634 views

அத்தியாயம்  4 ❣️

அதிகாலை வேளைச் சூரியனைப் பார்த்து ரசித்தவாறே , கையிலிருந்த தேநீரைச் சுவைத்துக் கொண்டு இருந்தாள் இளந்தளிர். 

” சுபா எழுந்தாளா பாரு தளிர் ? காலேஜூக்கு லேட் ஆச்சே ! இவளுக்கு எத்தனை தடவை சொன்னாலும் நேரத்துக்கு கிளம்பவே மாட்டா ! ” 

சமையலறையில் இருந்து குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார் சிவசங்கரி.

” ம்மா அவ எப்பவும் கரெக்ட்டா காலேஜூக்கு கிளம்பிடுவாளே ! இன்னைக்கு லீவ் போட்ருன்னு சொல்லிட்டேன்.ரொம்ப டயர்டா இருக்கா” 

என்று அன்னையிடம் சொன்னவள் தேநீர் அருந்திய தம்ளரைக் கழுவி விட்டு , அவள் வேலைக்குக் கிளம்ப ஆயத்தமானாள்.

“இன்னைக்கு காலைல சாப்பிடாம இருக்கட்டும்.கொஞ்சமாவது ஹெல்த் பத்திக் கவலைப்படனும்ல ” 

சின்ன மகளின் இந்த குணாதிசயத்தை நினைத்து சிவசங்கரிக்குக் கவலையைக் கொடுத்தது.

” இனிமே பாத்துக்குவா ம்மா ” என்ற இளந்தளிர் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு தாயிடம் வந்தாள்.

” அவ எழுந்ததும் சாப்பிட வைங்க.நான் போய்ட்டு ஈவ்னிங் வர்றேன் ” 

மதிய உணவை பையில் வைத்துக் கொண்டு , வேலை பார்க்கும் அலுவலகத்திற்குச் சென்றாள்.

இளந்தளிர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தான் இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வருகிறாள்.

தந்தை இறந்ததும் வேலைப் பார்க்கத் துவங்கி விட்டாள்.அவர் குடும்பத்தினருக்காக விட்டுச் சென்ற கணிசமான தொகை அவர்களுக்கு போதும் என்றளவு இருந்தாலும் தானும் வேலை பார்த்துச் சம்பாதிக்கவே ஆசைப்பட்டாள்.

அப்படித் தொடங்கியது தான் இன்று வரை நல்லதொரு மென் பொறியாளராகி உள்ளாள்.

இளந்தளிரின் தங்கை சுபாஷினியும் தான் படித்து முடித்த பின்னர் அக்காவின் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாள்.

மகள்கள் இருவரின் படிப்பை நினைத்து சிவசங்கரிக்கு பெருமையாகவே இருக்கும்.ஏனெனில் இளந்தளிரும் , சுபாஷினியும் நல்ல மதிப்பெண் எடுப்பதில் குறையேதும் வைத்து விடவில்லை.

” ம்மா… அக்கா எங்க ? அதுக்குள்ள ஆஃபிஸ் கிளம்பிட்டாளா ? ” 

வினவியவாறே அறையில் இருந்து வெளிப்பட்டாள் சுபாஷினி.

” அவ அப்போவே கிளம்பிட்டா. ஆமா நீ இனிமே காலேஜூக்கு ஸ்நாக்ஸ் டப்பா எடுத்துட்டுப் போற சரியா ? ” என்று அவளுக்காக காலையில்  கொடுக்கும் பானத்தைக் கைகளில் திணித்தவாறே கூறினார்.

” என்னது ? ஸ்நாக்ஸ் டப்பாவா ? அம்மா என் பேக்ல அதெல்லாம் வைக்க இடமில்லை ” என்று சினுங்கிக் கொண்டே இளஞ்சூடான பானத்தைப் பருகினாள் சுபாஷினி.

