1,400 views

முதலாளி மகளைப் பார்த்தவன் ஏதோ பேயை பார்த்தது போல் எழுந்து நின்று, “என்ன மேடம் நீங்க போய் இங்கெல்லாம் வந்துட்டு.” என்றதும் அவளின் முறைப்பு இன்னும் அதிகமானது.

உள் மனதிற்கு அந்த முறைப்பு எதனால் என்று புரிந்தாலும் வெளியில் போட்டிருக்கும் பவ்யமான வேஷத்தை மாற்றாதவன், “தம்பி மேடம்க்கு வேர்க்குது பாரு அந்த டேபிள் ஃபேனை எடுத்துட்டு வந்து இங்க வைங்க.” என்றதோடு நில்லாமல் தன் இருக்கையை கைக்குட்டையால் துடைத்து,

“உக்காருங்க மேடம் கால் வலிக்க போது.” என்றான் மிக்க பணிவுடன்.

அக்னியின் ரசிகைகளுக்கு அவனின் இந்த குனிந்த வளைவு பிடிக்காமல் போக உள்ளுக்குள் அன்பினி சித்திரையை திட்டிக் கொண்டிருந்தார்கள். அவை அப்பட்டமாக அவர்களின் முகத்தில் தெரிய, அன்பினியும் கவனித்து விட்டாள்.

உள்ளுக்குள் ‘ஓம் சாந்தி’ என்ற மந்திரத்தை கூறியவள் சாந்தமாகி, “கொஞ்சம் வரியா பேசணும்.” என்றாள்.

“ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் டைம் தரீங்களா மேடம் சாப்பிட்டுட்டு வந்திடுறேன்.” அவனை சாப்பிட விடாமல் அன்பினி சித்திரை வலுக்கட்டாயமாக அழைப்பது போல் இருந்தது இவ்வாக்கியம்.

கோபத்தை காட்டாமல் இருக்க முகத்தை திருப்பிக் கொண்டாள். “மன்னிச்சிடுங்க மேடம் நீங்க கூப்பிட்டதும் வராம, பொறுப்பில்லாம இப்படி சாக்கு சொன்னா எனக்கு கீழ வேலை பார்க்குறவங்க இதைத்தான் பண்ணுவாங்கன்னு மறந்துட்டேன்.” சம்பந்தமே இல்லாமல் அவள் முக அசைவிற்கு கூட ஒரு சாக்கை உருவாக்கி விட்டான்.

“ஸ்டாப் இட் அக்னி! தேவையில்லாம பேசாம சாப்பிட்டுட்டு என் ரூம்க்கு வா.” என்றவள் அங்கிருந்து கிளம்ப,  பார்வை அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் குழுவின் மீதுதான் இருந்தது.

***
அக்னிச்சந்திரன் ஒரு மணி நேரமாக அவள் முன்பு நின்றுக் கொண்டிருக்கிறான். முறைத்துக் கொண்டிருக்கிறாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை அவனிடம். அவளே ஆரம்பிக்கட்டும் என்று அவனும் பொறுமையாக நின்றுக் கொண்டிருந்தான். வேலைகளை முடித்த விக்ரம் அவர்கள் இருக்கும் அறைக்கு வந்தான்.

இருவரின் தோரணைகளை பார்த்தவன் தன் தங்கையிடம், “என்ன அன்பினி இன்னைக்கு என்ன பண்ணான்.” என்றதும் பார்வையை அண்ணனிடம் மாற்றியவன்,

“நிறைய பண்ணிட்டான் விக்ரம். கிடைக்கிற வாய்ப்புக்கு மட்டும் இல்ல பார்க்கிற பார்வைக்கு கூட ஒரு பெர்பாமன்ஸ் பண்ணிடுறான். இவனோட திட்டம் என்ன தெரியுமா?” என்ற தங்கைக்கு மறுப்பாக தலை அசைத்தவன் அக்னி சந்திரனை பார்க்க,

“இங்க இருக்க எல்லார் முன்னாடியும் உன்னையும் என்னையும் ஒரு ஹிட்லர் ரேஞ்சுக்கு மாத்தணும். அடுத்து அப்பா கிட்ட இவன மாதிரி நம்மளால வேலை பார்க்க முடியாதுன்னு நம்ப வைக்கணும். இதனால நம்ம குடும்பத்துக்குள்ள பிரச்சனை வரணும். அதுல எரியுற நெருப்புல ஐயா குளிர்காய பிளான் பண்ணி இருக்காரு.” என்றாள் அவளும் அவளை பார்த்துக் கொண்டு.

முகத்தை பாவமாக வைத்துக் கொண்டிருந்த அக்னி சந்திரனின் உள்ளத்தில் இதழ்கள் அளவில்லாமல் சிரித்தது அன்பினி சித்திரையின் கணிப்பில்.

“இருக்கும் அன்பினி. இல்லன்னா இவ்ளோ அசிங்கப்படுத்தினதுக்கு அப்புறமும் நம்ம முன்னாடி நிற்பானா இவன். நம்ம தான் தப்பு பண்ணிட்டோம். ஆரம்பத்துல இருந்து இவன வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது.” என்றவனிடம்,

“ஆரம்பத்துல சாதாரண வேலைக்காரனா தான இங்க வந்தான். அப்பா மட்டும் தனியா இருக்கிறதை பார்த்து வாரிசு ஆகிடலாம்னு முடிவு பண்ணி இத்தனை வருஷம் ஸ்மார்ட்டா மூவ் பண்ணி இருக்கான். எல்லாத்தையும் நம்ம கண்டுபிடிச்சிட்டோம்னு தெரிஞ்சும் இன்னமும் தைரியமா நிக்கிறான் பாரு அதான் விக்ரம்  எனக்கு எரிச்சலை அதிகமாக்குது.” என்றாள் அன்பினி சித்திரை.

அண்ணன் தங்கை இருவரும் அதன் பின் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் பார்வை மட்டும் அக்னிசந்திரன் மீது இருந்தது. அவனும் அசராமல் அவர்களை எதிர் கொண்டு பார்த்திருக்க,

“விக்ரம் அம்மாக்கு ஃபோன் போடு.” என்றாள் அன்பினி.

“எதுக்கு அன்பினி” என்று கேட்பவனே அவள் முறைத்து பார்க்க, வாயை மூடிக்கொண்டு அன்னைக்கு டயல் செய்தான்.

நந்தினி போனை எடுத்ததும் தங்கை காதிற்கு பக்கத்தில் வைக்க, “அம்மா லஞ்ச் ரெடியா?” என விசாரித்தாள்.

நந்தினிக்கு இதயமே வெடித்து சிதறுவது போல் இருந்தது அவள் கேள்வியில். இரவு மட்டுமே அவள் வீட்டில் உண்பது பழக்கம். மற்ற நேரமெல்லாம் எங்கு சாப்பிடுவாளோ அவர் அறிந்ததில்லை. வெளிநாட்டில் இருக்கும் பொழுது எந்நேரமும் நண்பிகளோடு கும்மாளம் அடித்த பழக்கம் இங்கு வந்தும் தொடர்ந்தது. பிறகு ஊர் சுற்ற ஆரம்பித்தவள் வீட்டு உணவை மறந்தாள்.

அதுவும் அவளோடு ஒருவன் அட்டை போல் ஒட்டிக் கொண்டிருப்பான். ஒரு நாள் அன்பினி வீட்டில் இருந்து விட்டால் உடனே அழைத்துச் சென்று விடுவான். அலுவலகத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்த இந்த இரண்டு நாட்களாக தான் அவனின் தொல்லை இல்லாமல் இருப்பதாக உணர்ந்தார் நந்தினி.

“என்னம்மா இது திடீர்னு இப்படி கேக்குற.” என்ற தாயின் வார்த்தையில் போனின் வழியாக முறைத்தவள், “சாப்பாடு கேட்டது அவ்ளோ பெரிய அதிசயமா உனக்கு.” என கேட்க,

“நான் என்னமா பண்ணுவேன் நீ வீட்டுல சாப்பிட்டா பரவால்ல. காலையில ஒருத்தன் வருவான் அவனோட கிளம்பிடுவ. மதியம் போன் பண்ணா பிரெண்ட்ஸ் கூட சாப்பிட்டுட்டு இருக்கேன்னு சொல்லுவ. நைட்டு எப்பவாவது தான் வீட்டுக்கு வருவ. அதுவும் நான் கெஞ்சி கேட்ட தான் சாப்பிடுவ. இல்லனா பார்ட்டில சாப்பிட்டதே போதும்னு சொல்லிட்டு குப்புற படுத்துடுவ.” என அவள் தினமும் செய்வதை நந்தினி பட்டியலிட்டு கொண்டிருந்தார்.

“போதும் நிறுத்து ம்மா இனிமே மதியம் வீட்டு சாப்பாடு தான். சாப்பாடு செஞ்சுட்டு இன்பார்ம் பண்ணுங்க அக்னிசந்திரனை அனுப்பி வைக்கிறேன்.” என்றாள் அவனைப் பார்த்துக் கொண்டு.

“அன்பினி அவன் உனக்கு பி ஏ சர்வன்ட் கிடையாது.” மகளின் எண்ணம் புரியவில்லை என்றாலும் அக்னிசந்திரனை இதில் நுழைப்பதை விரும்பவில்லை அவர் மனம்.

அன்னையின் பேச்சில் அவர் மீது கோபம் வருவதற்கு பதிலாக அக்னி சந்திரன் மீது தான் வந்தது. கோபத்தில் பற்கள் கடிபட, “சொன்னதை செய்ங்க ம்மா இனிமே தினமும் அவன் தான் வருவான் கொடுத்து விடுங்க.” என அழைப்பை துண்டித்தாள்.

போனில் பேசியதை கேட்டும் அக்னிசந்திரன் அசையாமல் இருக்க, “சொன்னதை கேட்டுட்டு தான இருந்த கிளம்பு.” என்றாள் தோரணையாக.

“சாரி மேடம் ஆபீஸ்க்கு உள்ள என்ன வேலை இருந்தாலும் சொல்லுங்க செய்யுறேன் பர்சனல் வேலைக்கு நான் ஆள் கிடையாது.”  என்றதும் கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம்  சுதந்திரம் பெற்றது.

கோபத்தை டேபிளில் அடித்து அவனுக்கு காட்டியவள், “என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா நான் சொல்ற வேலைய செய்ய முடியாதுன்னு சொல்ல. யார கேட்டுடா எனக்கு கம்மங்கூழ் ஆர்டர் பண்ண. அதுக்கான பனிஷ்மென்ட் தான் இது மரியாதையா போய் சாப்பாட்டை வாங்கிட்டு வா.” என சத்தமாக கத்தினாள்.

“நீங்க எதுக்காக என்னை ஆர்டர் பண்ண சொன்னீங்க.” என எதிர் கேள்வி கேட்டவனுக்கு,

“அக்னி உன்னோட லிமிட் தாண்டி போய்கிட்டு இருக்க. சாப்பாடு கேட்டா ஆர்டர் பண்ணி கொடுக்கிறது தான் உன்னோட வேலை. அதை எதுக்கு என்கிட்ட சொன்னீங்கன்னு கேட்டா என்ன அர்த்தம்? இங்க நாங்க தான்  முதலாளி நீ இல்ல.” என்று விக்ரமும் கத்தினான்.

“நான் என்னோட லிமிட்ல தான் சார் இருக்கேன். நீங்க தான் லிமிட் தாண்டி பண்ணிட்டு இருக்கீங்க.” தன் தரப்பில் தவறு இல்லாததால் அவன் உறுதியோடு கூற,

“என்னடா உன்கிட்ட லிமிட் தாண்டி பண்ணிட்டோம். “கோபத்தில் முகம் சிவந்தவள் அவனை நெருங்க,

“என்னை மரியாதை இல்லாம நடத்துறதே லிமிட் தாண்டுறது தான் மேடம்.” என்றான் அக்னி.

“நீ ஒரு ஆளுன்னு உனக்கு மரியாதை ஒன்னு தான் கேடு.” விக்ரம் கூறியதும் இந்த முறை கோபம் கொள்வது அக்னியின் முறையானது.

“பார்த்து பேசுங்க சார் பதிலுக்கு இந்த வார்த்தையை நான் உங்களை பார்த்து சொன்னா அதை விட அசிங்கம் வேற எதுவும் இருக்காது.” என்றவனின் கன்னத்தில் “சப் ” என்ற ஓசை வரும் அளவிற்கு ஓங்கி அறைந்தாள் அன்பினி சித்திரை.

