சிரஞ்சீவி, மண்டபத்திலிருந்து காதலித்த பெண்ணைத் தேடி சென்று விட்டதும், திடீர் மாப்பிள்ளையாக தனது இளையமகனை அமர்த்தியதும் பானுரேகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
பெரியவன் மானத்தை வாங்கி விட்டு செல்வான் என அவர் துளியும் நினைக்கவில்லை. அதுவே கோபமாக உருவெடுக்க, சத்யாவின் வாயை அடைக்க இயலாமல் இந்திரஜித்தை மணமகனாக்கி விட்டார். ஆனாலும் உள்ளுக்குள் ஆத்திரமும், ஏமாற்றமும் அணையாமல் கனன்று கொண்டிருந்தது.
சிரஞ்சீவி வேறொரு பெண்ணை காதலிப்பது பானுரேகாவிற்கும் தெரியும். அவளைத் திருமணம் செய்து வைக்கக் கோரி, இந்திரஜித்தும் ஒற்றைக் காலில் நின்றான். ஆனால், பானுரேகா ஒப்புக்கொள்ளவே இல்லை.
கால் ஊனமான பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் அளவு பரந்த மனது தனக்கு இல்லை என்று மறுத்து விட்டார்.
வீட்டினர் மூவரும் எவ்வளவோ போராடிப் பார்த்தும், அவர் மசியவில்லை. அதனாலேயே சிரஞ்சீவிக்கு பார்த்த பெண்ணை எல்லாம் இந்திரஜித் தடுத்துக் கொண்டே இருந்தான். இறுதியில், வைஷாலியை ஒப்புக்கொண்டதும் அவருக்கு சந்தேகம் தான் என்றாலும், இப்படி தனது மகன் கழுத்தை அறுத்து விட்டு செல்வான் என்று எண்ணவில்லை.
இதற்கு இந்திரஜித்தும் உடந்தையாகத் தான் இருப்பான் என அவருக்கும் தெரியும். அவன் மீதும் கடுங்கோபம் தான் என்றாலும், இப்போதைக்கு, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதே முக்கியம் என்று பல்லைக்கடித்துப் பொறுமை காத்தார்.
இந்திரஜித்தும் கடுப்பாக தான் இருந்தான். இப்படி தன்னை கோர்த்து விட்ட சத்யா மீது கழுத்தை நெறிக்கும் அளவு எரிச்சல் தான் வந்தது.
அவன் கோபமெல்லாம் சில மணி துளிகள் தான் தாக்குப்பிடிக்கும். அதன் பிறகு மீண்டும் குறும்பைத் தத்தெடுத்துக் கொண்டவன், மர்மப்புன்னகை வீசினான்.
தாமரைக்கு தான் அவ்வப்பொழுது கண்கள் கலங்கியபடியே இருந்தது. மாப்பிள்ளை மாறியதில் இருந்தே அவருக்கு மனது சரி இல்லை. இந்த திருமணம் நன்முறையில் நடைபெற வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே அவரிடம் தொடர்ந்து கொண்டிருக்க, சாவித்திரியும் முயன்ற அளவு அவரை சமன்படுத்திக்கொண்டிருந்தார். இதில், அவ்வப்பொழுது ஆனந்தியின் குத்தல் பேச்சு வேறு இருக்க, மேலும் தொய்ந்து போனார்.
ஆனந்தி மீது எரிச்சல் மிகுந்தாலும், இதனைப் பற்றி சிந்திக்கவெல்லாம் சத்யரூபாவிற்கு தான் நேரமில்லை. திருமண வேலை மொத்தத்தையும் ஒற்றை ஆளாக, சாமாளித்துக் கொண்டிருப்பவள் உறங்கியே பல நாட்கள் ஆகி இருந்தது.
இதில் இறுதி நேரத்தில் இப்படி ஒரு சங்கடம் வேறு என்று மனம் சுணங்கினாலும், தமக்கையின் திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் சற்றும் குறையவில்லை.
இரவு விருந்தினருக்கு, சாப்பாடு பரிமாறும் வேலையாக இருந்தவள், மாப்பிள்ளை வீட்டாரின் சொந்தங்களை தனியாக சிரத்தை எடுத்து கவனித்துக் கொள்ள, எங்கு பார்த்தாலும் குசு குசுவென புறணி தான் ஓடிக்கொண்டிருந்தது.
அந்நேரம், ஒருவன் அவளிடம் வந்து, மேடையை அலங்கரிப்பது பற்றி பேசிட, சத்யா விழித்தாள்.
இந்த வேலை எல்லாம் இந்தர் தானே பார்த்துக்கொள்வதாய் கூறினான் என சிந்தித்தபடியே, அவரிடம் கேட்க, “இந்திரஜித் சார் தான், உங்ககிட்டயே கேட்க சொன்னாரு மேடம். அலங்காரம் முடியிற வரை கூட இருந்து பாத்துக்க சொன்னாரு.” என்றதில் ஒரு நொடி அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஏற்கனவே வந்த சொந்தங்களை கவனிக்க வேண்டும். இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னும் முகூர்த்த நேரத்திற்கு தேவைப்படும் சில பொருட்களை வாங்க வேண்டும். இன்னும் கணக்கில் வராத பல வேலைகள் இருக்க, இவனோ இப்படி தன்னை சோதிக்கிறானே என்று நொந்தபோது, அவனே அங்கு வந்தான்.
சிரித்த முகத்துடன், அவனது அத்தை பெண்களிடம் செல்பி எடுத்துக் கொண்டிருந்தவன், “சாப்பிட்டீங்களா?” என விசாரித்து விட்டு, “ஹே ரூப்ஸ்… இங்க இட்லி வைக்க சொல்லு” என்று உத்தரவு வேறு கொடுத்ததில் வெறியாகி விட்டாள்.
முகம் மாறாமல் சொன்னதை செய்தவள், அடிக்குரலில், “கொஞ்சம் வாங்க உங்ககிட்ட பேசணும்” என்று தனியே அழைக்க, “மாப்பிள்ளை ரொம்ப பிசி ரூப்ஸ். நினைச்ச நேரத்துக்கு எல்லாம் பேச முடியாது.” என்று பிகு செய்து கொண்டான்.
அவளோ புரியாமல் நிற்க, “சரி வா…” என தனியாக அழைத்துச் சென்றதும் தான் தாமதம், “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. மேடை அலங்காரம் எல்லாம் நீங்க பாக்குறேன்னு சொன்னீங்க தான. இப்போ அந்த ஆளு என்கிட்ட வந்து கேக்குறாரு.” எனக் கடிந்தாள்.
“பின்ன உங்கிட்ட கேட்காம… முதல்ல நான் சரின்னு சொன்னேன்னா, அப்போ நான் மாப்பிள்ளையோட தம்பி ரூப்ஸ். இப்போ மாப்பிள்ளையே நான் தான். மாப்பிள்ளையை வேலை வாங்குற பொண்ணு வீட்டை இப்ப தான் நான் பாக்குறேன்.” என்றதில், அவளுக்கே அதிர்ச்சி தான்.
“உங்க அண்ணன் ஓடிப்போனதுனால தான் இவ்ளோ பிரச்சனை இந்தர்…” கடுப்புடன் சத்யா கூறியதில்,
“இருக்கலாம். ஆனா, என்னை மாப்பிள்ளையாக்கி அந்த பிரச்சனையை வளர்த்தது நீ.” என அழுத்தமாகக் கூறியதில், வாயை மூடிக்கொண்டாள்.
“இப்போ, நான் ஒத்துக்கிட்ட வேலையை எல்லாம் நைட்டு முழுக்க பார்த்தேன்னா, நாளைக்கு வீடியோ போட்டோல என் முகம் டல்லா இருக்கும் ரூப்ஸ். என்ன தான் அவசரத்துக்கு செஞ்ச உப்புமாவா இருந்தாலும், டேஸ்ட் நல்லா இருக்கணும்.
இப்போ, திடீர் கல்யாணம் தானன்னு முகத்தில தூக்கம் வழிய போய் தாலி கட்டுனேன்னு வச்சுக்கோ. ஒரு பத்து வருஷம் கழிச்சு பார்க்கும் போது, சே… ஸ்வீட் மெமரீஸ் அப்போ, இப்படி கடுப்பா இருக்கோமேன்னு பீல் ஆகும். உன் அக்காலாம் பார்த்தியா பேசியல் பண்ணி பளபளன்னு இருக்கா. நான் இந்த நைட்டு நேரத்துல ஹேர் கட் கூட பண்ண முடியாது. அட்லீஸ்ட் ஒழுங்கா தூங்கி எந்திரிக்கணும்ல. அப்போ தான் உன் அக்காவுக்கு கொஞ்சம் ஈகுவலா பிரெஷா இருப்பேன்…” என்று பேசி முடித்தவனை வாயைப் பிளந்து பார்த்தாள்.
நீ எல்லாம் என்னடா டிசைன்? எனக் கேட்க வந்தாலும், கேளாமல் கையெடுத்து கும்பிட்டவள், “போதும் சாமி… போய் நல்லா தூங்குங்க. நானே பாத்துக்குறேன்.” என்று அவனை அனுப்பி விட்டதும் தான் மூச்சே வந்தது அவளுக்கு.
சிறிது நேரம் கழித்து பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தவளின் முன் வந்து நின்றான் இந்திரஜித். “என்ன மாப்பிள்ளை சார் இன்னும் தூங்கல?” அவள் விழி உயர்த்திக் கேட்க,
“அதெப்படி தூங்க முடியும். செய்ய வேண்டிய சம்பிரதாயத்தை பொண்ணு வீட்ல ஒழுங்கா செஞ்சீங்களா?” என கோபம் போல கேட்க அவள் குழம்பினாள்.
பெண்ணிற்கு நகை போடுவதெல்லாம், அவர்கள் பிரியம் என்று பானுரேகா கூறி இருந்தாலும், சேர்த்து வைத்திருந்த 15 பவுன் நகைகளோடு, சில சீர்வரிசைகளையும் ஏற்பாடு செய்திருந்தாள். அதற்கு மேல் கேட்டால் செய்து கொள்வோம் என்றிருந்தவளுக்கு படபடவென ஆனது.
இவற்றை அவனிடமே கூறி, “வேற என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க?” என தயக்கமாகக் கேட்க, அவளையே ஆழ்ந்து பார்த்தவன், “அதான் அம்மா உங்களை எதையும் கேட்டு போர்ஸ் பண்ணலை தான. அப்பறம் ஏன், சீர் அது இதுன்னு செலவை இழுத்துக்குற சத்யா” என்று மென்மையாகவே கண்டித்தான்.
“அதுக்காக சும்மா அனுப்ப முடியாதுல…” அவள் தலையை ஆட்டிக் கூறியதும், ஒரு நொடி அவனுக்கும் என்னவோ போல் ஆகி விட்டது.
மறுநொடி தன்னை மீட்டவன், “சரி அதை விடு. இப்போ கேட்க வந்ததே வேற… எனக்கு யாரு நலுங்கு வைப்பா. பொண்ணுக்கு மட்டும் வச்சீங்கள்ல…” என்று இடுப்பில் கை வைத்து முறைத்ததில், அவளுக்கு வந்ததே கோபம்!
“நீ என்னை ரொம்ப டென்ஷன் பண்ற இந்தர். நலுங்கு வைக்கிற மாதிரியா இருக்கு இப்போ நிலைமை…” என்று பல்லைக்கடித்தாள்.
“ஏன் இப்ப எப்படி இருக்கு? பிரச்சனை பண்ண வேண்டிய நானே சமத்தா இருக்கேன். எனக்கு தெரியாது. இப்போ எனக்கு எல்லாரும் சந்தனம் பூசி நலுங்கு வைக்கணும்…” என்று அடம்பிடித்தான்.
அடக்கடவுளே! என நொந்தவள், அவனுக்கும் நலுங்கு வைக்க ஏற்பாடு செய்ய, பானுரேகா அவனை மேலும் கீழும் பார்த்து முறைத்து வைத்தார்.
பாலகிருஷ்ணன் தான், “உனக்கு இது கொஞ்சம் ஓவரா இல்ல!” என கேட்டிட, “இல்லையே…” என்று தோளைக் குலுக்கியதில், எனக்குன்னு வந்து சேர்த்துருக்கு பாரு… என்று தலையில் அடித்துக்கொண்டார்.
குடும்பத்தினரைக் கூட்டி, மாப்பிள்ளையாக இந்திரஜித்தை அமர வைத்து, நலுங்கு வைத்தனர்.
கல்யாணம் முடியட்டும் உனக்கு இருக்கு… மகனை மனதினுள் வறுத்தபடி பானுரேகாவும் நலுங்கு வைக்க, அவனுக்கோ ஒரே குஷியாக இருந்தது.
இறுதியில், சத்யரூபா மட்டும் இன்னும் வைக்காமல் இருந்ததில், “உனக்கு தனியா வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா?” என்றான் போலி முறைப்புடன்.
“நானா?” அவள் திகைத்து நிற்க, சாவித்ரி தான், “நீயும் வைக்கிறது முறை தான் சத்யா போ…” என்றதில், ஆனந்தி தான், “ம்ம்க்கும் எல்லாம் முறைப்படி நடக்குற மாதிரி தான்.” என்று சாடினார்.
அவர் பேச்சில் எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு, வேண்டா வெறுப்பாக அவனருகில் சென்றவள், ஒற்றை விரலால் சந்தனத்தை எடுத்து, அவன் கன்னத்தில் பட்டும் படாமல் பூசி விட்டு நகர எத்தனித்தாள்.
“ஏய் ரூப்ஸ்… என்ன இது? நலுங்கு வைக்க சொன்னா, சொரண்டிட்டு போற….? ஒழுங்கா, ஆத்மார்த்தமா சம்பிரதாயத்தை செஞ்சுட்டு போ.” என்று அவளை வம்பிழுக்க, அவளுக்கோ கோபம் தறி கெட்டு வந்தது.
“ஆத்மார்த்தமா தான? இந்தா வாங்கிக்க” என்று கை நிறைய சந்தனத்தை எடுத்தவள், அவன் முகம் முழுக்க பூசி விட்டாள்.
“பேசியல் பண்ணலைன்னு பீல் பண்ணுனீல. இப்ப சந்தன பேஷியல் பண்ணிக்கோ. பேஸ் பிரைட்டா இருக்கும்…” என்று பொறுமை இழந்து, அவன் முகத்தை சந்தனத்தால் நிரப்பிட, அவனோ பார்வையாலே எரித்தான்.
அவனது கோலம் கண்டு, இப்போது எரிச்சல் மறைந்து புன்னகை மலர்ந்திட, அவன் மேலும் கீழும் மூச்சு வாங்கியபடி முறைத்ததில், சிரித்தே விட்டாள்.
பழி வாங்கும் நோக்கில், இந்திரஜித்தும் கை நிறைய சந்தனத்தை எடுத்துக்கொண்டு அவளை நோக்கி வர, அவளோ திருதிருவென விழித்தபடி பின்னால் நகர்ந்தாள்.
“வேணாம் இந்தர்.” என சத்யா பின்வாங்க,
“பொண்ணோட தங்கச்சியும் பேஷியல் பண்ணிக்கிட்டா தான, நாளைக்கு வீடியோல பேஸ் ப்ரைட்டா இருக்கும்.” என்றதில்,
“சொன்னா கேளுங்க இந்தர். நீங்க மாப்பிள்ளை ஜோர்ல போய் படுத்து தூங்கிடுவீங்க. உங்க வேலையையும் என் தலைல கட்டிட்ட்டீங்க. எனக்கு வேலை நிறைய இருக்கு. ப்ளீஸ்…” என்றபோதும் சிரிப்பை மட்டும் அடக்க இயலவில்லை.
“நோ வே… எனக்கு கொடுத்ததை திரும்பி குடுத்து தான் பழக்கம் ரூப்ஸ் சோ…” என்றவாறு மேலும் நெருங்கிட அவள் குடுகுடுவென ஓடிப்போய் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.
சாவித்ரியும், தாமரையும் தான் சத்யாவை வியப்பாக பார்த்தனர். யாரிடமும் இலகுவாகப் பேசியது கூட இல்லை அவள். மாமன் மகனான எழிலழகனிடம் கூட, அடித்து பிடித்து குறும்பு செய்ததில்லை.
சிறிது நேரம் கழித்து, மெல்ல தலையை மட்டும் நீட்டி வெளியில் பார்த்தவளுக்கு, அங்கு யாரும் இல்லாது போனதில், நிம்மதி மூச்சு பரவியது.
இவனோட பெரிய ரோதனை… எனத் திட்டிக்கொண்டாலும், இதழ்கள் புன்னகைத்தே இருந்தது.
அந்நேரம், படக்கென அவளருகில் வந்த இந்திரஜித், அவள் எதிர்பாராத தருணத்தில், பாவையின் முகம் முழுதும் சந்தனத்தை பூசி விட, அவள் கண்ணை சுருக்கி முறைத்தாள்.
“ஹா ஹா” என வாய் விட்டு சிரித்து, “எப்படி நம்ம என்ட்ரி. என்கிட்ட இருந்து நீ தப்பிக்கவே முடியாது ரூப்ஸ்.” என சட்டைக் காலரை தூக்கி விட்டுக்கொண்டான் இந்திரஜித்.
அலைபாயும்
மேகா!