665 views

ரகுவரன் 4

ரகுவரனிடம் சிக்கி இருந்த நான்கு ஜூனியர்கள் என்றோ விடுதலை அடைந்து விட்டார்கள். புதிதாக இப்பொழுது ஆறு நபர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் இவன் யார் என்று தெரியாமல். என்றும் புன்னகையோடு வரும் காதல் மன்னன் இன்று மூக்கின் மேல் மூன்று குரங்குகளை உட்கார வைத்தது போல் கோரமாக உள்ளே வந்தான். அவனின் எண்ணத்தை அறியாத இளசுகள்,

“சார், இன்னைக்கு அந்த கல்யாணம் ஆன பொண்ணு சூசைட் பண்ணிக்கிட்ட கேஸ பத்தி விசாரிக்க போகணும்.” என்றார்கள்.

“ம்ம்” என்றதோடு நிறுத்திக் கொண்டவனை பேச வைக்கும் நோக்கோடு பேச்சுக்கள் இருந்தது.

“ரெண்டு நாளைக்கு முன்னாடி மேடம் இந்த கேஸ பத்தி விசாரிச்சு சொல்றதா சொன்னாங்க சார், அது என்ன ஆச்சு?”

“யாரு?”

“மேடம் சார்” என்றதும் மூக்கின் மேல் இருந்த மூன்று குரங்குகளும் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்தது.

“நம்ம யோசிக்கிறதுக்குள்ள மேடம் கண்டு பிடிச்சு அசத்திடுறாங்க. நம்ம என்ன கேஸ கையில எடுத்தாலும் மேடம் பத்தின பேச்சு இல்லாம கடக்கவே முடியல சார். சீனியர் லாயர் அத்தனை பேருக்கும் மேடம் பேரு அவ்ளோ பரீட்சையமா இருக்கு.”

மனைவியின் திறமைகளை அங்கீகரிக்கும் புகழ் பேச்சில் மிளகாய் அரைத்து பூசியது போல் இருந்தது உடம்பு முழுவதும். கட்டுப்படுத்த தெரியாமல் இருக்கையில் இருந்து எழுந்தவன், “ஸ்டாப் இட்! இந்த கேஸ நான் எடுத்தனா இல்ல அவ எடுத்தாளா? அவ விசாரிக்குறதுக்கு நீங்க எதுக்குடா இருக்கீங்க மடையனுங்களா. ஒழுங்கா கொடுத்த வேலையை செய்ங்க போங்கடா.” என்றான்.

இன்னமும் ரகுவரனின் கோபம் புரியாத ஆறு பேரில் ஒருவன், “சார்” என்றான் பாதி பயத்தோடு.

வார்த்தையை நிறுத்தியவன் கூர்ப்பார்வையோடு குரல் வந்த திசையை நோக்க, “நீங்க தான் எங்களை செய்ய வேணாம் எல்லாத்தையும் மேடமே பார்த்துப்பாங்கன்னு சொன்னீங்க.” என்றான்.

அவன் பேச்சை முடித்ததும் அருகில் இருந்த வாட்டர் பாட்டில் அவன் முகத்தை நோக்கி பறந்து வந்தது. சுதாரித்துக் கொண்ட ஜூனியர் உடனே விலகி நிற்க, “நான் தான் சொன்னேன் அதுக்கு என்ன இப்போ. நான் சொல்ற எல்லாத்தையும் செஞ்சுடுவீங்களா? ஒழுங்கா வேலைய பாருங்க போங்கடா.” என்றவாறு இருக்கையில் அமர்ந்தான்.

மனம் முழுவதும் மகிழினி. மனைவியின் நினைவை ஒதுக்க படாதப்பாடுபட்டவன் தோற்றுப் போனான் அவள் நினைவு ஆக்கிரமித்ததில். தோல்வியுற்றவன் தன்னை ஒப்புக் கொள்ளாமல் அறையில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் தூக்கிப்போட்டு உடைத்தான். சத்தம் கேட்டு வந்த ஜூனியர்கள் அவனை தடுக்க, சிக்கிக் கொண்டனர் வசமாக ரகுவரன் கையில்.

ரகுவரனுக்குள் இருக்கும் சைக்கோ பல நாள் கழித்து வெளிவந்திருந்தான். கோபம் தீராமல் சுவற்றை குத்தகைக்கு எடுத்தவன் ஓங்கி குத்த ஆரம்பித்தான் கை வலிக்கும் அளவிற்கு. ஒவ்வொரு முறையும் சுவற்றை காயம் செய்வதாக தன் கையை காயம் செய்து கொண்டான். இதெல்லாம் மனைவி பார்த்தால் எப்படி துடிப்பாள் என நினைத்தவன் அவள் இருப்பதாக எண்ணி அடிக்க ஆரம்பித்தான் இன்னும்.