சற்றும் தாமதிக்காதவன் அவள் கொடுத்த அடியை அப்படியே அவளுக்கு திருப்பிக் கொடுக்க, விக்ரம் சண்டைக்கு பாய்ந்தான். “எவ்ளோ தைரியம் இருந்தா என் தங்கச்சியை அடிப்ப, அதுவும் என் முன்னாடி.” என்ற விக்ரமிற்கும் இலவச இணைப்பாக ஒரு அடி கொடுத்தான்.

“ரெண்டு பேருக்கும் சும்மா சும்மா சொல்லிட்டு இருக்க முடியாது. நான் உங்க வழியில வரல நீங்களும் என் வழியில வராதீங்க. முக்கியமா மரியாதை இல்லாம பேசினா சும்மா இருக்க மாட்டேன். இப்போ ஒரு வார்த்தை சார் கிட்ட நீங்க பண்றதை சொன்னா அடுத்த நிமிஷம் இந்த கம்பெனியை விட்டு வெளிய அனுப்பிடுவாரு. போனா போகுதுன்னு அந்த முதலாளி சீட்டை உங்களுக்கு பிச்சையா கொடுக்கிறேன். இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போங்க.” என்றவனை முதல்முறையாக அடித்தான் விக்ரம்.

இந்த முறையும் அவனை திருப்பி அடிக்க அக்னி கையை ஓங்க, அதை இறுக்க பற்றி கொண்டாள் அன்பினி சித்திரை. “என்னடா ஆணவத்துல ஆடிக்கிட்டு இருக்கியா. அவன் மட்டும் இல்ல நான் அடிச்சாலும் பேசாம வாங்கிட்டு இருக்குறது தான் உன்னோட வேலை.” என்று கைகளை விட, முறைத்துப் பார்த்தான் இருவரையும்.

“இது எங்க ஆபீஸ் நாங்க இப்படி தான் பண்ணுவோம் உனக்கு விருப்பம் இருந்தா வேலை பாரு இல்லையா வாசல் அந்த பக்கம்.” என்று அறை கதவை நோக்கி கை காட்டும் அன்பினி சித்திரையின் கையை உடைக்கும் அளவிற்கு வெறி வந்தது அவனுக்குள்.

இத்தனை நாட்களாக போட்ட உழைப்பு வீணாகிவிடும் என்பதால் அமைதியாக இருந்து கொண்டான். அவனின் முகபாவனைகளை கண்ட விக்ரம், “ஏன்டா பெரிய ரோசக்காரன் மாதிரி இவ்ளோ நேரம் சீன் போட்ட வெளிய போக சொன்னதும் கமுக்கம் ஆகிட்ட. அப்படி உன்னோட மானத்தை விட்டுட்டு எதுக்குடா இங்க இருக்க.” என சந்தேகமாக கேட்டான்.

“இதென்ன கேள்வி?” என்ற அன்பினி சித்திரை பழையபடி இருக்கையில் அமர்ந்துக் கொண்டு, “வெளிய போனா இவ்வளவு சம்பளத்துல வேலை கிடைக்குமா. இல்ல இவனும் ஒரு ஆளுன்னு பின்னாடி சுத்துற பொண்ணுங்க தான் கிடைக்குமா.” என்றாள்.

இரண்டாவது வாக்கியத்தில் குழம்பிய விக்ரம் விளக்கம் கேட்க, “சார் தான் இந்த ஆபீஸோட ரோமியோ. கண்ணன சுத்தி பெண்கள் கூட்டம் இருக்கிற மாதிரி இவரை சுத்தி அவ்ளோ பொண்ணுங்க விக்ரம். அதுவும் இவர அங்க அங்கமா ரசிச்சு கமெண்ட் வேற. சாருக்கு அதெல்லாம் சைடு டிஷ் மாதிரி போல நல்லா ஜம்மம்மா உக்காந்து சாப்டுட்டு இருக்காரு அதெல்லாம் கேட்டுக்கிட்டு.” என்றாள் சற்று நேரத்துக்கு முன்பு அங்கு நடந்ததை பார்த்த கடுப்பில்.

