506 views

36. என் தளிர்மலரே

(இறுதி அத்தியாயம் : பகுதி 1) 

மகள் அவளது கணவன் எதற்காக அழைக்கிறாள்? என்று குழப்பமாகப் பார்த்தார் சிவசங்கரி. 

 

அருகில் சுபாஷினியுமே, “என்னாச்சு அக்கா?” என்று பதறிப் போய்க் கேட்டாள். 

 

வெளியே அமர்ந்திருந்த எல்லாருமே திகைத்திருந்தது அவர்களது முகத்திலேயே தெரிந்தது. 

 

கோவர்த்தனன் மட்டும் முன் சிரிப்புடன் மனைவியின் குரல் வந்த அறைக்குச் சென்றான். 

 

அவனுக்குப் பின்னாலேயே மற்றவர்களும் சென்றனர். 

 

“அவசரப்பட்டு இங்கே வந்துட்டீங்களே ! எல்லாருக்கும் பொதுவாக ஹால்லயே விஷயத்தைச் சொல்றோம். வாங்க” என்று இன்னும் அதிர்ச்சி விலகாது நின்றவர்களை ஹாலிற்கு அழைத்துப் போனார்கள் இளந்தளிரும், கோவர்த்தனனும். 

 

சுபாஷினியின் வாடிய முகத்தைப் பார்த்த இளந்தளிர், 

“முக்கியமாக உனக்குத் தான் ஹேப்பி நியூஸ்” என்று வேறு சொல்லவும் யாருக்கும் ஆர்வம் தாங்க முடியவில்லை. 

 

“சீக்கிரம் சொல்லு இளா” என்றார் சிவசங்கரி. 

 

கோவர்த்தனனும், இளந்தளிரும் தங்களது கரங்களைக் கோர்த்துக் கொண்டு, 

 

“உங்ககிட்ட கேட்காமல் முடிவு எடுத்ததுக்கு முதல்ல எல்லாரும் மன்னிச்சுருங்க ” என்று அனைவரிடமும் மன்னிப்பு வேண்டினர். 

 

பிறகு, “நம்ம இரண்டு குடும்பமும் ஒரே வீட்ல இருக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருந்தோம். ஆனால் இப்போ அந்த முடிவுல ஒரு சேஞ்ச்” என்று நிறுத்தினாள் இளந்தளிர். 

 

எல்லாரும் ஒன்றாக, ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்கப் போகிறோமா! ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர் அனைவரும். 

 

ஹரீஷ் தான் ஞாபகமாக,”அதுல என்ன சேஞ்ச்?” என்று கேட்டான். 

 

“நண்பா ! எங்க கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே நாங்களும், நீங்களும் எப்பவும் ஒத்தாசையாகத் தான் இருந்தோம். இப்போ கல்யாணத்துல அவ்ளோ உதவியாக, ஒரு பக்க பலமாக இருந்தது உங்க ஃபேமிலி தான். அதுதான் உங்களையும் ஏன் பிரிச்சுப் பார்க்கனும்னு நினைச்சு, நீங்களும் சேர்த்து நாம மூன்று குடும்பங்களாக ஒரே வீட்டில் வாழலாம்ன்னு முடிவெடுத்து இருக்கோம் ” என்றான் ஹரீஷிடம். 

 

அவனுக்கும், அவனுடைய குடும்பத்திற்கும் என்ன நடக்கிறது? இவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது புரியவே சில மணித்துளிகள் தேவைப்பட்டது. 

 

அங்குள்ளவர்களில் இதில் மகிழ்ச்சியின் உச்சத்திற்குப் போனவள், சுபாஷினி தான்! 

 

அக்கா, மாமா, அவரது அம்மா மட்டுமில்லாமல், தன் உயிர்த் தோழியாகிப் போன மைதிலியின் குடும்பமும் தங்களுடன் எப்போதும் வசிக்கத் போகிறார்கள் என்பதைக் கேட்டதும், அவளுக்கு கண் மண் தெரியாத மகிழ்ச்சி! 

 

பரதன், “கோவர்த்தனா! என்னப்பா சொல்ற?” என்று திகைத்துப் போய்க் கேட்டார். 

 

“ஆமா அங்கிள். உண்மையைத் தான் சொல்றோம்” என்றான் கோவர்த்தனன். 

 

ஹரீஷூம் அவனது அம்மா ரோகிணியுமே திகைப்பாய்ப் பார்த்தனர் இருவரையும். 

 

“டேய் நண்பா ! சிஸ்டர் ! ” உணர்ச்சி வசப்பட்டுப் போனான் ஹரீஷ். 

 

இளந்தளிர், ” ஆமா ப்ரதர். எங்க அண்ணனோட குடும்பம் மட்டும் தனியாக இருக்கிறதை நாங்க விரும்பலை. சோ, எல்லாரும் சேர்ந்து, சந்தோஷமாக வாழ்வோம்” என்றாள். 

 

சுமதிக்கோ தன் மகனை நினைத்தும், மருமகள் நினைத்தும் பெருமையாக இருந்தது. 

 

கண்கள் கலங்க, இருவரை ஆசீர்வதித்தார். 

 

“உங்க யாருக்கும் இதில் ஆட்சேபனை இல்லையே?” – கோவர்த்தனன். 

 

“இல்லவே இல்லை ப்பா. எவ்ளோ பெரிய சந்தோஷமான விஷயத்தைக் கமுக்கமாக வச்சு , இப்போ சொல்லி இருக்கீங்க” என்று கைகளால் திருஷ்டி கழித்தார் மகளுக்கும், மருமகனுக்கும். 

