Loading

வான்மதியின் முகம் ரௌத்திரத்தில் மின்ன, “எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு சார்!” என்றாள் பல்லைக்கடித்து.

“டைவர்ஸும் ஆகிடுச்சு தான?” ஆரவ் எதிர்கேள்வி கேட்க, “அதுக்காக நீங்க என்ன வேணாலும் பேசுவீங்களா?” அடக்கப்பட்ட சினத்துடன் அவனைத் தீயாக முறைத்தாள் வான்மதி.

“இப்ப நான் என்ன பேசினேன்?” என்றவனோ ‘நான் தவறாக எதுவுமே கேட்கவில்லை’ என்ற தோரணையில் பேச, அவளுக்கோ கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

“காசு இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா…? பேசிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கவும் செய்வீங்க இல்ல? கல்யாணம் ஆன பொண்ணுன்னு தெரிஞ்சும் உங்க சுய நலத்துக்காக கல்யாணம் பண்ணிக்க கேட்பீங்களா?” கடுகடுவெனப் பொரிந்தாள்.

கன்னத்தில் கிள்ளி விளையாடிய இஷாந்த்தின் பிஞ்சுக் கைகளைப் பற்றி, அவனை தட்டிக் கொடுத்தபடியே, “கல்யாணம் பண்ண தான கேட்டேன். கல்யாணம் பண்ணாம ‘என்கூட வா’ன்னு நான் சொல்லலையே. அண்ட் நான் ஒண்ணும் உன்னை என் கூட சேர்ந்து வாழணும்ன்னு கூப்டல. நம்ம மேரேஜ் ஒன்லி ஃபார் இஷுக்காக மட்டும் தான்.” என்றவனின் வார்த்தைகள் உறுதியாக வெளிவர, அவளுக்கோ அதிர்வு தான்.

பின் அவனே, “நான் உன்ன வற்புறுத்தல. ஜஸ்ட் சாய்ஸ் மட்டும் தான் கேட்டேன். அதுக்கு மேல உன் இஷ்டம்.” என அசட்டையாக தோளையும் குலுக்கி விட்டு நகர, அவளுக்குத் தான் கால்கள் தொய்வது போல இருந்தது.

அதில் அருகில் இருந்த நாற்காலியை இறுக்கப் பற்றிக் கொண்டவள், தனது கைப்பையை எடுத்துக் கொண்டு விடுமுறையும் சொல்லி விட்டு கிளம்பியே விட்டாள்.

கவினாக இருந்திருந்தால் அனுப்பி இருக்க மாட்டான். நல்லவேளையாக அவன் வேலையாக இருந்ததில், தன்விக் – இடம் தலைவலிக்கிறது எனக் கூற அவனும் அவளை அனுப்பி விட்டான்.

மறுநாளும் அவள் வேலைக்கு வரவில்லை. அதனை ஆரவும் கண்டுகொண்டது போல தெரியவில்லை.

ஓரளவு வான்மதி மூலம், இஷாந்தை எப்படி அழுகாமல் சமாளிப்பது என்பதை அறிந்திருந்தவன், சில நேரம் அவளைப் போல அவன் மகனிடம் பைத்தியக்காரப் பட்டம் பெருமளவு குட்டிக் கரணம் அடித்தான்.

அதில் ‘கெக்க பெக்க’ வென சிரித்த தன் மழலைக் கண்டு அவனும் அழுத்தம் நீங்கி புத்துணர்வு பெற்றான்.

“வாவ்! எப்போவும் அழுதுகிட்டே இருக்குற நம்ம குட்டி பேபியா இப்படி ஜாலியா சிரிக்கிறது?” என வியந்து கேட்டபடி அவனை தூக்கிக்கொண்ட ஹேமா, “என்ன பாஸ் உங்க முகத்துல கூட டாலடிக்குது…?” என்றாள் கிண்டலாக.

அதற்கு சிறு புன்னகை ஒன்றை சிந்தியவன், “ப்ராஜக்ட் முடிஞ்சு டாலர் வரப்போகுதுல அதனால கூட இருக்கலாம்.” என்றதில், அவள் தான், “அப்போவாவது எனக்கு ப்ரோமோஷன் குடுப்பியாடா?” எனக் கேட்டாள் பாவமாக.

மறுப்பாக தலையசைத்த ஆரவ், “கடைசி வரை எச்.ஆர் ஆவே சாவு!” என கேலியாக சாபம் விடும்போதே, அங்கு வந்த கவின், “ஆரவ் முதல்ல இவளை இந்த வேலைல இருந்து தூக்கு. ஒரு கேண்டிடேட் கூட ஒழுங்கா செலக்ட் பண்ண மாட்டுறா.” என்றான் முறைத்தபடி.

“ஒரு எச். ஆர்ன்னு கொஞ்சமாவது மதிக்கிறானுங்களா?” என பொறுமியபடி அவள் முறைப்பைத் தொடர, கவினோ திட்டுவதை தொடர்ந்தான்.

“ஜாயின் பண்ணி ஒரு மாசம் கூட ஆகல. அதுக்குள்ளே தலைவலின்னு ஒன்றை நாள் லீவ் போட்டுட்டு போய்ட்டா அந்த பொண்ணு. அவ வேலை எல்லாம் நீயா பார்ப்ப?” என எகிற,

ஹேமா, “அப்போ அவள் உன்னால போகலையா? நான் கூட, நீ இஷு பேபிய தூக்கிட்டு போனதுனால, அவளை திட்டி, அதுனால அவள் போனான்னு நினைச்சேன்.” என்றதில், அவன் பேந்த பேந்த விழித்தான், ‘இவள் என்ன புதுசா ஒரு புரளிய கிளப்புறா’ என்று.

ஆரவ் வேறு அவனை காட்டமாக பார்ப்பது போல் இருக்க, உடனேயே, “ஐயோ மச்சான். சத்தியமா அந்த பொண்ணை நான் ஒண்ணுமே சொல்லல. அவளா தான் தன்விக்கிட்ட லீவ் சொல்லிட்டு போய் இருக்கா. நீங்க பார்க்குறதை பார்த்தா, அவள் சூசைட் பண்ணிக்கிட்டா கூட என்னை தான் காரணமா சொல்லுவீங்க போல” என எச்சிலை விழுங்கினான்.

அவள் ஏன் வரவில்லை என்ற காரணம் ஆரவ் அறிவான். ஆனாலும், “எனக்கு உன் மேல தான் சந்தேகம். நாளைக்கு போலீஸ் வந்து கேட்டா கூட உன்ன தான் முதல் சஸ்பெக்ட் ஆ சொல்லுவேன்” என்று அசட்டையாக கூறியதில், ‘அட துரோகி’ எனப் பார்த்தான் கவின்.

ஹேமா வேறு, “அப்போ நட்ட நடு ஆபிஸ்ல கவின் கையில விலங்கை மாட்டி ஜெயிலுக்கு கூட்டிட்டு போவாங்களா ஆரவ்?” என வருத்தம் மிகுவது போல கேட்க, “கண்டிப்பா” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

அதில் பதறிய கவின், “முதல்ல நான் அவளுக்கு போன் செஞ்சு சாந்தமா பேசி, ஆபிஸ்க்கு வர சொல்றேன். அப்பறம் ஏதாச்சு பண்ணிக்கிட்டு என்னை கோர்த்து விட்டுட போறா” என வேகமாக அவனின் அலைபேசியில் இருந்து அழைக்க போக, ஆரவ் தான் தடுத்தான்.

“இப்போ கன்ஃபார்ம் – ஆ உன்ன தூக்குல போடுறது உறுதி!” என உதட்டை மடித்துக் கூற, கவின் புரியாமல் பார்த்தான்.

