Loading

ஒரு நாளைக்கு ஒரு அதிர்ச்சி என்றால் கூட தாங்க இயலும், நாள் முழுக்க அதிர்ச்சி என்றால்? இன்னும் சுயநினைவு வரவில்லை தஷ்வந்திற்கு. அவளும் அவனை விடுதியில் இறக்கி விட்டு சென்று விட்டாள். அவள் சென்று மூன்று மணி நேரமும் கடந்து விட்டது. ஆனாலும், திக்பிரம்மை பிடித்தவன் போல இருந்தவனைக் கண்டு மாதவிற்கு தான் கிலி பிடித்தது.

“பாஸ்… தஷு… டேய்…” எனப் பலவாறாக அழைத்துப் பார்த்தவன், “ம்ம்ஹும்… நீ இப்படிலாம் கூப்பிட்டா சரிப்பட்டு வரமாட்ட. உன் அக்காவுக்கு கால் பண்ணி சொல்றேன், நீ ஆள் சரி இல்லன்னு” என்றபடி அவனது போனை எடுக்க செல்லும் போது தான், சற்றே நிகழ்காலத்திற்கு வந்தான்.

உடனே அவனை தடுத்தவன், “சும்மா இருடா. இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு நீயம் புதுசா எதையாவது கிளப்பாத.” என்று கடுப்புடனும் சோர்வுடனும் கூறினான்.

அவன் குரலில் பதறியவன், “என்ன பாஸ் ஆச்சு? சீனியர் என்ன சொன்னாங்க. உன்னை எதுவும் மிரட்டுனாங்களா? விடு எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்.” என ஆதரவுடன் பேச,

“ஐயோ மாதவ். அந்த பொண்ணுக்கு அறிவே இல்லையா… அவள் சீனியர் நான் ஜுனியர். அது கூட புரியாம…” என தலையை அழுந்தக் கோதி கொண்டவன், “சரி அது கூட பரவாயில்ல. ஆனா, அவள் சொல்ற ரிலேஷன்ஷிப்ப எல்லாம் என்னால நினைச்சு கூட பார்க்க முடியல…” என்று நொந்து போனவன், நடந்ததைக் கூறினான்.

“ஆத்தாடி… கிஸ் வேற அடிச்சாளா?” என மாதவ் வாயில் கை வைக்க,

தஷ்வந்த் தான், முகத்தை சுளித்து அவள் இதழ் பட்ட கன்னத்தை அழுந்த தேய்த்துக் கொண்டான். “இது என்னடா புது விதமான பிரச்சனையா இருக்கு…!” என உண்மையாகவே வருந்தினான் மாதவ்.

“ஆமா பாஸ். கொஞ்சம் கூட புருஞ்சுக்காம, அவள் இஷ்டத்துக்கு பேசுறா. அவள் பொண்ணு தானான்னே கொஞ்ச நேரம் எனக்கு டவுட் ஆகிடுச்சுடா. சே…”

“அவளை நல்லா திட்டி விட்டிருக்க வேண்டியது தான…” மாதவும் எரிச்சலுடன் கூற, ‘இதெல்லாம் நடக்குற காரியமா பாஸ்’ என்பது போல தஷ்வந்த் பார்த்து வைத்தான். அதன் பிறகே, நிலவரம் புரிய, “ஆக, அவள் கூட பழகலைன்னா அவள் கையால சாவ. பழகுனா அவள் அப்பா கையால சாவ. ஆக மொத்தம் சாவு கன்பார்ம்.” என்றவனை முறைத்தான்.

“உனக்கு கிண்டலா இருக்காடா? நானே எப்படி எஸ்கேப் ஆகுறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்.” என்று தலையில் கை வைத்தவனிடம்,

“ஃப்ரீயா விடுடா. அவள் ஏதோ ஒரு ஆர்வத்துல பேசி இருப்பா. ரெண்டு மூணு நாள் ஆனா, அவளே சரிப்பட்டு வராதுன்னு போய்டுவா. இப்ப கொஞ்சம் தூங்கு. அப்ப தான், நாளை பின்ன வர்ற அதிர்ச்சியலாம் தாங்க தெம்பு இருக்கும்…” என நக்கலாக கூறியவனுக்கு தெரியவில்லை. இனி வாழ்நாள் முழுதும் அவனது நண்பன் பல்வேறு அதிர்ச்சிகளை தாங்கி தான் வாழப் போகிறான் என.

அதன் பிறகு, சில நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் சென்றது. மந்தராவின் காயமும் சரியாகிக் கொண்டு வர, இன்னும் அவளுக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது.

அதனாலேயே, சில நேரம் தலையை போட்டு குழப்பிக் கொள்வாள். “அப்படி நான் என்ன தான் பண்ணிட்டேன்னு சீனியர் என் கையை பதம் பார்த்தாங்க” என வாய்விட்டே புலம்புபவளை காணும் போது தஷ்வந்திற்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும்.

அவளுமே அவளுக்கும் அமிஷிற்கும் நிகழ்ந்த சண்டையை பற்றி அவர்களிடம் கூறவில்லை.

இங்கு அமிஷ் தான் குழப்பத்திலும் வருத்தத்திலும் மூழ்கி இருந்தான். சில நாட்களாகவே அவனை கவனித்துக் கொண்டிருந்த ஆஷா, “என்னடா உன் பிரச்சனை. கல்லை முழுங்குனவன் மாதிரியே சுத்துற?” என முதுகை தட்டி கேட்க, லேசாக புன்னகைத்து, “ஒன்னும் இல்லடி. மஹூ பத்தி தான் யோசிக்கிறேன்” என்றவனை அவள் புரியாமல் பார்த்தாள்.

தன் குழப்பத்தை கூறியவன், “அவள் ஏன் தஷ்வந்த்தை பார்த்தா மட்டும் வேற மாதிரி ரியாக்ட் பண்றா? தேவை இல்லாம மந்து கையை ஏன் நச்சு வைச்சா?” எனக் கேட்டதில்,

நமுட்டு சிரிப்புடன் அவனைப் பார்த்தவள், “அவளை விடு. நீ சொல்லு. நீ ஏன் சம்பந்தம் இல்லாம, அந்த ஜுனியர் பொண்ணுகிட்ட போய் பேசி, அவளுக்காக பதறி, அவளை அடிச்சுட்டு வந்த?” என நண்பனை நோக்கி அர்த்தப்பார்வை வீசினாள்.

ஒரு கணம் தடுமாறியவன், “அது… என்ன இருந்தாலும் ஒரு அழகான பொண்ணுக்கு அடிபடும் போது என் பிஞ்சு நெஞ்சு தாங்கதுன்னு உனக்கு தெரியும்ல ஆஷா… “என இளித்து வைக்க,

“ஹா ஹா… சிரிச்சுட்டேன். இப்ப உண்மையை பேசலாமா அமி.” என நக்கலடித்ததில், அசடு வழிந்தான்.

“ப்ச்… என்ன உண்மையடி சொல்ல சொல்ற. எனக்கு அவளை பிடிச்சு இருக்கு ஆஷா. பிடிச்சுருக்குன்றதை தாண்டி, வேற ஒரு ஃபீல். ஆனா, அதை எக்ஸ்போஸ் பண்றேன்ற பேர்ல சொதப்பிட்டு வந்துட்டேன். நானும் தான் என்ன பண்ணுவேன். நம்ம யார்கிட்ட என்னைக்கு பொறுமையா பேசி இருக்கோம். அதுலயும் மஹூ கூட சேர்ந்து சேர்ந்து பொறுமைன்னா என்னன்னே தெரியல. சரி, என்னை விடு. இப்ப அவளை பத்தி பேசு. அவளுக்கு என்ன தான் ஆச்சு?” என்றான் புரியாமல்.

அமிஷின் பேச்சில், வாடிய முகத்தை அவனுக்கு காட்டாமல் இருக்க முயற்சித்தவள், இதழ்களை அழுந்தக் கடித்து, “என்னடா லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா?” என்றாள் குறும்பாக. இருந்தும், குரல் கம்மியது.

குழப்பத்தில் இருந்தவன், அவளது மாற்றத்தை கவனியாதது தான் அதிசயம். மென்புன்னகை சிந்தியவன், இன்னும் யோசனையுடன் இருக்க, அதனை கலைக்கவென்றே அங்கு வந்து சேர்ந்தாள் மஹாபத்ரா.

“என்ன ரெண்டு பேரும் இவ்ளோ சீரியஸா முகத்தை வச்சு இருக்கீங்க?” எனப் புருவம் நெறித்தவள், கண்டுபிடிக்கும் முன்னே, கலங்கிய கண்களை ஆஷா மறைத்துக் கொள்ள, நொடியில் அதனை உள்வாங்கிக் கொண்டாள்.

ஆஷாவை ஒரு கணம் அழுத்தமாக பார்த்துவிட்டு, அமிஷை ஏறிட, அவனோ “உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தோம். உனக்கு தஷ்வந்த் மேல இருக்குற கியூரியாசிட்டி பத்தி…” என்றான் முறைப்பாக.

தஷ்வந்த் பெயரைக் கேட்டதுமே, அவளறியாது ஒரு புன்சிரிப்பை வெளியிட்டவள், “ஐ லைக் ஹிம்” என தோளை குலுக்கினாள்.

“லைக் மீன்ஸ்?” அமிஷ் விடாமல் கேட்க, “லைக் மீன்ஸ் லைக்” தோள் குலுக்கலுடன் கூறியவளை குழப்பமாக பார்த்தான்.

“சரியா சொல்லு மஹூ. நீ அவனை லவ் பண்றியா?” எனக் கேட்க, அவனை முறைத்தவள், “உனக்கே தெரியும் எனக்கு லவ்ல எல்லாம் இன்டெரெஸ்ட் இல்லன்னு” என்று அழுத்தமாக கூறியவளை சற்றே நிம்மதியுடன் ஏறிட்டு, “அப்போ ஜஸ்ட் க்ரஷ்ன்னு சொல்லு.” என்றான் வேகமாக.

என்ன இருந்தாலும், ஜுனியர் பையனை லவர் என்று விடுவாளோ எனத் தயக்கமாக இருந்தது.

அவளோ, “ம்ம். மே பி. அப்படியும் சொல்லிக்கலாம். பட், ஐ ஜஸ்ட் வான்னா பீ வித் ஹிம். அவன் கூட லிவ் இன் ரிலேஷன்ஷிப் மெயின்டைன் பண்ணலாம்னு இருக்கேன்.” என்றதில், இருவருமே திகைத்தனர்.

அவளுக்கு காதல், திருமணம் இதெல்லாம் பிடிக்காது என்றறிந்தவர்கள் தான். ஹர்மேந்திரனின் பரம்பரையே காலம் காலமாக அங்கு கட்ட பஞ்சாயத்து, அடிதடி என்று இருப்பவர்கள் தான். அதிலும், ஹர்மேந்திரன் தலையெடுத்த பிறகு, அவர்களின் வன்முறை கொடூரமாக தான் இருந்தது.

அப்படிப்பட்ட, அந்த முரட்டு உள்ளத்திலும் காதல் வந்திருந்தது. மணிமேகலை. தமிழ்நாட்டை சேர்ந்த பெண் தான். வேலை விஷயமாக மதுரைக்கு சென்றிருந்த போது, மணிமேகலையிடம் காதலில் விழுந்தவர், அவளையும் காதல் கடலில் மூழ்கடித்து, ஹைதரபாத்திற்கு அழைத்து வந்து விட்டார்.

மணிமேகலையும் அவரை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விட, அதன் பிறகான அவர்களது காதல் வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது. என்னதான், தனது கணவரின் வன்முறை வாழ்க்கை பிடிக்கவில்லை என்றாலும், அவரிடம் அதை பற்றி பேசத் தான் இயலாது.

காதல் மனைவியாக இருந்தால் கூட, அவரது முடிவில் தலையிட முடியாது. அதற்கு அவர் அனுமதித்ததும் இல்லை. அக்காதலுக்கு அத்தாட்சியாய் மஹாபத்ராவும் பிறந்திட, அவளை தன் விருப்பப்படியே வளர்க்க விரும்பிய மணிமேகலையின் எண்ணத்தில் முதல் அடி விழுந்தது.

ஹர்மேந்திரன் அவளை முழுக்க முழுக்க, அவரது வாழ்க்கை முறை படியே வளர்க்க, பத்து வயது வரையிலும் அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் முடிந்த அளவு வைத்துக் கொண்டார் மணிமேகலை. அவர் மூலமே அவளுக்கும் தமிழ் மீதான ஆர்வம் வளர்ந்தது. சில நாட்களில், கணவன் மகளுக்கும் கத்தி சண்டை, துப்பாக்கி சுடுதல் என வன்முறைகளை பழக்கத் தொடங்க, ஒரு கட்டத்திற்கு மேல், மகளும் அவர் கையை விட்டு செல்லத் தொடங்கியதில், தனிமையை உணர்ந்த மனது, அவரை வீட்டை விட்டு ஓடி போக வைத்தது.

அவர் சென்ற பின்னால், தந்தை அனுபவித்த வேதனைகளை கண் கூட கண்டவளுக்கு, இப்போது வரை தாயின் மீதிருக்கும் நியாயம் புரியவேயில்லை. எங்கே! அவள் புரிந்து கொள்ளும் வயது வரும் போது, அவர் அவளுடன் இல்லையே! அதுவே அவளுக்கு தாயின் மீது கோபத்தை வளர்த்தது. கூடவே, எந்த உறவிலாவது சிக்கிக் கொண்டால், இப்படி தான் மனம் தவிக்க நேரிடும் என்றெண்ணியவளுக்கு தூபம் போடுவது போல ஹர்மேந்திரனும், காதல், கல்யாணம் எல்லாம் வீண் நேர விரயம் என்று அவளுள் பதித்து இருந்தார்.

அப்படியே அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றாலும், அவர் பார்க்கும் வீட்டோடு மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்க, அவளுக்கு மொத்தமாகவே எதிலும் பற்றற்று போய் விட்டது.

தஷ்வந்த்தை பார்க்கும் முன்பு கூட, விளையாட்டிற்காக தான் தந்தையிடம் லிவ் இன் பற்றி பேசினாள். ஆனால், அவனை பார்த்த பிறகு, ஆடவனை ரசித்து தொலைத்த மனதை கட்டுப்படுத்த இயலவில்லை.

காதலுக்கும் பிடித்தலுக்குமான வித்தியாசத்தை உணராதவள், அவன் மீதிருக்கும் உணர்வை புரிந்து கொள்ளும் முன்னரே, அவன் மீது உரிமை எடுக்க தொடங்கினாள். அவ்வுரிமை உணர்வை அசட்டையாக எடுத்துக் கொண்டவள், தான் நினைத்தது நடந்தாக வேண்டும் என்ற கர்வம் பொங்க, அவனை தன்னுடனே இருக்க வைக்க, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் அவனை இணைக்க முயன்றாள்.

எப்படியோ, அவன் தன்னுடனே இருக்க வேண்டும். தனக்கு மட்டுமே உரிமையாக வேண்டும். அவன் தனது பொருள்… என்ற எண்ணமே வளர, அவன் மீதான காதல் உணர்வை காலம் உணர்த்தும் போது, கூடவே அவ்வலியையும் விதைக்கப் போவதை அறியாதவள், இயல்பாக நண்பர்களிடம் பேசினாள்.

தலை கிறுகிறுத்து நின்ற அமிஷும் ஆஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, மஹா தான், “என்னை பத்தி மட்டும் தான் பேசிட்டு இருந்தியா? பார்த்தா அப்படி தெரியலையே” எனக் கூர்மையாக கேட்க,

‘இதை மட்டும் நல்லா கேளு…’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் அமிஷ்.

பின், “இல்ல… ஏன் அந்த மந்து… அது மந்த்ராவை ஹர்ட் பண்ணுனன்னு… பேசிட்டு இருந்தோம். ஏன் அப்படி செஞ்ச மஹூ?” என தயங்கி தயங்கி கேட்டவனை, ஆழமாக பார்த்தாள்.

இதுவரை காரணமே தெரியவில்லை என்றாலும் கூட, அவளிடம் எதற்கும் அவன் கேள்வி கேட்டதில்லை. அக்கேள்வியையும், ஆஷாவின் கலங்கிய முகத்தையும் இணைத்து, நிகழ்ந்ததை புரிந்து கொள்ள அவளுக்கொன்றும் அதிக நேரம் தேவைப்படவில்லை.

“யூ லவ் ஹர்?” எடுத்ததுமே கேட்டு விட, அமிஷ் பதில் சொல்ல தெரியாமல் திகைத்து நின்றான்.

அவளோ பதில் எதிர்பார்த்து நிற்க, சற்று சுதாரித்தவன், “நான் என்ன கேக்குறேன் நீ என்ன சொல்ற…” என சமாளிக்க,

“ம்ம். அப்போ சார் காதல்ல விழுந்துட்டீங்க அப்படி தான?” என்று நக்கலடித்தவளைக் கண்டு ஐயோ என்றிருந்தது.

“அப்டி தான்னு வச்சுக்கோயேன்…” என முணுமுணுத்தவன், மீண்டும் காரணத்திலேயே வந்து நிற்க, அவளோ தஷ்வந்த் கையை பற்றியதால் வந்த கோபம் என இலகுவாக முடித்துக் கொள்ள, அவனுக்கு இதயத்தில் இரத்தமே வடிந்தது.

“அடி பாதகத்தி…!” அமிஷ் வாயில் கை வைத்து நிற்க, அத்தனை நேரம் வருத்தத்தில் நின்றிருந்த ஆஷா கூட, சத்தமாக சிரித்து விட்டாள்.

“அடிப்பாவி. இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல. சும்மாவே அவன் உன்னை பார்த்தா தெறிச்சு ஓடுறான். இதுல நீ உன் மொத்த வித்தையையும் காட்டுன, ஊரை விட்டே ஓடுனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல.” என்றிட,

“என்னை விட்டு ஓடுறதா? நெவர். ஐ நீட் ஹிம் அட் எனி காஸ்ட்.” அழுத்தம் திருத்தமாக கூறியவளைக் கண்டு நண்பர்கள் தான் நொந்தனர்.

“காலேஜ்லாம் எப்படிடா போகுது?” எனக் கேட்ட மஞ்சுளாவிற்கு சுரத்தையே இன்றி பதிலளித்தான் தஷ்வந்த்.

“காலேஜ் எப்படி போகும். எப்பவும் போல தான். அங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டவனது குரலை வைத்தே, “ஏதாவது பிரச்சனையாடா தம்பூ.” எனக் கேட்டாள்.

“அதெல்லாம் இல்ல மஞ்சு. கொஞ்சம் டயர்ட் வேற ஒன்னும் இல்ல” என்று சமாளித்தவனின் பேச்சை நம்பவில்லை என்றாலும், அப்போதைக்கு தோண்டி துருவவில்லை.

“தம்பூ… அப்பா வீட்ல எனக்கு மாப்பிள்ளை பாக்குறார்டா.” எனக் கூறியதில்,

“அதுக்கு நான் என்ன பண்ண. நீ தான் அப்பாட்ட மாம்ஸ் பத்தி சொல்லணும். ஆனா, அதுக்கு அப்பறம் நடக்க போற விபரீதத்துக்கு நான் பொறுப்பு இல்லப்பா.” என்றவனுக்கு அவனது தந்தை பற்றி நன்றாகவே தெரியும்.

“ப்ச். என்னடா நீ வேற பயமுறுத்துற. என்னால அவரை விட்டுட்டு வேற ஒரு வாழ்க்கையை யோசிக்கவே முடியலடா.” என்றவளுக்கு காதல் முத்திப் போய் இருந்தது.

அவனுக்கோ அவளது உணர்வுகளெல்லாம் புரியவில்லை. “இப்ப பயந்து என்ன செய்ய? இதுக்கு தான் சொன்னேன். மாம்ஸ் ப்ரொபோஸ் பண்ணும் போதே, எப்டியாச்சு ‘நோ’ சொல்லிடுன்னு நீ கேட்டா தான. அப்போலாம் கமுக்கமா இருந்துட்டு, இப்ப வந்து புலம்புற” என்று கடிந்தான்.

அதில் கடுப்பானவள், “ஊர் உலகத்துல தம்பிங்க எல்லாம் அக்கா காதலுக்கு சப்போர்ட் பண்ணுவாங்கன்னு தான்டா கேள்வி பட்டிருக்கேன். ஆனா நீ இருக்கியே சரியான சாமியார்.  நீ வேணா பாரு, எவ பின்னாடியாவது காதலிக்கிறேன்னு சுத்தி, சின்னாபின்னமாகி தான் காலேஜை விட்டு வருவ…” என்று சாபமிட்டாள். அக்காதலால், தன் தம்பியுடன் சேர்ந்து அவளும் அனுபவிக்கப் போகும் வேதனைகளைப் பற்றி அறிந்திருந்தால், இவ்வார்த்தைகளை மறந்தும் உபயோகப்படுத்தி இருக்க மாட்டாளோ!

“நானா? லவ்வா… நெவர்!” என்றான் உறுதியாக. கூடவே மனதின் ஓரத்தில் மஹாபத்ராவின் மிரட்டலும் வந்து சென்றது.

“தஷு இந்த சாப்டர் கம்ப்ளீட் பண்ணிட்டியா?” புத்தகத்துடன் அவனருகில் அமர்ந்து மந்த்ரா கேட்டிட, “அவன் சிட்டி ரோபோ மாதிரி புக்கையே கரைச்சு ட்ரிங்க் பண்ணிடுவான் மந்த்ரா.” என வாரினான் மாதவ்.

இத்தனை மாதத்தில் அவன் பேசும் தமிழும் ஆங்கிலமும் அவளுக்கும் புரிந்திட, பக்கென சிரித்தவள், “நீ ரெண்டு மொழியையும் விட்டுட்டு தெலுங்கு கத்துக்கோ மாதவ்” என்றாள் கிண்டலாக.

“அப்போ, நான் பேசும் போது மூணு மொழியும் கலந்து வரும் பரவாயில்லையா?” என்றதில், தஷ்வந்த், “யப்பா சாமி. ரெண்டு மொழியை கொலை பண்றதையே கேட்க முடியல. இதுல மூணாவது வேறயா… உலகம் தாங்காதுடா.” என நக்கலடிக்க, அங்கு சிரிப்பலை பரவியது.

ஆடவனின் முகத்தில் தங்கி இருந்த சிரிப்பை கண்ணுக்குள் நிரப்பியபடி அவனருகில் வந்தாள் மஹாபத்ரா.

அவளைக் கண்டதும், சிரிப்பை தொலைத்தவன் விழிகளை அகற்றி பார்க்க, அவளோ அவனது தோளோடு தோள் உரசி அமர்ந்திருந்த மந்த்ராவையும் அவனையும் ஒரு கணம் கண்ணை சுருக்கி சுட்டாள்.

அது புரிந்ததோ என்னவோ, சட்டென தஷ்வந்த் எழுந்து கொண்டு, “சும்மா தான் சீனியர் உட்காந்துருந்தேன்” என அவளைக் காயப்படுத்தி விடுவாளோ என பதறி உளற, அவனது திணறலையும் தனக்குள் படம் பிடித்துக் கொண்டவள், கோபம் மறந்து சிறிதாக முறுவலித்தாள்.

“சில் அமுல் பேபி.” என்றவள், மற்ற இருவரையும் பார்த்து, கிளம்ப சொல்லி கண்ணைக் காட்ட, மந்த்ராவிற்கு அவளைக் காண காண கோபம் வந்தாலும், இவளெதற்கு இவனிடம் பேசுகிறாள் எனப் புரியாமல், மேலும் அடித்து விடுவாளோ எனப் பயந்து மாதவுடன் நகன்று விட, மாதவும் பாவமாக தஷ்வந்தை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு சென்றான்.

அவனும், மாதவை ‘விட்டுட்டு போகாதடா’ என்ற ரீதியில் பார்த்து வைக்க, தஷ்வந்தின் கன்னம் பற்றி அவள் புறம் திருப்பியவள், “என்னமோ உன்னை பேய் பிசாசுகிட்ட தனியா விட்டுட்டு போற மாதிரி உன் ஃப்ரெண்டை இப்படி பாக்குற.” என நக்கலாக கேட்டதில்,

“உனக்கு அதுவே பரவாயில்லை” என்றான் மனதினுள்.

“எனக்கு அதுவே பரவாயில்லைன்னு தோணுதா தஷ்வா?” கையைக் கட்டிக் கொண்டு, அவன் மனம் நினைத்ததை கூறி விட, அவனோ அரண்டு, “இல்ல… நான் அப்படியெல்லாம் நினைக்கல” என்றான் அவசரமாக.

அதில் புன்னகையை பெரிதாக்கியவள், “உன் முகம் இருக்கே அது கண்ணாடி மாதிரி. உன் மனசை படம் போட்டு காட்டிருது தஷ்வா.” என்று அவளைக் காணாமல் தவிர்க்கும் அவனது விழிகளை ரசித்தாள்.

“சோ, என்ன முடிவு பண்ணிருக்க?” என நேரடியாக வந்த விஷயத்தைப் பற்றி பேச, “எ… எதை பத்தி?” என்றான் ஒன்றும் தெரியாதவன் போல.

“உங்கிட்ட ஒவ்வொரு தடவையும் சொல்ல முடியாது தஷ்வா. நம்ம லிவ் இன் ரிலேஷன்ஷிப் பத்தி தான். நான் உனக்கு டைம் குடுத்ததா ஞாபகம்.” என அர்த்தப்பார்வை வீச,

அவனோ பொறுமையாக, “சீனியர்… கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நீங்க என்னை விட ஒரு வருஷம் சீனியர். அதுவும் போக, எனக்கு இந்த ரிலேஷன்ஷிப்ல எல்லாம் நம்பிக்கையே இல்ல. நான் ஒழுக்கமா இருப்பேன்னு நினைச்சு தான் என்னை எங்க வீட்ல படிக்க இவ்ளோ தூரம் அனுப்பி இருக்காங்க. நான் அவங்க நம்பிக்கையை காப்பாத்தணும். எனக்கு இப்போ படிப்பு மட்டும் தான் முக்கியம். அதை கெடுக்குற எதுவா இருந்தாலும், அதுல நான் தலையிட விரும்பல சீனியர். ப்ளீஸ் என்னை புருஞ்சுக்கோங்க.” என்றான் எப்படியாவது அவளுக்கு புரிய வைத்து விடும் நோக்கில்.

அவனை அமைதியாக பார்த்தவள், “சோ, என்னை ஒழுக்கமில்லாதவள்ன்னு சொல்ற?” என அவன் பேசிய ஒரு வார்த்தையில் நின்றவளைக் கண்டு அதிர்ந்தான்.

“சே! சே! இல்ல சீனியர். நிஜமா நான் அப்படி சொல்லல.” என அவன் தடுமாறும் போதே, “ஒருவேளை நான் லவ்ன்னு சொல்லிருந்தா ஓகே சொல்லிருப்பியோ?” அவனையே ஆராய்ந்தபடி அவள் கேட்க, அவனோ விழித்தான்.

“ஐயோ சீனியர். நீங்க லவ்ன்னு சொல்லிருந்தாலும் என்னோட பதில் இதுவா தான் இருக்கும். அதுக்கே நான் ‘நோ’ சொல்லிருக்கும் போது, லிவ் இன் இதெல்லாம் சரிப்பட்டு வராது சீனியர்.” என கெஞ்சலாக அவன் கூற, “சரி வராது வரும்ன்னு பழகி பாக்காமையே எப்படி சொல்றது தஷ்வா?” அவளும் விடாப்பிடியாக நின்றாள்.

இவளுக்கு எப்படி புரியவைப்பது என்று குழம்பியவன், பின் ஒரு முடிவாக, கண்ணை இறுக்கி மூடி திறந்து, “நான் நேரடியாவே சொல்றேன். என்னை பொறுத்த வரை, ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான். அது தான் அந்த உறவுக்கு மரியாதையும் கூட. லவ் இல்லாத ஜஸ்ட் லஸ்ட் எனக்கு வேண்டாம் சீனியர். என்னால இதை அக்செப்ட் பண்ணக்க முடியாது. இப்பவாவது நான் சொல்ல வர்றதை புருஞ்சுக்கோங்க.” என்றான்.

அவளோ சிரிப்பை அடக்க முயன்று, முடியாமல் வாய் விட்டு சிரித்து விட்டாள்.

“ஹையோ… ஹா ஹா…” என சிரித்தவள், அவன் அமர்ந்திருந்த ஸ்டோன் பெஞ்சிலேயே அமர்ந்து, அவனையும் அமர சொன்னாள்.

அவன் நின்று கொண்டே இருந்ததைக் கண்டு, “உட்காருடா நியாயவாதி.” என கையை பிடித்து அவளருகில் அமர வைத்தவள், இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை.

“பார்க்க அப்பாவி மாதிரி இருந்துகிட்டு, உனக்கு ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் வேற கேட்குதா. ரொம்ப ஆசை தான்டா உனக்கு.” என்றவளை அவன் குழப்பமாக பார்க்க,

“லிவ் இன் ரிலேஷன்ஷிப்ன்னா, செக்ஸ் மட்டும் தான் இருக்கணுமா?” அவள் சிரிப்பை நிறுத்தி விட்டு அழுத்தத்துடன் கேட்டு விட, அவனுக்கு தான் என்னவோ போல் ஆகி விட்டது.

அவளை பார்க்க இயலாமல் கண்ணை திருப்பிக் கொண்டவனை, அவள் விடவில்லை.

“தஷ்வா. லுக் அட் மீ.: என கன்னம் பற்றி அவளது கண்ணை காண வைத்தவள்,

“நீ எனக்கு பாய் ஃப்ரெண்டா இருக்கணும் தட்ஸ் ஆல். ஐ மீன், என் கூடவே இருக்கணும். பிக் அப், டிராப், டின்னர், அவுட்டிங், லைக் தட். ஒரே வீட்ல இருந்தாலும் எனக்கு ஓகே தான். அப்போ அப்போ குட்டி குட்டி ரொமான்ஸ். அதுவும் நீ இப்படி கண்ணை விரிக்கும் போது, உன்னை கிஸ் பண்ணனும் போல இருக்கு அமுல் பேபி. சோ ஐ காண்ட் கண்ட்ரோல் மை தாட். மத்தபடி, ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப்ப நானும் சொல்லல. செக்ஸ்காக, உன் பின்னாடி அலையல. மைண்ட் இட்.” இறுதி வாக்கியத்தை சற்று காட்டமாகவே கூறி முடித்தாள்.

அவள் கூற்றில் பேச்சிழந்து, அவளது விழி காட்டும் அழுத்தத்தில் தன் விழிகளை திருப்ப இயலாமல் அமர்ந்திருந்தவன், இறுதி கூற்றில், பதறினான்.

“ஐயோ நான் அப்படிலாம் சொல்லல. நான் உங்களை அப்படி நினைக்கவும் இல்ல சீனியர். நிஜமா…” என்றவனுக்கு, தன் மீதே கோபம் வந்தது. பொதுவாகவே யாரையும் காயப்படுத்த எண்ணாதவன். தான் பேசிய வார்த்தைகள் காயப்படுத்தி விட்டதோ, என வருந்தியவன், “சாரி சீனியர். நான் அப்படி மீன் பண்ணல.” என்றான்.

“வேற எப்படி மீன் பண்ணுனீங்க சார்…” அவளோ அவன் பதற்றத்திலேயே தணிந்து, குறும்புடன் கேட்க, அவனுக்கு பதில் கூற தான் தெரியவில்லை.

அவள் தான், அவன் தோள் மீது கை போட்டு, “இப்ப சொல்லு அமுல் பேபி. வில் யூ பீ மை பாய் ஃப்ரெண்ட்” எனக் கேட்க, அவனுக்கோ சோதனையாக இருந்தது.

நெளிந்தபடி, அவளது கையை எடுத்து விட்டவன், “எனக்கு படிப்பு தான் முக்கியம் சீனியர். ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” என்று கூறிட,

“உன் படிப்பு கெடாம நான் பாத்துக்குறேன் தஷ்வா” என்றாள்.

“நீங்க என்ன சொன்னாலும் இதை என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியல சீனியர்.” என மீண்டும் மீண்டும் சொன்னதையே சொன்னவனைக் கண்டு, அவளுக்கும் பொறுமை குறைந்தது.

பெருமூச்சு வெளியிட்டு தன்னை அடக்கிக் கொண்டவள், “ஃபைன். என்னால உன்ன விட முடியாது தஷ்வா. இதுக்கு ஒரே வழி, என்னை ஓங்கி ஒரு அடி அடிச்சுடு. எனக்கும் உன்மேல இருக்குற ஈர்ப்பு போய் கோபம் வந்துடும். தென், நீ ஃப்ரீயா இருக்கலாம். கம்.” என்று அவன் அடிப்பதற்கு தோதாக அவன் முன் நிற்க, அவனுக்கோ சர்வமும் நடுங்கி விட்டது.

அவளை அடித்து, அவள் தந்தையிடம் யார் உயிரை கொடுப்பது… சில நாட்களுக்கு முன்பு கூட, அவளை யாரோ தாக்க வந்ததையும், அவனை நடுரோட்டில் ஹர்மேந்திரன் துடிக்க துடிக்க கொன்றதையும் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தானே!

அவனது பயம் அப்பட்டமாக முகத்தில் தெரிய, புன்னகையை அடக்கியவள், “என் நானா பத்தி பயப்படாத. அவரு என்னை மீறி உன்னை ஒன்னும் பண்ண முடியாது. இது நமக்குள்ள இருக்குற டீல் தான். டூ இட்.” என்று தைரியம் கொடுக்க, ‘இருக்குற ஒரே சான்ஸ் இது தான் தஷு மிஸ் பண்ணிடாத’ என்று தனக்கு தானே கூறிக் கொண்டவன், “ஓகே சீனியர்” என வேகமாக தலையாட்டினான்.

அவளும் அவனை லேசர் பார்வை பார்த்தபடி தயாராக நிற்க, அவனும் கையெல்லாம் தேய்த்துக் கொண்டு அவளை பார்த்தான்.

இதுவரை யாரையும் விளையாட்டிற்கு கூட அடித்ததில்லை. அதிலும் ஒரு பெண்ணை அடிக்க அவனுக்கு மனமே வரவில்லை. ஆகினும், அவன் தப்பித்தாக வேண்டுமே… என்று முயன்றவனால் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது.

கண்களா அது… அப்பா… அத்தனை அழுத்தம் அதில். என்னை அடிக்க மாட்டாய் என்ற நம்பிக்கை அதில் ஏகத்துக்கும் தெறித்தது. அதனைப் பார்த்து விட்டு, கையை தூக்க கூட இயலவில்லை அவனால்.

“இப்படியே நாள் முழுக்க நிக்க போறியா அமுல் பேபி. வேகமா அடிச்சுட்டா, நானும் கிளம்புவேன்ல.” என்று கண்ணடித்தவள், சைகையிலேயே “உம்மா… கம் அடி.” என ஊக்குவிக்க, இப்போதோ மொத்தமாக அவனுக்கு தைரியம் வற்றி விட்டது.

‘நானா அடிக்க மாட்டேன்னு சொல்றேன். கை வர மாட்டேங்குது…’ என உள்ளுக்குள் நொந்தவன், “இந்த விளையாட்டு வேணாம் சீனியர் என்னை விட்டுடுங்க ப்ளீஸ்.” என்றான் பாவமாக.

கண்ணோரம் சுருங்க சிரித்தவள், “சோ கியூட்! நாளைக்கு ஈவ்னிங் 5 மணிக்கு இங்கயே வெய்ட் பண்ணு. டின்னர் போறோம். நம்ம ஃபர்ஸ்ட் டேட்டிங்…” என்று கண் சிமிட்டி, அவனது தலை முடியையும் கலைத்து விட்டு சென்றவளை, தடுக்கத் தோன்றாமல் திகைத்திருந்தான் தஷ்வந்த். 

காயம் ஆறும்!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
29
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்