4 – விடா ரதி…
அடுத்த நாள் காலை சுந்தரியின் நிச்சயத்திற்கு புடவை கட்டிக்கொண்டிருந்தபோது ரகு அறைக்குள் வந்தான்.
இடையில் மடிப்புகளை சரி செய்தபடி கண்ணாடி முன் நின்றுக்கொண்டிருந்தாள். ரகு அவளைப் பார்த்தபடி அருகில் வந்து அவளை தன் முன் நிறுத்தி கீழே சில மடிப்புகளை சரிசெய்துவிட்டு, அமர்ந்தவாக்கிலே அவளைத் தலைநிமிர்ந்துப் பார்த்தான்.
“உனக்கு புடவைன்னா ரொம்ப பிடிக்குமா ரதி?”
“புடவை கட்ட பிடிக்கும்….. “
“எனக்கும் தான் உனக்கு கட்டிவிடணும்-ன்னு ஆசை இருக்கு ஆனா உனக்கு நல்லாவே கட்ட தெரியும் போலவே?”, கவலையுடன் கேட்டான்.
“ஹலோ மிஸ்டர்….. உங்களுக்கு மனசுல டீனேஜ் பையன்னு நினைப்பா? ரெண்டுபேரும் ஏர்லி 30’s ல இருக்கோம்… ஞாபகம் இருக்கா?”, இடுப்பில் கைவைத்து அவள் கேட்ட விதம், அவனை மயக்கியது தான்.
“இருந்தா என்ன? நமக்கு இப்போ தானே கல்யாணமே ஆகி இருக்கு…. சோ நாம டீனேஜ் வயச என்ஜாய் பண்றது தப்பில்ல…. தவிர….”, என அவள் காதருகில் ரகசியம் பேசி அவளிடம் சில அடிகளையும் பெற்றுக் கொண்டான்.
“ஹே ரதி…. நான் இன்னும் உன் கைய கூட பிடிக்கல ஆனா நீ என்னை இப்படி அடிக்கற…. இது நியாயமே இல்ல…..”, என தன் புஜத்தை தேய்த்துவிட்டுக் கொண்டான்.
“பொய் சொல்லாதீங்க ரகு…. தினம் நீங்க எனக்கு ப்ளையிங் கிஸ் குடுக்கறது எனக்கு தெரியும்…. தவிர…..”
“தவிர….”, என அவளை நெருங்கி ஒரு புருவத்தை உயர்த்தி அவன் கேட்டதும் அவனை பின்னால் தள்ளிவிட்டு, “போய் ரெடி ஆகுங்க….”, என நகர்ந்துச் சென்றாள்.
“முழுசா பதில் சொல்லிட்டு போடி…”
“முடியாது போடா…”, என வேகமாக அறைக்குள் இருந்து வெளியேறிவிட்டாள்.
“இன்னிக்கி அந்த ப்ளையிங் கிஸ்க்கு புரொமோஷன் குடுக்க போறேன்… “, இவன் அறையில் இருந்து வெளியே வந்து சத்தமாகக் கூறி அவளைப் பார்த்தான்.
“ஆமாமா புரொமோஷன் குடுத்துட்டு தான் வேற வேல…. இப்போதான் நானே கண்ணுக்கு தெரியறனாம்…. அதுக்குள்ள புரொமோஷன்-ன்னு வெட்டியா சீன் வேற…. “, என அவளும் அவனைச் சீண்டிவிட்டு விட்டு தலையில் குண்டுமல்லியைச் சூடி பின்னலை சரிப்பார்த்தாள்.
“ஹே பொண்டாட்டி…. இப்பவே கூட புரொமோஷன் குடுக்க நான் ரெடி தான்… உனக்கு தைரியம் இருக்கா?”, என அவனும் அவளைச் சீண்டினான்.
“வாய் பேசாம போய் ரெடியாகி வாங்க ரகு…. “
“கல்யாணம் ஆகி நாலு நாள் தான் ஆகுது அதுக்குள்ள என்னை பேசாதன்னு சொல்ற…. இதுலாம் பெண் ஆதிக்கம் சொல்லிட்டேன். அப்பறம் நான் கணவர்கள் பாதுகாப்பு சங்கத்துல கம்ப்ளைட் பண்ணிடுவேன்….”, வம்புவளர்த்தான்.
“உங்களுக்கு என்ன தான் ஆச்சி ரகு? ஏன் காலைல இருந்து என்னை வம்பிழுத்துட்டு இருக்கீங்க? நேத்து வெளிய போனப்போ தலைல அடிப்பட்டுறிச்சா? “, அவன் அருகில் வந்துக் கேட்டாள்.
“ஆமா.. நேத்து தான் ஒரு பெரிய வெளிச்சம் எனக்குள்ள வந்துச்சி….. அந்த வெளிச்சத்தை எனக்குள்ளேயே தக்கவச்சிக்க தான் போராடறேன்….” , எனக் கூறி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
பல நாள் கூடுவிட்டு தொலைந்த பறவை, கூடு சேர்ந்தது போல அவன் அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டான். பல நிமிடங்கள் கடந்தும் விலகாமல் அவன் இருந்தது அவளை அதிகமாக பாதித்தது. அவன் இத்தனை தவித்திருக்கிறானா?
“ரகு……”
“…………”
“ராக்கி….”
“ம்ம்….”
“என்னாச்சி ராக்கி?”, மென்மையாக அவன் சிகையைக் கோதிவிட்டபடிக் கேட்டாள்.
“நிறைய விசயம் புரியாம நடந்துக்கிட்டேன்…. இப்போ தான் அன்னிக்கி செஞ்ச தப்பு எல்லாம் புரிய ஆரம்பிக்குது….. “
“என்ன தப்பு? என்ன புரியல உங்களுக்கு?”
“இப்போ அது எல்லாம் சொல்ல நேரம் இல்ல…. பொறுமையா உன் ப்ரெண்ட் கல்யாணம் முடிஞ்சு நாம பேசலாம்…. நீ போ… நான் ரெடியாகி வரேன்…. “, என அவளை விடுவித்தான்.
“மறுபடியும் நான் புடவை மாத்தணும்…..”, என தன் உடையை பார்த்துவிட்டு அவனையும் முறைத்தாள்.
“இது நம்ம ஃபர்ஸ்ட் ஹக் டி…. அதையாவது ஃபீல் பண்ணியா இல்லையா?”, அவன் கடுப்புடன் கேட்டான்.
“அது நான் கற்றபோவே செஞ்சி இருந்தா இன்னொரு வேலை எனக்கு வந்திருக்குமா?”, என அவளும் கடுப்புடன் கேட்க, அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்று அவனே அவளுக்கு வேறு புடவை கட்ட முனைய, “ஹே.. என்ன பண்றீங்க?”, படபடப்புடன் கேட்டாள்.
“நீ தான் புடவை கட்ட சலுப்புபட்ட, அதான் நானே…..”, என அவன் கொஞ்சம் விஷமத்துடன் கூற, “நானே கட்டிக்கறேன் …”, என புடவையை இழுத்தாள்.
“அதான் என்னை கட்டிகிட்டியே….”, என அவன் சிரிப்புடன் சொல்ல, “நான் புடவைய சொன்னேன்….”, என அவள் இழுத்துப் பிடித்த பொறுமையுடன் கூறினாள்.
“பரவால்ல.. என்னால தானே உனக்கு ரெண்டாவது வேலை… நானே செஞ்சி தரேன்…”, என அவனும் தன் பிடியை விடவில்லை.
“அய்யா சாமி… போதும்.. ஒரே நாள்ல உங்க முழு அவதாரமும் என்னால பாக்க முடியாது … இப்போ நீங்க வெளிய போங்க… நான் ரெடியாகி வரேன்…. “
“ம்… இப்போ தான் பழைய ரதி வெளிய வர ஸ்டார்ட் ஆகி இருக்கா…. சரி அப்பறம் மிச்சத்தை வெளிய கொண்டு வரேன் …”, என அவள் கன்னத்தில் இச்சென முத்தமிட்டுவிட்டு வெளியே ஓடினான்.
அதில் அவள் தான் சில நொடிகள் அசையாமல் நின்றாள்.
“ஹேய் பொண்டாட்டி…அடிச்சா இப்படி அடிக்கணும்…. ஞாபகம் வச்சுக்கோ….”, என மீண்டும் வந்து அவளது மற்றொரு கன்னத்தில் முத்தமிட்டு வெளியே சென்றான்.