“அப்பறம் என்னடா, உன் நம்பர்ல இருந்து கூப்பிட்டு, அதை போலீஸ் ட்ரேஸ் பண்ணி உன்னை பிடிச்சுட்டா?” என நக்கல் நகையுடன் பார்க்க, அதில் அரண்டவன், “அப்ப உன் நம்பர்ல இருந்து கால் பண்றேன்” என்று வேகமாக அவனின் போனை எடுத்தான்.

அதனை தடுக்காதவனாக, டேபிளில் விரல்களால் தாளமிட்டான் ஆரவ்.

ஹேமா ஏதோ கூற வருவதையும் கேட்காமல், பயோ டேட்டாவில் இருந்த அவளின் எண்ணை பார்த்து ஆரவின் போனில் இருந்தே வான்மதிக்கு அழைக்க, புது எண்ணில் இருந்து வந்த போனையே வெறித்தாள் அவள்.

லேசாக கைகள் வேறு நடுக்கம் கொடுக்க, பின் ஒருவேளை அலுவலகத்தில் இருந்து வந்திருக்குமோ என்றெண்ணி, இறுதி ரிங்கில் எடுத்தாள்.

“ஹலோ?” என்றவளுக்கு குரலே வரவில்லை.

“ஹெலோ? வான்மதி இருக்கியா?” எனக் கேட்டவனின் மனமோ ‘மகமாயி இன்னும் உயிரோட தான இருக்க’ என்று ஆசுவாசமானது.

“யாரு?” அவள் சற்றே அதிகாரமாக கேட்க, “ம்ம். உன்ன வேலைக்கு சேர்த்து சம்பளம் தர்றோம்ல… அந்த லூசுப்பயலுங்க தான்” என்றான் கோபமாக.

ஒருவேளை ஆரவாக இருக்குமோ என பதறியவளுக்கு, இது அவன் குரல் இல்லை என்பது உணர, அதன் பிறகே கவின் என்று புரிந்து கொண்டவள், “அது… சார்… கொஞ்சம் தலைவலி அதான்…” என்றாள்.

“அதுக்கு, ஒரு மாத்திரையை போட்டு வர்றதை விட்டுட்டு ப்ராஜக்ட் போயிட்டு இருக்குற டைம்ல லீவ் போடுவியா? இங்க என்னமோ, நான் உன்னை ஏதோ சொல்லி நீ வரலைன்ற மாதிரி பேசுறாங்க.” என்றதில், அவள் “சே! சே! இல்ல இல்ல சார்.” என்றவள், “நாளைக்கு வந்துடுறேன்.” எனக் கூறினாள்.

” சரி. வந்து சேரு” என்று போனை வைத்தவன், “இப்போவாவது நம்புறீங்களா. நான் அவளை ஒண்ணுமே சொல்லலைன்னு” என்றான் கடுப்பாக.

ஆரவ் அவனின் கதறலை கண்டுகொள்ளாமல், கவின் கையில் இருந்த அவனின் போனை வாங்கி, அவளின் எண்ணை பதிந்து வைத்துக் கொள்ள, ஹேமாவோ, “உனக்கு என்ன புத்தி கெட்டு போச்சா?” என்றாள் கேவலமாக ஒரு பார்வை பார்த்து.

“ஏன்? ஏன்?” என அவன் கோப பெருமூச்சு விட,

“பைத்தியமே. எம்பிளாயீ ஆஃபிஸ் வரலைன்னா கால் பண்ணி யாராவது திட்டுவாங்களா? அதுவும் பெர்சனல் நம்பர்ல இருந்து கால் பண்ணுவாங்களா? அவள் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணா நீ செத்த…!” என்று ஏற்றி விட,

“நான் எங்க கோபமா பேசுனேன்? மாத்திரை எல்லாம் போடுன்னு அக்கறையா பேசுனேன் ஹேமா.” என்றான் ‘ஐயோ என்னை ரௌண்டு கட்டுதுங்களே. உண்மையாவே நம்மளை ஜெயில்ல தள்ளிடுங்களோ’ என்று மிரண்டவனாக.

அதற்கு அவன் பதில் பேச வர, அங்கிருந்த ஃபைல் ஒன்றை அவன் மீதி தூக்கி எறிந்த ஆரவ், “அட ச்சே! வெளில போய் பேசுங்க.” என முறைக்க, அதனைக் கண்ட இஷாந்த் இன்னுமாக சிரித்தான்.

தன் குழந்தை சிரித்ததில், மீண்டும் ஃபைல் கொண்டு கவினை அடித்து விளையாட்டு காட்ட, அவன் வயிறு வலிக்க சிரித்ததில், ஆரவிற்கும் புன்னகை மலர்ந்தது.

கவின் தான், “டேய் அப்பனும் மகனும் என்னை என்னடா பண்றீங்க?” என்று போலியாக முறைத்தாலும், இருவரின் புன்னகை முகம் கண்டு அவனுக்கும் நிம்மதி தோன்றியது.

வான்மதிக்கு இருப்பு கொள்ளவில்லை. வெட்ட வெட்ட பூதம் கிளம்புவது போல, இதென்ன நம் மன அமைதிக்கு குழந்தையின் அருகாமையை நாடினால், அது நமக்கே எதிராக திரும்புகிறதே என சலித்தாலும், ஆரவை நேராக சந்திக்கும் துணிவு தனக்கு இல்லையோ என்றே குழம்பினாள்.

அதிலும், இரு நாட்களாக இஷாந்தை காணாததில் மீண்டும் மனதில் பாரம் குடி ஏறியது. ஆனால், அலுவலகம் சென்றால், நிச்சயம் திருமணம் பற்றிய பேச்சு அடிபடும் என்று உணர்ந்தவள், அவ்வேலையை விட்டு விட முடிவு செய்தாள்.

கவினின் செய்கையே அவளை ஓட வைப்பது தான் என்பது அவளும் புரிந்ததே. அதனால், அவனிடம் கூறினால் தன்னை உடனேயே வேலையை விட்டு தூக்கி விடுவான் என்றெண்ணி, முந்தைய நாள் அவன் அழைத்த எண்ணை கவினின் எண் என்றெண்ணி அதற்கு அழைத்தாள்.

அப்போது தான் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த ஆரவ், இஷாந்தையும் குளிப்பாட்டி கிளப்பி உணவு ஊட்டிக் கொண்டிருந்தான்.

அலைபேசி அடித்ததும் யாரென பார்த்தவனுக்கு வான்மதியின் எண்ணைக் கண்டதும், லேசாக குறுகுறுப்பு தோன்றியது.

அப்போதே, அவள் அழைக்கும் காரணத்தையும், கவின் என எண்ணி தனக்கு அழைப்பதையும் கணித்தவன், போனை எடுத்து, “ஹெலோ” என்றான்.

அந்த ஹலோவை உணராதவள், “கவின் சார். நான் வான்மதி பேசுறேன். நான் வேலைல இருந்து ரிலீவ் ஆகுறேன் சார். ப்ளீஸ். அதுக்கான ப்ரொசீஜர் மட்டும் சொல்லுங்க” என்று மடமடவென கேட்க, அவனுக்கு சிரிப்பே வந்தது.

“சிம்பில். என்னை கல்யாணம் பண்ணிட்டு வீட்ல இருந்து இஷாந்தை பார்த்துக்கோ. உனக்கும் வேலையை விட்ட மாதிரியும் இருக்கும், எனக்கும் என் வேலையை பார்த்த மாதிரி இருக்கும்!” என வெகுவான கேலியை ஏந்தி ஆரவின் குரல் கேட்டதில் அவள் தான் மறுபக்கம் சிலையாகி இருந்தாள்.

‘அய்யயோ! இவருட்ட எப்படி கவின் சார் போன் வந்துச்சு’ என தன்னை நொந்தாலும், அவன் பதிலில் கோபமானவள், “எனக்கு அதுக்கு எந்த அவசியமும் இல்ல சார்” என்றாள் சட்டென.

“அவசியம் இல்லன்னா ஆபிஸ் வரவேண்டியது தான. நான் என்னமோ உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ற மாதிரி, சீன் போட வேண்டிய அவசியம் இல்லையே.” அவனும் காட்டமாகவே பதில் கூறினான்.

“அப்டி எதுவும் நடக்க கூடாதுன்னு தான் சார், வேலையை விட்டு போறேன்னு சொல்றேன்.” வான்மதி அழுத்தத்துடன் மறுமொழி கூற, அதற்கும் “உன் இஷ்டம். ஐ டோன்ட் கேர்.” என்றான் அக்கறையற்றத் தன்மையுடன்.

அந்நேரம், இஷாந்த் சிணுங்கலை ஆரம்பித்து அழுகையில் முடிக்க, அச்சத்தம் கேட்டதும், “என்னாச்சு சார். ஏன் பேபி அழுறான்” என்றாள் பதறி.

“அவன் அழுதா உனக்கு என்ன வான்மதி? உன் வேலையை பார்த்துட்டு சாரி, வேலையை விட்டுட்டு கிளம்பு” என்று கத்தரித்தவன், போனை வைத்து விட்டு, குழந்தையை கையில் அள்ளி சமாதானம் செய்தான்.

அவளுக்கு தான் ஏதோ போல் இருந்தது. அவனுக்கோ கோபம் தலைக்கேறியது. அவள் தங்கி இருக்கும் விடுதி முகவரி அவனுக்கு தெரியும், அலைபேசி எண்ணும் தெரியும். அவன் நினைத்து இருந்தால், அங்கேயே சென்று அவளை வற்புறுத்தி இருக்கலாம்.

ஆனால், என்னவோ தான் அவளை கார்னர் செய்வது போன்று அவள் பேசிய விதம் அவனுக்கு எரிச்சலைக் கொடுக்க, அதே எரிச்சலுடன் அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு அலுவலகம் வந்தான்.

இஷாந்தின் அழுகுரல் கேட்டதுமே, வேலையை விடும் எண்ணத்தை கை விட்டவள், ‘நான் ஏன் வேலைய விடணும். என்னை மீறி அவரு என்னை ஒண்ணும் பண்ணிட முடியாது.’ என தைரியம் கொண்டாலும், குழம்பிய மனதுடனே அலுவலகம் சென்றாள்.

நேரம் செல்ல செல்ல, அழுது கொண்டிருந்த இஷாந்திற்கு மேனி நெருப்பாக தகிக்க, மற்றவை மறந்து ஆரவ் மருத்துவமனைக்கு கிளம்பினான்.

அவன் கிளம்பியதுமே அங்கு வந்த வான்மதிக்கு, ஆரவ் மட்டுமின்றி, அவன் நண்பர்களும் அலுவலகத்தில் இல்லை என தெரிந்திட, அதனை கருத்தில் கொள்ளாமல் வேலையில் புதைந்தாள்.

மனதோரம், ‘பேபி அழுதானே. கீழ எதுவும் விழுந்துட்டானோ. உடம்பு சரி இல்லையோ? ஏன் இன்னைக்கு யாரும் ஆபிஸ் வரல.’ என நெஞ்சம் துடித்தது.

அந்நேரம், அவளுடன் பணி புரியும் பெண்ணான லக்ஷனா, “ஹப்பா. இன்னைக்கு எம்டி ஆபிஸ் வரல.” என ஆசுவாசமாக, வான்மதி ‘உங்களுக்கு ஏன் இவ்ளோ சந்தோசம்’ என்பது போல பார்த்தாள்.

“பின்ன, இன்னைக்கு புது ப்ராஜக்ட் ஸ்கெடியூட் பண்றேன்னு சொன்னாரு. அப்பறம் வேலை வாங்கியே நம்ம உயிர வாங்குவாரு.” என அலுத்துக் கொண்டிட, அவளுக்கும் புன்னகை தோன்றியது.