” உன் பேக்ல புக்ஸ்ஸையே வைக்க இடமில்லைன்னு ரெண்டு புக்ஸை வீட்லயே வச்சுட்டுப் போய்ட்டு இருக்கன்னுத் தெரியும்.பரவாயில்ல சின்ன டப்பா தான்.அதுல தினமும் எதாவது பயிறு வகை செஞ்சு வச்சு விடறேன்.ப்ரேக் டைம்ல சாப்பிடு. “

தனது புத்தகப் பையைக் கிண்டல் செய்த அம்மாவிடம் ,

” அப்போ பாக்கெட் மணியையும் அதிகமாக குடுங்கம்மா . அதுலயே ஹெல்த்தி ஃபுட் ஆக வாங்கிச் சாப்பிட்றேன் ” என்று தினமும் அவளுக்கு கொடுக்கும் ஐம்பது ரூபாயை நூறு ரூபாயாக ஏற்றிக் கொடுக்குமாறு  தாயிடம் கேட்டாள் சுபா.

” இல்லை இருக்கட்டும்.உனக்கு ஐம்பது ரூபாயே போதும்.இத்தனைக்கும் காலேஜ் பஸ்ல தானப் போற ? அப்பறம் என்ன ? ” கறாராகப் பேசினார் சிவசங்கரி.

” ட்ரிப்ஸ் போட்டது வலிச்சாலும் பரவாயில்லன்னு நான் காலேஜூக்கே போயிருக்கலாம் போலயே !” என்று தனக்குள் புலம்பிக் கொண்டாள்.

” ப்ரஷ் பண்ணிட்ட தான ? சாப்பிடு வா ” 

தட்டில் இட்லிகளை அவளிடம் கொடுத்தார்.

அதில் , தேங்காய்ச் சட்னியும் , தக்காளிச் சட்னியும் ஊற்றிக் கலந்து , இட்லியை உண்ண ஆரம்பித்தாள்.

” இந்த காம்பினேஷன்னை அடிச்சுக்கவே முடியாதுப்பா ” என்று தன்னைத்தானே புகழ்ந்தவாறே சாப்பிட்டாள்.

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

தன் அலுவலகத்தின் முன்னால் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளந்தளிர் , உள்ளே சென்று ஆசுவாசமாக தன் இடத்தில்  அமர்ந்தாள்.

” ஓய் இளா ! சுபாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னியே ! இப்போ எப்படி இருக்கு ? ” அவளது தங்கையைப் பற்றி விசாரித்தாள் அருகில் அமர்ந்திருந்த அவளுடன் பணிபுரியும் தோழி மிதுனா.

” ம்ம்.இப்போ அவ பரவாயில்லை மிது. எல்லாம் சாப்பிடாதனால தான்.பிரச்சனையே ஆரம்பிக்குது.காலைல சாப்பிடறதே இல்லை.ஃப்ரண்ட் வீட்டுக்குப் போய்ட்டு வரும் போது  மயக்கம் வர்ற மாதிரி இருக்குன்னு கால் பண்ணவும் விழுந்தடிச்சுட்டுப் போனேன் ” 

அவள் மயங்கி விழுந்ததையோ , கோவர்த்தனன் காப்பாற்றியதையோ இவளிடமும் மறைத்து விட்டாள்.

” அப்பறம் என்னாச்சு ? ” என்று மிதுனா கேட்கவும் ,

” ஹாஸ்பிடல் போய் ட்ரிப்ஸ் போட்டுட்டு வீட்டுக்கு வந்தோம் . வீட்ல ரெஸ்ட் எடுக்குறா ” முழுவதுமாக சொல்லி முடித்தாள் இளந்தளிர்.

” ஏதோ நல்லா ஆரோக்கியமா இருந்தா சரி ! ” என்று கூறிய மிதுனா அதற்கு மேல் அவளிடம் விசாரணை நடத்தவில்லை .

வேலையில் மூழ்கி விட்ட இளந்தளிருக்கும் அவளிடம் பேச நேரமும் வாய்க்கவில்லை.

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

” நேத்து நாம லேட் , இன்னைக்கு  ஹரீஷ் லேட்டா வருவான் போலயே ” 

கணிணியின் திரையில் தென்பட்ட மின்னஞ்சலை ஆர்வமாகப் பார்த்தான் கோவர்த்தனன்.

அப்போது அவனது இருக்கையை இங்குமங்கும் அசைத்து விளையாடியபடியே , ” நண்பா ! ” என்ற குரலுடன் தோழனை அழைத்தான் ஹரீஷ்.

” வாங்க தீவிரவாதி ஹரீஷ் ! ” என்று அடைமொழியை மறக்காமல் ஞாபகப்படுத்தி அழைத்தான் கோவர்த்தனன்.

” ஏன்டா ஒரு தடவை கரெக்ஷன் பண்ணாம பேசிட்டா அதையே சொல்லுவியா ? இந்த நிக்நேம் நல்லா இல்லடா கோவர்த்தனா ! ” 

நேற்றைய தினம் போல் இன்றும் அவனிடம் சண்டையிட்டான்.

” சரி காட்டுத்தீ ஹரீஷூன்னுக் கூப்பிட்றேன்.அந்த பேர் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. நீ வேற நேத்துக் காட்டுத்தனமா வேலைப் பார்த்து , அதை எம்.டி பாத்துட்டாருன்னு வை , உனக்கு இன்க்ரிமெண்ட் குடுத்துடுவாரு. அதுக்கு அப்பறம் உன் லெவலே வேறயா ஆகிடும்.நண்பா உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு ” 

” ஆமா.நான் வர்ற வரைக்கும் கம்ப்யூட்டரையே பார்த்துட்டு இருந்தியே ! என்னை என்னென்ன சொல்லிக் கலாய்க்கலாம்னு யோசிச்சு வச்சு அதுல ஸ்டோர் செஞ்சு வச்சு இருக்கியாடா ? நீ தள்ளு ! நான்  செக் பண்ணிக்கறேன் ” 

கோவர்த்தனனை நாற்காலியோடு நகர்த்தி விட்டு , அவனது கணிணியில் என்ன பார்த்துக் கொண்டு இருந்தான் என்பதை ஆராய்ந்தான் .

” டேய் ! காட்டுத்தீ ! என்னை வேலை செய்ய விடுடா ! டீம் லீட் வந்துடப் போறாரு.ப்ராஜெக்ட்டை முடிச்சுட்டு எதுவா இருந்தாலும் விளையாண்டுக்கலாம் ” ஹரீஷின் முதுகில் அடி வைத்து அவனைச் சமர்த்துப் பிள்ளையாக அமர்த்தி விட்டு தானும் வேலை செய்யத் தொடங்கினான்.

” ஹரீஷ்  சண்டே கோவிலுக்குப் போகலாமா ? ” 

கோவர்த்தனன் நண்பனிடம் கேட்டான்.

” ம் போகலாமே ! என்ன திடீர் பக்தி வந்துருச்சா ?” 

” இல்லடா. சும்மா மனசு சரியில்லைன்னா அங்க தான் போகத் தோனுது.பாசிட்டிவ் வைப்ஸ்க்காக விசிட் பண்ணிட்டு வரலாம். ” 

ஹரீஷ் , ” ஏன் உங்க மனசுக்கு என்ன ஆச்சு ? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நல்லா ஃப்ரஷ்ஷா என்னைக் கலாய்ச்சுட்டு தான இருந்த ? ” 

” ப்ச்….என் மனசு எனக்கேத் தெரியாம என்கிட்ட எதையோ மறைக்குதுடா. என்னன்னுக் கண்டுபிடிச்சுக் குடேன் ப்ளீஸ் ” என்று தீவிரமாகக் கேட்பது போல பேசிய நண்பனைப் பார்த்து அவனைப் போலவே , முக பாவனையை வைத்துக் கொண்டு பேசினான் ஹரீஷ்.

” மனசே மனசில் பாரம் ….மகனே இன்னைக்கு உன்னைப் பலி கொடுக்கும் நேரம்… ” 

பாட்டுப் பாடியபடி அவனை முறைத்தான் .

” ஏன் நண்பா முறைக்கிற ? நானே துக்கத்துல துவண்டு போயிருக்கேன்.நீ அது என்னன்னு தூர்வாரி எடுக்க வேணாமா ?  அதை விட்டுட்டு பாட்டுப் பாடி கலாய்ச்சு விட்றப் பாத்தியா ? “

ஹரீஷின் முகத்தில் எள்ளும் , கொள்ளும் வெடிக்க ஆரம்பித்து விட்டது. 

” ஏன்டா உனக்கு மனசாட்சி இல்லையா ?  தீவிரவாதி , காட்டுத்தீ ஹரீஷூன்னு பல பட்டப்பேரை வச்சுக் கலாய்ச்சு முடிச்சு நல்லாத்தானே வேலையைப் பாத்துட்டு இருந்த ? இப்போ என்னடான்னா சம்பந்தமே இல்லாம , மனசு ஒளிச்சு வச்சுருக்கு அதைக் கண்டுபிடிச்சுக் குடுக்க சொல்ற ? ” 

இப்படி திட்டுவதால் கோவர்த்தனன் கண்டிப்பாக  கோபப்பட மாட்டான் என்று ஹரீஷிற்குத் தெரியும். அவனையும் சாதாரண மனநிலைக்கு மாற்ற நினைத்து கடுமையாக பேசுவது போல் சித்தரித்துக் கொண்டு அவனிற்குச் சிரிப்பை வரவழைக்க நினைத்தான்.

” கோபப்படாத நண்பா ! நான் உண்மையா தான் சொன்னேன்.சண்டே ரெடியா இரு.கோயிலுக்குப் போறோம்.தப்பித்தவறி கூட நான்வெஜ் மேலக் கைய வச்சுடாத “என்று எச்சரித்தான்.

” சரி அப்போ ஸ்பூன்ல சாப்பிட்டுக்கிறேன் கோவர்த்தனா ” 

” அடி வாங்காதடா ஹரீஷ். எனக்காக இதை மட்டும் செய் நண்பா ” 

ஹரீஷூம் , ” சாப்பிடல விடு.ஆமா ஏன் உனக்கு திடிர்னு மனசு சரியில்லாம போச்சு ? ” என்று உண்மையான அக்கறையில் கேட்டான்.

” அடிக்கடி அப்படி ஆகிடுதுடா.நானும் உன்கிட்ட பேசி மைண்ட் – ஐ  சேஞ்ச் பண்ணிடுவேன்.ஆனா அது டெம்ப்ரவரியாக தான் முடியுது.முழுசா மாத்த முடியல.அதுதான் கோயிலுக்கு கூப்பிட்டேன் ” 

அவனது முகத்தை ஆராய்ந்த ஹரீஷ் ,

” ஒன்னும் பிரச்சினை இல்லை.போய்ட்டு வந்துடலாம். பீ ஹேப்பி ” 

கோவர்த்தனனை உற்சாகப்படுத்துவதே தன் முதன்மையான வேலையாக எடுத்துக் கொண்டு அதில் ஈடுபட்டான்.

அன்று முழுவதும் ஹரீஷ் நண்பனின் முகத்தை வாட விடவில்லை. கோவர்த்தனனும் மனம் விட்டு சிரித்துப் பேசினான்.

மாலை வேலை முடியும் தருவாயில் இருக்கும் பொழுது ,

” நண்பா உங்கிட்ட நேத்து மார்னிங் நடந்ததை சொல்ல மறந்துட்டேன் ” என்று தான் ஒரு பெண் மயங்கி விழுந்திருப்பதைக் கண்டு , அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்து , அவளது தமக்கை இளந்தளிரைப் பார்த்தது வரை அனைத்தையும் கூறி முடித்தான்.

” ஓகோ ! அதனால் தான் நேத்து லேட் ஆக வந்தியா ? சுபாஷினி கலகலப்பான கேரக்டர் போல. அந்த பொண்ணோட அக்கா இளந்தளிர் டெர்ரராக இருப்பாங்களோ ? ஏன்னா உன்னை இப்படி பேசி இருக்காங்களே ? ” 

நண்பனிடம் கேட்டான் ஹரீஷ்.

” அப்படி இருக்காதுடா. முன்னப்பின்ன தெரியாதவங்க கிட்ட பேசும் போது நேரடியாக விஷயத்தைப் பேசி முடிச்சுட்டா. தளிர் வழவழன்றப் பேச்சுக்கே இடம் கொடுக்கல ” அவளைப் புகழ்ந்து பேசும்போது வார்த்தையை விட்டிருந்ததைக் கண்டறிந்து விட்டான் அவனது தோழன்.

