Loading

 

தன் பின்னங்கழுத்தில் ஆடவனின் வெப்ப மூச்சை உணர்ந்த வசுந்தரா, படக்கென திரும்ப முயல, ஜிஷ்ணு தர்மனோ அவளின் இரு கைகளையும் பின்னால் இழுத்து, கிடுக்குப் பிடியாக பிடித்து, அவளின் காதோரம் “அப்டியே நட…” என்றான் அடிக்குரலில்.

அவனிடம் சிக்கிய கரங்களை உருவ எத்தனித்தபடியே, “முடியாதுடா பொறுக்கி” என அவள் முரண்டு பிடிக்க, காலால் அவள் காலை எத்தினான். அதில் தடுமாறி அவள் முன்னே ஒரு அடி எடுத்து வைக்க, “நல்லது… இப்படியே நடடி வக்கீலு” என எச்சரிக்கை செய்தான்.

அதிகபட்ச கோபத்தின் விளைவாக, அவனின் பற்கள் அரைபடும் மெல்லோசை கேட்க, ஆடவனின் அகன்ற நெற்றியில் இருந்து விளைந்த வியர்வைத் துளிகள் சொட்டு சொட்டாக அவள் தோள் மீது சொட்டியது.

“ப்ச், தள்ளி போடா” என துள்ளியவளின், தோள் மீது இப்போது அவன் நாடியை வைத்து அழுத்தி இருக்க, “எதிர்ல இருக்குற ஆபிஸ்ல தான் உன் அப்பன் இருக்கான். அவன் முன்னாடி உன்ன தூக்கிட்டு போக வச்சுடாத வக்கீலு. அப்படி உன்ன தூக்கிட்டு போனா, இதே மாதிரி கொண்டாந்து விட மாட்டேன்.” என்றவனின் வார்த்தைகளில் அனல் தெறிக்க,

“மவனே, அப்படி மட்டும் நீ தூக்கிட்டு போன, நானும் உன்ன இதே மாதிரி விட மாட்டேன்” என்றாள் சீறலாக.

ஜிஷ்ணு தான், சிறிதாக இதழ் வளைத்து, “ஓஹோ! அப்டின்னா உனக்கு இந்த எம். எல். ஏ மேல கட்டுக்கடங்காத ஆசையாடி…” என கிறங்கிடும் பாவனையில் உரைத்தவன், வலுக்கட்டாயமாக அவளை அவன் வீட்டிற்குள் இழுத்துச் சென்றான்.

உள்ளே சென்றதுமே, அவன் கையை உதறி விட்டு முறைத்தவளை அவனும் பஸ்பமாக்கியபடி, “இங்க பாருடி. இந்த இடத்துக்கு நான் ஒண்ணும் சும்மா வரல. நீ என் மேல பழி போட்டு, என்னை உள்ள தள்ளுற வரை நான் கையை சூப்பிக்கிட்டு இருக்க மாட்டேன். மவளே… சாவடிச்சுடுவேன்” என அங்கிருந்த பூச்சாடியை எடுத்து அவளை அடிக்கப் போக, அவள் கையை கட்டிக்கொண்டு திமிராக நின்றாள்.

“உனக்கு சாவடிக்கிறது தான் கை வந்த கலையாச்சே அடியாளே. உன் அரசியலுக்காக, நீ எந்த எல்லைக்கும் போவன்னு எனக்கும் தெரியும். ஆனா, சொந்த ஊரையே அழிக்க நினைக்கிற நீ எல்லாம் எதுக்குடா உயிரோட இருக்க. இதுல பெருசா, எங்க அப்பாவும் என் ஊர்க்காரங்களும் உங்களை அடிமைபடுத்துற ரேஞ்சுக்கு பில்ட் அப் மட்டும் குடுப்பீங்க. ஆனா, நீங்க மட்டும் ஊரை என்ன வேணாலும் பண்ணலாம்.

டேய்… பொறுக்கி பொறம்போக்கு… ஊர பேரூராட்சியா மாத்துனா, பில்டிங் தானடா கட்டணும். அந்த ஊருக்கு பின்னாடி இருக்குற மலையை ஏண்டா உடைக்கிறீங்க? அங்க இருக்குற காட்டுக்குள்ள உன் கட்சி ஆளுங்களுக்கு என்னடா வேல. என்ன மலையையும் காட்டையும் அழிச்சு, கன்னிமனூரை விரிவுபடுத்தப்போறீங்களோ…?” விழிகளில் நெருப்பு பரவ அவனை சுட்டெரித்தவள், இறுதியில் நக்கலுடன் முடித்தாள்.

அவளையே ஒற்றைப் புருவம் உயர்த்தி பார்த்தவன், “ப்பா… பரவாயில்ல. நல்லாத்தான் வேவு பாத்துருக்கான் உன் கூட இருந்தவன். ஆனா, இதை மட்டும் தான் சொன்னானா என்ன?” என தாடையை தடவியபடியே சிந்திக்கும் பாவனை கொடுத்த ஜிஷ்ணு, “காட்டையும் மலையையும் மட்டும் அழிக்கல வக்கீலு. மொத்த ஊரையும் பூம் பண்ண போறோம்…” என்றான் ‘பூம்’ என்ற வார்த்தையில் வெடி வெடிப்பது போல சைகை காட்டி.

அதீத கேலி கண்ணில் வழிய, “ஆனா, இதெல்லாம் நாங்க பண்ண போறோம்ன்னு உன்னால ஒரு துண்டு ஆதாரத்தை கூட ரெடி பண்ண முடியாது வக்கீலே. அப்படி இருக்கு செட்டிங்ஸ் எல்லாம்…” என்றவன், திமிருடன் ஒரு புன்னகைப் பூத்து,

“பட்ட பகல்ல நான் செஞ்ச கொலைக்கே உன்னால ஒத்த ஆதாரத்தை ரெடி பண்ண முடியல. இதுல, யாருமே கண்டிபிடிக்க முடியாத இதுல உன்னால ஒரு கூந்தலை கூட… ப்ச்… வாய்ப்பில்லை வக்கீலு.” என்றான் மறுப்பாய் தலையாட்டி.

வசுந்தராவிற்கு தான் உள்ளுக்குள் தீயாக எரிந்தது. “ஆதாரம் என்ன வெங்காயம் ஆதாரம். உன்ன மட்டும் இல்ல… உன் கட்சியையே நாறடிக்கிறேன். மவனே அடுத்த எலக்ஷன்ல உன் கட்சி ஆளுங்கட்சியும் இல்ல. நீ இங்க எம்.எல். ஏ வும் இல்ல” என விரல் நீட்டி சபதம் விடுத்தவளை, அவன் இளக்கார நகையுடன் எதிர்கொண்டான்.

அந்நகை அவளும் மேலும் கோபத்தீயை ஏற்ற, விருட்டென நகர போனவளின் கையை முரட்டுத் தனமாக பற்றியவன், அவளின் கையில் பரத் அவன் வீட்டில் வைத்த பக் – ஐ திணித்தான்.

“எனக்கு எல்லா பக்கமும் கண்ணு இருக்குடி என் டொமேட்டோ…” என ஜிஷ்ணு கீழ்க்கண்ணால் முறைக்க, அவளும் அவளின் தோள்ப்பையில் இருந்து, ஒரு பக் – ஐ எடுத்து, அவன் கையில் திணித்து, “என் கண்ணு உன்ன சுத்தி இருக்குடா வெண்ண. என் ஆபிஸ்லயே எனக்கு பக் வைக்கிறியா…?” என்றே வெகுவான உறுமலுடன் கடிந்தவளை அவனும் தீப்பார்வை பார்த்தான்.

இரு நாட்களுக்கு முன்பே, அவளுக்கு தெரியாமல் அவள் அலுவலகத்தில், அங்கு நடப்பது தெரியும் படியாக இந்த பக் – ஐ வைத்திருந்தான். அதனை அடுத்த அரை மணி நேரத்தில் அவள் கண்டும் பிடித்திருந்தாள்.

கோப நடையுடன், அவளின் அலுவலகம் சென்றவள், “அர்ச்சு… இன்னைக்கு ஒரு ஹியரிங் இருக்குல…” எனக் கேட்டபடி வக்கீல் கோர்ட்டை மாட்ட, அதன் பிறகே அவளுக்கு முன் ஜிஷ்ணு தர்மன் அங்கு வந்திருப்பதையும், பரத் ரத்த வெள்ளத்தில் படுத்திருப்பதையும் கண்டு திடுக்கிட்டாள்.

“ஏய்… இவன அள்ளிட்டு போ!” சொடுக்கிட்டு எதிரில் நின்றவளிடம் பணித்தான் ஜிஷ்ணு தர்மன்.

அவனின் கண்கள் வசுந்தராவை மேய, கூடவே அதில் ஏளனமும் மிதந்தது.

சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின், ஷு அவளின் கருப்பு கோர்ட்டில் பட, வெடுக்கென தள்ளி நின்றவள், அடக்கப்பட்ட சீறலுடன் ஜிஷ்ணுவை எரித்தாள்.

“என்னடி பாக்குறவ…? என்ன வேவு பார்க்க தான் இவன அனுப்புன…” என்று தன் காலுக்கு கீழே மயங்கி இருந்தவனை, ஒரு கையில் இருந்து வழிந்து கொண்டிருந்த கத்தியை வைத்து சுட்டிக் காட்ட, அவனோ மணிக்கட்டில் நரம்பு அறுக்கப்பட்டு மயங்கி இருந்தான்.

வசுந்தரா, பொங்கி வந்த ஆத்திரத்துடன், “அர்ச்சனா… இவன ஹாஸ்பிடல் தூக்கிட்டு போ. ஃபாஸ்ட்…” என்று கட்டளையிட, அந்த அர்ச்சனாவோ, வக்கீல் அலுவலகத்திற்கே வந்து இரத்தம் சொட்ட கத்தியை காட்டி மிரட்டியதில் உறைந்திருந்தாள்.

சில வினாடிகள் கழித்தே, ‘அய்யோ செத்துற போறான்’ என பதறி, கார் ஓட்டுனரின் உதவியுடன் அவனை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைய,

ஜிஷ்ணு படக்கென சிறு குறுஞ்சிரிப்புடன் எழுந்து, கத்தியில் இருந்த இரத்தத்தை, வசுந்தராவின் வக்கீல் கோர்ட்டிலேயே துடைத்தவன், “அச்சச்சோ…” என பரிதாப்படுவது போல முகத்தை வைத்து,

“என்ன வக்கீலே, உன் கருப்பு கோர்ட்டு சிவப்பு கோர்ட்டா மாறிடுச்சு.” என ஒரு புருவத்தை அதிகாரமாக உயர்த்தினான்.

பின், அக்கத்தியை வைத்தே, அவளின் தளிர் கரங்களை மெல்ல கோடிழுப்பது போல வருடியவன்,

“மறுபடியும் மறுபடியும் உன்ன வார்ன் பண்றேன். இந்த எம்.எல்.ஏ ட்ட வச்சுக்காத. நாளைக்கே நான் மினிஸ்டர் ஆவேன். சி.எம் ஆவேன். என்ன இருந்தாலும் ஒரு வருங்கால சி.எம் – அ பகைச்சுகிட்டு உன்னால வாழ முடியாது வக்கீலே. எப்பவுமே மணிக்கட்டை மட்டுமே நறுக்குவேன்னு சொல்ல முடியாது…” என்று கூறி முடிக்கும் போது, சினத்தில் அவனின் நெற்றி நரம்புகள் புடைத்தது.

அவனை வெறிகொண்டு வெறித்த வசுந்தராவின் நுனி மூக்கு சிவப்பில், மெல்ல இதழ் விரித்தவன், “ஆனா பாரு… நீ ஒரு தப்பு பண்ணிட்டடி. என்ன வேவு பாக்க அவனை அனுப்பாம, நீ வந்துருந்தா… கொஞ்சம் ஜாலியா, ரொம்ப ஹாட்டா இருந்து இருக்கும்…” என்று நெளிப்பு விட்டபடி இன்னும் அவளின் கோபத்தீயை ஏற்றினான்.

அவ்வளவு தான்! முற்றிலும் பொறுமை இழந்த வசுந்தரா, நொடியில் ஜிஷ்ணுவின் கையில் இருந்த கத்தியை தன் கையில் இடம் மாற்றி, அவனின் மணிக்கட்டை பதம் பார்த்தாள்.

அதில் அவளைத் தாக்க வந்த ஜிஷ்ணுவின் ஆட்கள், அவனின் விரல் அசைவில் அங்கேயே நின்று விட,

வசுந்தரா, “இன்னொரு தடவ நீ என்ன சீண்டுன, நானும் உன் மணிக்கட்டை மட்டும் பதம் பார்ப்பேன்னு சொல்ல முடியாது. உன்ன பார்ட் பார்ட்டா வெட்டி போட்டுடுவேன். உன் அரசியல் செல்வாக்கை எல்லாம் வேற எவட்டயாவது வச்சுக்கோ…” என்று பல்லைக்கடித்து கர்ஜித்தவள்,

கத்தியில் ஒட்டி இருந்த அவனின் இரத்தத்தை அவனின் வெள்ளை சட்டையிலேயே ஒட்டி விட்டு,
“அச்சச்சோ” என அவனைப் போன்றே பரிதாபப்பட்டு, “என்ன அரசியல்வாதி அடியாளே…? உன் வெள்ளை சட்டை சிவப்பு சட்டையா மாறிடுச்சு…” என்று திமிராகப் பார்த்தாள்.

அவனோ ஒரு கையால் வசுந்தராவின் கையைப் பற்றி கத்தியை அவள் கழுத்தில் வைத்து அழுத்தினான்.

“ஒரே அழுத்து தான். பொல பொலன்னு இரத்தம் கொட்டி போய் சேர்ந்துடுவ…” என்று ஆழ்ந்த குரலில் கனைத்தவன்,

நெற்றி சுருங்க “ஆனா… நீ இல்லன்னா எனக்கும் போர் அடிக்கும். உன்கிட்ட இப்படி சண்டை போட்டா அன்னைக்கு எனக்கு நாள் நல்லா இருக்கு வக்கீலே. இன்னைக்கும் உன்னால நாள் நல்லாவே போகும்…” என்று கையில் வழிந்த இரத்தத்தை கண் காட்டிட, அக்கண்களோ நிதானமின்றி அவள் ஏற்படுத்திய காயத்தின் விளைவால் சொருகியது.

அவளோ அதனைக் கண்டு வெற்றியாய் புன்னகைக்க, அவன் தான், கத்தியை தூக்கி எறிந்து விட்டு, அவனின் பற்களால் பாவையின் கழுத்தில் காயமாக்கிட, அவள் தான் “விடுடா விடுடா” என்று திமிறினாள்.

அதனை சிறிதும் காதில் வாங்காதவன், அவனின் தடத்தை பதித்து விட்டே, தள்ளாடியபடி நகர்ந்து “ஜாக்கிரத வக்கீலே… அடுத்த தடவை என் கடி வேற மாதிரி இருக்கும்…” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து நகன்றான்.

வசுந்தரா தான், “அடியாளு நாயே. உன்ன எல்லாம் வயித்துல சொருகி இருக்கணும்.” என்று அவன் பற்கள் பட்ட இடத்தை அழுந்த துடைத்திட, அதுவோ திகு திகுவென எரிந்தது அவளின் விழிகள் போன்றே.

அதே சினத்துடன் தன் கையை பார்க்க, அதில் மிச்சம் இருந்த அவனின் உதிரத்தைக் கண்டு அசையாமல் அதையே பார்த்திருந்தாள். இத்தனை நேரம் சினத்தில் எரிந்த விழிகள் இப்போது அதனை அணைக்கும் விதமாக கண்ணீர்த் துளியை வழங்கியது.

கையிலிருந்த இரத்தத்தை மறு கையால் பற்றியபடி காரில் ஏறி, சீட்டின் பின் சாய்ந்தவன், “யூ… ப்ளடி… லாயர்…” என்று அவளை உதட்டுக்குள் வறுத்து எடுக்க,

அவ்விதழ்களோ அவளின் வியர்வை சுவையை இன்னும் தாங்கியபடி இருந்தததில் தன்னுதட்டை ஈரப்படுத்திக் கொண்டவன், கண்ணை மூடி அச்சுவையில் லயித்து மயக்க நிலைக்கு சென்றான்.

குமரன் தான், விஷயம் கேள்விப்பட்டு பதறி அடித்து மருத்துவமனைக்கு வர, மருத்துவரோ “சார்… ஒரு வாரத்துக்கு முன்னாடி தான், வலது கைல கட்டு போட்டேன். இப்போ இடது கைல ரத்தத்தோட வந்து இருக்காரு. நல்லவேளை கத்தி ஆழமா படல. இல்லைன்னா, சீரியஸ் ஆகி இருக்கும். இனிமேவாவது கேர்ஃபுல் – ஆ இருக்க சொல்லுங்க.” என மருத்துவர் குமாரனிடம் கத்தினார்.

பின்னே, அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால், மருத்துவம் பார்க்கும் தன் மீது தான் பழி போடுவர் என்ற பயம் அவருக்கு.

அறையில் இருந்த ஜிஷ்ணு தர்மனோ எதையும் கண்டுகொள்ளாது, கௌரவ் வாங்கி வந்த ஆப்பிளை கடித்து சாப்பிட்டு கொண்டிருக்க, குமரன் தான் முறைத்தான்.

“என்ன தாண்டா நினைச்சுட்டு இருக்க நீ. எதுக்கு அவள் கூட இப்படி சண்டை போட்டுட்டு இருக்க?” எனக் கடுப்பாக, “யாரு நானு? எனக்கு வேற வேல இல்ல. அவ தான் தேவையில்லாம என் வழிக்குள்ள வந்துகிட்டே இருக்கா. இதான் லாஸ்ட் வார்னிங் அவளுக்கு. இன்னொரு வாட்டி, இடைல வந்தா அவள் அப்பனோட சேத்து அவளையும் போட்டுட வேண்டியது தான்…” என கோபம் கொப்பளிக்கக் கூறியவனை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்த குமரன் எதுவும் பேசாமல் அமைதியானான்.

அவனை அனுமதித்த அதே மருத்துவமனையில் தான் பரத்தையும் அனுமதித்திருக்க, நல்லவேளையாக மணிக்கட்டின் நரம்புக்கு அருகில் நறுக்கியதால், உயிர் பிழைத்திருந்தான். வசுந்தராவிற்கு தான் கழுத்து சிவந்து காயமாகி இருந்தது.

அந்த இடம் எரியும் போதெல்லாம், அவள் மனதும் நெருப்பாகக் கொதித்தது. பரத் தான் பாவம், ‘என்னடா மர்டர் அட்டெம்ப்ட் எல்லாம் பண்றீங்க’ என்ற ரீதியில் மிரண்டிருந்தான்.

“அடிப்பாவி… உன்ன நம்பி தான வந்தேன்” என பரத் பாவமாக அவளிடம் கேட்க,

“வெட்கமா இல்ல உனக்கு. அவன் உன் கையை அறுக்குற வரை என்ன பண்ணிட்டு இருந்த?” என்றாள் முறைப்புடன்.

“ம்ம். கேம் விளையாடிட்டு இருந்தேன்… கேள்விய பாரு. அவன் எங்க என்னை யோசிக்க விட்டான். புயல் மாதிரி உள்ள வந்தான், கத்திய காட்டி நக்கலாக சிரிச்சான். இந்த கை தான ட்ரக்ஸ் வச்சுச்சுன்னு சொல்லி சட்டுன்னு என்ன அட்டாக் பண்ணிட்டான்.” என்றான் உதட்டைப் பிதுக்கி.

அர்ச்சனாவிற்கு தான் மிரட்சியாக இருந்தது. “மேம்… அரசியல்வாதி கேஸ் எல்லாம் கண்டிப்பா நம்ம எடுக்கணுமா? நம்ம ஏன், திருட்டு கேசு, கஞ்சா கேஸுன்னு சின்ன கேசா எடுக்க கூடாது” என யோசனை கொடுக்க, வசுந்தராவின் கனல் பார்வையில் வாயை பொத்திக் கொண்டாள்.

“இங்க பாருங்க… இப்பவே சொல்றேன். இந்த கேஸ் ரொம்ப ரொம்ப முக்கியமானது. என்னால இதை அப்படியே விட முடியாது. நான் விட்டாலும் அவன் விடமாட்டான். ரத்தம், காயம் மட்டும் இல்ல உயிர் சேதம் ஆனாலும் அதுக்கு நான் பொறுப்பு இல்ல. சோ, இப்பவே கிளம்புறதுன்னா கிளம்பிடுங்க. தட்ஸ் இட். அண்ட், உங்களுக்கு என்ன ஆனாலும் நானும் வருத்தப்பட மாட்டேன். எனக்கு என்ன ஆனாலும் நீங்களும் வருத்தப்பட தேவை இல்ல” என்று முடிவாக கூறியவளைக் கண்டு பரத் தான் திகைத்தான்.

“கொஞ்சம் யோசிச்சு பேசு தாரா. அவன் பைத்தியக்காரன் மாதிரி இருக்கான். என்னை அட்டாக் பண்ணதுனால மட்டும் சொல்லல. பேசிக்காவே அவனை பார்த்தா எனக்கு சரியா படல. எப்படியானாலும் அவன் அழிக்க நினைக்கிறது அவனோட ஊர. என்னமும் பண்ணிட்டு போறான்னு விடேன்…” என்றதில், வசுந்தரா சினம் மிக நிமிர்ந்தாள்.

“என்ன விடுறதா? நீ என்ன நினைச்சுட்டு இருக்க பரத். இது வெறும் ஊரு பிரச்சனைன்னா?” என விழி இடுங்க விழித்தவள், “நோ” என்றாள் வேகமாக தலையசைத்து.

“கன்னிமனூர் ஒரு சொர்க்கம் பரத். தேவையில்லாத ஜாதி பிரச்சனையை கிளப்பி, அந்த ஊரை மறைமுகமா ஒடுக்கிட்டாங்க எங்க ஊர்க்காரங்க. ஆனா, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும், எல்லாமே நல்லா தான் இருந்துச்சு. இப்போ…?

ப்ச்… இதுல, சொந்த ஊர்க்காரனே அரசியல் பண்ணி அந்த ஊரை தரைமட்டமாக்கிட்டு, அதை ஈஸியா ஜாதிக்காரங்களோட சதின்னு என் அப்பா மேலையும், என் ஊர்க்காரங்க மேலயும் பழி போட்டுடுவான். உண்மையாவே என் அப்பா சும்மா ஜாதின்னு பேச தான் செய்வாரு. மத்தபடி, அவங்களுக்காக நிறையவே செஞ்சுருக்காரு. ஜாதியை பிரிச்சு பார்த்தது இல்ல நாங்க. ஆனா அதை வச்சு அவன் அரசியல் பண்ணுவான். அதை நான் பாத்துட்டு இருக்கணுமா? அவன் மட்டும் இல்ல பரத். ஒட்டு மொத்த அவனுங்க கட்சியும் இந்த நோக்கத்தோட தான், அத பேரூராட்சியா அறிவிச்சு இருக்கானுங்க. ஆனா, இது மட்டும் இல்ல. இன்னும் வேற ஏதோ பண்றானுங்க. அது என்னன்னு கண்டுபிடிச்சு, அவனுங்கள கூண்டோட அழிக்கணும்.” என்றவளின் முகம் ரத்த சிவப்பானது சினத்தில்.

“நீ சொல்றதை பாத்தா, இது உள்ளூர் பிரச்சனை மாதிரி தெரியல. ஸ்டேட் லெவல்ல இறங்கி வேலை செய்றாங்க. நம்ம நினைக்கிறதை விட பெரிய விஷயம் இருக்கும் போலயே…” பரத்தும் புரியாமல் புருவம் சுருக்க, “கண்டிப்பா. கண்டிப்பா ஏதோ இருக்கு. இதோட ஆரம்பப்புள்ளி எதுன்னு தான் எனக்கு புரியவே இல்ல” என்றவள் பெருமூச்சுடன் நெற்றியில் கை வைத்தாள்.

ஆரம்பப்புள்ளி எதுவென்று அவள் அறியும் நேரம், அத்தனை சீக்கிரம் அவளுக்கு அமைந்து விடப் போவது இல்லை. அதற்கு அவளின் எதிரானவன் அனுமதிக்கப்போவதும் இல்லை என்பதை பேதை அறியாள்.

மேலும் இரு நாட்கள், ஆதாரத்தை திரட்டும் நோக்கிலேயே கழியே, அர்ச்சனா தன் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு, கையில் ஒரு பரிசு பொருளுடன் நீதி மன்றத்திற்குள் நுழைந்தாள்.

அவளை எதிர்கொண்ட குமரன், “ஓய் இங்க வா!” என்று அழைத்தான் நகத்தை கடித்து துப்பிக்கொண்டே.

‘பாருடா. எதிர்க்கட்சி வக்கீலு திமிரா கூப்புடுறத’ என முணுமுணுத்தபடி அவனருகில் சென்றவள், “ஹலோ வக்கீல் சார், என் பேர் ஓய் இல்ல. அர்ச்சனா” என்றாள் சிலுப்பியபடி.

“பெரிய ஹை கோர்ட் ஜட்ஜு. அல்லக்கை தான நீ?” என அவன் மேலும் கீழும் பார்க்க, அதில் கோபமுற்றவள், “நீங்களும் எம். எல். ஏ அல்லக்கை தான் வக்கீல் சார். இப்படி என்கிட்ட வம்பு பண்ணுனதை தாரா மேடம்கிட்ட சொன்னேன். உங்க மேல கேஸ் போட்டுடுவாங்க பார்த்துக்கோங்க” என்று உதட்டை சுளித்து எச்சரித்தாள்.

“ம்ம்க்கும். அவள் எதுக்கு தான் கேஸ் போடல… சரி இந்தா இதை உன் தாரா மேடம்கிட்ட குடுத்துடு” என்று ஒரு பூங்கொத்தை நீட்டினான்.

அதனை வெறித்தவள், “என்ன வக்கீல் சார், அந்த எம். எல் ஏ கூட சேர்ந்துக்கிட்டு பொக்கேல பாம் வைச்சு என் மேடமை போட்டு தள்ள பாக்குறீங்களா?” என மூச்சு வாங்க வினவ,

குமரன் தலையில் அடித்து, “இதை சத்தமா சொல்லாத, தர்மா காதுல விழுந்துச்சு, உண்மையாவே பாம் வச்சுடுவான். ஐடியா குடுக்குறா ஐடியா.” என்று முணுமுணுத்தவன், “சும்மா கேள்வி கேட்காம, உங்க மேடம்கிட்ட கொண்டு போய் குடு, உங்க எதிர்க்கட்சி வக்கீல் குடுத்தாருன்னு…” என்று சொல்லி விட்டு அவன் அகன்று விட, அவளுக்கோ அடி வயிற்றில் புளியை கரைத்தது.

அவனை நம்பி பூங்கொத்தை கொண்டு போனால், வசுந்தராவிடம் திட்டு வாங்க வேண்டியது இருக்கும், மேலும் அவன் பாம் வைக்கவில்லை என்பதை எப்படி நம்புவது என குழம்பியவள், வேறு வழியற்று வசுந்தரா முன் நின்றாள்.

அவளுக்கு முன் ஏற்கனவே பரத், “ஹேப்பி பர்த்டே தாரா…” என்று சிரிப்புடன் அவளுக்கு வாழ்த்து கூற, வேலையில் கவனமாக இருந்தவள் “தேங்க்ஸ்” என்றாள் அசட்டையாக.

அப்போது தான், அர்ச்சனாவும் பிறந்த நாள் வாழ்த்து கூறி, அவள் வாங்கி வந்த பரிசைக் கொடுக்க, “எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி எல்லாம்…” என லேசாக கடிந்தாலும், மறுக்காமல் வாங்கி கொண்டவள், “அதான் கிஃப்ட் வாங்கிட்டு வந்துருக்கியே அப்பறம் ஏன் பொக்கே?” என புருவம் சுருக்கினாள்.

“அது வந்து… இது நான் வாங்கல மேம். குமரன் சார் குடுக்க சொன்னாரு.” என்று அவளின் டேபிளில் மீது வைக்க, அப்பூங்கொத்தின் மீது, “ஏழு கழுத வயசாகுது எதிர்க்கட்சி வக்கீல் அவர்களே. வழக்கின் பின்னே ஓடாமல், சற்று நின்று வாழ்க்கையையும் பார்க்கவும். பிறந்த நாள் வாழ்த்துகள்…” என்ற வாழ்த்து அட்டை இருக்க, அதனை ஒரு நொடி உணர்வற்று பார்த்தவள், நிமிர்ந்து வாசலைப் பார்க்க, அங்கு குமரன் தான் கை கட்டி நின்றிருந்தான்.

அவனையும் அசையாமல் ஒரு நொடி வெறித்தவள், அப்பூங்கொத்தை குப்பையில் போட்டு விட்டு, மீண்டும் அவளிடத்தில் அமர்ந்து வேலையில் மூழ்கிட, குமரன் லேசான முக சுருக்கத்துடன் அங்கிருந்து சென்று விட்டான்.

இதனை பார்த்த பரத்திற்கும் அர்ச்சனாவிற்கும் தான் ஒன்றும் புரியவில்லை.

பரத், “இவன் ஏன் தாரா உனக்கு பொக்கே குடுக்கணும்?” என கேட்க, “அத அவன்கிட்ட கேளு…” என்றாள் தோளைக் குலுக்கி.

அதில் கடியானவன், அவள் பார்த்துக்கொண்டிருந்த கோப்பை பிடுங்கி, “பதில் சொல்லு தாரா. குமரன் ஏன் உனக்கு பொக்கே குடுத்தான் அதை ஏன் நீ குப்பைல போட்ட” என்று விடாமல் கேள்வி கேட்க, “பின்ன, அதை எடுத்து ஷோ கேஸ்ல வைக்க சொல்றியா?” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.

அதில் பரத் முறைக்க, சில நொடிகள் அமைதி காத்தவள், “நானும் குமரனும் க்ளாஸ் மேட்ஸ்” என்றாள் தணிந்த குரலில்.

அர்ச்சனாவோ விழி விரித்து, “என்னது க்ளாஸ் மேட்ஸ் ஆ? அப்பறம் ஏன் ரெண்டு பேரும் இப்படி ஆப்போஸிட் வக்கீலா இருக்கீங்க?” என வேகமாக கேட்க, அவளிடம் பதில் இல்லை.

பரத்தோ, “உன் க்ளாஸ்மேட் எம். எல். ஏ கூட ஏன் சுத்துறான் தாரா?” என்று குழப்பமாக கேட்க,

அதற்கும் சில கணம் மௌனம் காத்தவள், “அந்த எம். எல். ஏ – வும் என் க்ளாஸ்மேட் தான்” என சலனமின்றி கூறியதில் இருவரும் இடத்தை விட்டு எழுந்து நின்று “வாட்?” என்று அதிர்ந்தனர். 

அதனை கண்டுகொள்ளாதவளாய், “ம்ம். நான், குமரா, தர்மா மூணு பேரும் ஒரே லா காலேஜ்ல தான் படிச்சோம்” என்றதில்,

நெஞ்சில் ரத்தம் வடிய பரத், “அப்போ அவனும் வக்கீலா?” என்றான் மிரண்டு.

அர்ச்சனா தான், “அன்னைக்கு அவரு கோர்ட்டுல ஆர்கியூ பண்ணும் போதே டவுட் ஆகி இருக்கணும். அதான், இப்ப வரை ஒரு ஆதாரம் கூட கிடைக்காத மாதிரி எல்லாத்தையும் அழிச்சுட்டாரோ” என வாயில் கை வைத்து கூற, வசுந்தரா அவளை முறைத்து, “அவனுக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல. வக்கீல்க்கு படிச்சான். ஆனா டிகிரி வாங்கல.” என்றதில், இருவரும் மேலும் குழம்பினர்.

பரத், “அப்படின்னா, அப்போ இருந்தே ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டு தான் இருக்கீங்களா?” என வியப்புடன் கேட்க, அவளை மீறியும் அவளிதயம் ஒரு நொடி நின்று துடித்தது சிறு விரக்திப் புன்னகையோடு.

பேண்ட் பாக்கெட்டில் அலைபேசி வைப்ரேட் ஆக அதனை எடுத்து காதில் வைத்தான் குமரன்.

“சொல்லு மாப்ள…” என்றவனுக்கு குரல் சோர்ந்து வெளிவர, அதனை மறுகணமே கண்டுகொண்ட ஜிஷ்ணு, “என்ன மாப்ள… எதிர்க்கட்சி வக்கீலுக்கு பொக்கேலாம் போயிருக்கு போல. வழக்கம் போல பல்பு குடுத்துட்டாளா?” என்றான் கேலி நகையுடன்.

குமரனோ, “ஏன் தர்மா… இந்த வீம்பு. சில நேரம் எல்லாத்தையும் விட்டுட்டு எங்கயாவது ஓடிடலாமான்னு இருக்கு.” என சலிப்புடன் கூற,

“அப்ப ஓடுடா. உன்ன யாரும் பிடிச்சு வைக்கலையே…” என்றவனின் குரலில் திமிர்த்தனம் தூக்கலாகவே தெரிய, குமரன் மறுப்புடன் ஏதோ கூற வரும் போதே, எதிர்முனையில் ஜிஷ்ணுவின் குரல் கர்ஜித்தது.

“இங்க பாரு… அவளுக்கு சொன்னது தான் உனக்கும். அமைச்சருக்கு நான் முக்கியம். எனக்கு அரசியல் முக்கியம். இந்த இடத்துக்கு நான் சும்மா வந்துடல. நிறைய பேர பழி குடுத்துருக்கேன். அதுல அடுத்த பழி நீயா இருந்தாலும் அவளா இருந்தாலும், ஐ டோன்ட் கேர். புரியுதுல…! போய் வேலைய பாரு…” என உறுமியவனின் முகம் ரௌத்திரத்தில் மினுமினுக்க, இங்கோ வசுந்தராவின் விழிகள் நீரால் பளபளத்தது.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா

🔥 அடுத்த பதிவு புதன் குள்ள போடுறேன் drs…🥰 Padichutu CMnts solunga🥰🥰🥰🥰 have a fire dream with jishu❤️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
85
+1
5
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. priyakutty.sw6

      மூணு பேரும் கிளாஸ்மேட்ஸ் ஆஹ்… 😳😳😳

      Love அஹ்…🙄

      ஏன்… தாரா அழறாங்க…. 😔

      குமரன் கூட பீல் பண்றாரு… 😔

      தர்மா… அப்படி என்ன அரசியல் முக்கியம்… 😤☹️

      அவர் வில்லன் போல நடந்துட்டு இருக்காரு….

      ஒரு நாள் ரொம்ப வருத்தப்டுவாரு…