உடலில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் நிறைந்து நிற்கும் குரல்! உயிரின் அடியாழம் வரை தொட்டுத் தீண்டும் கம்பீரம்! நாசியில் என்றும் நீங்காமல் தங்கி இருக்கும் ஜாக்குவார் பிளாக் பெர்ஃபியூமின் மாண்டரின், கிரீன் ஆப்பிள் மற்றும் சந்தானம் கலந்த வாசம்!
இவையனைத்துமே தன்னெதிரில் நிற்பவன் யாரென்று உணர்த்தி விட்டாலும், இன்னும் கண்களால் பார்த்து உறுதி செய்து கொள்வதே மிச்சம்.
ஆனால் அவனைப் பார்க்க இயலுமா? பார்த்து விட்டால்… கைகளெல்லாம் மீண்டும் நடுங்கியது. உள்ளம் வேதனையில் துடித்துப் போனது.
‘ரிலாக்ஸ் ஆரா. இதை நீ ஃபேஸ் பண்ணி தான் ஆகணும். அவன் கேவலம் என் உடம்புக்காக என் கூடப் பழகுனவன். தேவையானதை எடுத்துக்கிட்டதும் என்னை நடுத்தெருவுல தூக்கி எறிஞ்சவன். அவனைப் பார்த்து எந்த விதமான ரியாக்ஷனும் கொடுக்கத் தேவையில்லை.’ என்று தனக்குத்தானே திடம் சொல்லிக்கொண்டவளுக்கு இப்போது நடுக்கம் நின்றிருந்தது.
சில பல ஆழ்ந்த பெருமூச்சுகள் எடுத்துக்கொண்டவள், மெல்ல தலையை நிமிர்த்தினாள்.
அவனை எப்போதுமே அண்ணாந்து தான் பார்க்க இயலும். அதில் அவனது உயர்த்திற்கேற்ப தானாக அவளது தலை உயர்ந்தது.
பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து, அவள் மீதிருந்த உணர்வற்ற பார்வையை நீக்காமல், அவளைச் சந்திக்கும் நொடியில் ஒற்றைப் புருவம் உயர்த்தினான் மேகன் உவேந்திரா.
அவள் பார்த்த கணத்தில் நக்கல் புன்னகை ஒன்றை சிந்தியவன், “வெல்கம் இமை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு வெல்கம். அதுவும் என்னோட வெட்டிங்க்கு உன்னை வெல்கம் பண்றது சோ நைஸ்ல.” என்றான் எகத்தாளமாக.
எந்த உணர்வையும் பிரதிபலிக்கக்கூடாதென்று தாக்குப் பிடித்தவளின் முகத்தில் அதிர்வு ரேகைகள்.
முதலில் ‘இவனுக்கு எப்படி தமிழ் தெரியும்’ என்ற திகைப்பு தான்.
‘ம்ம்க்கும் நீ அவனுக்காக ஹிந்தி கத்துக்கிட்டது மாதிரி அவனும் கத்திக்கிட்டுருப்பானா இருக்கும்’ என்று மனசாட்சி கேலி புரிய,
‘நான் ஒன்னும் அவனுக்காகக் கத்துக்கல. எனக்காக அவன் கத்துக்கிற அளவு அவனுக்கு ஒன்னும் என் மேல காதல் பொங்கி வழியல.’ என்று மனதை தட்டி அடக்கியவளுக்கோ அதைவிடப் பெரிய திகைப்பு அவனுடைய திருமணத்திற்கு தான் புகைப்பட கலைஞராக வந்திருப்பது.
‘தெரிந்தே தன்னை வரவைத்திருக்கிறான். செய்யக்கூடியவன் தானே. பாஸ்டர்ட்.’ என்று கோபத்தில் கொந்தளித்தவள், அவனை விழிகளால் சாடினாள்.
ஆஷாவோ “உனக்கு இந்தப் பொண்ணை தெரியுமா மேகன்” என்று பேரனிடம் கேட்க, “எஸ் தாதி. பஹுஹுஹுத் அச்சா” என, ‘ரொம்ப நல்லா’ என்ற வாசகத்தை வெகுவாய் அழுத்திக்கூறியவனின் காந்த விழிகள் பாவையின் உச்சி முதல் உள்ளங்கால் வரை மிச்சம் வைக்காமல் அளவெடுத்தது.
அவன் கூறிய தொனியில் தேகமெல்லாம் எரிந்தது ஆராவிற்கு.
விபினோ குழப்பத்துடன் “உனக்கும் இவரைத் தெரியுமா ஆரா?” எனக் கேட்க,
விரக்தி நகை பூத்தவள், “மே பி. தெரிஞ்சுருக்கலாம். ஆனா பெருசா ஞாபகம் இல்லை.” என்றாள் குத்தலாக.
எப்போதும் போல அவளது திமிர்த்தனத்தை அதிகபட்ச ரசனையுடன் ஏறிட்ட மேகன், “அதுக்கென்ன இமை. இங்க இருந்து கிளம்புறதுக்குள்ள எல்லாத்தையும் ஒன்னொன்னா ஞாபகப்படுத்திட்டா போச்சு.” என்று கேலிப் பார்வை வீச, அவள் பற்களை நறநறவெனக் கடித்தாள்.
அப்படியே இங்கிருந்து ஓடி விடலாமா என்றிருந்தது அவளுக்கு.
ஆனால், அவள் அங்கிருந்து நகரவே இயலாதவாறு, நிரவிடம் திரும்பிய மேகன், “கெஸ்ட் ஹவுஸ் ரெடியா?” எனக் கேட்க,
அதுவரை பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்த நிரவி, “ரெடி சார்.” என்றாள் வேகமாக.
“குட்! ரெண்டு பேரையும் அங்க தங்க வை.” என்றதும், பிரதீஷ் “அப்போ ஆரா?” எனப் பதறிக் கேட்டான்.
“அது ஜென்ட்ஸ் கெஸ்ட் ஹவுஸ். உங்க போட்டோகிராஃபர்க்கு தனி இடம் இருக்கு எப்பவுமே.” என்றவனின் கூற்றில் சில்மிஷம் மிதந்தது.
“கெஸ்ட் ஹவுஸ்ல கூடவா ஜென்ட்ஸ் கெஸ்ட் ஹவுஸ் லேடீஸ் கெஸ்ட் ஹவுஸ்ன்னு இருக்கு. பரவாயில்ல சார். இவள் எங்க கூட இருந்துக்கட்டும்.” என்று விபின் அவள் கையைப் பிடித்துக்கொள்ள,
அவனையும் அவன் பிடித்திருந்த கையையும் பார்த்த மேகனுக்கு சுள்ளென ஒரு வித ஆத்திரம் எழ, “வீடியோ எடுக்கக் கை இருக்கணுமா? இல்ல கையில்லாமலேயே மேனேஜ் பண்ணிக்குவியா?” என்ற வார்த்தைகளில் ஆரா விருட்டென விபினிடமிருந்து கையைப் பிரித்துக் கொண்டாள்.
அத்தனை நேரமும் பேசுவது ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றிருந்த பிரதீஷ் தான், “கல்யாணத்துக்கு வந்தா நான் வெஜ் போடுவாங்கன்னு பார்த்தா நம்மளயே போட்டுருவாங்க போல.” என்று எச்சிலை விழுங்க, விபின் யோசனையுடன் தோழியையும் மேகனையும் பார்த்தான்.
எதுவோ சரி இல்லையெனத் தோன்ற, நிரவி “வாங்க உங்களுக்கு ரூமை காட்டுறேன்.” என்று ஆடவர்களை அழைத்தாள். விபின் ஆராவைப் பார்க்க, அவள் செல்லச் சொன்னதில், இருவரும் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்றனர்.
ஆஷா பேரனை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு உள்ளே சென்று விட, அங்கு அவனும் அவளும் மட்டுமே!
அருகில் அனைவரும் இருக்கும்போது இருந்த தைரியம் இப்போது இல்லாதது போலத் தோன்ற, “நான் எங்க தங்குறது?” என்றாள் மெல்லிய குரலில்.
அவளை நோக்கி அடியெடுத்து வைத்தவன், “ஓ மை டியர் இமை. நீ ஸ்டே பண்ண என் இமையே போதுமே!” கவிநயத்துடன் கூறியபடி அவளை நெருங்கி விட்டதில், அவசரமாகப் பின்னால் நகர்ந்தாள் ஆரா இமையாள்.
அந்நேரம் அவனை நோக்கி வந்தாள் லிரிஷா.
இறுக்கமான டீ – ஷர்ட்டும், முக்கால் ஜீன்ஸ்சும் அவளது வடிவத்தை அழகாய் எடுத்துக் காட்ட, “ஹே ஸ்வீட் ஹார்ட். இன்னைக்கு பர்ச்சேஸ் போகணும்ன்னு சொல்லிருந்தேன்ல. கம் லெட்ஸ் கோ” என்று மேகனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
உள்ளுக்குள் முணுக்கெனக் கோபம் கொழுந்து விட்டு எரிந்தாலும் அதனை அழகாய் வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்ட ஆரா, “இவங்க உங்க பியான்சியா மேகா…” எனக் கூற வந்தவள் அவன் பெயரைத் தவிர்த்து “மிஸ்டர் மேகன்” என்று கூறிட, லிரிஷா “ஹு ஆர் யூ?” என்று அவளைப் பார்த்தாள்.
“நான் போட்டோகிராஃபர் மேம். இஃப் யூ டோன்ட் மைண்ட். உங்களைச் சேர்ந்த மாதிரி ஒரு போட்டோ எடுத்துக்கவா?” என்று நக்கலாக மேகனைப் பார்க்க, அவன் விழி இடுங்க அவள்மீது தீப்பார்வை வீசினான்.
அது ஆராவை சற்று திருப்திப்படுத்த, உடனைடியாகப் பையிலிருந்து கேமராவை எடுத்தவள், “இன்னும் கொஞ்சம் க்ளோசா நில்லுங்க மேம். மிஸ்டர் மேகன் மேடம் தோள் மேல கையைப் போடுங்க. கமான். கிவ் மீ அ ரொமான்டிக் போஷர்.” என்று தனது வாழ்வில் அவனது முக்கியத்துவம் இவ்வளவு தான் என்பதை எடுத்துக்காட்ட அவள் செய்த செயல்கள் அவனது சினத்தைத் தூண்டி விட்டது.
இவளே தானே ஐந்து வருடங்களுக்கு முன்பு, யாரோ ஒரு வெளிநாட்டுப் பெண் இவனுடன் நான்கு அடி தள்ளி நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டதற்கு கூட வெகுவாய் கோபித்துக் கொண்டு, சண்டை பிடித்தது!
அரை நிமிடத்திற்கும் மேலே அவளைக் கூர்மையாய் பார்த்த மேகனின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது.
‘யூ ஷுட் பே ஃபார் திஸ் இமை’ என இறுகியவனின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை உணராமல் அவனை உதாசீனப்படுத்தி விட்ட நிம்மதியில் அவளது முகம் மிளிர்ந்தது.
அந்நேரம் அங்கு வந்த நிரவி, “வாங்க ஆரா உங்க ரூமைக் காட்டுறேன்.” என்று அழைக்க, ஆடவனை முறைத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
“என்னடா இது. ஆராவை தனியா தங்க வச்சுட்டான்.” என்று பிரதீஷ் வருத்தமாகக் கேட்க, விபின் அவளுக்குப் போன் செய்தான்.
அப்போது தான், அரண்மனைக்குப் பின் பக்கம் இருக்கும் ஒரு சிறிய காட்டேஜிற்கு வந்தாள் ஆரா.
அழகிய வேலைப்பாடுகளும், முற்றத்தில் மலர் தோட்டமும் விழிகளை வியக்க வைக்க, உள்ளே சென்றவள் அசந்து விட்டாள்.
அங்கு ஒரு பெரிய அறையும், அதனை ஒட்டிச் சிறிய ஹாலும், கூடவே சிறு அடுக்களையும் அமைந்திருந்தது.
அறையின் சுவர் முழுக்க பல இயற்கை காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் இருக்க, சில இடங்கள் வெறுமையாய் காட்சியளித்தது.
‘இங்கயும் போட்டோஸ் இருந்தா நல்லா இருக்கும்’ ஆராவின் எண்ணத்தைக் கலைப்பது போல நிரவி அழைத்தாள்.
“கிட்சன்ல குக் எப்பவும் அவெய்லபிளா இருப்பாங்க ஆரா. உங்களுக்கு என்ன வேணும்ன்னாலும் கேளுங்க. இப்போ சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.” என்றதும், “இதெல்லாம் எதுக்கு நிரவி?” என்றாள் தயக்கமாக.
“இது உவேந்திரா சாரோட ஆர்டர் ஆரா. சோ மறுக்கவே முடியாது” என்று தலையை ஆட்டிக்கொள்ள, “கேட்கணும்னு நினைச்சேன். யாருங்க அந்தத் தெய்வம்?” எனக் கேட்டவளுக்கு பாவம் மேகனின் முழுப்பெயர் தெரியாது.
“கிண்டல் பண்ணாதீங்க ஆரா. இவ்ளோ நேரம் உவேந்திரா சார்கிட்டயே பேசிட்டு வந்துட்டு தெரியாத மாதிரி கேக்குறீங்க.” என்றவள் அவனது பெயரைக் கூறியதில், தன்னை வரவழைத்தது மட்டுமே அவனது திட்டமென எண்ணி இருக்க, இங்குத் தன்னை ஒவ்வொன்றிற்கும் ஆட்டுவிப்பதும் ஆட்டுவிக்கப்போவதும் அவன் மட்டுமேயெனப் புரிந்து இதயம் சில்லிட்டது.
நிரவி கிளம்பிய பிறகும் அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
“இப்போ எதுக்கு இந்த மாதிரி எனக்குப் படம் காட்டிட்டு இருக்கான். ‘நான் அரண்மனைல இருக்க வேண்டிய ராஜா. உன்னை அந்தப்புரத்துல வேணாலும் வச்சுப்பேன். அரண்மைக்குள்ள தேவை இல்ல’ன்னு சொல்லாம சொல்றானாமாம்.” எனக் கோபம் பொங்க கருகியவளுக்கு, அந்த இடத்தில் இருக்கவே ஒப்பவில்லை.
அந்நேரம் விபின் போன் செய்ததில், அவனிடம் விவரம் கேட்டுக்கொண்டு நண்பர்களைத் தேடி சென்று விட்டாள்.
அவர்கள் இருந்த கெஸ்ட் ஹவுஸும் ஒன்றும் குறைவாக இருக்கவில்லை தான். ஆனால், அதனைவிட ஒரு படி அதிகமாய் இருந்தது அவளது இருப்பிடம்.
“என்ன மச்சி நம்மளை பிரிச்சு விட்டுட்டாங்க. ஏதோ ஸ்கூல்ல செக்ஷன் பிரிச்சு விட்ட மாதிரி இருக்கு” என்று பிரதீஷ் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டான்.
தோழியின் முகத்தில் இருந்த வேதனையைக் கண்டுகொண்ட விபின் சில நொடிகள் அவளை அமைதியாகப் பார்க்க, முயன்று அவனைப் பாராமல் தவிர்த்தாள்.
ஒரு கட்டத்தில் அது முடியாமல் போக, கண்ணை இறுக்கி மூடித்திறந்தவள், “ஆமா நான் லவ் பண்ணுனது அவனைத்தான். இது தான உன் மூளைக்குள்ள குடைஞ்சுட்டு இருக்கு.” என்றதில்,
“கெஸ் பண்ணிட்டேன்.” என்ற நண்பனின் கூற்றில் மீண்டும் அமைதியாகி விட்டாள்.
பிரதீஷ் தான், “என்னது லவ்வா? இது எப்ப… என்னடா நடக்குது இங்க” என்று இருவரையும் முறைக்க, “எனக்கும் முழுசா எதுவும் தெரியல மச்சி. ஆனா, யாரையோ லவ் பண்ணுனான்னு மட்டும் தெரியும்.” என்றதில், பிரதீஷ் அவளைக் கடுமையாக முறைத்தான்.
“ஓஹோ… நமக்குள்ள தனி தனி பெர்சனல் வேற இருக்கோ. நான் தான் அடிமுட்டாளா ஓபன் லைப்ரரியா இருந்துட்டேன் போல.” என்று ஆதங்கம் பொங்க கேட்க, ஆராவின் கண்ணில் நீர் நிறைந்து விட்டது.
“ஏன் மச்சி இப்படி பேசுற…” கமறலுடன் அவனைப் பார்க்க,
“வேற எப்படி பேசச் சொல்ற ஆரா. நீ கல்யாணம் வேணாம்ன்னு ஒத்த கால்ல நிக்கும்போது கூட, பிஸினஸுக்காகத் தான்னு நினைச்சேன்.” என்று புருவம் சுருக்க,
“இப்போ யாரு அவனுக்காகக் கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொன்னா? அவனை நான் மறந்துட்டேன் எப்பவோ.” என்றாள் திடமாக.
“ஆனா நீ அவனைப் பார்த்த பார்வையும் அவன் உன்னைப் பார்த்த பார்வையும் மறந்த மாதிரி தெரியலையே.” என விபின் தாடையை தடவிய படி கூற,
“அதுவும் இல்லாம, அவன் உன்னைத் தெரியாத மாதிரி விட்டுருந்தாலும் பரவாயில்ல. ரொம்ப உரிமையாவுல பேசுறான்” என்று பிரதீஷ் அடித்துக் கொண்டதில், “உடம்பு முழுக்க திமிரு வேற என்ன?” என்றாள் கோபத்துடன்.
“அது சரி… நாங்க தான் எப்பவும் உன் பின்னாடி வால் பிடிச்சுட்டுத் திரியுவோமே. அப்பறம் எப்படி அவனை லவ் பண்ணுன. எந்த கேப்ல பண்ணுன.” என்ற ப்ரதீஷின் கேள்வியில் அவளது இதழ்கள் தானாகப் புன்னகை பூத்தது.
அவனைப் பார்த்த கணம் இப்பொழுதும் மனதில் பசுமையாய் மலர, அவனைப் பற்றிய நினைவுகளைக் கிளர்ந்ததும் பாவையின் பூ முகம் பளிச்சிட்டது. அதனைக் குறித்துக் கொண்ட நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொள்ள, அவர்களைக் கவனியாமல் நினைவுகளை எங்கோ பறக்க விட்டாள் ஆரா இமையாள்.
க்ளஸ்டர்ஸ் மீடியா கல்லூரி, கோயம்பத்தூர். பேச்சுலர் ஆஃப் பைஃன் ஆர்ட்ஸ் இன் போட்டோகிராஃபி இறுதி வருடம் படித்துக்கொண்டிருந்தாள் ஆரா இமையாள்.
கேன்டீனில் அமர்ந்து டீயையும் வடையையும் ரசித்து உண்டு கொண்டிருந்த ஆராவை நோக்கி ஓடி வந்தான் விபின்.
“மச்சி மச்சி மச்சி… ஒரு செம்ம நியூஸ்.” என்று மூச்சரைக்க கூற, வெஜ் பப்ஸ்ஸை வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரதீஷ், “என்னடா நம்ம கேன்டீன்ல சிக்கன் பஃப் போடப் போறாங்களா?” என்று கேட்டதில், “பப்ஸுக்கு பொறந்தவனே” எனத் திட்டினான் விபின்.
“நான் பப்ஸுக்கு பிறந்தவன் இல்லைடா என் அம்மா பத்மினிக்கு பிறந்தவன்” என்று திருத்த, விபின் மூக்கு முட்ட முறைத்தான்.
ஆராவோ இவர்களின் வாதத்தைக் கண்டுகொள்ளாமல், வடையை ஆர்வமாக உண்ண, “அடி பன்னாடை. இங்க ஒருத்தன் காட்டு கத்தா கத்திட்டு இருக்கேன்” என்று இப்போது அவளை முறைக்க,
“இருடா. வடையை சூடா சாப்ட்டா தான் மொறுமொறுன்னு இருக்கும். அதுவும் நம்ம கேன்டீன்ல போடுற தேங்காய் சட்னியையும் உளுந்த வடையையும் அடிச்சுக்க எந்த செஃப்னாலையும் முடியாது” என்று சிலாகித்தாள்.
கடைசியில் உளுந்த வடையையும் சுட சுட டீயையும் குடித்து முடித்து விட்டே நிமிர்ந்தவளை இடுப்பில் கை வைத்துக் காட்டத்துடன் பார்த்த விபினைக் கண்டு அசடு வழிந்தவள், “இப்போ சொல்லு என்ன அந்த செம்ம நியூஸ்?” என்று கேட்டதில்,
மீண்டும் முகம் மலர்ந்தவன், “போன மாசம் நடந்த இன்டர் காலேஜ் காம்பெடிஷன்ல ‘ஜுனியர் பெஸ்ட் போட்டோகிராஃபர்’ டைட்டில்க்காக இந்தியால இருந்து மொத்தம் டாப் 30 யூனிவர்சிட்டி கலந்துக்கிட்டாங்கள்ல. அதுல இருந்து டாப் 6 கேண்டிடேட்ஸ் செலக்ட் பண்ணிருக்காங்க. அதுல நீயும் ஒரு ஆள் மச்சி.” என்று துள்ளிக் குதிக்க, பிரதீஷ் பப்ஸ்ஸை விட்டு விட்டு “வாவ்” என்று மகிழ்ந்தான்.
ஆராவின் முகத்திலும் மகிழ்வின் சாயல். அவளைவிட அவளின் வளர்ச்சிக்காகத் துள்ளிய நண்பர்களின் கூச்சல் கண்டு மென்னகை புரிந்தாள்.
பிரதீஷ், “இப்போ செலக்ட் ஆன ஆறு பேருக்கும் திரும்ப காம்பெடிஷன் நடக்குமா மச்சி” எனக் கேட்க, “ம்ஹும். இங்க தான் ஒரு ட்விஸ்ட் வச்சுருக்கானுங்க.” என்று விபின் சலித்தான்.
ஆராவும் பிரதீஷும் புரியாமல் பார்க்க, “இந்த ஆறு பேருக்கும் ஊட்டில இருக்குற லைட் அகாடமில ஒரு மாசம் ஒர்க் ஷாப் மாதிரி நடத்துறாங்க. நிறைய ‘லர்னிங் ப்ராசஸ்’ஸும் இருக்கும். அது மட்டுமில்லாம, ஊட்டில சில இடங்களுக்கு யூனிவர்சிட்டி பொறுப்பிலேயே கூட்டிட்டுப் போவாங்க. அங்க இருக்குற நேச்சரை கேப்சர் பண்ணனுமாம். அதுலயும் தீம் மாதிரி யோசிச்சு, பெஸ்ட்டா போட்டோஸ் எடுக்குறவங்களுக்கு தான், ‘ஜூனியர் பெஸ்ட் போட்டோகிராஃபர்’ டைட்டில் தருவாங்களாம். இது ஒரு ரியல் டைம் எக்ஸ்பீரியன்ஸாவும் இருக்கும்.” என்றதும்,
“ஹை அப்போ நம்ம ஊட்டிக்குப் போகப் போறோமா?” என்று ஆரா விழி விரித்துக் கேட்க,
விபின் சோகமாக “இல்ல மச்சி. உன் கூடச் சேர்ந்து 6 கேண்டிடேட்ஸ் மட்டும் தான் போறீங்க. அங்க அகாடமிக்கு சொந்தமான ஹாஸ்டல்லயே ஸ்டே பண்ண வைப்பாங்களாம்.” என்றான்.
“என்னது நான் மட்டுமா?” ஆரா இமையாள் அதிர்ந்து விட்டு, “அப்பா அம்மா விடுவாங்களான்னு தெரியலையே. நீங்க வந்தா கூட ஜாலியா இருக்கும். நான் மட்டும் எப்படிடா போவேன்” என்று முகத்தைச் சுருக்கினாள்.
பிரதீஷ் தான், “நீ என்ன கடல் கடந்தா போகப் போற இங்க இருக்குற ஊட்டிக்குத் தான மச்சி போற. வீக் எண்டு நாங்க அங்க வந்து உன்னைப் பாத்துக்குறோம். இந்த சில்லி ரீசன்க்காகக் கிடைச்ச வாய்ப்பை விடாத” என்று கண்டித்தான்.
விபினும் அதனை ஆமோதித்து “ஆமா ஆரா. காலேஜ் முடிச்சதும் நம்மளே ஸ்டூடியோ ஸ்டார்ட் பண்ற ஐடியால தான இருக்கோம். இது உனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். மிஸ் பண்ண வேண்டாம். பப்பா சொன்னா புருஞ்சுப்பாங்க.” என்றதும் அவள் அரைமனதுடன் தலையசைத்தாள்.
மாலை வங்கியிலிருந்து வேலை முடித்து வீடு திரும்பிய வேணுவின் முகமே களையிழந்திருந்தது. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவரின் முகத்தில் சோர்வைக் கண்ட அருந்ததி, “என்னங்க ஆச்சு ஒரு மாதிரி இருக்கீங்க.” எனக் கேட்க,
“ஒன்னும் இல்லம்மா. கொஞ்சம் தலைவலி. ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்” என்று முறுவலித்துக் கூறும் போதே, நண்பர்கள் மூவரும் வீட்டினுள் நுழைந்தனர்.
தந்தையைக் கண்ட ஆரா, “என்னப்பா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க. ஆமா, ஏன் இப்படி வேர்த்துப் போயிருக்கீங்க.” என்றபடி மின்விசிறியை ஓட விட்டாள்.
அவளிடம் சமாளித்தவர், “இன்னைக்கு என்ன என் பாப்பாவோட முகம் பிரகாசமா இருக்கு” என்று கேட்டதில், விபின் விஷயத்தைக் கூற, பெற்றோரின் முகத்திலும் பெருமிதம்.
“இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. இன்னும் பெரிய அளவுல வருவம்மா.” என்று மகளின் தலையில் வருடிய வேணுவிடம், அவள் தயங்கி தயங்கி ஊட்டிக்குச் செல்வதை பற்றிக்கூற, வழக்கம்போல அருந்ததி மறுத்தார்.
அதில் மகளின் முகம் வாடி விட்டதை பொறுக்க இயலாமல், “நாலு இடத்துக்குப் போனா அனுபவமும் கிடைக்கும் பாப்பா. நீ போயிட்டு வா. வாரா வாரம் நாங்க வந்து பாத்துக்குறோம்.” என்றிட, பிரதீஷ் “இதையே தான் நாங்களும் சொன்னோம் பப்பா. கேட்கவே மாட்டுறா.” என்று சிலுப்பினான்.
பின், அருந்ததியையும் சமன்செய்து தந்தையிடமும் ஆசி பெற்று, நண்பர்களிடமும் விடை பெற்று பேருந்து ஏறக் கிளம்பினாள். அனைத்தும் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது தான்.
ஆராவிற்கு தான் செல்ல மனமே இல்லை. “சண்டே ஊட்டிக்கு வந்துடுவீங்கள்ல” எனக் கலங்கிய கண்ணைச் சிமிட்டியபடி கேட்டதில், விபினுக்கும் பிரதீஷிற்கும் மனம் பாரமானது. இதுவரை அவளை விட்டுப் பிரிந்து எங்கும் சென்றதே இல்லையே.
“நீ என்ன கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கா போற. கண்ணைக் கசக்காம கிளம்பு மச்சி பாக்கவே காமெடியா இருக்கு” என்று விபின் கலாய்த்ததில், அவள் முறுக்கிக்கொண்டாள்.
ஊட்டி அகாடமிக்குச் சென்று இறங்கியவளை வரவேற்றது மாணவ மாணவியரின் போராட்ட சத்தம் தான். அகாடமி விடுதியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அதில் சந்தேகம் இருப்பதாக அகாடமிக்கு எதிராக நடத்திய போராட்டத்தைக் காவலர்கள் சரிப்படுத்த முயன்றனர்.
அகாடமி வாசலில் ஆராவிற்கு அருகில், இரு ஆண்களும், மூன்று பெண்களுமாக இறுதி கட்டத்திற்கு தேர்வானவர்கள் நிற்க, அவர்களைப் போட்டியின் போதே பார்த்திருந்ததால், அடையாளம் கண்டு கொண்டவள், “ஹாய்” என்று ஸ்நேகமாகப் புன்னகைக்க அவர்களோ இவளைக் கண்டுகொள்ளவே இல்லை.
ஆண்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். பெண்களில் இருவர் மும்பையில் இருந்தும் ஒரு பெண் கேரளாவில் இருந்தும் வந்திருந்தனர்.
இவள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். போட்டியின் போதே ஆங்கிலத்தைக் கூடத் தட்டுத்தடுமாறி பேசியவளை எப்படி தேர்வு செய்தார்கள் என்ற எரிச்சல் அந்த ஐவருக்கும் இருந்தது.
ஆராவோ தோளைக் குலுக்கி விட்டுச் செய்வதறியாமல், “என்னங்கடா இது, ஃபைனலுக்கு செலக்ட் ஆகி வந்த கேண்டிடேட்டை பன்னீர் தூவி வெல்கம் பண்ணுவீங்கன்னு பார்த்தா போராட்டத்தோட வெல்கம் பண்றீங்க.” என்று தலையைச் சொறிந்தவளின் பின்னிருந்து “வெல்கம் டியர் கேண்டிடேட்ஸ்” என்ற ஆண்குரல் கேட்டதில் திரும்பிப் பார்த்தாள்.
அவளுக்கு இரண்டடி தொலைவில் நின்றிருந்தான் அவன். கழுத்தை முயன்றவரை அவன் உயரத்திற்கு நிமிர்த்தியவளுக்கு, “ஆறடி உயரம்! அழகிய உருவம்! ஆப்பிள் போலே இருப்பானே!” என்ற பாடலின் வரிகள் தானாகவே மனதினுள் ஓடியது.
அவனைத் தீவிரமாக ‘சைட்’ அடித்துக் கொண்டிருந்ததில், அவன் பேசிய முற்பாதியை அவள் கவனிக்கவே இல்லை. கவனித்தாலும் கூடப் புரிந்திருக்காது. ஏனெனில் அவன் ஆங்கிலத்தை சரளமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
அவன் பேசி முடித்ததும், மற்ற ஐவரும் அவனுக்கு நன்றி கூறி எங்கோ கிளம்பிட பாவம் அவளுக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
அவளையே கூர் விழிகளால் ஏறிட்டவன், “துமாரா நாம் கியாஹே?” எனப் புருவம் சுருக்கிக் கேட்க, அப்போதும் பேந்த பேந்த விழித்தாள்.
அந்த விழிகளில் வழிந்த அப்பாவித்தனம் அவனை இளக்கியதோ என்னவோ, “யூ டோன்ட் நோ ஹிந்தி?” எனக் கேட்டதில், “ஐ டோன்ட் நோ ஹிந்தி. ஃபாதர் ப்ராமிஸ்.” என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்து கொண்டதில், இறுகிய அவன் இதழ்களுக்குள் மென்முறுவல்.
“ஓகே தென். லெட்ஸ் டாக் இன் இங்கிலிஷ். வாட் இஸ் யுவர் நேம்?” (சரி அப்போ இங்கிலிஷ்ல பேசலாம். உன் பேர் என்ன?) என்றதும்,
“ஆரா இமையாள்” என்றாள் வேகமாக.
“கியா? கம் அகெய்ன்.”
“ஆரா இமை யாள்…” அவள் மீண்டும் உச்சரித்ததில்,
“ஆரா இமை” என்று அவன் சொல்லிப் பார்த்துக் கொள்ள,
அவளும் “எஸ் இமை…” என்று விழிகளைச் சுட்டிக்காட்டி “ஐ-லிட்” என்று விளக்கம் வேறு அளித்தாள்.
“இமை. ரைட்! குட்” என்றவன், மடமடவென ஆங்கிலத்தில் ஏதோ பேசிட, அவள் அப்போதும் விழித்தாள்.
“வெய்ட் வெய்ட் ஐ நோ இங்கிலீஸ். பட் திஸ் மச் ஸ்பீட் ஐ டோன்ட் அண்டர்ஸ்டாண்ட்.” எனப் பரிதாபமாக உரைக்க, வேகத்தைக் குறைத்துக் கொண்டு நிறுத்தி நிதானமாகப் பேசியது மட்டுமல்லாமல், பாவையின் பூ முகத்தையும் நிதானமாக அளக்கத் தொடங்கினான் மேகன் உவேந்திரா.
இமை இணையும்
மேகா
ஒரு மாசம் ஒர்க் ஷாப்காக ஊட்டிக்கு வந்தவளை கரெக்ட் பண்ணி கழட்டியும் விட்டுட்டானா 🙄🙄