675 views

இறுதி அத்தியாயம் (பகுதி 2) 

 

இரவு ஆனதும், கோவர்த்தனனுக்கும், இளந்தளிருக்கும் முதலிரவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. 

 

மாடியில் உள்ள அறையில் தயார்ப்படுத்திக் கொண்டு இருந்தனர். அதனால் கீழே உள்ள அறைகளில் மற்றவர்கள் தங்கிக் கொண்டனர். 

 

இளந்தளிரை அழகாக அலங்கரித்த சிவசங்கரி, “ரெண்டு பேரும் சந்தோஷமாக வாழனும்டா” என்று ஆசீர்வதித்து மகளை முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்தார். 

 

அங்கே கட்டிலில் அமர்ந்திருந்த கோவர்த்தனனோ, மனைவியைக் காதலுடன் பார்த்தான். 

 

பின்பு , தன் இருப்பிடத்தில் இருந்து எழுந்து, வெட்கம் கலந்த புன்னகையில் அழகோவியமாக மிளிர்ந்த மனைவியைக் கரம் பற்றி அழைத்து வந்து  கட்டிலில் அமர்த்தினான். 

 

அவளைத் தன்னில் சாய்த்துக் கொண்டு, 

“தளிர்!” என்று காதில் மெல்லமாக கூறினான் கோவர்த்தனன். 

 

நாணம் பூசிய முகத்துடன் கணவனின் அழைப்பில் மேலும் சிவப்படைந்தாள் பெண்ணவள். 

 

அவனது அழைப்பிற்கு மறுமொழி அளிக்கவில்லை இளந்தளிர். 

 

அவளது வெட்கம் இவனுக்கு உள்ளமெங்கும் சிலிர்ப்பூட்டியது. 

 

தளிரின் விரல்களைப் பிடித்துக் கொண்டவன், 

“எதாவது பேசும்மா?” என்று அவளிடம் குழைந்தான். 

 

“உங்ககிட்ட ஒரு டவ்ட் கேட்கனும்?” என்று மொழிந்தாள். 

 

“என்ன டவ்ட் ம்மா?” அவளது தோளில் உரிமையாக சாய்ந்து கொண்டு கேட்டான்.

 

“அது… ! நீங்க சுபாஷினியை ஹாஸ்பிடலில் சேர்த்தீங்கள்ல. அந்த இன்சிடெண்ட் பத்தி சொல்லுங்களேன்?” என்று கேட்டாள் இளந்தளிர். 

 

அதற்கு ஹாஸ்யமாகச் சிரித்த அவளது கணவன், 

“முக்கியமான டவ்ட் தான். இதை சுபாகிட்டயே கேட்ருக்க வேண்டியது தான? ” என்று மனைவியைக் கிண்டல் செய்தான். 

 

“கேட்ருக்கலாம் தான். அதான் எல்லாம் முடிஞ்சுருச்சு. அவளும் சரியாகிட்டா. அதுக்கப்புறமும் அதையே அவகிட்ட பேசி, கேட்டு, ஞாபகப்படுத்த வேண்டாம்ன்னு விட்டுட்டேன். இப்போ உங்ககிட்ட கேட்கனும்னு தோணுச்சு. ப்ளீஸ் சொல்லுங்க?” என்று கெஞ்சினாள் இளந்தளிர். 

 

கோவர்த்தனன், “சொல்றேன் டா” என்று மனைவியின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான். 

 

“நான் பைக்ல ஆஃபீஸூக்குப் போய்ட்டு இருக்கும் போது…” என்று அவன் சுபாஷினியைக் காப்பாற்றிய நாளில் நிகழ்ந்ததைக் கூற ஆரம்பித்தான். 

 

கோவர்த்தனனுக்கு எப்போதும் அரை மணி நேரம் முன்னதாகவே அலுவலகம் செல்லும் பழக்கம் இருந்தது. 

 

எனவே, அன்று காலையிலும் மிதமான வேகத்தில் தன் இரு சக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தான். 

 

காலை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்ததால், வண்டியை சற்று நிறுத்தியவன், முகத்தில் துளிர்த்து இருந்த வியர்வையைத் துடைக்க எண்ணி, கால் சட்டைப் பையில் இருந்த கைக்குட்டையை எடுத்தான். 

 

முகத்தில் நிரம்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டிருக்கும் போது தான், ரோட்டோரமாக நடந்து கொண்டு இருந்த சிறு பெண்ணின் உடல் தள்ளாடுவதைக் கண்டான். 

 

கையில் நோட்டையும், பர்ஸையும் பிடித்திருந்தவளின் பிடி தளர்ழது போல் தோன்றவும் , அவளது தள்ளாட்டத்தையும் கண்டு கொண்ட கோவர்த்தனன் விரைவாக சென்று அவளைத் தாங்கிப் பிடித்தான். 

 

என்ன தான் மயக்கம் வருவது போல் தள்ளாடினாலும், தன்னை வேற்று ஆள் அதுவும் ஆண் கரம் பற்றுவதைக் கண்டு, திடுக்கிட்ட அப்பெண்ணோ, அனிச்சையாக அவனது கைகளை வேகவேகமாக உதறினாள். 

 

அதைப் புரிந்து கொண்ட கோவர்த்தனனும், “ரிலாக்ஸ் மா. என்னால் உனக்கு எந்த ஆபத்தும் வராது. என்னாச்சு? ஏன் இப்படி மயக்கம் வருது?” என்று கேட்டுக் கொண்டவனிடம் எதுவும் சொல்ல முடியாத அளவிற்குச் சோர்ந்து போயிருந்தாள். 

 

தொடர்ந்து அவனது பிடியை விலக்கிக் கொள்ள முயன்றவளை, தாமதிக்காமல் உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்க முடிவெடுத்தான். 

 

கைத் தாங்கலாகப் பற்றிக் கொண்டு மற்றொரு கரத்தில் அவளது பர்ஸையும், செல்பேசியையும் மறக்காமல் எடுத்துக் கொண்டான். 

 

மருத்துவமனைக்குள்ளே நுழைந்ததும், 

ரிசப்ஷனிஸ்டிடம், 

“மேம்! எமர்ஜென்சி!! இந்தப் பொண்ணுக்கு மயக்கம் வருது. நிக்கக் கூட முடியாமல் இருக்காங்க. ப்ளீஸ் ட்ரீட்மெண்ட் பாருங்க” என்று பதட்டத்துடன் கூறியவனைப் பார்த்த ரிசப்ஷனிஸ்ட், 

“பதட்டப்படாதீங்க சார்” என்று கூறி, 

 

 மருத்துவமனை ஊழியரை அழைத்து ஸ்ட்ரெக்ச்சர் தயார் செய்து அப்பெண்ணை அதில் ஏற்றி, சிகிச்சை அளிக்கும் அறைக்கு அனுப்பி வைத்தாள். 

 

உடன் கோவர்த்தனனும் செல்ல, அங்கே அப்பெண்ணைப் பரிசோதிக்க மருத்துவரும் வந்து விட்டார். 

 

அவளைப் பரிசோதித்து விட்டு வந்த மருத்துவர், வெளியே காத்திருந்த கோவர்த்தனனிடம், 

 

“ரொம்ப டிஹைட்ரேஷன், சரியா சாப்பிட்றது இல்ல போல, பலவீனமான இருக்காங்க. காலேஜ் போற பொண்ணு போல.அவங்களுக்கு ட்ரிப்ஸ் போட சொல்லி இருக்கேன். முதல் ட்ரிப்ஸ் போட்டதும் கொஞ்ச நேரம் கழிச்சுக் கண் முழிச்சுடுவாங்க. நீங்க ரிலேடிவ் ஆ?” என்று அவனிடம் விசாரித்தார். 

 

“ஆமா டாக்டர். தெரிஞ்சப் பொண்ணு தான்” என்று கூறி விட்டான் கோவர்த்தனன். 

 

” ஓஹ் ஓகே. வெயில் அதிகமாக இருக்குல்ல அதுனால கூட மயக்கம் போட்டு விழுந்துருப்பாங்க. நல்லாப் பாத்துக்கோங்க சார்” என்று ஆலோசனை வழங்கி விட்டு, செவிலியரிடம் சில விவரங்களைக் கூறி தன் இருப்பிடத்திற்குச் சென்றார் மருத்துவர். 

 

கோவர்த்தனனிடம் வந்தச் செவிலியர், “சார் இந்தாங்க.ஹாஸ்பிடல் உள்ள இருக்கிற மெடிக்கல் ஷாப்ல ட்ரிப்ஸ் வாங்கிட்டு வாங்க” என்று மருந்துச் சீட்டைக் கொடுத்தார். 

 

ஏற்கனவே சுபாஷினிக்கு ஒரு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டு இருந்தது. இன்னும் அவள் கண் விழிக்கவில்லை. 

 

கையிலிருந்த மருந்துச் சீட்டை மருந்தகத்தில் கொண்டு போய் கொடுத்து, ட்ரிப்ஸ் வாங்கி வந்தான் கோவர்த்தனன். 

 

முதல் ட்ரிப் போட்டு சில மணித்துளிகளிலேயே மெதுவாக கண் விழித்தாள் சுபாஷினி. 

 

“சார் ” என்று மிகவும் பலவீனமான குரலில் அழைத்தாள் கோவர்த்தனனை. 

 

அந்த அழைப்புக் காதுகளுக்கு எட்டியதுமே, 

“கண் முழிச்சுட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தான். 

 

“சாரி சார்…! அண்ட் தாங்க்ஸ்” என்று குற்றம் புரிந்தவள் நன்றியும், மன்னிப்பும் கூறினாள் அவனிடம். 

 

“இட்ஸ் ஓகே ம்மா. நீங்க ஏன் இவ்ளோ பலவீனமாக இருக்கீங்க? சரியா சாப்பிட மாட்டீங்க போலயே?” என்று அவளிடம் மென்மையான குரலில் வினவினான் கோவர்த்தனன். 

 

“நல்லா சாப்பிட்டுட்டு தான் இருக்கேன் சார். ஆனா இன்னைக்குக் காலையில் மட்டும் தான் சாப்பிடல. வெயில் அதிகமாக இருந்ததால், அதுவும் கூட சேர்ந்து மயக்கம் வந்துருச்சு” என்று கூறியவளைக் கனிவுடன் பார்த்தான். 

 

“இனிமேல் இப்படி பண்ணாதம்மா. நானாக இருக்கப் போய் உன்னைப் பார்த்து ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். முக்கியமாக நான் வராம இருந்திருந்தால், நீ அங்கேயே மயக்கம் போட்டு விழுந்திருந்தா என்ன ஆகி இருக்கும்?” என்று புத்திமதி கூறினான். 

 

அதற்குள் அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது போலும். அரை மயக்கத்திற்கு ஆளானாள். 

 

அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவரைப் பற்றி விசாரித்து செல்பேசி எண்ணை வாங்கி இருக்கலாமே! என்று யோசித்தான். 

 

இவளது செல்லை எடுத்துப் பார்த்தான். அதன் பாஸ்வேர்ட் அவனுக்குத் தெரியாதே! எனவே, மீண்டும் பாக்கெட்டில் வைத்து விட்டான் கோவர்த்தனன். 

 

அந்த நேரத்தில் தான் இளந்தளிர் தங்கையைக் காணாமல், சுபாஷினியின் செல்பேசிக்கு அழைத்து விட்டாளே! 

 

அவள் பதறிப் போய் மருத்துவமனைக்கு விரைந்து வருவதற்குள் இங்கே சுபாஷினிக்கு இரண்டாவது ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டு இருந்தது. 

 

இப்போது நன்றாகவே கண்களைத் திறந்தவளிடம், 

” உன் மொபைல் பாஸ்வேர்ட் தெரியாததால், உங்க வீட்டுக்கு எப்படி இன்ஃபார்ம் பண்றதுன்னு தெரியாம இருந்தேன். நல்லவேளை உன் சிஸ்டர் கால் பண்ணினாங்க. அவங்க கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டேன். வந்துட்டு இருப்பாங்க” என்று விவரம் தெரிவித்தவனை கலவரத்துடன் பார்த்தாள் சுபாஷினி. 

 

அவளது அந்தப் பார்வையைக் கண்ட கோவர்த்தனன், 

“உன்னோட அக்கா ரொம்ப ஸ்ட்ரிக்ட்னுப் பேசுனதை வச்சே தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான். 

 

“ஸ்ட்ரிக்ட்லாம் இல்லை சார். தப்புப் பண்ணினா கோபம் வரும் தான?” என்று தமக்கைக்கு வக்காலத்து வாங்கினாள் தங்கை. 

 

“கண்டிப்பாக வரும். நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று நாற்காலியில் அமைதியாக அமர்ந்து கொண்டான். 

 

அதற்குப் பிறகு தான், இளந்தளிர் துரித கதியில், அம்மாவிடம் சொல்லி விட்டு, அம்மருத்துவமனைக்கு விரைந்தாள். 

 

எல்லாவற்றையும் சொல்லி முடித்தவன், 

“அதுக்கப்புறம் தான் மேடம் என்னை உருட்டி, அதட்டினீங்களே? ஞாபகம் இருக்கா?” என்று கேலி செய்தான் கோவர்த்தனன். 

 

“ப்ச்… என்னங்க!” என்று செல்லமாக சினுங்கினாள். 

 

“மை ஸ்வீட் பெப்பர்” என்று அவளது முகத்தைக் கைகளில் ஏந்தினான் கணவன். 

 

இமை திறந்து தன்னவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த இளந்தளிரின், 

இதழ்களில் தேங்கி நின்றது அவனது பார்வை. 

 

“எப்பவும் உன்னை எதுக்காகவும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்னு சொல்லி இருந்தேன்லடா. இப்பவும் அதையே தான் சொல்றேன். உனக்கு சம்மதம்னா தான் எனக்கும் முழு சம்மதம்” என்று வினவியவன் அவளது விழிகளைத் தன் கண்களால் துளைத்தான். 

 

இளந்தளிரோ அவனது இதழில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். 

 

அதிலேயே தன்னவளின் முழுமையான சம்மதத்தை உணர்ந்து கொண்டான் கோவர்த்தனன். 

 

இனி பேச்சிற்கு இடமில்லை, தெவிட்டாத, திகட்டாத காதலுடன் கூடிய கூடலுக்குத் தயாராகினர். 

 

கணவனின் மென்மையான தீண்டலையும், காதலையும் மனதார ஏற்றுக் கொண்டு, அவனுக்குத் தன் காதலை அள்ளித் தந்தாள் மனைவி. 

 

இனிமையான, ஏகாந்தமான கூடலில் திளைத்து முடித்தார்கள் கணவனும், மனைவியும். 

 

மென்மையான கூடல் தான், ஆனால் மனைவியின் முகம் சுருங்கியதோ? என்ற பதைபதைப்பில் அவளது முகத்தைத் தன் மார்பில் இருந்து நிமிர்த்திப் பார்த்தான் மன்னவன். 

 

கூடல் தந்த களைப்பும், மகிழ்ச்சியுமே அவளது வதனத்தில் குடி கொண்டிருந்தது. 

 

காதலின் அடையாளமாக இளந்தளிரின்  பிறை நுதலில் ,  இதழ் ஒற்றினான் கோவர்த்தனன். 

 

விடியலுக்கு வெகு நேரம் இருந்ததால், இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு, உறங்கினர். 

 

இக்காதலும் ,  புரிதலும் வாழ்க்கை முழுவதும் அவர்களோடு பயணிக்கட்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம். 

  • முற்றும். 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்