“ஓஹோ இது வேற நடக்குதோ! பையனுக்குள்ள பல வித்தை இருக்கும் போலையே. முதலாளி பையன் என்கிட்ட கூட இந்த அளவுக்கு எவளும் வழிஞ்சது இல்லை.” என்ற விக்ரம் தன் எதிரில் நிற்பவனிடம்,

“அப்படி என்னடா இருக்கு உன் கிட்ட எல்லாரும் விழுறாங்க.” என மேலும் கீழும் பார்த்து சந்தேகமாக கேட்பவனுக்கு,

“இப்ப நான் என்ன செய்யணும்.”  பதில் வந்தது அவனிடமிருந்து.

அன்பினி விக்ரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “ஒரு மாசம் பெட் கட்டி இருக்கீங்க. அதுல நீங்க ஜெயிச்சா நான் இந்த ஆஃபீஸ விட்டு கிளம்பிடுறேன். ஒருவேளை நான் ஜெயிச்சுட்டா அதுக்கப்புறம் உங்க கிட்ட இருந்து எனக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது.”  என்றவனின் மீது இப்போதுதான் சந்தேகம் அதிகரித்தது இருவருக்கும்.

அந்த ஆராய்ச்சியில் இருந்தாலும், “சாப்பாடு எடுத்துட்டு வா.” என உத்தரவு பிறப்பித்தாள். மறுத்து ஒரு வார்த்தை பேசாதவன் உடனே அங்கிருந்து கிளம்ப, இருவருக்கும் அவனைப் பற்றி ஆராய்ச்சிகள் தான் அதிகமாக இருந்தது.

***
மதியம் செய்ததே போதும் என்று பாவம் பார்த்தவர்கள் அக்னியை சீக்கிரமாக கிளம்ப அனுமதிக்க, அவனின் ஆனந்தம் அன்போடு வரவேற்றது. வீட்டிற்குள் நுழையும் வரை ஆயிரம் சிந்தனைகள் அவனுள். அதெல்லாம் இனி திரும்பவும் வீட்டை விட்டு வெளியேறும் போது தான் அவன் மனதிற்குள் குடியேறும். சிறு குருவிக்கூடு வீட்டில் சிரிப்புகள் படையெடுக்க ஆரம்பித்தது.

“அக்னி ஒரு வரன் வந்திருக்குப்பா நாளைக்கு ஜாதகம் பார்க்க போறோம் நீயும் வரியா.” என தந்தை மணிவண்ணன் சொன்னதும்,

“அதுக்கெல்லாம் நான் எதுக்கு ப்பா. நீங்களும் அம்மாவும் போய்ட்டு வாங்க.” என்றான்.

“நான் அப்பவே சொன்னேன் நீ இந்த பதிலை தான் சொல்லுவேன்னு  அம்மா தான் ஆர்வத்துல அப்பாவ விட்டு கேட்க சொன்னாங்க.” என்று அன்னையை மாட்டி விட்டாள் திவ்யா.

மகனின் திருமணம் பல வருடம் ஆசை அல்லவா அவருக்கு. ஜோதிடர் மூன்று வருடம் நேரம் தோதாக வரவில்லை என்று விட எப்பொழுது இந்த மூன்று வருடம் கடக்கும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள்.  வேலைக்கு சேர்ந்ததிலிருந்து அவன் வீட்டை  கொஞ்சம் மறந்திருக்க மூன்று வருடங்கள் நான்கு வருடங்கள் ஆனது. இதற்கு மேலும் பொறுத்தால் சரி வராது என நினைத்தவர்கள் களத்தில் இறங்கி விட்டார்கள்.

திருமண பேச்சுக்கு பிறகு முதலாவதாக வந்த ஜாதகத்தில் குஷியாகிவிட்டார் பரமேஸ்வரி. ஜாதகம் பொருந்தி விட்டாள் அடுத்த இரண்டு மாதத்தில் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

“அம்மா உங்க சைடு எல்லாத்தையும் சரி பண்ணிட்டு பொண்ணு பிடிச்சிருந்தா எனக்கு சொல்லுங்க. அதுக்கு நடுவுல எதையும் சொல்லாதீங்க. நீங்க யாரைப் பார்த்தாலும் எனக்கு முழு சம்மதம்.” என்ற மகனின் வார்த்தையில் பெருமிதம் கடலை விட பெரிதாக விரிந்தது அவருக்கு.