காட்டாற்று வெள்ளத்தை தடுக்க முடியாமல் அரண்ட ஜூனியர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, அலையடித்து ஓய்ந்தது போல் மனம் முழுவதும் அவள் நினைப்பில் இருக்கையில் அமர்ந்தான். அரை மணி நேரம் கடந்ததும் நிதானம் அவனை ஆட்கொள்ள, “இங்க என்ன பார்த்துட்டு இருக்கீங்க வேலைய பாருங்க.” கரகரக்கும் குரலில் மிரட்டல் விடுத்தான்.

மனதினுள் குடி கொண்டிருக்கும் மனைவியின் முகத்தை மறந்தவன் வேலைகளை கவனித்தான். அது எப்படி விடுவேன் என்று ஞாபகப்படுத்தியது பசி எடுக்கும் வயிறு. மனைவியின் அன்பு கிடைத்த பின் ஒரு நாள் கூட இப்படி ஒரு நிலைமையை சந்தித்ததில்லை ரகுவரன். அவன் இருக்கும் இடத்திற்கு உணவைக் கொண்டு வருபவள் வேலையாக இருந்தால் சாப்பாடை மட்டும் அனுப்பி வைத்து விடுவாள் அவன் எங்கு இருந்தாலும்.

அறுசுவை உணவை விட அதிக சுவை நிறைந்தது மனைவியின் மடி என்பதை பலமுறை அனுபவித்து உணர்ந்தவன் முகம் அவள் மடியை கேட்டு அடம் பிடித்தது. இருக்கும் அறை பலமுறை அவர்களின் செய்கையில் வெற்று கண்களை மூடி இருக்க, இன்று அவை இல்லாமல் கடுப்பில் கண் மூடினான்.

“டேய் ரகுவரா!”  என்றவாறு உள்ளே வந்தவள் மேஜையில் அமர்ந்துக் கொண்டு இருபுறமும் அவன் இருக்கையில் கால் போட்டாள்.

அவள் வரவை அறியாதது போல் ரகுவரன் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, “டேய் ரகுவரா உன்ன தான்டா.” சீண்டி பார்த்தாள் மகிழினி.

கணவனிடமிருந்து எந்த பதில் மொழிகளும் வராததால் ஏற இறங்க பார்த்தவள், “ஒரு பத்து நிமிஷம் லேட்டா வந்ததுக்கா இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்க. மணி ஆயிடுச்சு சாப்பிட வா.” என்றாள் அக்கறையாக.

எப்பொழுதும் வரும் நேரத்தை விட தாமதமாக வந்த மனைவி மீது கோபம் கொண்டவன் அவள் பேச்சை மதிக்கவில்லை. அழைத்துப் பார்த்து அலுத்து போனவள் மனதில் உடனே ஒரு எண்ணம் உதிக்க, ‘மகனே இப்ப பாரு’ என்று உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டாள்.

அதை அறியாதவன் கைபேசியில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருப்பது போல் பாவலா செய்ய, முழி இரண்டும் பிதுங்கி விட்டது மனைவியின் செயலில். இருபுறமும் வைத்திருந்த கால்களில் ஒன்றை அவன் வயிற்றில் வைத்தவள் சட்டை பட்டன்களுக்கு நடுவில் இருக்கும் நுழைவில் கால் நுழைத்து அவனின் உள் பனியனை தொட்டாள்.

போனில் இருக்கும் கவனம் சிதறியது ரகுவரனுக்கு. அதைக் கண்டு கொண்டவள் கமுக்கமாக சிரித்து, உள்பனியனில் கோலம் போட ஆரம்பித்தாள். லேசாக சிலிர்க்கும் உடலை கட்டுப்படுத்த நினைத்தவன் அவள் கால்களை பிடிக்க, மற்றொரு காலை நெஞ்சில் வைத்தாள்.

மனைவியின் செயலில் முறைத்தவன் கோபத்தோடு அதை தட்டி விட முயல, அதற்குள் அவளின் கால் விரல்கள் கழுத்திற்கு சென்று கூச்சம் கூட்டியது. ரகுவரனின் பார்வை அறை கதவு பக்கம் செல்ல, “டோர் லாக் ஆகி ரொம்ப நேரம் ஆகுதுடா மக்கு புருஷா.” என்றாள் மகிழினி.

வீட்டுக்காரியின் வார்த்தையில் முனுக்கென்று கோபம் முட்டிக் கொள்ள, “நடிக்காதடி” என்றான்.

“என்ன நடிச்சிட்டோம்” என்றவளின் பாத விரல்கள் கழுத்தெல்லாம் சுற்றி காதிற்கு வந்தது. மெட்டி போட்டிருக்கும் பாத விரல்களை ரசித்தவன் அதை காட்டிக் கொள்ளாமல் அதன் மேல் அடி ஒன்றை கொடுத்து, “முன்ன மாதிரி எல்லாம் என் மேல அக்கறை இல்லை. இவனுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரணுமேன்னு கடமைக்கு எடுத்துட்டு வர. நான் தான் இன்னும் உன்ன….” பாதியில் பேச்சு நின்றது அவளின் கால் பெருவிரல் உதட்டை தொட்டதும்.

மர்ம புன்னகையோடு புருவம் உயர்த்தி, “உன்ன…” என்று ராகம் இழுக்க, திண்டாடி போனவன் உதட்டு ரேகைகளை எண்ணிக் கொண்டிருந்தாள் மகிழினி.

பேச்சை நிறுத்திய கணவனின் உதட்டில் கால் விரலால் இருமுறை தட்டி நடப்புக்கு கொண்டு வந்தவள் அவன் பேச வரும் நேரம் தன்னோடு இழுத்துக் கொண்டாள்.

“என்னடா பொண்டாட்டி கிட்ட கோபம் உனக்கு” என்றதோடு நிறுத்தாமல் உதட்டை உரச, செல்ல கோபம் காணாமல் போய் ரகசிய கோபங்கள் வெளிப்பட்டது.

“என் லூசு புருஷனுக்கு கோபப்படுறதை தவிர வேறு ஒன்னும் தெரியாதாடா. ஆனாலும், ரகுவரா நீ கோபப்பட்டா தான் டா  கொள்ள அழகா தெரியுற.” மழை நேரத்தில் வீசும் காற்றை போல் முகம் எங்கும் குளிர்ந்தது மகிழினியின் உரசல் பேச்சில்.

காதலின் விழிகள் சற்றென்று மோகத்திற்கு அடியெடுத்து வைக்க, கணவனை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் இன்னும் சோதித்தாள் தலைமுடி முதல்  ஒவ்வொன்றையும் ரசித்து. இப்பொழுது ரகுவரன் புருவம் உயர்த்த,

“மயக்குறடா” என்றாள் உன் மனதில் தோன்றியதை மறைக்காமல்.

“நீதான்டி என்னை முதல்ல மயக்கி உன் முந்தானைல முடிஞ்சுகிட்ட.” என்றவன் கைகள் இல்லாத முந்தானை இருக்கும் இடுப்பில் ஊர்ந்தது.

அவன் வார்த்தைக்கு பதில் கொடுக்க விரும்பாதவள் தலைமுடியில் விரல் வைத்து வலிக்காமல் இழுத்தாள். நாயகன் அவள் செயலுக்கு எதிராக வலிப்பது போல் சத்தம் கொடுக்க, கை விரல்கள் பிடித்துக் கொண்டது அவன் உதட்டை. அவள் பார்வை உதட்டின் மீது இருக்க, இவன் பார்வை மனைவி முகத்தில் இருந்தது.

“இந்த வாய் எப்ப பாரு என்னை மயக்குற மாதிரியே பேசுது. இப்ப இதை தண்டிக்காம விட்டா பெரிய தப்பாகிடும்.” உதட்டை நோகடித்தாள் இஷ்டப்படி வளைத்து.

அவன் இருக்கும்  நிலைக்கு அவை பெரிதாக வலிக்காமல் போனது. அதையும் அவன் விழி மொழியில் உணர்ந்து கொண்டவள் அலறவிட்டாள் கடித்து. மயக்க நிலையில் இருந்தவன் சுயம் பெற்று தன் உதட்டை காப்பாற்றிக்கொள்ள,

“ஹா…ஹா…” வெறுப்பேற்றினாள் சத்தமாக சிரித்து.

செல்ல கோபம் கொண்டவன் எழுந்து நின்று முறைக்க, “என்னடா ரகுவரா முறைப்பு? என்றவளை அரை நொடியில் அசுர வேகத்தில் தன்னுடன் நுழைத்துக் கொண்டவன் அலற விட்டான் முகம் எங்கும் கடித்து.

“ரகுகுகு…” என்ற வார்த்தை எல்லாம் தேனாக காதில் பாய, அன்றைய உணவு வீணானது மாற்றி மாற்றி கடித்துக் கொண்டதில்.

மனைவியோடு கடந்த காலத்தில் இருக்கிறோம் என்பதை மறந்த ரகுவரன் அவள் அருகில் இருப்பதாக நினைத்து, “பொண்டாட்டி” என்றிட, பட்டென்று விழித்திறந்தது.

அருகில் இல்லாத மனைவியை சுழன்று பார்த்து தேடினான். அவள் இல்லை என்பதை தாமதமாக உணர்ந்தவன் தலை வலியோடு அமர்ந்தான். கண்மூடி இருக்க… அவள் தலைக்கோதி விட்டதும், புருவத்தை நீவி விட்டதும், மடியில் சாய்த்துக் கொண்டு முதுகை தட்டி விட்டதும் தொடர்ந்து ரயில் பெட்டிகள் போல் அவன் மனதில் படையெடுத்தது.

தாக்குப் பிடிக்க முடியாமல் திண்டாடியவன் அங்கிருந்து ஓடினான் வீட்டிற்கு. இல்லாத மனைவியை வீட்டில் தேடியவன் சோர்ந்து மெத்தையில் படுக்க, அங்கு தான் அவள் நினைவுகள் அதிகம் வாட்டி எடுத்தது. மனைவி மீது இருக்கும் கோபத்தை உயிர் இல்லா பொருட்கள் மீது காட்டியவன் கொடுத்த ஓசையில் வீட்டில் இருந்த பெரியவர்கள் அவன் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள்.

பெரியவர்களின் கேள்விக்கு பதில் சொல்லாதவன் பார்வை மகன் மீது விழுந்தது. சிறிய ரகுவரன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும் தந்தையை சிறிதும் கண்டு கொள்ளாமல் சாந்தியின் இடுப்பில்
அமர்ந்து சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

தன்னை கவனிக்கிறானா என்று நோட்டம் விட்ட ரகுவரன் பல்லை கடித்தான். அந்த ஓசையிலாவது தன் மகன் தன்னை கவனிப்பானா என்ற எதிர்பார்ப்பில். நீ என்ன குரளி வித்தை காட்டினாலும் உன்னை கண்டு கொள்ள மாட்டேன் என்ற தோரணையில் தான் இருந்தான் மகிழ்வரன்.

‘பெத்தவ ஜெராக்ஸ்’ என்று உள்ளுக்குள் கருகிக் கொண்டவன், மகனின் தலையில் நான்கு கொட்டுக்களை வைத்தான்.

“ங்ங்ஙேஙே..ஞேஞேஞே பாய்ட்ட்ட்டி” இடுப்பில் அமர்ந்தவாறு துள்ளி குதித்தான்.

“நடிக்காதடா”

“பாட்டி அம்மா கிட்ட கூட்டிட்டு போங்க”

“ரகு இவ்ளோ நேரம் அம்மாவ கேட்டு அழுதவன இப்ப தான் சமாதானப்படுத்தினோம். உன்னால இப்ப திரும்பவும் மகிய கேட்டு அழுகுறான் பாரு.”

“அழுதா அவ கிட்ட துரத்தி விடுங்க. இவனும் இல்லனா நானும் என் பொண்ணு நிம்மதியா இருப்போம்.”

“நான் போகும்போது என் அக்காவையும் கூட்டிட்டு போயிடுவேன்.” பட்டென்று தந்தைக்கு பதில் சொல்லிவிட்டான் மகிழ்.

“என் பொண்ணு என்னை விட்டு வர மாட்டாடா.”

“பாட்டி அக்காக்கு நான் தான செல்லம், நான் சொன்னா தான அக்கா கேட்கும்.” பாட்டிகள் இருவரையும் துணைக்கு அழைத்தான்.

பிள்ளையின் பேச்சை கேட்டதும் சிரித்தவர்கள் தலையசைக்க, “யாருடா சொன்னா அப்படின்னு? என் பொண்ணுக்கு என்னை தான் பிடிக்கும். எனக்கு அப்புறம் தான் நீங்க எல்லாரும்”

“இல்ல, என் அக்காக்கு என்னை தான் பிடிக்கும். எனக்கும் என் அக்காவை தான் ரொம்ப பிடிக்கும். அக்கா வரட்டும் என்னை தான் பிடிக்கும்னு சொல்ல வைக்கிறேன்.” என்று மூக்கை சுருக்கினான்.

மகனின் பேச்சில் கடுப்பானவன் மூக்கை பிடித்து இஷ்டத்துக்கும் இழுத்தான்.

“அம்ம்ம்மாமாமாமா” கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான் இளையவன்.

இவ்வளவு நேரம் இருந்த அனைத்து கோபமும் காணாமல் போனது மகனின் அழுகை சத்தத்தில். என்னமோ சாதிக்க கூடாததை சாதித்தது போல் உள்ளுக்குள் குதுகளித்தவன் அடைந்து கொண்டான் அறையில். பேரனை சமாதானப்படுத்த முடியாத சாந்தி தலையில் அடித்துக் கொண்டு வெளியேற, பிள்ளைக்கு தந்தையாக இல்லாமல் விளையாட்டு பொம்மையாக இருக்கும் மகனை நினைத்து நொந்து கொண்டார் லட்சுமி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
19
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments