“ஐயோ! அம்மா” என யுக்தா அடித்த அடியில் மைத்ரேயன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு புலம்ப, “ரொம்ப வலிக்குதாடா மைதா?” எனக் கவலையுடன் கேட்டாள் ஷைலேந்தரி.
“கொய்யால… அவனைத் தூண்டி விட்டு வேணும்னே தான அடிக்க வைக்கிற” என சண்டை போடும் போதே குறிஞ்சி விறுவிறுவென உள்ளே வந்தாள்.
“ஷ்ஷு!” என்ற அதட்டலுடன் அவர்களுக்கு எதிரில் அமர்ந்தவளை மூவரும் ‘பே’ வெனப் பார்க்க, நந்தேஷ் “ஹே அழகி நீ உன் பியான்ஸ் இறந்த துக்கத்துல சுத்தாமா தூக்கலா மேக் அப் பண்ணிட்டு சுத்திட்டு இருக்க” என்றான் அவளது டிப் டாப்பான ஷர்ட் பேண்ட்டை பார்த்து.
‘இந்த நிலமைல கூட உனக்கு ரைமிங் கேக்குதுல’ என்ற ரீதியில் மற்ற இருவரும் அவனை முறைக்க, குறிஞ்சியோ பற்களைக் கடித்து “என் பேர் அழகி இல்ல. குறிஞ்சி” என்று அழுத்தமாக நினைவுப்படுத்தினாள்.
“அது இருக்கட்டும். நீ இங்க என்ன பண்ற?” எனக் கேட்டவனுக்கு பாவம் இன்னும் அவளது வேலையைப் பற்றி புரியவே இல்ல.
“ஐ ஆம் ஃபிரம் க்ரைம் பிரான்ச்” என அவள் கெத்தாக கூறியதில் நந்தேஷ் அதிர்ந்தான்.
ஷைலேந்தரியோ, “ஆனா மேட்ரிமோனி ப்ரொஃபைல்ல நீ ஹோம் மேக்கர்ன்னு தான போட்டு இருந்த?” என எகிற,
“எஸ், நான் அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன்ல இருந்தேன். அந்த டைம்ல என் வீட்ல மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ணிட்டாங்க” என்றாள்.
“இப்படி பொய் சொல்லி எங்களை ஏமாத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்குனதுக்கு உன் மேல நாங்க கேஸ் போடணும்” என்று மைத்ரேயன் முறைத்தான்.
“டேய் பத்து மாப்பிள்ளையைப் பார்த்துக்கே லட்சக்கணக்குல பில்லு போட்ட உங்களை தான்டா நான் உள்ள போடணும்” எனக் குறிஞ்சி கடிய,
“ஹே அது ஃபிக்சட் ரேட். நீ சிபிஐனு சொல்லிருந்தா டிஸ்கவுண்ட் பண்ணிருப்போம்…” என்று ஷைலேந்தரி தோளைக் குலுக்கினாள்.
“இப்ப விசாரணைக்கு நீங்க வந்துருக்கீங்களா இல்ல நான் வந்துருக்கேனா! மூடிக்கிட்டு கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க” எனக் குறிஞ்சி கேள்வியாக கேட்க எதற்கும் வாயை திறக்கவில்லை அவர்கள்.
—-
நினைவுகளைத் தனக்குள் புதைத்த யுக்தா சாகித்யன் மீண்டும் கண்ணில் தீவிரத்தை ஏற்றினான். சிவகாமியையும் விஸ்வயுகாவையும் வைத்திருந்த அறையை நோக்கிச் செல்ல, சிவகாமி மகளிடம் கண்ணாலேயே உத்தரவிட்டார்.
அவளோ அவரை நோக்கிக் கனல் பார்வை வீசினாள்.
“சித்தியைக் கொல்ல பார்த்தீங்களா?” ஒரே கேள்வி தான் கேட்டாள்.
சிவகாமி முகம் இறுக, “நம்ம குடும்பத்தோட தேவை இல்லாத களையைப் பிடுங்க நினைச்சேன்” என்றார் அசராமல்.
ஒற்றைத் துளி நீர் அவள் கன்னம் வழியே படையெடுக்க அவளது எண்ணங்களோ சீறிப் பாய்ந்து அஸ்வினியிடம் சேர்ந்தது.
விவரம் தெரிந்த நாள் முதலே, அஸ்வினியும் சௌந்தரும் அவ்வீட்டுக் குட்டி வண்டுகளின் செல்லங்கள். வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் சௌந்தருக்கும் அஸ்வினிக்கும் இவர்களுடன் தான் பொழுதே போகும்.
சிறு வயதில் மைத்ரேயனும் இவர்கள் வீட்டுப் பக்கத்தில் தான் இருந்தான். காலை முதல் மாலை வரையிலும் விஸ்வயுகாவின் வீட்டிலேயே தான் இருப்பான். நால்வருமே ஒரே பள்ளியில் படிப்பதனால் ஒன்றாகப் பள்ளிக்குச் சென்று வருவர்.
ஆனால், கண்டிப்பாக அஸ்வினி தான் உடன் வந்து அவர்களைப் பள்ளியில் விட வேண்டும். நால்வரும் பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை அதுவே அவர்களது வாடிக்கையானது.
அதிலும் விஸ்வயுகாவிற்கு அருகில் இருக்கும் கடைக்குக் கூட டெடி பியரைத் தூக்கிக் கொண்டு சுற்றும் சிறுமி போல, அஸ்வினியின் கையைப் பிடித்து இழுத்துச் செல்வாள்.
அப்படியும் இல்லையென்றால் மைத்ராவோ ஷைலாவோ அல்லது நந்தேஷோ அவளுடனே இருப்பார்கள். சிறு வயது முதலே அவளுக்கு இருட்டு என்றால் அத்தனை பயம். யாராவது இறந்து விட்டதாக தகவல் வந்தால் கூட அவளுக்கு ஏதோ ஒரு மாதிரி பயமாக இருக்கும். பேய் பிசாசு பயத்தைத் தாண்டி, அது இன்னவென்று விவரிக்க இயலாத பயமாக இருக்கும் அவளுக்கு. ஆனால், எப்போதும் கூடவே ஆள்கள் இருப்பதனால் அதனைப் பெரிதாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை.
அஸ்வினி சாகித்யனைத் தத்தெடுப்பது பற்றி சௌந்தரிடமும் பேசினார்.
கணவன் நடத்தும் பத்திரிகை அலுவலகத்தில் தான் எழுத்தாளராக இருந்தார் அஸ்வினி. சுவைபட பல செய்திகளைத் தொகுத்து வெளியிடும் பத்திரிகையாளனான சௌந்தருக்கு தனது குடும்பத்தில் இருக்கும் விஷச்செடிகளைப் பற்றி தெரியாமல் போனதுதான் ஆச்சர்யம்.
அலுவலகத்தை நிறுவும் போதே சிவகாமி போட்ட முதல் நிபந்தனை. “உன்னுடைய வேவு பார்க்கும் வேலை எல்லாம் எப்போதும் எங்களிடம் வரக்கூடாது” என்பதே! அதனைச் சிரத்தையாகக் கடைபிடிக்கும் சௌந்தர் அவர்கள் இருக்கும் திசைப்பக்கமே செல்ல மாட்டார்.
நன்றாக சென்று கொண்டிருந்த தொழில் தான். ஆனால் திருமணத்திற்குப் பிறகு மிகவும் இடிபடத் தொடங்கியது. ஏனோ என்னன்னவோ செய்தும் கூட சௌந்தரால் அந்தத் தொழிலில் காலூன்றி வெற்றி கொள்ள இயலவில்லை.
இருந்தும் அதனை விடாமல் பிடித்துக் கொண்டனர் கணவனும் மனைவியும்.
“என்னங்க…” தயக்கத்துடன் அஸ்வினி அவரை அழைக்க,
தொழிலில் ஏற்படும் வீழ்ச்சியில் வாடியிருந்தவர், “சொல்லுங்க மேடம்” என்றார் குறும்பை மீட்டு.
அதற்கு மெலிதான புன்னகையைக் கொடுத்து விட்டு, “எனக்கு தெரிஞ்ச ஒரு பையன்… சுனாமில ஃபேமிலியை இழந்துட்டான். அவனை நம்ம பார்த்துப்போமா?” எனக் கேட்கும் முன்னரே வியர்த்தது.
“பார்த்துப்போமான்னா புரியல. தத்து எடுத்துக்கலாமா?”
“கிட்டத்தட்ட ஆனா லீகலா வேணாம்” என்றவரைப் புரியாமல் பார்த்தார்.
“அதில்லை நம்ம வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. ஏற்கனவே நீங்க என்னை லவ் பண்ணதை தாங்க முடியாம தான் அத்தையும் மாமாவும் இறந்துட்டதா வீட்ல வருத்தப்படுறாங்க. இதுல குழந்தையை அடாப்ட் பண்ணுனா, இன்னும் தேவையில்லாத பிரச்சினை வரும். ஆனா எனக்கு அந்த பையனுக்கு ஏதாவது செய்யணும்னு தோணிக்கிட்டே இருக்குங்க. அவனோட படிப்பு செலவு, மத்த செலவுனு எல்லாமே நம்ம பார்க்கலாமா?” கெஞ்சலுடன் கேட்டார்.
“உனக்கு அவனை அடாப்ட் பண்ணனும்னா சொல்லு எந்த பிரச்சினை வந்தாலும் நான் பாத்துக்குறேன்…” சௌந்தர் தீர்க்கமாகக் கேட்டார்.
மனைவிக்காக எந்த எல்லைக்கும் செல்ல யோசிக்க மாட்டாரே. இந்தக் காதல் தானே, இத்தனை இடர்பாடுகள் இருந்தும் அவருடனே வாழச் செய்கிறது.
கண்ணை மூடித் திறந்த அஸ்வினி, “வேணாம்ங்க. அடாப்ட் பண்ண வேணாம். பட் நம்ம குழந்தைக்கு என்னலாம் செய்யணுமோ எல்லாம் செஞ்சு வளர்க்கலாம் யா… யாருக்கும் தெரியாம…” என்று இறுதி வரியை தயக்கத்துடன் உரைத்தார்.
“நீ ஏன் இவ்ளோ டீப்பா யோசிக்கிற?” மீண்டும் சௌந்தர் குழப்பமாகக் கேட்க,
வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கி கொண்டார்.
வேண்டாம்! அவனுக்கு நல்லது செய்வதாக எண்ணிக்கொண்டு இந்தக் குடும்பத்தில் மாட்டி விடவேண்டாம் என்று நினைத்தார் போல… அதன்படியே, அவன் இருப்பதற்கு தனி வீடு, பள்ளிக்கூடம் செல்ல ஆட்டோ, அங்கு அவனுக்கு சமைக்க ஒரு பெண்மணி என அடிப்படை விஷயங்களை மளமளவெனச் செய்தார் அஸ்வினி.
அவன் மீண்டும் பள்ளியில் சேர்வதற்கு பிறப்பு சான்றிதழ் முதல் அனைத்திற்கும் அவர் அலைய வேண்டியதாக இருந்தது.
“சாகித்யா… உனக்கு அப்ஜெக்ஷன் இல்லன்னா உன் பேர்ல சின்ன கரெக்ஷன் பண்ணிக்கட்டா” விழிகளை உருட்டி அஸ்வினி கேட்க, அவனும் வட்ட விழிகளை அங்கும் இங்கும் உருட்டினான்.
“அது… எனக்கு குழந்தை பிறந்தா யுக்தான்னு பேர் வைக்க நினைச்சேன். உனக்கு எப்படியும் எல்லாமே புதுசா வாங்கணும். அதனால இந்த பேரை சேர்த்துக்கட்டா…” எனக் கெஞ்சல் தொனியில் கேட்க,
“ஐ நல்லா இருக்கேமா பேரு… யுக்தா சாகித்யன் செவன்ட் ஸ்டாண்டார்ட். நல்லா இருக்கு பேரு” என்றவனை வயிற்றோடு கட்டிக்கொண்டார்.
ஆனால், ஏனோ சௌந்தரைக் கூட அவனைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
தனது மனைவி இத்தனை கட் அண்ட் ரைட்டாக இருந்ததில்லையே என யோசித்த சௌந்தருக்கும் அவரது மனநிலை புரியவில்லை.
யார் மூலமாகவேனும் சாகித்யனைப் பற்றி தெரிந்து விட்டால், சிவகாமி ஆட்டம் ஆடி தீர்த்து விடுவார்… அதிலும் தனக்கு மகனாக யாரையும் வளர விட மாட்டார் என்ற உண்மை அவருக்கு அத்துப்படி. அதனாலேயே வெகு கவனமாக சாகித்யனை கவனித்துக் கொண்டார். அவரும் அடிக்கடி அவனைப் பார்க்கச் செல்வதில்லை. வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறை மட்டுமே அவனைக் காண செல்வார்.
முதலில் இவற்றை எல்லாம் ஏற்க கடினமாக தான் இருந்தது சாகித்யனுக்கு. அதாவது இருந்தும் இல்லையென்ற நிலையில் அஸ்வினி அவனைத் தள்ளி இருந்தார். அவரது அரவணைப்புத் தேவைப்படும் நேரம் அவனுடன் அவர் இருந்ததில்லை. ஆனால் உடன் இருக்கும் நேரமெல்லாம் அவனுக்குத் தாயாக, உற்றத் தோழியாக, கல்வி கற்று கொடுக்கும் ஆசானாக பல அவதாரம் எடுப்பார்.
வளர வளர அவனுக்கு அஸ்வினியின் நடைமுறைகள், அவரது குடும்பத்தின் இடர்பாடுகள் அனைத்தும் புரிந்து போனது. அவரும் மனம் விட்டு அவனிடம் அனைத்துமே கூறி விடுவார்.
அவரைப் புரிந்ததுனாலயோ என்னவோ, அஸ்வினியை எதற்குமே அவன் தொந்தரவு செய்தது கிடையாது.
யாரிடமும் இவர் தான் தன்னை வளர்க்கிறார் என்று கூட சொல்ல மாட்டான். ஒருமுறை பள்ளியில் இவனது தாய் தந்தைப் பற்றி கேட்டபோது கூட அவர்கள் சுனாமியில் இறந்து விட்டதாகவும், யாரோ ஒரு ஸ்பான்சர் அவனைப் படிக்க வைப்பதாகவும் சொல்லிக்கொள்வான்.
அதனைக் கேட்டு அஸ்வினிக்கு உள்ளம் வேகும். அவனை ஊருக்கே அறிமுகம் செய்ய மனம் ஏங்கும். ஆனாலும் அடக்கிக்கொள்வார். எந்த விதத்திலும் அவரால் அவன் காயப்படக்கூடாது என்ற உறுதி அவரை அனைத்தும் செய்ய வைத்தது.
சௌந்தர் வலுக்கட்டாயமாக யுக்தாவிடம் அலைபேசியில் பேசிக்கொள்வார். அந்த உரையாடலைத் தடுக்க அஸ்வினிக்கும் மனம் வரவில்லை. அவருக்கும் பிள்ளைகள் பற்றிய கனவு இருக்கும் தானே!
அவனது பள்ளி வாழ்க்கை இப்படியே நகர, அவனுக்கும் அஸ்வினிக்குமான பிணைப்பு பெற்ற மகனின் பிணைப்பைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு பலமாக வளர்ந்தது.
இந்த ரகசியத்தைப் பற்றி விஸ்வயுகாவிடம் கூட மூச்சு விடவில்லை அஸ்வினி. ஆனால், அவளுக்குத் தெரியவரும் நாளும் வந்தது.
பத்தாவதிலும் பதினொன்றாவதிலும் மாநில அளவில் முதல் மாணவனாக வந்தான் யுக்தா. விஸ்வயுகா பத்தாவது படிக்கும் போது தான் அவன் கல்லூரி முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தான்.
அந்நேரம் கல்லூரியில் ஏதோ தகராறு ஆனதில், யுக்தாவை சஸ்பெண்ட் செய்தனர் கல்லூரி நிர்வாகத்தினர்.
எப்போதும் அஸ்வினிக்கு எந்த பிரச்சினையும் நேராதவாறு யார் வம்பிழுத்தாலும் தன்னை அடக்கிக்கொள்வான். ஆனால் இம்முறை அடிதடி சண்டை நிகழ்ந்து விட்டது.
சக மாணவனுடன் சண்டையிட்டு அவன் வாயை உடைத்திருந்தான் யுக்தா.
தலையைத் தொங்கப் போட்டு வீட்டின் சோபாவில் அமர்ந்திருந்த யுக்தாவை முறைத்தார் அஸ்வினி.
“நீ எப்பவும் இந்த மாதிரி பிரச்சினைக்கு எல்லாம் போக மாட்டியே யுகி இப்ப என்ன ஆச்சு?”
“நான் வேணும்னு பண்ணலமா. அவன் தான் தேவையில்லாம வம்பிழுத்தான். விடுங்க 10 நாள் தான சஸ்பெண்ட் பண்ணாங்க” என முணுமுணுத்துக் கொண்டவனை மேலும் முறைத்தார்.
“நீ இதுவரை ஸ்கூல், காலேஜ்ல ஒரு நாள் கூட லீவ் எடுத்தது இல்ல யுகி. ஒரு க்ளாஸ் கூட கட் பண்ணதும் இல்லை. டெடிகேடட் ஸ்டூடண்ட்னு பேர் வாங்கியிருக்க… இந்த ஒரு இன்சிடெண்ட் உன் பேரை மொத்தமா கெடுக்க நான் அலோ பண்ண மாட்டேன். கண்டிப்பா உன் மேல தப்பு இருக்காது. என்ன நடந்துச்சுன்னு சொல்லு” எனக் கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லமா. விடுங்க” என அவன் சொல்ல மறுக்க, “என்கிட்ட சொல்ல மாட்ட அப்படி தான… என்னை உன் அம்மாவா நினைச்சு இருந்தா சொல்லிருப்பீல” என்றவரை இப்போது அவன் முறைத்தான்.
“எதுக்கு இவ்ளோ கேவலமா சென்டி டயலாக் பேசுறீங்க? விடுங்களேன்” என்றவனை அவர் விடவில்லை.
“நீ பொறுக்கித்தனமா எவனையோ அடிச்சதை என்னால ஏத்துக்க முடியல யுகி…”
“ப்ச், அவன் ஏஞ்சலைத் தப்பா பேசுனான். அதான் அடிச்சேன் போதுமா” எனப் பொறுமை இழந்து கூறியவனை விழி அகலப் பார்த்தார்.
அத்தியாயம் 38
அவனுக்கு விஸ்வயுகா பற்றிய விவரங்கள் அனைத்தும் அத்துப்படி. அஸ்வினி தான் அவளைப் பற்றி ‘ஆஹா ஓஹோ’ என்று ஒன்று விடாமல் கூறி விடுவாரே. அதில் இருந்து அவனுக்கும் அவள் ஏஞ்சலாகிப் போனாள். அவளது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை எல்லாம் கொண்டு வந்து காட்டுவார்.
முன்னெற்றி முடிகளை நெற்றி முழுதும் பரவ விட்டு, போனி டெய்லில் மீதி முடியை அடக்கிக்கொள்ளும் அவளது சிகை அலங்காரமும், குழந்தை முகமும் ஒரு நிமிடத்திற்கும் மேலாக அவனைப் பார்க்க வைக்கும்.
இன்னதென்று நெஞ்சம் உணரும் முன்னரே அவனை ஈர்த்தவள். ஆகினும் சிவகாமியின் பெண் என்ற ஒரே காரணத்தினால் அவளைப் பற்றிய உரையாடல்களை முற்றிலும் தவிர்த்து விடுவான்.
ஆனால், அந்தத் தடையையும் உடைக்கும் படி ஒரு நாள் அஸ்வினி அவளைப் பற்றி பேசினார்.
“ஏஞ்சல் இந்த வருஷம் அஞ்சு பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிருக்கா தெரியுமா யுகி” எனப் பெருமையாய் பேசியவரை அசட்டையுடன் பார்த்தவன் “அவங்க கிட்ட இருக்குற பணத்துக்கு ஃபீஸ் கட்டவும் முடியும் ஃபீஸை புடுங்கவும் முடியும்” என்றான் ஏளனமாக.
அதில் சட்டென முகம் மாறியவர், “அவ அக்கா மாதிரி கிடையாது யுகி. அவள் மட்டும் இல்ல என் பசங்க நாலு பேருமே ரொம்ப ஸ்பெஷல்… ஸ்ஸ் சாரி… உன்னோட சேர்த்து அஞ்சு பேர். அக்கா அவளுக்கு குடுக்குற பாக்கெட் மணியை எல்லாம் சேர்த்து வச்சு, இதெல்லாம் செய்வா” என்றதில் அழுத்தம் குறைந்தவனாக “வளர்ப்பு நீங்களாச்சே. சோ உங்களுக்கு தான் அந்த க்ரெடிட்” என்பான் அப்போதும்.
ஆனால், அதன்பிறகு அவரது நான்கு செல்லப்பிள்ளைகளின் பேச்சுகளை தடை சொல்வதில்லை.
இப்போது அவளைப் பற்றி ஒருவன் தவறாக பேசியதற்கு அடிக்கும் அளவு சென்றிருக்கிறான் என்றால் ஆச்சர்யமாக தான் இருந்தது அஸ்வினிக்கு.
“நீ எப்ப ஏஞ்சலைப் பார்த்த அவள் உன்னைப் பார்த்தாளா?” ஆர்வமாக அஸ்வினி வினவ,
“இல்லமா. எங்க காலேஜ்ல குட் டச், பேட் டச் பத்தி 16 வயசுக்குள்ள இருக்குற பசங்களுக்கு கவுன்சிலிங் குடுக்குறதுக்காக ஸ்டூடண்ஸ் வச்சே ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணாங்க. அதுல நானும் ஒரு டீம் லீடர். என் டீம்ல இருக்குற பசங்களைக் கூட்டிக்கிட்டு ஒவ்வொரு வாரமும் ஒரு ஸ்கூல்க்கு போவோம். என்ன தான் டீச்சர்ஸ் அதை பத்தி டீச் பண்ணாலும், நாங்களே சென்சிபிள் விஷயத்தைப் புருஞ்சு அதை எங்க ஜெனரேஷன்க்கு பரப்புனா இன்னும் பெட்டரா புருஞ்சுப்பாங்கள்ல… அதனால பாய்ஸ்க்கு ஒரு டீம், கேரள்ஸ்க்கு ஒரு டீம்னு இருப்போம். சோ, அப்படி நாங்க போகும் போது இந்த வாரம் உங்க ஏஞ்சல் படிக்கிற ஸ்கூலுக்குப் போனோம். ஆனா அவள் க்ளாஸ்க்குப் போகல. ஹயர் செகண்டரி பசங்களுக்கு மட்டும் கவுன்சிலிங் பண்ணிட்டு திரும்பி காலேஜ்க்கு வந்துட்டோம்.
அப்போ என் டீம்ல இருக்கற ரெண்டு பசங்க போனைப் பார்த்து குசுகுசுன்னு பேசிட்டு இருந்தானுங்க. என்னன்னு போய் பார்த்தா ஸ்கூலுக்குப் போன இடத்துல சின்னப் பொண்ணுங்களை தப்பா போட்டோ எடுத்துட்டு வந்துருக்கானுங்க. இந்த மாதிரி ஒன்னு ரெண்டு பசங்க இப்படி தப்பா இருக்கறதுனால தான ஒட்டு மொத்த பசங்களுக்கும் கெட்ட பேர். இதை பத்தி வெளில சொன்னா, டீம்ல இருக்குற நல்ல பசங்களோட இமேஜும் சேர்ந்து தான ஸ்பாயில் ஆகும்.
அது மட்டும் இல்ல அந்த ஸ்கூல்ல கேன்டீன்கு போயிருக்குறப்ப அங்க ஏஞ்சலையும் போட்டோ எடுத்துருக்கானுங்க. இதுல அந்த போட்டோவைப் பார்த்து அசிங்கமா வேற பேசிக்கிட்டானுங்க. அதுல ஏஞ்சல் போட்டோவைப் பார்த்து எனக்கு எவ்ளோ டென்சன் ஆச்சு தெரியுமா? அவன் போனைப் பிடுங்கி உடைச்சுப் போட்டுட்டேன். ஆனாலும் கோபம் அடங்கல. அதான் அடிச்சுட்டேன்” என வீர ஆவேசமாகப் பேசியவனைக் கன்னத்தில் கை வைத்துப் பார்த்தார் அஸ்வினி.
“ம்ம் அப்பறம்?” அவர் ஆர்வமாகக் கதை கேட்க,
“அட அம்மாவே நான் என்ன கதையா சொல்றேன். உங்களுக்கு ரத்தம் கொதிக்கல…” என மூச்சிரைக்க கேட்டான்.
“அதான் நீ கொதிச்சு அவனைக் கொத்திட்டு வந்துட்டியே யுகி. சரி நீ உண்மைய சொல்லி மேனேஜ்மெண்ட்ல பேசி இருக்கலாமே!”
“அதெல்லாம் பேசுனேன். அவங்க ஆதாரம் கேட்டாங்க. நான் தான் போனை சுக்கு நூறா உடைச்சுட்டேனே. எங்க போய் ஆதாரம் எடுக்க. அது அவனுக்கு சாதகமா போச்சு. கேர்ள்ஸ் டீம ஹேண்டில் பண்ணுன குறிஞ்சியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தா ஆனா கேட்கவே இல்லை. கடைசியா சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க…” என்றான் உதட்டைப் பிதுக்கி.
ஆனால் அவன் நினைத்தது போல வெறும் சஸ்பெண்ட்டோடு நிற்கவில்லை. அவன் அடித்த மாணவன் பெரிய இடத்தைச் சேர்ந்தவன். அதனால் இவனை டிஸ்மிஸ் செய்யவே வைத்து விட்டான்.
விஷயம் அறிந்த குறிஞ்சி யுக்தாவிற்கு போன் செய்தாள்.
சஸ்பென்ஸனை சோம்பலுடன் கழித்துக் கொண்டிருந்தவன், அவளது அழைப்பை ஏற்க, அவள் அவசரமாக விஷயத்தைக் கூறினாள்.
“வாட் டிஸ்மிஸா?” என யுக்தாவும் அதிர்ந்தான்.
மறுபடியும் வேறொரு கல்லூரியில் சேர்வது ஒன்றும் அவனைப் பொறுத்தவரையில் சாதாரணம் இல்லையே. ஏற்கனவே அவன் மறுக்க மறுக்க லட்சக்கணக்கில் கட்டணம் கொடுத்து புகழ்பெற்ற கல்லூரியில் அவனை சேர்த்திருந்தனர் அஸ்வினியும் சௌந்தரும்.
அவனுக்கே தர்மசங்கடமாகி விட்டது. அவனைத் தங்கத் தட்டில் தாங்கும் அளவிற்கு அவர்களுக்கு தொழிலில் ஏற்றமில்லை என அவனுக்கு தெரியம். அவர்களுக்கு பாரமாகி விடக் கூடாது என்ற எண்ணத்தில், கல்லூரி சேர்ந்ததும் தானே சமைத்துக் கொள்வதாகக் கூறி, சமையல் ஆள்களையும் நிறுத்தி விட்டான். அதிக வாடகை கொடுத்து பெரிய வீடாக பிடித்து அவனை வைத்திருந்தனர். அதுவும் தனக்கு அதிகமாக இருக்கிறதெனக் கூறி பிடிவாதம் பிடித்து பூந்தமல்லி அருகில் வாடகை கம்மியான பழைய அபார்ட்மெண்ட்டைப் பிடித்துக் கொண்டான். இப்போது வரை அங்கு தான் இருக்கிறான்.
கல்லூரியில் சேர்ந்ததும், தானும் பகுதி நேர வேலைக்குச் செல்வதாகக் கிளம்பியவனை தலையில் தட்டி அமரச் செய்தார் அஸ்வினி.
“போதும் யுகி இப்படி எல்லாம் செய்யாத. எனக்குக் கஷ்டமா இருக்கு. உனக்கு செய்ய முடியாத அளவு நாங்க அடிமட்டமா போய்டல. இதுக்கு மேல நீ எங்களை கம்ஃபர்ட் பண்றதா நினைச்சு எல்லாத்தையும் சாக்ரிஃபைஸ் பண்ணாத யுகி…” என்றவரின் கண்கள் நீரால் நிறைந்தது.
“நீங்க பண்ண சாக்ரிஃபைஸ் தான் என் மொத்த வாழ்க்கையும். இதுல நான் புதுசா என்ன சாக்ரிஃபைஸ் பண்ணப் போறேன்” என இலகுவாகப் பேசி அவரை சமன்படுத்தியவன், வேலைக்குச் செல்லும் திட்டத்தை ஒத்தி வைத்தான்.
சௌந்தரும் அலைபேசியில் அவனைக் கடிந்து கொண்டதில் அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை.
இப்படி பார்த்து பார்த்து அவர்களுக்கு பாரம் நேராதவாறு நடந்து கொண்டவனுக்கு இந்தச் சம்பவம் பெரும் மனக்கஷ்டத்தைக் கொடுத்தது. அதற்காக விஸ்வயுகாவிற்காக அவனை அடித்தது தவறு என்றெல்லாம் எண்ணவில்லை. இப்போது நினைத்தாலும் இரத்தம் சூடேறி கோபத்தைக் கிளறியது அவனுக்கு.
சௌந்தர் வேலை விஷயமாக வெளியூருக்குச் சென்றிருக்க, அஸ்வினிக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளாக கல்லூரி நிர்வாகத்திடம் பேசவும் பயம். ஏதோ ஒரு வகையில் சிவகாமிக்கு உண்மை தெரிய வந்து விட்டால்?
செய்யும் வழி தெரியாமல் திணறியவர் வேறு வழியற்று விஸ்வயுகாவிடமே வந்து நின்றார்.
—-
வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன்மடியில் தூங்கினால்
போதும் அதே கணம் என் கண் உறங்க…
ஐ பாடை காதில் மாட்டிக்கொண்டு இசையில் மூழ்கி இருந்த விஸ்வயுகா, வாய்விட்டே பாடிக்கொண்டிருந்தாள். அவளது அறையை ஒட்டிய பால்கனியில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் நீல நிற சட்டையும், சிவப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்து தலையை ஆட்டி ரசித்திருந்தாள் பாடலை.
அவளை இடுப்பில் கை வைத்துப் பார்த்த அஸ்வினி, வேகமாக காதில் இருந்து ஹெட் ஃபோனை பிடுங்கினார்.
அதில் தான் கண்ணைத் திறந்தவள், “சித்தி… நல்ல பாட்டு கேட்கும் போது டிஸ்டர்ப் பண்றீங்களே” என முறைக்க,
“முளைச்சு மூணு இலை விடல. வசீகரா பாட்டு கேக்குதா உனக்கு. பத்தாவது பரீட்சை ஆரம்பிக்கப் போகுது ஞாபகம் இருக்குல்ல? ஷைலுவைப் பாரு விழுந்து விழுந்து படிச்சுட்டு இருக்கா”
“ப்ச், எப்டினாலும் எனக்கு அந்த அம்பது அறுபதை தாண்டாது. எனக்கு மேக்ஸ்ல பாஸ் மார்க் வந்தா கூட போதும். 100 மார்க் எடுக்கப் போறவங்க தான் முக்கி முக்கி படிக்கணும். என் டார்கெட்டே 50 தான்” என சிரித்தவளைக் கண்டு தலையில் அடித்தார்.
“ஒழுங்கா படிக்கலாம்ல?”
“நானா படிக்க மாட்டுறேன்னு சொல்றேன். வர மாட்டேங்குதே. ஒரு அளவுக்கு வேற எனக்கு மக்கர் பண்ண முடியல. சரி இப்ப எதுக்கு வாண்டடா வந்து அட்வைஸ் பண்ணிட்டு இருக்கீங்க? வாட் இஸ் த மேட்டர்?” என்றாள் ஊஞ்சலில் சம்மணம் போட்டு.
“அது…” எனத் தயங்கி நின்றவரை புருவம் சுருக்கிப் பார்த்தாள்.
“என்ன சித்தி சொல்லுங்க” அவள் ஊக்குவிக்க, “ஏஞ்சல் நான் உங்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்பேன் ஏன் எதுக்குன்னு கேட்காம செய்வியா?” என்றார்.
“என்ன செய்யணும்னு சொல்லுங்க சித்தி. யாரையாவது போட்டு தள்ளணுமா?” என முறுக்குடன் கேட்டபடி கையில் அணிந்திருந்த தங்க காப்பை பின்னால் நகர்த்தினாள்.
“அயோ அப்பா பயமா இருக்கு எனக்கு…” எனப் போலியாகப் பயந்த அஸ்வினியைக் கண்டு அவளுக்கு சிரிப்பு பீறிட, அஸ்வினியும் வாய் விட்டுச் சிரித்தார்.
பின் மீண்டும் ஒரு வித தயக்கத்துடனே ஆரம்பித்தார்.
“எனக்குத் தெரிஞ்ச ஒரு பையனோட காலேஜ்ல ஒரு சின்னப் பிரச்சினை. அவனை டிஸ்மிஸ் பண்றதா இருக்காங்க. அக்காவுக்குத் தெரியாம இதை எப்படியாவது டீல் பண்ணி அவனை திரும்ப காலேஜ்ல சேர்க்க சொல்லணும் ஏஞ்சல். உன் சித்தப்பாவும் ஊர்ல இல்ல. என்ன செய்யன்னு தெரியல…” என கையைப் பிசைந்தார்.
“இருங்க இருங்க முதல்ல யார் அந்தப் பையன்? நமக்குத் தெரிஞ்ச எந்தப் பையனும் காலேஜ் படிக்கலையே. நந்துவும் மைதாவும் இப்ப தான் 12த் படிக்கிறானுங்க” என சிந்தித்தாள்.
“இது உனக்குத் தெரிஞ்ச பையன் இல்ல. எனக்குத் தெரிஞ்ச பையன்.”
“பாருடா. எனக்குத் தெரியாம யாரு அது உங்களுக்கு மட்டும் தெரிஞ்ச பாய்!”
“ப்ளீஸ் என்கிட்ட விளக்கம் கேட்காத ஏஞ்சல்” அஸ்வினி கெஞ்சுதலாகப் பார்க்க, அவரை ஒரு நொடி அமைதியாகப் பார்த்தவள், “சரி விடுங்க. உங்க சொந்தப் பொண்ணுன்னா விளக்கம் சொல்லுவீங்க. அடுத்தவன் பொண்ணு தான…” முணுக்கென வந்த கோபத்தைக் காட்டி விட்டாள்.
“ப்ச் ஏஞ்சல்!?”
“பின்ன என்ன சித்தி… என்னமோ யார்கிட்டயோ பேசுற மாதிரி இன்ஸ்டால்மெண்ட்ல விஷயத்தை சொல்றீங்க. போங்க…” எனச் சிலுப்பிக் கொண்டதில், வேறு வழியற்று அவளிடம் உண்மையைக் கூறி விட்டார்.
