Loading

சீமை 10

“சின்னவனே அண்ண முதுக
கொஞ்சம் தேச்சி வுடுடா. காலைல இருந்து மிதியா வாங்கிட்டு இருக்கவோ போடச்சிருக்கு போல.” வீட்டில் இருந்து ஓடி வந்த மூவரும் மாந்தோப்பில் ஒரே மரத்தில் குரங்குகள் போல் அமர்ந்திருந்தார்கள்.

அண்ணனுக்கு மேலே அமர்ந்திருந்த கவிநேயன் ஆடைக்கு விடுதலை கொடுத்து முதுகை உற்றுப் பார்க்க, “ஆத்தாடி! அண்ணே உன் முதுகு சரியாக இன்னும் நாலு நாளாது ஆவும்.” என்று அதிர்ந்தான்.

“என்னாடா சொல்ற?” தம்பியின் வார்த்தையில் பக்கத்தில் அமர்ந்திருந்த எழில்குமரனும் அதிர்ந்து இமையவனின் முதுகை நோக்க, எதிர் அணி இருவர் கொடுத்த காயத்தோடு மதினி கொடுத்த காயமும் அதே இடத்தில் பட்டதால் புடைத்து இருந்தது.

“இவனுக்கே இப்டி சொல்றியே இந்தா பாரு என் இடுப்புல யம்மா பெரிய வீக்கோனு.” ஏதோ நினைத்து அண்ணனின் முதுகை பார்த்தவன் தன்னைவிட சிறிய காயம் என்பதால் சட்டையை தூக்கி இடுப்பை காண்பித்தான் இருவருக்கும்.

இடுப்பு எலும்பிற்கு மேல் பெரிய மலைப்பிரதேசம் போல் வீக்கம் இருந்தது எழிலனுக்கு. இரு அண்ணன்களின் வீக்கத்தை பார்த்த பின் குட்டி குரங்கு சொன்னது,

“எங்கடா சொன்னா கலாய்க்க போறீங்கனு பயந்து என் வீர தழும்ப காட்டல உங்களுக்கு. இந்தா பாருங்கடா முட்டி எவ்ளோ பெருசாயிடுச்சு.” என்றான் கால் சட்டையை முட்டி வரை ஏற்றி காட்டி.

மூவருக்கும் அடி பாரபட்சம் இல்லாமல் இன்று கிடைத்திருக்க, அதை சாமர்த்தியமாக மறைப்பதாக நினைத்து கடைசியில் உடைத்துக் கொண்டார்கள் தங்களுக்குள்.

இமையவன் அந்த நிலையிலும், “பரவாலடா வீரத்தழும்பு வாங்குறதுல கூட நம்ம மூணு பேருக்கு போட்டி குறையல.” என்றிட, சிறிதும் வெட்கம் இல்லாமல் ஆமாம் சாமி போட்டார்கள் தம்பிகள் இருவரும்.

இமையவனின் வீக்கத்தை குறைக்க எண்ணிய கவிநேயன் அதில் கை வைத்து தடவ, “யம்மோ…” என கத்த வந்தவன் வாயை மூடிக் கொண்டான்.

“என்னாடா இந்த காயத்துக்கே கத்துற” என்ற எழிலின் கேலிக்கு,

“அட லூசு பயலே! அம்மா இந்நேரம் சாப்ட்டு இருப்பாய்ங்களானு கேக்க வந்த. அந்த நேரம் பாத்து இவன் கைய வெச்சுட்டா அவ்ளோதா. இந்த காயத்துக்குலா அடங்குற ஆளாடா நானு.” 

அவனது காயத்துக்கு மருந்து போட்ட கவிநேயன் காலில் கை வைக்க வந்தான் இமையவன். உடனே விலகி அமர்ந்துக் கொண்டான். “என்னாடா?” என கேட்டிட,

“கை வைத்தியம் பாக்குற அளவுக்கு இதுலா அவ்ளோ பெரிய விசயம் இல்லிடா வுடு…வுடு.” என்றான் எங்கு கை வைத்தால் வலியில் கத்தி விடுவோமோ என்ற பயத்தில்.

இவர்கள் இருவரின் பாஷைகளை கேட்ட எழிலோ மனதில், ‘எம்புட்டு உஷாரா இருக்காய்ங்க. இவுனுக கிட்ட நம்ம வலிய காட்டிக்கிட்டா கெத்து கொறஞ்சிடும்.’ என்று எண்ணி அவர்கள் இருவரிடமிருந்தும் தள்ளி அமர்ந்து விட்டான்.

உடன் பிறந்த மூவரின் கைகளும் ஒருவழியாக மனம் இறங்கி காயத்தை தடவ சம்மதித்தது. வலி எடுத்தாலும் அதிகமாக கத்தி மீதமிருக்கும் இருவரின் முன்னும் அசிங்கப்படக் கூடாது என்பதற்காக வலிமை காட்டாமல் நடிப்பை கொட்டி அசத்தினர்.

இரவு நேர காற்று அதுவும் மாமரக் காற்று அவர்களை குறும்பு குரங்குகளாக மாற்றி விட, பேச்சுக்கள் ஒருவரை ஒருவர் கலாய்ப்பதில் இருந்தது. அவை அங்கு இங்கு என சுற்றி கடைசியில், “ஏன்டா அண்ண இம்புட்டு நேரம் ஆகியும் வூட்டுக்கு வரலியே என்னாவா இருக்கும்?” என்ற எழிலின் கேள்வியில் வந்து நின்றது.

“அதாடா எனக்கு ஒன்னு புரியல. நம்ம பண்ண சம்பவத்துக்கு வந்து விளக்குமாத்தால அடி குடுக்குன்னு  பாத்தா இன்னு வூட்டுக்கு வந்து சேராம இருக்கு. ஒருவேள நம்ம மூணு பேரயும் பாத்து பயமா இருக்கோ என்னாவோ.” என்ற கவிநேயன் வார்த்தைக்கு ஏற்றார் போல்,

“அந்தக் கட்டபொம்மனுக்கு நம்மள கண்டா ரொம்ப பயம்டா. எங்கடா நம்ம ஒத்த ஆளா இருக்கமே மூணு பேரும் தூக்கிப்போட்டு மிதிச்சிடுவாய்ங்களோன்னு. அதுக்குத்தா அடிக்கடி வேல விசயமா ஊருக்கு போறனு சொல்லி ஓடிக்கிட்டு இருக்கு.” பேசினான் இமையவன்.

