Loading

ஊஞ்சல் 4

“அய்யோ என்னமா?”

“அத்தை, முடியல அத்தை… ரொம்ப வலிக்குது…”

“என்னடா பார்த்துட்டு இருக்க, அவளைத் தூக்கு.”

தந்தை சொல்லியதும் புது மனைவியைத் தூக்கியவன், “பார்த்து வரக்கூடாதா?” என்றிட, “வேகமா வந்ததுல கால் ஸ்லிப் ஆகிடுச்சு திரும்மா‌.” என்றாள்.

இப்பொழுது தான் கவனிக்கிறான், அவள் அழைப்பை. யாரும் அவனை இப்படி அழைத்ததில்லை. கல்லூரிக் காலத்தில் நண்பன் தினேஷ் கேலி செய்தது மனதில் ஓடியது. ஒருமுறை தன்னைத் தேடி வந்தவளைக் கேலி செய்த வகுப்பு நண்பர்களிடம், “நான் திரும்மாவைப் பார்க்க வந்தேன்” என்றது நியாபகத்திற்கு வந்தது. அதெல்லாம் ஒரு நொடியில் ஓரம் தள்ளி வைத்தவன்,

“உட்காரு” என அமர வைக்க, “வேண்டாம் திரும்மா, நான் வீட்டுக்குக் கிளம்புறேன். உங்களுக்குப் பிடிக்காம நான் இங்க இருக்கிறது சரி வராது.” என்றதும் அவன் மறுப்பான் என்று எதிர்பார்க்க,

“இன்னைக்கு ராத்திரி ரெஸ்ட் எடுத்துட்டுக் காலையில போ.” என்றான் தன்னவள் தனக்காக ஒதுக்கி வைத்த இதயத்தைக் காயப்படுத்துகிறோம் என்று அறியாது.

ஒரு மாதிரி ஆகிவிட்டது அவள் முகம். இருட்டில் யாருக்கும் தெரியாமல் போனதால் கலங்கிய கண்கள் தப்பித்தது. அடுத்த வார்த்தை பேச இயலாது தலை குனிந்து அமர்ந்திருக்க,

“என்னடா நீ! அவளே விழுந்து அடிபட்டுக் கிடக்கா, துரத்திட்டு இருக்க. வந்தது வந்ததாவே இருக்கட்டும். அவ பெத்தவங்களே இங்க இருக்கட்டும்னு அனுப்பி வச்சிருக்காங்க, உனக்கு என்ன வந்துச்சு?” ராணி அதட்டினார்.

“நான் எதுக்குச் சொல்றேன்னு கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.”

“எதுக்கு வேணா இருக்கட்டும் திரு. அம்மா சொல்றது தான் எனக்கும் சரின்னு படுது. கல்யாணமான பொண்ணு பெத்தவங்க வீட்ல எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?”

“அந்தக் காலத்து ஆளுங்க மாதிரிப் பேசாதீங்கப்பா. எங்க கல்யாணம் ஒன்னும் பிடிச்சு நடக்கல. அதுவும் அவ தங்கச்சி இறந்தது கூடத் தெரியாமல் நடத்தி வச்சிருக்கீங்க. இந்த மாதிரிச் சூழ்நிலையில எங்களால எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?”

“எதிர்பார்க்காம நடந்த விஷயத்துக்கு நம்ம என்ன பண்ண முடியும்?”

“எனக்கு என்னமோ இது எதிர்பார்க்காம நடந்த விஷயம் மாதிரித் தெரியலம்மா.” என்றதும் பார்த்திகாவின் கைகள் நடுங்க ஆரம்பித்தது.

“இப்ப என்ன தான்டா சொல்ல வர?”

“கொஞ்ச நாளைக்கு அவங்க அம்மா வீட்ல இருக்கட்டும்.”

“எத்தனை நாளைக்கு?”

“எனக்கு எப்போ தோணுதோ, அப்பக் கூட்டிட்டு வரேன்.”

“ஒரு புருஷன் சொல்ற வார்த்தையா இது! என்னதான் அவசரத்துல நடந்திருந்தாலும் இப்ப நீங்க புருஷன் பொண்டாட்டி. அதை மனசுல நல்லாப் பதிய வச்சுக்க திரு.”

“பதிய வைக்க முடியலப்பா. நான் கல்யாணம் பண்ணிக்க நினைச்ச பொண்ணு எதுக்காக இறந்தான்னு கூடத் தெரியல. அதுக்குள்ள அவ அக்கா கூட சேர்ந்து வாழச் சொல்றீங்க. இப்ப வரைக்கும் இவளை என்னோட மனைவியா நினைச்சுப் பார்க்க முடியல.”

கையின் நடுக்கம் குறையாமல் இருந்தாலும், கண்கள் பனிக்க ஆரம்பித்தது. அவள் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு போலானது. எந்தப் பக்கம் போனாலும் வலியும் வேதனையும் மட்டுமே அவளுக்கு மிச்சம். அத்தனைக்கும் நடுவில் ஒரே ஆறுதல் அவன் மீது கொண்ட காதல் மட்டுமே! அந்தக் காதலுக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது, திருமேனி ஆவுடையப்பனின் வார்த்தைகளால்.

‘இவன் மனைவியாவதற்கு என்னெல்லாம் செய்திருக்கிறோம்?’ என்பதை நினைத்துக் கண்ணீர் வடிக்க மட்டுமே இவளால் முடியும். ஏனென்றால் அவள் செய்த காரியம் அப்படி. எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத ஒன்றைச் செய்து தன் காதலை அடைந்தவள் அவன் மனதை அடைய இயலாது தோல்வியோடு அமர்ந்திருந்தாள்.

“ஸ்டாப் இட் திரு! அந்தப் பொண்ணை வச்சுகிட்டே இப்படி ஒரு வார்த்தையைச் சொல்றது சரியில்ல. அவ இப்ப எங்க மருமக… உனக்குப் பிடிக்குதோ இல்லையோ, அவ இங்கதான் இருப்பா.” என்ற நடராஜ்,

“ராணி, பார்த்திகாவுக்கு ரூம் ரெடி பண்ணிக் குடு.” என மகனை முறைத்துக் கொண்டே சென்று விட்டார்.

“இவன் பேசினதை மனசுல வச்சுக்காத. இங்கயே உக்கார்ந்துட்டு இரு பாரு, ரூம் ரெடி பண்ணிட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்.”

அவர் சென்ற பின்னும் அழுகையும், கை நடுக்கமும் நின்ற பாடில்லை. தாய் செல்லும் வரை அமைதியாக இருந்தவன், “இவங்க இப்படிதான் நம்ம நிலைமை புரியாமல் பேசிட்டு இருப்பாங்க. நீ காலையில கிளம்பி ரெடியா இரு. டூட்டிக்குப் போகும்போது உன் வீட்ல விட்டுட்டுப் போறேன்.” என்றான்.

விரக்தியான சிரிப்பு அவள் இதழோரம். இனித் தன் வாழ்வில் இவன் இல்லவே இல்லை என்ற நிலை மாறி, மனைவி ஆனது போல் எப்படியாவது வாழ்ந்து விடலாம், என்ற நம்பிக்கையில் காதலனைத் தேடி வந்தாள். இருந்த ஒரு கதவும் அடைக்கப் பட்டதாய் உணர்ந்தாள்.

********

“ஹாப்பி மார்னிங், திரும்மா!”

அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவன் திரும்ப, தேனீரோடு நின்று கொண்டிருந்தாள் பார்த்திகா.

“என்ன?”

“நமக்கு யாராவது விஷ் பண்ணா ஸ்மைல் பண்ணனும்.”

“ம்ம், குட் மார்னிங்!”

“குடிங்க”

“டீ குடிக்க மாட்டேன்.”

“தெரியுமே, இது நீங்க டெய்லி குடிக்கிற க்ரீன் டீ.”

“எதுக்கு இதெல்லாம் நீ செஞ்சிட்டு இருக்க?”

“செய்யணும்னு இல்ல, காலையில சீக்கிரம் எழுந்துட்டேன். காபி போடலாம்னு போகும்போது உங்களப் பார்த்தேன், அதான்.”

“தேங்க்யூ!”

“வெல்கம் திரும்மா”

“ஏழு மணிக்குக் கிளம்பிடுவேன், ரெடியா இரு.”

“நான் போகல திரும்மா.”

கேள்விக்குறி முகத்தில் விழ, “ஏன்?” எனக் கேட்டான்.

“உங்களப் பத்தி யோசிச்சீங்களே, நம்ம பெத்தவங்களப் பத்தி யோசிச்சீங்களா?”

“இதுல அவங்களப் பத்தி யோசிக்க என்ன இருக்கு?”

“இருக்கு திரும்மா. இத்தனை வருஷமா பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணும்னு ஆசைப்பட்டு… நடந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் நடுவுல உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அதுக்குப் பிரயோஜனமே இல்லாத மாதிரி நீங்க இங்கயும், நான் அங்கயும் இருக்கிறது சரி வருமா? என் பெத்தவங்களுக்கு, என் தங்கச்சி இல்லாதது பெரிய இழப்புதான். அதே நேரம் நானும் அங்கயே இருந்துட்டா அக்கம் பக்கத்துல இருக்குறவங்க கேள்வி கேட்க மாட்டாங்களா? அவங்களுக்குமே ஒரு பொண்ணு இல்ல… இருக்கற பொண்ணும் வாழாம வீட்டோட இருக்கேன்னு கவலை இருக்கும்ல…”

“சோ, சேர்ந்து வாழச் சொல்ற?”

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே.”

“வேற…”

“மகளாவும், மருமகளாவும் எனக்குப் பொறுப்பு இருக்கு. அதுக்காக இங்க இருக்கப் போறேன். இங்க இருக்கப் போறனே தவிர உங்க மனைவியா வாழப் போறது இல்ல.”

“இதெல்லாம் சரி வராது…” என அவன் அடுத்துப் பேசுவதற்குள்,

“ஏன்? பக்கத்துல இருந்தா என்கூடச் சேர்ந்து வாழ்ந்துடுவீங்கன்னு பயமா?”

“வாட்!” என நிறுத்தாமல் நகைத்தான்.

உள்ளே இருக்கும் காயத்தைக் காட்டாது, “அப்போ… நான் என் வேலையப் பார்க்கிறேன், நீங்க உங்க வேலையப் பாருங்க. இந்த மாதிரிப் பார்க்கும்போது ஒரு ஹாய்… ஹலோ போதும்.” என்றாள்.

“இந்தத் திருவைச் சாதாரணமாக எடை போட்டதுக்காக, நீ சொல்றதுக்கு ஓகே சொல்றேன். மத்தபடி என்னை உன் ஹஸ்பண்டா நினைச்சுப் பார்க்காத.”

“டீல்” என அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

செல்லும் அவளையே ஒரு நொடி பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் சொல்ல முடியாத எண்ணங்கள். மனதார ஆனந்தியைத் திருமேனி ஆவுடையப்பன் நேசித்தது உண்மை. முதல் சந்திப்பில் அவளோடு ஏற்பட்ட ஈர்ப்பில் தான், திருமணமே வேண்டாம் என்றவன் சம்மதம் சொன்னான். சிறிது நாள்களே என்றாலும் அவன் மனதிற்குள் தோன்றிய முதல் காதல் ஆனந்தி.

அந்தக் காதலையும் தாண்டி ஒரு காவலனாகத் தலைக்கு மேல் ஆனந்தி வழக்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் அறியாது, வேறு எதிலும் கவனம் செலுத்த விரும்பவில்லை திருமேனி.

யோசனையில் நின்று கொண்டிருக்கும் தன்னவனைச் சிறிது தூரம் சென்று கவனித்தவள் புன்னகைத்தாள். இருட்டோடு இருட்டாகத் தனியறையில் தஞ்சம் புகுந்து, தன் மனதில் இருந்த கவலைகளை அழுது தீர்த்தவள், திருமேனி ஆவுடையப்பனின் காதலியாக மீண்டும் சுயநலமாக யோசித்தாள்.

தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பே வராது என்ற எண்ணம் ஆணித்தரமாக உள்ளத்தில் இருக்க, நழுவ விடாது முயற்சிக்க முடிவெடுத்தே இந்த அவதாரத்தை எடுத்து இருக்கிறாள்.

********

“காஃபி சூப்பர் மருமகளே…”

“தேங்க்யூ மாமா” என்று விட்டு,

“நீங்க ஒண்ணுமே சொல்லல அத்தை” அவர் முகம் பார்த்தாள்.

“உங்க அத்தை கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேச மாட்டா.”

“ஏன் மாமா?”

“அவளுக்கு உன் மேல பொறாமை வந்திடுச்சு!”

“எதுக்கு மாமா?” மாமியாரைப் பார்க்க, கணவனை முறைத்தபடி அமர்ந்திருந்தார் ராணி.

“கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் ஒரு நாள் கூட இந்த மாதிரி நல்ல காபியைச் சாப்பிட்டது இல்லன்ற உண்மையைச் சொல்லிட்டேன்.”

“ஹா…ஹா… முதல் நாளே மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை மூட்டி விட பிளான் பண்ணிட்டீங்களா மாமா?”

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே திருமேனி ஆவுடையப்பன் காவல் உடையில் வந்து நிற்க, அவன் உடை இன்ஸ்பெக்டர் என்பதை உணர்த்தியது. தினேஷும் வேறொரு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணி புரிகிறான். காக்கி உடையில் இருக்கும் தன்னவனை ரசித்தவள்,

‘உங்களுக்கு இந்த டிரஸ் ரொம்பப் பொருத்தமா இருக்கு திரும்மா. என் கண்ணே பட்டுடுச்சு. நைட் சீக்கிரம் வாங்க, திருஷ்டி சுத்திப் போடுறேன்.’ மனதில் பேசிக் கொண்டாள்.

“திரு… நீ ரொம்பக் கொடுத்து வச்சவன்டா.”

“போதும், உங்க மருமக புராணத்தை நிறுத்துங்க.” என்ற ராணி, “நீ சொல்லுடா நான் போடுற காஃபி நல்லா இருக்காதா?” மகனிடம் பஞ்சாயத்துச் சென்றது.

“ஸ்டேஷன்ல வந்து கம்ப்ளைன்ட் கொடுங்க, விசாரிச்சுச் சொல்றேன்.”

“ஹா! ஹா! உன் பையனே உன்னை டேமேஜ் பண்ணிட்டான்.”

ராணி கோபித்துக் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள, “ரெண்டு பேரும் சும்மா சொல்றாங்க அத்தை. நேத்து நீங்க போட்டுக் கொடுத்த காபி எனக்கு ரொம்பப் பிடிச்சுது. அதே மாதிரி போடணும்னு ட்ரை பண்ணி தான் மாமாகிட்ட நல்ல பேரு வாங்கி இருக்கேன். சோ, நீங்க தான் பெஸ்ட்.” மாமியாரைக் காக்கா பிடித்தாள் பார்த்திகா.

இவர்களுக்கு நடுவில் நின்றிருந்தவன் வெளியேறப் போக, “சாப்பிட்டுப் போங்க திரும்மா.” என்றிட,

“இவ்ளோ சீக்கிரம் யாராவது சாப்பிடுவாங்களா?” என முறைத்தான்.

“ஒரு நாள் சாப்பிட்டா, ஒன்னும் ஆகாது வாங்க.” கைபிடித்து இழுத்துச் சென்று உணவு மேஜை முன் அமர வைத்தவள், அவனுக்குப் பிடித்த ஆப்பத்தை வைக்க, பிடித்த உணவு என்பதால் கை பிடிக்கும் போது வந்த கோபத்தை மறந்து சாப்பிட ஆரம்பித்தான்.

“எப்படி இருக்கு?”

மனைவியின் கேள்விக்குப் பதில் சொன்னான், மற்றொரு ஆப்பத்தைக் கேட்டு வாங்கி உண்டு. முகம் சிவக்கச் சிரித்தவள் இன்னொன்றை வைக்கப் போக, “போதும்” என எழுந்து சென்று விட்டான்.

இவர்களை கவனித்துக் கொண்டிருந்த நட்ராஜ், ராணி தம்பதிகள் தங்களுக்குள் பார்த்துச் சிரித்துக் கொள்ள, “மதியம் எங்க இருப்பீங்கன்னு சொல்லுங்க, லஞ்ச் குடுத்து விடுறேன்.” பேசியபடி அவனுக்குப் பின்னால் ஓடினாள்.

“அதெல்லாம் வேணாம், எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது.”

“மதியம் போல போன் பண்றேன். எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, கரெக்டான டைமுக்கு எடுத்துட்டு வந்துருவேன்.”

“உனக்கு எதுக்குத் தேவை இல்லாத வேலை?”

“அவதான் ஆசையாச் சொல்றா இல்லடா… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எடுத்துட்டு வரட்டும், விடு.” என்ற அன்னையின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்பாது அமைதியாக வெளியேற,

“வழி அனுப்பிட்டு வரேன் அத்தை” புள்ளிமான் போல் ஓடினாள்.

மீண்டும் பெற்றோர்கள் தங்களுக்குள் பார்த்துக் கொள்ள, தன் காவல் வாகனத்தில் ஏறி அமர்ந்தவனின் வலது பக்கம் நின்று, “பார்த்துப் பொறுமையா போங்க” எனக் கை அசைத்தாள்.

ஓட்டுனராக இருந்த காவல் அதிகாரி, திருமேனி ஆவுடையப்பனைப் பார்க்கப் புதிதாக இருந்தது அவனுக்கு. கூச்சமும் இப்படி எல்லாம் செய்யும் பார்த்திகா மீது சிறு கோபமும் ஒன்று போல் எழுந்தது. இரண்டையும் அங்கு இருப்பவர் முன்பு காட்ட முடியாது நேராக ரோட்டைப் பார்க்க,

“அண்ணா, பொறுமையா ஓட்டிட்டுப் போங்க.” என்றாள்.

பார்த்திகாவின் அன்பு அவருக்குப் புரிந்தது. மனமகிழ்வோடு தலையசைத்து விட்டு வாகனத்தை இயக்க, கண்ணில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தாள். சென்று கொண்டிருந்தவன் கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சரியாக அந்தத் தெருவைக் கடக்கும் பொழுது தலையை வெளியே நீட்டித் திரும்பிப் பார்க்க, துள்ளிக் குதித்து வானத்தை முட்டிவிட்டு வந்தவளின் மோதல் தாங்காது மழை தூறல் ஆரம்பித்தது.

ஊஞ்சல் ஆடும்…
அம்மு இளையாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
11
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்