Loading

சாவித்ரி நடந்ததை அறிந்து கையைப் பிசைந்துக் கொண்டிருந்தார்.

“இந்த பொண்ணு, புகுந்த வீட்ல இருக்கோம்ன்ற எண்ணம் இல்லாம, வீட்ல சொல்லிக்காம கொள்ளாம கோச்சுட்டு போய்ட்டாளே. இவளை என்ன தான் பண்றதோ. கோபம் வந்துட்டா, காச் மூச்ன்னு கத்தி கத்தியே, ஜீவனை வாங்குறா.” எனப் புலம்பியவருக்கு, இரு பெண்களும் அங்கு இல்லாமல், என்னவோ போல் இருந்தது.

அலுவலகம் கிளம்பும் பொருட்டு, ஏனோ தானோவென கிளம்பி வந்த இந்திரஜித்தை சங்கடத்துடன் பார்த்தவர், “இவளுக்கு ஏன் தான் இவ்ளோ அழுத்தமோ. நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி. போய் நாலு குடு குடுத்து, இங்க அனுப்பி விடுறேன்.” என்று கடிந்தவருக்கு, நடந்த விஷயங்கள் எதுவும் முழுதாக தெரியவில்லை. தெரிந்தாலும் கூட, பெண்ணல்லவா பொறுத்துப் போகவேண்டும் என எண்ணும் பழமைவாதி.

சாவித்ரியின் கூற்றில், ‘ம்ம்கும். அவள் இதுக்கும் நான் தான் காரணம்ன்னு என்ன வந்து தாளிக்கவா…’ என மனதினுள் சலித்துக்கொண்டு,

“பாட்டி” என்றான் கண்டிப்பாக.

“இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடக்குற பிரச்சனை. கோச்சுட்டு போனவளை திரும்பி வர வைக்க எனக்கு தெரியும். அதை நான் பாத்துக்குறேன். யாரும், யாருக்கும் அட்வைஸும் பண்ண வேணாம். இந்த விஷயத்துல தலையிடவும் வேணாம். ப்ளீஸ்.” என்றான் அழுத்தமாகவே.

அதில், அவரும் அமைதியாகி, “சரி நான் எதுவும் உங்க பொண்டாட்டிகிட்ட கேட்கல. என்னை அங்க கொண்டு போய் விடுறீங்களா.” எனத் தயக்கமாக கேட்டார்.

“கொண்டு போய் விடுறேன். ஆனா, சாயந்தரம் வந்து உங்களை திரும்பி கூட்டிட்டு வந்துடுவேன். ஏன், உன் பேத்திங்க இருந்தா தான் இருப்பீங்களா.” என்று கண்ணை சுருக்கிக் கேட்க,

“ஐயோ அப்படி இல்ல தம்பி. தனியா என்ன செய்றாளுகளோன்னு தான்…” என இழுத்ததில், அவனும் ஒன்றும் சொல்லாமல் வைஷாலியின் வீட்டில் இறக்கி விட்டான்.

“உள்ள வந்துட்டு போங்க தம்பி.” என சாவித்ரி அழைக்க, “ஆபிஸ்க்கு டைம் ஆச்சு பாட்டி. சாயந்தரம் வரேன்.” என்றவன், புயல் வேகத்தில் கிளம்பி விட்டான்.

உள்ளே வந்தவரோ, எழில் அடி வாங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, “அடியேய். நிறுத்துடி.” என சத்யரூபாவை அதட்ட, “ஒழுங்கா போய்டு ஆயா.” என்றாள் கடுப்பாக.

“தெய்வமே… சரியான நேரத்தில வந்து என்னை காப்பாத்தி இருக்க.” என எழில் சாவித்ரியின் பின் ஒளிந்து கொள்ள, அவரோ வைஷாலியின் தோள்பட்டையில் அடி ஒன்று வைத்தார்.

“நீ என்னடி வேடிக்கை பார்த்துட்டு இருக்க.” என முறைக்க, “என்னை என்ன ஆயா பண்ண சொல்றீங்க. இங்க இவ்ளோ பிரச்சனை போயிட்டு இருக்கு, இவருக்கு கேசரி வேணுமாம்.” என்று பதிலுக்கு முறைத்தாள்.

பின், நினைவு வந்தவளாக, “நீங்க எப்படி ஆயா வந்தீங்க?” எனக் கேட்க, “இந்தர் மாப்பிள்ளை தான் கொண்டு வந்து விட்டாரு.” என்றதும், அத்தனை நேரமும், எழிலை முறைத்துக்கொண்டிருந்த சத்யரூபா தடுமாறினாள்.

அவளது அனுமதியின்றியே விழிகள் வாசலில் பயணிக்க, அவளை ஆராய்ந்தபடியே எழில், “வந்துருக்கானா?” எனக் கேட்டு வெளியில் செல்ல போனான்.

“இல்லடா… ஆபிஸ்க்கு நேரமாச்சுன்னு கிளம்பிட்டாரு.” என்றதும், ஏதோ ஒரு ஏமாற்றம் பெண்ணவளுக்கு.

‘உன் வாழ்க்கைக்குள்ள நான் வந்துருக்கவே கூடாது…’ ஏனோ அவ்வார்த்தை இப்போது சுட்டது.

‘வந்துருக்க கூடாதுன்னா, என்ன அர்த்தம்? செய்றதை செஞ்சுட்டு, கோச்சுட்டு போனா, நைட்டு ஆகிடுச்சு காலைல போன்னு சொல்றான். இல்லனா, அவனே கொண்டு வந்து விடுறான். அவனுக்கு என்ன… எப்பவும் இந்த வைஷுவும் எலியும் தான் முக்கியம்.’ என்றவள், தானும் சுட சுட பேசி விட்டு வந்தது உறைக்கவில்லை.

‘ஓஹோ… ப்ரெண்டுன்றனால தான் சார், ஆனா ஊனா, வைஷு வைஷுன்னு அவளையே இழுத்தானோ. எப்படி ஏமாத்தி இருக்கான். பிராடு. நானும் அவனை நம்பி இருக்கேன்ல என்னை சொல்லணும்.’ என மீண்டும் கண்ணில் நீர் திரையிட, கோபம் கொஞ்சம் கொஞ்சமாக பரவியது.

வீடு வரைக்கும் வந்தும், தன்னைக் காணவில்லை என்ற ஆதங்கத்தைக் காட்டுவதா, கோபத்தை வெளிப்படுத்துவதா எனப் புரியாமல் நொந்தவளுக்கு அனைத்தையும் மீறி, அவன் பிரிவில் தள்ளாடிய காதல் மேலெழும்பி ஆட்டம் போட்டது.

இங்கோ, வேலையில் கவனத்தை செலுத்த இயலாமல் தவித்தான் இந்திரஜித். அவளைப் பார்க்கக் கெஞ்சும், கண்களுக்கு என்ன தெரியும் இதயம் படும் பாடு! கோபத்தை சரி செய்ய அவனால் இயலும், ஆனால், இத்தனை நாட்கள் தன்னுடன் இருந்தும் கூட, தன் காதலை புரிந்து கொள்ளாதவளுக்கு என்ன விளக்கம் கூற இயலும்?

‘உரசுறதுக்காகவா கல்யாணம் பண்ணுனேன்.’ என்ற வலி மிகுதியாய் அவனிடம் காணப்பட்டது.

கடினப்பட்டு மதியம் வரை பொழுதை நகர்த்தியவன், அதற்கு மேல் முடியாமல், சாவித்ரியை அழைக்கும் பொருட்டு, தன்னவளின் தரிசனத்தையும் கண்டு விட எண்ணி, அவசரமாகக் கிளம்பினான்.

————

அன்று விடுமுறை எடுத்திருந்த வைஷாலிக்கு, எழிலிடம் தனியாக பேச வேண்டியது இருந்தது.

ஆனால், சாவித்ரி இருந்ததில் எதுவும் பேச முடியாது போக, “ஆயா, நானும் அவரும் கோவிலுக்கு போயிட்டு வரோம். அவளை பாத்துக்கோங்க.” என்று விட்டு கணவனைப் பார்க்க, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா…’ என்ற மைண்ட் வாய்ஸ் தான் அவனுள் ஓடியது.

“நான் ஆட்டோ பிடிச்சுட்டு வரேன்…” என்று அவன் வேகமாக நகர, “இல்ல. என் வண்டி இங்க தான் நிக்குது. அதுலயே போகலாம்” என்றதும், ‘கண்ணா, இன்னொரு லட்டு தின்ன ஆசையா?’ எனக் குதூகலித்தான்.

“ஓ! போலாமே!” என தலை சரித்து புன்னகைத்தவனின் பாவனை, சட்டென அவளை சிவக்க வைத்தது.

‘எதுக்கு இப்படி சிரிக்கிறாராம்?’ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு அவனுடன் ஸ்கூட்டியில் கோவில் நோக்கி சென்றாள்.

கவனமாக, பின்னால் நகர்ந்து அமர்ந்திருந்தவளை, கண்ணாடி வழியே கடுப்புடன் ஏறிட்டவன், “பார்த்து, பின்னாடி நகர்ந்துக்கிட்டே போய், கீழ விழுந்துடாத. அப்பறம், அதுக்கும் உன் தங்கச்சி, என்னை தான் அடிப்பா.” என்றான் உதட்டை சுளித்து.

“வாங்கிக்கங்க.” என்று அவள் தோளை குலுக்கிக் கூற, “உனக்கு பயம் விட்டு போச்சு பேபி.” என ரசனையுடன் பார்த்தான்.

அதற்குள் கோவிலும் வந்திருக்க, “ஆமா, இவர பார்த்து தான் நாங்க பயப்படுறோம்” என சிலுப்பிக் கொண்டு உள்ளே சென்றாள்.

அவளது பாவனைகள் அனைத்தும், அவனை ரசிக்க வைத்தது.

இருவரும், கோவிலினுள் நுழைந்து கடவுளை தரிசித்திட, அங்கு அப்போது தான் திருமணமான ஜோடி ஒன்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்ததில்,

“வைஷு பேபி, நம்ம ஒரு செல்ஃபி எடுப்போமா?” என ஆர்வமாகக் கேட்டான்.

அதில், தஞ்சாவூர் பெரிய கோவிலில் அவன் மறுத்தது நினைவு வந்து முகம் கறுத்தவள், “வேணாம்.” என்று இறுக்கத்துடன் கூறிட, அவனுக்கும் சட்டென உணர்வுகள் வடிந்த நிலை.

அவளைக் காயப்படுத்தியது வலிக்க, “சாரி வைஷு.” என்றான் வருத்தத்துடன்.

அவள் பதில் பேசாமல் நகர்ந்திட, அவனோ விடாமல் அவள் கையைப் பற்றி தன்னருகே இழுத்தான்.

“ப்ளீஸ்… வைஷு பேபி. என்னை மன்னிச்சுடு. என்னை நம்பி வந்த உன்னை இனி ஆயுசுக்கும் இழக்க மாட்டேன். ஐ லவ் யூ…” என நிறுத்தி நிதானமாக கூற, அவளும் அதே நிதானத்துடன் பார்த்தாள்.

அவனது கையை எடுத்து விட்டவள், “எனக்கு உங்க மேல கோபம் இல்ல. விடுங்க. எல்லாத்தையும் அக்செப்ட் பண்ணிக்க கொஞ்சம் டைம் தான் வேணும். எல்லாம் அடுத்தடுத்து நடந்ததுல, ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. என்னால, உங்க அன்பை மனசுல ஏத்திக்க முடியல.” என, உள்ளதை கூறியவளுக்கும் கண் கலங்கி போயிற்று.

பட்டாம்பூச்சியாய் துள்ளித் திரிந்தவளை, திருமணம் என்ற வலைக்குள் சிக்க வைத்து, தாய் தந்தையரிடம் விட்டு, அவள் மனதையும் நோகடித்து, தாயின் இறப்பில் கூட சிந்துவதற்கு கண்ணீரின்றி இறுகிப் போனதற்கு தான் தானே காரணம்!

அவனுள் ஆழமான வலி இறங்கியது. “எல்லாம் சரி ஆகிடும் பேபி. காலம் எல்லாத்தையும் சரி செய்யும்ன்னு நம்புறேன். அதே மாதிரி, என் அன்பும் உனக்கு ஒரு நாள் புரியும்.” என்றான் முட்டி நின்ற வேதனையை அடக்கியபடி.

அவளுக்கும் அவனைக் காண வருத்தமாகவே இருந்தது. அவனைக் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இப்போது அவளுக்கு சுத்தமாக இல்லை தான்.

“சாரி அத்தான். உங்களை கஷ்டப்படுத்தணும்ன்னு சொல்லல…” எனத் தடுமாறி நின்றவளின் மனநிலையைப் புரிந்து கொண்டவன்,

“உன் அத்தான்ற வார்த்தையே போதும் பேபி. எல்லாத்தையும் யோசிச்சு குழப்பிக்காத.” என மென்புன்னகை புரிந்தான்.

அதுவே அவனது வலியில் வீரியத்தை தெரிவித்தது.

உதட்டைக் கடித்து, நிலையை சரி செய்ய எண்ணியவள், சட்டென நினைவு வந்தவளாக, “கேட்கணும்ன்னு நினைச்சேன். நேத்து எங்க போனீங்க அத்தான். போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் குடுக்கணும்ன்னு சொன்னப்ப ஏன் எதுவும் சொல்லாம இருந்தீங்களாம்” எனக் கேட்டாள் தீவிரமாக.

அதில் ஒரு நொடி மேனி இறுகி, பின் தளர்ந்தவன், “அட… ஒண்ணும் இல்ல பேபி. யாரோ தெரியாம ஆள் மாத்தி அடிக்க வந்துட்டாங்க போல. இதை போய் பெருசா எடுத்துக்கிட்டு” எனப் பேச்சைக் கத்தரிக்க எண்ணினான்.

“அதென்ன, காலைலயம் சாயந்தரமும் மாறி மாறி அடிக்க வர்றாங்களா, அதுவும் ஆள் மாத்தி.” எனப் புரியாமல் கேட்டவள், “உண்மையை சொல்லுங்க அத்தான். என்ன தான் நடக்குது.” என்றாள் கண்டிப்பாக.

“ஒண்ணும் நடக்கலடி. சீரியஸா பேசுற அளவு இது பெரிய விஷயம் இல்ல.” என்றவன், பேச்சை மாற்றினான்.

——–

இங்கு, நகத்தைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தாள் சத்யரூபா.

“சாயந்தரம் என்னை அழைச்சுட்டு போக, இந்தர் மாப்பிள்ளை வரேன்னு சொல்லிருக்காரு” என்று பீத்திக் கொண்ட ஆயாவைக் காண்கையில் வயிறு பற்றி எரிந்தது அவளுக்கு.

‘ஆமா, இந்த கிழவியை தான அவன் கட்டிருக்கான். பிக் அப் டிராப் பண்றதுக்கு…’ எனக் கரித்துக் கொட்டினாள்.

அவன், அவளைக் கண்டாலும் கோபம் பொத்துக் கொண்டு வரும், காணாமல் போனாலும் ஆத்திரம் எழும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டவளுக்கு, மனதின் சோர்வு உடலையும் தாக்கியது.

அதன் விளைவாக, அப்போதே காய்ச்சலில் மேனி சூடாகத் தொடங்க, அதனைப் பொருட்படுத்தாதவளுக்கு, அதியூருக்கு சென்று, தன் வீட்டில் இருக்க வேண்டும் போல தோன்றியது.