“ஆமாடா, அந்த பயம் கட்டபொம்மன் கண்ணுல தெரிஞ்சிதுடா. மதினி மொகத்துக்காக கட்டபொம்மன வுட்டு வெக்க வேண்டிய கட்டாயத்துல நம்ம இருக்கோம். இல்லினா நம்மள மொறைக்குற அந்த மொறைப்புக்கே தடதடனு உடம்ப ஆட வெச்சிருப்ப.” எழில்குமரன்.

“பாவம்டா மதினி இன்னிக்கு நம்ம பண்ண சம்பவத்தியும் அந்த கட்டபொம்மன் கிட்ட மறைக்க படாதப்பாடு படுவாய்ங்க.” இமையவன்

“எதுக்குதா மதினி நம்ம அண்ணனுக்கு இம்புட்டு பயப்படுறாய்ங்களோ.” கவிநேயன்.

“நம்ம மதினிக்கு அந்த கட்டபொம்மன கண்டா பயம் இல்லிடா. நம்ம அண்ணன்ற ஒரே எண்ணத்துக்காகதா வுட்டு வெச்சிருக்காங்க. இல்லினா இன்னிக்கு பாத்தல நம்ம மூணு பேரயும் எப்டி விரட்ட… விரட்ட அடிச்சாங்கனு.” என இமையவன் சிரிக்க,

“ஏன்டா, நம்மள அடிச்ச மாதிரி மதினி அந்த கட்டபொம்மன துரத்தி..துரத்தி அடிச்சா எப்டி இருக்கும்.” சுகமான வார்த்தையை விட்டான் கவிநேயன்.

தம்பியின் வார்த்தைக்கு உடனே செவிமடுத்த எழில்குமரன் அதை கற்பனை செய்து சிரிக்க, அவன் சிரிப்பை விசாரித்து பின் தொடர்ந்தார்கள் கனவில். மதுரவீரனை ஓட விட்டு விரட்டி அடிக்கும் காட்சிகள் கண் முன்னால் வர,

“மதினி அப்டித்தா வேகமா அடிங்க. இன்னு… இன்னு…நல்லா அடிங்க…” ஆர்ப்பரித்தான் கவிநேயன்.

“மதினி அந்த கட்டபொம்ம ஓடுறா பாருங்க… கால புடிச்சி ஒரே இழு இழுத்துப் போட்டு மேல உக்காந்து குமுறி எடுங்க.” இமையவன்.

“மதினி வாய மூடாதிங்க கட்டபொம்ம கத்துறத நாங்க காது குளிரா கேக்கணும்.” எழில்குமரன்.

மூவரும் கற்பனை செய்து அதில் கண்ட மேனிக்கு பேசியும் வைத்தார்கள். சிரிப்பு சத்தம் மாமரத்தில் பேய் அமர்ந்து சிரிப்பது போல் அகோரமாக கேட்டது. வயிறு வலிக்க சிரித்து ஓய்ந்தவர்கள் முடியாமல் ஆளுக்கொரு கிளையில் சாய, நிழல் உருவம் ஒன்று அவர்களுக்கு நேராக நின்றது.

முதலில் அதை கவனிக்காத மூவரும் பின் கவனித்து, “எழிலா உனக்கு அங்க ஏதாச்சு தெரியுது?” கேட்டான் இமையவன்.

“ஆமாடா, ஆரோ நிக்குற மாதிரி இருக்கு.”

“அண்ணே நம்மள எவனோ பயப்படுத்த நிக்குற மாதிரி தோணுது.” அறிவாளியாக காட்டிக் கொள்ள கவிநேயன் ஒன்றைக் கூற, பயந்து கொண்டிருந்த அண்ணன்கள் இருவரும் அவன் புறம் சாய்ந்தார்கள்.

உற்றுப் பார்த்தும் அந்த முகம் சரியாக தெரியவில்லை அவர்களுக்கு. “எடேய்! எவன்டா அது மதுரவீர தம்பிமார பயமுறுத்த நெனைக்குறது. எங்க அண்ண பெரிய சாமியாடிடா. பம்ப அடிக்குறது மட்டும் இல்லிடா பேய் ஓட்றது, செய்வினை எடுக்குறதுனு எல்லாத்தியும் பண்ணுவாரு. அப்டிப்பட்டவரு தம்பிகளை பயமுறுத்த பாக்குறியே யாருடா நீ முட்டா பயலே. ” சத்தமாக எழில்குமரன் கத்த, அந்த உருவம் அசையவில்லை.

“எவனோ வேணுனே பண்ணுறாய்ங்கடா.”

“ஒருவேள அவுனுங்க ரெண்டு பேத்துல ஒருத்தனா இருக்குமோ.”

“இருந்தாலும் இருக்குடா. இந்த மாதிரி வேலலா அவனுகதா பண்ணுவாய்ங்க.”

“மதியம் அவுனுங்கள சும்மா வுட்டு இருக்க கூடாதுடா. இன்னு நாலு மிதி மிதிச்சி இருக்கணும்.”

“மதினி வந்ததால தானடா வுட வேண்டியதா போச்சு.”

“அப்போ வுட்டா என்னாடா? இப்பதா சிக்கி இருக்கானே அதுல ஒருத்த. இருட்டுல தெரியுற உருவம் மாதிரிதா பகல்லயும் இனி அவன் மூஞ்சி இருக்கணும்.”

“வாங்கடா, மூணு பேரும் அவன சுத்து போட்டு முடிச்சி வுடுவோம்.” கடைசியாக பேச்சை முடித்த கவிநேயன் அண்ணன் இமையவனின் கைப்பேசியை எடுத்து, ஒளியை அந்த உருவத்திற்கு நேராக படர விட்டான்.

“எத்தே யம்மோய்ய்… நிக்குறது அண்ணடா….” என்று கவிநேயன் மரத்திலிருந்து விழ, அண்ணன் முகத்தைப் பார்த்த மற்ற இருவரும் தொப்பன்று தரையில் விழுந்தார்கள்.

விழுந்த வேகத்தில் மூவரும் எழுந்து தொடை நடுங்கிக் கொண்டு நிற்க, இருட்டில் நின்ற அந்த உருவம் அவர்களை நெருங்கியது. பேயை கண்டால் கூட இந்த அளவிற்கு பயம் கொள்ள மாட்டார்கள் போல மதுரவீரனின் தம்பிகள்.

“சத்தியமா நாங்க எதுவும் பண்ணல’ண்ணே… அவுனுங்க ரெண்டு பேருதா எங்க கிட்ட வம்பு பண்ணாய்ங்க.” அண்ணன் விசாரிக்கும் முன் மூவரும் ஒரே நேரத்தில் வாக்குமூலம் கொடுத்தார்கள்.

