556 views

தேவன் 4

“எத்தனை தடவை உனக்கு சொல்றது அன்னம் வீட்டுக்கு போனா சீக்கிரம் வரணும்னு. உங்க அப்பாக்கு விஷயம் தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு.”  மகளை வழி நெடுக்க திட்டிக் கொண்டே வந்தார் பரிமளம். அவள் செய்த செய்கைக்கு மருமகன் திட்டு வாங்குவதை விரும்பவில்லை அவர். 

 

அதையெல்லாம் தூசி தட்டிய யாழினி ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். பரிமளம் பயந்தது போல் அவர்களுக்காக வாசலில் நின்றிருந்தார் சண்முகம். அவரைக் கண்டு பரிமளத்தின் கை கால்கள் உதற ஆரம்பிக்க,  எதுவும் நடக்காதது போல் உள்ளே சென்றாள் யாழினி.

 

 

“எங்க போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு, உள்ள போ!.” என்ற கணீர் குரலில் அவள் கால்கள் அப்படியே நின்றது.

 

“என்னங்க…” என மகளுக்காக பரிந்து பேச ஆரம்பித்த மனைவியை பார்வையால் முறைத்து அடக்கியவர் மகளை பார்த்தார்.

 

“மாமா வீட்டுக்கு போயிட்டு வரேன் ப்பா.” அவள் குரலில் எந்த பயமும் தெரியவில்லை சண்முகத்திற்கு.

 

“என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே இப்படி சொல்லுவ. அவங்க வீட்டுக்கும் நமக்கும் உறவு இல்லைன்னு ஆகி பல வருஷம் ஆகுது யாழு. ஒவ்வொரு தடவையும்  உனக்கு புரிய வச்சுட்டு இருக்க முடியாது. அவ இந்த வீட்டுக்குள்ள வரதையே என்னால ஏத்துக்க முடியல. இதுல நீ அவ வீட்டு படியில கால் வச்சிட்டு வர.” உச்ச ஸ்தானத்தில் தந்தை கத்திக் கொண்டிருக்க, அப்போது  உள்ளே நுழைந்தான் கிருஷ்ணன். 

 

பரிமளம் சண்முகத்தின் மூத்த மகன். படித்து முடித்த கையோடு தேவநந்தனைப் போல் விவசாயத்தில் இறங்கி விட்டான். வீட்டில் நடக்கும் கலவரங்களை கண்டும் காணாமலும் உள்ளே சென்றவன், “அத்தை நல்லா இருக்காங்களா யாழு.” என்று விசாரித்தான் தங்கையிடம்.

 

அதைக் கேட்டு நடுமண்டை சூடானது சண்முகத்திற்கு. பெற்ற பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட முடியாதவர் மனைவியிடம், “நான் சொல்ற விஷயம் ஆளாளுக்கு விளையாட்டா தெரியுது அப்படித்தான. இந்த ஊர்காரங்க எவனாவது இதை பார்த்துட்டு கோவிலுக்குள்ள என்னை விடாம இருக்கட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு.” என்றவர் இந்த முறை  வெளியில் செல்லாமல் தன் அறைக்கு சென்று விட்டார்.

 

 

அவர் செல்லும் வரை அமைதியாக இருந்த பரிமளம் மீண்டும் மகளைத் திட்ட, “இப்ப என்னத்துக்கு அவளை திட்டிக்கிட்டு இருக்கிங்க. அப்படி ஒண்ணும் செய்யக் கூடாத தப்பு அவ செஞ்சிடல. இவருக்கு மதிப்பு கொடுத்து தான் இன்னமும் அத்தைய நேர்ல பார்த்தா கூட ஒரு வார்த்தை பேசாம ஒதுங்கி நிற்கிறேன். அதையே இவளும் பண்ணனும்னு எதிர்பார்க்காதீங்க. வருஷத்துக்கு ஒரு முறை கட்டுற வரிப்பணத்துக்காக கூட பிறந்த தங்கச்சிய தண்டிக்கிறாரே இவருக்கு பிள்ளையா பிறந்ததை நினைச்சு வெட்கப்படுறேன்.” வேண்டுமென்றே சண்முகம் கேட்குமாறு கத்திய கிருஷ்ணன் சாப்பிட அமர்ந்தான் திண்ணையில்.