 

“இது…!” என்று ரோகிணியும், பரதனும் தடுமாறுவதைப் பார்த்தவர்கள், 

 

“என்ன ரோகிணி எங்களை வேற்று ஆட்களா நினைக்கிறியோ?” என்றார் சிவசங்கரி. 

 

பதறிப் போன ரோகிணி, “அச்சோ!! என்ன அக்கா நீங்க? நான் எப்படி?” என்று வாக்கியத்தை முடிக்க முடியாமல் தவித்தார். 

 

“அப்பறம் என்ன? ஒழுங்காக சரின்னு சொல்லுங்க. என்ன அண்ணே நீங்களும் யோசிச்சுட்டு இருக்கீங்க?” என்றார் சுமதி. 

 

“அது வந்தும்மா! இதெல்லாம் சரிப்பட்டு வருமா?” என்றார் பரதன். 

 

“எல்லாமே சரியா தான நடந்துச்சு அண்ணா. இது மட்டும் நடக்காம இருக்குமா?” என்று கூறினார் சிவசங்கரி. 

 

அக்கா இவ்விஷயத்தை அனைவரின் முன்னிலையில் அறிவித்த அடுத்த நிமிடம் தோழியின் அருகில் சென்று நின்று கொண்டாள் சுபாஷினி. 

 

மைதிலி அவளுடைய செய்கையில் நெகிழ்ந்தே போனாள். 

 

“சான்ஸே இல்லை. நீங்க ரெண்டு பேரும் தான் பெஸ்ட்” என்று ஹரீஷ் நண்பனை ஆரத் தழுவிக் கொண்டான். 

 

“தாங்க்ஸ் சிஸ்டர்” என இளந்திரிடம் நன்றி சொல்லவும் மறக்கவில்லை அவன். 

 

“இப்படி ஒரு சந்தோஷமான, மன நிறைவான விஷயத்தைச் சொன்னதுக்கு, கண்டிப்பாக ஸ்வீட் செய்யனும். என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்ஸையும் களத்தில் இறக்கி, செம்மயா ஸ்வீட்ஸ் செஞ்சு எல்லாருக்கும் கொடுக்கப் போறோம். ஆமா தானே ஃப்ரண்ட்ஸ்”என்றார் சிவசங்கரி. 

 

அவருக்குப் பின் பாட்டுப் பாடினர் சுமதியும், ரோகிணியும். 

 

“ஆமாம் சிவா. வா போகலாம்” என்று சமையலறைக்குள் போய் விட்டனர் மூவரும். 

 

“அதுக்குள்ள ட்ரெஸ்ஸை மாத்திக்கோங்க” என்று பரதன் மணமக்களை உடை மாற்ற அனுப்பி வைத்தார். 

 

“ஆமா கோவர்த்தனா! எல்லாரும் ஒரே வீட்ல இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். மூனு வீட்ல, எதுல இருக்கப் போறோம்?” 

 

என்று வினவினான் ஹரீஷ். 

 

அவனுக்கு அதை நினைத்துத் தான் குழப்பம் ஏற்பட்டது. 

 

அந்த சந்தேகம் எல்லாருக்குமே இருந்தது என்பது உண்மை. 

 

“ம்ம்! நல்ல கேள்வி நண்பா” என்றவன், அருகிலிருக்கும் மனைவியைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, 

 

“நானும், தளிரும் சேர்ந்து ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கோம். எங்க சேலரி இன்னைக்குத் தேதி வரைக்கும் பேங்க்ல அப்படியே இருக்கு. சோ, அதுலயே வாங்கிடலாம்” என்றான். 

 

அதைக் கேட்டு வெகுண்டெழுந்த ஹரீஷ்,”நீங்களே ப்ளான் போட்டு, நீங்களே காசையும் போட்டு வீடு வாங்குவீங்களாம். அப்பறம் நாங்க மட்டும் எதுக்கு வெட்டியா இருக்கோமாம்? என்னோட ஷேரும் இருக்கனும்.நீங்க வேண்டாம்ன்னு சொன்னாலும் நான் குடுப்பேன்” என்றான் கறாராக. 

 

அதே கறார்க் குரலில், “நானும் என்னோட ஷேரைக் குடுக்கப் போறேன்” என்றார் பரதன். 

 

ஏற்கனவே இவர்களிடம் பேசிக் கொள்ளாமல் முடிவெடுத்திருந்ததால், இதை வேண்டாமென்று மறுக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட, கணவனும், மனைவியும், 

 

“சரி உங்க இஷ்டம்” என்று கூறி விட்டனர். 

 

அதற்குள் தாய்மார்கள் இல்லையில்லை தோழிகள் மூவரும் செய்து கொண்டு வந்த மூன்று விதமான இனிப்புப் பலகாரங்களைச் சுவைக்க ஆரம்பித்து விட்டனர் அனைவரும். 

 

“நாங்க மூனு பேரும் ஷேர் போட்டு வீடு வாங்கறதா இருக்கோம்மா” என்று ஹரீஷ் சிவசங்கரி, சுமதி மற்றும் ரோகிணியிடம் விஷயத்தைப் பகிர்ந்தான். 

 

வீடு விஷயத்தில் மூவரின் பங்கும் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் இந்த முடிவிற்கு காரணம். எனவே இதற்கும் மன நிறைவாகவே சம்மதம் தெரிவித்து விட்டனர் மூவரும். 

– தொடரும்

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்