மதுரவீரன் அருகில் நெருங்கவும் தூரத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனத்தின் ஒளி  அவன் முகத்தில் படவும் சரியாக இருந்தது. கண்களை உருட்டி மூச்சு விட்டு நெஞ்சை நிமித்தி நிற்கும் அண்ணனை பார்க்க மதுரைவீரன் போல் தான் இருந்தது. போதாக்குறைக்கு அவன் கோபத்திற்கு ஏற்ப தசைகள் முறுக்கிக் கொண்டு வேறு நிற்க, கட்டியிருக்கும் வெள்ளை வேட்டி சிகப்பு நிறமாக மாறுவது போல் உணர்ந்தார்கள்.

வளவளவென்று பேசும் மூவரின் வாயும் பசை போல் ஒட்டிக்கொள்ள, “என்னாய்ங்கடா நடக்குது இங்க?” என்ற கணீர் குரலில் மூவருக்கும் மரண பயம் உண்டானது.

அதன் பிரதிபலனாக வாயை திறக்காமல் மௌனம் சாதிக்க, “ஏய்” என்ற ஒரே ஓசை கொட்ட வைத்தது வார்த்தைகளை.

அண்ணன் இல்லாத இந்த இடைப்பட்ட இரண்டு நாட்களில் செய்த அத்தனை வம்புகளையும் அடுக்கி விட்டார்கள். கடைசியாக மச்சக்காளையன் தம்பிகளோடு செய்த போர்க்களத்தையும் சொல்லி முடிக்க, கையில் பிடித்திருந்த மாமரத்தின் குச்சி ஈவு இரக்கம் பார்க்காமல் மூவரின் பின்பக்கத்தையும் பதம் பார்த்தது.

அண்ணனைக் காப்பாற்ற வேண்டும், தம்பியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் தான் தப்பித்தால் போதும் என்ற அளவிற்கு மூவரும் அலறியடித்து ஓடினார்கள் ஆளுக்கு ஒரு திசையில். விரட்டி பிடித்து அடிக்காதவன் ஓர் இடத்தில் நின்று கொண்டு,

“நானா வந்தனு வைய்யிங்க நாளைக்கு காலில எவனும் எந்திரிக்க மாட்டீங்க. மருவாதையா நா இருக்க இடத்துக்கு வந்துடுங்க சேதாரம் சொச்சமா இருக்கும்.” என்ற கட்டளையின் பேரில் கட்டுப்பட்டார்கள் மூவரும்.

உடம்பை ரணமாக்கிக் கொள்ள மூவரும் தானே முன்வந்து நிற்க, சிறுமயிலூர் கிராமம் அதிர்ந்து அடங்கியது அவர்களின் அலறல் ஓசையில்.

“ஏண்டா அப்பன மாதிரி ஆகிடக்கூடாதுனு உங்க மூணு பேத்தியும் படிக்க வெச்சுக்கிட்டு கெடந்தா நீங்க சண்டியாதனம் பண்ணுவீகளா. அப்பன மாதிரி ஜெயிலுக்கு போயி கம்பி எண்ண போறீங்களாடா. நமக்கும் அந்த குடும்பத்துக்கு ஆவாதுனு தெரிஞ்சும் எதுக்குடா அங்கயே கை வெக்கிறீங்க. எனக்கு அவன ஆவாது, உங்களுக்கு அவன் தம்பிகளா ஆவாதுனு தெரிஞ்சு ஒதுங்கி போவாமா எதுக்குடா சேத்த அள்ளி பூசிக்கிறீங்க.” என்றவன் அடி அதற்கு மேல் பேசியது.

“ஊருக்குள்ள கால வெச்சதும் வெக்காததுமா இங்க இருக்க பெருசு அத்தினியும் புகார் வாசிக்குறாய்ங்க. ஊர வுட்டு தள்ளி வெப்போம்னு எங்கிட்டயே வசனம் பேசுறாய்ங்க. அம்புட்டயும் பண்ணிப்புட்டு என்னை என் பொண்டாட்டி அடிக்குற மாதிரி கனவு வேற கேக்குதாடா உங்களுக்கு. இனிமே அவுனுங்க கூட சண்ட போடுவீகளா…” கடைசி வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி அடித்துக் கொண்டே இருந்தான்.

மூவரின் வாயில் இருந்தும், “இனிமே அவுனுங்க கிட்ட வம்பு வெச்சுக்க மாட்டோம்.” என்ற வாசகம் வரும் வரையில் அடிப்பதை நிறுத்தவில்லை மதுரவீரன்.

****

சீமை 11

மாடுகளைக் கட்டி வண்டி ஓட்டுவது போல் மூவரையும் முன்னால் நடக்க விட்டு கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நடந்து வந்தான் மதுரவீரன். அந்த நேரத்தில் வெளியில் இருந்து ஒரு சிலர் அவர்களை கவனிக்க, கண்டும் காணாமலும் தம்பிகளை அழைத்துச் சென்றான்.

“ஏம்பா, இவுனுங்க பண்ண கூத்த சொல்லியும் ஒரு வார்த்த கேக்கலயா நீயி” நேரம் பார்த்து ஒரு பெரியவர் வந்து வழி மறிக்க,

“இவன நோட் பண்ணி வெச்சுக்கோங்கடா நேரம் கெடைக்கும் போது வாயில புளியங்கொட்டய வெச்சு கொமட்ல இடிச்சிடுலா.” அண்ணன் கேட்காது பொறுமையாக தம்பிகளுக்கு கட்டளையிட்டான் இமையவன்.

“அதெல்லா கேட்டுட்ட இனி இந்த மாதிரி எதுவும் நடக்காது.” என்றவனுக்கு, “இந்த பேச்ச மட்டும் சொல்லாதப்பா. ஒவ்வொரு தடவயும் கண்டிக்குற பேருல இத நீயி சொல்லுறதும், அடுத்த ரெண்டு மூணு நாளுல உன் தம்பிமாரு இந்த ஊர நாரடிக்குறதும் சகஜமா போச்சு. பேசாம இவுனுங்க மூணு பேத்தியும் கொண்டு போய் எங்கயாது விடுதில தங்க வெச்சிடு. அனாதையா இருந்தாதா வருத்தம் புரியும்.” என்றார்.

“இங்க பாருங்க மாமா பெரியவங்கன்னு மருவாத குடுத்து பேசிக்கிட்டு கெடக்க. எம்முன்னாடியே என் தம்பிகள அனாதைனு சொல்றீங்க… நாக்க அறுத்து போட்டு இருப்ப வேற ஆராது சொல்லி இருந்தா. அவுனுங்க என்னா உங்க வூட்டுக்குள்ள வந்தா வம்பு இழுத்தாய்ங்க. இந்த அளவுக்கு கரிச்சு கொட்டிக்கிறீங்க. சும்மா நாக்கு இருக்குனு பாட்டு பாடிட்டு கெடக்காதீங்க. ‌ என் தம்பிகள எப்டி பாத்துக்கணுனு எனக்கு தெரியும்.” என்றவன் கோபம் எதிரில் இருப்பவரை மேற்கொண்டு பேச விடாமல் செய்தது.