 

மழை பெய்து ஓய்ந்தது போல் சளிப்போடு தன் அறைக்குள் நுழைந்த யாழினி எண்ணமெல்லாம் தேவநந்தனே இருந்தான். சிறுவயதில் இருந்து மாமனை பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அவன் ஒதுங்கி நிற்பதை கண்டு மனம் கசக்கும் அவளுக்கு. எப்படியாவது தந்தையின் மனதை மாற்றி மாமனை இனக்கம் கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல முயற்சிகள் எடுத்திருக்கிறாள். 

 

 

அவை யாவும் தோல்வியில் தான் முடிந்தது. தந்தை செயல் பிடிக்கவில்லை என்றாலும் கிருஷ்ணன் என்றும் எதிர்த்துப் பேச மாட்டான். தகப்பனுக்கு மரியாதை கொடுத்து நேரில் பார்க்கும் பொழுதெல்லாம் இருவரையும் ஒதுக்கி வைப்பான். அவனைப் போல் யாழினியால் இருக்க முடியவில்லை. அதுவும் அன்னம் அன்பிற்கு முன் தந்தையின் வார்த்தை பெரிதாக தோன்றவில்லை அவளுக்கு. 

 

 

இல்லாத ஒன்றிற்காக நேரில் இருக்கும் உயிர்களை ஒதுக்கி வைத்து வதைக்கும் இந்த பழக்கவழக்க சமூகத்தை தான் அவள் முதலில் எதிர்ப்பது. இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு வேண்டாம் என்று முடிவு எடுத்தவள் வெளியூரில் படிக்கிறேன் என ஒதுங்கி இருக்கிறாள். ஊருக்கு வருவது கூட மாமனை பார்க்க மட்டுமே. 

 

***

 

கிருஷ்ணனின் கைபேசி ஓயாமல் அடித்துக் கொண்டே இருந்தது. மரம் வெட்டும் வேளையில் பிஸியாக இருந்தவன் அதை கவனிக்காமல் விட்டு விட, கைபேசி கதறிக் கொண்டிருந்தது அவளின் தொடர் அழைப்புகளில். 

 

அரை மணி நேரம் கடந்த பின்  மேனியில் இருக்கும் வியர்வையை துடைத்துக் கொண்டு வந்தவனின் விழிகளில் கைபேசி பட்டது. அப்போது தான் மணியை பார்த்து பதறினான். வேகமாக உள்ளே ஓடியவன் கைக்கு கிடைத்த சட்டையை மாட்டிக் கொண்டு பறந்தான் பேருந்து நிறுத்தத்திற்கு. 

 

 

கல்லூரி முடித்து வழக்கம் போல் பேருந்தில் ஏறி, தன் ஊர் நிறுத்தத்தில் காத்திருந்தாள் அவனுக்காக. இவ்வளவு முறை அழைத்தும் எடுக்காமல் இருக்கும் அவன்  மீது ஆத்திரம் வந்தாலும் நேரில் காட்டுவதற்காக கட்டுப்படுத்தி வைத்திருந்தாள். அவள் எண்ணம் போல் திட்டு வாங்குவதற்காகவே அவசரமாக சடன் பிரேக் பிடித்து அவள் முன்பு வண்டியை நிறுத்தினான் கிருஷ்ணன். 

 

 

நாசியிலிருந்து வரும் உஷ்ண மூச்சுகளை எந்த பக்கம் விட்டாளோ கோபத்தோடு பின் இருக்கையில் அமர்ந்தாள். கண்ணாடியில் ஒரு முறை அவள் முகத்தை பார்த்தவன் வந்த வேகத்திற்கு அப்படியே எதிராக ஊர்ந்து சென்றான். தேர் போல் அசைந்து வருவதை அறிந்தாலும் மௌனம் காத்து ஒரு வார்த்தை பேசவில்லை. 

 

 

வாழை தோப்பிற்கு பின்புறம் வந்தவன் வண்டியை நிறுத்தினான். அவள் இறங்காமல் அப்படியே இருப்பதை அறிந்து கண்ணாடி வழியாக கெஞ்ச, “இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல.” என்று கொனட்டி  கொண்டே கீழ் இறங்கினாள்.

 

 

“ரெண்டு நாளா சரிஞ்ச மரம் அப்படியே இருந்துச்சு ஆருமா. வானம் வேற மழை பெய்யிற மாதிரி இருந்துச்சு. இப்படியே விட்டா நாசமா போயிடும்னு வெட்ட கிளம்பிட்டேன்.” நடந்து செல்பவளின் பின்னால் பொறுமையாக பேசிக் கொண்டிருந்தவன் இந்த முறை சடன் பிரேக் அடித்தான் அவள் வேகமாக திரும்பியதால்.

 

‌ 

“அதனால என்னை மறந்துட்டீங்க அதான சொல்ல வந்தீங்க மாமா.” என்றவளை அவன் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, மீண்டும் நடக்க தொடங்கினாள் வள்ளி பாண்டியனின் இளைய மகள் ஆராதனா.

 

 

கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். கூடவே தாய்மாமன் மகன் மீது காதலையும் படிக்க துவங்க, இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. தினமும் கல்லூரி விட்டு வந்ததும் அவள் முன்பு கிருஷ்ணன் நின்றே ஆக வேண்டும். இல்லையென்றால் அன்று இரவு முழுவதும் அவன் பாடு திண்டாட்டம் தான். இன்று அறியாப்பிள்ளை வேலையில் அதை மறந்திருக்க, சாமி ஆட துவங்கி விட்டாள்.

 

வாழை மர தோப்புகளுக்கு நடுவில் உள்ள வரப்பில் அமர்ந்தவள் பக்கத்தில் அவளை உரசிக்கொண்டு அமர்ந்தான் கிருஷ்ணன். உடனே அவள் விலக பார்க்க, “என் அத்த பெத்த ரத்தினமே போதும் டி நீ கொதிச்சது. நேத்து விட்ட மிச்சத்தை இன்னைக்கு முடிப்போம் வா.” என்றவன் அவளை நகர விடாதபடி நெருங்கி அமர்ந்துக் கொண்டான்.

 

 

“தள்ளுங்க! நேர்ல பார்த்தா மட்டும் நல்லா கொஞ்ச வேண்டியது. மத்த நேரமெல்லாம் கண்டுக்காம யாரோ மாதிரி சீன் போட வேண்டியது.” வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து நகர்ந்து அமர்ந்தாள்.

 

“என்னத்த டி உன்ன கண்டுக்காம இருந்துட்டேன்.” என்று ரோஷமாக அவள் முன்பு நெஞ்சை நிமிர்த்தியவன் கேட்ட பதிலில் சுருங்கிக் கொண்டான்.

 

“அன்னைக்கு வீட்டுக்கு வரும் போது தெரியாத மாதிரி கமுக்கமா இருந்தீங்க இல்ல.” என்றதில்.

 

 

“உன் அத்தை மாமா முன்னாடி இப்படி கொஞ்சுனா நல்லா இருக்காது ஆருமா.” என்றவன் அவளை சமாதானப்படுத்த பேச்சுவாக்கில் நெருங்கி அமர்ந்து கன்னம் கிள்ளினான்.

 

 

அதை தட்டி விட்டவள், “உங்கள நான் கொஞ்சம் சொல்லல. குறைஞ்சது ஒரு பார்வையாது பார்க்கலாம்ல. உங்கள பார்க்க ஆசையா வந்தா மூஞ்ச திருப்பிக்கிட்டு போறீங்க. அந்த கடுப்பே இன்னும் எனக்கு போகல அதுக்குள்ள என் ஃபோன எடுக்காம இன்னும் டென்ஷன் பண்ணிட்டீங்க.” என்றவள்  கொடுக்கும் அடிகளை வாங்கிக் கொண்டு பதமாக அவள் மடி சாய்ந்தான் கிருஷ்ணன்.

 

 

வீராப்பு எல்லாம் அவன் தன் மடியில் நிறையாத வரை தான் இருந்தது பெண்ணுக்கு. தானாக கைகள் அவன் தலையை சுற்றி மார்புக்கு வந்து விட்டது. கன்னம் உரசி கொண்டிருக்கும் கைகளை எடுத்து இதழ் முத்தம் கொடுத்தவன் அதை நெஞ்சில் வைத்துக் கொண்டான்.

 

 

இருவரும் பேசிக் கொள்ளாமல் அழகான தருணத்தை ரசித்துக்கொண்டிருக்க, “மாமா நமக்கு தான் வீட்டுல எந்த எதிர்ப்பும் வராதே அப்புறம் எதுக்கு இன்னும் பேசாம இருக்கீங்க.” தலைக்கோதிக்கொண்டே தன் மனதில் இருப்பதை அவன் இடம் கொட்ட,

 

“வீட்டுல எந்த பிரச்சினையும் வராது உண்மை தான்.‌ ஆனா, எனக்கு ஒரு தங்கச்சி இருக்காளே…” என்று வார்த்தையை இழுப்பது போல் அவள் கன்னத்தையும் சேர்த்து இழுத்தான்.

 

 

“ஏன்? யாழு என்ன சொல்ல போறா. அவளுக்கு என்னை பிடிக்காதா  மாமா.” 

 

“உன்ன பிடிக்காம இருக்குமா ஆரு. வீட்டுல தங்கச்சிய வச்சுக்கிட்டு அண்ணன் கல்யாணம் பண்றது முறையா இருக்காது அதுக்கு தான் சொல்றேன்.”

 

“நான் இப்பவே உங்களை கல்யாணம் பண்ண சொல்லல மாமா. வீட்டுல நம்ம விஷயத்தை சொல்லலாம்னு தான் சொல்றேன்.” 

 

“அதுக்கு இப்ப என்னடி அவசரம்.”

 

“அவசரம் இல்லன்னு ஏன் நினைக்கிறீங்க மாமா. நாளைக்கு ஏதாவது நடக்கிறதுக்குள்ள நம்மளே பார்த்து முறையா சொல்றது நல்லா இருக்கும் மாமா.”

 

இரு வீட்டிலும் சம்மதம் நிச்சயம் கிடைக்கும் என்பதை முழுவதுமாக அவள் மனம் உணர்ந்த பின்னும் ஏனோ காதல் கைகூடாமல் போய்விடும் என்ற பயம் உருவாவதை தடுக்க முடியவில்லை.

 

“சொல்லிக்கலாம் ஆரு.” என்றவன் அவள் வயிற்றில் முகம் புதைக்குமாறு திரும்பி படுத்தான். 

 

அவள், அவன் சேட்டைகளை தடுப்பதற்காக தலையில் அடிக்க, “ஆஆஆ மாமா வலிக்குது.” என்று துடிக்க ஆரம்பித்தாள் வயிற்றில் காதலன் பல் தடம் பதிந்ததில்.

 

“மாமா” என்று ஆரம்பித்தவளை அவன் தனக்குள் அடக்கிக் கொள்ள, வழக்கம் போல் மனதில் தோன்றிய எண்ணங்களை அடக்கிக் கொண்டாள் தனக்குள்.

 

 

விளையாடி விலகியவன் அவளை அழைத்துக்கொண்டு புறப்பட, “யாழு வந்துட்டாங்களா மாமா” அப்போது தான் அவளைப் பற்றி விசாரிக்கவே செய்தாள் ஆராதனா.

 

“வந்துட்டா ஆரு” என்றவன் பாண்டியன் வீட்டி பின்பக்க வழியாக வண்டியை நிறுத்தினான்.

 

 

“வழக்கம் போல அண்ணன் வீட்டுக்கு போயிட்டு பெரிய மாமாவ கோபப்படுத்திட்டாங்க அப்படித்தான.”  அவன் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்பதை அவள் முன்னரே யுகித்துக் கூற, சிரிப்போடு தலையசைத்தான்.

 

இன்னும் பெரிய மாமா எத்தனை நாளைக்கு தான் இப்படி பிடிவாதமா இருக்க போறாருன்னு தெரியல மாமா.” என்ற கவலையோடு அவள் முடிக்க,

 

“சீக்கிரமா எல்லாம் மாறிடும் ஆரு. நீ கவலைப்படாம கிளம்பு.”என்றான்.

 

  காதலனுக்கு கையசைத்து ஒன்றும் அறியாத பிள்ளை போல் பின் பாதை வழியாக வீட்டிற்குள் நுழைந்தாள். வருங்காலத்தில் நுழைய இடமில்லாமல் போகும் என்பதை அறியாது.

 

அம்மு இளையாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
19
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *