Loading

 

 

கார்த்தி இறந்து விட்டான் என்பதை நம்பமுடியாமல், கதறி அழுத கயலை, உறுத்து விழித்த, ஜீவா வாசுதேவன் கார்த்தியின் இன்னுயிர் அண்ணன்.

தம்பியின் மேல் கொள்ளை பாசம் அவனுக்கு. அந்த கல்லூரி முடிந்த கடைசி நாளில், கோயம்பத்தூரில் ஒரு வேலையாக வந்தவன், அங்கே படித்து கொண்டிருந்த கார்த்தியையும் அழைத்துக் கொண்டு செல்லலாம் என்று கல்லூரி வந்தபோது தான், கயல், கார்த்தியிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டான்.

“ச்சீ பேசாத… உனக்குலாம் லவ் ஒரு கேடு. உன் ஸ்டேட்டஸ் என்ன… தகுதி என்ன? எங்கயாவது போய் செத்துரு… என் கண்முன்னாடி வராத” என்றவளை கண்ணீருடன் கார்த்தி பார்க்க, ஜீவாவிற்கு சுறுசுறுவென கோபம் வந்தது.

அப்பொழுதே, ‘என் தம்பியை சாக சொல்ல நீ யாரடி’ என்று அவளை ‘பளார் பளார்’ என அறைய எழுந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு,

‘கார்த்தி வீட்டுக்கு வரட்டும். பார்த்துக்கறேன்’ என்று மனதினுள் வஞ்சத்தை வளர்த்தபடி அவர்கள் அறியாமல் அங்கிருந்து கிளம்பினான்.

ஆனால் அன்று இரவே, மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான் கார்த்தி.

தனக்கு ஒரே சொந்தமான, தன் தம்பி இறந்ததை ஒத்துக்கொள்ள முடியாது, வெறிபிடித்தவன் போல் இருந்த ஜீவாவிற்கு கயல் மேல் தீராத பகை உணர்ச்சி வந்தது.

அழுது கொண்டிருந்தவளின் முடியை பற்றி தூக்கியவன், “நீ அப்படி பேசுனனால தாண்டி, அவன் செத்துட்டான்.

அவனை லவ் பண்ணி ஏமாத்தி, அவன் தகுதியை பத்தி பேசுறதுக்கு உனக்கு என்னடி தகுதி இருக்கு…” என்று கடுகடுக்க,

அவள் கண்ணில் நீருடன், “இல்லங்க… நான் அன்னைக்கு” என்று பேச வர, “ஷ் ஷ்…” என்று வாயில் விரல் வைத்தவன்,

“அவன் டைரில எழுதி இருந்தான். எவன் கூடயோ ஊர் மேஞ்சுட்டு, என் தம்பிகிட்ட டபிள் கேம் ஆடுனதா… உனக்கு அப்படி கேக்குதுல்ல…” என்று நெருங்கியவன்,

“உனக்கு நரகம்ன்னா என்னன்னு காட்டறேண்டி…” என்று அவள் தடுக்க தடுக்க, அவள் இதழை வன்மையாக வதைத்தவன், ரத்தம் கசிவதையும் பொருட்படுத்தாது, அவனைத் தடுத்த, அவளின் மணிக்கட்டை பிடித்து அழுத்தினான்.

ஏற்கனவே காய்ச்சலில் சோர்ந்து போயிருந்தவளுக்கு அதற்கு மேலும், வேதனைகளை தாங்க முடியாமல், இருக்கும் பலத்தை எல்லாம் சேர்த்து அவனை படாரென்று தள்ளினாள்.

உதட்டில் ரத்தம் கசிய நின்றவள், “கார்த்தி என் ஃப்ரெண்ட் தான். அவன் என்னை லவ் பண்ணலை” என்று அழுது கொண்டே கூற,

ஜீவா, “உன் நடிப்பை நிறுத்துறியா…” என்று கத்தினான்.