பெற்றோர்கள் இருவரும் தான் பெற்ற மகனின் வார்த்தையில் உள்ளம் பூரித்து இருக்க, “அம்மா இவன மாதிரி நான் இருக்க மாட்டேன். எனக்கெல்லாம் பெரிய கனவே இருக்கு கல்யாணத்துல.” சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் இப்போதே போட்டு வைத்தால் தான் தன் கனவு நிறைவேறும் என்று சாப்பிடுவதை நிறுத்தி விட்டு போட்டு உடைக்க,

“குண்டம்மா அப்படி என்ன கனவு உனக்கு.”  தங்கையின் ஆசையை   தெரிந்து கொள்ளலாம்  என்று கேட்டான் அக்னிசந்திரன்.

“நான் என்ன கேட்டாலும் வாங்கி தரணும். மாசத்துல மூணு தடவை படத்துக்கு கூட்டிட்டு போகணும். வாரத்துல ஒரு தடவை சமைச்சு தரணும். முக்கியமா விஜய் ஃபேனா இருக்கணும்.” என்றதும் தலையில் அடித்துக் கொண்டான் அக்னிசந்திரன்.

அண்ணனின் செய்கையில் முகம் சுணங்கியவள் தந்தையிடம், “பாருங்க ப்பா இவன் என்னோட ட்ரீம கிண்டல் பண்றான்.” என்றாள்.

அவருக்கும் மகளின் பேச்சில் மகனைப் போலத்தான் செய்யத் தோன்றியது. இருந்தும் மகனை விட மகள் செல்லம் அல்லவா! தன் எண்ணங்களை உள்ளுக்குள் புதைத்தவர்,

“எதுக்குடா என் பொண்ண கிண்டல் பண்ற. அவ கேட்ட மாதிரி மாப்பிள்ளைய பார்த்து உன் தலைமையில கல்யாணம் பண்ணி வைக்கிறேன் பாரு” வெளியில் சமாளித்து வைத்தார்.

“அப்படி சொல்லுங்கப்பா.” என்று தந்தை தோள் மீது சாய்ந்தவள் அண்ணனுக்கு வக்கனை செய்ய,

“போதும் சாப்பாட்டுல கைய வச்சிட்டு எவ்ளோ நேரம்  பேசிட்டு இருப்பீங்க, சாப்பிடுங்க.” அன்றைய பொழுதை முடித்து வைக்க பரமேஸ்வரின் பேச்சு உதவியது. அதன்பின் குடும்பத்தோடு பொழுதை கழித்தவர்கள் அவரவர் அறையில் உறங்க சென்றார்கள்.

***

விடியல் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தாரோ என்னவோ எழுந்ததும் அக்னிக்கு ஃபோன் செய்தார் செல்வகுமார். தூக்க கலக்கத்தில் எடுத்தவன் யார் என்று தெரியாமல் பேச, செல்வகுமார் குரல் கேட்டதும் தெளிந்து விட்டான்.

“குட் மார்னிங் சந்திரா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.” என்ற செல்வ குமாருக்கு,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் எந்திரிக்கிற நேரம் தான்.” என்றான்.

“குட்!” என்றவர், “புது காண்ட்ராக்ட்க்கு லேண்ட் ஒன்னு வந்து இருக்கு சந்திரா. சீக்கிரம் கிளம்பி வந்தின்னா ரெண்டு பேரும் பார்த்துட்டு வந்துடலாம். “
அழைத்ததன் காரணத்தை கூறினார்.

இதுவரை செல்வகுமார் வீட்டிற்கு சென்றதில்லை அக்னி. பலமுறை அவர் அழைத்தும் மறுத்தவன் இன்று சம்மதித்து விட்டான். அரை மணி நேரத்தில் வருவதாக உறுதியளித்தவன் சொன்னது போல் வந்து நின்றான் செல்வகுமார் இல்லத்திற்கு. ஜாகிங் முடித்து வந்த விக்ரம் அவனை கண்டதும் வம்பு இழுக்க,  செல்வகுமார் அதட்டி அடக்கி விட்டார்.

பலமுறை அழைத்தும் வராதவன் இன்று வந்திருக்க  அன்போடு உபசரித்தார் நந்தினி.  “இன்னும் நல்லா அவன் கால கழுவி பூஜை பண்ணுங்க ரெண்டு பேரும்.” என பொங்கினான் விக்ரம்.