“சித்திஈஈஈ… இதை ஏன் என்கிட்ட சொல்லல. யுகியையும் நம்ம இங்கயே கூட்டிட்டு வரலாமா? நீங்க ஏன் அவனை அடாப்ட் பண்ணல?”
“ஏன் சித்தி பூந்தமல்லில கொண்டு போய் வச்சிருக்கீங்க அவனை… பக்கத்துலயே இருந்தா பார்த்துக்கலாம்ல அப்ப அப்ப… இங்க இருந்து பல கிலோ மீட்டர் இருக்கு வீடு.”
“யுகி உங்களை எப்படி கூப்பிடுவான்?”
“இப்ப என்ன படிக்கிறான்?”
“அவனை இன்ட்ரோ கொடுங்களேன்”
மேலோட்டமாக சுனாமியில் பெற்றோரை இழந்தவன் என்பதை மட்டுமே கூறி இருந்தார் அஸ்வினி. அதற்கே அவள் பல கேள்வி கேட்டு விட்டாள்.
அனைத்திற்கும் அமைதியையே பதிலாகக் கொடுத்தவர், “உன் அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது ஏஞ்சல். முதல்ல உன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்து” என்று அவளை அடக்கினார்.
அதில் தான் சற்று நிதானித்தவள், “ஏன் சித்தி இவ்ளோ வருஷமா என்கிட்ட இதை சொல்லல. சரி மைதாவையாவது போய் அவன் கூட அப்போ அப்போ இருக்க சொல்லலாம். பாவம் தனியா எப்படி இருப்பான்…” என்றவளுக்கு இதுவரை முகம் கூட பார்த்திராதவனின் மீது அக்கறை பொங்கி வழிந்தது.
“ஐயோ ப்ளீஸ் ஏஞ்சல். தயவு செஞ்சு இது நமக்குள்ளேயே இருக்கட்டும். இப்ப கூட ஒரு ஹெல்ப் கேட்டு தான் இதை சொல்றேன். இல்லைனா உங்கிட்ட இதை நான் சொல்லிருக்கவே மாட்டேன்” என்று உறுதியாகக் கூறியவரைக் கண்டு அவளுக்கும் வருத்தம் மிகுந்தது.
“என்கிட்ட கூடவா? “உர்ரென்ற முகத்துடன் கேட்டவளுக்கும் அவளது குடும்பத்தைப் பற்றி தெரியாமல் இல்லை.
அதனால் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “சரி இப்ப நான் செய்யணும்?” என்றதும் அவர் நடந்த பிரச்சினையைக் கூறினார்.
விஸ்வயுகா தான் திகைத்து விட்டாள்.
“ஆஃப்டர் ஆல், ஒரு போட்டோ எடுத்ததுக்கா அடிச்சான்? காட்! யுகி என் ஸ்கூலுக்கு வந்தானா? முன்னாடியே தெரிஞ்சுருந்தா அங்க பார்த்துருப்பேனே. சே மிஸ் பண்ணிட்டேன்” என கையில் அடித்துக் கொண்டாள்.
“அவன் போட்டோ இருக்கா சித்தி” எனத் தனக்காக ஒருவனை அடித்த ஆண்மகனைப் பார்க்க ஆர்வம் பொங்கியது. அவளது வயதும் ஆர்வத்திற்கு ஒரு காரணம் தான்.
“ம்ம் இருக்கு” என அவரது போனில் இருந்த யுக்தாவின் புகைப்படத்தைக் காட்டினார்.
“அவ்வ்வ்… செம்ம ஹேண்ட்ஸம்மா இருக்கான் சித்தி. இந்த மாதிரி பசங்க எல்லாம் நான் வெளில போகும் போது கண்ணுல பட மாட்டுறானுங்க” என வருத்தம் வேறு கொண்டவளை வெட்டவா குத்தவா ரீதியில் முறைத்தார் அஸ்வினி.
“நீங்க ஏன் கோபப்படுறீங்க. இவனை நீங்க அடாப்ட் பண்ணலைல?” என புருவம் சுருக்கி சந்தேகமாகக் கேட்க,
“அதுக்கு?” என அவள் காதை பிடித்தார்.
“அட சைட் அடிக்கக் கூட கூடாதா சித்தி. அழகான பசங்களை எல்லாம் அண்ணனாக்கிடாதீங்க ப்ளீஸ்!” என்று கண்ணைச் சுருக்கிக் கெஞ்ச, பற்களைக் கடித்தவர், “ஏஞ்சல்ல்ல்ல்ல்ல்” என்றார் பொறுமை இழந்து.
“சரி சரி டென்சன் ஆவாதீங்க. அவன் படிப்புக்கு எந்த பிராப்ளமும் வராது. அதுக்கு நான் கியாரண்ட்டி” எனக் கண் சிமிட்டியவளின் இள நெஞ்சினுள் சிறு தடம் பதித்தான் ஆடவன்.
மோகம் வலுக்கும்
மேகா
சூப்பர்