அத்தியாயம் 35
“ஐயா ராசா… பள்ளிக்கூட யூனிபாம போடுறதுக்கு முந்தி இந்த மீன் கூடய வாசல்ல வச்சுடுறியா?” இருமலுடன் தனது பதினோரு வயது மகனிடம் கேட்டார் திலகம்.
அப்போது தான் கசங்கி மங்கிப் போன தனது வெள்ளைச் சட்டை யூனிஃபார்மை கையால் தேய்த்துக் கொண்டிருந்த சாகித்யன், “சரிம்மா” என வேகமாக மீன் கூடையைத் தூக்கப் போக, திலகம் தடுத்தார்.
“யூனிபார்ம போட்டுட்டு அதை தொடாதய்யா… மீன் வாட வரப்போவுது”
“பரவால்லமா. உன்னால இவ்ளோ பளுவத் தூக்க முடியாது…” என்றவன் மீன் நிறைந்த கூடையைத் தூக்க முடியாமல் தூக்கி வாசலில் வைத்தான்.
அடுத்த கூடையை எடுத்து வரும்முன் திலகமே தூக்கி வர, அவரிடம் கோபித்துக் கொண்டான்.
“ஏன்மா நான் தூக்கியாருவேன்ல. குடு மொதல்ல” என்ற பெரிய மனித தோரணையுடன் கூடையை வாங்கிக் கொண்டான்.
அவனைக் கருணையுடன் பார்த்தவர், “போன வருசம் உன் அய்யாரு மீன் பிடிக்கப் போயிட்டு திரும்பி உயிரோட வந்துருந்தா, நீயும் மத்த புள்ளைக மாதிரி ஜோடனையா இருந்துருப்ப. இப்ப பாரு, நா வேணா வேணான்னு சொல்ல சொல்ல உன் மாமன் கூட போய் மீன் பிடிச்சுட்டு வர்ற…” என வருத்தம் மேலோங்க அவன் கன்னத்தை வழித்தார்.
“மாமா என்னை கடலுக்குள்ள கூட்டிட்டுப் போவலமா. கொஞ்ச தூரம் மட்டும் தான் கூட்டிட்டுப் போச்சு. இன்னும் ஆழமா போயிருந்தா பெரிய பெரிய மீனெல்லாம் பிடிச்சு இருப்பேன்…” எனத் தலையை ஆட்டிக் கூறிய சிறுவனை ஆதூரமாகப் பார்த்த திலகம், “வேணா ராசா. இதெல்லாம் உன் அய்யனோட போவட்டும். நீ நல்லா படிச்சு, இங்க இருந்து போய்டு. நம்மள மாதிரி மீனவங்களுக்கு உசுருக்கும் உத்தரவாதம் இல்ல. தொழில்லயும் நாலு காசு பாக்க முடியாது…” எனப் பெருமூச்சு விட்டார்.
அந்நேரம், வாசலில் ஒரு நடுத்தர வயது ஆள் கத்தினான்.
“யம்மா வீட்ல யார் இருக்கா?”
அந்தக் குரல் கேட்டதும் அவசரமாக வெளியில் வந்த திலகம், “ஐயா… நாலஞ்சு கூடை இருக்குங்கய்யா” எனப் பணிவுடன் மீன் கூடையைக் காட்ட, அந்த ஆள் மீனையும் தனது நோட்டையும் பார்த்து ஏதோ எழுதி விட்டு, “இறால், நண்டுலாம் வரலையா?” என்றார் அதிகாரமாக.
“இல்லைங்கய்யா… என் வூட்டுக்காரர் இருந்தா வகையா பிடிச்சுட்டு வருவாரு. இப்ப தான் அவரு இல்லையே. என் புள்ள தான்யா, இதையும் புடிச்சுட்டு வந்தான்” எனக் கமறிய குரலுடன் எண்ணெய் தேய்த்த சாகித்யனின் முடியை வாரி விட்டார்.
சாகித்யனோ “அடுத்த வாட்டி நெறையா புடிச்சுட்டு வறேன்யா” என ஆளுக்கு முதல் ஆஜர் ஆக, அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாதவன், “சரி சரி… இந்தாமா…” என சில தாள்களை நீட்டினான்.
அதை வைத்து பத்து நாட்கள் கூட தள்ள இயலாத வேதனை திலகத்தின் முகத்தில் தோன்றிட, “ஐயா… மொத்த கூடையும் சேர்த்தா 10 கிலோ தேருங்கய்யா. கொஞ்சம் பார்த்து போட்டுக் குடுங்க” எனப் பணிவாய் கேட்க,
“எல்லாம் பொடி மீனுமா. இதை யார் வாங்கப்போறா. இதெல்லாம் ரேட்டும் கம்மியா தான் போகும்… அடுத்த வாட்டி பாக்கலாம்” என அவன் அடுத்த குடிசைக்கு நகர்ந்து விட, சாகித்யன் தாயிடம் நிமிர்ந்து “அம்மா இந்த ஆளு பொய் சொல்றாருமா. மார்கெட்டுல ஒரு கிலோவே 200 ரூபாய்க்கு விக்கிறாங்க. நமக்கு இவரு மொத்தமே 200 தான் குடுத்துட்டுப் போயிருக்காரு. நம்மளே வேணா மார்கெட்டுல விக்கலாமா?” என விவரம் அறியாமல் கேள்வி கேட்டான்.
அவன் வாயை மூடி குடிசைக்குள் இழுத்து வந்த திலகம், “அங்கலாம் நமக்கு எடம் கிடைக்காதுயா. நீ இதெல்லாம் போட்டு ஒழப்பிக்காம போய் படி” என அவன் சட்டைப்பையில் ஒரு ரூபாய் வைத்து விட்டார் செலவுக்கு.
வகை வகையான மீன்களை வலைப் போட்டுப் பிடிக்கும் மீனவக் குடும்பம் தான். ஆனால், உண்பதற்கு கஞ்சியைத் தவிர பல நாட்கள் எதுவும் இருந்ததில்லை. சாகித்யனின் தந்தை இறப்பிற்கு முன், மகனுக்கு செய்து கொடுப்பதற்கென்றே தனியாக மீன்களை ஒதுக்கி விடுவார் சண்முகம். ரசித்து ருசித்து உண்ணப் பழகியவன். தந்தையின் இழப்பிற்கு பிறகு, தாயிடம் ருசியாய் உணவு கேட்க மனமற்று அவர் தரும் கஞ்சியைக் குடித்தே பசியைத் தீர்த்துக் கொள்வான்.
குடும்பத் தலைவரின் திடீர் இழப்பு ஒரு குடும்பத்தை எப்படி எல்லாம் புரட்டிப் போடுமென்று அனுபவித்து தேய்ந்தனர் தாயும் மகனும்.
திலகத்திடம் பணத்தைக் கொடுத்து விட்டு, அக்கம் பக்கம் குடிசைக்கும் சென்று அதிகாரமாக மீன், இறால், நண்டுகளை எல்லாம் குறைந்த விலைக்கு வாங்கியவன் மற்றொரு ஆளை வைத்து அந்தக் கூடைகளை எல்லாம் குட்டி யானையில் ஏற்றினான். அந்த குட்டி யானையின் அருகில் இருந்த காரில் அமர்ந்திருந்தார் மோகன்.
மோகனிடம் வந்தவன், “ஐயா பொருளையெல்லாம் மார்க்கெட்டுக்கு அனுப்பிடுறேன்” எனக் கணக்கு வழக்கைக் கூறிட, மோகனும் தலையாட்டிக் கேட்டு விட்டு, “சரி சரி வியாபாரத்தை முடிச்சுட்டு கூப்புடு கண்ணப்பா” என தனது மேனேஜரான கண்ணப்பனிடம் உத்தரவிட்டு கிளம்பினார்.
அடுத்து அடுத்து சாகித்யனே மீன்களைப் பிடித்து வந்தாலும், பெரிய மீன்களைப் பிடிக்க முடிவதில்லை அவனுக்கு. ஆனால், கொண்டு வரும் மீனின் அளவு அதிகமானது. அதை எல்லாம் கண்ணப்பன் ஒரு பொருட்டாக எண்ணுவதே இல்லை. அவன் பிடித்து வரும் மீன்களை எல்லாம் மிகவும் குறைவான விலைக்கே எடுப்பான். அவனிடம் பேரம் பேசிட இயலாது. பேசினால் நீயே தனியாக விற்றுக்கொள் என்று விடுவான்.
அவனை எதிர்த்து தனியாக மார்க்கெட்டில் கடை பிடித்து போடும் அளவு வசதியெல்லாம் அக்கடல் வாழ் மக்களுக்கு இருப்பதில்லை. அதையும் மீறி அவர்கள் தனியாக விற்பனை செய்ய முயன்றால் காவல் துறையை வைத்து அடக்கி விடுவான். மோகன் செய்யும் இறால் மீன் பண்ணைக்கு அடிமட்ட ஊழியர்கள் மீனவர்கள் தான்.
அவர்களது உழைப்பைச் சுரண்டி எடுத்து அதனைப் பணமாக்குபவன் மீது கோபம் இருந்தாலும், அவரை எதிர்க்கும் அளவு அங்கு யாருக்கும் சக்தி இருப்பதில்லை. அரை வயிற்றுக் கஞ்சிக் குடித்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கு அடுத்த இடியாக விழுந்தது இட ஆக்கிரமிப்பு.
பள்ளிக்கூடத்தில் இருந்து ராயபுரத்தில் அமைந்திருந்த தனது குடிசைக்குத் திரும்பிய சாகித்யன் அங்கு டிப் டாப்பாக உடையணிந்து இருந்த ஆள்கள் சிலர் நிற்பதை வேடிக்கைப் பார்த்தபடி தனது குடிசைக்குச் சென்றான். அங்கு திலகம் என்ன ஏதென்று தெரியாமல் நிற்க, அவரது அண்ணன் சுந்தர் கைலியைத் தூக்கிப் பிடித்தபடி கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது பனியனைப் பற்றி இழுத்த சாகித்யன், “என்ன மாமா இவ்ளோ பேர் இருக்காங்க. யார் இவங்க?” எனக் கேட்க,
“இந்த இடமெல்லாம் இவங்களுக்கு வேணுமாம் மருமகனே. நமக்கு வேற இடம் தர்றாங்களாம்” எனப் பதில் அளித்தார் சுந்தர்.
“ம்ம்ஹும் இங்க இருந்து நான் வரமாட்டேன்…” சாகித்யன் முணுக்கென கோபம் கொள்ள, “அப்படி தான் நாங்களும் சொல்றோம். ஆனா ஒத்துக்க மாட்டேங்குது அந்த அம்மா!” என்று ஒருவரைக் கையைக் காட்ட, அங்கு யாரிடமோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார் சிவகாமி.
“அவங்ககிட்ட சொல்லுங்க மாமா. இந்த வீட்டை விட்டு நான் வரமாட்டேன்” அவன் மீண்டும் அடம்பிடிக்க,
திலகமோ “அமைதியா இருயா. அண்ணே இந்த ஏரியாவ விட்டுப் போனா நமக்கு ஏதுண்ணே பொழப்பு” என்றார் குழப்பமாக.
மீனவக் குடும்பங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள, ஒரு காவல் அதிகாரி மக்களை பார்த்து பேச ஆரம்பித்தார்.
“இங்க பாருங்கப்பா. இவங்க சிவகாமி… பெரிய பணக்காரங்க. இப்ப உங்க குடிசை இருக்குற இடமெல்லாம் பொறம்போக்கு இடம். இதை முறைப்படி வாங்கிருக்குறது சிவகாமி அம்மா தான். இந்த இடத்தில பீச்சை பார்த்தபடி 10 ஸ்டார் ஹோட்டல் கட்டப்போறாங்களாம்” என்றதும் அங்கு மீண்டும் நசநசவென பேச்சு சத்தம் கேட்டது.
“எல்லாரும் அமைதியா நான் சொல்றதைக் கேளுங்க” என காவல் அதிகாரி மக்களை அடக்கி விட்டு, “உங்களுக்கு கொஞ்சம் தள்ளி இருக்குற ஏரியாவுல சிமெண்ட் வீடு கட்டித்தர போறாங்க. அதுக்கான வேலையெல்லாம் நடந்துட்டு இருக்கு. அது மட்டுமில்ல, இதோ நிக்கிற மோகன் சாருக்கு தான் இந்த ஏரியால இருக்குற மீன் எல்லாம் வியாபாரத்துக்கு விக்கிறீங்க. இனி, உங்களுக்கு ரெண்டு மடங்கு பணம் குடுத்து உங்ககிட்ட இருந்து மீன் இறாலெல்லாம் வாங்கப் போறாரு” எனப் பேசிக்கொண்டே போக, அங்கு சலசலப்பு சத்தம் அதிகமானது.
சிலர் முகத்தில் மகிழ்ச்சியும் சிலர் முகத்தில் கவலையும் அப்பினாலும், ஆளுங்கட்சி அமைச்சரின் தலைமையில் நடப்பதை தடுக்க எவருக்கும் தைரியமில்லை.
சாகித்யனோ, திலகத்தின் கையைப் பற்றி “யம்மோவ்… அந்த ஆளு 10 கிலோ மீனுக்கே எறநூறு ரூவா தான் தர்றாரு. மிஞ்சிப்போனா இன்னும் எறநூறு கொடுப்பாரு. அதுக்காக இங்க இருந்து போகணுமா. வேணான்னு சொல்லுமா” என உலுக்கிட, அதற்குள் சிவகாமி பேச ஆரம்பித்தார்.
“யாரும் பேனிக் ஆகாதீங்க. உங்களுக்கான வீட்டு வேலை எல்லாம் ஆரம்பிச்சாச்சு. இன்னும் ஒரு மாசத்துல எல்லா வேலையும் முடிஞ்சுடும். அதுவரை எல்லாரும் உங்களுக்கு வீடு கட்டுற இடத்துலயே டெண்ட் போட்டு தங்கிக்கலாம். நிலமும் உங்க பேர்ல இருக்கும். நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க…” என்றதும் சுந்தர் சிந்தித்தார்.
“என்னண்ணே செய்றது இப்ப?” திலகம் கேட்டதும்,
“அதான் ஒன்னும் புரியல திலகா. இப்ப நம்ம இருக்குறது பொறம்போக்கு இடமாம். நாளை பின்ன வேற ஒருத்தன் வந்து ஆக்கிரமிச்சு ஒன்னும் தராம போறதுக்கு இப்பவே ஒத்துக்கிடலாமான்னு இருக்கு. அதான் அந்த அம்மா எல்லாம் செய்றேன்னு சொல்லுதே. முதலமைச்சரும் கவர்மெண்ட் மூலமா நமக்கு இட ஒதுக்கீடு குடுத்து இருக்காங்களாம். அப்படி எல்லாம் நம்மள ஏமாத்திட முடியாது திலகா” என்றதும் அவரும் அரை மனதுடன் ஒப்புக்கொண்டார்.
அவர் மட்டுமல்ல அனைவருமே ஒப்புக்கொண்டு இடத்தைக் காலி செய்ய, சிவகாமி சொன்னது போன்றே வீடு கட்டும் பணி ஒரு புறமும், குடிசைகளை கலைக்கும் பணியும் ஒன்றாக நிகழ்ந்தது.
இடத்திற்கான பத்திரமும் அனைவருக்கும் வந்தடைய, அதில் மகிழ்ச்சி கொண்டனர் மீனவ மக்கள்.
சாகித்யனுக்கு தான் இந்த இட மாற்றம் முற்றிலும் பிடிக்கவில்லை. தனது குடிசையை விட்டுவிட்டு வெயிலிலும் மழையிலும் டெண்டில் ஒதுங்கி இருப்பது சுத்தமாகவே பிடிக்கவில்லை. திலகத்திற்கு வேறு வறட்டு இருமல் ஆட்கொள்ள, அதை விட இன்னும் சில நாட்களில் சொந்தமாக ஒரு வீட்டில் இருக்க போகிறோம் என்ற ஆசையே அதிகம் அவரை தொடர்ந்தது.
ஒரு நாள் இலக்கின்றி கட்டட வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த சாகித்யனின் அருகில் நிழலாடியது.
அரக்கு நிற காட்டன் புடவையில் கண்ணில் கருணை வழிய நின்றிருந்தார் அஸ்வினி.
அத்தியாயம் 36
இளவயது. அழகு கொஞ்சும் முகம். சாந்தமான சிரிப்புமாக தன்னருகில் நின்றவரை விழிகள் விரிய பார்த்த சாகித்யன், “யாரு நீங்க?” என வினவ, அஸ்வினி அவனது தலைமுடியைக் கலைத்து விட்டு, “உன் அம்மா, அப்பா எங்க தம்பி? இங்க இருக்குற குடும்பங்களை எல்லாம் நான் பாக்கணுமே” என்றவரின் முகத்தில் லேசான பதற்றம் தென்பட்டது.
“முதல்ல நீங்க யாருனு சொல்லுங்க. அம்மா குளிக்க போயிருக்காங்க…” எனத் தூரத்தில் தெரிந்த கழிப்பறையைக் கை காட்டினான். பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை. அதை தான் இவர்களும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.
“உனக்கு சொன்னா புரியாது. நான் பெரியவங்ககிட்ட பேசிக்கிறேன்…” எனப் படபடப்புடன் அடுத்த டெண்டை நோக்கிச் செல்ல, “எனக்குப் புரியும் சொல்லுங்க!” என்றான் உதட்டைச் சுளித்து.
அவன் நின்ற தோரணை அந்நிலையிலும் மென்புன்னகையைக் கொடுத்தது அஸ்வினிக்கு.
“நான் ஒரு பத்திரிகை ஆபிஸ்ல வேலை பார்க்குறேன். உங்க குடிசை இருந்த இடத்தை வாங்கிருக்குற சிவகாமி என் சொந்தம் தான்…” என்றதும் அவன் “ஓ! என்ன நீங்க மட்டும் தனியா வந்துருக்கீங்க. அந்த அம்மா எப்ப பார்த்தாலும் கூட பத்து பேரை கூட்டிக்கிட்டே வருவாங்க. அவங்க பேச வேண்டியது எல்லாம் கூட வர்ற ஆளே பேசுவாங்க. நீங்க அசிஸ்டன்ட்டு யாரையும் கூட்டிட்டு வரலையா?” எனக் கேட்டதும் வாய் விட்டே சிரித்து விட்டார்.
“நான் அசிஸ்டன்ட் வைக்கிற அளவு பெரிய ஆளு இல்லப்பா. உன் பேர் என்ன?” என்றதில் அவனும் லேசாக அசடு வழிந்து விட்டு பெயரைக் கூறினான்.
“சாகித்யன் செவன்த்து ஸ்டாண்டர்ட்”
தனது பள்ளிப்படிப்பையும் சேர்த்து பெருமை பொங்க கூறியவனை மிகவும் பிடித்துப் போனது அஸ்வினிக்கு. “ரொம்ப பெரிய படிப்பு தான் சார் படிக்கிறீங்க. நல்லா படிப்பீங்களா?” எனத் தலை சாய்த்துக் கேட்க,
“ம்ம்… நான் தான் பர்ஸ்ட் ரேங்க் வாங்குவேன். நேத்து கூட கையெழுத்து போட்டி வச்சதுல பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்குனேனே. என் சர்டிபிகேட் பாக்குறீங்களா…” என ஆர்வம் மின்னக் கேட்டான்.
அவனிடம் தந்தைக்குப் பிறகு படிப்பைப் பற்றி விசாரித்தவர் அவர் தான். திலகத்திற்கும் அவன் கூறும் முதல் ரேங்க் என்னவென்றே புரியாது. ஆனால் அவன் அறிவாளி என்று மட்டும் பெருமை பட்டுக்கொள்வார்.
அவனது ஆர்வத்திற்கு தடை போட பிடிக்காமல் வந்த வேலையை மறந்து விட்டு, “வாவ்! எங்க காட்டு பாக்கலாம்…” என்று உண்மையாய் மகிழ்ந்த அஸ்வினியை அவனுக்கும் பிடித்து போனது.
உடனே உள்ளே ஓடிச் சென்று, பள்ளிக்கூட பையில் இருந்து லேசாய் கசங்கிய சர்டிபிகேட்டை எடுத்துக் கொடுத்தவன், அவனது நோட்டுப் புத்தகத்தையும் எடுத்து வந்து கையெழுத்தைக் காட்டினான்.
உண்மையில் முத்து முத்தான கையெழுத்து தான். “ஹே சூப்பரா எழுதி இருக்க சாகித்யன். கம்பியூட்டர்ல அச்சு எடுத்த மாதிரி இருக்கு” என்றபடி சர்டிபிகேட்டின் கசங்கிய முனைகளை நீவி விட்டவர், “இந்த மாதிரி சர்டிபிகேட் எல்லாம் பின்னாடி யூஸ் ஆகும் சாகித்யன். கசக்காம வச்சுக்கோ!” என்றார் அக்கறையாக.
அதில் முகம் வாடியவன், “குடிசைல இருந்திருந்தா பத்தரமா இருக்கும். இப்ப வெளில வச்சா மழை பெஞ்சு நனைஞ்சுடும்னு என் பைக்குள்ள வச்சுருக்கேன். அப்படியும் கசங்கிடுது” என அதனை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டான்.
அதில் மீண்டும் தீவிர பாவனையுடன் மாறிய அஸ்வினி, “இங்க வீடு கட்டி முடிக்கிற வரை குடிசைல இருக்கோம்னு சொல்லிருக்கலாம்ல. இந்த வேலை எல்லாம் எப்ப முடியும்னு தெரியல. ஏன் இருக்குற இடத்தை விட்டுட்டு இப்படி டெண்டு போட்டு இருக்கீங்க?” எனக் கேட்டார் ஆற்றாமையுடன்.
சாகித்யனோ, “ஒரு மாசத்துல முடிஞ்சுடும்னு சொன்னாங்களே. ஏற்கனவே பதினஞ்சு நாள் ஆச்சுதே” எனத் தலையை ஆட்டிக்கூற, அஸ்வினி நொந்தார்.
இப்போது தான் அடித்தளமே எழுப்பிக்கொண்டிருந்தனர். அதிலும் அங்கு யாரும் அவசரமாக வேலை செய்வது போல தெரியவில்லை.
“இப்ப தான் பேஸ்மெண்ட்டே போட்டுட்டு இருக்காங்க. இதெல்லாம் ஒரு மாசத்துல முடியிற வேலை இல்ல சாகித்யன். ப்ச்! இன்னும் எவ்ளோ மாசம் இழுப்பாங்களோ” என்று புருவம் சுருக்கியவரைக் கண்டு அவன் கலவரமானான்.
அந்நேரம் அக்கம் பக்கத்துக்கு ஆள்கள் அங்கு வந்து விசாரித்ததில் அவர்களிடமும் அஸ்வினி அதையே கூற, சுந்தர் எகிறினார்.
“ஏன்மா… யாராவது எங்களுக்கு நல்லது செஞ்சுட்டா உடனே வந்துடுவீங்களே. இங்க வேலை முடியிற வரை குடிசைல இருக்கோம்னு சொல்லி நாங்க பிரச்சனை பண்ணி, நல்லது செய்ய வர்றவங்களையும் அடிச்சு துரத்தணும். அதான… எந்த பத்திரிகைல இருந்து வந்துருக்க?” என்று எகிற ஆரம்பிக்க, அஸ்வினிக்கு லேசாய் பயம் தொற்றியது. அவருக்கு அதிர்ந்து கூட பேசாத குணம். பத்திரிகையில் வீர ஆவேசமாக கதை எழுதும் பழக்கம் உள்ளவர். ஆனால் அந்த வீரம் ஏனோ அவரிடம் சுத்தமாக இருக்காது.
அஸ்வினியின் பயந்த முகம் சாகித்யனை என்ன செய்ததோ, “மாமா இவங்க சரியா தான சொல்றாங்க” என்றதும், அவன் தலையில் தட்டிய சுந்தர், “போடா போய் வலையை எடுத்துட்டு வா. மீன் பிடிக்கப் போகணும்” என்று உள்ளே அனுப்பி விட்டு அஸ்வினியையும் திட்டி அனுப்பினார்.
பின் சுற்றும் முற்றும் பார்த்த சுந்தர், கூட்டம் கலைந்து போனதை உறுதி செய்து கொண்டு சற்று தூரம் தள்ளி வந்து மறைத்து வைத்திருந்த நோக்கியா போனை எடுத்தார்.
அதில் இருந்து கண்ணப்பனுக்கு அழைத்து விவரத்தைக் கூற அவன் மூலம் விஷயம் சிவகாமிக்குப் போனதில் அஸ்வினிக்கு ஏச்சும் பேச்சும் விழுந்தது.
சாகித்யனுக்கு தான், அஸ்வினி சொன்னதைக் கேட்டதில் இருந்து உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.
சுந்தரோ இன்னும் பதினைந்து நாள்களில் வேலை முடிந்து விடுமென அடித்துக் கூற, அதனை நம்பவே கடினமாக இருந்தது அவனுக்கு.
ஆனால் சுந்தர் சொன்னது போன்று வேலை ஒன்றும் அத்தனை இலகுவாக முடியவில்லை.
பதினைந்து நாள்கள், இரு மாதங்கள் ஆனது. அப்போதும் வேலை முடிந்தபாடில்லை.
இதனிடையில் ஒரு நாள் இரவு, சடசடவென சத்தம் கேட்க அனைவரும் பதறி அடித்து எழுந்தனர்.
ஓரளவு வீடாகி இருந்த கட்டடம் ஒவ்வொன்றாக சரிந்து விழுக, அந்த இடமே கல்லும் மண்ணுமாக காட்சியளித்தது. அது போக, அவர்கள் தங்கி இருந்த டெண்ட் முழுக்க தூசி பரவி இருக்க, அர்த்த ராத்திரியில் செல்லும் வழி தெரியாமல் ஸ்தம்பித்தனர்.
விஷயம் உடனே காவல் அதிகாரிக்குச் சென்று விட, “இன்னைக்கு ஒரு நாள் நைட்டு இங்கயே அட்ஜஸ்ட் பண்ணுங்க. நாளைக்கு வேற இடம் பாக்குறேன்” என சாவகாசமாகக் கூறினார்.
சாகித்யன் “இன்னைக்கு நைட்டு எங்க படுக்குறது. எங்க குடிசை இருந்த இடத்துக்குப் போறோம். அந்த தான் இம்மாம் பெருசா கட்டடம் கட்டிருக்காங்கள்ல அங்க போய் படுத்துக்குறோம்” என்று துடுக்காக எதிர்த்துப் பேசி காவல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளானான்.
“என்னடா பொடிப்பயன் ஓவரா பேசுற” என்று அவனை அடிக்க வர, அவனை தன் அரவணைப்பில் கொண்டு வந்த திலகம் , “ஐயா மன்னுச்சுக்கங்கயா. ஏதோ தெரியாம பேசிப்புட்டான்” எனக் கைக்கூப்பியதில், முறைப்புடன் நின்றார்.
சுந்தர், “ஐயா இந்த தூசிக்குள்ள புள்ளைகள வச்சுட்டு இருக்குறது சிரமம்… கொஞ்சம் வேற ஏற்பாடு செஞ்சா நல்லாருக்கும்” எனப் பணிவாகக் கேட்டார்.
சற்று யோசித்த காவல் அதிகாரி, “சரி சரி இன்னைக்கு ஒரு நாள் ஹார்பர்ல உங்க போட்ல படுத்துக்கங்க. காலைல சரி செய்றேன்…” என்று அவர்களை ஹார்பருக்கு அனுப்பி விட, குழந்தைகளை வைத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் தத்தம் படகில் தங்கிக் கொண்டனர்.
அப்போது வரை, யாரும் உணரவில்லை. மறுநாள் மிகப்பெரும் ஆழிப்பேரலையின் சூழ்ச்சி அவர்களைப் பந்தாடப்போவதை.
ஆம், அன்று டிசம்பர் 26, 2004. இயற்கை தனது கோர முகத்தைக் காட்டிய கருப்பு தினம்.
கண்ணில் கனவுடன் உறங்கச் சென்ற எளியவர்களிடம் தனது கோபத்தைக் காட்டி, அவர்களைக் கொத்தாக பழிவாங்கிய சுனாமி என்னும் பேரழிவு நிகழ்ந்த நாள்.
கட்டடம் இடிபடாமல் தரத்துடன் இருந்திருந்தால், அத்தனை மீனவர்கள் உயிர் துறந்திருக்க மாட்டார்கள். ஹார்பரில் இருந்ததால் வந்த வினை! தனது இயற்கை பசிக்கு மீனவர்களை இரையாக்கிக் கொண்டது பெருங்கடல்.
மிச்சம் இருக்கும் உயிர்களும் மருத்துவமனையில் ஊசலாடிக் கொண்டிருக்க, உலகமே பரபரப்பாக இருந்தது.
அஸ்வினிக்கு இந்த பேரழிவைப் பற்றி கேட்டதுமே சாகித்யனின் நினைவே வந்தது. பின், ராயபுரத்தில் 500 மீட்டர் வரையில் ஹார்பர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மட்டுமே செய்தி இருந்திட, அதில் சற்றே ஆசுவாசமானவருக்கு அவர்கள் அனைவரும் ஹார்பரில் இருந்தது தெரியாது.
அதன்பிறகு விஷயம் அறிந்து பதறினார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சடலங்களைக் கண்டு உள்ளுக்குள் உடைந்து போனவரின் விழிகள் சாகித்யனைத் தேடியது. “கடவுளே! அந்தச் சின்னைப் பையனை என் கண்ணு முன்னாடி காட்டு” என்ற வேண்டுதலுடன் மருத்துவமனைக்கும் சென்று பார்த்தார்.
அவரது வேண்டுதல் பலித்ததோ என்னவோ, உயிர் பிழைத்த வெகு சிலரில் அவனும் ஒருவனாக, தாயின் இழப்பில் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தான்.
வேகமாக அவனருகில் சென்ற அஸ்வினி, “சாகித்யன்” என அழைக்க, அவரைக் கண்டு மேலும் அழுகத் தொடங்கினான்.
“அம்மா… அம்மா…” எனப் பிதற்றியவனுக்கு காய்ச்சல் வேறு கொதித்தது.
அவனைக் கண்டு கலங்கிய விழிகளை முயன்று அடக்கிய அஸ்வினி, “சாகித்யன்… உனக்கு ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடு ப்ளீஸ்…” எனக் கிட்டத்தட்ட கெஞ்சினார்.
“நானும் அம்மாகிட்ட போறேன். எனக்கு இதுலாம் வேணாம். என்னையும் அம்மாட்ட அனுப்புங்க” என்று அவன் க்ளுகோஸ் பாட்டிலை எல்லாம் தட்டி விட்டுக் கலவரம் செய்ய, அதில் பயந்து போன அஸ்வினி, “சாகித்யன் நோ… இப்படியெல்லாம் பண்ணாத” என அவனைக் கட்டுப்படுத்த முயன்றார்.
“இல்ல என்னை விடுங்க. நீங்களும் அந்தப் பணக்காரவங்களோட சேர்ந்தவங்க தான. இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான எங்களை ‘போட்’ல இருக்க வச்சீங்க” என்று கண்ணீருடன் அவளை சாடினான்.
அதில் வெகுவாய் நொறுங்கிப் போன அஸ்வினி, “சத்தியமா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சாகித்யன். சுனாமி ஒரு நேச்சர் டிசாஸ்டர். இதை யாருமே எதிர்பார்த்துக்க மாட்டாங்க. சிவகாமி அக்காவும் தான்…” என்றவருக்கு அவனை எப்படி தேற்றுவது என்று தான் தெரியவில்லை.
அவனது கண்ணீர் அவரை அதிகம் வாட்டியது. “ஒன்னும் தேவை இல்ல போங்க… போங்க” என்று அவர் கையைத் தட்டி விட்டவனை அடிபட்ட பார்வை பார்த்தவர், “சரி நான்… நான் போறேன். நீ அமைதியா இரு ப்ளீஸ். நான் போயிடுறேன்” என்றவருக்கும் தானாக கண்ணில் நீர் வழிந்தது.
அதன்பிறகு, சுனாமியில் இருந்து மீட்கப்பட்ட மக்களை தனியாக தங்க வைத்திருந்தனர். தொலைந்த உறவினர்களை தேடி ஒவ்வொருவராக வர, சாகித்யனின் சொந்த பந்தங்களும் சுனாமியில் பலியானதில் அவன் யாரை எதிர்பார்க்க இயலும்?
அன்று கத்தி அனுப்பியதில் அஸ்வினி கூட மறுபடியும் வந்து அவனைப் பார்க்கவில்லையே. அவனுள் சிறு ஏமாற்றமும் ஏக்கமும் எட்டிப்பார்த்தது. அவ்வப்பொழுது மருத்துவமனை வாயிற்கதவு திறக்கும் போதெல்லாம் அஸ்வினியை எதிர்பார்த்தது அவனது குட்டி உள்ளம். ஆனால் அவரும் இவனைப் பார்க்கவில்லை என்றதும் வெகுவாய் சோர்ந்து விட்டான்.
யாரையும் பாராமல் தலையைக் குனிந்தே அமர்ந்திருந்தவனை காவல் அதிகாரி சுரேந்தர் விசாரித்தார். அவன் தனக்கு யாரும் இல்லை என்று கூறியதும் அவனை ஆஸ்ரமத்தில் சேர்க்க முடிவு செய்திட, அவனது சிறு கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் பிரிந்து வழிந்தது.
அவர்கள் வாழ்ந்த தடம் கூட இல்லாது போய் விட்டதே! இனி வெறும் நினைவுகளாக அவனுடனே மட்கிப் போய் விடுவாரே திலகம்.
உடுத்த மாற்றுடையும், அடுத்த வேளை உணவிற்கும் கூட உத்தரவாதமில்லை.
வாங்கிய பரிசுகள், பெற்ற சான்றிதழ்கள் என எதுவும் இனி அவனுக்கு இல்லை. தாயின் நினைவாகக் கூட ஒரு சிறு துரும்பும் இல்லையே.
நினைக்க நினைக்க அழுகை முட்டியது சாகித்யனுக்கு. அந்நேரம் அவனருகில் நிழலாட ஓரக்கண்ணில் காலைப் பார்த்தே கண்டு பிடித்து விட்டான் வந்தது அஸ்வினி என்று.
வந்தவர் காவல் அதிகாரியிடம், “எனக்குத் தெரிஞ்ச ஒருத்தவங்க இந்தப் பையனை தத்து எடுத்துக்குறேன்னு சொல்லிருக்காங்க இன்ஸ்பெக்டர். நான் பாத்துக்குறேன்…” என்றதில் அவரும் சௌந்தரின் நண்பர் ஆதலால் “சரிமா. பாத்துக்க… இதை ரெகார்டுல எழுதவா?” என இழுத்தார் சுரேந்தர்.
“வேணாமே” என அஸ்வினி கண்ணைக் காட்ட, அதனைப் புரிந்து கொண்டவர் அமைதியாக அங்கிருந்து சென்றார்.
சாகித்யன் தான், “நான் ஆஸ்ரமத்துக்கே போறேன். என்னை யாரும் தத்து எடுக்க வேணாம்” என்றான் அழுகையுடன்.
“யாருமேவா?”
“ம்ம் யாருமே தான்…”
“நான் கூடவா?” அஸ்வினி மெதுவாகக் கேட்க பட்டென நிமிர்ந்தவன் அஸ்வினியை விழி விரியப் பார்த்தான்.
ஆனால் அடுத்த நொடியே, “சும்மா பொய் சொல்லாதீங்க. என்னை நீங்க பார்க்க கூட வரலையே. அப்பறம் எப்படி தத்து எடுப்பீங்க. நான் ஆஸ்ரமத்துக்கே போறேன்…” என்றான் உதட்டைப் பிதுக்கி.
அவனருகில் அமர்ந்த அஸ்வினி, “நான் வரலைன்னு உனக்கு எப்படி தெரியும். தினமும் உன்னைப் பார்க்க நான் வந்தேனே. இந்தக் குட்டிக் கண்ணு என்னை தேடுனதையும் பார்த்தேன்… எனக்கு உன்னைப் பிடிக்கிற மாதிரி உனக்கும் என்னைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும் சாகித்யா” என்றவரின் குரலில் சிறு குறும்பு எட்டிப்பார்த்தது.
தனது குட்டு வெளிப்பட்டதில் திருதிருவென விழித்த சாகித்யன், “நான் உங்களைத் தேடலையே” என்றான் வேகமாக.
அதில் முகம் சுருங்கிய அஸ்வினி, “ஓ! அப்போ நான் போய்டவா?” என வேதனையை விழுங்கிக் கொண்டு கேட்க,
“போங்க” என்றான்.
மெல்லக் கலங்கி நின்ற கண்களை சிமிட்டியவர், “நீ அம்மா அப்பாவோட அன்பை அனுபவிச்சு இருக்க சாகித்யா. ஆனா நான் சொந்தக் குழந்தையோட அன்பை அனுபவிச்சது இல்ல. இனியும் அனுபவிக்க முடியாது!” என விரக்தியுடன் கூறி விட்டு நகர எத்தனிக்க, சாகித்யனின் தளிர் கரம் அவரது விரலைப் பற்றிக்கொண்டது.
அப்போது பற்றிய விரலை எப்போதும் அவன் விட்டதில்லை. அன்பின் மற்றொரு பரிணாமத்தைக் காட்டிய தேவதை அவர்.
ஐந்து வருடம் முன்பு, பாதி இடிந்த கட்டடத்தில், தலையிலும் உடலெங்கிலும் குருதி வழிய சுயநினைவின்றி சரிந்து கிடைந்தவரின் கடைசி தருணத்தைக் கண்டது அவன் தானே. அவரைக் கையில் தூக்கிக் கொண்டு உயிர் பெற்று விடமாட்டாரா என்ற ஏக்கத்துடன் ஆம்புலன்சில் ஏற்றி நிஜத்தை ஏற்க இயலாது, அவரது இழப்பை ஈடு செய்ய இயலாது போனவனுக்கு ஏற்பட்ட வலியை சொல்லி மாளாது.
12 வயதில் அனைத்தையும் இழந்து நின்றவன், மீண்டும் 25 வயதில் அனைத்தையும் தொலைத்து நிராதரவாக நின்றானே! அப்போது அவனை மீட்க வந்த அஸ்வினி, இப்போது வரவில்லையே. ஐந்து வருடங்கள்! முழுதாய் ஐந்து வருடங்கள் உள்ளுக்குள்ளேயே செத்து மடிந்து இறுகியவனின் விழிகளில் இனி சிந்தக் கண்ணீரும் மிச்சமில்லை.
தொடரும்
மேகா
சிவகாமி😡😡😡