Loading

சில பல நொடிகள், எழுந்த வேதனையை அடக்கிக்கொண்ட இந்திரஜித்திற்கு, அதன் பிறகே, சத்யரூபா இரவு நேரத்தில் தனியாக வெளியில் சென்றதே உறைத்தது.

அதில், விறுவிறுவென வாசலுக்கு சென்றவன், கோபத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தவளை தடுத்து நிறுத்தினான்.

“ப்ச் என்ன வேணும் உனக்கு?” என்றாள் எரிச்சலுடன்.

“இந்த நேரத்துல பஸ் எதுவும் இருக்காது சத்யா. அங்க போய் தனியா எப்படி இருப்ப…” எனக் கேட்டவனிடம்,

“போறதுக்கு கூட இடமில்லாம ஆக்கிட்டு, கேள்வி வேற!” என எரிந்து விழும் போதே, அங்கு வைஷாலி வந்தாள். அவள் கையிலும் சிறு துணிப்பை இருந்தது.

“இந்தர்… எங்களை என் வீட்ல டிராப் பண்ணிடு. சாவி என்கிட்ட தான் இருக்கு.” என்றாள் அமைதியாக.

“ஏன்… நீயும் உன் தங்கச்சி மாதிரி, உன் வாழ்க்கையை கெடுத்ததுக்கும், அத்தை செத்ததுக்கும் காரணம் நான் தான்னு நினைக்கிறியா?” அடிபட்ட பார்வையுடன் கேட்டான் இந்திரஜித்.

“என் வாழ்க்கையை முடிவெடுத்தது நான் தான் இந்தர். இப்போ அனுபவிக்கிறதுக்கு காரணமும், நான் செஞ்ச வினை தான். என்னை நம்புனவங்களை ஏமாத்தி இருக்கேன். அதுக்கு இந்த அளவு கூட அனுபவிக்கலைன்னா எப்படி…” என விரக்தியுடன் கூறியவள்,

“ப்ளீஸ், என்னை ஹர்ட் பண்ணாத. எல்லாம் சரி ஆகவும் நானே வரேன்.” என்றதும், பெருமூச்சு விட்டான்.

சத்யரூபா, பதிலேதும் கூறாமல், இருவரையும் முறைத்திருக்க, அடுத்த இரு நிமிடத்தில் அவன் காரை எடுத்துக்கொண்டு வந்தான்.

வைஷாலி உள்ளே செல்ல எத்தனிக்க, சத்யரூபா வீம்பாக நின்றாள்.

“வா சத்யா.” என வைஷாலி கண்டிப்புடன் அழைக்க, அதற்கு மறுப்பு கூறாமல், கோபமும் குறையாமல் காரினுள் அமர்ந்தாள்.

இருவரையும் வீட்டு வாசலில் இறக்கி விட்ட இந்திரஜித், அவர்களை இறக்கி விட்டு, நிமிர்ந்து பாராமல் நகர முயல, உள்ளே செல்ல போன சத்யாரூபா வேகமாக அவனருகில் வந்தாள்.

அவள் வருவதை உணர்ந்ததும், சிவந்த விழிகளை நிமிர்த்திப் பார்த்தான்.

உணர்வற்றப் பார்வையை அவன் மீது வீசியவள், “என் அம்மா சாகும் போது, அவங்க கடைசி நிமிஷத்துல என்னால அவங்க கூட இருக்க முடியலைன்னு தான் சொன்னேனே தவிர, என் அம்மா செத்ததுக்கு நீ காரணம்ன்னு நான் சொல்லவே இல்ல. உங்களை மாதிரி எல்லாம், இல்லாத விஷயத்தை இருக்குறதாவும், இருக்குற விஷயத்தை இல்லாததாவும் என்னால பேச முடியாது.” என அமைதியுடன் சீறியவள், நகரப் போக, ஜன்னல் வழியே, அவள் கையைப் பிடித்தான் இந்திரஜித்.

“நீ கரெக்ட் தான் சத்யா. எல்லா விஷயத்துலயும் உன்னை பீட் பண்ண முடியாது. பாசம் காட்டுறதுலயும் சரி, அதை கோபமா காட்டுறதுலயும் சரி.
நான் உண்மையை மறைச்சேன் தான். ஒத்துக்குறேன். ஆனா, பொய் சொல்லல. என் காதலும் பொய் இல்ல.