“ப்ளீஸ்ங்க நான் சொல்றதை ஒரு ரெண்டு நிமிஷம் கேளுங்க… அன்னைக்கு நான் அப்படி பேசுனது உண்மைதான்… ஆனா” என்று சொல்ல வரும்போது,

“ஆனா என்ன பிட்டர் ஹார்ட்… ஆனா அவன் தற்கொலை பண்ணிப்பான்னு நீ நினைக்கலையா… ஹ்ம்ம்…” என்று அவள் முகத்தில் ஒரு விரலால் அழுத்தி கோடு போட்டபடி கேட்க, அவள் வலியை பொறுத்து கொண்டு,

“சத்தியமா அவன் என்னை லவ் பண்ணல… வேற பொண்ணை தான் லவ் பண்ணுனான். நான் அவனோட ஃப்ரெண்ட் மட்டும் தான்ங்க. என்னை நம்புங்க… ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க…” என்று கதற.,

அவன் அங்கு சேரை போட்டு அவள் முன் அமர்ந்து “ஹ்ம்ம் சொல்லு என்ன கதை சொல்லபோற…?” என்று கதை கேட்பவன் போல் அமர, அதனைக் கண்டு தன்னை நொந்தவள் இருந்தும், சொல்ல ஆரம்பித்தாள்.

கல்லூரி சேர்ந்ததில் இருந்து, கார்த்தி அவளின் பெஸ்ட் ஃப்ரெண்ட் தான். முதல் வருடம் நன்றாக தான் இருந்தான்.

ஆனால், இரண்டாம் வருடத்தில் இருந்து காதல் நோய் அவனைத் தாக்க, அவர்கள் வகுப்பில்  படிக்கும் ரீட்டாவின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான்.

அவளைக் கண்டதும் காதல் என்று கயலிடம் பிதற்ற, அவள் “அதெப்படிடா பார்த்ததும் லவ் வருது” என்று சலித்தாள்.

கார்த்தி, “பார்த்ததும் வந்தா தான் லவ் பட்டி… அப்படியே ஒரு மாதிரி வைப்ரட் ஆகும் ஹார்ட்டே” என்று உணர்ந்து  கூற,

“ஷப்பா போதும் உன் உளறல்” என்று காதில் கை வைத்தாள்.

கார்த்தி அவளை முறைத்து, “ஒரு நாள் இல்ல ஒரு நாள், ஒருத்தனை பார்த்ததும் காதல் கடல்ல விழுக போற, அப்போ நானும் உன்னை இப்படி கிண்டல் பண்றேனா இல்லையான்னு பாரு…” என்று சபதம் விடுக்க,

கயலோ “அப்படி ஒரு முட்டாள்தனத்தை நான் பண்ணவே மாட்டேன்” என்று சவால் விட்டாள்.

இப்பொழுது கண்ணில்  நீர் வழிய, ஜீவாவை பார்த்ததும், அவன் சொன்னது போலவே, தான் அவனிடம் காதல் கொண்டது ரணமாய் வலிக்க, கண்ணீரை துடைத்து கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

கடைசி பரிட்சைக்கு முந்தைய நாள், கார்த்தி, கயலுக்கு போன் செய்திருந்தான்.

அதில் அவன், “கயலு, ரீட்டா என்னை ஏமாத்திட்டா கயலு. அவள் என்னை டைம் பாஸ்க்கு இவ்ளோ நாள் யூஸ் பண்ணிருக்கா… அவளுக்கு எவ்ளோ தைரியம் இருந்துருக்கணும். அவளை இன்னைக்கு நான் சும்மா விட போறது இல்லை…” என்று சொல்லிவிட்டு வைக்க, கயல் ‘கடவுளே இவன் எதுவும் முட்டாள்தனம் பண்ணிட கூடாது’ என்று வேகமாக ரீட்டாவின் வீட்டிற்கு சென்றான்.

அங்கு அவள் நினைத்தது போலவே, ரீட்டா வீட்டினுள் புகுந்து குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்தான் கார்த்தி.

அவனை வேகமாக சென்று தடுத்த கயல் “கார்த்தி என்ன பண்றா? வா முதல்ல” என்று அழைக்க,

“இவளை சும்மா விட மாட்டேன் கயலு… இவளை கொல்லாம விடமாட்டேன். என்னை லவ் பண்ணிகிட்டே வேற ஒருத்தனுக்கு முத்தம் குடுத்து ச்சை” என்று அவள் மேல் பாட்டிலை வீசப் போக, கயல் வலுக்கட்டாயமாக அவனை தடுத்து, அவள் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

மறுநாள், அவனுக்கு போதை தெளிய வேகமாக எழுந்தவன், மீண்டும் கயலிடம், “அவள் என்னை ஏமாத்திட்டா பட்டி… தற்கொலை பண்ணிக்கலாம் போல இருக்கு” என்று சொல்லும் போதே அவனை சப்பென்று அறைந்திருந்தாள்.

எப்பொழுதும் கயலிடம் அப்படி ஒரு கோபத்தை அவன் பார்த்ததில்லை. ஆனால் அவளிடம் ஒரு சொல் சொன்னால், அதனை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டாள்.

அவனை முறைத்தவள், பரிட்சைக்கு கிளம்ப சொல்ல, பரிட்சை முடிந்து வந்ததும், கார்த்தி “கயல்” என்று பேச வந்தான் தயக்கத்துடன்.

அவள் அப்பொழுது தான்., “ச்சீ பேசாத. உனக்குலாம் லவ் ஒரு கேடு. உன் ஸ்டேட்டஸ் என்ன… தகுதி என்ன? எங்கயாவது போய் செத்துரு. என் கண்முன்னாடி வராத.” என்றவள் சிறிது நேரம் அமைதி காக்க, அவன் மறுபடியும் “கயல்” என்றதும்,

“சொல்லுடா உன் ஸ்டேட்டஸ் என்ன. உன் தகுதி என்ன… உன் அண்ணா எவ்ளோ பெரிய ஆளுன்னு சொல்லுவ. ஏன் உங்க அப்பா அம்மா  இறந்ததும், வெளிநாட்டுக்கு போய் படிக்கிற வாய்ப்பு கிடைச்சும், உனக்காக உன் வாசுன்னா உன் கூடவே இருந்தாருன்னு பெருசா பீத்திக்குவ…

அவரை ஏண்டா இப்படி உன் அன்புக்கு தகுதி இல்லாதவங்க கூட பழகி இப்படி அசிங்க படுத்துற. நீ அவளை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்ட்டா, இல்ல நீ செத்துட்டா உன் அண்ணன் சந்தோசப்படுவாரா?

ஹ்ம்ம்… நீ சந்தோசமா இருந்தா தான், உன் அண்ணன் ஹாப்பியா இருப்பாருனு வாய் நிறைய சொல்லுவ… இதான் நீ அவருக்கு குடுக்குற பரிசா…” என்றவள் மேலும் கோபத்துடன்,

“இல்ல தெரியாம தான் கேக்குறேன் அவளை கொன்னுருவேன்னு சொல்ற… அவள் தப்பே பண்ணிருந்தாலும், தண்டனை குடுக்குற உரிமையை உனக்கு யார் குடுத்தா…? மத்தவங்களை தண்டிக்கிறதுக்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அவள் பண்ண தப்புக்கு கடவுள் தண்டனை கொடுப்பாரு. பெருசா லவ் பண்றானாம் லவ்வு.

டேய், கொஞ்சமாவது உன் அண்ணாவை பத்திநினைச்சியாடா… சரி… இவ்ளோ நாள் பழகுன என்னை பத்தி நினைச்சியா. சாக போறேன்னு அசால்ட்டா சொல்ற” என்று பொரிய,

 கார்த்தி அப்பொழுது தான், தான் செய்யவிருந்த மடத்தனத்தை உணர்ந்தான்.

“சாரி கயல், நான் தெரியாம” என்று சொல்ல வருகையில், கயல் அவளின் தோழி கீதாவிடம், 

“கீதா, அவனை கிளம்ப சொல்லு ஊட்டிக்கு இப்போவே” என்று அழுத்தமாய் சொல்ல, கார்த்தி, “கயலு, நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அப்படி பேசிட்டேன். இனிமே தற்கொலை பண்ணிக்கிறதை பத்தி பேசவே மாட்டேன்…” என்று  சமாதானப்படுத்த,

அவள் “தயவு செஞ்சு கிளம்பி போய்டு… அங்க போய் என்ன வேணாலும் பண்ணிக்கோ” என்றாள் கோபமாக.

கார்த்தி, “நான் நீ பேசலைன்னா உண்மையிலேயே சூசைட் பண்ணிப்பேன்…” என்று மிரட்ட,

கயல், அவனை இழுத்துக் கொண்டு, ஊட்டி செல்லும் பஸ்ஸில் வம்படியாக ஏத்தி விட்டு வந்தாள்.