” தளிரை மீட் பண்றதுக்கான சான்ஸ் இருக்காங்க கோவா ? ” என்று இவனது பெயரை விளையாட்டாக சுருக்கிக் கேட்டான்.

” அதுக்கு சான்ஸ் இருந்தாப் பாக்கலாம் . இப்போ வேலையைப் பாக்கலாம் . ஹாஃப் அண்ட் ஹவர் தான் இருக்கு ” 

மடமடவென்று வேலையை முடித்தனர்.

இளந்தளிரின் பெயர்ச் சுருக்கம் அவனது மனதில் பதிந்து விட்டது. ஆனால் அந்த தளிரின் முகத்தை மீண்டும் காண சந்தர்ப்பம் வாய்க்குமா ?  என்பது அவனுக்கே தெரியாததால் தான் அதை ஒதுக்கி வைத்து விட்டான் கோவர்த்தனன்.

– தொடரும்

அத்தியாயம் 5 ❣️

வீட்டில் தன் அன்னையிடம் வந்த கோவர்த்தனன் ,

” ம்மா நாளைக்கு நானும் , ஹரீஷூம் கோவிலுக்குப் போகலாம்னு ப்ளான் போட்ருக்கோம் “

என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போது மணி ஒன்பது.

” போய்ட்டு வா ப்பா. அப்படியே உன் ராசி , நட்சத்திரத்துக்கும் , ஹரீஷோடதுக்கும் அர்ச்சனைப் பண்ணிடு ” 

தன் மகன் கோவர்த்தனனின் தோழன் ஹரீஷிற்கும் சேர்த்தே அர்ச்சனை செய்யச் சொல்வது அவரது வழக்கம்.

” பண்ணிடறேன்மா. உங்களுக்கு எதாவது மளிகை சாமான் வாங்கிட்டு வரனுமா ? “

அடுத்த நாள் கோயிலுக்குப் போய் விட்டு ,வரும் வழியில் வாங்கி வர வேண்டிய பொருட்கள் என்னவென்று முந்தைய நாளிலேயே தாயிடம் கேட்டு வைத்துக் கொள்வான் கோவர்த்தனன்.

” நாளைக்கு நான்வெஜ் செய்ய முடியாது. அதனால் சாதம் , புடலங்காய் கூட்டு செஞ்சுடறேன். நீ புடலங்காய் வாங்கிட்டு வந்துடு.அப்பளம் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வா ” 

சைவ உணவிற்கான சிறு பட்டியலை அவனிடம் கூறியவர் ,

” ஹரீஷ் வீட்ல நான்வெஜ் செய்வாங்களே ! அவன் எப்படி சாப்பிடாம வருவான் ? ” 

” அவனும் அதையே தான் சொன்னான்மா. எப்படியோ சம்மதிக்க வச்சுட்டேன் ” 

புன்னகையுடன் கூறி முடித்தான் மகன்.

” நல்ல ஃப்ரண்ட்ப்பா ” என்று அவரும் சிரித்தார்.

” போய் சீக்கிரம் தூங்கு ” 

மகனை உறங்க அனுப்பி விட்டு இவரும் உறங்கச் சென்றார்.

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

பொழுது புலர்ந்ததும் , காலைச் சூரியனின் புது மலர்ச்சியைப் பார்த்து அக்கா , தங்கை இருவரும் கண்குளிரப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தனர்.

விடுமுறை நாள் ஆதலால் , சுபாஷினியும் , இளந்தளிரும் எப்போதும் போல் , நிதமும் தாங்கள் கண் விழிக்கும் நேரத்திற்கு விழித்திருந்தனர்.

” அக்கா… அந்த சூரியனைப் பாரேன்.செம்மயா இருக்குல்ல ! சச் அ க்யூட் லுக் ! ” 

தளிரின் விரல்களைப் பற்றிக் கொண்டு அருகில் இருத்தி வைத்த சுபாஷினி தான் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கும் காட்சியைத் தவறாமல் தமக்கைக்கும் காட்டி அவளையும் மகிழ்விக்க நினைத்தாள்.