உன்னை கார்னர் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நான் நினைச்சதே இல்ல. உன் மனசுல யாரும் இல்லைன்ற தைரியத்துல தான், உன் கூட விளையாட நினைச்சேன். அப்பவும், உன்னை கஷ்டப்படுத்தணும்ன்னு நினைக்கல. ஆனா, நீ எழிலை விரும்புனது முன்னாடியே தெரிஞ்சு இருந்தா, கண்டிப்பா உன் கண்ணு முன்னாடி கூட வந்துருக்க மாட்டேன். 

வைஷு ஆரம்பத்துல இருந்து சொல்ல தான் செஞ்சாள். நான் அவளோட பிரெண்டுன்னு சொல்ல சொல்லி… எனக்கு தான், உன் முன்னாடி அவளோட ப்ரெண்டா வர பிடிக்கல. உன்னை தனியா பார்த்து, பழகி, லவ்வ சொல்லணும்ன்னு நினைச்சேன். அதான் நான் செஞ்ச பெரிய தப்பு.

என் அண்ணனோட காதலுக்காகவும், வைஷு அவளுக்கு பிடிச்சவனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காகவும் தான், அந்த கல்யாண டிராமா நடந்துச்சு.

திங்க்… நீ என்னை வைஷுவை கல்யாணம் பண்ண சொல்லுவன்னு நான் எதிர்பார்க்கல. என் மனசு முழுக்க நீ மட்டும் இருக்கும் போது, வேறொரு பொண்ணை, என்னால எண்ணத்தால கூட நினைக்க முடியாது. உன்னை டீஸ் பண்ணனும்ன்னு நினைச்சு, கல்யாணம் பண்ணிட்டு, உண்மையை சொல்லலாம்ன்னு பிளான் பண்ணுனேன். இது எதையும் நான் சீரியஸா எடுத்துக்கல.

முதல் தடவை, உன் மனசுல வேறொருத்தன் இருக்கான்னு தெரியும் போதே, நான் ஏதோ தப்பு பண்ணிட்ட உணர்வு.

வைஷுவோட வாழ்க்கை சிக்கல்ல இருக்குன்னு புரிஞ்சதும், அது அதிகமாச்சு. நீ எழில் மேல இருந்த காதலை ஈஸியா தூக்கி போட்டப்ப, நிஜமா எனக்கு என் காதலை நினைச்சு பயம் மட்டும் தான் இருந்துச்சு.

கடைசியா, அத்தை இறந்ததும்…” என பேசிக்கொண்டே சென்றவன், அதற்கு மேல் கூற இயலாமல், வேதனையை விழுங்கினான்.

கலங்கிய கண்களை சிமிட்டியபடி, “நான் எல்லாத்தையும் கொஞ்சம் சீரியஸா எடுத்து இருக்கணும். அப்பவும், வைஷு எவ்ளவோ சொன்னா நான் தான் எதையும் காதுல வாங்கல. நான் செஞ்ச எல்லாமே உன்னோட காதலை எதிர்பார்த்து தான். ஆனால், அது வெறுப்புல கொண்டு வந்து முடியும்ன்னு தெரிஞ்சுருந்தா, மூணு வருஷத்துக்கு முன்னாடியே உன் மேல வந்த காதலை எரிச்சு இருப்பேன். எக்ஸ்ட்ரீம்லி சாரி சத்யா.
உன் லைஃப்க்குள்ள நான் வந்துருக்க கூடாது.” அதிகபட்ச விரக்தியாலோ, அல்லது அவள் பேசிய வார்த்தைகளின் தாக்கத்தாலோ அவன் உள்ளுக்குள் மடிந்து கொண்டிருந்தான்.

அவனிடம் இருந்த கையை விடுவித்துக்கொள்ள அவள் போராடவெல்லாம் இல்லை. கோபத்தில் சிவந்த வதனம், அதே பார்வையை மாற்றாமல் இருக்க, அவன் மெல்ல கரத்தை விட்டதும் வெடுக்கென இழுத்துக்கொண்டவள், அவனைத் திரும்பி பாராமல் உள்ளே சென்று விட்டாள்.

வீட்டினுள் பெரியதாக பொருட்களெல்லாம் இல்லை. ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீடு ஆதலால், அறைக்குள் ஒரு கட்டிலும், வரவேற்பறையில் இரண்டு நாற்காலிகளும் இன்ன பிற பொருட்களும் தான் இருந்தது.

அங்கு இருந்த ஒரு நாற்காலியில், தலையில் கை வைத்து வைஷாலி அமர்ந்திருக்க, சத்யரூபா அவளை முறைத்தவாறு உள்ளே வந்தாள்.

வந்தவள், அறைக்குள் நுழைந்து கதவைப் பட்டென அடித்துக்கொள்ள, அப்போதும் வைஷாலி நிமிரவில்லை.

பையை ஓரமாக வைத்த சத்யரூபா, அங்கேயே தரையில் அமர்ந்து விட்டாள்.

முன் நெற்றியில் விழுந்த கூந்தலை எரிச்சலுடன் பின்னால் தள்ளப்போனவளுக்கு, “நெத்தில முடி தொந்தரவா இருந்தா, நான் கிஸ் பண்ணி தொந்தரவு பண்றேன்னு நினைச்சுக்கோ தியாக்குட்டி…” என உருகும் கணவனின் குரல் காதில் எதிரொலிக்க, அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது.

தமக்கை மீதும் கோபத்தில் இருந்தவள், எழிலிடமும் பாராமுகம் காட்டியவள், தாயும் இறந்து விட, அனைவருமே ஒவ்வொரு விதத்தில் தன்னை ஏமாற்றி விட்டு தள்ளிச் சென்று விட்டதில், தனிமையில் கரைந்தவளுக்கு, இந்திரஜித்தின் துணை ஒன்றே நிம்மதி தந்தது.

அவளுக்கு அனைத்துமானவாக, அவளுக்கு உண்மையாக இருக்கிறானென்று அகமகிழ்ந்திருக்கும் வேளையில், தன்னை அவனும் ஏமாற்றி இருக்கிறான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளவே வலித்தது.

இறுதியில் அவன் பேசி விட்டு சென்ற வார்த்தைகள் அவளுள் ரீங்காரமிட, அவன் மீது கோபம் கொண்டு அழுகிறாளா, அல்லது அவனில்லாத இந்நொடிகள் தந்த ரணத்தை தாங்க இயலாமல் அழுகிறாளா என்பது அவளுக்கே வெளிச்சம். அழுதாள். விடியும் வரை அழுது கொண்டே இருந்தாள்.

இரவு, சிரஞ்சீவியுடன் வீட்டிற்கு வந்த எழிலழகனுக்கு, நடந்ததை அறிந்து வருத்தம் எழுந்தது.

இந்திரஜித்தும் யாரையும் பாராமல் அறைக்குள் அடைந்து கொண்டதில், அவனையும் பார்க்கவில்லை.

காலையில் தான், சத்யாவையும் வைஷாலியையும் காணாமல் தேடிய பானுரேகா, நீரஜாவிடம் விளக்கம் கேட்க, அவள் நடந்ததை தயக்கத்துடன் கூறியதில், அவர் முகம் சினம் மிளிர்ந்தது.

“ஓஹோ… சொல்லாம போற அளவு ரெண்டு பேருக்கும் திமிரு வந்துடுச்சு.” என கோபத்தைக் கக்கியதில், “அதெல்லாம் இல்ல ஆண்ட்டி. சத்யா கோபமா இருந்ததுனால…” என பதறிட,

“அவன் மேல கோபமா இருந்தா, எங்க கிட்டல்ல வந்து சொல்லணும். எதுக்கு பெரியவங்கன்னு குத்து கல்லாட்டம் வீட்ல இருக்கோம். அவ்ளோ தான் உங்க மரியாதை இல்ல.” என்றதும், அவளுக்கு கையெல்லாம் உதறி விட்டது.

“என்ன அத்தை நீங்க பெரிய வார்த்தைலாம் பேசுறீங்க. ஏதோ கோபத்துல கிளம்பிட்டா அத்தை. வைஷுவும் அவளை தனியா விட முடியாததுனால, அவள் கூட போனா.” என விளக்கம் கூற முற்பட, “போய் உன் பிரெண்டை வர சொல்லு” என்றார் கடுப்பாக.

“அவன் ரூமை விட்டே வர மாட்டேங்குறான் அத்தை” நீரஜா தவிப்புடன் கூறியதில், அவர் தீயாக முறைத்தார்.