“இன்னைக்கு பேபியை கூட தூக்கிட்டு வரல போல…” என முதன் முதலாய் வாய் திறந்து பேசியவளை விழி விரித்து பார்த்த லக்ஷனா, “இப்போவாவது உன் வாயில இருந்து முத்து கொட்டுச்சே.” என்றாள் கேலியாக.

பின், அவளே “சார் கொஞ்ச நேரம் முன்னாடி வந்தாரு. அப்பறம், அவரோட குழந்தைக்கு ஃபீவர் போல. அதான் ஹாஸ்பிடல் தூக்கிட்டு போய்ட்டாரு.” என்று தகவலாகக் கூற, வான்மதிக்கு தான் வருத்தம் சூழ்ந்தது.

‘அச்சச்சோ. பேபிக்கு என்னாச்சோ தெரியலையே.’ என சில நொடிகள் கையை பிசைந்தவள், அதற்கு மேல் தாளாமல், ஆரவிற்கு போன் செய்திருக்க, அவனோ கடும் காய்ச்சலால் இஷாந்திற்கு ஊசி போட வேண்டும் என மருத்துவர் கூறியதிலேயே நெஞ்சம் வலிக்க அமர்ந்திருந்தான்.

அவ்வப்பொழுது, இது போல் ஊசி போடும் நிலை வருகையில், அப்படியே இங்கிருந்து ஓடி விடலாமா என்று கூட எண்ணுவான்.

ஆனால், அவன் தானே பார்த்தாக வேண்டும். நண்பர்களிடமும் செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையின் வலியை தானும் அனுபவிக்கத் தயாராக அமர்ந்திருந்தான்.

அப்போது தான், வான்மதி மீண்டும் அழைத்திருக்க, உடனே போனை எடுத்தான். அவன் பேசும் முன்னே, “என்னாச்சு சார் பேபிக்கு. ஃபீவர்ன்னு சொன்னாங்க.” என பதற்றத்துடன் கேட்டதில்,

“நீ வேலையை விடுறதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல்க்கு வந்துட்டு போறியா ப்ளீஸ்.” இதுவரை யாரிடமும் கெஞ்சி பழக்கப்பட்டு இருக்கவில்லை என்பது போன்றே அவனின் கெஞ்சல் வார்த்தைகளும், நடுங்கிய குரலும் வெளிவர,

அவளோ யோசியாமல், “அட்ரஸ் மட்டும் சொல்லுங்க சார்.” என்றாள் அடுத்த நொடி.

அவன் மருத்துவமனை முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு, ஊசி போட குழந்தையை கேட்ட தாதியரிடம் “ஒரு 10 மினிட்ஸ் கழிச்சு போடுங்க” என்றான்.

இருவரின் உரையாடலை கேட்டிராத கவின், “ஏண்டா. உடனே போட்டா அவனுக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கும்ல.” என்றதில்,

தன்விக், “டேய், உனக்கு தெரியாதா. அவன் மத்த நேரம் மட்டும் தான் தைரியத்தின் சின்னமா இருப்பான். இஷுக்கு ஊசியோ மருந்தோ குடுக்கும் போது குளிர்ல நடுங்குன கோழி மாதிரி நடுங்க ஆரம்பிச்சுடுவான்” என நண்பனின் சிறுபிள்ளைத் தனத்தை எண்ணி நக்கலடித்தான்.

மற்ற நேரமாக இருந்திருந்தால் அவனுக்கு அறை நிச்சயம். ஆனால், ஆரவால் முறைக்க கூட இயலவில்லை என்பதே உண்மை.

ஹேமா, “நாளைக்கு உனக்கு பேபி பிறக்கும் போது நீயும் இப்படி தான் இருப்ப. பெருசா வந்துட்டான்.” என அதட்டும்போதே, வான்மதி அங்கு வந்திருந்தாள்.

‘இவள் எப்படி இங்க வந்தாள்’ என புரியாமல் மூவரும் விழித்திருக்க, அவளைக் கண்டதுமே சற்று நிம்மதியானவன், இஷாந்தை அவளிடம் கொடுக்க, இஷாந்தும் அவளின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதான்.

“என்ன உடம்பு இப்படி கொதிக்குது?” என ஆரவிடம் திகைப்பைக் காட்டியவள்,

“ஓ… ஓ… சரிடா சரிடா. சீக்கிரமே சரி ஆகிடும். என் பட்டுல. அழாதீங்க பேபி.” என்று இஷாந்தின் முதுகை தட்டி ஆறுதல் படுத்தினாள்.

ஆரவ், “அவனுக்கு இன்ஜெக்ஷன் போடணுமாம். போய் போட்டு கூட்டிட்டுவா.” என்று அவளை மாட்டி விட, அவளோ அவனுக்கு மேல் “என்னது… ஊசியா? மருந்து மட்டும் குடுக்கலாம்ல.” என்றாள் பாவமாக.

“அதை தான் நானும் கேட்குறேன். டாக்டர் கேட்டா தான.” என்று மருத்துவர் மீது கோபத்தைக் காட்டியவனிடம், “சரி நீங்களே உள்ள தூக்கிட்டு போய் போட்டுட்டு வாங்க.” என்றாள்.

அதில் அவளை முறைத்தவன், “அது எனக்கு தெரியாதா? அவனுக்கு ஊசி போடுறதை என்னால பார்க்க முடியாது. அவன் உங்கிட்ட மட்டும் தான் வருவான். சோ நீ கூட்டிட்டு போ!” என்க,

“ம்ம்ஹும். எனக்கு கஷ்டமா இருக்கும். ப்ளீஸ் நீங்களே கூட்டிட்டு போங்க.” என அவள் அடம்பிடிக்க, அவர்களை பார்த்த தாதியர்,

“அட! ரெண்டு பேரும் உள்ள வாங்க. புருசனும் பொண்டாட்டியும் இத்துணூண்டு ஊசிக்கு இப்படி பயந்தா, புள்ளைய எப்படி தைரியமா வளக்குறது…” என நியாயம் கேட்க, இருவருமே அதிர்ந்து ஒரு நொடி விழித்தனர்.

முதலில் மீண்டது ஆரவ் தான். திடுக்கிட்டு நின்றிருந்த வான்மதியை பார்த்து, “அதான் சொல்றாங்கள்ல. வா ரெண்டு பேருமே உள்ள போலாம்.” என அவளைத் தாண்டி சென்றிட, தோளில் அழுது கொண்டிருந்த குழந்தையை வைத்துக்கொண்டு அவளாலும் மறுக்க இயலவில்லை.

உடன் இருந்த மூவருக்குமோ முகத்தில் ஈ ஆடவில்லை. கவினுக்கு அந்த தாதியரை மருத்துவமனை படிக்கட்டில் இருந்து உருட்டி விட வேண்டும் போல கோபம் கொப்பளித்தது.

வான்மதி தான், இஷாந்தை கையில் வைத்து இடுப்பைக் காட்டி பிடித்துக் கொள்ள, தாதியர் எடுத்த ஊசியை பார்த்து இருவருக்குமே முகத்தில் வேதனை அப்பியது.

ஊசியை செலுத்த வருகையில், ஆரவ் ஒரு புறமும், வான்மதி மறுபுறமும் கழுத்தைத் திருப்பிக்கொண்டு கண்ணை மூடிக்கொள்ள, அவனோ இதயம் அதிவேகமாக துடித்ததில் அவளின் ஒரு கையைப் பற்றிக்கொண்டான்.

அவளும் அதனை உணராமல் இன்னும் இறுக்கமாக அவன் கையை அழுத்திட, ‘வீல்’ என்ற சத்தத்துடன் இஷாந்த் அழுததில் தான் இருவரும் அவசரமாக கையை விட்டு விட்டு, ஒருவரை ஒருவர் பாராமல் தயங்கி நின்றனர்.

தேன் தூவும்!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
60
+1
230
+1
10
+1
14

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்