” யெஸ் சுபா. விடியற்காலையில் எழுந்தாலும் அலுப்பே இல்லாம , தூக்கக் கலக்கமே இல்லாம இந்த சூரியன்  எவ்ளோ ஃப்ரஷ்ஷா இருக்காரு பாரு ! ” 

சுபாஷினிக்கு நிகராக இளந்தளிரும் ஆதவனின் ஆளுமையைப் பார்த்து வியந்து மகிழலானாள்.

” போதும் டி. கண்ணுக் கூசுது ” 

தன் விழிகளை சூரியனிடத்தில் இருந்து சற்று விலக்கி அங்கே வான வெளியில் பறந்து கொண்டு இருந்த அழகிய பறவைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் இளந்தளிர்.

ஆகாயம் முழுவதையும் தன் சிறகுகளால் சிறை எடுக்க நினைத்ததோ அப்பறவைகள் கூட்டம் !

” சுபா அங்கே பாரேன். அந்த பேர்ட்ஸ் எல்லாம் அவ்ளோ உயரத்துலப் பறந்துட்டு இருக்குதுங்க ! ” 

தங்கையிடம் கூறி அவளது பார்வையை அந்த பறவைகளினிடத்தில் வீசச் செய்தாள்.

” ஐஐ.. சூப்பர் சூப்பர். அழகா இருக்குக்கா ” 

அவ்விருவரும் இந்த தருணங்களை இழந்து விடாமல் கண்ணுக்குத் தெரிந்த சுகமான , மனதை வருடும் காட்சிகளைப் பார்த்து மனதினுள் சேகரித்துக் கொண்டனர்.

” இளா ! சுபா ! வீட்டுக்குள்ள வாங்க ” 

சிவசங்கரி மகள்கள் இருவரையும் மாடியிலிருந்து இறங்கி வருமாறு அழைத்தார்.

” அம்மா கூப்பிட்றாங்க. வா போகலாம் ” 

சுபாஷினியை அழைத்துக் கொண்டு இல்லத்திற்குள் விரைந்தாள் இளந்தளிர்.

” என்ன அக்காவும் , தங்கச்சியும் மாடிக்குப் போய்ட்டு இவ்ளோ நேரம் கழிச்சு வர்றீங்க ? ” 

எதார்த்தமாக விசாரித்தார் சிவசங்கரி.

” அதுவா அம்மா ! இயர்லி மார்னிங் வானத்தையும் , அந்த சூரியனையும் பார்த்துட்டு இருந்தோம். கூடவே பட்சிகளையும் பார்த்துட்டே இருந்ததுல எங்க ரெண்டு பேரோட மைண்ட் – யும்  ஃப்ரஷ் ஆகிருச்சு.அதையே பார்த்துட்டே இருந்துட்டோம் “

பொறுப்பாக பதில் சொன்னாள் மூத்தவள்.

” உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. குளிச்சுட்டீங்க தான ? போய் சிக்கன் வாங்கிட்டு வாங்க ” 

அன்றக்கு அசைவ உணவு சமைப்பதற்காக கோழிக்கறி வாங்கி வரச் சொன்னார்.

” நான் இன்னும் குளிக்கலம்மா ” 

குளிக்கச் செல்வதற்காக வந்த சுபாஷினி அக்காவைத் தேட , அவள் மாடிக்கூச் சென்றிருப்பதை அறிந்து கொண்டு இவளும் அங்கே சென்று விட்டாள்.குளிப்பதை மறந்தும் விட்டாள்.

” அப்போ நீ போய் குளி. இளா நீ மட்டும் கடைக்குப் போய்ட்டு வா ” 

” சரிங்க அம்மா. போய்ட்டு வரேன். எப்பவும் போல ஒரு கிலோ தான ?” 

என்று கேட்டவாறே தனது கைப்பை மற்றும் இறைச்சியை வைத்துக் கொண்டு வருவதற்காகத் தனியே ஒரு பையையும் எடுத்துக் கொண்டாள்.

” ஆமாம் இளா. இந்த நேரத்துக்குக் கடையில் கூட்டம் இருக்காது. நீ சீக்கிரமே வந்துடலாம் ” 

மகளிடம் கூறிவிட்டு , இறைச்சியைச் சமைக்கத் தேவையான பொருட்களை அரிந்து வைக்கச் சமையலறைக்குள் சென்றார் சிவசங்கரி.

” ரொம்ப நாள் ஆச்சு. ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வா அக்கா ” 

ஆசையாகக் கேட்ட சுபாஷினியைப் பார்த்தாள் இளந்தளிர்.

” அம்மாகிட்ட கேட்டியா ? ” 

” இல்லக்கா. நீ வாங்கிட்டு வந்த பிறகு சொல்லிக்கலாம் ” 

என்று அறிவுப்பூர்வமாக யோசனைக் கூறினாள் சுபா .

” எதுக்கு ! அந்த ஹாஸ்பிடல் விஷயம் மாதிரி மறுபடியும் திட்டு வாங்கனுமா ? நீ விஷயத்தை சொல்லிக் கேளு அம்மா சரின்னு சொன்னா நான் ரெண்டு ஐஸ்க்ரீமே வாங்கிட்டு வர்றேன் ” 

முன்னர் நிகழ்ந்த சம்பவம் இளந்தளிரை , ‘ இனி அம்மாவிடம் பொய் சொல்லவே கூடாது ‘ என்ற முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது.அதனால் தான் தங்கையிடமும் அதை எதிர்பார்க்கிறாள்.

” அவங்ககிட்ட கேக்குறதா ? வேணாம் க்கா . நீ கிளம்பு ” 

ஏற்கனவே அம்மாவிற்குத் தன் மேல் சிறு வருத்தம் இருப்பதைக் கண்டு கொண்ட சுபாஷினிக்கு இதை அவரிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது.

” இளா …. இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க ? ” 

அதட்டலாய் வந்தது தாயின் குரல்.

” அம்மா சுபாவுக்கு ஐஸ்கிரீம் வேணுமாம் . அதையும் வாங்கிட்டு வரவா ? ” 

கோரிக்கை விடுத்தாள் மகள்.

” அட என் உடன்பிறப்பே ! ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர முடியாதுனு சொல்லி இருக்க வேண்டியது 

தான ? அவங்ககிட்ட மாட்டி விட்டுப் பழி வாங்கப் பாக்குறியா ? ” 

 சமையலறையை எட்டிப்  பார்த்தாள் சுபாஷினி.

” என்ன இன்னும் இவங்களைக் காணோம் ? ” 

என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கே சிவசங்கரி விஜயம் செய்தார்.

” ஐஸ்க்ரீம் தான வாங்கிக்கோங்க. இளா லேட் ஆக்காம கிளம்பு ” 

இரண்டே இரண்டு வாக்கியத்தில் சுபாஷினியின் கண்களில் ஆச்சரியத்தை விதைத்து விட்டு , அமைதியாக சென்றிருந்தார் அவர்களின் தாயார்.

” என் தாயெனும் கோயிலோட வார்த்தைகளைக் கேட்டு மெர்சலாகிட்டேன். இன்னும் ஏன் வெய்ட் பண்ற அக்கா ? கடைக்குப் போய் எனக்கு ஒரு சாக்லேட் கோன் வாங்கிட்டு , உனக்குப் பிஸ்தா கோன் யும் வாங்கிட்டு வா ” 

அக்காவை வாசல் வரை கைப்பிடித்துச் சென்று அனுப்பி வைத்தாள் சுபா.

அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே  கடைத்தெருவிற்குத் தன் இருசக்கர வாகனத்தில் பயணமானாள் இளந்தளிர்.

” அம்மா நான் கோயிலுக்குப் போய்ட்டு வரேன் ” 

என்று சுமதியிடம் கூறினான் கோவர்த்தனன்.

“சரி கோவர்த்தனா. சொன்ன மாதிரி அர்ச்சனை பண்ணிடு ” 

என்று கூறி வழியனுப்பினார்.

வண்டியை எடுத்துக்கொண்டு ஹரீஷின் வீட்டின் வாசலில் போய் நின்றான் கோவர்த்தனன்.

” டேய் ஹரீஷ் ! கோயிலுக்குப் போகனும்ல வெளியே வாடா ” 

என்று இவன் வாசலின் முன்னால் நின்று உரக்கத் கத்தினான்.

” இருடா கோவர்த்தனா ! கிளம்பிட்டேன்” 

அங்கே ஹரீஷ் உடன் சேர்ந்து அவனது தாயாரும் வந்தார்.

” என்னப்பா நல்லா இருக்கியா ? அம்மா எப்படி இருக்காங்க ? ” 

அவனை விசாரிக்க ஆரம்பித்தார் ஹரீஷின் தாய் ரோகிணி.

” நல்லா இருக்கேம்மா. அம்மாவும் நல்லா இருக்காங்க. ” 

பொறுமையாக அவரிடம் தெரிவித்தவன் ஹரீஷ் தன் வண்டியில் ஏறியதும் ,

” போய்ட்டு வர்றோம்மா ” என்று அவரிடம் விடைபெற்றவர்கள் கோயிலுக்கு விரைந்தனர்.

” டேய் நண்பா ! நான்வெஜ் கடை எதுவும் என் கண்ணுலப் படாம வண்டியை ஓட்டு. இல்லன்னா என்னோட கன்ட்ரோல் போயிடும்.அப்பறம் உனக்குத் தான் கஷ்டம் ” 

” அட இன்னும் இந்தப் புலம்பலை விடலயாடா நீ ? இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது கறி சாப்பிடாம இருந்து பாரு. அடுத்து வர்ற வாரத்துலயும் உனக்கு அதுவே பழகிடும் ” 

தனது வாகனத்தை இயக்கியவாறே நண்பனிடம் உரையாடினான் கோவர்த்தனன்.

” எனக்கு எதுக்குடா பழகனும் ?  கோயிலுக்குப் போறது நல்ல விஷயம்ன்னு எங்கம்மா உன்கூட அனுப்பி வச்சாங்க. ஆனா நீ எனக்கு ஆப்பு வைக்குறதுக்குத் தான் கூப்பிட்டுப் போறியா ? இதெல்லாம் நல்லதொரு செயலாடா ? ” 

விடிந்ததும் கோவர்த்தனன் கூறியது போல் கோயிலுக்குச் செல்லத் தயாராக வேண்டும் என்று தன் அம்மா ரோகிணியிடம் கூறியிருந்தான் ஹரீஷ்.

” ரொம்ப நல்ல விஷயம்டா ! நானே சொல்லலாம்னு இருந்தேன். கோவர்த்தனனே கூப்பிட்டுட்டான். நீ கிளம்பு ! கிளம்பு ! ” 

அவனை துரிதமாகக் கிளப்பி விட்டிருந்தார் அன்னை.

இல்லாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை  இத்தனை விரைவில் அவனால் கண்ணைக் கூட திறந்திருக்க முடியாது என்பதே நிஜம்.

” பாரு உனக்கு நான் நல்லது பண்றேன்னு அம்மாவுக்கே தெரிஞ்சுருக்கு. ஆனா நீ உன் நண்பனை நம்ப மாட்ற ? ” 

என்று அவனுடன் வாயாடினான் கோவர்த்தனன்.

” நம்பற மாதிரி நீ பண்றது இல்லையேடா ! நான் குளிச்சுட்டு வர்றப்போ மதியம் மத்தி மீன் குழம்பு செய்யலாம்னு ப்ளான் போட்டுட்டு இருந்தாங்க. அப்பவே உன்கிட்ட அதை சொல்லிட்டு வீட்ல இருந்துருக்கனும். நான் ஒரு மடையன். உனக்காக அதைத் தியாகம் பண்ணிட்டு வந்ததுக்கு , நீ பண்றதைப் பண்ணிட்டு இருக்க ” 

அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டே , முகத்தில் மிதமான புன்னகை வழிந்தோட இருசக்கர வாகனத்தை லாவகமாக இயக்கிக் கொண்டு இருந்த கோவர்த்தனனது பார்வையில் விழுந்தாள் இளந்தளிர் ! அவன் செல்லமாகச் சொல்லும் அவனது தளிர் ! 

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்