அதில், முகத்தை தொங்க போட்டுக்கொண்டு இந்திரஜித்தின் அறைக் கதவை தட்டியவள், “இந்தர்… அத்தை கூப்புட்றாங்கடா. வந்துட்டு போ. சத்யா ஏன் சொல்லாம போனான்னு கோபமா இருக்காங்க. அவங்க பாட்டுக்கு அவளை நேரா போய் ஏதாச்சு சொல்லிட போறாங்க. அவள் இருக்குற கோபத்துக்கு எண்ணையை ஊத்துன மாதிரி ஆகிடும். வந்துட்டு போடா.” எனப் பரிதாபமாக கூற, அவனிடம் பதிலே இல்லை.

“டேய். தூங்கிட்டியா என்ன?” அவள் மீண்டும் கதவை தட்டியதில், “வரேன்” என்ற சோர்ந்த குரல் மட்டுமே கேட்டது.

அறைக்குள் சத்யரூபா படுக்கும் இடத்தில் சுருண்டு படுத்திருந்தான். என்னவோ, வாழ்வில் இதுவரை எந்த துன்பத்தையும் தன்னை பாதிக்க விட்டதில்லை. இப்போதோ, அவளில்லாத இந்த அறையும் அவனது வாழ்வும் வெறுமையாய் மாறியது.

எத்தனை முயன்றும், அவள் பிரிவைத் தாங்க இயலவில்லை. பானுரேகா அழைத்தது அறிந்ததும், தன்னை அடக்கிக்கொண்டு கீழிறங்கி சென்றான்.

தலையை நிமிர்த்தி யாரையும் பாராமல் இருந்தவனின் கன்னத்தில் பானுரேகாவின் கைரேகைகள் பதிந்தது.

அதில் அமைதியுடன் நின்றானே தவிர, அப்போதும் தலையை நிமிர்த்தவில்லை.

அவர் அடித்ததில் தான் மொத்த குடும்பமும் பதறி விட்டது. பாலகிருஷ்ணன், அதட்டலுடன் “பானு என்ன பண்ற?” என்றிட,

சிரஞ்சீவி, “அம்மா…” எனத் தம்பியை பிடித்துக்கொண்டான்.

அவரோ மகனை கோபத்துடன் பார்த்து, “இப்ப தெரியுதா… உன் விளையாட்டுத்தனத்தை எல்லா விஷயத்துலயும் காட்டாதன்னு ஏன் உன்னை கண்டிச்சுட்டே இருந்தேன்னு.” என்று காட்டத்துடன் கூற, குனிந்திருந்தவனின் விழியில் இருந்து ஒரு நீர்த்துளி ஒன்று தொப்பென விழுந்தது.

இதுவரை எதற்கும் கலங்காமல், புன்னகை முகத்துடன் வலம் வரும் மகனின் கண்ணீரை எந்த தாயால் தான் தாங்க இயலும்.

பானுரேகாவிற்கும் அதே நிலை தான். அதனை வெளிக்காட்டாமல் இருக்க முயற்சித்தார்.

சிரஞ்சீவியோ, “தப்பு எங்க மேல தானம்மா. உங்க கோபத்தை எங்க மேல காட்டுங்க. எங்களுக்கு நல்லது செய்றேன்னு வந்து, அவன் இப்படி சிக்கல்ல மாட்டிக்கிட்டான்.

ஆனா, அவன் எதுவும் வேணும்ன்னு பண்ணலைம்மா.” என்றான் வருத்தமாக.

“ஒரு விஷயத்தை செய்றதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிக்கணும். எடுக்குற எல்லா முடிவும், செய்ற எல்லா கலகமும் நன்மைல தான் முடியும்ன்னு இல்ல. பேக்ஃபயர் கூட ஆகலாம். என் கண்ணு முன்னாடி நிக்காத.” என எச்சரித்து விட்டு, உள்ளே சென்று விட்டார்.

அவருக்கும் மனதை பிசைந்தது. அவனை இதே போல பல முறை கண்டித்து இருக்கிறார். அதட்டி இருக்கிறார். ஆனால், அடித்தது இதுவே முதல் முறை. எத்தனை திட்டினாலும், குறும்பால் அவரது கோபத்தை சரி செய்து விடுவான்.

‘நான் தப்பு எதுவும் செய்யல’ என்ற இறுமாப்பு அவனுக்கு அதிகமாகவே இருக்கும். இப்படி எதற்கும் தலை குனிந்து நின்றதில்லை. அதிலும், கண்ணீரையெல்லாம், அவனிடம் பார்த்ததே இல்லை.

இருந்தும், அவன் செய்த செயலின் வீரியம், ஒரு பெண்ணின் மனதை அல்லவா காயப்படுத்தி இருக்கிறது. தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு தவறு தானே!

சத்யரூபாவிற்கு, அனைத்தும் தெரியும் என்று தான் அவர் எண்ணி இருந்தார். இப்போது, உண்மையை மறைத்து அவளிடம் விளையாடியதை, பானுரேகாவினாலேயே ஏற்றுக்கொள்ள இயலாத போது, மிகப்பெரிய இழப்பை தாங்கி நிற்கும் அச்சிறு பெண்ணால், எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?

அது அனைவருக்கும் புரிந்தது தான். அவளது கோபத்தில் இருக்கும் நியாயத்தை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், அதற்காக அவள் வீசிய வார்த்தைகள் அதிகப்படியோ என்ற வருத்தமே நிறைந்திருந்தது.

இந்திரஜித் மீண்டும் அறைக்குள் புகுந்து கொள்ள, நடந்ததில் தன் மீதும் பெரும் பங்கு தவறிருக்கிறது என்று புரிந்த எழிலழகனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.

தன்னை காதலித்த போதும், அவளுக்கு நிம்மதியை கொடுக்கவில்லை. இப்போது, இவனை காதலிக்கும் போதும், நிம்மதியை பறித்து விட்டதற்கு, தானும் ஒரு காரணம் என்றெண்ணிய போது உள்ளம் வலித்தது.

அன்று மண்டபத்திற்கு சரியான நேரத்திற்கு வந்திருந்தால் கூட, இந்த குழப்பங்களை தவிர்த்திருக்கலாம்.

அவனும், அதை வேண்டுமென்று செய்யவில்லையே. மண்டபத்திற்கு வரும் வழியில், ஒரு விபத்து நேர்ந்ததால், காயப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வர, தாமதமாகி விட்டது. அதற்குள், வைஷாலியை இந்திரஜித்திற்கு திருமணம் முடிக்க எடுத்த விபரீத முடிவில் அதிர்வுடன் சேர்ந்து, கோபமும் வந்து விட்டதில், அவளுடன் வெளிநடப்பு செய்து விட்டான்.

அவனாவது, தாமரையிடம் மனம் விட்டு பேசி இருக்க வேண்டும். அல்லது வைஷாலி அவளது காதலை புரிய வைத்திருக்க வேண்டும்.

சத்யரூபா, எழிலின் பெற்றோர் பற்றி உள்ளதை கூறி இருக்க வேண்டும். அது அவள் மீது வளரும் கோபத்தை தடுத்திருக்கும். இந்திரஜித், திருமணத்திற்கு முன்னரே, நடந்ததை கூறி, அவனது காதலை உணர்த்தி இருக்க வேண்டும். இப்போது, இந்த பிரிவை தவிர்த்திருக்கலாம்.

அனைவரின் மீதும் சிறு சிறு பிழைகள் உள்ளது தான். சூழ்நிலைக்கு தகுந்தபடி, அவரவர் செய்த வினைகள் அனைத்தும், எதிர்வினைகளாக முடிந்து, மனஸ்தாபங்களை கொடுத்து விட்டது.

‘உன்னால் தான், என்னால் தான்…’ என்ற பேச்சுக்கு அவசியமின்றி, அனைவருமே சற்று நிதானம் கொண்டு சிந்தித்தால், பிரச்சனைகளை சரி செய்யலாம். என்ற பல சிந்தனைகள் வந்து செல்ல, பெருமூச்சு விட்ட எழிலழகன், இனி நடப்பதை நல்வினைகளாக்க முடிவெடுத்தான்.

இந்திரஜித்தின் அறைக்கு சென்றவன், அங்கு எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவனைக் கண்டதும், மனது என்னவோ செய்தது.

தொண்டையை கனைத்துக்கொண்டு அவனருகில் சென்று நிற்க, திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவன், பதில் ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

“சது…” என சொல்ல வந்தவன், “சத்யாகிட்ட பேசுனியா இந்தர்.” எனக் கேட்டான்.

அதற்கு பதில் அளிக்காமல், “கோபத்துல கண்டபடி பேசிட்டு, அப்பறம் வருத்தப்படுவா. நீ போய் அவங்க கூட இரு எழில்.” என்றான்.

“டேய்… அவளை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வாடா. அவள் கோச்சுட்டு போனா, அப்படியே விட்டுடுவியா.” ஆதங்கத்துடன் எழில் கேட்க, அவனை விழி நிமிர்த்தி பார்த்தவன், “அப்படியே விட்டுடுவேனா?” என்ற ஒற்றைக் கேள்வியில் அவனது தவிப்பு மொத்தத்தையும் காட்டிட,
எழில் இந்திரஜித்தை அணைத்துக் கொண்டான் ஆதரவாக.

அந்நேரம், அங்கு வந்த சிரஞ்சீவி, இருவரையும் பார்த்து விட்டு, “இவனுங்க அவனவன் பொண்டாட்டியை கட்டிப்பிடிக்க மாட்டாங்கனுங்க போல” என தலையில் அடித்துக் கொண்டான்.

காலை உணவை தயார் செய்து முடித்த வைஷாலி, அறைக்கதவை தட்டினாள்.

அழுது சோர்ந்த சத்யரூபா, தரையில் படுத்தே களைப்பில் உறங்கி இருக்க, சத்தம் கேட்டு வேகமாக எழுந்தாள்.

அங்கு இருந்த கடிகாரம் மணி 9 எனக் காட்ட, “ஐயயோ இவ்ளோ நேரமா தூங்குனோம். போச்சு, அத்தை இன்னைக்கு திட்ட போறாங்க. இவர வேற ஆபிஸ்க்கு கிளப்பணுமே. நான் எழுப்பி விடுற வரை, கும்பகர்ணனுக்கு கசின் பிரதர் மாதிரி தூங்குவான் காண்டாமிருகம். கார்மெண்ட்ஸ்ல வேற இன்னைக்கு வேலை இருக்கு.” என எழுந்து நின்ற, இரண்டு நொடிக்குள் இத்தனை யோசனையும் ஓடி விட்டது அவளுக்கு.

அதன் பிறகே, சுற்றி முற்றி பார்த்தவளுக்கு, முந்தைய நாள் நினைவே வர, காய்ந்திருந்த கண்களுக்குள் மீண்டும் கண்ணீர் மழை.

முயன்று நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு கதவை திறக்க, தங்கையின் அழுது வீங்கிய முகம், வைஷாலியை வெகுவாகத் தாக்கியது.

உதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கியவள், “முகம் கழுவிட்டு வா. சாப்பிடலாம்” என இயல்பாக அழைக்க, சத்யரூபா “வேணாம்” என்றாள் முகத்தில் அடித்தது போன்று.

“வேணாம்ன்னா, பட்டினி இருந்து சாக போறியா. அழுக தெம்பு வேணாம். வா.” எனக் குரலை உயர்த்தி அழுத்தமாக அழைத்தாள்.

அவளிடம் இருந்து, இத்தகைய அழுத்தத்தை கண்டிராத சத்யரூபாவிற்கு அந்நிலையிலும் ஒரு வியப்பு பரவியது.

உடனே, “நான் ஒண்ணும் அழுகல.” என வீம்பாக நிற்க,

“சரி. நீ அழுகல. கண்ணு தான் வேர்த்துருச்சுன்னு ஒத்துக்குறேன். போதுமா…” என்றாள் நக்கலாக.

அவளை ஒரு மாதிரியாக பார்த்த சத்யரூபா, சிலிர்த்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

சிறிது நேரத்தில், வெளியில் வந்தவள், ஹாலில் டிபனை எடுத்து வைத்துக்கொண்டிருந்த வைஷாலியைக் காண, அவள் “உட்காரு.” என தரையை கண் காட்டினாள்.

“ப்ச். நீ ஏன் இப்போ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க. உன் புருஷன் கூட அங்கேயே இருக்க வேண்டியது தான.” என எரிச்சலை வரவழைத்துக் கூற,

“என் புருஷனை எனக்கு பார்த்துக்க தெரியும் சத்யா.” என்று விட்டு, சிறிது அமைதியானவள்,

“இது என் பல நாள் கனவு தெரியுமா சத்யா. நீ, நான், அம்மா எல்லாரும் ஒரே வீட்ல ஒண்ணா இருக்கணும்ன்னு. அப்பா இறந்ததுல இருந்து, ஹாஸ்டல்ல தான் இருக்கேன். வேலைக்கு போனதுக்கு அப்பறமாவது உன்னையும் அம்மாவையும் என் கூட வச்சுக்கணும்ன்னு பேராசை இருந்துச்சு. அது இப்போ வரை வெறும் நிறைவேறாத ஆசை தான்.” என கண்ணை நிறைத்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொள்ள, சத்யரூபா திகைப்பாக பார்த்தாள்.

“எழில் அத்தானை நான் சின்ன வயசுல இருந்து விரும்புறேன். நீ எனக்கு மாப்ள பார்க்க ஆரம்பிச்சப்ப எனக்கு அந்த காதலை சொல்ல தைரியமில்லைன்னாலும், கல்யாண கனவுன்னு எதுவும் இருந்தது இல்ல. எழில் அத்தானை தவிர வேற யாரையும் நினைச்சதும் இல்ல.
என்ன அதை சொல்லாம விட்டது தான்… ப்ச். இந்தர் சொல்லிருக்கான் நிறைய தடவை. இண்ட்ரோவர்ட்டா இருக்காதன்னு…” என பெருமூச்சு விட்டவள்,

“இந்தரும் நானும் காலேஜ்ல இருந்து பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் சத்யா. என்னோட வெல்விஷர். ஒரு தடவை, தீபாவளிக்கு அவனை கூட்டிட்டு தான் ஊருக்கு வந்துருந்தேன். ஊருக்கு வர்ற வரைக்கும் நல்லா இருந்தவன், உன்னை பார்த்ததுல இருந்து, உன்மேல பைத்தியமா சுத்துனான்.

அப்போ, உன்னை இன்ட்ரோ கொடுக்கவும் விடல. வந்ததோட திரும்ப கிளம்பி சென்னைக்கு வந்துட்டான். அன்னைல இருந்து, உன்னை அவனுக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு, சொல்லிட்டே இருந்தான்.

எனக்கு மாப்பிள்ளை பார்க்க உனக்கு உரிமை இருக்குற மாதிரி, உனக்கு மாப்பிள்ளை பார்க்கவும் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு தான.

நீயும் கல்யாணம் பண்ணி, சென்னைக்கு வந்துட்டா, அதுவும் இந்தரையே கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் லைஃப் நல்லா இருக்கும்ன்னு ஆசைப்பட்டேன். அப்படியே அம்மாவையும் ஆயாவையும் இங்கயே வரவச்சுடலாம்ன்னு, மனசுல ஆயிரம் கணக்கு போட்டேன். அவனை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு, நான் அம்மாகிட்டயும் பேசுனேன். அவங்களுக்கும் சம்மதம் தான். அதுக்கு முட்டுக்கட்டையா இருந்தது என் கல்யாணம்.

எப்படியும் அத்தானை பத்தி வெளில சொல்ல முடியலைன்னாலும், உங்க விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு நினைச்சுட்டு இருக்கும் போது தான், அத்தான் வந்து பேசுனாரு. அந்த நேரத்துல எனக்கு தான் புத்தி பிசகி போச்சு. காதல் கண்ணை மறைச்சுருச்சு.

அப்போ கூட, அத்தானை டிரான்ஸ்பர் வாங்கிட்டு சென்னைக்கு வர சொல்லலாம்ன்னு நினைச்சேன். அப்பறம் தான் தெரிஞ்சுது… சிக்கல்ல மாட்டிக்கிட்டது.” என்றவளுக்கு ஆயாசமாக இருந்தது.

“ஜீவி என்னை பொண்ணு பார்க்க வரும்போதே, உனக்கு பார்த்த மாப்பிள்ளை இந்திரஜித்ன்னு தான் அம்மாட்ட சொன்னேன். அவங்களும், வெளியூர்ல மாப்பிள்ளைன்னா, நீ யோசிக்காம வேணாம்ன்னு சொல்லிடுவன்னு சொல்லி, இப்போதைக்கு சொல்ல வேணாம்ன்னு சொன்னாங்க. இந்தரும், யாரையும் சொல்ல விடல.

அவனுக்கு உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசை. ஆசை எல்லாராலையும் பட முடியும். ஆனா அது எல்லாம் சரியா நடந்துடாதே. அப்டியே தான் நம்ம எல்லாருக்குமே.

நீயும் அத்தானும் விரும்பியும் கல்யாணம் பண்ணிக்க முடியல. நான் கல்யாணம் பண்ணியும் நிம்மதியா வாழ முடியல.” என மனதிலிருந்த ஆதங்கங்களை கொட்டித் தீர்த்தாள் வைஷாலி.

இத்தனை பேசியது அவளது தமக்கை தானா? என்ற ஆச்சர்யத்துடன் சத்யரூபா பேச்சற்று நின்றாள்.

‘என்னை ரொம்ப காக்க வச்சுட்டடி. இட்ஸ் பீன் 3 இயர்ஸ்.’ என்ற இந்திரஜித்தின் குழாவலும், ‘மூணு வருஷத்துக்கு முன்னாடியே உன் மேல வந்த காதலை எரிச்சுருப்பேன்’ என்றவனின் ஆதங்கமும் இப்போது புரிந்தது.

அதற்காக, அவன் செய்ததை மன்னிப்பதா? முடியவே முடியாது. என்ற தீர்க்கமாக எண்ணிட,

“ஹப்பா… விட்டா அடிஷனல் ஷீட் கேட்ப போல…” என வைஷாலியை நக்கலாக பார்த்தபடி வந்தான் எழிலழகன்.

“நல்லவேளை, வைஷு பேபி அங்க இருந்து வந்துட்ட. வீடா அது. சென்ட்ரல் ஜெயிலு. இதை பண்ணாத, அதை பண்ணாத. இதை சாப்பிடாத அதை சாப்டாதன்னுட்டு. தேங்க் காட் நானும் எஸ்கேப் ஆகிட்டேன்.’ என்று குதூகலத்துடன் கூறியவனை, இரு பெண்களும் ஒரு சேர முறைத்தனர்.

அவனோ அதனை சட்டை செய்யாமல், ‘
“அட, நீயும் நல்லா சமைப்பியா பேபி. காதலிக்கிறேன் காதலிக்கிறேன்னு சொல்றாளே தவிர, இதுவரை, ஒரு ஓட்டை வடையாவது காதலோடு சுட்டு குடுத்து இருக்கியா. ம்ம்ஹும். நமக்கு குடுத்து வச்சது அவ்ளோ தான்.” என போலியாய் சலித்துக் கொண்டவனை, வைஷாலி கடுமையாகப் பார்த்தாள்.

அதையும் கண்டுகொள்ளாமல், பொங்கலையும், மணக்க மணக்க ஆவி பறக்கும் சாம்பாரையும் தட்டில் ஊற்றி சுவை பார்த்தவன், “வாவ்… சூப்பரா இருக்கு பேபி. அப்படியே அத்தை சமையல் மாதிரி. என்ன ஒரே ஒரு குறை தான்.” என முகத்தை சுருக்கிக்கொண்டான்.

சத்யரூபா ஏற்கனவே அவன் ரசித்து உண்பதில் கடுப்பாகி இருக்க, வைஷாலியோ குழம்பி, “என்ன?” என்றாள்.

“உன் தங்கச்சி, ஒரு கேசரி கிண்டுவா பாரு. சே சே சே… அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த பொங்கல் வைக்கும் போது, அதையும் சேர்த்து வைக்க சொல்லுவாங்க அத்தை. இப்போ அந்த கேசரி சாப்ட்டா தான், மனசு சாந்தி அடையும். உன் தங்கச்சியை செஞ்சு குடுக்க சொல்லேன். நான் வெய்ட் பண்றேன்.” என்று நிலையாக அமர்ந்திருக்க, சத்யரூபா பொறுமை இழந்து விட்டாள்.

சுற்றி முற்றி எதையோ தேடியவள், கைக்கு எதுவும் கிடைக்காமல் போனதில், சாம்பாரில் இருந்த கரண்டியை தூக்கி, அவனை நங்கென்று அடிக்க, “ஆ…” என அலறினான்.

“நானே என் புருஷன் கூட சண்டை போட்டுட்டு வந்துருக்கேன். உனக்கு வாய்க்கு ருசியா கேசரி கேக்குதா எலி.” என மூச்சு வாங்கி முறைத்து விட்டு, மீண்டும் அடிதடியை தொடங்க, அவனோ, “அடி வைஷு பேபி, உன் காதல் புருஷனை அவள் அடிக்கிறா மரம் மாதிரி நிக்கிற.” என்று கரண்டியை தடுத்தபடியே வைஷாலியை துணைக்கு அழைத்தான் எழில்.

அவளோ, “புருஷனாச்சேன்னு அடிக்காம இருக்கேன். அட்லீஸ்ட், அடி குடுக்குறவளையாவது தடுக்காம இருக்கணும் அத்தான்.” என அமர்த்தலாகக் கூற, “ராட்சசிங்களா!” என்று மேலும் அலறினான்.

அலைபாயும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
25
+1
133
+1
3
+1
10

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.