அவனது செயல்களில் வெட்கம் மேலெழ முகத்தை மூடி தன்னை சமன் செய்துக் கொண்டுத் தயாராகி வெளியே வந்தாள். அவனும் தயாராகி அவளுக்காக இருசக்கர வாகனத்தில் காத்திருந்தான்.
“ஏன் கார் வேணாமா?”
“ஏன் பைக்ல போனா உன் ப்ரெண்ட் உள்ள விடமாட்டாளா?”, என அவன் மீண்டும் இடக்காகப் பேச, அவள் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அமைதியாக அவன் பின்னால் அமர்ந்துக்கொண்டாள்.
இந்த பயணம் அவளது வெகுகால கனவு. கல்லூரியில் படிக்கும்போது, அவனைக் காலையில் பேருந்து ஏறும் முன் எப்படியும் பார்த்துவிடுவாள்.
இரு சக்கர வாகனத்தில், அவன் அவள் நிற்குமிடத்தை ஓரக் கண்ணில் பார்த்தபடிச் செல்வது மனதில் பட்டாம்பூச்சி பறக்க வைக்கும்.
ஒரு சில நாட்கள் அவனைக் காணாது பேருந்து வந்தும் ஏறாமல் சில வினாடிகள் சாலையைப் பார்த்துவிட்டு ஏறியதும் உண்டு. அவள் பேருந்தில் கால் வைக்கும் சமயம் அவனும் வந்துவிடுவான். அப்படி இல்லையென்றால் அவளது பேருந்து செல்லும் சாலையில் அவள் அவனைக் காணும் வரையில் பின்தொடர்ந்து பார்த்து சென்றதும் உண்டு. இப்படியான செயல்களை வைத்து தான் அவனுக்கும் விருப்பம் இருக்கிறதென அவளும் நினைத்துக் கொண்டாள்.
இன்று அவனின் மனைவியாக அவன் தோளில் கரம்பதித்து, அவன் பின்னால் உரிமையுடன் செல்லும் இந்த முதல் பயணம் அவளுக்கு கொடுத்த உணர்வை வார்த்தைகளில் வடிக்க முடியாது. உள்ளம் பூக்க முகமும் பூத்து, பல காலமாக எதிர்பார்த்த பொக்கிஷத்தைக் கைப்பற்றியது போன்ற உணர்வுக் குவியலில் சுந்தரியின் வீட்டிற்கு வந்திறங்கினாள்.
அவளின் முகத்தில் இருந்த ஜொலிப்புக் கண்டு சுந்தரியும் மனம் பூத்தாள்.
“என்ன டி… மூஞ்சி 10k wattsல ஜொலிக்குது…. ஒரே ஜாலி தான் போல…”, எனக் கிண்டல் செய்தாள்.
“அப்டிலாம் ஒண்ணுமில்ல…. நீ இன்னும் ரெடியாக ஆரம்பிக்கல?”, என மலுப்பினாள்.
“மலுப்பாத… நீ சந்தோசமா இருக்கியா?”
“அவன கல்யாணம் பண்ணது ஒரு பக்கம் சந்தோசம் தான். ஆனா இன்னொரு பக்கத்த தெரிஞ்சிகிட்டா தான் முழுசா சந்தோசப்படமுடியும்….”
“தேவையில்லாத விசயத்த இப்போ ஏன் கெளரணும் ? கம்முனு விட்டுட்டு உன் வாழ்க்கைய வாழு டி…. “
“இல்ல சுந்தரி… உண்மை தெரியணும்.. நடுவுல யாரு என்ன குழப்பம் பண்ணாங்கன்னு தெரிஞ்சா தான் எங்களுக்குள்ள எதிர்காலத்துல எந்த பிரச்சனையும் வராது…. அதுக்காகவாது உண்மைய தெரிஞ்சுக்கணும்…. “, எனக் கூறிவிட்டு, “ இப்போ உன் நிச்சயத்துக்கு ரெடியாகலாம் வா…”, என அவளைச் சாப்பிட வைத்து, தயாராக ஆயத்தம் செய்தாள்.
இடையில் மனைவியைத் தேடி வந்தவன் அவளது பேச்சை கேட்டுவிட்டு அமைதியாகச் சென்று யோசனையில் ஆழ்ந்தான்.
அவள் மனதில் இருக்கும் சந்தேகத்தைத் தீர்க்காமல் அடுத்த படிக்கு இந்த திருமணவாழ்வை எடுத்துச் செல்லமுடியாது என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இதில் இன்னமும் காலத்தைக் கடத்தவும் கூடாது. விரைவாக ஏதேனும் செய்தாக வேண்டும்.
“ரகு …. ரகு….”
“இந்தாடி நில்லு….”, என ஒரு கிழவி அவளை நிறுத்தியது.
“என்ன பாட்டி?”
“அவன் உன் புருஷன் தானே?”
“ஆமா….”
“அப்பறம் என்ன பேர சொல்லி கூப்பிடற? ஒழுங்கா மாமான்னு கூப்பிடு…. நாலு எழுத்து படிச்சிபுட்டா மரியாதை குடுக்கமுடியாதா?”
“பாட்டி… நான் என்ன உன் புருஷனையா பேர் சொல்லி கூப்பிட்டேன்? நீ உன் புருஷனுக்கு என்ன மரியாதை குடுத்தன்னு எனக்கு தெரியாது பாரு… அவர் என் புருஷன்.. நான் எப்படி வேனா கூப்பிடுவேன்…. நீ காத மூடிக்கோ கேக்க முடியலனா….. என் புருசனுக்கு எப்படி மரியாத குடுக்கணும்ன்னு எனக்கு தெரியும்… நீ இனிமே என் புருஷன டிரைவர் வேலைக்கு கூப்பிடாத… தினம் உன்ன வெத்தல கடைக்கு கூட்டிட்டு போறது தான் அவரு வேலையா?”, என அவளும் அந்த பாட்டியைப் பிடித்துக் கொண்டாள்.
“ஏதேது…. நேத்து வரைக்கும் கல்யாணம் வேணாம்னு கத்தி கலாட்டா பண்ணது என்ன இன்னிக்கி உன் புருஷனுக்கு வக்காலத்து வாங்கறது என்ன…. அப்படி என்னடி அவன் உன்ன மயக்கினான்….?”
“உன் புருஷன் உன்ன மயக்கினமாதிரி தான்….” , என வெடுக்கென கூறிவிட்டு சென்றாள்.
இவர்களது சம்பாசனையை கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பேரும் கொல்லென சிரிக்க, “அடியே சீமாட்டி…. அப்போ அடுத்த மாசமே வாந்தி எடுத்துகாட்டு டி…”.
அவள் மீண்டும் வாய் திறக்கும் முன் ரகு அவ்விடம் வந்து அவளைக் கூட்டிக்கொண்டு சென்றான்.
இவர்களை விட்டால் அத்தனை பேரின் மானமும் அல்லவா இனி காற்றில் பறக்கும்… அந்த கிழவியின் வாய் லேசில் மூடாதே…
“இப்போ எதுக்கு என்னை இப்படி இழுத்துட்டு போறீங்க ரகு?”, அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் கேட்டாள்.
“உன்ன எல்லாம் ஆறு வருஷத்துக்கு முன்னேயே இழுத்துட்டு ஓடி இருக்கணும்.. என் தப்பு தான்…. “
“அதுக்கு தான் உங்களுக்கு தெறம இல்லயே…”, நொடித்தாள்.
“உனக்கு மட்டும் இருந்துச்சி பாரு ?”, என அவன் கேட்டதும் அவள் கையை உதறிவிட்டு வேறுபக்கம் சென்றாள்.
“கோவமா?”, மெல்ல அருகில் வந்துக் கேட்டான்.
“உங்க மேல கோவபட்டு என்ன ஆக போகுது?”
“அப்போ மூஞ்ச கொஞ்சம் நல்லா வைக்கலாமே….”
“என் மூஞ்சி இப்படி தான்… “
“இல்லையே…. இன்னும் வசீகரமாக நான் பாத்து இருக்கேன்…. அன்னிக்கி சரவணன் கல்யாணத்துல… வெள்ள சுடிதார்ல ….. “, எனக் கூறியதும், அவள் டக்கென திரும்பிப்பார்த்தாள்.
“உங்களுக்கு இன்னும் அந்த நாள் ஞாபகம் இருக்கா?”, விழிவிரியக் கேட்டாள்.
அவன் ஆமென தலையசைக்க அவளுக்குள் அந்த நாள் படமாக ஓடத்தொடங்கியது.