அவனைக் கண்டு கொள்ளாது தம்பதிகள் இருவரும் அக்னியை நன்கு கவனித்தார்கள். பெருமூச்சு விட்ட விக்ரம் அங்கிருந்து கிளம்பி விட, “அக்னி நான்  ரெடி ஆகிட்டு வரேன்.  டாக்குமெண்ட்ஸ எடுத்து வை.” என்று தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள கிளம்பிவிட்டார் செல்வகுமார்.

சம்மதமாக தலையசைத்தவன் அவர் சென்ற பின் தான் இதுவரை இங்கே வந்ததில்லையே என்பதை உணர்ந்தான். டாக்குமெண்ட் எங்கு இருக்கிறது என நந்தினியிடம் விசாரிக்க,

“மேல இடதுபுறம் இருக்க ரூம் சந்திரா ‌” என்றவர் முதல் அறையா இரண்டாவது அறையா என்பதை சொல்ல மறந்து விட்டார்.

மாடி ஏறியவன்   குழம்பினான் அங்கிருக்கும் இரு அறையை பார்த்து. சில நொடிகள் யோசித்தவன் முடிவாக உள்ளே சென்றான் அன்பினி சித்திரை இருக்கும் அறைக்கு.
தான் மட்டுமே உபயோகப்படுத்துவதால் அறை கதவை தாழ்ப்பாள் போடாதவள் குளித்து முடித்து வந்த கையோடு ஆடையை தேர்வு செய்து கொண்டிருந்தாள்.

அக்னி அறை கதவை வேகமாகத் திறக்க, அந்த சத்தத்தில் கையில் வைத்திருந்த சில ஆடைகளை விட்டுவள் அதிர்ந்து திரும்ப, “அய்யோ” என்று கத்தினான் அக்னிசந்திரன். அவன் கத்தலில் இன்னும் பயந்து அதிர்ந்தவள்,

“ஸ்டுப்பிட் அடிமை நான் தான்டா சத்தம் போடணும் நீ ஏன் கத்துற.”என‌ அவன் அருகில் செல்ல,

அன்பினி கிட்டே வந்ததும் இன்னும் கத்த ஆரம்பித்தான் அக்னிசந்திரன். அவன் வாயைப் பொத்தியவள், “டேய் கத்தாத!” என்று அதட்டினாள்.

“ம்ம்ம்… ம்ம்ம்!” என முனுமுனுத்தவனை பார்த்தவள், “என்னடா சொல்ற.” என கேட்க, பொத்தி இருக்கும் கைகளை சைகை செய்து காட்டினான்.

“ச்சீ!” என்றவள் அவன் உதட்டின் மீது இருந்து கையை எடுத்ததும்,
“பைத்தியக்காரி கொஞ்சம் கூட அறிவில்ல. இப்படியா அரையும் குறையுமா நிப்ப. டோர் லாக் பண்ணிட்டு பண்ண வேண்டியது  தான.”

“நீ வருவன்னு எனக்கு எப்படிடா தெரியும்.”

“யாராவது வந்தா தான் டோர் லாக் பண்ணுவியா.” என்றவன் பற்களை கடிக்க,

“என் ரூமுக்குள்ள  யாரும் வர மாட்டாங்க என் பர்மிஷன் இல்லாம.” என்றவள் அப்போதுதான் நினைவு வந்தவளாக,

“ஆமா நீ எப்படிடா இங்க? யார கேட்டு என் ரூமுக்குள்ள வந்த.” என்று அவனின் சட்டையை பிடித்தாள்.

கட்டியிருக்கும் துண்டோடு  முன் நிற்பவளை கண்டு முகம் திரும்பியவன், “பைத்தியக்காரி டிரஸ போடு.” என வெளியில் ஓடிவிட்டான்.

‘இப்ப எதுக்கு இவன் இப்படி ஓடுகிறான்.’ என யோசித்துக் கொண்டு வந்தவள் கண்ணாடி முன்பு நிற்க, அப்போது தான் தலையில் அடித்துக் கொண்டாள். வேகமாக ஓடியவள் அறை கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தயாராகிக் கொண்டிருக்க,

“ஆமா நான் தான கத்தி அவன வெளியே துரத்தி இருக்கணும். இதெல்லாம் அவன் பண்ணிட்டு போறான்.”என காலம் கடந்து உணர்ந்தாள் அன்பினி சித்திரை.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
26
+1
4
+1
10

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *