699 views

அத்தியாயம் 4 

குளிக்கச் சென்றவன் சொல்லி விட்டுப் போனதைக் கேட்டு ஆடிப் போனாள் அதிரூபா.

“ஹனிமூனா!?”

ஆற அமர குளித்து விட்டு வெளியே வந்த பிரித்வியிடம்,
“ஹனிமூன் ப்ளான்லாம் போட உனக்கு டைம் இருக்கா என்ன?”

என்று அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.

“டைம் இருக்கு. ஆனா உனக்கு அதுல இஷ்டம் இல்லை. சோ, ப்ளான் கேன்சல்ட்”

தன் சட்டைப் பொத்தான்களைப் போட்டு விட்டு, அவளருகில் அமர்ந்தான்.

‘ஊஃப்’ என்று மனதினுள் நிம்மதி அடைந்தாள்.

“நானும் நேர்ல போய் ஆஃபிஸ் வேலையைப் பாக்கனும். சொந்தக்காரவங்க வீட்டுக்கு விருந்துக்கு எல்லாம் போகனும்.அதெல்லாம் முடிச்சுட்டா வேலை தான் ” என்று இவன் பட்டும் படாமல் பேசினான்.

“இன்னும் விருந்துக்குப் போகனுமா?!” அதற்கும் அதிர்ச்சி ஆனாள் அதிரூபா.

“ஏன் உங்க வீட்டு சொந்தம், எங்க வீட்டு சொந்தம்னு நிறைய பேர் இருக்காங்க.கண்டிப்பாக போயாகனும்” – பிரித்வி.

“சரி.அதுக்கப்றம் எந்த சம்பிரதாயமும் இல்லை தான?”

“இருந்தா கேட்டு சொல்றேன்”

அதற்குப் பிறகு வந்த நாட்களில் மறு வீட்டிற்குச் சென்று களைத்துப் போயினர் இருவரும்.

🌸🌸🌸🌸

மகேஸ்வரன் மற்றும் சகுந்தலாவிடம் வேலைக்குச் செல்வதைப் பற்றிக் கூற வேண்டும் என்று அவர்களிடம் சென்றாள் அதிரூபா.

“அத்தை, மாமா நான் நாளையில் இருந்து வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்”

மகேஸ்வரன், “ஆமால்ல ரூபா. உன்னோட  லீவ் முடிஞ்சுருச்சே. சரி சரி போய்ட்டு வாம்மா” என்றார்.

சகுந்தலாவும், “பிரித்வியும் கம்பெனிக்குப் போகனும்னு சொல்லிட்டு இருந்தான். நீ வேணும்னா அவனோட கம்பெனியில் ஜாயின் பண்ணிடு” என்றார்.

ஆனால் அதில் தான் இவளுக்கு விருப்பம் இல்லையே!

“வேண்டாம் அத்தை. இந்த வேலைப் பிடிக்கலனா அங்க ஜாயின் பண்ணிக்கிறேன்” என்று நிஜமான காரணத்தைக் கூறிய மருமகளைப் பார்த்துப் புன்னகைத்தவர்கள்,

“உனக்கு கன்வீனியன்ட் ஆக இருக்கிறதை செய்மா” என்று சொல்லி விட்டனர்.

அதிரூபாவும் தன் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு விடுப்பை நீக்கி விடுமாறு கூறி, அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வருவதாகவும் சொல்லி விட்டாள்.

பிரித்வியோ அவள் வேலைக்குச் செல்லப் போகும் நாளுக்கு முந்தைய நாளே தன் கம்பெனிக்குச் செல்லத் தயாரானான்.

கோட், சூட் அணிந்து, தன்னுடைய கேசத்தை ஒருபுறம் நன்றாக வாரி விட்டுக் கொண்டு இருந்தவனைப் பார்த்த அதிரூபா,
“என்ன இன்னைக்கே கம்பெனிக்குப் போறீங்களா?” என்றாள்.

கேசத்தைக் கோதி முடித்து விட்டு, டையை சரி செய்தவன்,
“ஆமா.ஹனிமூன் தான் இல்லன்னு ஆயிடுச்சு. சோ, எப்போ போனா என்ன?”
என்று கூறினான்.

“ம்ம்.. போய்ட்டு வாங்க.சாப்பிட்டாச்சா?”

“பார்றா…! அதிசயமா இருக்கு” நக்கலடித்தவன்,

“இல்லை.இனிமேல் தான். என்ன டிஃபன்?” என்று வினவினான்.

“ரவா தோசை, சட்னி. சாப்பிட்டுட்டே கிளம்புங்க” என்று அவனுடன் உணவருந்த வந்தாள் அதிரூபா.

அங்கே ஏற்கனவே டைனிங் டேபிளில்,
உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

“வா பிரித்வி. நாளைக்கு ஆஃபிஸ் போடா ன்னு சொன்னா கேட்கவே மாட்ட தான?” செல்லமாகக் கடிந்து கொண்டே உணவைப் பரிமாறினார் சகுந்தலா.

கல்லூரிக்குச் செல்லத் தயாராகி அமர்ந்திருந்தாள் லயா.

தங்களுடைய செல்பேசியை ஓரமாக வைத்து விட்டு,
அண்ணனும், தங்கையும் உணவருந்த ஆரம்பித்தனர்.

மகேஸ்வரன் வழக்கம் போல மகனை வம்பிழுக்க எண்ணி,
“முடியை என்ன தான் பண்ணுவியோ பிரித்வி? கோட் – ஐப் பாரு! நீட் ஆகவே இல்லை ” என்றார்.

மாமனார் கூறியதைக் கேட்ட அதிரூபாவோ கணவனைக் கண்களால் ஆராய்ந்தாள்.

உடையை வைத்து அடுத்தவரை எடை போடும் பழக்கம் அவளுக்கு இல்லை.

இருந்தாலும் இன்றைக்குத் தன் மணாளன் தனித்துவமாகத் தெரிந்தான் அந்த ஆடையில்.

“அவர் நல்லா தானே இருக்கார் மாமா” என்று வார்த்தையை விட்டாள் மருமகள்.

உடனே அனைவரையும் பார்த்தாள், அவர்களோ, நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்.

லயாவும் அண்ணியைச் சீண்டல் பார்வை பார்த்தாள்.

ஆனால் பிரித்வி மட்டும் ‘போனா போகுதுன்னு சொல்றா பாரு’ என்று அவளை அர்ச்சித்தான்.

“அப்படியா மருமகளே! அப்போ சரி! நீ நல்லா தான் இருக்க பிரித்வி” என்று மகேஸ்வரன் கூறியதும் சிரிப்பு பரவியது.

லயா தொடர்ந்து புன்னகைக்கவும், அவளிடம் கண்களால் கெஞ்சினாள் அதிரூபா.

“சரண்டர் அண்ணி” என்று லயா கூறிவிட்டு அவருடைய உணவைக் காலி செய்தாள்.

பிரித்விக்குமே வெட்கம் தோன்றிட முயன்றளவு வேகமாக உண்டு விட்டு எழுந்தான்.

அந்த வேகத்தைப் பார்த்து, “எம்.டி சார்! நீங்க ஆஃபிஸூக்கு ஹாஃப் அண்ட் ஹவர் முன்னாடியே போகப் போறீங்க! அது லேட் கிடையாது. சோ, மெல்லவே கிளம்புங்க” என்று லயா கலாய்த்தாள்.

“லயா அண்ணனைக் கிண்டல் செய்யாத” என்று ஒப்புக்கு மிரட்டிய பிரித்வி கண்களால் மனைவியிடம் விடைபெற்றான்.

இதையும் அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

ஆனால் இதற்கு மேல் அவர்களைக் கலாய்க்க வேண்டாம் என்று நினைத்து,

“பிரித்வி பத்திரமாக போய்ட்டு வா. லயா அப்படியே அண்ணா கூடவே காலேஜூக்குப் போய் இறங்கிக்கோ” என்றார் சகுந்தலா.

“பாய் மா, ப்பா ” என்று இருவரும் சென்று விட,

“நீயும் நாளையில் இருந்து ஆஃபிஸூக்குப் போய்டுவ தான ரூபா?”

சகுந்தலா அவ்வாறு கேட்டதற்கு காரணம்  இவர்கள் மூவரும் இல்லையென்றால், வீடே வெறிச்சோடிக் காணப்படும்.

அது மட்டுமில்லாமல், மாலை வரை இவர்களின் வரவிற்காக காத்திருப்பர் மகேஸ்வரனும், சகுந்தலாவும்.

அந்த சோகம் தான் அவருக்கு. மற்றபடி மருமகள் வேலைக்குப் போகக் கூடாது என்ற எண்ணமில்லை.

“ஆமா அத்தை. ஆனால் எனக்கு கொஞ்ச நாளைக்கு தான் ஆஃபிஸூக்குப் போற மாதிரி இருக்கும். அதுக்கப்புறம் வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்டுப் பார்க்கிறேன் அத்தை”

“தாலி பிரிச்சுக் கோர்க்குற ஃபங்க்ஷன் முடிச்சுடட்டும்னு நினைச்சேன் மா. இருந்தாலும் நீ வேலைக்குப் போ. இந்த ஃபங்க்ஷனை எல்லாருக்கும் லீவ் இருக்கிற சமயத்தில் வைப்போம்”

‘அந்த விஷயம் வேற இருக்கோ!! இது தெரியாம இந்த பிக்காசோ வேலைக்குப் போய்ட்டானே!!’

கணவனின் பெயர் பிரித்வி என்பதால், முதல் எழுத்தை வைத்து, செல்லப் பெயர் வைத்திருக்கிறாள்.

🌸🌸🌸🌸

“பாய் லயா”

தங்கையைக் கல்லூரியில் இறக்கி விட்டு விட்டு, தன் அலுவலகத்திற்குச் சென்றான் பிரித்வி.

கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவனை மிரட்சியுடன் பார்த்தன சில கண்கள்.

அவர்கள் வேறு யாருமில்லை பிரித்வியால் வேலையில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் வேலை நீக்கம் செய்யப்பட்ட இருக்கும் பணியாளர்கள் தான்.

வீட்டில் இருப்பதைப் போல கலகலப்பாக இருந்தால் இங்கு வேலைக்கு ஆகாது என்று தன் தொனியை மாற்றிக் கொண்டான் பிரித்வி.

ரிசப்ஷனிஸ்ட்டில் இருந்து, வேலை செய்து கொண்டிருந்த எல்லாரும் பவ்யமாக வணக்கம் தெரிவித்தனர்.

தன் பின்னாலேயே வந்த காரியதரிசியிடம்,
“மிஸ்.ஷாஷா ! நான் ஃபயர் பண்ணிடுவேன்னு சொன்னவங்க எல்லாம் கொடுத்த வேலையை முடிச்சுட்டாங்களா?” என்று கேட்டுக் கொண்டே இருக்கையில் அமர்ந்தான்.

“எஸ் சார். அவங்களோட வொர்க்கை பெர்ஃபெக்ட் ஆக முடிச்சுக் குடுத்துட்டாங்க. அது சம்பந்தப்பட்ட ஹார்ட் காப்பி (hard copy)” என்று கோப்பை அவனிடம் கொடுத்தவள்,
“சாஃப்ட் காபி (soft copy) உங்களுக்கு மெயில் அனுப்பிட்டேன் அண்ட் பென் டிரைவ் – லயும் சேவ் பண்ணியிருக்கோம் சார்” என்று பென் டிரைவை அவன் புறம் வைத்தாள் ஷாஷா.

“அவங்களை உள்ளே வரச் சொல்லிட்டு நீங்க உங்க ப்ளேஸ்க்குப் போங்க ” என்றான் பிரித்வி.

“ஓகே சார்”

ஷாஷா வெளியே போய் பிரித்வியின் உத்தரவைச் செய்து முடித்து விட்டு தன் இருக்கைக்குச் சென்று விட்டாள்.

இங்கு உள்ளே நுழைவதற்கு முன் அனுமதி பெற்ற ஆறு பேரும் வியர்வை படிந்த முகத்துடன் பரிதாபமாக பிரித்வியைப் பார்த்தனர்.

“சோ… உங்களை ஃபயர் பண்ணிடுவேன்னு சொன்னா தான் இப்படி ஃபயர் வர்ற அளவுக்கு வேலை பார்ப்பீங்க? இல்லன்னா யாருக்கு வந்த வேலையோ ன்னு விட்ருவீங்க அப்படித்தான?”

அவன் இவ்வாறு சீறியதும் அறுவரும்
ஆடிப் போயினர்.

“சொல்லுங்க?” கர்ஜிக்கவும்,

ஒருவர் முன் வந்து, “இந்த தடவை எக்ஸ்க்யூஸ் குடுங்க சார்… ப்ளீஸ் ! எல்லாரும் பண்ணத் தப்பைச் சரி பண்றோம். இனிமே ஏனோ தானோ என்று வேலைப் பார்க்க மாட்டோம்” என்று மன்றாடினார்.

அவர் ஆரம்பித்து வைத்து விட்டதும் மற்றவர்களும்,

” ஆமா சார்.. ப்ளீஸ் ” என்று கூச்சலிட்டனர்.

“ஸ்டாப் இட் ! உங்க மேல ப்ளாக் மார்க் வந்திருச்சு. இனிமேல் நீங்க என்னத் தப்பு பண்ணாலும் அடுத்த நிமிஷமே வேலையை விட்டு அனுப்பிடுவேன். அப்பறம் வேற எந்த கம்பெனிக்கும் வேலைக்குப் போக முடியாது” என்று கடுமையாக கூறினான் பிரித்வி.

அதைக் கேட்டு வெலவெலத்துப் போனவர்கள்,
“இல்லை சார்… நாங்க இனிமேல் எந்த தப்பும் பண்ணவே மாட்டோம்” என்று அவனுக்கு உறுதியளித்தனர்.

“சரி போய் வேலையைப் பாருங்க” அனுப்பி வைத்தவன் ஷாஷாவை அழைத்தான்.

“இவங்களை மானிட்டர் பண்ணிக்கிட்டே இருங்க.ஆறு பேர்ல யார் மிஸ்டேக் செஞ்சாலும் எனக்கு உடனே அப்டேட் பண்ணுங்க” என்று கூறினான்.

அவனுக்கு ஊரறிய திருமணம் நடந்தது என்பது  அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அதை இப்போது வரை வெளிப்படுத்தாமல் அலுவலக வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்த பிரித்வியைப் பார்த்து அயர்ந்து போனாள் ஷாஷா.

தப்பித் தவறிக் கூட அவனுடைய மனைவியைப் பற்றிக் கூறுங்கள் என்று கேட்டு விட முடியாது ஏனெனில், அவனுடைய பர்சனல் விஷயங்களை அலுவலகத்தில் இருப்போருடன் பகிர்ந்து கொள்ள மாட்டான் பிரித்வி.

ஊடகங்களின் மூலமாகத் தான் திருமண விஷயமே இங்கு இருப்பவர்களுக்குத் தெரிந்தது, அப்படியிருக்க இவர்கள் இதையெல்லாம் கேட்டால் அவனிடமிருந்து பதில் வராது, கோபம் தான் வரும்.வேலையை விட்டுத் தூக்கவும் தயங்க மாட்டான்.

அதனாலேயே வாயைத் திறவாமல் சென்று விட்டாள் ஷாஷா.

“இவன் ஒருத்தன் எப்போ பார்த்தாலும் நம்மளை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கான்”

அவன் பிரித்வியின் தொழில் போட்டியாளன்…பெயர் திவாகரன்.

சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இவனது புகைப்படத்தில் “கங்கிராட்ஸ் ஃபார் யுவர் வெட்டிங்” என்று வாழ்த்து தெரிவித்து இருந்தான்.

அதைப் பார்த்து விட்டுத் தான் பிரித்வி இவ்வாறு கூறினான்.

திவாகரனையும் எளிமையாக நினைத்து விட இயலாது. சில சமயங்களில் தொழிலில் அவனது எதிர் தாக்குதலை முறியடிக்கப் பிரித்வி ரொம்பவே சிரமம் எடுத்திருக்கிறான்.

அவனது தாக்குதல்கள் ஓரளவு பிரித்விக்குத் தெரிந்து விட்டதால், இப்போது திவாகரனை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

எப்போது? எப்படி பழி வாங்கிடுவானோ? என்ற சிந்தனை மட்டும் மூளையின் ஓரத்தில் உறங்கிக் கொண்டு இருக்கும்  பிரித்விக்கு.

– தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்