அப்பொழுதும் அவனிடம் அவள் பேசவேயில்லை. ஊட்டி சென்ற பிறகும் அவன் அனுப்பிய எந்த குறுஞ்செய்திக்கும் அவள் பதில் சொல்லவே இல்லை. ஆனால் அடுத்த நாளில் இருந்து அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

ஒருவேளை தான் பேசாததால் கோபமாக இருக்கிறான் என்று நினைத்தவள், ‘ஒரு நாள் இல்ல ஒரு நாள் என்னை தேடி வராமையா போய்டுவ’ என்று அவளும் பிடிவாதமாக இருந்து விட்டாள்.

நடந்ததைக் கூறிய கயல், “அன்னைக்கு தற்கொலை பண்ணிக்க போறேன் சொன்னவனை நான் தான், கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அனுப்புனேன். எப்போ பாரு அண்ணன் அண்ணன்னு அவன் உங்களை பத்தி தான் பேசிக்கிட்டே இருப்பான். உங்களை பார்த்தா, அவன் மனசு மாறும்ன்னு நினைச்சு தான் நான் வம்படியா அனுப்பி வச்சேன். ஆனால் ஆனால் இப்டி…” என்று ஒன்றும் புரியாமல் கண்ணீரில் கரைய,

ஜீவா எழுந்து, “பரவாயில்ல நல்லா தான் கதை சொல்ற. சோ, நான் கேட்ட வார்த்தையை நீ வேற மாடுலேஷன்ல தான் சொன்ன… அப்படி தான?

என்னை என்ன கார்த்தின்னு நினைச்சியா நீ என்ன சொன்னாலும் நம்புறதுக்கு…” என்று கோபத்துடன் சேரை தூக்கி வீசினான்.

அதில் மிரண்டவள், “இல்லைங்க என் அப்பா மேல சத்தியமா இதான் நடந்துச்சு என்னை நம்புங்க…” என்று தன்னை நிரூபிக்க முயற்சித்தவள், பின் ஏதோ யோசித்து, அங்கும் இங்கும் தேடிக்கொண்டு,

“என் போன்… என் போன்ல… என் போன்ல, வாட்சப் கான்வெர்சேஷன் இருக்கும். அதுல நான் அவன்கூட பேசுன எல்லாமே இருக்கும். நான் எதையும் டெலிட் பண்ணல. கடைசியா கடைசியா… அவன் ‘நான் என்ன ஆனாலும் தற்கொலை பண்ணிக்க மாட்டேன்.  ஒரு வாரத்துல அங்க வந்து உன்னை பார்த்து உன் கோபத்தை குறைக்கிறேன்… ப்ளீஸ் பேசு’ன்னு அனுப்பி இருந்தான். ஆனால் நான் தான் வறட்டு கோபத்துல அவன் கிட்ட பேசவேயில்லை… ” என்றவள்,

மேலும், ஜீவாவை பார்த்து, “அவன் அவன் என்கிட்ட தற்கொலைல்லாம் பண்ணிக்க மாட்டேன்னு தான் சொன்னான். கண்டிப்பா அவன் தற்கொலை பண்ணிருக்க மாட்டான்” என்று உறுதியாக சொல்ல, அப்பொழுது தான், ஜீவா அவளை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

அதற்குள் தேடி கண்டுபிடித்து, அவளின் போனை எடுத்த கயல், வேகமாக அதில் வாட்சப் ஓபன் செய்து, ஜீவாவிடம் காட்ட, அவன் புருவத்தை சுருக்கி யோசித்த படி, அதனை வாங்கிப் பார்த்தான்.

“சாப்டியா, தூங்குனியா, குட் மார்னிங், குட் நைட்…”மேலும், சில சாதாரண விஷயங்கள் தவிர அதில் ஒன்றுமே இல்லை.

இறுதியில், கயல் கூறியது போல் ஒரு குறுஞ்செய்தி
யும் அனுப்பி இருந்தான்.

அதனைப் புரியாமல், பார்த்தவன், தலையில் கை வைத்து அமர்ந்து போனை நெற்றியில் வைத்து தேய்த்து கொண்டே ஏதோ யோசிக்க, கயலுக்குத் தான் அவன் இதையும் நம்பினானா, இல்லை இதற்கு வேறு ஏதாவது காரணம் சொல்வானா என்று புரியாமல், நடுங்கிக் கொண்டிருந்தாள்.

இதனை விட்டால் அவளிடம் வேறு ஆதாரங்களும் இல்லையே. ஜீவா, பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து அவள் அருகில் வர, கயல், மயங்கியே விழுந்து விட்டாள் பயத்தில்.

ஓடிச் சென்று அவளைத் தாங்கியவன், “கயல் கயல்” என்று பதட்டமாக கன்னத்தைத் தட்டி, முகத்தில் நீரைத் தெளிக்க அவள் கண் விழிக்கவே இல்லை.

அவனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை. “அப்போ நாம் தான் தவறாக புரிந்து கொண்டோமா… அன்று பேசியதற்கு அர்த்தம் நான் நினைத்தது இல்லையா. அப்போ இவளால் அவன் தற்கொலை செய்யவில்லையா…” என்று வெகுவாய் குழம்பியவன், கயலை கட்டிலில் கிடத்தி விட்டு அவளைப்  பார்க்க, ஒரே வாரத்தில், வாடி வதங்கி போயிருந்தாள்.

முகத்தில் அவ்வளவு சோகம் அப்பி இருந்தது. ஜீவாவிற்கு என்ன செய்வது, என்று ஒன்றும் புரியவில்லை.

வேகமாக மருத்துவருக்கு போன் செய்து வர சொன்னவன், அவள் அருகில் சென்று பார்க்க, அப்பொழுது தான் அவள் உடல் நெருப்பாய் சுட்டதையே உணர்ந்தான். மேலும், அவள் உடையும் ஈரத்தன்மையுடன் இருப்பதைக் கண்டு, ஒரு வாரமாய் ஈரத் துணியையே உடுத்தி இருக்கிறாளே. தானும் வேறு உடை கூட தராமல்… என நினைத்து தன்னையே நொந்தவன், கேசத்தை அழுந்தக் கோதினான்.

அப்பொழுது ஒரு பெண் மருத்துவர், தாதியருடன் அங்கு வர, அந்த தாதியரிடம் வேறு உடை கொடுத்து, அவளுக்கு மாற்ற சொன்னான்.

பின் மருத்துவரும் சோதித்து விட்டு, “ஹை பீவடா இருக்கு. நாளைக்கு காலைல வரை பாருங்க. டெம்பரேச்சர் குறையலைன்னா ட்ரிப்ஸ் போடலாம்”  என்றும்,

“ரொம்ப வீக் ஆக இருக்காங்க…ஒரு வாரமா  சாப்பிடாத மாதிரி” என்றும்  அனுமானமாய் கூற, அதில் அதிர்ந்தவன், அவர்களை அனுப்பி வைத்து விட்டு, அவளருகில் சென்று அமர்ந்தான்.

அப்பொழுதும் அவள் முகத்தில் தெரிந்த பயத்தையும் அப்பாவித்தனத்தையும் கண்டவன், அவளின் இதழில் அவனால் ஏற்பட்ட காயத்தில் ரத்தம் காய்ந்து போய் இருக்க, குற்ற உணர்ச்சியில் வெந்து கொண்டிருந்தான்.

போதா குறைக்கு அவள் கையை எடுத்து பார்த்தவன், கை எல்லாம் காய்ச்சு போயும், சமையலறையில் எண்ணெயோ எதுவோ தெறித்து, ஆங்காங்கே வடு வடுவாக இருப்பதையும் பார்த்தவனுக்கு தன் மேலேயே அளவில்லாத கோவம் வந்தது.

தன் மேல் இருக்கும் கோபத்தில் அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை உடைத்து, “ஷிட்… ஷிட்…” என்று தன்னைத் தானே வருத்திக் கொண்டான்.

பின் மீண்டும், அவளருகில் சென்று அமர்ந்தவன், அப்பொழுது தான், அவளைப் பார்த்த முதலான நாளை முதலில் இருந்து நினைத்துப் பார்த்தான்.

அந்த ரெட் சாரியில் இவனையே விழி விரித்துப் பார்த்த, அவளின் கண்களும், தன்னைப் பார்த்தாலே, அவள் முகத்தில் வரும் பயத்தையும், தான் அருகில் வந்தாலே, தன்னை பார்க்க முடியாமல் குனிந்து கொள்ளும் அவளின் நாணத்தையும் நினைத்தவன், இப்படி மிருகத்தனமாக வருத்தி விட்டோமே, என்று வேதனையில் கருகிக் கொண்டிருந்தான்.

மதியம் வெகு நேரம் ஆகியும் அவள் விழிக்காமல் இருக்க, அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தவன், சூடு லேசாக குறைந்திருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டு, அவளுக்கு குடிக்க சூடான பானம் எடுத்து வர, அடுக்களைக்கு சென்றான்.

சிறிது நேரத்தில், மெல்ல கண்ணைத் திறந்த கயலுக்கு  முதலில் எங்கு இருக்கிறோம் என்றே புரியவில்லை.

அதன் பிறகே காலையில் அவளுக்கும் ஜீவாவிற்கும் நடந்த சம்பாஷணையை நினைவு படுத்தியவள், “நான் எப்படி கட்டில்லா” என்று பதறி விட்டு, அவள் உடையை பார்த்தாள்.

உருண்டு பிரண்டு படுத்ததால்,  உடை கலைந்திருந்ததாலும், மேலும், வேறு உடை அணிந்திருப்பதையும் கண்டு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

அந்த நேரம் ஜீவா உள்ளே நுழைய, அவனை பார்த்து அரண்டு, வேகமாக தன்னை போர்வையில் சுருட்டியவள், “ப்ளீஸ் என்னை விட்ருங்க. நான் சொன்னதெல்லாம் உண்மைதான். என்னை விட்ருங்க… ஏன் இப்படி பண்ணீங்க…!” என்று அழுக, அவனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

முதலில் பேந்த பேந்த விழித்தவன், அதன் பிறகே, அவள் எண்ணத்தை அறிந்து கொண்டு, ‘ஓ மேடம் நான் ரேப் பண்ணிட்டேன்னு நினைச்சு ஒப்பாரி வைக்கிறாங்களா’ என்று உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளருகில் வர,

அவள் பின்னே நகர்ந்து, “வேணாம் ப்ளீஸ் வேணாம்…” என்று கண்ணீர் விட,

அவனோ “என்ன வேணாம்…” என்று புருவத்தை உயர்த்தி கேட்டு விட்டு, பால் டம்பளரை நீட்டி “இதை குடி” என்று கொடுத்தான்.

 கயல் தான், விஷத்தை எதுவும் கலந்து கொடுத்திருக்கிறானோ என்று அந்த பால் டம்பளரையே மிரண்ட பார்வை பார்க்க, அதனை உணர்ந்து கொண்டவன்,

“உனக்கு விஷத்தை எல்லாம் தரல. இதை குடி…” என்று அழுத்திச் சொல்ல, தான் நினைத்தது இவனுக்கு எப்படி தெரிஞ்சது என்று முழித்தவள், அடுத்து அவன் அதட்டலில் பயந்து அதனை வாங்கி மடமடவென குடித்தாள்.

அவள் பயத்தை ரசனையுடன் பார்த்தவனுக்கு, அவளைப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது.

தன் பணத்திற்காக, தன் மேல் வந்து விழும் பெண்களுக்கு மத்தியில், நான் இவ்வளவு  செய்தும், அழுத்தமாய் இருந்து எனக்கு புரிய வைத்து, இப்போதும் என்னை கண்டு இப்படி நடுங்குகிறாளே… என்ன பெண் இவள். இவளுக்கு கோபமே வராதா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு தெரியவில்லை. அவள் கோபத்தை காட்டும் விதம் எதுவென்று…

அவள் பாலை குடித்து முடித்ததும், அதனை வாங்க கையை நீட்டியவனை பார்த்து நடுங்கி கொண்டே, அதனைக் கொடுக்க, “நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன். நீ போய் ஃபிரெஷ் ஆகு…” என்று சொல்ல, அவன் என்ன சொன்னான் என்று உணரவே அவளுக்கு சில நிமிடம் பிடித்தது.

  “உன்னை தான். போய் ஃபிரெஷ் ஆகு” என்று மீண்டும் முறைத்தபடி கூற, அவளின் நிலையை கண்டு அவளுக்கு கண்ணீர் முட்டியது.

தன்னை என்ன செய்தான் அவன் என்று புரியாமல், கண் கலங்க கட்டிலை விட்டு இறங்க, ஜீவா அவள் அருகில் வந்து,

“உன்னை ரேப் பண்ணனும்ன்னா நீ இங்க வந்த அன்னைக்கே பண்ணிருப்பேன்… போ” என்று அனுப்ப, அப்பொழுதும், அவளுக்கு பயம் போகவில்லை என்றாலும், எதுவும் நடக்கவில்லை என்று நிம்மதி ஆனாள்.

முகம் கழுவி விட்டு, அவள் அடுக்களைக்குள் செல்ல, அவன் சமைத்து கொண்டிருப்பதை பார்த்தவள், ஒன்றும் புரியாமல் அங்கேயே நிற்க,

ஜீவா “ரூம்க்கு போ கயல். நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்று சொல்ல, அவன் சாதாரணமாய் தன் பெயரை சொல்லி பேசியதை கண்டு இப்போது அவன் என்ன நினைக்கிறான் என்று அவளுக்கு புரியவே இல்லை.

ஒருவேளை ‘பாசமாக பேசி… என்னை மறுபடியும் ஏமாற்ற பார்க்கிறானோ’ என்று நினைத்தவள், வேகமாக அங்கு சென்று, “நான் சமைக்கிறேன்” என்று சொல்ல,

அவன் “உனக்கு காய்ச்சல் அடிக்குது. போய் ரெஸ்ட் எடு” என்றதில், அவள் அதனை கண்டுகொள்ளாமல், அவனை தடுத்து விட்டு, அவளே செய்ய எத்தனித்தாள்.

ஜீவா, “உன்னை தான் சொன்னேன் ரூம்ல போய் ரெஸ்ட் எடுன்னு” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கூற,

“நான் என் ரூம்ல தான் இருக்கேன்…” என்று அவள் அமைதியாய் சொன்னதும், அவனுக்கு தான் சுள்ளென்று இருந்தது.

அதில் தடுமாறியவன், “கயல் அது… வந்து… நான்” என்று பேச வருவதை காதில் வாங்காமல், அவள் கருத்தாக வேலை செய்ய, அவனுக்கு தான் ஐயோ வென்றிருந்தது.

அங்கேயே சிறிது நேரம் நின்றவனுக்கு, திடீரென ஏதோ தோன்ற, “கயல், உன் போன் எங்க” என்று கேட்க,

“ரூம்ல தான்…” என்று சொல்லும்போதே விறுவிறுவென, அறைக்குச் சென்றவன் அவள் போனை எடுத்துப் பார்த்து, அதிர்ந்தான்.

இவன் ஏன் இப்படி ஓடுகிறான் என்று அவளும் அறைக்கு செல்ல, ஜீவா தன் அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு இவர்கள் பேசிய உரையாடலைப் படித்து கொண்டிருப்பதைக் கண்டு, அவன் தன்னை சந்தேகித்ததில் மேலும் இதயம் ரணமாய் வலித்தது.

கயல் கண்ணில் நீருடன் நின்றிருக்க, அவள் அருகில் வந்த ஜீவா, “கயல்… இது இது உனக்கு… அன்னைக்கு காலேஜ் கடைசி நாள் கார்த்தி அனுப்புன மெஸேஜ் தான. 7.25 க்கு அவன் உனக்கு அனுப்பி இருக்கான் அப்படித்தான” என்று கேட்க, அவளும் “ம்ம்” என்று தலையாட்டினாள்.

ஜீவா, “நோ நோ… அவனை நான் தான் அந்த மலைக்கிட்ட வெய்ட் பண்ணுன்னு சொன்னேன். நான் ஷார்ப் ஆ 7.30 க்கு அங்க போய்ட்டேன். உனக்கு 7.25 க்கு தற்கொலை பண்ணிக்க மாட்டேன்னு மெஸேஜ் அனுப்புனவன், அஞ்சே நிமிஷத்துல, எப்படி முடிவை மாத்திருக்க முடியும்.” என்று தலையை பிய்த்துக் கொள்ள,

கயலும் இதனை கேட்டு குழம்பியவள், “ஆனால் அவன் இந்த மெஸேஜ் அனுப்பிட்டு எனக்கு போன் பண்ணி ரெண்டு நிமிஷம் பேசுனான்…” என்று சொல்ல, ஜீவா “வாட்” என்று அதிர்ந்தான்..

தொடரும்..
-மேகா..
 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
37
+1
85
+1
4
+1
2

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  1 Comment

  1. priyakutty.sw6

   அதான… அஞ்சு நிமிஷத்துல என்னாச்சு… 😔

   கார்த்திக்… உண்மை தெரியாம… 😤

   அவங்க கோபம் எப்படி இருக்கும் னு பாக்க வெயிட்டிங் dr… 💞