் நான் குடுத்ததா சொன்னேன். ஆக்சுவலி நான் குடுத்தேன்னு சொன்னதுனால தான் வாங்கிக்கிட்டான். இல்லன்னா, திருப்பி என்கிட்டயே குடுத்து இருப்பான்” என்றவர் காதல் கொண்ட இதயங்களை இணைய விடாது சிறு கலகம் செய்யத் தொடங்கினார்.
மெலிதான வலியொன்று நெஞ்சைப் பிளக்க, “சரிதான்… நேர்ல பார்க்கும் போது சொல்லிக்கிறேன்” என முயன்று முறுவலித்து விட்டு சென்றாள்.
சில மாதங்களில் அவளது பிறந்தநாள் வந்தது.
அன்று அஸ்வினி அவளுக்கு இதய வடிவிலான மெல்லிய தங்கச் செயினைப் பரிசளிக்க, “வாவ் டேமின் பியூட்டி சித்தி… யார் செலக்ஷன்?” என அவர் காதில் மட்டும் கேட்கும் வண்ணம் கிசுகிசுத்தாள்.
ஏனெனில் முந்தைய நாள் தான் டெல்லிக்குச் சென்று திரும்பி இருந்தார். எப்படியும் டெல்லியில் தான் வாங்கி இருப்பார் என்ற கணிப்பு அவளுக்கு.
“வேற யார் நான் தான் செலக்ட் பண்ணுனேன்… யுக்தா என்கூட தான் இருந்தான். ஆனா அவனுக்கு இதுலாம் செலக்ட் பண்றதுல சுத்தமா இன்டரஸ்ட் கிடையாது!”
மீண்டுமொரு ஏமாற்றம். அதனை விழுங்கிக் கொண்டவள், “இன்னைக்கு என் பர்த்டேன்னு யுகிக்கு தெரியுமா சித்தி…” மீண்டுமொரு அற்ப ஆர்வம்.
“நீயே யாருனு அவனுக்குத் தெரியாது ஏஞ்சல். ஸ்கூல் டைம்ல ஒரு தடவை உன் போட்டோ பார்த்துருக்கான் அவ்ளோ தான். இப்ப இருக்குற போட்டோவைக் காட்டுனா அவனுக்கே அடையாளம் தெரியாது. நீயும் அவனைப் பல வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது தான…” எனக் கேட்டு விட்டு நகர, அவளுக்குச் சுருக்கென குத்தியது.
இதோ அதோவெனக் கல்லூரியும் முடித்து விட்டாள்.
அதற்கு மேலும் யுக்தாவிடம் கண்ணாமூச்சி விளையாட அவளுக்கு விருப்பம் இல்லை. அவனது தற்போதைய உருவத்தைப் பார்த்தது இல்லை தான். அவனிடம் ஒற்றை வார்த்தைக் கூட பேசியது இல்லை தான். அவனது நிழலையையும் தீண்டியது இல்லை தான்.
ஆனால், அவன் மீது ஏற்பட்ட சலனம். யுக்தா சாகித்யன் என்ற பெயரான ஆடவனின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு. எப்போது காதலாகி அவளுள் ஆழமாக வேரெடுத்தது என்று அவளே அறியாள்.
‘யுகி’ என்றதுமே அவளுள் ஏற்படும் படபடப்பும், உற்சாகமும், ஒரு வித கனவு நிலையும் அவளை வெகுவாய் புரட்டிப் போட்டது. காதல் என்ற நிலையைத் தாண்டி ஒரு வித பக்தி நிலை அவளுடையது.
ஆம், அவன் மீதுள்ள பக்தி நாளுக்கு நாள் மெல்ல மெல்ல அதிகரித்ததே தவிர குறையவில்லை. என்றும் குறையாது என்று புரிந்து போனபின், இனி இந்த தூரங்கள் தேவையில்லை என்ற முடிவிற்கு வந்தவள், அடுத்த மாதம் வரும் அஸ்வினியின் பிறந்தநாளுக்காக காத்திருந்தாள்.
அன்று எப்படியும் யுக்தா அவரைப் பார்க்க வந்தாக வேண்டும். அவனைப் பார்த்தே ஆக வேண்டுமென்ற தீர்மானத்திற்கு வந்து விட்டவள், அஸ்வினியிடம் “யுகியை உங்க பிர்த்டே அன்னைக்கு மீட் பண்ணணும் சித்தி” என முடிவாக உரைத்து விட்டாள்.
அது அனுமதி அல்ல கட்டளை என்று அவருக்குப் புரிந்து போனது.
“இல்ல ஏஞ்சல்…” என அவர் மறுக்க வர, “இன்னும் அவன் சின்னப் பையன் இல்ல. என் அம்மாவை எதிர்க்குற அளவு எனக்கு இப்ப மெச்சூரிட்டியும் வந்தாச்சு. சோ, என்ன வந்தாலும் நான் பாத்துக்குறேன்” என அழுத்தமாக உரைத்தவளிடம் மறுபேச்சு இன்றி சம்மதித்தார் ஒரு யோசனையுடன்.
ஆனால், அவரது பிறந்தநாளன்று அவனால் வர இயலவில்லை. “வேலை அதிகமாம்” என அஸ்வினி கூறியதும் சலிப்பு தட்டியது அவளுக்கு.
“சரி அப்போ நானே அவனை டெல்லிக்குப் போய் பாத்துக்குறேன்!” எனக் கிளம்பியவளைத் தடுக்க வேறு வழியற்று, “அவன் இந்த வீக் எண்ட் வரேன்னு சொல்லிருக்கான் ஏஞ்சல். உனக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு சொல்லாம இருந்தேன்” சமாளித்தார்.
“நிஜமா வருவான்ல?” மீண்டுமொரு முறைக் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டாள்.
அந்த வார இறுதிக்காக காத்திருந்தவளைக் காக்க வைக்காமல் அவன் கிளம்பவும் செய்தான். மாலைக்கு மேல் தான் அவனுக்கு விமானமும் கிடைத்தது. இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் பார்த்து விட வேண்டுமென்ற உறுதியில் இருந்தவள், அஸ்வினியுடன் விமானநிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் அமர்ந்திருந்தாள்.
“ஏன் ஏஞ்சல்… இந்த டைம்ல அவனைப் பார்த்தே ஆகணுமா? நீ கிளம்பேன். நான் பார்த்துட்டு வரேன்” இத்துடன் பத்து முறையாவது கூறி இருப்பார். ஆனால், அவள் காதிலேயே வாங்கவில்லை.
சில நொடி அமைதிக்குப் பிறகு அஸ்வினி தீர்க்க விழிகளுடன் மகளைப் பார்த்தார்.
“நீ யுகியை விரும்புறியா?”
அக்கேள்வியில் நிதானமாக நிமிர்ந்தவள், “விரும்புனா என்ன தப்பு. அவன் உங்க வளர்ப்பு பையன் தான். சொந்தப் பையன் இல்ல. நானும் அவனை சொந்த சித்தி மகனா பார்க்கல” என்றாள் வெடுக்கென.
“இதெல்லாம் சரியா வரும்னு நினைக்கிறியா யுகா?”
“வருமே. ஏன் வராது?”
“அவனுக்கு என்னைத் தவிர சொந்த பந்தம் யாருமில்ல”
“நான் இருக்கேனே”
“பேங்க் பாலன்ஸோ, இல்ல சொத்து பத்தோ எதுவும் கிடையாது. எல்லாமே இனி அவன் சம்பாரிக்கிறது தான்.”
“அவனுக்கும் சேர்த்து என்கிட்ட இருக்கு. நானும் இப்படியே இருந்துட மாட்டேன். எனக்கும் பிசினஸ் பண்ணனும்னு ட்ரீம் இருக்கு. சோ நான் பிசினஸ்ல சம்பாரிக்கிறது எல்லாம் அவனுக்குத் தான”
“அவன் வேற கேஸ்ட்!”
“சோ வாட்? எங்க பசங்களுக்கு நான் ‘நோ கேஸ்ட்’ சர்டிபிகேட் வாங்கிப்பேன்” சடசட மழைப் போல நெஞ்சைக் கனக்க வைத்தது அவள் பதில்கள்.
“உன் அம்மாவுக்குத் தெரிஞ்சா அவனைக் கொன்னுடுவாங்க”
“அவன் ஒன்னும் வாயில கை வைக்க தெரியாதா பாப்பா இல்ல. இப்ப நல்ல பொசிஷன்ல இருக்கான். அவனை யாராவது நெருங்க நினைச்சா துப்பாக்கியை எடுத்து நானே சுட சொல்லிடுவேன்…”
“யாரா இருந்தாலுமா?”
“யாரா இருந்தாலும்.”
“உன் அம்மா அப்பாவா இருந்தாலும்?”
“மே பி”
“நானா இருந்தாலும்?” கேட்டு விட்டு அவர் நிறுத்த, “சித்தி!” என அதிர்ந்தாள் விஸ்வயுகா.
“சொல்லு ஏஞ்சல். உங்க காதலுக்கு பிரச்சனையா நான் இருந்தாலும் என்னைச் சுட சொல்லுவியா?” வேதனையை விழுங்கி கொண்டு கேட்டார்.
“ஏன் சித்தி. உங்களுக்கு பிடிக்கலையா நான் அவனை விரும்புறது?” லேசாய் கண் கலங்க கேட்டாள்.
“பிடிக்கும் பிடிக்கல இதைத் தாண்டி… காதலத் தாண்டி, இந்தப் பொருந்தாத காதலுக்காக நிறைய சாக்ரிஃபைஸ் பண்ணனும் ஏஞ்சல். வெளில பார்க்கும் போது நிறைவா இருக்கும். ஆனா ஒவ்வொரு நாளும் நிறைய இழக்கனும். சில நேரம் காதலையே அடகு வைச்சு மீட்கணும். வேணாம் ஏஞ்சல்… கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் நம்ம குடும்பத்துல யாருமே என்னை ஏத்துக்கல. உன் சித்தப்பாவோட காதலும், உங்க அன்பும் இல்லைன்னா என்னைக்கோ நான் மண்ணோட மண்ணாகி இருப்பேன்!” சொல்லும்போதே வார்த்தைகள் தடுமாறியது அவருக்கு.
“சித்தப்பாவுக்காக நீங்க நிறைய சாக்ரிஃபைஸ் பண்ணிருக்கீங்க சித்தி எனக்குப் புரியுது… அதே மாதிரி நானும் அவனுக்காக என்ன சாக்ரிஃபைஸ் வேணாலும் பண்ணிப்பேன்” எனக் கூறியவளைச் சிவந்த விழிகளுடன் முறைத்தவர்,
“நீ சாக்ரிஃபைஸ் பண்ணிப்ப. அவன் ஏன் பண்ணனும் ஏஞ்சல்?” நெருப்பாய் சுட்ட கேள்விதனை அவளால் எதிர்கொள்ள இயலவில்லை.
“சின்ன வயசுல இருந்து அவன் எல்லாத்தையும் சாக்ரிஃபைஸ் பண்ணிருக்கான். அவன் குடும்பம் அழிஞ்சு போனதே உன் அம்மாவால தான் அது தெரியுமா உனக்கு. இப்ப அவனுக்கு இருக்குற ஃபியூச்சரையும் உன் காதல்ன்ற பேர்ல அழிக்கப் போறியா? உன் அம்மா சாதாரணமா இதை விட்டுடுவாங்கன்னு கனவு கூட காணாத. அவன் வாழ்க்கையை அவனை நிம்மதியா வாழ விடு ஏஞ்சல்! ப்ளீஸ்” என அவளை நோக்கி கை எடுத்துக் கும்பிட்டு கண்ணீர் சிந்தியவரை உணர்வற்று வெறித்தாள்.
பல மடங்காய் கண்ணீர் கன்னம் தாண்ட கண்ணுக்குள்ளேயே முண்டியது. ஆழ் மூச்சு எடுத்து அதனை வெளிவராமல் தடுத்தவள், நடுங்கிய குரலை சரி செய்தபடி “இப்ப நான் என்ன செய்யணும்?” எனக் கேட்டாள் இறுக்கத்துடன்.
“போய்டு ஏஞ்சல். நீ அவனைப் பார்க்க வேணாம்…” அவளது கறுத்த முகத்தைப் பார்க்க மனம் வராமல் அஸ்வினி மறுபுறம் திரும்பிக் கொண்டார்.
“சரி போயிடுறேன்!” எனக் காரை விட்டு இறங்கியவள், தனது ஒட்டு மொத்த கோபத்தையும் ஆதங்கத்தையும் சொல்லில் முடிவடையாத காதலையும் கார் கதவின் மீது காட்டி டொம்மென அடைத்தாள்.
அவளை மீறியும் சில துளி கண்ணீர் அவள் கன்னத்துடன் உறவாடிக் கொண்டிருந்தது.
காதலான சிறு பார்வைகளையும் தீண்டல்களையும் அவள் உணர்ந்ததில்லை. ஆனால் இந்தக் காதல் வலி மட்டும் எப்படி அவனுடன் கூடிக் களித்துப் பிரிந்து செல்வது போலொரு வேதனையைத் தருகிறதென்ற கேள்விக்கு மட்டும் அவளுக்கு விடை புரியவே இல்லை. விடை புரிந்தாலும் இனி பலனில்லை!
மோகம் வலுக்கும்!
மேகா