“எடேய், இவனுக்கு புளியங்கொட்ட மட்டும் இல்லிடா பூச்சிக்கொல்லி மருந்தயும் சேத்து உத்தி வுடனும் ‌” என்ற எழிலின் வார்த்தைக்கு மிதமிருந்த இருவரும் தலையசைத்தார்கள்.

பேசியவரை விட்டு சற்று தொலைவில் வந்ததும் திட்ட துவங்கினான். “இன்னிக்கு நம்ம தூங்குன மாதிரி தான்” என்ற இளையவனின் பேச்சு சத்தம் லேசாக மதுரவீரன் காதில் விழுந்தது.

“முதுகுல ஒன்னு வெச்சேனு வையி மொத்த தோலும் தரையில விழுந்துப்புடும். பேசாம நடந்தோமா வூட்டுக்கு போனோமானு வேகத்தை கூட்டுங்கடா.” என்ற பின் எதுவும் பேசிக்கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தார்கள்.

கணவன் பின்னால் வருவதை அறியாத ஒளிர்பிறை, “ஏண்டா குரங்குகளா எங்க போய் தொலைஞ்சீங்க? உங்க அண்ண வரதுக்குள்ள ஆட்டுக்கறிய அவிச்சு வெச்சிருக்க தின்னுட்டு மல்லாக்க படுத்துடுங்க. கட்டபொம்ம வந்துட்டா தின்னதெல்லாம் வெளிய வந்துடும்.” என்றவள் வாய் ஊமையாகி விட்டது தனக்கானவனை பார்த்து.

மதினியின் திடுக்கிட்ட முகபாவனையில் கொழுந்தன்கள் மூவரும் அண்ணன் அறியாது சிரிக்க, உதட்டுக்குள் முணுமுணுத்து திட்டினாள்.

எதையும் பேசிக் கொள்ளாதவன் முறைத்துக் கொண்டே அவளை கடந்து செல்ல, ஓர விழியால் நோட்டம் விட்டவள் அவன் முழுவதும் அறைக்குள் மறைந்ததை உணர்ந்து நெஞ்சில் கை வைத்தாள்.

“என்னாய்ங்கடா உங்க அண்ண மொறைச்சிக்கிட்டே போறாரு.”

“ஆமா, அடிச்ச அவருக்கு மொறைக்குறதுதா ஒரே வேல.”

“என்னாது அடிச்சாரா, எதுக்கு?”

“ஊருக்குள்ள கால வெச்சதும் எவனோ போட்டுக் குடுத்துட்டா மதினி. அண்ண இருக்குறது தெரியாம ஓவரா வேற பேசி சிரிச்சிட்டோம். என்னிக்கும் இல்லாம இன்னிக்கு அடி கொஞ்சம் ஓவரு.” என்ற இமையவனின் முகத்தில் அளவு கடந்த சோர்வு இருப்பதை உணர்ந்தாள்.

கணவனை மனதினுள் திட்டிக் கொண்டவள், “இதுக்குதா சொல்றது வால சுருட்டிக்கிட்டு ஒரு எடத்துல இருங்கனு. தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைங்கள அடிக்கக்கூடாதுனு கொஞ்சோம் கூட உங்க அண்ணனுக்கு எண்ணம் இல்ல. எப்ப பாரு மாட்ட அடிக்குற மாதிரி அடிக்க வேண்டியது.” புலம்பிக்கொண்டே மூவரையும் அழைத்துச் சென்றாள்.

சோர்ந்து சுவற்றின் ஓரம் கவிநேயன் அமர முயற்சிக்க, வீங்கி போன முதுகு ஒத்துழைக்க மறுத்தது. அதை முணங்கலாக அவன் வெளிக்காட்ட, கொழுந்தனின் சட்டையை  நகர்த்தி பார்த்தவள் கொதித்தாள்.

“மதினி எதுவும் கேக்காதீங்க” என எழில்குமரன் சொல்லி முடிப்பதற்குள் தன் அறைவாசலில் நின்றாள் ஒளிர்பிறை.

“உங்க மனசுல என்னா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க மாமா? அவுனுங்க உங்க தம்பிங்க நியாபகம் இருக்கட்டும். ஏதோ அடிமைகளை அடிக்குற மாதிரி போட்டு அடிச்சு வெச்சிருக்கீங்க. எத்தினி தடவ உங்க புத்திக்கு உரைக்குற மாதிரி சொல்றது இந்த மாதிரி அடிக்காதீங்கன்னு‌. ‌ நீங்க அடிச்சி அடிச்சிதா அவுனுங்க உடம்புல சொரணை இல்லாம போயிடுச்சு. இன்னு உங்க கைய புடிச்சு நடக்குற குழந்தைங்க இல்ல அவுனுங்க.” என்றவள் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சட்டையை கழட்டும் வேளையில் இறங்கினான் மதுரவீரன்.

அதைக் கண்டு கொண்டவள் அவனுக்கு முன்பாக நின்று, “இமையவன் காலேஜ் செகண்ட் இயர் படிக்குறான். எழிலன் ஃபர்ஸ்ட் இயர் படிக்குறான். சின்னவ பத்தாவது படிக்குறான். மூணு பேத்துக்கும் இன்னு கொஞ்ச வருசத்துல கண்ணாலம் ஆகி பொண்டாட்டினு ஒருத்தி வந்துடுவா. இந்த மாதிரி அடிச்சுக்கிட்டு இருந்தா வரவ சும்மா இருப்பாளா. கேக்க ஆளு இல்லினு நெனைச்சு உங்க இஷ்டத்துக்கு அடிச்சிக்கிட்டு இருக்காதீங்க. வந்து பாருங்க மாமா எத்தினி வீக்கம் போடச்சி இருக்குனு.” என்ற மனைவியின் பேச்சை சிறிதும் காதில் வாங்கிக் கொள்ளாதவன் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டான்.

முடிந்தவரை வாய்க்குள் புலம்பி தள்ளினாள். ஒளிர்பிறையின் சத்தத்தில் செந்தமிழன் கீழ் இறங்கி வர, “நீயாது உங்க அண்ணனுக்கு சொல்ல கூடாதா தமிழு. அவருக்கு அடுத்து இருக்கனுதா பேரு. ஒன்னையும் காதுல போட மாட்டிக்குற‌” அவனையும் விட்டு வைக்காமல் பொறிந்தாள்.

“ஆருக்குனு மதினி ஆதரவா பேச சொல்றீங்க. இவங்க எல்லாருக்கும் அடி உதைய தவிர வேற ஒன்னு தெரிய மாட்டிக்குது. இப்டியே போனா அடுத்த தலைமுறை ஜெயிலுக்குள்ளதா இருக்கும்.”

“வந்ததும் கோல்மூட்டி வுடுற வேலைய ஆரம்பிச்சிட்டியா. ரெண்டு நாளா வூட்ல இல்லாதவன் வூட்டுக்கு வந்து இருக்கானே வாய்க்கு ருசியா ஆக்கி போடனுனு தெரியாத சிறுக்கி எல்லாம் அறிவுரை கூற வந்துட்டாளுங்க.” படுத்துக் கொண்டிருந்த ஆண்டாள் மருமகளை சாடினார்.

மாமியார் மீது அளவு கடந்த கோபம் எழுந்தது. இதற்கெல்லாம் முதல் காரணம் இவர் மட்டுமே. தந்தை சென்ற எழு ஆண்டுகளில் பிள்ளைகளை கவனிக்க தவறிவிட்டார் தாயானவர். தவறிவிட்டார் என்பதை விட கணவனை ஜெயிலுக்கு அனுப்பிய குடும்பத்தை தான் மகன்கள் பழி தீர்க்கிறார்கள் என்று மகிழ்ந்தார் என்பதே உண்மை.

“யம்மா, இப்போ மதினி என்னா தப்பா சொல்லிட்டாய்ங்க?”

“நீ பேசாத சின்னவனே. இவளே இவுனுங்க மூணு பேத்தியும் அடிச்சு வெளிய துரத்தி வுட்டுடு ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்குறா. அண்ண அடிக்கக் கூடாது சரி. ஆனா, சம்பந்தமே இல்லாத இவ அடிக்கலாமா.”

“அய்த்த நா ஒன்னு சம்பந்த…” அத்தையிடம் எதிர்வாதம் புரிய வந்தவள் கணவன் வருகையை அறிந்து வாய்க்கு பூட்டு போட்டாள்.

“தெக்க சீமைல இல்லாத பொண்ண கட்டிக்கிட்டு வந்துட்ட பெரியவனே. உனக்கே புத்தி சொல்லிக் குடுத்துக்கிட்டு இருக்கா. வெக்க வேண்டிய எடத்துல வெச்சிருந்தா புத்திமதி கேக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது உனக்கு.” மகனைப் பார்த்த பின் ஆண்டாளின் பேச்சு இன்னும் மெருகேறியது.

“தமிழு அவுனுங்களுக்கு ஒத்தடம் குடு.” என்ற வார்த்தையோடு பேச்சை முடித்துக் கொண்டவன் மனைவியை முறைத்துக் கொண்டுதான் இந்த முறையும் நகர்ந்தான்.

அரை மணி நேரம் அந்த குடும்பம் அமைதியில் நேரத்தை கடத்தியது. மூவரின் சட்டை பட்டன்களை கழட்டி விட்ட செந்தமிழன் பதமான ஒத்தடம் கொடுக்க, பக்கத்தில் பார்த்தபடி அழுது தீர்த்தாள் ஒளிர்பிறை.

***

“எப்டியாது அப்பாவ வெளிய கூட்டிட்டு வந்துடுட்டா போதும் சார். ஏழு வருசமா ஜெயிலுக்குள்ள இருந்துட்டாரு.” இரண்டு வாரத்திற்குப் பின் வரும் தந்தையின் வழக்குக்காக வக்கீலோடு கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான் மதுரவீரன்.

எதிர்ப்புறத்தில் நம்பிக்கையான வார்த்தை கொடுத்திருப்பார் போல வழக்கறிஞர், “நல்லது சார். நீங்க மட்டும் இத பண்ணிட்டீங்கனா ரொம்ப நிம்மதியா இருப்போம்.” என்று அழைப்பை துண்டித்தான்.

பேசிவிட்டு திரும்பியவன் மீண்டும் திரும்பிக் கொண்டான் மனைவி நிற்பதை பார்த்து. இரு நொடி அமைதி காத்தவள் பின்னால் நின்று அணைத்துக் கொண்டாள். வெடுக்கென்று தட்டி விட்டவன் நகர்ந்து நிற்க, விடாமல் கட்டியணைத்து அவன் வாசம் நுகர்ந்து சுவாசித்தாள்.

காதோரம் கேட்கும் மனைவியின் மூச்சு சத்தத்தில் தடுப்பதை நிறுத்தியவன் அப்படியே இருக்க, “பாவம்’ங்க சின்ன பசங்க. அப்பா அம்மா எடத்துல இருக்க நீங்களே இப்டி புரிஞ்சிக்காம கை நீட்டுனா அவுனுங்க மனசு இன்னு தப்பான வழிய தான தேடி போவும்.” எனப் பேச்சை ஆரம்பித்தாள்.

“கை நீட்டாம உன்ன மாதிரி ஆதரவுகரமா நீட்டிக்கிட்டு இருக்க சொல்லுற.” சுள்ளென்று தான் வெளிவந்தது அவன் வார்த்தை.

“அது இல்ல மாமா. அவுனுங்க மூணு பேரும் பெரிய மாமாவ பாத்தும் உங்கள பாத்தும் இந்த மாதிரி ஆகிட்டாய்ங்க. ஒரு கட்டத்துக்கு மேல சண்ட வேணானு நீங்க ஒதுங்குன மாதிரி இவுனுங்களும் ஒதுங்கிடுவாய்ங்கனு சொல்லுற.”

“ஒதுங்கும்போது நா இழந்தது நெறைய ஒளிரு. அத அவுனுங்க சந்திச்சிட கூடாதுனு நெனைக்குறது தப்பா?”

“தப்புனு சொல்லல மாமா.‌ கொஞ்ச நேரம் குடுங்கனு சொல்லுற.”

“நெறைய நேரம் குடுத்தாச்சு ஒளிரு. நீயும் சரி அவுனுங்களும் சரி திருந்துற மாதிரி தெரியல.”

“நா என்னா மாமா பண்ண” அவனை விட்டு விலகி நின்றவள் உதட்டை பிதுக்கிக்கொண்டு பாவமாக முகத்தை வைக்க,

“அவுனுங்க மூணு பேத்தியும் தொவைக்குறதுக்கு முன்னாடி உன்னதா நா தொவைக்கனும். என் கூட சேர்ந்து கண்டிக்காம அடிக்கும் போது அவுனுங்களுக்கு ஆதரவா பேசிக்கிட்டு இருந்தா எப்டி என் மேல பயம் இருக்கும். ஊர்ல எல்லா பொண்டாட்டியும் புருசனுக்கு ஆதரவா இருப்பாய்ங்கனு பேரு நீ என்னாமோ கொழுந்தைங்களுக்கு ஆதரவா இருக்க.” என்றான்.

“கட்டிக்கிட்டு வரும்போது என் தம்பிமார அம்மாவா இருந்து பாத்துகனு நீங்க தான மாமா சொன்னீங்க.”

“அம்மாவா இருந்து பாத்துக்க சொன்னது உண்மைதா இல்லினு சொல்லல ஒளிரு. ஆனா, நீ எனக்கு எதுரால நடந்துக்குற.”

கணவனின் வார்த்தையில் சிரித்தவள் முன்னாள் சென்று கட்டி அணைத்தாள். பேசிய பின் கோபம் சற்று குறைந்து இருக்க, “என்னாத்துக்கு அம்மா உன்ன ஏசிக்கிட்டு கெடக்கு. நா இல்லாத நேரம் ரெண்டு பேத்துக்கும் சண்டயா.” என்றதும் விலகியவள் இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

மனைவியின் முறைப்பில் இருக்கும் அழகை புன்னகை பார்வையால் ரசித்தான் மதுரவீரன். மாமன் ரசிப்பதற்காகவே அசையாமல் நின்றவள், “என்னை பாத்தா மாமியார கொடும படுத்துற  மருமக மாதிரி தெரியுதா?” முறைப்போடு கேட்டாள்.

“கொடுமப்படுத்துனா கூட பரவால நீ பாசத்தை காட்டில எதிர்ல இருக்குற ஆள சாய்குற. ஒரு காலத்துல இந்த ஊர்ல நா பண்ணாத சண்டியா தனமா. புருசனு கூட பாக்காம வெளிய தள்ளி ஒரு நாள் முழுக்க நிக்க வெச்சு தண்டனை குடுத்தவளாச்சே நீ.” என்றதும் அந்த நாள் இருவருக்கும் ஒரே போல் தோன்ற, புன்னகைத்துக் கொண்டனர்.

 

தெக்கத்தி 12

காதல் நினைவுகளை பேசிக் கொண்டிருந்தவர்கள் தங்களை மறந்து காதலில் முழ்க ஆரம்பித்தார்கள். இரண்டு நாள் மனைவியின் முகம் பார்க்காமல் ஏங்கியவன் அந்த முகத்தை கையில் பிடித்துக் கொண்டு ரசித்தான். அவன் ரசிப்பது போல் பார்வையால் மனைவியும் மதுரவீரனின் முக அழகை ரசிக்க, “நா இல்லாம எப்டி தூங்குன?” கேட்டான் காதலோடு.

“அதுக்கு நா தூங்கி இருக்கணுமே மாமா. தெனமும் உங்களோட தூங்கி பழகுன உடம்பு நீங்க இல்லாம கட்டுப்பட மாட்டிக்குது. மாமா எப்ப வருவாருனு கேட்டே ரெண்டு நாள தள்ளிடுச்சு.”

“ஒளிரு, எப்டி பாசத்த கொட்டணுனு உன்கிட்டதா கத்துக்கணும்.”

“எப்டி மொறைச்சிக்கிட்டே காதலிக்கணுனு உங்ககிட்ட தா கத்துக்கணு.”

தாரத்தின் பேச்சில் புன்னகைத்தவன் மீசையை நீவி விட, தடுத்து முறுக்கி விட்டாள். அவள் கையைத் தட்டி விட்டவன் தன் போக்கில் தடவி விட, “இது எனக்கு சொந்தமான மீச மாமோய். தொட உரிம இல்ல உங்களுக்கு.” என்றாள்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏசிட்டு இப்ப என்னா கொஞ்சிட்டு கெடக்க.”

“வையவும் கொஞ்சவும் உரிம உள்ள ஒரே ஆளு நா மட்டும் தான மாமா.” பேசிக் கொண்டிருந்தவள் பேச்சு நின்றது தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்ட கணவன் கையால்.

இருவரின் பார்வைகளும் இருநாள் ஏக்கத்தை தீர்த்துக்கொள்ள அம்புகளை தொடுத்தது. மனம் அதை ஏற்று இன்னும் நெருக்கத்தை அதிகரிக்க, காதல் தரிகட்டு ஓடியது. கதவு திறந்திருப்பதை மறந்தவர்கள் கட்டியணைத்துக் கொண்டு ஏக்கத்தை தீர்த்தார்கள்.

உடலோடு உடல் இரண்டும் பேசிக்கொள்ள, மனம் அந்த தருணத்தை ரசித்தது. பிரிய மனமில்லாமல் அப்படியே இருந்தார்கள் வெகு நேரமாக. அண்ணன் அண்ணி காதல் தருணத்தை கெடுக்கிறோம் என்று அறியாது, “மதினி சாப்பாடு எடுத்து வெக்குறீங்களா.” என்றவாறு உள்ளே வந்தான் செந்தமிழன்.

இருவரும் திடுக்கிட்டு விலகி நிற்க, தலை குனிந்துக் கொண்டு, “மன்னிச்சிருங்க மதினி.” என வெளியேற முயன்றான்.

“தமிழு இதுக்கு எதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிட்டு, உள்ள வா” என்றான் அவனது அண்ணன்.

மதினியின் முகத்தை பார்ப்பதற்கு சங்கடப்பட்டு கொண்டு அவன் உள்ளே வர, கொழுந்தனின் மனம் அறிந்து இன்னும் சங்கடப்படுத்த விரும்பாமல் வெளியேறினாள். செல்லும்பொழுது அவள் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல, சில்லென்ற அம்பு மதுரவீரன் மனதில்.

“வழக்கு எவ்ளோ தூரம் ண்ணே இருக்கு.”

“இந்த தடவ வெளிய எடுத்துடலானு சொல்லி இருக்காரு. எனக்கு கொஞ்சம் நம்பிக்க இருக்கு தமிழு பாப்போம்…. என்னாதா நடக்குதுனு.”

“ஆரு பண்ணாய்ங்கனு தெரியாமயே வருசத்த தள்ளிட்டோம் வீணா. போலீஸ்காரங்க தல இட்டும் ஒரு முடிவுக்கு வர முடியால.”

“அதா தமிழு எனக்கு உள்ள ஓடிக்கிட்டு கெடக்கு. ரெண்டு பேரும்
நா பண்ணலனு மட்டும் தா சொல்றாய்ங்களே தவிர ஆரு பண்ணதுனு சொல்ல மாட்டிக்குறாய்ங்க.”

“காயம் ரெண்டு பேரும் வெச்சிருந்த பொருளாலதா ஆகி இருக்குனு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுதே’ ண்ணே அது எப்டி.”

“அதுதா தமிழு இன்னு பெரிய குழப்பமாவே இருந்துக்கிட்டு கெடக்கு.”

“எங்கயோ ஆரம்பிச்ச பிரச்சன எங்க கொண்டு வந்து வுட்டு இருக்குனு பாருங்க ண்ணே.”

“எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தா வருத்தப்பட முடியுது தமிழு. இவுனுங்க வேற இத புரிஞ்சுக்காம மல்லு கட்டிக்கிட்டு இருக்காய்ங்க. அப்பாவாது பரவால எல்லாத்தியும் ஆண்டு அனுபவிச்சவரு. இவுனுங்க வாழ்க்கைய பாக்குறதுக்குள்ள முடிச்சுப்பாய்ங்களோனு பதறுது.”

“அந்த அளவுக்கு போறவங்க இல்ல’ண்ணே நம்ம தம்பிங்க. விளையாட்டுப் புள்ளைகளா ஒருத்தருக்கு ஒருத்தரு அடிச்சுக்கிட்டு இருக்காய்ங்களே தவிர மனசுல எதுவும் இல்ல.”

“வஞ்சத்தோட பண்ணா கூட ஒரு நாளுல முடிஞ்சிடும் தமிழு. விளையாட்டுக்கு பண்றதுதா சில நேரம் பெரிய வினையா வந்து நிக்கும்.” அண்ணனின் வார்த்தையில் இருக்கும் உண்மை புரிவதால் மௌனம் காத்துக் கொண்டிருந்தான். 

“மாமா, தமிழு சாப்ட வாங்க.” என்ற குரல் ஒளிர்பிறையிடம் இருந்து வந்த பின் உடன் பிறந்தவர்கள் நடுக்கூடத்திற்கு வந்து விட, ஐவரையும் அமர வைத்து இரவு உணவை பரிமாறினாள்.

“அம்மா சாப்ட்டியா” என்ற மதுரவீரன் குரலுக்கு ஆண்டாள் செவி சாய்க்காமல் இருக்க, “அம்மா உன்னதா கேக்குற சாப்ட்டியானு.” என குரல் உயர்த்தினான்.

“நா என்னாத்துக்கு பெரியவனே தின்னுக்கிட்டு. இந்த வூட்ல இருக்க மகராசி தின்னா போதாதா. அவ எல்லாத்தியும் வயித்துல போட்டுக்கட்டும். எனக்கு வேணா ஒன்னு” என்றவர் அப்படி ஒரு வார்த்தையை பேசாதது போல் சுருண்டு படித்துக் கொண்டார்.

“என்னாத்துக்கு இப்ப இவ்ளோ பெரிய வார்த்தைய வுட்டுக்கிட்டு கெடக்கமா நீயி. உன்ன சாப்ட கூடாதுனு அவ சொன்னாளா?” என்றவன் மனைவியை பார்த்து,

“ஏ… ஒளிரு அம்மாவ சாப்ட கூடாதுனு நீ எதாச்சும் சத்தம் போட்டியா.” என விசாரித்தான்.

கண்கள் கலங்கி அவள் ‘இல்லை’ என்று மறுத்தாள். உடனே அன்னை புறம் திரும்பியவன், “அவ எதுவும் சொல்லாததுக்கு முன்னாடி நீயா எதுக்குமா இப்டி பேசுற. உன்ன பட்டினி போட்டு நாங்க எல்லாரும் சாப்ட்டா நல்லா இருக்குமா? எந்திரிச்சி சாப்டும்மா.” என்றான்.

ஆண்டாள் அப்படியே படுத்திருக்க, “அம்மா வீணா பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காதீங்க, எந்திரிச்சு சாப்பிடுங்க” என்றான் செந்தமிழன்.

அப்போதும் அவர் அப்படியே இருக்க, “அய்த்த நா ஏதாச்சு சொல்லி இருந்தா கூட மனசுல வெச்சிக்காம மன்னிச்சு வுட்டுருங்க. ராத்திரில சாப்டாம படுத்தா உடம்புக்கு நோவு வந்துடும். கொஞ்சமாது சாப்ட்டு படுங்க.” இறங்கி வந்தாள்.

இதற்குப் பின்பும் மகன்கள் முன்னால் வீம்பு பிடித்தால் திட்டு வாங்க வேண்டி இருக்கும் என்பதால் சாப்பிட அமர்ந்தார். கை கழுவ தண்ணீர் எடுத்து வைத்த ஒளிர்பிறை ஐவருக்கும் தேவையானதை பரிமாறினாள். சாப்பிட்டு முடித்த வீட்டின் ஆண்கள் ஐவரும் அவரவர் தட்டை எடுத்துக் கொண்டு பின்வாசலுக்கு விரைந்தார்கள்.

ஏற்கனவே மருமகளின் வேலையால் அங்கு வாளியில் தண்ணீர் இருக்க, அவரவர் தட்டை அவரவரே கழுவினார்கள். இது மதுரவீரன் தம்பிகளுக்கு போட்ட முதல் கட்டளை திருமணத்திற்கு பின். மனைவி உடன் பிறந்தவர்களுக்கு தாயாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் சேவை ஆளாக இருக்கக் கூடாது என்பதற்காக. அவனின் ரத்தங்கள் உடனே அதை புரிந்து ஏற்றுக் கொள்ள, மூன்று வேலையும் சாப்பிட்ட தட்டை அவர்களே கழுவி விடுவார்கள்.

“எடேய்! ரொம்ப நேரமா முழிச்சுக்கிட்டு கெடக்காம தூங்குற வழிய பாருங்க. நாளைக்கு ஒரு நாளு ஆரும் எங்கயும் வூட்ட வுட்டு நகர கூடாது. ஆட்டுக்காலு சூப்பு வெச்சு தர, குடிச்சிட்டு பேசாம படுத்து கெடங்க.” என்ற அறிவுரையோடு கொழுந்தன்கள் மூவரையும் அனுப்பி வைத்தாள் உறங்க.

செந்தமிழன் பெரியாரின் புத்தகத்தை கையில் வைத்து படித்துக் கொண்டிருக்க, “தமிழு பால் சூடா இருக்கு ஆறதுக்குள்ள குடிச்சிடு.” டம்ளரை அவனிடத்தில் வைத்து விட்டு வெளியேறினாள்.

அவள் சென்று சில நிமிடங்களில் அவளின் தங்கை காதலனுக்கு தூதுவிட, “என்னா தேனு இந்த நேரத்துல கூப்ட்டு இருக்க.” நேரம் கெட்ட நேரத்தில் அழைத்ததால் விசாரித்தான்.

“என்னாப்பா உங்களுக்கு நா கால் பண்ண நேர காலம் பாக்கணுமா.” என்றவள் வசனத்தில் சிரித்தவன், “அப்டிலா சொல்ல முடியுமா உங்கிட்ட. என்னைதா முழு நேரமா உன் பக்கம் வளச்சிட்டியே.” என சரண் அடைந்தான்.

“ஆமா வளச்சிட்டாய்ங்க இவர”

“என்னாத்துக்கு தேனு இப்டி சலிச்சிக்குற”

“பின்ன என்னா மாமா, எவ்ளோ நாளா உங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த தெரியுமா. ஏதோ இப்பதா நா உங்க கண்ணுக்கு தெரிஞ்சிருக்க.”

காதலியின் பேச்சில் இருக்கும் போராட்டத்தை நன்குணர்ந்து, “மன்னிச்சிடு தேனு. இது எல்லாத்துக்கு சேத்து வெச்சு இனி வர ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காதல உனக்கு குடுக்குற.” என பேச ஆரம்பித்தவர்கள் நடு சாமம் கடந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

***

இரண்டு நாள் வேலை பளுவை முடித்து வந்த மதுரவீரன் நிம்மதியாக கட்டிலில் படுத்தான். வீட்டு வேலையை முடித்து விட்டு வந்தவள் சோர்வாக அவன் பக்கத்தில் படுக்க, “சாப்டியா” கேட்டான்.

“சாப்ட்ட மாமா” என்றவள் உள்ளங்கையை நுகர்ந்து பார்த்தான்.

“எங்கிட்ட பொய் சொல்றியா அம்மணி.”

“குழம்பு ஒத்துக்கல மாமா ஒரு மாதிரி இருந்துச்சு. அதா கஞ்சி குடிச்சிட்டே.”

“அம்மா விசயத்துல உன்ன கேள்வி கேட்டது கஷ்டமா போச்சி அப்டி தான.”

“அதுலா எதுவும் இல்ல மாமா. ஒரு பையனா உங்க அம்மா நல்லா இருக்கணுனு நெனைக்குறீங்க அத எப்டி நா தப்பு சொல்ல முடியும்.” எனும் பொழுது அவள் குரலில் விசும்பல்.

“அவங்க நல்லா இருக்கணுனு கேக்கல அம்மணி. உன் மேல இருக்க அவச்சொல்ல அந்த நிமிசமே தொடைக்கணுனு நெனைச்ச. நா மட்டும் கேக்கலனா கொஞ்சம் கொஞ்சமா அந்த வார்த்த வளந்து இவதா என்னை சாப்ட வேணானு சொல்லிட்டானு வந்து நிக்கும்.” என்ற விளக்கத்திற்கு பதில் கொடுக்காமல் அவன் மார்பில் படுத்தாள்.

நெருங்கிப்படுத்தவன் கன்னத்தில் இதழ் பதித்து, “என்‌ அம்மணிய பத்தி எனக்கு தெரியாதா. எதிரியா இருந்தா கூட ஆக்கி போட்டு கவனிக்க மட்டும்தா அவளுக்கு தெரியும். அப்டி இருக்க எ…அம்மாவ ஒரு நாளும் ஏச மாட்டா.” என்று விட்டு மீண்டும் கன்னத்தில் இதழ் பதித்தான்.

நிமிர்ந்து படுத்தவள் அழுது கொண்டு, “நீங்க அப்டி கேட்டது ஒரு மாதிரி ஆகி போச்சு மாமா. நா என்னா அய்த்த சாப்ட கூடாதுனு நெனைக்குறவளா. எனக்கு அய்த்த கிட்ட எந்த கோபமும் இல்ல மாமா. அவங்க எதுக்காக என்னை விரோதியா பாக்குறாய்ங்கனு புரியல.” என பிரிந்த முகத்தை மார்போடு சேர்த்தாள்.

தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தவன், “அவங்க பேசுற எல்லாத்தியும் காதுல வாங்கிக்காத. அம்மாவா போயிட்டதால ஒரு அளவுக்கு மேல கண்டிக்க முடியல அம்மணி. எத்தினி நாளைக்கு என்கிட்ட இந்த பொறுமை இருக்குனு தெரியல. நா வேல விசயமா அடிக்கடி வெளிய போற. நா பேசுனத சேர்த்து வெச்சி உன்கிட்ட காட்டிடுவாய்ங்கனு பயந்துதா அமைதியா இருக்க.”

“நீங்க எதுவும் சொல்லாதீங்க மாமா. அப்புறம் அய்த்த இன்னு வருத்தப்படுவாய்ங்க. ஏற்கனவே மாமா கூட இல்லினு வருத்தத்துல இருக்காங்க. இந்த மாதிரி நேரத்துல நம்மதா பாத்துக்கணும்.” என்ற மனைவியின் பேச்சை ரசித்தான் கண் அசைக்காமல்.

அந்தப் பார்வையில் வந்த அழுகை தடம் தெரியாமல் சென்று விட்டது. பார்வையால் அவள் என்னவென்று கேட்க, “நா வாழ்க்கைல பெருசா சம்பாதிச்ச சொத்து நீதாம்மா. வெளிய போயிட்டு வூட்டுக்கு வர அப்போ… உன் முகம் சொல்லிடும் நா சம்பாதிச்ச சொத்தோட மதிப்பு என்னானு. நீ என்னை ரொம்ப சந்தோசமா வெச்சிருக்க அம்மணி. ஆனா, நா என் குடும்பத்துக்காக உன்ன ஒதுக்கி வெச்சு தண்டிச்சி இருக்க.” என்றவன் வாயை உள்ளங்கையில் அடக்கினாள்.

“இது என்னா மாமா தண்டனை அது இதுன்னு பேசிக்கிட்டு. உடலால ஒன்னு சேந்தாதா அன்பா? இந்த நிமிசம் உங்க கூட எவ்ளோ சந்தோசமா இருக்க தெரியுமா. என் புருச ரெண்டு நாளு இல்ல ரெண்டு வருசம் என்னை வுட்டு பிரிஞ்சு இருந்தாலும் என் மனசு சஞ்சல படாது. எனக்கு நல்லா தெரியும் என்னை தவிர அவரு வேற ஆரயும் பாக்க மாட்டாரு. அந்த ஒரு நம்பிக்க மட்டும் போது மாமா வாழ்க்க முழுக்க உங்க காதல நிருபிக்க ‌” என்றவள் இறுக்கமாக புதைந்து போனாள் கணவனின் மார்பில்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்