மாலை, இந்திரஜித் வரும் வேளையில், இங்கிருக்க பிடிக்கவும் இல்லை. ‘அவனைக் கண்டால், கோபம் தணிந்து விடுமோ’ என்ற மனசாட்சியின் எள்ளலுக்கு பதில் அளிக்காமல்,

“ஆயா… நான் ஊருக்கு போறேன். அங்க குத்தகைக்கு விட்ட நிலத்துல ஏதோ பிரச்சனையாம். வந்து பார்க்க சொல்றாங்க.” என வாய்க்கு வந்ததை உளறினாள்.

“தனியா எப்படிடி போவ. நானும் வரேன். இல்லன்னா, மாப்பிள்ளை கூட போ!” என்றதும் அவளுக்கு வந்ததே கோபம்.

“இன்னொரு வாட்டி, அவரை இழுத்த, அவ்ளோ தான் பாத்துக்கோ.” எனக் கத்தியவள், நில்லாமல் கிளம்பியே விட்டாள்.

சரியாக அவள் கிளம்பியதும் தான், இந்திரஜித் அங்கு வந்தான். சாவித்ரி வாசலில் பதற்றத்துடன் நிற்பதைக் கண்டு, “என்ன ஆச்சு பாட்டி?” எனக் கேட்க, அவர் நடந்ததைக் கூறினார்.

கடுகடுப்புடன் பேருந்தில் ஏறி அமர்ந்தவளுக்கு, கோபம் குறைந்தபாடில்லை. “மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை.” என முணுமுணுத்தவள், பேருந்து கிளம்பியதைக் கூட உணரவில்லை.

அதே நேரம், அருகில் யாரோ வந்து அமரும் அரவம் கேட்டதில், ஒரு முறை எரிச்சலுடன் நோக்கி விட்டு திரும்பிக் கொண்டவள், சடாரென திகைத்தாள்.

மீண்டும் திரும்பிப் பார்க்க, அங்கு இந்திரஜித் தான், போனை உபயோகப்படுத்தியபடி அமர்ந்திருந்தான். அதில் திகைத்தவள், “நீ… நீ எதுக்கு இங்க உட்காந்து இருக்க?” என முறைப்புடன் கேட்க,

அதில் சுற்றித் தேடியவன், “வேற சீட் இல்லை. கண்டக்டர் இங்க தான் உட்கார சொன்னாரு.” என்றான் விழி உயர்த்தி.

கூடவே, பயணச்சீட்டை அவளுக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டவன், இருக்கையை சாய்த்து படுத்துக் கொள்ள,

“இப்ப நீ இறங்க போறியா… இல்லையா?” என்றாள் மூக்கு விடைக்க.

“ரன்னிங்ல இறங்குற அளவு, எனக்கு பிராக்டிஸ் இல்ல. நீ வேணும்ன்னா, ட்ரை பண்ணு.” என்றவனை, கடுப்புடன் ஏறிட்டாள்.

காலையில் இருந்து உண்ணவில்லை. நேரம் செல்ல செல்ல, உடல் சூடு வேறு அதிகமாகிக் கொண்டே போக, காலை சுருட்டி ஜன்னல் ஓரம் ஒட்டி அமர்ந்தாள்.

அவனுடன் மறுவீட்டிற்கு பயணித்த பொழுதுகள் இதமாக மனதைத் தீண்டியது. அப்போது அவன் கொண்ட கோபமும், பின் காட்டிய அக்கறையும், குறும்பும் அவளுள் படமாக ஓடி, ஏக்கத்தையும் விதைத்தது.

கோபித்துக் கொண்டு வந்தவள் அவள் தான். இப்போது, அக்கோபத்தினால் ஏற்பட்ட வலியையும் அவளே தாங்கினாள்.
அவளுக்கே மூச்சு முட்டியது. அவனிடம் என்ன தான் எதிர்பார்க்கிறாள் என்று புரியவில்லை. தன்னை ஏமாற்றியவனிடம் ஏன் எதிர்பார்க்கிறோம் என்றும் புரியவில்லை.

இறுதியில், மனம் தந்த ‘காதல்’ என்ற பதிலில் மீண்டும் கண்களில் நீர் கசிந்தது. இதுவரை, அவன் காட்டிய காதலில் நெகிழ்ந்திருக்கிறாள். அவன் மீதும் அன்பை பொழிந்து இருக்கிறாள். மனைவியாக கடமையை செய்திருக்கிறாள். அவனுடன் தோழியாகவும் பழகி இருக்கிறாள். கணவனது தீண்டலில் பெண்ணுக்கே உரிய உணர்வுகளை உணர்ந்திருக்கிறாள்.

ஆனால், உலகமே தலைகீழாக சுற்றினாலும், அவனே பொய்யாகிப் போனாலும், அவனை வெறுத்து ஒதுக்கிய போதிலும், எதற்கும் அசையாமல் நிலைத்து நிற்கிறது அவன்மீதான காதல். அவனிடம் மட்டும் தனித்து நிற்கும் உணர்வுக்கு, காதல் என்ற பெயர் சூட்டிக்கொண்டாள். முதன் முறை, காதலை உணர்கிறாள்.

அது எப்படி இருந்தாலும், அவன் மட்டுமே வேண்டும் என்று எதிர்பார்க்கிறது தான் விந்தையிலும் விந்தை.

‘புத்தி மழுங்கிப் போய் இருக்கா உனக்கு…’ மனசாட்சியிடம் அவளே கேள்வி எழுப்ப, அது அப்போதும் கூட, அவன் அருகாமையைத் தான் தேடியது.

‘வெறும் ஒரு இரவு பொழுதைக் கூட அவனில்லாமல் கடக்க இயலவில்லை. இதுல ஊருக்கு தனியாக செல்கிறாளாம்’ எனக் காறித் துப்பிய மூளையையும் கடிந்து கொண்டாள்.

காதலுக்கும் கோபத்துக்கும், அன்பிற்கும் ஏமாற்றத்திற்கும் இடையில் சிக்கிப் புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள்.

அந்த மன அழுத்தத்தில், உடல் பாரம் மேலும் ஏறி இருக்க, இன்னும் குறுகி அமர்ந்தாள்.

அருகில் இருந்தவனோ, மனையாளின் கோபத்தை குறைக்கும் வழி தெரியாமல் தவித்திருந்தான். பின் ஏதோ தோன்ற, திரும்பி பார்த்தவன், அவள் அமர்ந்திருந்த நிலையைக் கண்டு,

“ஏன் இப்படி உட்காந்து இருக்க. காலை கீழ போட்டு உட்காரு சத்யா” என்றான் புரியாமல்.

அந்நிலையில் அவனது ‘சத்யா’ என்ற அழைப்பு அவளை மேலும் வதம் செய்தது.

“நான் எப்படியோ உட்காந்துட்டு போறேன். உனக்கு என்ன வந்துச்சு. போய் உன் பிரெண்டு கூடவே இருக்க வேண்டியது தான. ஏன் இங்க வந்த. உனக்கு அவ தான முக்கியம். அவளுக்கு தான சப்போர்ட் பண்ணுவ.” என்றவளின் வார்த்தைகளில் அழுத்தம் இல்லை. சோர்வாய் வெளிவந்தது.

அவளது உடல் மாற்றத்தை உணர்ந்தவன், “என்னடி ஆச்சு. ஏன் ஒரு மாதிரி பேசுற…” என வேகமாக நெற்றியில் கை வைக்க வந்து விட்டு, தயங்கி நின்றான்.

“பீவரா இருக்கான்னு தான் செக் பண்றேன்டி. அதையும் உன்னை உரச தான் வரேன்னு தப்பா நினைச்சுடாத ப்ளீஸ்.” எனக் கண்களால் கெஞ்சிட, அவள் விலுக்கென நிமிர்ந்தாள்.

அவன் கண்கள் காட்டிய மிதமிஞ்சிய சிவப்பு, அவளை என்னவோ செய்திருக்க வேண்டும்.

அவனைப் பாராதவள், “நீ என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு எனக்கு தெரியாது. அக்காவை கல்யாணம் பண்ணிக்க போகும் போதும் ஜாலியா தான் இருந்த, அப்பறம் என்னை கல்யாணம் பண்ணிக்க போறப்பவும் அதே மாதிரி தான் இருந்த. அதான்…” என விளக்கம் கூறவே பிடிக்கவில்லை என்றாலும், கூறி விட்டாள்.

அவளை அமைதியாகப் பார்த்தவன், “எப்படியும் வைஷு கூட என் கல்யாணம் நடக்காதுன்னு எனக்கு தெரியும். உன் கூட தான் கல்யாணம் நடக்கும்ன்னு தெரிஞ்சனால தான் நான் கேஷுவலா இருந்தேன்.” என்றதும், அவளிடம் பதில் இல்லை.

அதில், ஒற்றைக் கரத்தால், அவளது இரு கன்னத்தையும் தாங்கி பிடித்தவன், அவள் விழிகளுக்குள் தன் விழிகளைப் புகுத்தி, “ஐ லவ் யூ” என்றான்.

ஒரு கணம், அப்பார்வைக்குள் நுழைந்து தொலைந்து போனவளுக்கு, கண்ணைத் திறக்க தான் இயலவில்லை. அப்போது தான், அவளது கன்னத்தையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தவன், “காய்ச்சலா?” எனக் கூர்மையாக கேட்க, அவள் தலையை அசைத்தாள்.

அந்நேரம், பேருந்து உணவகத்தில் நிற்க, “வா… சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கோ.” என எழுப்பியதில், ‘இங்க என்ன மெடிக்கல் ஷாப்பா இருக்கு’ என்று சிந்தித்தபடி, அவனுடன் வந்தாள்.

மயங்கி விழுந்து, அவனிடமே தஞ்சம் புகுந்து விடுவோமோ என்ற பயம் அவளுக்கு. கோபத்தை தெளிவாகக் காட்ட இயலாத கடுப்பு அவள் மீதே வந்தது.

இருவரும், ஏனோ தானோவென மதிய உணவை உண்டு விட, அவன் பாக்கெட்டில் இருந்து மாத்திரையை எடுத்து அவளிடம் நீட்டினான்.

‘என்ன டாப்லட்டை கைல வச்சுட்டே சுத்துறான்’ என்ற குழப்பம் தோன்றினாலும், மறுக்காமல் போட்டுக்கொண்டாள்.

அவனும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்ள, அவனை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தவள், “எனக்கு காய்ச்சலுக்கு நீங்க ஏன் மாத்திரை போடுறீங்க” என்றாள்.

“என்னை பிரிஞ்சு உனக்கு காய்ச்சல் வந்த மாதிரி, உன்னை பிரிஞ்சு எனக்கும் காய்ச்சல் வந்துடுச்சு.” என்றதில், திகைப்பு பரவ, அவள் அவசரமாக அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

அனலாகக் காய்ந்தது. “ரொம்ப கொதிக்குது இந்தர்.” பரிதவிப்புடன் அவள் கூற,

“மனசு அதை விட கொதிக்குதுடி.” என அவள் நெற்றியில் வைத்த கையைப் பிடித்து, நெஞ்சில் வைத்துக் கொண்டான்.

அதில் அவனை கண்ணிமைக்காமல் பார்த்திட, அவனும் அவளை விட்டுப் பார்வையைத் திருப்பவில்லை.

நேரம் சென்ற பிறகே, நிகழ்வுக்கு வந்த சத்யரூபா வெடுக்கென கையை எடுத்துக்கொண்டு, பேருந்து நோக்கி சென்றாள், அதியூருக்கு சென்றதும், நேரப்போகும் அதிர்ச்சி அறியாமல்!

அலைபாயும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
128
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.